ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

பி.கே. சிவகுமார்


அன்புள்ள அரவிந்தன்,

வணக்கம். நலம். நாடுவதும் அதுவே.

தாங்கள் பன்னிரண்டாம் வகுப்புவரை நிச்சயம் படித்திருக்க வேண்டும் என்கிற நம்பிக்கையை எனக்குத் தந்த ‘இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தன் இடம் எது ? (ஜெயகாந்தன் சிறுகதைகளை முன்வைத்து) ‘ என்கிற உங்களின் கட்டுரையை வாசிக்க நேர்கிற துர்பாக்கியம் எனக்குக் கிட்டியது.

முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். எழுத்தாளர்களை ஒப்பிடுவது எனக்கு உவப்பானதல்ல. ஆயினும், நிஜமான விமர்சகர்கள் சில நேரங்களிலும், குழாமும் கொடியும் இலக்கிய அபிலாஷைகளும் வைத்திருக்கிறவர்கள் பல நேரங்களிலும், எழுத்தாளர்களை ஒப்பிட்டே வந்திருக்கிறார்கள். தங்களுடைய தனிமனித வாசிப்பின் அடிப்படையில் புதுமைப்பித்தனை ஜெயகாந்தனைவிட உயர்வாக நினைப்பதற்கும் ஒப்பிடுவதற்கும் தங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், இலக்கியத்தில் ஜெயகாந்தனின் இடத்தை நிர்ணயம் செய்யப்போகிற ‘தாதா ‘வாகத் தாங்கள் உள்ளே நுழையும்போது, புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் ஒப்பிட்டுத் தங்கள் ஆலகால அறிவைப் பறைசாற்றத் துணியும்போது, புதுமைப்பித்தனைக் குறித்து இதுவரை வெளிவந்திருக்கிற மொத்த விமர்சனங்களையும் முன்வைத்து, புதுமைப்பித்தனின் நிறை, குறைகளாகச் சொல்லப்பட்டவை எவையென்றாய்ந்து, அந்த அளவுகோல்களின் கீழ் ஜெயகாந்தன் பற்றிய மதிப்பீட்டைத் தாங்கள் வைத்திருப்பீர்களேயானால், தங்கள் கட்டுரையின் நோக்கங்கள் குறித்த வஞ்சப் புகழ்ச்சிகள் வலம் வரா. தாங்கள் உபாசகர் என்று ஒதுக்கிய நவபாரதியின் கட்டுரை, தனிமனிதப் பார்வையாக அல்லாமல், விமர்சனப் பார்வையுடன் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் ஒப்பிடுவதை – தாங்கள் செய்ய மறந்ததைச் செய்வதை – அக்கட்டுரையைப் படிக்கிற வாசகர்கள் உணர்வார்கள். நான் விமர்சகன் இல்லை; இனி விமர்சகன் ஆகிற ஆசையும் இல்லை. எனவே, எனது இந்த பதில் புதுமைப்பித்தனைக் குறித்து எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். புதுமைப்பித்தனின் சிறப்புகளையோ, சாதனைகளையோ குறைத்து மதிப்பிடுகிற நோக்கமும் எனக்கு இல்லை. தங்களைப்போல் ‘இலக்கியத்தில் அழகியல் உணர்விற்கு ஒட்டுமொத்த குத்தகை எடுத்தவர்கள் ‘ – புதுமைப்பித்தனைப் பற்றி எழுதும்போது, அவருக்குக் கொடுக்கிற சலுகைகளையும், கரிசனங்களையும், பாராட்டுக்களையும், ஜெயகாந்தனுக்குக் கொடுக்கிற நேர்மையில்லாதவர்கள் என்று நிறுவுவதற்காக நான் சில விஷயங்களைச் சொல்லியிருக்கலாம்.

ஒரு கதையைப் பற்றிய விமர்சனங்கள் பல. எனவே, எந்தக் கதை குறித்தும் நீங்கள் எது வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். எழுத ஒரு பத்திரிகை கிடைக்கும்போதும், எழுதச் சொல்லும்போதும் எதை வேண்டுமானாலும் எழுதலாமும் கூட. ‘இலக்கியத்திற்கு ஒரு நோக்கமுண்டு என்று நம்புகிறவர்களுக்கு, ‘வேண்டும் ‘ என்று நினைப்பவர்களுக்கு எனது முன்னுரைகள் ஓரளவு பயன்படும். இதை மறுப்பவர்களுக்கு எனது முன்னுரைகள் மட்டுமல்ல, எனது எழுத்துக்கள் அனைத்துமே பயனற்றுப் போவது குறித்துக் கூட எனக்குக் கவலை இல்லை ‘ என்கிற ஜெயகாந்தனின் வரிகள் மட்டுமே உங்கள் கட்டுரை முழுமைக்கும் சிறப்பான பதிலாக அமைந்துவிடும். ஆனால், ‘அவரது கதைகள் பற்றி, தீவிர இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் இதழ் ஒன்றில் விமர்சனம் எழுத வேண்டிய அவசியம் கிடையாது ‘ என்கிற சுயபிரதாபத்துடனும், பிரகடனத்துடன் தங்கள் கட்டுரை வந்திருக்கிறபடியால், தங்கள் கட்டுரையைப் பற்றி சற்று விவரமாகப் பேச வேண்டிய அவசியமுண்டாகிறது.

