டிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை – ஸுப்ரபாதம்

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

மலர்மன்னன்


கவிஞர் மனசுக்குள் சிரித்துக் கொண்டார்.

‘இந்த அம்மையாருக்கு என்ன சொல்வது? சொன்னாலும் எந்த அளவுக்கு இவரால் புரிந்துகொள்ள முடியும்?’

அதிகாலை வேளையில் ஆளரவமற்ற நிர்மானுஷ்யச் சூழலில் மடுவின் உருகிய பனிக்கட்டிபோல் குளிர்ந்த தண்ணீரில் மூழ்கி முக்குளிக்கும் சுகானுபவ ருசியைக் கவிஞருக்கு முதன் முதலில் ஊட்டியது அவர் பாசம் பொங்கப் பொங்கக் ‘குவளைக் கண்ணன்’ என்று குறிப்பிடுகிற பொல்லாத குவளையூர் கிருஷ்ணமாச்சாரி தான்..

“மேற்கே ஊருக்கு வெளியே தியாகராஜப் பிள்ளை என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மடு ஒன்று இருக்கிறது. அதனால் அதைத் தியாகராஜப் பிள்ளை மடு என்றே எல்லாரும் சொல்வார்கள். என்றைக்குமே வற்றாத ஊற்றுப் பள்ளம். பளிங்கு மாதிரி ஜலம். சுனை நீர் போலச் சுத்தம். பொழுது விடிவதற்கு முன்னால் நாலு மணிக்கே போனால் கூட்டம் இராது. பிறர் தொந்தரவு இல்லாமல் ஆனந்தமாய் வேண்டிய மட்டும் ஜலக்ரீடை பண்ணிக்கொண்டிருக்கலாம். தினப்படி அங்கே போய்க் குளித்துவிட்டு வருவோமா? ஆனால் நம் வீட்டிலிருந்து குறைந்த பட்சம் இரண்டு மைலாவது இருக்கும்” என்று திடீரென ஒருநாள் கவிஞருக்கு ஆசைகாட்டினார், குவளைக் கண்ணன்.

இயற்கையுடன் ஏகாந்தமாய் ஒன்றிப் போவதில் கவிஞருக்குள்ள நாட்டம் அவர் அறிந்ததுதான். அவர் எதிர்பார்த்தது போலவே கவிஞர் ஆவலுடன் துள்ளி எழுந்தார்.

“அட, அப்படியா? இதை ஏன் முன்பே சொல்லவில்லை? நாளை யிலிருந்தே அங்கு போகத்தொடங்கிவிடுவோம். விடிகாலை நாலு மணிக்கெல்லாம் வந்துவிடு; போகலாம்” என்றார், கவிஞர், உற்சாகம் பொங்க.

மறுநாள் அதிகாலை சொன்னபடியே சரியாக நான்கு மணிக்குக் கவிஞர் வீட்டுக்கு வந்து அவசரமாகக் கதவைத் தட்டினார், குவளை. ‘யாரது’ என்று கவிஞர் கம்பீரமாக அதட்டல் போட்ட வாறு கதவைத் திறந்தார். எதிரே குவளைக் கண்ணன் நிற்பதைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.

”போவோமா, மடுவுக்கு?” என்றார், குவளை.

கவிஞர் அட்டகாசமாகச் சிரித்தார்.

”எதற்குச் சிரிப்பு? இப்போ என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படிச் சிரிக்கிறீர்கள்?” என்று குழப்பத்துடன் கேட்டார்,
குவளை.

”திருப்பாவையில் ஆண்டாள் ‘அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செயும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்’ என்று பாடிக் கண்ணனை எழுப்பினாள். இங்கே என்னடாவென்றால் கண்ணன் வந்து என்னை எழுப்பிக் குளிக்கக் கூப்பிடுகிறான்! சிரிப்பு வராதா?”

இப்போது குவளையும் சேர்ந்து சிரித்தார்.

”சரி, நாழியாகிறது, புறப்படுங்கள். அப்புறம் ஜனங்கள் வரத்தொடங்கிவிடுவார்கள்.”

