முள்பாதை – அத்தியாயம் 1 (தெலுங்கில் புகழ்பெற்ற நாவல்)

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


இரண்டு மணி நேரம் நீண்ட யோசனை செய்த பிறகு நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
“எது எப்படிப் போனாலும் சரி, அம்மாவைக் கேட்டு விடுகிறேன். கூட அழைத்துப் போகணும்னு பிடிவாதம் பிடிக்கிறேன். தேவைப்பட்டால் அழுது காரியத்தைச் சாதித்துக்கொள்வேன்” என்று நினைத்துக் கொண்டே நேராக அம்மாவின் அறைக்குப் போனேன்.
அறைக்குள் அம்மா சூட்கேஸை கட்டில் மீது வைத்துவிட்டு புடவைகளை அதில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அம்மாவைச் சுற்றிலும் விதவிதமான வண்ண வண்ணப் புடவைகள் இருந்தன. சமையல்காரி திருநாகம் அம்மாவின் பக்கத்திலேயே நின்றுகொண்டு எந்தப் புடவைக்கு எந்த பிளவுஸ் சரியாக இருக்குமோ பார்த்து அம்மாவிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
நான் அறைக்குள் காலடி எடுத்து வைத்ததும் இருவரும் தலையைத் திருப்பி ஒரு தடவை என் பக்கம் பார்த்துவிட்டு உடனே மறுபடியும் தங்களுடைய வேலைகளில் மூழ்கிவிட்டார்கள்.
“மம்மீ!” வாசற்படியிலிருந்தே அழைத்தேன்.
“ஊம்.”
“மம்மீ!!”
“சொல்லு.”
“நான்…” தயங்கிக்கொண்டே நின்றுவிட்டேன்.
“நீ?”
“நான் … வந்து … நான்…”
“அப்படி வார்த்தைகளை மென்று முழுங்காதேன்னு எவ்வளவு தடவை சொல்லியிருக்கிறேன்? சொல்ல வந்ததைப் பளிச்சென்று வாயைத் திறந்து சொல்லு.” அதட்டினாள்.
“நானும் உன்னுடன் வருகிறேன் மம்மீ.” உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு எப்படியோ சொல்லிவிட்டேன்.
அம்மா கை வேலையை நிறுத்திவிட்டு பின்னால் திரும்பி என்னை கண்ணிமைக்காமல் பார்த்தாள். அது வரையில் கஷ்டப்பட்டுத் திரட்டியிருந்த என் தைரியமும், துணிச்சலும் அந்த ஒரு பார்வையில் காற்றில் கலந்துவிட்டன.
“என்ன?” என்றாள், என்ன சொல்ல வருகிறாய் என்பதுபோல் குரலை உயர்த்தி.
“நானும் உன்னுடன் வருகிறேன். இங்கே எனக்குப் பொழுது போகாது.” புடவைத் தலைப்பை விரலில் சுற்றிக் கொண்டே முணுமுணுத்தேன்.
“பொழுது …. போகாதா? நீயும் என்னுடன் வரப் போகிறாயா?” நம்பமுடியாதவள் போல் கேட்டாள்.
ஆமாம் என்பது போல் தலையை அசைத்தேன். மம்மியின் புருவங்கள் முடிச்சேறின. “நான்கைந்து நாட்களில் டில்லியிலிருந்து சாரதி இங்கே வரப்போகிறான். அந்த விஷயம் உனக்குத் தெரியும் இல்லையா?” என்று கேட்டாள்.
“தெரியும்.”
“தெரிந்த பிறகும் கேட்கிறாயா?”
நான் பதில் சொல்லவில்லை.
“உனக்குக் கொஞ்சம்கூட புத்தியில்லை.” உண்மையைச் சொல்லுவது போல் சீரியஸாகச் சொன்னாள்.
“எனக்கு … எனக்கு டார்ஜிலிங் பார்க்கணும் போல் இருக்கு.” நொண்டி சாக்குச் சொன்னேன்.
என் மனதில் இருக்கும் எண்ணத்தைப் புரிந்து கொண்டு விட்டது போல் அம்மாவின் கண்கள் பளிச்சிட்டன. “உனக்குப் பார்க்கணும் போல் இருந்தால் கல்யாணம் ஆனதுமே நேராக டார்ஜிலிங் அழைத்துப் போகச் சொல்லி சாரதியிடம் சொல்கிறேன்” என்றாள் அம்மா பரிகாசமாக.