1950களிலும் 1660களிலும், ஜெயகாந்தன் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுக்களை, பந்தா, ஜோடனை, சார்புகள் எடுக்கிற நிலை மற்றும் கத்தி கபடா இவற்றின் துணையோடு, விமர்சனம் என்கிற பெயரில் வரிந்துகட்டியிருக்கிறீர்கள். அவ்வளவுதான். இவற்றுக்கெல்லாம் ஜெயகாந்தன் எழுத்துக்களிலேயே விவரமான பதில்கள் இருக்கின்றன என்பதையும் ஜெயகாந்தனை விருப்பு வெறுப்பின்றி படிக்க நேரிடுகிற காலத்தில் தாங்கள் கண்டுகொள்வீர்கள். (தாங்கள் ஞானஸ்நானம் பெற்ற இடத்திலேயே ஞானஸ்நானம் பெற்ற சிலர் சமீபகாலமாக ஜெயகாந்தனை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இன்றி அணுக ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிற சந்தோஷமான செய்தியே, தங்கள் மீதும் என்னை நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.) ‘ஏன் எழுதுகிறேன் ‘ என்னும் தலைப்பிலும், அவர் முன்னுரைகளிலும் – கலையில் அழகியல் உணர்ச்சி, கலையில் வாழ்க்கைப் பார்வை, தமிழ் இலக்கிய மரபு, அவரின் இலக்கிய கோட்பாடு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் ஜெயகாந்தன் விரிவாகப் சொல்லியிருப்பதையெல்லாம் வெளியே எறிந்துவிட்டு, இக்கட்டுரையை தாங்கள் எழுதியிருக்கக்கூடும் என்று புலனாகிறது. தன் எழுத்தை விமர்சித்தவர்களை ‘மணிக்கொடிப் பதர்கள் ‘ என்றழைத்துக் கூட பதில் சொல்கிற நெஞ்சுரமும், நேர்மையும், ஞானத்தெளிவும் ஜெயகாந்தனுக்கு இருந்தது. ஜெயகாந்தனைப் பற்றி ‘Loud Speaker ‘ என்கிற தனிஅபிப்பிராயம் வைத்துக்கொண்டு, பிறர் முன்னிலையில் குறிப்பிட நேரும்போது, ‘வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அசோகமித்திரனையும், ஜெயகாந்தனையும் ஞானபீட பரிசுக்கு சிபாரிசு செய்வதாகச் ‘ சொல்கிற ‘அரசியல் ‘ பின்புலத்திலிருந்து ‘ஜெயகாந்தன் சிறுகதை என்கிற கலை வடிவத்தை எதற்காக வம்பிற்கு இழுக்க வேண்டும் ‘ என்று தாங்கள் எழுதியிருப்பதைப் படித்துச் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.

‘ ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி ‘ கதை எளிமையான ஒரு சூத்திரத்திற்குட்பட்டு இயங்குகிறது ‘ என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஜெயகாந்தன் கதைகள் எல்லாமே எளிமையான சூத்திரத்திற்குட்பட்டே இயங்குகின்றன என்றும் மட்டையடித்திருந்தீர்கள். ஜெயகாந்தனின் கதைகள் எளிய சூத்திரத்திற்குட்பட்டு இயங்குகின்றனவா என்று முடிவு செய்ய வேண்டியதைக் காலத்தின் கையிலும், வாசகர்கள் கையிலும் விட்டுவிட்டு, தாங்கள் எழுதியது சரியென்று வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். பன்னிரண்டாம் வகுப்புக்குள் தாங்கள் நிச்சயம் கணிதமும், அறிவியலும் படித்திருக்கக்கூடும். பிரபஞ்சத்தின் பெரிய அதிசயங்களையும், வான சாஸ்திரத்தின் புதிர்களையுமெல்லாமும் கூட, கணிதமும் அறிவியலும் எளிய சூத்திரங்களாகவே சொல்கின்றன என்று தாங்கள் படிக்கவில்லை போலும். E = M[C square] என்கிற எளிய சூத்திரத்தின் மகிமை அறிந்திருக்கிறீர்களா ? எனவே, ஜெயகாந்தனின் கதைகளும் அப்படி எளிய சூத்திரத்திற்குள் இயங்குவதாக தாங்கள் கருதினால் அது வாழ்வின் நியதியும் இயற்கையும் என்று எப்போது உணரப் போகிறீர்கள் ? கணிதமும் அறிவியலும் வேறு, இலக்கியம் வேறு என்று வகைபிரித்து சப்பைக்கட்டு கட்டலாம். மானுட வாழ்வின் மேன்மைக்கு உதவுபவை என்கிறவகையில் இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதானே. சரி, கணிதத்தையும் அறிவியலையும் விடுங்கள். திருக்குறள் கூட ‘குறள் என்கிற ‘ எளிய இலக்கணச் சூத்திரத்திற்குள்தானே இயங்குகிறது ? ஏன் தங்கள் கட்டுரை கூட ‘கலை கலைக்காகவே, கலை வாழ்க்கைக்காக அல்ல. (கலையில் அழகியல் பார்வை சமூகப் பார்வையை விட முக்கியமானது) ‘ என்கிற ‘எளிய ஒற்றைப் பரிமாணச் சூத்திரத்தைக் ‘ கொண்டுதானே ஜெயகாந்தனை அளவிட முயல்கிறது ? சிறுகதையை மதிப்பிடுவதற்கே தங்களைப் போன்றோர் ‘சிறுகதை இலக்கணம் ‘ என்கிற எளிய சூத்திரத்தைத்தானே (எவ்வளவு பக்கங்கள் இருக்கவேண்டும், நடை எப்படி இருக்க வேண்டும், மொழி எப்படி இருக்கவேண்டும், பாடுபொருள் எப்படி கையாளப்பட வேண்டும் என்று சொல்கிற சூத்திரம்) பயன்படுத்துகிறீர்கள் ?

