அரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர்.


அரசு ஊழியர்களின் போராட்டம் எதிர்பாராத திருப்பங்களையும், முடிவையும் எட்டி விட்டது. இது வரையிலும் அவர்கள் கோரிக்கை வைப்பார்கள், பிறகு பேச்சு வார்த்தை, உச்சகட்டமாக ஓரிரு நாட்கள் வேலை நிறுத்தம்.. அதற்குள் அவர்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் படும், அரசு இயந்திரம் மீண்டும் மக்களுக்காக ( ? ? ? ?) இயங்கத் தொடங்கி விடும். ‘புலி வருது ‘ கதையாக ‘வேலை நிறுத்தம் ‘ என்று அச்சுறுத்தி வந்தவர்களின் சாயம் இப்போது வெளுத்து விட்டது. ஓரிரு நாட்கள் மீறிப் போனால் ஒரு வாரம் வேலை நிறுத்தம் செய்தால், அரசு நம் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும், வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கும் ஊதியம் கிடைத்து விடும் என்று எண்ணி போராட்டத்தை ஆரம்பித்தவர்களுக்கு, நல்லதொரு பாடம் கிடைத்துள்ளது. இந்த துணிச்சலான நடவடிக்கைக்காக முதல்வரை நிச்சயம் பாராட்ட வேண்டும். இதற்கு முன்பு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தையும் அவர் அடக்கிய விதம் பாராட்டுக்குரியதே!

தேவையில்லாத வேலை நிறுத்தம் செல்லுபடியாகாது என்ற பாடத்துடன், பொதுமக்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தையும் அரசு ஊழியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இலட்சக் கணக்கானவர்கள் வேலை இழந்தும், பொதுமக்களிடம் இருந்து ஆதரவு, ஏன், ஆறுதல் கூட கிடைக்கவில்லையே, அது ஏன் ? சாதிச் சான்றிதழில் ஆரம்பித்து ஏதாவது ஒரு வேலைக்காக அவர்கள் உங்களை அணுகிய போது, நீங்கள் அவர்களிடம் நடந்து கொண்ட விதம், செய்த அலைக்கழிப்புகள் இன்று அவர்களை அமைதியாக இருக்கச் செய்து விட்டது. ஒரு போராட்டத்திற்கு, நியாயமான கோரிக்கைகள் எத்தனை முக்கியமோ, பொதுமக்களின் தார்மீக ஆதரவும் அத்தனை முக்கியமானது. கையூட்டு வாங்குபவர்கள் எத்தனை சதவீதம் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், உங்களில் பெரும்பான்மையோர் பொதுமக்களிடம் அலட்சியமாகத் தான் நடந்து கொள்கிறீர்கள். ‘யானையில் செல்பவனிடம் சுண்ணாம்பு கேட்பது போல ‘த்தான் உங்களிடம் இருந்து எங்களுக்கு பதில் கிடைக்கிறது.

உங்களுடைய சில கோரிக்கைகள் நியாயமானவையாக இருக்கலாம், ஆனால் இப்போதைய பொருளியல் நெருக்கடியில் ஒரு சில இன்னல்களை எல்லோரும் பகிர்ந்து கொள்ளத் தான் வேண்டும். பண்டிகைகளுக்கான ஊக்கத் தொகை குறைந்தாலே நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, ஆனால் அந்த பண்டிகையே கொண்டாட முடியாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? பணிக்குத் தகுந்த, ஏன், அதைவிட சற்று கூடுதலாகவே ஊதியம் பெறுகிறீர்கள். உங்களுக்கு தெரிந்த (உங்கள் வீட்டிலேயே யாராவது இருக்கலாம்), தனியார் துறையில் பணிபுரியும், ஒருவரின் வேலைப் பளு, ஊதியத்தை உங்களுடைய வேலை, ஊதியத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுடைய செளகர்யம் அப்போது புரியும்.

எண்பது கிலோ உடம்புக்கு அரை கிலோ மூளை தான். எடுத்து விடலாமா ? என்று கருணாந்ிதி கேட்கிறார். எடுக்க முடியாது தான், அதற்காக கிடைக்கும் உயிர்ச்சத்தில் பெரும்பான்மையை மூளைக்கே கொடுத்து விட்டால், இருதயமும், நுரையீரலும், கணையமும், கையும், காலும் என்ன கடனா வாங்கும் ?

வேலைநிறுத்தத்தை கைவிடுகிறோம், பணிக்குத் திரும்புகிறோம் என்று அவர்கள் கூறிய பின்பும், அவர்களை அலைக்கழிப்பது தேவையற்றதே என்று தோன்றுகிறது. மன்னிக்க முடியாத பெருங்குற்றம் ஒன்றும் அவர்கள் செய்து விடவில்லை. இப்போதே மனரீதியாக தக்க பாடம் கிடைத்து விட்டது. உடனடியாக அவர்களைப் பணிக்கு அழைத்து, பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சரியாக இருக்கும். தேவையற்ற போராட்டங்களை அடக்குவதில் காட்டும் உறுதியையும், முனைப்பையும் மாநிலத்தின் வளர்ச்சிப் பணியிலும் முதல்வர் காண்பித்தால் நன்றாக இருக்கும்.

— கண்ணன் பழனிச்சாமி,

சிங்கப்பூர்.

kannan_vnp@yahoo.com

Series Navigation

கண்ணன் பழனிச்சாமி

கண்ணன் பழனிச்சாமி