அம்மா எதிர்பார்த்ததுபோல் எனக்கு வெட்கமோ, சந்தோஷமோ ஏற்படவில்லை. “சாரதி வந்தால் திருநாகம் மாமிதான் இருக்கிறாளே. நான் இங்கே இருந்து மட்டும் என்ன செய்யப் போகிறேன்?” என்றேன் பிடிவாதமாக.
நான் சொன்னதில் என்ன தவறு இருந்ததோ தெரியவில்லை. அம்மாவும், திருநாகமும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“இந்த ஒரு முறை வருகிறேன். இனி ஒரு நாளும் இப்படிக் கேட்கமாட்டேன்.” வாக்குறுதி கொடுப்பதுபோல் சொன்னேன்.
அம்மா என்னை நேராகப் பார்த்தாள். அவள் முகத்தில் இருந்த முறுவல் மறைந்துவிட்டது. “இப்படி வா” என்றாள்.
நான் தொலைவிலேயே நின்றிருந்தேன்.
“அருகில் வா.”
பயந்துகொண்டே மெதுவாக அடிமேல் அடிவைத்து அருகில் சென்றேன்.
“நிமிர்ந்து என்னைப் பார்.”
பார்த்தேன்.
“நான் ஒரு வார்த்தை சொல்கிறேன். கேட்கிறாயா?”
கேட்கிறேன் என்பது போல் தலையை அசைத்தேன்.
அம்மா என் கையைப் பிடித்துக்கொண்டு என் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்துக்கொண்டே சொன்னாள். “மீனா! பருவப் பெண்ணாக வளர்ந்து விட்டாய். முன்னை போல் ஒரு அடி கொடுத்து உன்னை வழிக்குக் கொண்டு வரும் நிலையைத் தாண்டிவிட்டாய். எந்த ஒரு விஷயத்தையும் பத்து தடவை சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை என்று உனக்கு நன்றாகத் தெரியும். தெரிந்த பிறகும் இப்படி ஏன் என்னைத் தொந்தரவு செய்கிறாய்? சாரதி வரப் போகிறான். நீ இங்கே இருந்தாக வேண்டும். அது மட்டுமே இல்லை. சந்தோஷமாக, ஜாலியாக சாரதியின் மனதைக் கவரும் விதமாக நடந்துகொள்ளணும். புரிந்ததா?”
மென்மையாகச் சொல்வது போல் தென்பட்டாலும் அந்த வார்த்தைகளில் பொதிந்து இருந்த கடுமையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே புரிந்துவிட்டது என்பது போல் தலையை அசைத்தேன். அந்த நிமிடம் அந்த அறைக்கு ஏன் வந்தோம் என்று தோன்றியது. ஏதாவது சாக்கு சொல்லி அந்த இடத்தை விட்டு ஓடிப் போய்விட்டால் நன்றாக இருக்கும் போல் இருந்தது.
“உன்னுடைய பீரோவில் புடவைகள் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன். அவற்றுக்குப் பொருத்தமான நகைகளையும் அதனுடனேயே வைத்துள்ளேன். நேர்த்தியாக புடவையைக் கட்டிக்கொண்டு, நகைகளை அணிந்து கொண்டு அழகாக தென்படணும். உற்சாகத்துடன் வளைய வரணும். உன் அழுகை மூஞ்சியுடன் அவனுக்குப் பைத்தியம் பிடிக்கவைத்து மூன்றாம் நாளே ஓடிப் போகும் விதமாகச் செய்து விடாதே. இவ்வளவு நல்ல வரன் தேடினாலும் நமக்குக் கிடைக்காது. ஏற்கனவே எந்தக் காரணத்தினாலேயாவது இந்த வரன் தட்டிப் போனால் தங்களுடைய மகளை அவனுக்குக் கட்டிவைப்போம் என்று நாலைந்து பேர் குள்ளநரிகள் போல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தப் பாழாய் போன பயணம் இப்பொழுதுதான் வந்து தொலைந்தது. அவன் வரப்போவது ஓரிரண்டு நாட்களுக்கு முன்னால் தெரிந்திருந்தாலும் இந்தப் பயணத்தை கான்சல் செய்து விட்டிருப்பேன். இப்போ தவிர்க்க முடியாத நிலைமை” என்று சொல்லி விட்டு என் கையை விட்டுவிட்டாள்.
