பசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


வழக்கம் போலவே அரவிந்தன் நீலகண்டன் தன்னுடைய பாணியில் ‘பசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1 ‘ கட்டுரையை எழுதியிருக்கிறார். நீலகண்டன் கட்டுரைக்கு விரிவான பதில் இப்போது எழுதப்போவதில்லை.அவர் தன் தொடரை( ?) முடித்த பின் எழுதுகிறேன்.தேவைப்பட்டால் அவ்வப்போது சிறு கட்டுரை/குறிப்புகளை என் எதிர் வினையாக முன்வைக்கிறேன். இதற்கு முக்கியமான காரணம் நேரமின்மை.

அவர் ‘Historical roots of our Ecological Crisis ‘, Science (155(3767)): 1203- 1207, 1967 என்ற புகழ்பெற்ற கட்டுரையை சான்று காட்டியுள்ளார்.ஆனால் கட்டுரையின் கடைசிப் பகுதியில்(An Alternative Christian View) கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளதை, குறிப்பாக அஸிஸியைப் பற்றி எழுதியுள்ளதை குறிப்பிடவிலலை. லைன் வைட் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து எழுதியுள்ளதும் முக்கியமானது. இது குறித்து ஒரு வரி கூட ஏன் நீலகண்டன் எழுதவில்லை. இந்தக் கட்டுரை வாசகர்களுக்கு எளிதில் கிடைக்காது, ஆகவே யார் நம்மை கேள்வி கேட்கப்போகிறார்கள் என்ற எண்ணமா ?. அவர் எழுதுகிறார்

‘ஸ்டாலின்கள், காஸ்ட்ரோக்கள், போல்போட்கள், லெனின்கள் , மாவோக்களென விஷகனிகளையே கொடுத்துவரும் ஒரு பன்மை அழிப்பு சித்தாந்தமான மார்க்சியம் பன்மையோடிணைந்த வாழ்வினை அடிப்படையாக கொண்ட பசுமையியலுடன் எவ்விதத்திலும் இணைய முடியாதென்பதே உண்மை. ‘

க்யூபாவில் உள்ள நிலை என்ன ? இயற்கையோடு இணைந்த வேளாண்மையினைத்தான் அரசு ஊக்குவிக்கிறது.காடுகளின் பரப்பளவு புரட்சிக்குப்பின் பெருகியுள்ளது.முன்பு மொத்த பரப்பளவில் 14% இப்போது 21% இலக்கு 27 %.இது போல் பல முயற்சிகள் நடைபெறுகின்றன.பூச்சிகொல்லிகளுக்கு மாற்று உட்பட பல முயற்சிகளில் வளங்குன்றா வளர்ச்சி என்பதே வழிகாட்டியாக உள்ளது. http://www.counterpunch.org/levins02282003.html இதை எழுதியவர்,லெவின்ஸ் ஒரு விஞ்ஞானி, ஹார்வார்ட் பல்கலைகழக்த்தில் ஆய்வாளர்.எடின்பர்கில் நடைபெறும் சர்வதேச அறிவியல் விழாவில் அறிவியலும் சமூகமும் குறித்த பணிகளுக்காக பரிசு பெற்றவர்.அவர் அப்போது நிகழ்த்திய உரை மிகவும் பிரமாதமானது.வேறொரு சந்தர்ப்பத்தில் இவர் பற்றி எழுதுகிறேன்.

மார்க்சியம் பற்றி அவர் வழக்கமான பல்லவியையே பாடுகிறார்.அதில் வியப்பில்லை.நான் திண்ணையில் பசுமையாகும் மார்க்சியம் என்ற கட்டுரையில் முன்வைத்தவற்றை வாசகர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.ஜான் பெலாமி பாஸ்டரின் புத்தகத்தைப் படித்துவிட்டு அவர் எழுதட்டும்.மன்த்லி ரீவ்யூ இணையத்தில் அது பற்றிய விபரங்கள் உள்ளன.வாசகர்கள் அதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.(www.monthyreview.org)இந்தியப் பதிப்பாகவும் அந்நூல் கிடைக்கிறது.அரவிந்தன் என் கட்டுரையை எதிர்கொள்ளவில்லை.காரணம் வெளிப்படை.