‘கதை முழுவதும் இரைச்சல், மிகு உணர்ச்சி, ஊதாரித்தனமான வார்த்தைப் பிரயோகம் ‘ என்றும் கதையைக் குறித்தும் சொல்லியிருக்கிறீர்கள். தாங்கள் ‘நவீனத் தமிழ் இலக்கியம் ‘ பயின்ற இடத்தில் பண்டைத் தமிழ் இலக்கியங்களும், இலக்கணமும் போதிக்கப்படுகின்றனவா என்று நானறியேன். தமிழ் இலக்கணம் சொல்கிற ‘ஒருபொருட் பன்மொழி ‘ ஊதாரித்தனமான வார்த்தைப் பிரயோகம்தான். தமிழ் இலக்கண நயங்களான, உவமை, உருவகம், இல்பொருள் உவமை, உயர்வு நவிற்சி, தற்குறிப்பேற்றல் முதலியவை கூட ‘மிகு உணர்ச்சி ‘யை வெளிப்படுத்தக் கூடியவையே. எனவே, அடுத்ததாக ‘உலக மொழிப் பரப்பில் தமிழின் இடம் எது ‘ என்கிற தலைப்பில், தங்களின் ‘தீவிர இலக்கியத்துக்கு முக்கியத்துவம் ‘ தருகிற இதழில், ‘தமிழ் ஓர் ஊதாரித்தனமான, மிகு உணர்ச்சி மிகுந்த மொழி ‘யென்று தங்கள் பெயரில் ஒரு கட்டுரை எதிர்பார்க்கலாமா ? உங்கள் விதிப்படி, ‘வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய, பொய்யோ எனும் இடையாளொடும், இளையானொடும் போனான் – ‘மையோ மரகதமோ மறிகடலோ, மழை முகிலோ, ஐயோ, இவன் வடிவு! ‘ என்பதோர் அழியா அழகுடையான் ‘ என்று பாடிய கம்பர் மிகு உணர்ச்சி எழுதியவர் தான். இது என்ன ? ‘சொல்லாமல் சொல்லி உணர்த்துவது கலையின் முக்கியமான ஓர் அம்சம் ‘ என்று கம்பனுக்குக் கூடத் தெரியவில்லையே. ஜெயகாந்தன் மாதிரி ‘ஐயோ ‘ என்கிற சொற்களைப் பயன்படுத்துகிறார்! அதுபோலவே, ‘சீச்சீ! சிறியர் செய்கை செய்தான் ‘ என்கிற மஹாகவி பாரதியுடையதும் கூட மிகு உணர்ச்சிதான். பக்தி இலக்கியங்களின் பெரும்பகுதியையும் இப்படி நாம் மிகுஉணர்ச்சி என்று குப்பையில் போடவேண்டியிருக்கும். வேண்டுமானால் சொல்லுங்கள், கம்பராமாயணத்தில் இருந்து மட்டுமல்ல, எல்லா பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருந்தும் மிகு உணர்ச்சி குறித்த உதாரணங்கள் மேலும் பல எடுத்து தருகிறேன். ஆனால், அவற்றையெல்லாம் படித்துவிட்டும், ‘நிஜமான இலக்கியம் இங்குதான் இருக்கிறது ‘ என்று எவரையேனும் சுட்டினாலும் பரவாயில்லை. ‘கம்பனும் பாரதியும் மற்றவர்களும் கவிதை என்கிற கலை வடிவத்தை வம்புக்கு இழுக்கிறார்கள் ‘ என்றேதும் எழுதப்போய் வம்பில் மாட்டிக் கொள்ளலாகாது என்றே பிரார்த்திக்கிறேன். Oops. என்னுடைய பதிலைப் படித்துவிட்டு அதை ‘மிகுஉணர்ச்சி, ஒற்றைப் பரிமாணம், புறவயமானது, தட்டையானது, அழுத்தமானதல்ல ‘ என்கிற சூத்திரங்களுக்குள் தாங்கள் அடக்கப்போவதை சொல்லாமல் விட்டுவிட்டேனே!