போர் நடக்கும் முன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வந்து, காரியம் நடக்கப் போவதில்லை என்று தெரிந்து கொண்ட தூதனைப் போல் தலையைக் குனிந்துகொண்டு வெளியேற முயன்றேன்.
“ஒரு தடவை திரும்பிப் பார்.” பின்னாலிருந்து அம்மா குரல் கொடுத்தாள். போய்க் கொண்டிருந்தவள் அப்படியே நின்று விட்டேன். ஆனால் திரும்பிப் பார்க்கவில்லை.
“நான் திருநாகத்திடம் எல்லாம் விவரமாக சொல்லிவிட்டுப் போகிறேன். நீ பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்தால் உடனே தெரிந்து போய்விடும். இந்த விஷயத்தில் சின்ன வித்தியாசம் வந்தாலும் நான் பொல்லாதவளாகி விடுவேன். உன் எதிர்காலத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயம் இது. என்னிக்காவது ஒருநாள் அம்மா ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருந்தேன் என்று உனக்குப் புரியத்தான் போகிறது. முயற்சி என்னுடையது. அதன் பலன் உன்னுடையது என்று மட்டும் மறந்துவிடாதே.”
மேற்கொண்டு எதுவும் கேட்க வேண்டியதில்லை என்பது போல் அங்கிருந்து வெளியேறினேன். நேராக என்னுடைய அறைக்கு வந்து வேகமாக கதவைச் சாத்திவிட்டு கட்டில் மீது சரிந்தேன். அம்மாவிடம் தோற்றுப் போகும் ஒவ்வொரு சமயத்திலும் என்ன நடக்குமோ இப்பவும் அதுதான் நிகழ்ந்தது. என் கண்களிலிருந்து நீர் தளும்பியது. என்ன செய்வது என்று தெரியாத போது நகத்தைக் கடிப்பது என் வழக்கம். இப்பொழுதும் அதைத்தான் செய்யத் தொடங்கினேன். நகம் கடிக்கும் பழக்கத்தை மறக்கச் செய்வதற்கு அம்மா எவ்வளவு முயற்சி செய்தாளோ அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். சிறுவயதில் பென்சிலால் என் விரல்கள் வீங்கும் அளவுக்குப் பல முறை அடித்திருக்கிறாள். அப்படியும் அந்தப் பழக்கத்தை என்னால் விட முடியவில்லை. என்னையும் அறியாமல் சில சமயம் நகத்தைக் கடித்தபடி மணிகணக்காக உட்காருவது எனக்குப் பழக்கமாகிவிட்டது. தனிமையில் இருந்தாலும் சரி, நாலு பேருக்கு நடுவில் இருந்தாலும் சரி இந்தப் பழக்கம் எனக்குத் துணையாக, மனதிற்கு அமைதி தருவது போல் இருக்கும்.
அறையில் கட்டில்மீது இயலாமையுடன், ஏமாற்றத்துடன் அமர்ந்திருந்த எனக்கு அம்மாவின் மீது தாங்க முடியாத அளவுக்குக் கோபம் வந்தது. ஆனால் அது ஏழையின் கோபம். பலவானுக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாத இயலாமை. பணக்காரனுக்கு முன்னால் வாயைத் திறக்க முடியாமல் மறைவில் ஏசி, தன் மனக்குமுறலை தணித்துக் கொள்ளும் அற்பகுணம். அம்மா இப்பொழுது மட்டுமே இல்லை. நான் பிறந்த வளர்ந்த இந்த இருபத்தி இரண்டு வருடங்களாக நான் விரும்பியது எதுவுமே செய்தது இல்லை. கேட்டது கொடுக்கவில்லை. அப்படிச் செய்தால் செல்லம் அதிகமாகி, ஏற்கனவே பிடிவாதக்காரியாக இருக்கும் நான் மகாப்பிடிவாதக்காரியாகி விடுவேன் என்று அம்மா பயந்தாள். நான் இப்படிப் பிடிவாதமாக இருப்பதற்குக் காரணமே அம்மாதான் என்று அப்பா எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்.