இடது சாரிகள் நிலைப்பாடு ஒரு புறம் இருக்கட்டும். நர்மதை பள்ளதாக்குத் திட்டங்கள் போன்றவை குறித்து அவர் கருத்து என்ன ? நதி நீர் இணைப்பு திட்டம் குறித்து அவர் என்ன கருதுகிறார் ? பிரண்ட்லைன் அருந்ததி ராயை ஆதரிக்கலாம், சீன அரசையும் ஆதரிக்கலாம்.அரவிந்தன் நீலகண்டன் தன்னுடய நிலைப்பாட்டினை ஏன் எழுதவில்லை.இடதுசாரிகளை எதிர்ப்பது என்பது மட்டும்தானா அவரது நிலைப்பாடு ?.

அவர் எழுதியது.

‘நவீன பாரதத்தில் பசுமை இயக்க வெற்றிகர முன்னோடிகளாக (அரசியல் நடத்துபவர்களாக அல்லாமல்) திகழும் அண்ணா ஹஸாரே, ராஜேந்திர சிங், பகுகுணா, அனில் அகரவால் ஆகிய அனைவருமே (இவர்கள் ஒரு சிலரே) பாரத தர்ம மரபுகளால் (குறிப்பாக ஸ்வாமி விவேகானந்த சிந்தனையால்) உந்தப்பட்டு தம் இயக்கங்களை ஆரம்பித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே தலித்கள் மற்றும் வனவாசி மக்கள் இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள். பசுமை இயக்கத்தை தொழில்நுட்பம், சமுதாய ஒருங்கிணப்பு மற்றும் செயல்பாடு ஆகியவை இணைந்த முழுமையாக நோக்கியவர்கள். இவர்கள் வெறும் எதிர்ப்பியக்கமாக மட்டுமே தம் இயக்கங்களை நடத்தவில்லை. ஆனால் சூழலியல் அறிவியலுக்கும் சூழலியல் மக்கள் இயக்க வெற்றிகளுக்கும் பாரதிய மரபின் பங்களிப்பு என்ன என்பது நம் இடதுசாரி செமினார் வாலாக்களுக்கு சுவாரசியமில்லாத ஒரு விஷயம் அல்லது ஆராய்ச்சி செய்யுமளவுக்கு முக்கியத்துவமல்லாத ஒன்று. ‘

இதில் கவனமாக தவிர்க்கப்பட்ட பெயர் மகாத்மா காந்தி.காந்திய இயக்கமும்,காந்தியின் வாழ்வு,கருத்துக்களுமே தனக்கு உந்துதல் என பகுகுணா பல முறை குறிப்பிட்டுள்ளார்.மேலும் சிப்கோ இயக்கம் உருவாக ஒரு முக்கிய காரணம் அப்பகுதியில் சர்வோதய இயக்கங்களின் பணி. ராஜேந்திர சிங் ஜெயப்பிரகாஷ் நாரயணனின் கருத்துகள், முழுமையான புரட்சி இயக்கம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டவர்.அவருக்கு வழங்கப்பட்ட மாகேசே விருது வழங்கு நிகழ்ச்சியில் ஒரு உரையில் கூற்ப்படுவது இதோ

RAJENDRA SINGH, AS WE HAVE HEARD IN THE CITATION, MOBILIZED LOCAL RESOURCES TO REVIVE THE ENVIRONMENT IN HIS HOMELAND. SINGH PROMOTED MAHATMA GANDHI ‘S CONCEPTS IN LOCAL AUTONOMY AND SELF-RELIANCE. HE LED HIS CO-VILLAGERS IN THE STEPS OF THEIR ANCESTORS TO REHABILITATE THEIR DEGRADED HABITAT AND BRING ITS DORMANT RIVERS TO LIFE.RAJENDRA SINGH ‘S CONCEPT OF MOBILIZING LOCAL RESOURCES INNOVATIVELY REFLECTS NOT ONLY MAHATMA GANDHI BUT ALSO PRESIDENT RAMON MAGSAYSAY ‘S INNOVATIVE GOVERNANCE