ஜெயகாந்தனின் முதல் கதையான ‘சாந்தி பூமி ‘யிலிருந்து சிலவரிகளைக் குறிப்பிட்டு, பருவப்பெண் போல் தாங்கள் அடைந்த ‘கூச்ச ‘த்தையும் சொல்லி, ‘வாசகர்களின் இலக்கிய ரீதியான பிரக்ஞையை பக்குவத்தை மதிக்கும் ஒரு எழுத்தாளரால் இத்தகைய வரிகளை எழுத முடியும் என்று தோன்றவில்லை ‘ என்றும் எழுதியிருந்தீர்கள். ஜெயகாந்தனைப் பற்றிய உங்களின் மேற்கண்ட விமர்சனம்( ?), அச்சில் வந்த பாரதியின் முதல் கவிதையான ‘தனிமையிரக்கத்தின் ‘ பண்டித நடையைப் படித்துவிட்டு, ‘பாரதி கவிதையை எளிமைப்படுத்தினார் என்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. நவீனக் கவிதையைப் பற்றிய வாசகர்களின் பிரக்ஞையை மதிக்கும் ஒரு கவிஞரால் இத்தகைய வரிகளை எழுத முடியும் என்று தோன்றவில்லை ‘ என்று சொல்வதுபோல் இருக்கிறது. ‘புதுமைப்பித்தன் படைப்பாளியை நோக்கி விடுக்கும் செய்தி முக்கியமானது: ‘நீ உன் தமிழைப் பயன்படுத்தும் சுதந்திரத்தில் திளை. இந்தச் சுதந்திரம்தான் உன்னை உறுதிப்படுத்துகிறது. ‘ இப்படிச் சொன்னவர் ஜெயகாந்தன் அல்ல. தாங்கள் பெரிதும் மதிக்கும் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமி சொல்கிற புதுமைப்பித்தனின் செய்திப்படி, தமிழை அவர் விருப்பம்போல பயன்படுத்திக் கொள்ளும் உரிமை ஜெயகாந்தனுக்கு இருக்கும்போது, தாங்கள் ஏன் ஊதாரித்தனமான வார்த்தைப் பிரயோகம், மிகுஉணர்ச்சி என்றெல்லாம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். (தாங்கள் விரும்பவும் ரசிக்கவும் கூடும் என்பதால் இனி முடிந்தவரை சுந்தர ராமசாமியையே மேற்கோள் காட்ட முயல்கிறேன்!)

புதுமைப்பித்தனின் புகழ்பெற்றக் கதையான பொன்னகரம் ‘முக்கால் பங்கு வர்ணனை; கால் பங்கு கதை. ‘ இருங்கள்! என்னை அடிக்க வராதீர்கள். இப்போது புதுமைப்பித்தனுக்கு காலச்சுவடு மட்டுமே அத்தாரிட்டி என்றும் எனக்கும் தெரியும்! இதைச் சொன்னவரும் சுந்தர ராமசாமிதான். என்ன அநியாயம் பாருங்கள், முக்கால் பங்கு வார்த்தைகளை ஊதாரித்தனமாக வர்ணனைகளுக்காகச் செலவு செய்திருக்கிறார் புதுமைப்பித்தன்! ஆனாலும், பாருங்கள் நிறைய பேருக்கு ஒருநாள் கழிந்ததைவிட பொன்னகரம்தான் நினைவிருக்கிறது! பொன்னகரம்தான் நிறைய பேசப்பட்டும் இருக்கிறது. அப்புறம் ‘வாசகருக்கு போதனை செய்வது ஜெயகாந்தன் சிறுகதைகளின் ஆதார குணம் ‘ என்று ஆரம்பித்து, ஜெயகாந்தன் கடைசிவரை அதை விடவில்லை என்றெல்லாம் புலம்பியிருந்தீர்கள். என்ன காரணத்தினால் போதனைகள்மேல் தங்களுக்கு அலுப்பு வந்திருக்கக் கூடும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்! ‘ என்கிற வரிகளில் அழகியல் உணர்ச்சியா ஆனந்த நடனமாடுகிறது ? புதுமைப்பித்தனின் பிரச்சாரம் தொனிக்கும் மற்ற கதைகளைப் பற்றி என்னைக் கேட்பதைவிட, புதுமைப்பித்தன் எக்ஸ்பர்ட்ஸ் இருக்கிற ‘தங்கள் ஊரில் ‘ நிறைய அறிந்து கொள்ளலாம். ‘தமிழிலக்கணமே நூலினியல்பாவது என்னெவென்று சொல்லும்போது, ‘நூலினியல்பே நுவலின் ஓரிரு பாயிரந்தோற்றி மும்மை யினொன்றாய் நாற்பொருட் பயத்தோடு… எழுமதந்தழுவி ‘ என்று நூலின் பயன், அறம், பொருள், இன்பம், வீடு அதற்கும் மேல் புதியதாய் எழுகின்ற ஒரு கொள்கையைத் தழுவியும் இருக்க வேண்டும் என்று நான்கு பயனுக்காக என்று சொல்லி அதன் பின்னர்தான் பத்துக் குற்றம், பத்தழகு, முப்பத்திரண்டு உத்தி முதலிய இலக்கண விளக்கங்களை கூறிச் செல்கிறது. ‘ என்று 1960லேயே ஜெயகாந்தன் இவற்றுக்கெல்லாம் விவரமாக பதில் சொல்லியிருப்பதை ஏன் மறைத்துவிட்டார்கள் என்று நான் கேட்கமாட்டேன். தங்கள் ஜாக்கிரதை உணர்ச்சி புரிகிறது.. நன்னூலைப் பற்றி தாங்கள் ஏதும் விமர்சித்து(!) எழுதப்போக, தமிழாசிரியர்கள் எல்லாம் தங்கள் வீட்டிற்குப் படையெடுத்துவிட்டால் என்ன செய்வது என்று விட்டுவிட்டார்கள் போல!

