முள்பாதை (அத்யாயம் 1 – தொடர்ச்சி)

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


அம்மா ரொம்ப திறமைசாலி. அதை நான் மறுக்கவில்லை. என்மீது அவளுக்கு அன்பு இல்லை என்றும் சொல்ல மாட்டேன். ஆனால் அம்மா காட்டும் அன்பு வெறும் கடமையைச் சார்ந்ததாக எனக்குத் தோன்றும். ஆனால் அப்பாவின் விஷயம் அப்படி இல்லை. அவருடைய உலகமே நான்தானோ என்று தோன்றும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன.
எனக்கு ஜுரம் ஏதாவது வந்தால் அம்மா உடனே டாக்டரை அழைத்து, மருந்து மாத்திரை வாங்கி வரச் செய்து எந்த வேளைக்கு எந்த மருந்து கொடுக்கணும் என்று திருநாகத்திடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவாள். அத்துடன் அம்மாவின் கடமை முடிந்துவிடும். ஆனால் அப்பா அப்படி இல்லை. எனக்கு லேசாக உடம்பு சுட்டாலும் போதும், தன் வேலையெல்லாம் விட்டுவிட்டு என் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்வார். அடிக்கடி நெற்றியைத் தொட்டுப் பார்த்து ஜுரம் எப்படி இருக்குன்னு பார்ப்பார். பத்து நிமிடங்களுக்கு ஒரு தடவை “மீனா! என்ன வேணும்? க்ளூகோஸ் தரட்டுமா? ஹார்லிக்ஸ் குடிக்கிறாயா? இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டுக் கொண்டிருப்பார். ஜுரம் அதிகமாக இருந்து நான் நிலை கொள்ளாமல் படுக்கையில் புரண்டால் என்னை தோளில் போட்டுக் கொண்டு இரவு முழுவதும் அறையிலேயே நடை பயிலுவார். அம்மாடியோவ்! அப்பா இல்லை என்றால் நான் என்னவாகியிருப்பேனோ என்று நினைத்த தருணங்கள் என் வாழ்க்கையில் நிறையவே இருந்தன. என் சிறுவயது நினைவுகள் எல்லாமே அப்பாவோடு பிணைத்திருந்து சிறைப்பட்டிருந்தன. அப்பா என் பக்கத்தில் இல்லாமல் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு எந்த நிகழ்ச்சியும் இது வரையில் என் வாழ்க்கையில் இல்லை.
அம்மா அவ்வப்பொழுது அப்பா ரொம்பவும் செல்லம் கொடுத்து என்னை குட்டிச் சுவராக்குகிறார் என்றும், நான் எதற்கும் லாயக்கு இல்லாமல் போய் விடுவேன் என்றும் அப்பாவுடன் சண்டை போடுவாள். பிள்ஸ் டூவில் என்னை நல்ல மதிப்பெண்கள் பெறும்படிச் செய்து எம்.பி.பி.எஸ். கோர்ஸில் சேர்த்து “எங்க மகள் டாக்டருக்குப் படிக்கிறாள்” என்று பறைசாற்றிக் கொள்ள அம்மா ரொம்ப ஆசைப்பட்டாள். எனக்கோ தவளை, மண்புழு என்றாலே பயம், அருவருப்பு. அம்மாவை எதிர்த்துப் பேச முடியாமல் அப்பாவிடம் சென்று தொந்தரவு செய்யத் தொடங்கினேன். எனக்கு விருப்பமில்லாத காரியத்தை செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாதுன்னு அப்பா தீர்மனமாகச் சொல்லிவிட்டார். இந்த விஷயமாக அம்மா அப்பாவுக்கு நடுவில் சண்டை வந்தது. கடைசியில் நான் மெடிசினில் சேரவே இல்லை. ஏனோ தானோவென்று மூன்று வருஷம் படிப்பை ஒப்பேற்றி பி.ஏ. வை முடித்தேன்.