(http://www.opnet.ops.gov.ph/speech-2001aug31.htm). மனுஷியில் அவர் குறித்த கட்டுரை இணையத்தில் உள்ளது (http://free.freespeech.org/manushi/123/rajendra.html)

அன்னா ஹஸாரேயும் காந்தியத்தால் ஈர்க்கப்பட்டவர்தான். காந்தி,வினோபாவே,விவேகானந்தர் ஆகியோரை ஆதர்சமாக அவர் கொண்டவர் என்று கூறலாம். அவர் பாரதிய ஜனதா-சிவசேனை அரசின் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்.காங்கிரஸ்-தேசிய காங்கிரஸ் கட்சி அரசையும் அவர் விமர்சித்துள்ளார். ஊழலை எதிர்ப்பவர்.ராஜேந்திர சிங் இன்றைய அரசின் நீர் கொள்கை,நதி நீர் இணைப்புத் திட்டம் ஆகியவற்றின் விமர்சகர்.அவற்றிற்கு எதிராக தேசிய அளவில் பிரச்சாரமும்,இயக்கமும் நடத்துபவர்.இதை நீலகண்டன் மறைக்கமுடியாது.(அமரர்) அனில் அகர்வால், என் நண்பர்.அவர் துவக்கிய Down To Earth l நான் எழுதியிருக்கிறேன்.அவர் தில்லியில் காற்று மாசுபடுதல் குறித்து வழக்கு தொடுத்தபோது மத்திய அரசு எடுத்த நிலைப்பாடுகள் என்ன எனபது அனைவரும் அறிந்தது.அப்போது தில்லியில் பாரதிய ஜனதா கட்சி எப்படி அரசியல் ஆதாயத்திற்காக நடந்து கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும். இதைப்பற்றி நீலகண்டனுக்கு கருத்து ஏதேனும் உண்டா ?. அனில் எழுதியுள்ள ஒரு கட்டுரையிலிருந்து பின்னர் சில பகுதிகளை முன்வைக்கிறேன்.

இந்தியாவில் பல வெகுஜன இயக்கங்கள் உலகமயமாதல்,வகுப்புவாதம் ஆகியவற்றை பிரதான எதிரிகளாகப்பார்க்கின்றன.எனவே அவை பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமையிலுள்ள அரசின் கொள்கைகளை எதிர்க்கின்றன.இவை பல மாநில அரசுகளின் கொள்கைகளையும் எதிர்க்கின்றன. பாரதிய மரபின் பெயரால் அரசியல் செய்பவர்கள், R.S.S ன் சார்பு அமைப்புகளுடன் இவை முரண்படுகின்றன.இது தான் உண்மை.இதை மறைத்துவிட்டு பாரதிய மரபு,பசுமை அரசியல் குறித்து நீலகண்டன் ஒரு போலியானத் தோற்றத்தை தர முயல்வது ஏன். காந்தியின் பெயர் தவிர்க்கப்பட காரணம் என்ன.விவேகானந்தர் பெயர் ஏன் முன்னிறுத்தப்படுகிறது. காந்தியின் தாக்கத்தினை இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலுமுள்ள பசுமை இயக்கங்கள்,சிந்தனையாள்ரகளிடம் காணலாம். Deep Ecology என்ற கருத்தினை முன்வைத்த Naess காந்திய சிந்தனை குறித்து ஆராய்ந்தவர். பசுமைக் கட்சிகள் அமைதி இயக்கம், சூழல் பாதுகாப்பு இயக்கம் போன்றவற்றின் அரசியல் வாரிசுகள். அணு ஆயுத உற்பத்தி,அணு மின் உற்பத்தி, ராணுவமயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்த இயக்கங்ளுக்கும், இன்று இந்தியாவில் இவற்றுடன் உலகமயமாதல்,வகுப்புவாதம் ஆகியவற்றையும் எதிர்க்கும் இயக்கங்ளின் பசுமை அரசியல் இவை கருத்தொற்றுமை கொண்டவை.இது பற்றி பேசுவதை அவர் கவனமாக தவிர்ப்பது நமக்குப் புரிகிறது.பசுமை அரசியலை குறுக்கும் முயற்சி இது.பசுமை அரசியல் குறித்த ஒரு தவறான புரிதலை முன்வைக்கும் முயற்சிதான் அவர் எழுதிய கட்டுரை.அம்பேத்காரை ஹிந்த்துவ அரசியலுக்கு பயன்படுத்த செய்யப்பட்ட முயற்சி போன்றது.