புதுமைப்பித்தனின் 97 சிறுகதைகளையும் ‘வாசகனாகப் ‘ படித்த சுந்தர ராமசாமி அவற்றுள் 19 கதைகளைத் தனக்குப் பிடித்த கதைகளாகத் தேர்ந்தெடுக்கிறார். (சுந்தர ராமசாமியே தன்னை வாசகன் என்றழைத்துக் கொண்டு திறனாய்வுக் கட்டுரைகள் எழுதும்போது, உங்களை விமர்சகனாக நினைத்துக் கொண்டு எழுத யார் இடம் கொடுத்தது என்று தங்கள் ஊரில் எவரேனும் தங்களைக் கேட்கலாம். நான் கேட்க மாட்டேன்.) அவருக்குப் பிடித்த கதைகள் பட்டியலில் இடம்பெறும் கலியாணி, துன்பக்கேணி முதலிய கதைகள் சிறுகதை என்கிற இலக்கணத்தை நிறைவு செய்யவில்லை என்றும் வேறொரு கட்டுரையிலும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து தெரியவருவது என்னவெனில், சுந்தர ராமசாமி போன்ற முற்றும் அறிந்த வாசகர்களைக் கவரக்கூட, கதைகள் – சிறுகதை என்னும் இலக்கணத்தின்படி இருக்க வேண்டாம் என்பதுதான். எனவே, ஒரு கதாசிரியரின் வெற்றியும் இடமுமானது, தாங்கள் சொல்கிற விதிகளிலும், இலக்கணங்களிலும் இல்லை. அந்தக் கதை வாசகனில் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்துகிற பாதிப்பில் இருக்கிறது என்று தெளிவாகிறது. அதன்படி பார்த்தால் ஜெயகாந்தனின் பலகதைகளை, அக்னிப்பிரவேசம் உட்பட வெற்றி என்று சொல்லி தமிழ் இலக்கியப்பரப்பில் அவர் இடத்தை உறுதி செய்வதில் என்ன தவறு ?

சரி, தாங்கள் பெருத்த ஏமாற்றமடைந்த, ‘அக்னிப் பிரவேசத்திற்கு ‘ வருவோம். ‘புரட்சிகரமான தீர்வை முன்வைக்கும் ‘ ஜெயகாந்தனால் பிரச்னையின் மாறுபட்ட பரிமாணங்களைப் பார்க்க முடியவில்லை என்றும் சொல்லியிருக்கிறீர்கள். ஜெயகாந்தன் ஒருதரப்பின் சார்பாகவே கதைகளில் பேசுகிறார் என்றும் கண்டுபிடித்திருக்கிறீர்கள். அக்னிப் பிரவேசமும், அதன் தொடர்ச்சியான சில நேரங்களில் சில மனிதர்களும், ஒரே பிரச்னையைப் இருவேறு முறைகளில் அணுகியவைதானே! ‘தனக்குச் சரியென்று படுவதை அழுத்தமாகச் சொல்வார். எதிராளி பேசவேண்டும் என்பதில்லை. அவர் சார்பாகவும் இவரே பேசிவிடுவார் ‘ என்று எழுத்தாளர் சா.கந்தசாமி ஜெயகாந்தன் குறித்து எழுதியது நினைவிற்கு வருகிறது. சமூகத்தின் எல்லா மட்டங்களையும், எல்லாத் தரப்பு மக்களையும், எல்லாத் தரப்பு வாழ்க்கைமுறைகளையும், வெவ்வேறு கொள்கைகளையும் அவை சமூக வாழ்வில் ஏற்படுத்தும் முரண்பாடுகளின் பல்வேறு பரிமாணங்களையும் கதைப் பொருளாகக் கொண்டு, தமிழ் சிறுகதையை ஜெயகாந்தனைத் தவிர இன்றுவரை யாரும் செழுமைப்படுத்தியதில்லை. நவபாரதி இதைத் தன் கட்டுரையில் தெளிவாக விளக்கியிருப்பதை மறந்துவிட்டார்களா ? புதுமைப்பித்தன் வாழ்ந்த காலகட்டத்தில், ‘அது சதிதான்; இப்பவே சொன்னாதானே அவுஹ ஒருவளி பண்ணுவாஹ ‘ என்கிற அவரின் கொச்சை மொழி தந்திருக்கக் கூடிய அதிர்வைச் ‘சிலாகிக்கிறவர் ‘கள், அக்னிப் பிரவேசம் எழுதப்பட்ட காலத்தில் தமிழ்ச் சமூகம் பின்பற்றிய விழுமியங்களையும், அதன் முடிவு தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கொடுத்த அதிர்வுகளையும் குறித்துத் தங்களுக்கு ஏதும் சொல்லவில்லையா ? இல்லை, அக்னிப் பிரவேசம் குறித்து ஜெயகாந்தன் எழுதிய முன்னுரையில் கேள்விகளுக்கெல்லாம் பதில் இருப்பதைத் தாங்கள் படிக்கவில்லையா ? ‘அவரவர் மனசுக்குகந்த ரீதியில் இருப்பவைகளே புதுமை எனக் கொள்ளப்படுகின்றன ‘ என்று புதுமைப்பித்தன் எழுதியது தங்களுக்கு எவ்வளவு பாந்தமாகப் பொருந்துகிறது! ஆனால், அக்னிப் பிரவேசம் கதையும் அதன் முடிவும் அது எழுதப்பட்ட காலகட்டத்தில் எதிர்ப்புகளுக்கு ஆளானதும், பலரின் ‘மனசுக்குகந்தவாறு ‘ அதன் முடிவு இல்லாதபோதும், பெரிதும் பேசப்பட்டதும் புதுமை என்று பாராட்டப்பட்டதும், அக்கதையினால் தமிழ் இலக்கிய உலகில் ஒரு பிரளயம் நிகழ்ந்ததுமே, அதன் புதுமைக்குச் சான்று என்பதல்லவா விஷயம்.