இருவருமாக மடுவை நோக்கி நடந்தார்கள்.

விடியிருள் இன்னும் விலகவில்லை. ஆனால் விடியல் அரையிருட்டாக அனைத்தையும் நிழல் ரூபமாய்ப் புலப்படச் செய்தது. ஊருக்கு வெளியே வந்ததுமே மண்பாதையின் இருபுறமும் வயல்வெளிகளும் மரங்களும் சுற்றுச் சூழலுக்கு எழிலூட்டின. மென்மையாக வீசிய இளங் குளிர் காற்று உடலை வருடி மெய்சிலிர்ப்பூட்டியது.

கவிஞர் மடுவில் இறங்கிக் கழுத்தளவு நீரில் ஆசை தீரக் குளித்தார். வெகு நேரம் நீரில் மூழ்கிக் கிடந்தபின் பொழுது விடியத்தொடங்கிவிட்டதால், குவளையின் அவசரப்படுத்து தலையும் தாங்க மாட்டாமல் மனமின்றியே கரையேறினார். சொட்டச் சொட்ட நனைந்த உடலின் ஈரம் அகற்றாமலே வீடு திரும்பியவர், இனிமேல் தினப்படி தியாகராஜப் பிள்ளை மடுவில்தான் குளி என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.

அடுத்த நாளும் குவளை சரியாகக் குறித்த நேரத்திற்கு வந்து கவிஞரை மடுவுக்கு அழைத்துச் செல்லத் தவறவில்லை. ஆனால் மூன்றாம் நாள்தான் ஆளைக் காணோம்!

வருவார் வருவார் எனக் காத்திருந்து சலித்த கவிஞர், அந்த அதிகாலைப் போதில் குவளைக் கண்ணனின் வீட்டிற்கே சென்று வாசற் கதவைப் படபடவென்று தட்டி, ’கிருஷ்ணா’ என்று உரக்கக் குரலும் கொடுத்தார்.

கவிஞர்தான் தன்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார், என்று பரபரப்படைந்தார், குவளை..

”யாரு வந்து இப்பிடிக் கதவை ஒடைக்கற மாதிரி தட்டறா, பொழுது விடியறதுக்கு முன்னாடியே” என்று திகைத்தார், குவளையின் தாயார்.

”நான் அடிக்கடி சொல்வேனே, அந்த சுதேசிக் கவி சுப்பிரமணிய பாரதிதான் வந்திருக்கார் போலிருக்கு அம்மா” என்றார், குவளை மகிழ்ச்சியுடன்.

”அட, அப்படியா,” என்று ஆவலுடன் கதவைத் திறந்து கவிஞரை வரவேற்றார், அம்மையார். கவிஞர் வயதில் மிகவும் குறைந்த இளைஞராகத் தோற்றமளித்ததால் அம்மையாருக்கு அவரையும் தம் மகனாகவே எண்ணத் தோன்றியது.

”ஏண்டா கிருஷ்ணா, இவனைத்தானே நன்றாகப் பாடுவான் என்று சொன்னாய்? எங்கே ஒரு ஸுப்ரபாதம் பாடச் சொல்லு கேட்போம்., இநதக் காலைப் போதுக்குக் கேட்கச் சுகமாயிருக்கும்” என்றார், அம்மையார், உரிமையுடன்.

”ஸுப்ரபாதம் என்றால் என்ன” என்று குறும்புப் புன்னகையுடன் கேட்டார், கவிஞர்.

“என்னடா இது! ஸுப்ரபாதம் என்றால் என்னன்னு கேழ்க்கறானே இந்தப் பிள்ளையாண்டான்! அப்புறம் என்ன பெரிய பாட்டுக்காரன் இவன்? எப்பப் பார்த்தாலும் பாரதி, பாரதின்னுண்டிருக்கையே, பூ, இவ்வளவுதானா ஒன்னோட பாரதி?–அம்மாவின் குரலில் ஏளனம் சிறிது தூக்கலாகவே இருந்தது. ஆனால் கவிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. சிரிப்பு மாறாமல் நின்றார்.