காந்தியம் ஹிந்துவாவிற்கு எதிரானது என்பதால்தான் அவர் காந்தியைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கிறார் என்பது வெளிப்படை.இல்லை காந்தியின் சிந்தனைகள்,பணி ‘மண்சார்ந்த ‘ ‘பசுமை ‘ அரசியலுக்கு தேவையில்லை என்று கருதுகிறாரா ? அப்படியானால் அதை வெளிப்படையாகத் தெரிவிக்கட்டடுமே ?ஐன்ஸ்டான் அமைதியை விரும்பியவர், சோசலிச சிந்தனை கொண்டவர் என்பதற்காக ரிலேட்டிவிட்டி தியரிப் பற்றி அவர் பெயரைத் தவிர்ப்பது எந்தளவு நேர்மையானதோ காந்தியின் பெயரை பகுகுணா,ஹஸாரே,ராஜேந்திர சிங் பற்றி எழுதும் போது, குறிப்பாக அவர்கள் செயல்பாட்டின் கருத்தியல் பிண்ணணிப் பற்றி எழுதும் போது மறைப்பதும் அதே அளவு நேர்மையானது.விவேகானந்தர் சூழல் பிரச்சினைகள் பற்றி ஏதேனும் எழுதியுள்ளரா என்பதையும் அவர் தெரிவிக்கட்டும்.இந்தியாவின் மரபு அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து எழுதிய/எழுதுகின்ற வந்தனா சிவா,அஷிஸ் நந்தி, ஷிவ் விஸ்வநாதன் உட்பட பலர் R.S.S சையும்,ஹிந்த்துவாவையும் நிராகரித்தவர்கள்.நந்தியின் நூல்கள் ஹிந்த்துவா, தேசியம் குறித்து விரிவாகப் பேசுபவை.ராம ஜென்ம பூமி பிரச்சினை குறித்தும் அவர் எழுதியுள்ளார். நந்தி பெரும் நீர்த்திட்டங்கள் குறித்து எதிர்ப்பு தெரிவித்த ஒரு பொறியியலாளரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.இடதுசாரி சிந்தனையாளரான வினோத் ரைனா நர்மதை பள்ளதாக்குத்திட்டத்தை விமர்சித்து எழுதியுள்ளார்.பாரம்பரிய அறிவு குறித்து இடதுசாரிகளுக்கும் தெரியும்.வைதிக,அவைதிக மரபுகள் குறித்து அவர்கள் எழுதியுள்ளார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் நான் இன்னொரு அறிவியலாளர்-சிந்தனையாளர் பற்றியும் பேச வேண்டும். அமரர் அமுல்ய குமார் ரெட்டி (A.K.N Reddy)- மாற்று ஆற்றல் குறித்து ஆய்ந்தவர்,இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் இதை சாத்தியமாக்குவதற்காக பாடுபட்டவர்.நீலகண்டன் தன் கட்டுரைகளில் இவர் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.ஒரே ஒரிடத்தில் தவிர, அதுவும் ரெட்டி என்ற பெயரில், ஒரு கட்டுரையை குறிப்பிட்டு. ஆனால் அவர் எழுதிய ஆற்றல் குறித்த கட்டுரைகளுக்கு பொருத்தமான பலவற்றை ரெட்டியின் எழுத்துக்களில் காணலாம்.ரெட்டி கர்நாடகா அணுமின் உற்பத்தி இல்லாமலே தன் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என வாதிட்டவர், விரிவான ஆய்வுகளுடன்.இவர் முன்வைத்த ஆய்வும், DEFENDUS என்ற கருத்தோட்டமும் விரிவாக விவாதிக்கப்பட்டவை, குறிப்பாக (Economic& Political Weekly)EPW ல் பெங்களூர் I.I.Sc ல் வேதியலில் பேராசிரியராக்ப பணிபுரிந்தவர், ASTRA என்ற அமைப்பின் மூலக் ஊரக ஆற்றல் குறித்து ஆய்வுகள் செய்து நடைமுறையில் மாற்று ஆற்றல் சக்திகளின் பயன்பாட்டினை நிரூபித்தவர். இணையத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் உள்ளன. இந்தியா 1998 ல் அணுச்சோதனை செய்த போது அதை விமர்சித்த்வர்.சமீபத்தில் வெளியான ஒரு நூலில் இவர் எழுதிய கட்டுரை உள்ளது. 1998 ல் இவர் பேசிய கூட்டத்தில் ஹிந்த்துவ ஆதரவு அமைப்பினைச் சேர்ந்தவர்கள் குழப்பம் விளைவித்தனர்- அவர் பாரதிய ஜனதா கூட்டணி அரசின் அணுக்கொள்கையை எதிர்த்தார் என்பதற்காக. அகில இந்திய அளவில் அணுமின் எதிர்ப்பாளர்களின் நண்பர் அவர்.விஞ்ஞானியான அவர் அஷிஸ் நந்தி, சி.டி.குரியனின் எழுத்துகள் தனக்கு பெரிதும் பயன்பட்டதாகக் கூறியிருக்கிறார்.அணுமின் ஆற்றல் குறித்து நீலகண்டன் எழுதியுள்ளது ரெட்டியின் கருத்துக்கு முரணாக உள்ளதால் ரெட்டியின் எழுத்துக்கள்,கருத்துக்கள் கவனத்துடன் தவிர்க்கப்பட்டுள்ளதாக நான் யூகிக்கிறேன்.