‘விதி வசத்தால் கெட்டுப்போன பெண்களைப் பற்றிய கட்டுரை சாதித்துவிடக் கூடிய தாக்கம் இது ‘ என்று அக்னிப்பிரவேசம் எழுப்பிய தாக்கத்தை ஞானதிருஷ்டியால் கணித்திருக்கிறீர்கள். ஜெயகாந்தன் அக்னிப்பிரவேசம் எழுதுவதற்கும் முன்னும், எழுதிய பின்னும், விதிவசத்தால் தமிழ்நாட்டில் பெண்கள் கெட்டுப்போகவில்லையா ? அவர்களைப் பற்றிய கட்டுரைகளைத் தமிழ்ப்பத்திரிகைகள் வெளியிடவே இல்லையா ? அப்படிப்பட்டக் கட்டுரைகள் வெளிவந்திருக்கும் என்று தாங்கள் நம்புவீர்களேயானால், ஏன் அத்தகைய எந்த ஒரு கட்டுரையும் அக்னிப்பிரவேசம் எழுப்பியதாகத் தாங்கள் சொல்கிற ‘புரட்சித்தாயின் கையிலிருக்கும் குடத்தின் அடிமட்டத்தைக் கூட தாண்டாத ‘ தாக்கத்தை எழுப்பவில்லை ? ‘முள் மீது சீலை பட்டாலும் சீலைக்குத்தான் நஷ்டம், சீலை மீது முள்பட்டாலும் சீலைக்குத்தான் நஷ்டம் ‘ என்று ஜெயகாந்தனுக்கு முன்னிருந்த காலகட்டத்தில் பாதிக்கப்ட்ட பெண்களையும் பொறுப்பாளியாக்கி வேடிக்கை பார்த்த ‘கற்பு மரபின் ‘ அடிப்படையில் அக்னிப்பிரவேசம் அமையாமல் போனது குறித்துத் தங்களுக்கு வருத்தங்கள் இருக்கலாம். ‘பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பங்கு பற்றிச் சொல்ல அவருக்கு எதுவும் இஇல்லை ‘ என்று வன்முறைக்காளனவர்களும் வன்முறையில் பங்கு வகிப்பவர்கள் என்ற மகோன்னதக் கருத்தை வெளியிட்டதற்காக, பெண் படைப்பாளிகள் தங்கள் விமர்சனத்தைக் கண்டிக்க முன்வருவார்கள் என்றால் அவர்களையும் ‘சார்புகளற்ற நிலை ‘ இஇல்லாதவர்கள் என்று தாங்கள் ஒதுக்கலாம்.

வாதத்திற்காக ஜெயகாந்தன் பிரச்னையை ஒருசார்பாக அணுகுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ‘கதாபாத்திரங்களாக வரும் பெண்களுடன் புதுமைப்பித்தன் கொண்டிருக்கும் உறவு அவர்களை இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் ஜீவன்களாகப் பார்க்க வைக்கிறது. கறாரான பரிசீலனைகளிலிருந்து அவர்களுக்கு விலக்களிக்கிறது. அவர் பல சமயங்களில் அவர்களின் நிலையை எண்ணித் தார்மீகக் கோபத்தில் சமநிலை இழந்துவிடுவதையும் பார்க்கலாம். அலமுவின் மார்பிலிருந்து வழிகிறது ரத்தம். ‘இந்த ரத்தத்தை அந்தப் பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ! ‘ என்கிறாள் அவள் (வழி). பெண்களின் தத்தளிப்பையும் உணர்வுகளையும் முழுமையாக ஏற்று அவற்றுக்கு அழுத்தம் தருகிறார். ஒரு படைப்பாளியாக அவருக்கு அருவருப்பானது வக்கீல் வாதம்தான். ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து வாதங்களைத் தொடுப்பது. ஆனால், பெண்களின் உணர்வுகளை மதிப்பதனாலேயே ஒரு நீதிபதியைச் சமநிலை அற்றவர் என்று சொல்லிவிடமுடியாது. ‘ – இது சுந்தர ராமசாமி புதுமைப்பித்தன் குறித்துச் சொன்னது. இதே அடிப்படையில் ஜெயகாந்தனை அணுகுகிற மனப்பக்குவம் தங்களைப் போன்றவர்களுக்குக் கிடைக்கும்போது தங்களுக்கு அவர் எழுத்தின் புதுமைகளும், புதிய பரிமாணங்களும் புரிய வரும். ஒரே பிரச்னைக்கு ஜெயகாந்தனின் பலகதைகள் பல்வேறுவகையான தீர்வுகளைச் சொல்வதையும் திறந்த மனதுடன் அவரை நெருங்கும் வாசகர்கள் கண்டுணருவர். அப்படிக் கண்டுணர விரும்பாது ஜெயகாந்தன் ஒரு சார்பில் அணுகுகிறார் என்று கண்மூடித்தனமாய் நம்பிக் கொண்டிருக்கிறவர்களின் கண்களைத் திறக்கத்தான், அத்தகைய கதைக்கருக்கள், கதை மாந்தர் ஆகியோரைத் தன்னுடைய கட்டுரையில் விவரமாக அலசுகிறார் நவபாரதி. ‘அபச்சாரம், ஆராதனையெல்லாம் அலசலா ‘ என்று தாங்கள் நரம்புகள் முறுக்கேறி உச்சஸ்தாயில் அலறினாலும், இரைச்சல் என்று நானதை அழைக்க மாட்டேன்!