சமீபகாலமாக அம்மா அப்பாவின் சண்டை சச்சரவுகள் பெரும்பாலும் குறைந்து விட்டிருந்தன. கடைசி முறையாக, ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன் இருவரும் ரொம்ப தீவிரமாக சண்டை போட்டுக் கொண்டார்கள். அதற்குக் காரணமும் நான்தான். உள்ளூரில் அம்மாவுக்குத் தெரிந்தவர்கள் சிலர் சினிமா தயாரிப்பாளர் ஒருவரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார்கள். அவர் என்னை நடக்கச் சொல்லி, உட்காரச் சொல்லி, அப்படி திரும்பு இப்படி திரும்பு என்று சந்தையில் மாட்டை பரீட்சை செய்வது போல் பரிசீலித்துவிட்டு நான் சினிமாவுக்குப் பொருத்தமாக இருப்பேன் என்றும், எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும் ஏதேதோ சொன்னார். அவர் சொன்னதைக் கேட்ட பிறகு அம்மாவின் முகம் மலர்ந்தது. எனக்கு நினைவு தெரிந்த பிறகு முதல் முறையாக அம்மா என்னை அன்புடன், பெருமையுடன் பார்த்தாள். அவர் கிளம்பும் போது என்னை சினிமாவில் நடிப்பதற்காக கட்டாயம் அனுப்பி வைப்பதாக வாக்குக் கொடுத்தாள். வயிற்றில் பிறந்த குழந்தைகள் உயர்வாக வருவது எந்தத் தாய்க்குத்தான் சந்தோஷமாக இருக்காது? அதிலும் நான் எதற்கும் லாயக்கு இல்லை என்று என்மீது எல்லா விதமான ஆசைகளுக்கும் தண்ணீர் தெளித்து விட்டிருந்த அம்மாவுக்கு இந்த வாய்ப்பு பெரும் அதிர்ஷ்டமாகத் தோன்றியது. எல்லா விஷயங்களையும் பேசி முடித்து விட்டார்கள். நாளை மாலையில் காண்ட்ராக்ட் பேப்பர்களில் கையொப்பமிடுவதுதான் பாக்கி.
அன்று மாலை கோர்ட்லிருந்து அப்பா வந்ததும் அம்மா தானே சுயமாக காபி எடுத்துக் கொண்டு போனாள். அந்த சமயத்தில் நானும் அங்கேயே இருந்தேன். அம்மா மதியம் நடந்ததை எல்லாம் சொல்லத் தொடங்கினாள். அம்மா இந்த விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்ததும் அப்பா பாதி குடித்த காபி கோப்பையைக் கீழே வைத்து விட்டு சிரத்தையாக கேட்டுக் கொண்டிருந்தார்.
அம்மா சொல்லி முடித்ததும் அப்பாவின் முகம் கோபத்தால் சிவந்தது. கண்கள் அக்னிப் பிழம்புகளாக மாறின. “நீ என்ன பதில் சொன்னாய்?” என்று கேட்டார்.
“என்ன சொல்லப் போகிறேன்? மகாலக்ஷ்மி வீடு தேடி வந்தால் யாராவது வேண்டாம்னு சொல்லுவார்களா?”
“இருக்கிற பணம் போறாதா நமக்கு?”
“பணத்திற்கு எல்லை ஏது?
“ஏன் இல்லை? இருக்கிறதை வைத்துக்கொண்டு திருப்தியாக, சந்தோஷமாக வாழ கற்றுக் கொண்டால் பணத்திற்குக் கட்டாயம் எல்லைக் கோடு இருக்கும்.”
“இத்தனைக்கும் நீங்க என்ன சொல்றீங்க?”
“அவளை சினிமாவில் சேர்க்க வேண்டாம்.”
அம்மா திடுக்கிட்டவள் போல் பார்த்தாள். “இப்பொழுதா? எல்லாப் பேச்சு வார்த்தைகளும் முடிந்து போன பிறகா?”
“பேச்சு வார்த்தை முடிந்தாலும் இன்னும் காண்ட்ராக்டில் கையொப்பமிட வில்லையே?”
“கையொப்பமிடவில்லை என்றால் மட்டும் என்ன? வாக்குறுதி தந்து விட்ட பிறகு…”
“உன் வார்த்தைக்காக அவளுடைய எதிர்காலத்தை நாசமாக்கப் போகிறாயா? உனக்கு மூளை எங்கே போச்சு? வாயில்லா பூச்சி அவள். என் நண்பர்கள் நாலுபேர் வந்தாலே அவர்கள் முன்னால் வருவதற்குத் தயங்குவாளே. அப்படிப்பட்டவள் ஒவ்வொரு வினாடியும் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் அந்த கனவுத் தொழிற்சாலையின் வாழ்க்கை இவளுக்கு எப்படி ஒத்துப் போகும்? அவளை பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்தானே நீ?”