அணுமின்சக்திக்கு,அணு ஆய்விற்கு ஒதுக்கப்படும் நிதியையும், மாற்று ஆற்றல் சக்திகளுக்கு ஒதுக்கப்படும் நிதியையும் ஒப்பிட்டால் அரசின் முன்னுரிமை எதற்கு என்பது புலனாகும்.அதுவும் தேவை, இதுவும் தேவை என்று எழுதுபவர்கள் மறைக்கும் அம்சங்களில் இதுவும் ஒன்று.

சுருக்கமாக் சொன்னால் இந்தியாவில் சூழல் பாதுகாப்பு/பசுமை இயக்கங்கள் பலவும்,வெகுஜன மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பும்,,பாரம்பரியம் குறித்து எழுதியுள்ளோர்,செயல்படுவரகள் பலர் ஹிந்த்துவாவை நிராகரித்தவர்கள், உலகமயமாதலின் விமர்சகர்கள். இவர்கள் முன்வைக்கும் மாற்றுகளின் அடிப்படையே வேறு, காந்தியத்தை இவர்கள்/இயக்கங்கள் பெருமளவிற்கு ஏற்பவர்கள். வந்தனா சிவாவின் எழுத்துக்களில் சுதேசியம் என்பது காந்திய சிந்தனைகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகிறது.பகுகுணா ஒரு காலகட்டத்தில் தெஹ்ரி அணைத்திட்ட எதிர்ப்பில் ஹிந்த்துவ அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டார்.ஆனால் அணைத்திட்டம் கைவிடப்படவில்லை.அவர் அடிப்படையில் ஒரு காந்தியவாதி.கெயில், இலையா குறித்து பின்னர் எழுதுகிறேன்.