‘ஜெயகாந்தன் பேசிக்கொண்டே இருக்கிறார்; பாத்திரங்கள் மூலமாகப் பேசுகிறார். பாத்திரங்கள் பேசாதபோது இவரே நேரடியாகப் பேசுகிறார். மாலை நேரங்களில் முச்சந்திகளில் அரசியல்வாதிகள் மேடைகளில் முழங்குகிறார்கள். பண்டிகை நாட்களில் பேராசிரியர்கள் பட்டிமன்றங்களில் முழங்குகிறார்கள். சாலமன் பாப்பையாவும், சுகி சிவமும் ஞானசம்பந்தனும் ஆளுக்கொரு தொலைக்காட்சியில் தினமும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குப் பேசித் தீரவில்லை. தமிழர்களுக்குக் கேட்டுத் தீரவில்லை. ஜெயகாந்தனும் பேசிக் கொண்டிருக்கிறார் ‘ என்று எழுதியிருக்கிறீர்கள். இதை, ‘ஜெயகாந்தன் கதைகள் மூலமாகவும் நேரடியாகவும் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார் ‘ என்று ‘பொறுப்பாக ‘ எழுதாமல், ஏன் நீட்டி முழக்கி பிரச்சாரம் போல் ஊதாரித்தனமான வார்த்தைப் பிரயோகங்களோடும், மிகுஉணர்ச்சியோடும் எழுதியிருக்கிறீர்கள் என்றும் நான் கேட்க மாட்டேன்.

வாதத்திற்காக அவர் கதைகள் போதிக்கின்றன என்றே வைத்துக் கொள்வோம். ஓர் எழுத்தாளரை, அவர் கொண்டுள்ள பார்வையின் அடிப்படையில் விமர்சிப்பதுதானே நேர்மை. ஐயா, இதைக் கூட நான் சொல்லவில்லை. நான் சொன்னால் தாங்கள் கேட்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியாதா ? அதனால்தான், மறுபடியும் சுந்தர ராமசாமியைத் துணைக்கழைக்கிறேன். ‘ஒரு படைப்பாளியின் நிறையையோ குறையையோ சுட்டும்போது, மொத்தப் படைப்புகள் சார்ந்து அந்தப் படைப்பாளி கொண்டுள்ள பார்வைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்தப் பார்வையை ஏற்றுப் படைப்பாளியை மதிப்பிடத் தெரிந்த எவனும் தன் பார்வை சார்ந்து படைப்பாளியின் குறைகளை ஆராய்ந்து தன் மறுபரிசீலனையை உருவாக்கலாம். படைப்பாளியின் அடிப்படைப் பார்வையை மறைத்துவிட்டுக் குறைகளை மட்டுமே தொகுக்க யாருக்கும் உரிமை கிடையாது. ‘ ஜெயகாந்தன் இலக்கியம் குறித்துக் கொண்டிருக்கும் அடிப்படைப் பார்வையை மறைத்துவிட்டு (கலை கலைக்காக அல்ல, வாழ்க்கைகாக என்கிற அவரின் நம்பிக்கையை மறைத்துவிட்டு) அந்தப் பார்வையே தவறென்று சொல்லி, அவரின் குறைகளை மட்டுமே தொகுக்கிற தங்களின் கட்டுரையின் தரம் என்ன என்று இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஜெயகாந்தனின் இலக்கியக் கொள்கையைத் தாங்கள் அங்கீகரிப்பதில்லை என்பதைச் சொல்லிவிட்டு, ஆனால் அவர் படைப்புகள் குறித்த விமர்சனத்தை அக்கொள்கையின் அடிப்படையிலேயே ஆய்ந்திருந்தால் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றவன் நாகர்கோவில் அருகே வாழ்ந்திருக்கலாம் ‘ என்று நான் கூடக் கைதட்டியிருப்பேன். அப்படிச் சொல்லிவிட்டு, அதன்பின் உங்கள் பார்வையில் அப்படைப்புகளை மீள்வாசிப்பு செய்து விமர்சனம் செய்வதுதான் சரியானது என்றுதானே சுந்தர ராமசாமி சொல்கிறார்! சுந்தர ராமசாமி என்ன சொல்கிறார் என்பது தங்களைவிடவா எனக்கு அதிகம் புரிந்துவிடப் போகிறது ?

சரி, வாதத்திற்காக ஜெயகாந்தன் கதைகளில் புதுமையில்லை, எல்லாம் அரைத்தச் சரக்கு என்றும் வைத்துக் கொள்ளலாம். தமிழ் வாழ்க்கைச் சூழலைச் சொல்லுகிற எல்லாக் கருக்களும் ஏற்கனவே இலக்கியமாகி விட்டதால், இனி செவ்வாய்க் கிரகம் பற்றியும், வியாழக் கிரகம் பற்றி மட்டுமே, யாரும் சொல்லாதவற்றை படைப்புகளின் பின்புலமாக்க வேண்டும் என்று சட்டம் போட்டு விடலாமா ? ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா ‘ என்கிற கவிதைவரியும், ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் ‘ என்கிற குறளும் ஒன்றையேதானே சொல்கின்றன ? ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம் பழித்ததொழித்துவிடின் ‘ என்கிற குறளைக் காப்பியடித்துதான் ‘காவித்துணி வேண்டா, கற்றைச் சடை வேண்டா, பாவித்தல் போதுமே பரம நிலை எய்துதற்கே ‘ என்று பாரதி பாடிவிட்டான் போல. ஐயோ! தமிழின் மற்றப் படைப்பாளிகளைத் தாக்கி எழுதத் தங்களுக்கு நான் பாயிண்ட் எடுத்துக் கொடுக்கிறேன் என்று என்னையும் யாரேனும் ‘ஜோதி ‘யில் கரைத்துவிடப் போகிறார்கள் என்று பயமாக இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

