கனவுகளும் யதார்த்தங்களும் சங்கமித்த சுவிற்சர்லாந்தின் ஐரோப்பிய குறும்பட விழா

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

அஜீவன்


கனவுகளும், யதார்த்தங்களும், சங்கமிக்கும் இலங்கை, இந்திய ஐரோப்பிய படைப்பாளிகளின் உணர்வலைகளில் உருவான தமிழ் குறும்பட திரைப்படங்களை திரையிட்டு விருது வழங்கி கெளரவிக்கும் விழா சுவிற்சர்லாந்தின் ஓல்டன் -தூலிக்கன் பகுதியில் நடைபெற்ற முதல் திரைப்பட விழாவாக கடந்த 2003 பெப்ரவரி 15ஆம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 7.00 மணிவரை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த 60க்கும் மேற்பட்ட குறும்படங்கள் கலந்து கொண்டன. அவற்றில் இறுதித்தேர்வாக 19 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டதுடன் நிகழ்ச்சியின் இறுதியில் சுவிஸ் திரைப்பட சம்மேளனத்திலும் ஐரோப்பிய குறும்பட விழாவிலும் அங்கம் வகிக்கும் 8 நடுவர்களால் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளும் பார்வையாள்ர்களது அன்றைய ரசனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படத்தின் முடிவும் அறிவிக்கப்பட்டது.

இது தவிர 2002ஆம் ஆண்டின் சிறந்த யதார்த்த முழு நீள சினிமாவுக்கான விருது தங்கர்பச்சான் இயக்கிய அழகி திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.

ஐரோப்பிய குறும்பட விழாவின் அன்றைய நிகழ்ச்சி முன்னோட்டமாக சுவிஸின் அழகிய காட்சிகளின் பின்னணியில் சுவிட்சர்லாந்தின் கொடி நளினமிட நாதமும் நடனமும் கொண்ட ஒளித்தொகுப்பு அனைத்து பார்வையாளர்களின் கவனத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டது.

அன்றைய நிகழ்வின் முக்கிய பிரமுகரான தூலிக்கன் பகுதி தலைவர் டாக்டர் தியோபில் பிறய் அவ்ர்கள் பேசும்போது இப்பகுதியில் நடைபெறும் முதலாவது திரைப்பட விழாவாக நடத்தப்படும் இவ்விழா மிகச்சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது கண்டு மகிழ்வதாகவும் சுவிஸ் மக்களுக்கு தமது நாட்டில் வாழும் தமிழ்ச்சமுகத்தின் கலை கலாச்சார மற்றும் பிரச்னைகளை புரிந்து கொள்ளக் கிடைத்ததொரு அரிய வாய்ப்பு இது என்றும் கூறினார். மேலும் அவர் இக்குறும்பட விழாவில் தமிழர்களுடன் சுவிஸ் மக்களும் இணைந்து பணியாற்றுவது கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய குறும்பட விழாவின் ஒருங்கமைப்பாளரான அஜீவன் பேசும்போது இலங்கையில் நம்மால் ஒரு தமிழ் சினிமாவை உருவாக்கத்தவறிவிட்டாலும் புலம் பெயர்ந்து வாழும் இந்நாடுகளிலாவது எமது எதிர்கால சந்ததியினருக்காக யதார்த்த தமிழ் சினிமா ஒன்றை உருவாக்க எதையாவது செய்து விட்டுப்போக வேண்டும். இவ்விழா மூலம் நல்ல பல சினிமாக்களைப் பார்க்கவும் புலம் பெயர் சினிமா ஒன்றை உருவாக்கவும் கூடியதாக இருக்கும் என்றார்

இக்குறும்பட விழா பற்றிய செய்திகளையும் அஜீவனது பேட்டியையும் சுவிஸின் பல பத்திரிக்கைகள் முக்கியத்துவமளித்து பிரசுரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுவிஸின் திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் மார்க்கஸ் பாஸ்லர் அவர்கள் பார்வையாளர் தேர்வை நடத்தினார்.

ஐரோப்பிய குறும்பட விழாவின் நடுவர் குழுவுக்கு தலைமை தாங்கிய சர்வதேச புகழ் பெற்ற PINGU பிங்கு பட இயக்குனரும் STOP MOTION FILMS அதிபருமான கவியே காசியா அவர்கள் விருதுகளுக்கான பட்டியலை அறிவித்ததுடன் டிப்ளமோ சான்றிதழ்களையும் வழங்கினார்.

200 பேர்வரை அரங்கு நிறைந்திருந்த பார்வையாள்ர்களில் பெரும்பாலானவர்கள் சுவிஸின் திரைப்படத் துறை சார்ந்த சுவிஸ் கலைஞர்களாக இருந்தமை குறிப்பிடத்தகுந்தது.

ஐரோப்பிய குறும்பட விழா பற்றி சுவிஸின் ஓல்ட்டன் தாக் பிளட் எனும் பிரதான பத்திரிக்கை கருத்து எழுதும்போது தமிழர்களது விருந்தோம்பல் மற்றும் மனித நேய குணங்களை இவ்விழா வழி காண முடிந்தது எனக் குறிப்பிட்டிருந்தது.

சாதாரணமாக திரைப்பட விழாக்களுக்கு வரும் பார்வையாளர்கள் 25 முதல் 50 பேர் வரைத்தான் இருக்கும். சில சமயம் 2-3 பேர் வருவதுண்டு. ஆனால் ஐரோப்பிய நாடொன்றில் நடைபெற்ற தமிழ்க் குறும்பட விழா ஒன்றிற்கு இவ்வளவு ஐரோப்பிய பார்வையாளர்கள் வந்திருந்தது வியப்பை அளித்தது.

Series Navigation

அஜீவன்

அஜீவன்