பசுமை இயக்கங்களுக்கும் , இடதுசாரிகளுக்கும் (ஒரு பரந்துபட்ட பொருளில்) உள்ள பல முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகள். பொது எதிரிகளை அவர்கள் அறிவார்கள்.கருத்தியல் ரீதியாகவும், நடைமுறையிலும் அவர்கள் சேர்ந்து செயல்படுவதில் வியப்பில்லை. மேதா பட்கரும், நந்தியும்,கேரள சஸ்திர சாகித்ய பரிஷத்தும் இணையும் புள்ளிகள் உண்டு. நரேந்திர மோடியின் அரசியலை,V.H.Pயின் அயோத்தி அரசியலை, அவர்கள் என்றும் ஏற்கமாட்டார்கள். அரவிந்தன் நீலகண்டன் அண்ணா ஹஸாரே, ராஜேந்திர சிங், பகுகுணா, அனில் அகரவால் குறித்து எழுதும் போது உண்மைகளை கவனமாக தவிர்த்துவிட்டு எழுதுகிறார். ராஜேந்திர சிங்கின் பணியைப் பற்றி எழுதும் அவர், சிங்கின் கருத்துகளை தவிர்த்துவிட்டு ‘ பசுமை இயக்கத்தை தொழில்நுட்பம், சமுதாய ஒருங்கிணப்பு மற்றும் செயல்பாடு ஆகியவை இணைந்த முழுமையாக நோக்கியவர்கள். இவர்கள் வெறும் எதிர்ப்பியக்கமாக மட்டுமே தம் இயக்கங்களை நடத்தவில்லை ‘ எழுதுகிறார். ஆனால் இடதுசாரி இயக்கங்களும், அவரது நீர் குறித்த இயக்கங்கமும் ஒத்த கருத்துடைவை என்ற உண்மையை மறைக்கமுடியாது.செமினார்வாலாக்கள் என்று அவர் கிண்டல் செய்பவர்கள் தங்கள் நண்பர்களை நன்கு அறிவார்கள். சீதாராம் யெச்சூரியும், ரஜனி கோத்தரியும் கைக்கோத்தால் அதில் இன்று வியப்படைய ஏதுமில்லை.அன்னா ஹாசாரே பா.ஜ.க-சிவசேனை அரசினை எதிர்த்து உண்ணாவிரதம் கூட இருந்திருக்கிறார்.அவரது நேர்மை குறித்து சிவசேனா ஒரு விஷமப்பிராச்சாரமே நடத்தியது.இவை பற்றி அரவிந்தன் நீலகண்டனுக்கு அபிப்பிராயம் எதாவது உண்டா ?அவரது பெயரைப் பயன்படுத்திக்கொண்டால் போதும், நான்கு வரிகள் எழுதிவிட்டால் போதும், மண்சார்ந்த மரபு, பாரத தர்ம மரபு,தலித் வனவாசி மக்கள் என்று எழுதிவிட்டால் போதும் , இதன் மூலம் உண்மைகளை மறைத்துவிடலாம் என்று அவர் நினைக்கலாம்.நிகழ்கால இயக்கங்கள், நபர்கள் குறித்து எழுதும்போதே உண்மைகளை மறைத்துவிட்டு எழுதும், அரவிந்தன் நீலகண்டன் தான் என்ன எழுதினாலும் படிப்பவர்கள் நம்பிவிடுவார்கள் என்று நினைக்கிறாரா ?.

பசுமை இயக்கங்களுக்கும் , இடதுசாரிகளுக்கும் (ஒரு பரந்துபட்ட பொருளில்) உள்ள பல முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகள் .பிரிட்ஷாரின் divide and rule தந்திரங்கள் இங்கு செல்லுபடியாகாது என்பதை அவருக்கு தெளிவுப்டுத்த விரும்புகிறேன்.

காவி இயக்கங்கள்,ஹிந்த்துவ இயக்கங்களுக்கும், பசுமை இயக்கங்களுக்கும் உள்ள முரண் பகை முரண்.

இதுதான் கருத்தியல் ரீதியாகவும்,நடைமுறையிலும் உள்ள நிலை.

Series Navigation