சொல்கிற விஷயமல்ல முக்கியம், சொல்லப்படும் விதமே முக்கியம் என்று கண.முத்தையா ஏதோ சொல்கிறார். என்ன சொல்கிறார் என்று கேட்போம் வாருங்கள்! ’45-46 வருடங்களுக்கு முன் ஒருநாள் புதுமைப்பித்தன் அவர்கள் இல்லத்தில் இலக்கிய நண்பர்கள் சிலர் கூடிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ‘விதவைகள் பிரச்சினை ‘ என்ற விஷயம் பேசப்பட்டது. பி.எஸ். ராமையா அவர்களில் ‘பூச்சூட்டல் ‘ புதுமைப்பித்தனின் ‘வழி ‘ என்ற கதைகள் அலசி ஆராயப்பட்டன. முடிவில் புதுமைப்பித்தன் சொன்னார்: ‘இந்த விஷயத்தைத் தொடாத எழுத்தாளனே இல்லை. பலரும் பல கோணங்களில் இதை எழுதித் தேய்த்து விட்டார்கள். தேய்ந்து போன இந்த விஷயத்தை இனி யாரும் புதிதாகச் சொல்லிவிட முடியாது! ‘ என்று. இந்த முத்தாய்ப்பை எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள் – நான் உள்பட. ஆனால், இதற்குப் பல வருடங்களூக்குப் பின் திரு. ஜெயகாந்தனின் ‘யுக சந்தி ‘ என்ற கதையைப் படித்தபோது, நான் அப்படியே அசந்து போனேன். புதுமைப்பித்தனின் முடிவு தவறாகி விட்டது. விஷயம் அல்ல முக்கியம், அதை எடுத்தாளும் எழுத்தாளனின் ஆற்றல்தான் முக்கியம் என்று உணர்ந்தேன்.

இந்த விஷயம் தேய்வுற்று விட்டது என்ற முடிவுக்கு வந்த காலத்தில் எல்லாரும் விதவைக் கொடுமை இளம் பெண்ணின் துயரம் என்ற நோக்கில்தான் எழுதினார்கள். ஒரு கைக் குழந்தையின் இளந்தாய்க்கு ஏற்பட்ட மன அதிர்ச்சியை – பச்சைக் குழந்தை, தாயின் கோர வடிவைக் கண்டு அலறும் காட்சியை மையமாக வைத்துப் புதிய கோணத்தில் அலசுகிறார் ஜெயகாந்தன். இப்படி எத்தனையோ. அவருடைய ‘சைத்தானும் வேதம் ஓதட்டும் ‘, ‘உண்மை சுடும் ‘ போன்ற கதைகள் எத்தனை பேரைத் திடுக்கிட வைத்துள்ளன! புதிய கோணத்தில் ஆழ்ந்த சிந்தனையோடு விஷயங்களைக் கையாள்வதில் ஜெயகாந்தன் மிகச் சுலபமாக வெற்றி பெற்றுள்ளார். ‘

குரு-சீட உறவுகள் கடைசியில் எய்தக்கூடிய கோளாறுகளில் எல்லாம் ‘சிக்கித் தவிக்கிற ‘ இடத்தில் இருந்து, குரு-சீட உறவுகள் குறித்து சதாகாலமும் சர்வ ஜாக்கிரதையாய் இருக்கிற ஜெயகாந்தனைப் பற்றி, அத்தகைய கண்ணிகளிலே சிக்கிக் கொள்ள மறுக்கிற ஜெயகாந்தனைப் பற்றி, தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், சக படைப்பாளிகள் ஆகியோர் செய்த ஆக்கபூர்வமான விமர்சனங்களையெல்லாம், ‘உபவாசம் ‘, ‘ஆராதனை ‘ என்று தாங்கள் அழைப்பதன் பின்னே பொதிந்திருக்கிற பொருமலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தனின் ‘மிகச்சிறப்பான கதைகளாக (சிகர சாதனைகளாக) ‘ இரண்டே இரண்டு கதைகளைத்தான் கடைசியில் தேர்ந்தெடுக்கிறார். ‘அடப்பாவமே! கடைசியில் புதுமைப்பித்தனுக்கும் இந்த நிலைதானா ‘ என்று ஆகிவிடுகிறது நமக்கு. சரி இருக்கட்டும்! இரண்டே இரண்டு கதைகள் தான் புதுமைப்பித்தனின் சிகர சாதனைகள் என்று சொல்கிற அவரின் ‘தாராள மனப்பான்மை ‘யைப் பாராட்டுவோம். சா.கந்தசாமி சொன்னதுபோல், ஒரு கவிதைக்காக ஒரு புலவனைத் தமிழ்ச் சமூகம் இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறது. ‘இரண்டு சிறப்பான கதைகள் ‘ எழுதியதாகச் சொல்லப்படும் புதுமைப்பித்தனையும், அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ சிறப்பான சிறுகதைகள் மட்டும் எழுதாமல் – நாவல், கட்டுரை மற்றும் தமிழ்ச் சினிமாத்துறைகளில் சிகரங்கள் தொட்ட ஜெயகாந்தனையும், அதே தமிழ்ச் சமூகம் – கொண்டாடாமலா போய்விடும் ?

அன்புடன்,

( ‘ஜெயகாந்தனை ஆராதிக்கிறார் ‘ என்று சொன்னால் பெருமைப்படக்கூடிய)

பி.கே. சிவகுமார்

pksivakumar@att.net

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்