வயது ஆக ஆக அம்மா சொல்வதை நான் மறுப்பதும், நான் சொன்னதை அம்மா கண்டிப்பதும் வழக்கமாகிவிட்டது. உலகத்திலேயே மிக உயர்வாக போற்றப்படும் தாய் மகளுக்கு இடையே இருக்கும் அபூர்வமான பந்தம் எங்களுக்கு நடுவில் இல்லை. மென்மையான இதயம் படைத்தவள் என்றும், சுதந்திரமான எண்ணங்கள் கொண்டவள் என்றும் ஊர் மக்களால் போற்றப்படும் அம்மா, தன்னுடைய ஒரே மகளான என்னிடம் ஏன் இப்படி ஹிட்லரைப் போல் நடந்து கொள்கிறாளோ எனக்குப் புரியாத புதிர். அம்மா போன்ற நபருக்கு மகளாகப் பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம் என்று என் வயதை ஒத்தவர்கள் ஏகமனதாக சொல்லும் போது எனக்கு தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளுமை என்ற பழமொழிதான் நினைவுக்கு வரும்.
எத்தனை வருடங்கள் கடந்தாலும், நான் எத்தனை பெரியவளாக வளர்ந்தாலும் அம்மா என்னை விவரம் தெரிந்தவளாக, எனக்கு என்று சில எண்ணங்கள் இருப்பவளாகக் கண்டுகொண்டதே இல்லை. அந்த எண்ணங்களைச் செயல்படுத்த வேண்டும் என்ற தவிப்பை உணர்ந்து கொண்டதும் இல்லை. எனக்கு எதுவுமே தெரியாது என்று அம்மாவின் எண்ணம். அந்த எண்ணத்தை மாற்றுவதற்கும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் நான் பல விதமாக முயற்சி செய்து வந்த போதிலும் அம்மாவுக்கு நம்பிக்கை ஏற்படாமல் போனதோடு தன் அபிப்பிராயத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளத் தொடங்கினாள். இதற்குக் காரணம் அம்மா என்னை எப்படியாவது பெரிய ஆளாக கொண்டு வந்து இன்னார் வீட்டு மகள் என்று எனக்கு அங்கீகாரத்தைத் தேடித் தரவேண்டும் என்று முயற்சி செய்து ஏமாற்றம் அடைந்தது தானோ.
அப்படிப்பட்ட ஏமாற்றங்கள் ஒன்று இல்லை, பலவிதமாக இருந்தன. அவற்றில் முதலில் வருவது என்னை நாட்டியக்காரியாக்க வேண்டும் என்று அம்மா நினைத்தது, அந்த வித்தை எனக்குக் கை வராமல் போனது.
எனக்குப் பத்து பன்னிரெண்டு வயது இருக்கும் போது ஒருநாள் மதியம் அம்மா என்னை “மீனா! இங்கே வாம்மா” என்று அழைத்து தன் எதிரில் பவ்யமாக அமர்ந்திருந்த ஒரு நபருக்கு “என்னுடைய மகள்” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள். பிறகு அவரை எனக்குக் காண்பித்து “இவர் உன்னுடைய டான்ஸ் மாஸ்டர். நாளை முதல் உனக்கு டான்ஸ் கற்றுத் தருவார்” என்றாள்
வந்தவரை நான் கூர்ந்து பார்த்தேன். பாகவதார் டோபா போன்று நீண்ட கேசம், திருஷ்டி பொம்மைக்கு மாட்டி விட்டது போல் லூசாக தொங்கும் பைஜாமா, ஜிப்பா, அளவுக்கு மீறி நீளமாக இருந்த கிளிமூக்கு, பெண்களைப் போல் குலுங்கும் உடல். இப்படிக் காட்சி அளித்த அந்த டான்ஸ் மாஸ்டரைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. அவர் எனக்கு டான்ஸ் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அந்த டோபா முடியுடன் அவர் தாம் தீம் என்று குதித்து ஆடும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவ்வளவு பெரியவர் துள்ளிக் குதித்து நாட்டியம் ஆடும்போது எனக்கு அருவருப்புதான் ஏற்பட்டது. அவர் என் அருகில் வந்து கைகளைப் பிடித்துக் கொண்டு இப்படி அப்படி என்று செய்து காட்டியபோது நான் அபிநயத்தை விட்டுவிட்டு மூக்கை பொத்திக் கொண்டேன்.