அம்மா கோபமாக எரிந்து விழுந்தாள். “என் மகள் என் இஷ்டம்” என்றாள்.
“அவள் எனக்கும் மகள்தான் என்று மறந்துவிடாதே” என்று சொன்னவர் திடீரென்று இரண்டு கைகளையும் ஜோடித்தார். தீனமாக வேண்டுவது போல் சொன்னார். “கிருஷ்ணவேணீ ! நாம் இருவரும் கல்யாணம் செய்துகொண்டு சேர்ந்து வாழத் தொடங்கி இத்தனை வருடங்களாகிவிட்டன. இத்தனை வருடங்களில் நான் ஒரு நாளும் உன்னிடமிருந்து எதையும் கேட்டதில்லை. இன்று கேட்கிறேன். நீ அவளுடைய வாழ்க்கையை நாசமாக்காதே.”
அம்மா திகைத்துப் போனவளாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவளை ஒரு மனுஷியாக மதித்து அன்பு செலுத்தும் நபராகப் பார்த்து கல்யாணத்தை முடித்து விடுவோம். மீனா ஒரு நல்ல இல்லதரசியாகத் தவிர வேறு எந்த விதத்திலேயும் சோபிக்க மாட்டாள். கடவுள் நமக்குக் கொடுத்த ஐஸ்வரியம் போதும். அவள் தனியாக சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை.”
“உங்கள் கோழைத்தனத்தைப் பார்த்தால் எனக்கு ஆத்திரமாக வருகிறது. உங்களைப் போன்ற கோழைகளால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது.” கடுமையான குரலில் சொன்னாள்.
“சாதிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. இருப்பதை இழக்காமல் இருந்தால் அதுவே போதும். வானத்தில் பறக்க ஆசைப்பட்டுக் கீழே விழுந்து நொண்டியாவைதை விட நிதானமாக நடந்து போவது ரொம்ப உத்தமம்.”
“இதுபோன்ற வெட்டி வேதாந்தப் பேச்சுகளால் அவள் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவளாக செய்யறீங்க.” அம்மா குரலை உயர்த்தினாள்.
“அவளுக்கு இருக்கும் இங்கித ஞானத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது உனக்கு இருந்திருந்தால் அவளைச் சரியாகப் புரிந்து கொண்டிருப்பாய்.”
அம்மாவின் கோபம் உச்சத்தைத் தொட்டது. வார்த்தைகள் தடித்தன. நான் மெதுவாக அங்கிருந்து வெளியேறினேன்.
“நான் வலுக்கட்டாயமாக அவளை சினிமாவில் சேர்த்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?” அம்மா பிடிவாதமாகச் சொன்னாள்.
“பார்த்துக் கொண்டே இரு, என்ன செய்வேனோ.”
“என்ன செய்வீங்க?” தூண்டிவிடுவது போல் கேட்டாள்.
“உனக்கு டைவோர்ஸ் கொடுப்பேன்.”
“எனக்கு டைவோர்ஸ் கொடுப்பீங்களா?”
“ஆமாம். விருப்பமில்லாத காரியத்தைச் செய்யச் சொல்லி மகளை வற்புறுத்துகிறாய் என்றும், அவளைத் துன்புறுத்துகிறாய் என்றும், உன்னிடமிருந்து பிரிந்து போனால் தவிர எங்க இருவருடைய வாழ்க்கையிலும் நிம்மதி இல்லை என்றும் கேஸ் போடுவேன். மீனா யார் பக்கம் பேசுவாளோ உனக்கே தெரியும்.”
“நீங்க என்னை மிரட்டறீங்களா?”