“அம்மா, நீ நினைக்கிற மாதிரி இவர் மற்றவர்கள் எழுதி வெச்ச பாட்டுகளைப் பாடுகிற பாகவதர் இல்லே, கேட்டதும் ஒரு ஸுப்ரபாதம் பாடறதுக்கு!. இவராகவே பாட்டுக் கட்டி, அதை அற்புதமாகப் பாடறவர். புரிஞ்சுதா? சரி. நாங்கள் மடுவுக்குக் குளிக்கப் போறோம். கதவைச் சாத்திக்கோ” என்று கவிஞரை அழைத்துக்கொண்டு புறப்பட்டார், குவளை.

“அப்ப்டின்னா தானே ஒரு ஸுப்ரபாதம் இட்டுக்கட்டிப் பாடட்டுமே பெருமாள் மேல! ஒண்ணுக்கு ரெண்டா இருக்குமோல்லியோ” என்றவாறு வாயிற் கதவைத் தாழிட்டுக் கொண்டார், குவளையின் தாயார்.

அந்த அம்மையார் கடைசியாகச் சொன்னது கவிஞரின் மனதைக் குடையத்தொடங்கியது-‘அப்படின்னா தானே ஒரு ஸுப்ரபாதம் இட்டுக்கட்டிப் பாடட்டுமே…’

“ஸுப்ரபாதம் என்றால் என்ன” என்று குவளையிடம் மீண்டும் வேண்டுமென்றே கேட்டார், கவிஞர். காசியில் விச்வநாதருக் கென்று உள்ள ஸுப்ரபாதத்தையும் சென்னையில் வெங்கடேசப் பெருமாள் ஸுப்ரபாதத்தையும் அவர் காது குளிரக் கேட்டதே இல்லையா, என்ன?

“ஸுப்ரபாதம் என்றால் திருப்பள்ளி எழுச்சி” என்றார், குவளை, சுருக்கமாக.

“யாருக்குத் திருப்பள்ளி எழுச்சி?”

“இதென்ன கேள்வி? பெருமாள் கோவிலில் மஹா விஷ்ணுவுக்கு. சிவன் கோவில் என்றால் பரம சிவனுக்கு!”

“எங்கே, உனக்குத் தெரிந்த ஸுப்ரபாதம் ஒன்று சொல்லு கேட்போம்” என்று சிரித்தார், கவிஞர்.

பாசுரங்கள் பலவும் மனப் பாடமாய் வைத்திருந்த குவளை அதேபோல் வெங்கடேச ஸுப்ர பாதத்தையும் அறிந்திருந்ததால் உடனே அதனைப் பாடலானார். குரல் வளம் இல்லாவிட்டால் என்ன? குழந்தையுள்ளத்தில் ஆழ வேர்கொண்ட தெய்வ நம்பிக்கை இருக்கிறதே அது ஒன்றே போதாதா?