“என்ன ஆச்சு?” அவர் கேட்டார்.
“வியர்வை நாற்றம் தாங்க முடியவில்லை” என்றேன் முகத்தைச் சுளித்துக் கொண்டே.
இதைக் கேள்விப்பட்டதும் அம்மா என் இரண்டு காதுகளையும் திருகி “பெரியவர்களை அப்படிச் சொல்லலாமா, அதிலும் வாத்தியார் ஸ்தானத்தில் இருப்பவரை” என்று கடிந்து கொண்டாள். பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ளணுமோ ஒரு மணி நேரம் லெக்சர் கொடுத்தாள். நான் வழக்கம்போல் இந்தக் காதில் வாங்கி அந்தக் காது வழியாக வெளியே விட்டு விட்டேன்.
டான்ஸ் மாஸ்டர் முதல் மாத சம்பளம் வாங்கி சட்டைப் பையில் போட்டுக் கொண்டதும் பணிவாக இரண்டு கைகளையும் ஜோடித்து அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டார். “அம்மா! உங்க மகளுக்கு நாட்டியம் கற்றுத் தருவது என்னால் முடியாத காரியம். வேறு யாராலும் முடியும் என்றுகூட எனக்குத் தோன்றவில்லை. சின்னப்பெண் தான் என்றாலும் அவள் கண்களில் தென்படும் வெறுப்பும் ஏளனமும் எங்கள் உயிரை எடுப்பதோடு எங்களுடைய வித்தையைக் கூட நசித்து போகச் செய்யும். தயவு செய்து மன்னித்து விடுங்கள். போய் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போய்விட்டார்.
அம்மாவுக்கு என் மீது அளவு கடந்த கோபம் வந்தது. அந்தக் கோபத்தில் என்னைக் கொண்டு போய் போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டாள்.
போர்டிங் ஸ்கூலில் சேர்ந்ததும் கூண்டில் இருந்த பறவைக்கு விடுதலை கிடைத்தாற்போல் சுதந்திரமாக உணர்ந்தேன். அங்கே இருந்த டீச்சர்கள் ரொம்ப நல்லவர்கள். ஒழுக்கம், நேர்மை கற்றுத் தருவதுடன் மாணவர்களின் மனதை, சுபாவத்தை அறிந்து மென்மையான கண்டிப்புடன் நல்ல வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்வார்கள். வாழ்நாள் முழுவதும் அந்தப் பள்ளியிலேயே இருந்து விட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
ஆனால் அம்மாவால் என்னைப் பிரிந்து இருக்க முடியவில்லையோ, அல்லது கிளப்புக்கும், ஊர் சுற்றுவதற்கும் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று ஒரே மகளை போர்டிங் ஸ்கூலில் சேர்த்து விட்டிருக்கிறாள் என்று பத்து பேர் சொல்லிக் காட்டியதாலோ என்னவோ இரண்டு வருடங்கள் முடிந்ததும் அம்மா திரும்பவும் என்னை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டாள்.
போர்டிங் ஸ்கூலில் இருந்துவிட்டு வந்த பிறகு வீட்டில் இருப்பதும், அம்மாவின் நெருக்கமும் எனக்குக் கஷ்டமாக இருந்தன. அம்மாவின் முன்னால் வாயைத் திறக்க முடியாவிட்டாலும் என் எரிச்சலை ஏதோ ஒரு விதமாக வெளிப்படுத்திக் கொண்டுதான் இருந்தேன். உதாரணமாக விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்றும் நீட்டாக டிரெஸ் செய்து கொள்ளணும் என்றும் அம்மா என்னிடம் சொன்னால் பளிச்சென்று டிரெஸ் செய்து கொள்வேன். அதே சமயத்தில் கையில் ஈஷியிருக்கும் மை அல்லது சாந்தை டிரெஸ்ஸில் துடைத்துக் கொள்வேன். என்னுடைய சாப்பாடு விஷயத்திலும் அம்மா ரொம்ப சுஷ்கத்தை கடைபிடிப்பாள். ஏற்கனவே நான் அப்பாவைப் போல் கொஞ்சம் உயரம். சட்டென்று பருத்து விடக்கூடிய உடல்வாகு படைத்தவள் என்பதால் அந்த உயரத்திற்குப் பருமனும் சேர்ந்துகொண்டால் வயதுக்கு மீறி தென்படுவேன் என்ற பயம் அம்மாவுக்கு.