“நல்லபடியாக சொன்ன பிறகும் கேட்டுக் கொள்ளவில்லை என்றால் எதை வேண்டுமானாலும் செயவேன். உன் விருப்பங்களுக்கும், எண்ணங்களுக்கும் என் வாழ்க்கையை பலி கொடுத்து விட்டேன். அது போதும். மீனாவின் வாழ்க்கையின் மீது உன் நிழல் கூட விழ அனுமதிக்க மாட்டேன். உண்மையைச் சொல்கிறேன் கிருஷ்ணவேணி ! அவளுக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். உன்னைக் கொலை செய்யணும் என்றாலும் சரி. இல்லை நான் சாகணும் என்றாலும் சரி. எதற்கும் நான் தயார்.”
அம்மா திடீரென்று அழ ஆரம்பித்தாள்.
“உன் அழுகை என்னை எதுவும் செய்யாது. இந்த உலகில் எனக்கு இருப்பது மீனா மட்டும்தான். அவளுக்கு எந்த விதமான துன்பம் நேர்ந்தாலும் என்னால் சகித்துக் கொள்ள முடியாது.” திடமான குரலில் சொன்னார்.
அறையை விட்டு வெளியே வந்து விட்டாலும் வாசலுக்குப் பக்கத்திலேயே மறைவாக நின்றுகொண்டு உள்ளே நடக்கும் உரையாடலை ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அப்பா இப்படிச் சொன்னதும் ஓடிப்போய் அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு சந்தோஷம் ஏற்பட்டது. நிதானமாக, கம்பீரமாக, யாருடனும் அதிகம் பேசாத நபராகக் காட்சி தரும் அப்பாவிடம் இவ்வளவு ஆவேசம் இருப்பது எனக்கு இதுநாள் வரையிலும் தெரியாது.
“அவளுக்கு என்னைப் பிடிக்காமல் போனதற்கு நீங்கள்தான் காரணம்.” அழுகையினூடே அம்மா குற்றம் சாட்டினாள்.
“நீ ஒரு தாயாக நடந்துகொண்டால் அவளும் உன்னிடம் மகளாக நடந்துகொள்வாள்” என்று சொல்லிக் கொண்டே அப்பா வெளியே வந்தார்.
அறையின் வெளியே சுவரோடு சுவராக ஒட்டியபடி பிரமிப்பும், மகிழ்ச்சியுமாக நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்ததும் திகைப்புடன் “மீனா!” என்றார்.
ஒருநிமிடம் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. சட்டென்று குனிந்து அப்பாவின் கால்களைத் தொட்டு வணங்கி மின்னலைப் போல் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக என் அறைக்கு வந்துவிட்டேன். அந்த விதமாக நான் திரையுலகில் நுழையவில்லை. நானாவது… திரைப்படத்தில் நடிப்பதாவது!
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அம்மா அப்பா சண்டை போட்டுக்கொள்ளவில்லை. மேலும் ஒருவர் வார்த்தைக்கு அடுத்தவர் மதிப்பு தருவது போலவும், பரஸ்பரம் அபிமானம் இருப்பது போலவும் நடந்துகொள்ளத் தொடங்கினார்கள். அது வெறும் நடிப்புதான் என்று எனக்குத் தெரியும். கொஞ்சம் காற்று வீசினாலும் சாம்பல் விலகி தணல் தென்படுவது போல் அவர்களுக்கு நடுவில் இருக்கும் கருத்து வேற்றுமை எந்த நிமிடமும் வெளிப்பட்டு விடக்கூடும்.
அம்மா என்னிடம் நடந்து கொள்ளும் முறையில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டது. ஒவ்வவொரு விஷயத்திலும் என்னிடம் அபிப்பிராயத்தைக் கேட்க ஆரம்பித்தாள். வீட்டு விஷயத்திலும் என்னுடன் கலந்தாலோசிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு விஷயத்திலேயும் உன் இஷ்டம், உங்க அப்பாவின் விருப்பம் என்று அம்மா சொல்லும் போது எனக்குச் சங்கடமாக இருக்கும். இவ்வளவு மென்மையாக, அன்புடன் பேசும் போது எப்படி மறுப்பது?
போன கோடையில் டில்லியிலிருந்து மிஸெஸ் ராமனின் தம்பி மகன் சாரதி வந்திருந்தான். அவன் ஏற்கனவே வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவன். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறான். அந்த நிறுவனம் அவனை மறுபடியும் ஏதோ பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப் போகிறதாம். எங்க அம்மாவும் சரி, மிஸெஸ் ராமனும் சரி, ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். வீட்டில் இருக்கும் பூனை, குட்டியைப் போட்டாலும் ஊர் முழுவதும் தண்டோரா அடிக்க வேண்டியதுதான்.