“கண்ணா, ஸுப்ரபாதம் என்றால் புனித்மான புலர்காலைப் பொழுது என்றுதான் நேரடியான அர்த்தம். காலைப் போதில் எழுவது முழுமுதற் கடன் ஆதலால் தமிழில் ஸுப்ரபாதத்தைத் திருப்பளள்ளி எழுச்சி என்கிறோம். ஆனால் சதா சர்வ காலமும் அறிதுயிலில் புன்முறுவலுடன் படுத்திருக்கிற திருமாலுக்கும் இமைப் பொழுதும் சோராத கூத்தபிரான் சிவனுக்கும் திருப்பள்ளி எழுச்சியா? பாரேன், இந்த மனுஷ்ய மனப்போக்கை; பக்தி முற்றி, தெய்வத்தையும் தன்போலொரு மனிதனாகவே பாவிக்கத் தோன்றிவிடுகிறது. தான் வழிபடுகிற தெய்வத்துக்குக் காலையில் கண்விழிக்கச் செய்வது தொடங்கி, இரவு பள்ளியறைக்கு அனுப்பி வைப்பதுவரை எல்லாம் செய்தாகிறது. பக்தியில் மூழ்கிவிட்டால் அப்புறம் தான் வேறு, தெய்வம் வேறில்லை. தன்னைப்போலவே தெய்வமும் என்கிற நிச்சயம், மனித வடிவில் தெய்வம் கண்டு மனிதனுக்குள்ளதெல்லாம் தெய்வத்திற்கும் உண்டென உபசாரம் செய்யத்தோன்றுகிறது! இந்த விஷயத்தில் ஆண்டாள் விவரம் தெரிந்தவள். அவளும் நந்தகோபனையும் பலராமனையும் எழுந்திருக்கச் சொல்கிறாள்தான். தாயார் யசோதையை வேறு அழைத்து அவர்களை எழுப்பிவிடவும் சொல்கிறாள், ஆனால் ‘எல்லே இளங் கிளியே இன்னம் உறங்குதியோ’ என்று அவள் கூடுதலும் கூவியழைத்து எழுப்புவது தன் தோழிமார்களையும் உறவுமுறைப் பெண்களையும்தான், அல்லவா” என்றார், கவிஞர்.

“நீங்கள் சொன்னால் அது சரியில்லாமல் இருக்குமா” என்றார், குவளை, தேவதா விசுவாசத்துடன்.

அதன் பிறகு .கவிஞர் ஏதும் பேசவில்லை. ஏதோ யோசனையாய் நடந்தார். அன்று ஆசையாய் மடுவில் இறங்கிய போதிலும் நீராடு வதில் அதிக ஈடுபாடு காட்டாமல் தம் எண்ண அலைகளுக் குள்ளாகவே மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தார்.

மேலும் இரண்டு தினங்கள் அவர்கள் தியாகராஜப் பிள்ளை மடுவுக்குக் குளிக்கச் செல்வது தொடர்ந்தது. ஆனால் கவிஞர் அதிகம் பேசாமலே வழி நடந்தார்.

அடுத்த நாள் காலை மடுவுக்குச் செல்லத் தாமே மறுபடியும் குவளையின் வீட்டுக்கு வந்துவிட்டார், கவிஞர். உற்சாகம் ததும்ப, “கண்ணா, ஸுப்ரபாதம் பாடச் சொன்னார் அல்லவா உன் தாயார்? சுயமாக இட்டுக்கட்டிப் பாடவும் சொன்னார். இப்போ ஸுப்ரபாதம், அதாவது நீ சொன்னாயே, திருப்பள்ளி எழுச்சி, அது உடனடியாகத் தேவைப்படுவது நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்துள்ள நமது பாரத அன்னைக்குத்தான். அவள் விழித்தெழுந்துகொள்வதோடு, அடிமை வாழ்வே பரம சுகம் என்று மயங்கிக் கிடக்கிற தனது விவரங் கெட்ட பலப்பல பிள்ளைகளையும் தட்டி எழுப்பியாக வேண்டும். ஆகையால் இதோ, நான் பாடுகிறேன், பாரத மாதாவுக்கு ஒரு திருப்பள்ளி எழுச்சி; அம்மா, நீங்களும் கேளுங்கள்” என்று,

பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்
புன்மை யிருட்கணம் போயின யாவும்.
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி,
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னும் எம் தாயே!
வியப்பிதுகாண்! பள்ளி யெழுந்தரு ளாயே!”

என உணர்ச்சி வேகத்துடன் பாடத்தொடங்கினார், கவிஞர்.

அம்மாவும் பிள்ளையும் அவர் பாடுவதை இறுதிவரை பிரமிப்பு மாறாமல் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
நன்றி:அமுத சுரபி டிசம்பர் 2010

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆதாரம்: ரா. அ. பத்மநாபன் தயாரித்த ‘சித்திர பாரதி,’ ‘பாரதி புதையல்’ மூன்றாம் தொகுதியில் இடம் பெற்றுள்ள குவளை கிருஷ்ணமாச்சாரியார் எழுதிய கட்டுரை.

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்