வீட்டில் அம்மா எவ்வளவு குறைவாகப் பரிமாறினாலும், கலோரி குறைவான உணவு வகைகளை சாப்பிடச் செய்தாலும் நான் வெளியே போய் எந்த சிநேகிதியின் வீட்டிலாவது தோசை, வடை, இட்லி என்று வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு வருவேன்.
சில சமயம் அப்பாவே என்னை அம்மாவுக்குத் தெரியாமல் ரகசியமாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று வயிறு நிரம்ப சாப்பிடச் செய்வார்.
அம்மாவுக்கு என்னைப் போன்ற பெரிய மகள் இருப்பது லேடீஸ் கிளப்பில் ரொம்பப் பேருக்குத் தெரியாது. அதற்கு இரண்டு காரணங்கள். அம்மா உடை அணியும் முறையும், உடலை சிக்கென்று வைத்துக்கொள்வதற்காகச் செய்யும் உடற்பயிற்சி ஒரு காரணம் என்றால், இரண்டாவது காரணம் நான் எப்பொழுதோ தவிர கிளப்பிற்கு அதிகமாகப் போனதில்லை. என்னுடைய உலகம் பெரும்பாலும் அப்பாவைச் சுற்றிப் பிணைந்திருக்கும்.
கடந்த நான்கு வருடங்களாக அம்மா லேடீஸ் கிளப்பிற்கு பிரசிடெண்டாக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டு வந்தாள். மிஸெஸ் ராமனின் செல்வாக்கும், அபிமானமும்தான் அதற்குக் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். மிஸ்டர் ராமன் சுப்ரீம் கோர்டில் ஜட்ஜ் ஆக இருந்து ரிடையர் ஆனவர். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. மிஸெஸ் ராமனும் அம்மாவும் நல்ல சிநேகிதிகள். அவர்களை உயிர்த் தோழிகள் என்று சொல்வதைவிட ஓருயிர் ஈருடல் என்று சொன்னால் மிகச் சரியாக இருக்கும். அவர்களுடைய எண்ணங்களும், கருத்துகளும் பாலும் தண்ணீரும் போல் இரண்டறக் கலந்துவிட்டன. அந்த அம்மாள் ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டால் அம்மா பக்தி சிரத்தையுடன் அப்படியே ஏற்றுக்கொள்வாள். அதேபோல் அந்த அம்மாளும் அம்மாவின் சொல்லை வேதவாக்காக நினைப்பாள். ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசிக்காமல், அறிவுரை கேட்டுக்கொள்ளாமல் எந்தக் காரியமும் செய்ய மாட்டார்கள்.
அம்மா பிரசிடெண்ட் ஆனபிறகு இந்த நான்கு வருடங்களில் கிளப் உறுப்பினர்கள் நிறைய இடங்களை சுற்றிப் பார்த்தார்கள். கிளப்பில் விழா ஏதாவது நடந்து கொண்டிருக்கும் போது எல்லோருக்கும் நடுவில் வளைய வந்து கொண்டு மிகச் சாமர்த்தியமாக மற்றவர்களிடம் வேலை வாங்கும் அம்மாவைப் பார்க்கும்போது, இவ்வளவு சிறிய உருவம் கொண்டவளிடம் இவ்வளவு சக்தி, திறமை எங்கிருந்து வந்தன என்று ஆச்சரியமாக இருக்கும். எல்லோருடைய பாராட்டையும் பெறுவது என்றால் சாதாரண விஷயம் இல்லை. அது போன்ற சமயங்களில் அம்மாவைப் பார்க்கும் போது பெருமையால் என் இதயம் பூரித்துவிடும். இத்தனை பேருடைய குணநலன்களை மிக எளிதாகப் புரிந்து கொண்டிருந்த அம்மாவால் வீட்டில் இருக்கும் என்னையும், அப்பாவையும் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? ஒருக்கால் நாங்கள்தான் அம்மாவைச் சரியாகப் புரிந்துகொள்ள வில்லையோ என்று சில சமயம் தோன்றும்.


தொடர்ச்சி அடுத்த பக்கத்தில்

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்