மிஸெஸ் ராமன் தன்னுடைய மருமான் அடுத்த மாதம் வரப் போகிறான் என்றதுமே இப்பொழுதிலிருந்தே பப்ளிசிடீ ஆரம்பித்துவிட்டாள். “சாரதி வரப் போகிறான். அவனுக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும். அவனை அங்கே அழைத்துப் போகணும். அதைக் காட்டணும், இதைக் காட்டணும்” என்று வீட்டில் இருந்தாலும் சரி, கிளப்பில் இருந்தாலும் சரி அவனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். ஏற்கனவே நாங்கள் எல்லோரும் அவனைப் போட்டோவில் பார்த்திருக்கிறோம். எதற்காகவோ தெரியவில்லை, அம்மா அவனுடைய போட்டோ ஒன்றை கேட்டு வாங்கி என்னுடைய புகைப்பட ஆல்பத்தில் பத்திரபடுத்தி வைத்தாள்.
சாரதி வந்த பிறகு அவனுக்கு ஊர்சுற்றிக் காட்டுவதற்காக அம்மாவும் முன் கூட்டியே சில திட்டங்களைப் போட்டு வைத்திருந்தாள்.
சாரதி வந்தான். அம்மாவும் மிஸெஸ் ராமனுடன் சேர்ந்து ஏர்ப்போர்ட்டுக்குச் சென்றாள். அன்று மாலையே அவன் எங்கள் வீட்டிற்கு வந்தான். மாலை ஐந்து மணிக்கு அவன் வரப் போகிறான் என்றால் அம்மா செய்த ஆர்ப்பாட்டம் கொஞ்ச நஞ்சமில்லை.
அவனுக்குப் பச்சை நிறம் என்றால் ரொம்பப் பிடிக்கும் என்று இளம் பச்சை நிறப் புடவை, அதற்கு ஏற்ற பிளவுஸை என்னை உடுத்திக் கொள்ளச் சொன்னாள். தானே சுயமாக எனக்கு அலங்கராம் செய்துவிட்டாள். நகைகளைத் தேர்ந்தெடுத்து கொடுத்தாள். சமையலறைக்குச் சென்று திருநாகம் மாமி செய்யும் சமையல் மற்றும் பலகாரங்கள் எல்லாம் சரியாக இருக்கா என்று மேற்பார்வையிட்டாள். ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினாள்.
சாரதியும், மிஸெஸ் ராமனும் வந்தார்கள். அம்மாவும், அப்பாவும் வாசலுக்குச் சென்று எதிர்கொண்டு அவர்களை வரவேற்றார்கள். நான் ஹாலில் பதுமைபோல் நின்றிருந்தேன். அவர்கள் உள்ளே வந்தார்கள். அம்மாவும், மிஸெஸ் ராமனும் ஆளுக்கொரு பக்கமாக சாரதியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள். அவனுக்கு எதிரே இருந்த சோபாவில் அப்பாவும், நானும் உட்கார்ந்து கொண்டோம்.
அவன் இருந்த அந்த இரண்டு மணி நேரமும் உலகில் உள்ள எல்லா விஷயங்கள் மீதும் உரையாடல் நடந்தது. எந்த விஷயமாக இருந்தாலும் தங்கு தடை இல்லாமல் பேசி தனக்குப் பொது அறிவு இருப்பதை சாரதி நிரூபித்துக் கொண்டான். அவன் எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் உடனே அம்மாவும், மிஸெஸ் ராமனும் அதையே பிடித்துக் கொண்டு மேலும் அதைப்பற்றி ஆழமாக பேசித் தீர்த்தார்கள். பெரும்பாலும் உரையாடல் அம்மூவருக்கும் நடுவில் மட்டுமே நடந்தது. அப்பா மரியாதைக்காக அவ்வப்பொழுது ஓரிரண்டு வார்த்தைகளைப் பேசினார். உட்கார்ந்து உட்கார்ந்து எனக்கு முதுகு வலிக்க ஆரம்பித்துவிட்டது. அவர்களுடைய உரையாடலும் போர் அடிக்கத் தொடங்கியது. ஏதோ யோசித்தபடி இடது கை சுண்டு விரல் நகத்தைக் கடிக்க ஆரம்பித்தேன். எவ்வளவு நேரமாக அப்படிச் செய்து கொண்டிருந்தேனோ எனக்கே தெரியவில்லை. நடுவில் அம்மா எல்லோருக்கும் ஐஸ்க்ரீம் கோப்பைகளை கொடுத்துக் கொண்டே என்னிடம் வந்தபோது கண்களை உருட்டி என்னையும், என் விரலையும் பார்த்தாள். சட்டென்று விரலை எடுத்து விட்டேன்.
இவர்கள் எப்போ கிளம்பிப் போவார்கள் என்று நிமிடங்களை எண்ணிக் கொண்டே தரையில் விரித்த கம்பளத்தை, வாசலில் தொங்கிய திரைச் சீலையை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். மனதிற்குப் பிடிக்காத வேலையைக் கட்டயத்தின் பேரில் செய்ய நேர்ந்தால் எவ்வளவு நரகத்தை அனுபவிக்க வேண்டியிருக்குமோ சுயமாக உணர முடிந்தது.
சாரதி எழுந்து நின்று வாட்சைப் பார்த்துக் கொண்டான். புருவங்களை உயர்த்தி, “அட! நாழியாகிவிட்டதே. நேரம் போனதே தெரியவில்லை” என்றான்.
அம்மா மென்மையான புன்முறுவலை உதிர்த்தாள். அவனும் அம்மாவை மதிப்பு, மரியாதை கலந்த பார்வையுடன் நோக்கினான்.
போகும் முன் என்னிடம் சொல்லிக் கொண்டான். ஆனால் அதில் எந்த தனித்தன்மையும் இருக்கவில்லை. கிருஷ்வேணியின் மகள் என்பதால் பெயருக்கு விடைபெற்றுக் கொண்டது போல் இருந்தது.
ஆனால் அவன் என்னைப் பார்த்த அந்த அரை வினாடியில் அந்தப் பார்வையில் ஒரு விதமான பசி இருப்பதை உணரமுடிந்தது. பெண்ணை பெண்ணாகப் பார்க்காமல் ஒரு தின்பண்டமாக, அனுபவிக்கக் கூடிய போகப் பொருளாக பார்க்கும் சுபாவம் படைத்தவன் போல் தென்பட்டான்.
மொத்தத்தில் அம்மாவுக்கு சாரதியை ரொம்பவும் பிடித்து விட்டது. அவன் போன பிறகு அவனுடைய போட்டோவை வெவ்வேறு கோணங்களில் பரிசீலித்துக் கொண்டே “பார்க்க லட்சணமாக, கம்பீரமாக இருக்கிறான். முகத்தில் ராஜகளை தென்படுகிறது” என்று வர்ணிக்கத் தொடங்கினாள்.
எனக்கு அவனைக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. கழுத்தில் பெருத்தமில்லாத டை, உடலோடு ஒட்டினாற்போல் அணிந்த டெர்லின் ஷர்ட், கோணவகிடு எடுத்து கவனமாக வாரப்பட்ட தலைமுடி, (பின்னால் சொட்டை இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு) இவற்றை எல்லாம் பார்க்கும் போது அவன் தன்னைப்பற்றி ரொம்ப சிரத்தை எடுத்துக் கொள்பவன் என்று தோன்றியது. அந்த சிரிப்பும் சுவற்றில் ஆணி அடித்து மாட்டினாற்போல் இருந்ததே தவிர சகஜமாக இருக்கவில்லை. கண்கள் மட்டும் எதிராளியைப் பார்த்ததும் அவர்களுடைய ஆழத்தை எடைபோடும் இயந்திரம் போல் இருந்தன. ஆளை பார்த்ததுமே அவர்களுடைய சுபாவத்தை அறிந்து கொள்ளைக் கூடிய திறமை கொண்டவன் போல் தென்பட்டான்.
சாரதி இருந்த ஒரு வாரமும் வேகமாகக் கழிந்து விட்டது. அம்மா கேட்டுக் கொண்டதன் பெயரிலும், மிஸெஸ் ராமன் வற்புறுத்தியதாலும் அவன் விடுமுறையை மேலும் ஒரு வாரம் நீட்டித்தான். அவன் இருந்த எல்லா நாட்களிலும் நிழலைப் போல் அவனுடனேயே எல்லா இடங்களுக்கும் போய் வந்தோம். அம்மா அந்த பதினைந்து நாட்களும் பணத்தைத் தாராளமாகச் செலவழித்தாள். சாரதியுடன் எனக்குத் திருமணம் நிச்சயமாகப் போகிறது என்ற செய்தி யார் மூலமாக எப்படி வெளிவந்ததோ தெரியவில்லை. ஊர் முழுவதும் பரவிவிட்டது. எல்லோர் வாயிலும் இதே பேச்சுதான். கிளப்புக்குப் போனாலும், கடைத் தெருவில் யாரைச் சந்தித்தாலும், நாங்கள் யார் வீட்டுக்குப் போனாலும், யாராவது எங்கள் வீட்டுக்கு வந்தாலும் இதைப்பற்றியே பேசினார்கள். எல்லோரும் எனக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கத் தொடங்கினார்கள். உன்னைப் போன்ற அதிர்ஷ்டசாலி இல்லை என்று புகழ்ந்தார்கள். இதை உன்னுடைய அதிர்ஷ்டம் என்பதைவிட உங்க அம்மாவின் சாமர்த்தியம் என்று இருபொருள் பட சிலர் பேசவும் செய்தார்கள்.
சாரதி கிளம்பும் நாள் வந்தது. அம்மா பெரிய அளவில் விருந்து ஏற்பாடு செய்தாள். ஷோகேஸில் இருக்கும் பொம்மையைப் போல் அன்று என்னை அலங்கரித்தாள். அன்று இரவு சாப்பாடு முடிந்த பிறகு எல்லோரும் சேர்ந்து அமர்ந்திருந்த போது சாரதி என்னைத் திருமணம் செய்து கொள்ள தான் சுமுகமாக இருப்பதாக பேச்சுக்கு நடுவில் தெரிவித்தான். அம்மாவின் முகம் ஆயிரம் வால்ட்ஸ் பல்பு போல் பிரகாசமடைந்தது. சாரதி கிளம்பும் முன் என்னிடம் வந்தான். என் புடவை நன்றாக இருப்பதாகப் பாராட்டினான். நகைகள் விஷயத்திலும் நல்ல ரசனை இருப்பதாகப் புகழ்ந்தான்.
“இதெல்லாம் அம்மாவின் கை வண்ணம்தான். எனக்கு எதுவும் தெரியாது” என்றேன், கடைக்கண்ணால் அவனைக் கவனித்துக் கொண்டே.
நான் எதிர்பார்த்தது போலவே நடந்தது. அவன் கண்கள் அவனையும் அறியாமல் அம்மாவின் பக்கம் திரும்பின. அந்தப் பார்வையில் பாராட்டும் அபிமானமும் கலந்திருந்தன. சாரதி அம்மாவிடம் சென்று அரைமணி நேரம் பேசி விட்டுப் பிறகு விடைபெற்றுக் கொண்டு போனது என் பார்வையிலிருந்து தப்பவில்லை.
அவர்கள் போனதும் அம்மா ஒரே எட்டில் அருகில் வந்து என்னை அணைத்துக் கொண்டாள். “மீனா! நீ ரொம்ப அதிர்ஷ்டசாலிதான். இல்லை இல்லை. இந்த அதிர்ஷ்டம் என்னுடையது. இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்க எத்தனையோ பாக்கியம் செய்திருக்க வேண்டும்.” மகிழ்ச்சி பொங்கும் குரலில் சொன்னாள்.
கடைசியில் சொன்ன வார்த்தைக்கு என் முகம் சுருங்கிப் போனதை சந்தோஷத்தில் முழ்கியிருந்த அம்மா உணரவே இல்லை. “சாரதி அடியெடுத்து வைத்ததுமே நம் வீட்டுக்குப் புதிய களை வந்து விட்டது” என்று அம்மா சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை.
அம்மா உள்ளே போய்விட்டாள். நான் ரொம்ப நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

(தொடரும்)

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்