அறிவியல் புனை கதை 10: இனியொரு ‘விதி’ செய்வோம்

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஊமுள் தைத்த ஆடையை அணிந்தவளுக்கான தவிப்புடன் அன்றிரவு இருந்தேன். எங்கள் வீட்டில் நடந்ததனைத்தும் சடங்குகள். காலையில் சூரியன் உதிப்பதற்கும், அந்தியில் மறைவதற்கும், என்னபெயரோ அந்தப் பெயரையே எங்கள் தினசரி அலுவல்களுக்கும் நீங்கள் கொடுக்கலாம். அவை ஒத்திகைபார்த்து பழகியவை. பிசகின்றி, மேடையேற்றப்பட்டவை, திரை விலகியதும், ஒளிபாய்ச்சியதும் மேடைக்குள் நுழைந்ததும், வசனத்திற்கு வாய் திறந்ததும் நூல் பிடித்ததுபோல நடந்தவைகள். பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகளைப்போல காலை தொடங்கி மாலைவரை சடங்குகளை பராமரித்திருக்கிறோம். ஏதோ ஒரு ஆடு வேலி தாண்டியிருக்கிறது. அவ்வபோது கத்தரித்துப் பராமரிக்கப்படும் தோட்ட வேலியில் ஒழுங்கமீறியதொரு செடியைப்போல. முதன்முதலாக எனக்குக் குழப்பம் நேர்ந்த இரவு அது. உங்களுக்குச் இது சாதாரணவிஷயமாக இருக்கலாம். எங்கள் வாழ்வையும் அதன் நொடிகளுக்குள்ள கட்டுப்பாடுகளையும் அறிந்தவர்களுக்கு இக்கவலை விளங்கிக் கொள்ளக்கூடியது.

பொதுவாக இரவு 7.30க்கு சாப்பாட்டுமேசையின் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு வேணு உட்காருவான். . இரவு உணவை ஏழு ஐம்பத்தைந்துக்கு முடித்துக்கொள்வான். வரவேற்பறையில் தொலைகாட்சிக்கு பெட்டிக்கு முன் அமரவும் “மதாம்..ம்ஸியே போன்ழூர்” என்றகுரலை ஏதோ இவனைத்தான் அழைப்பதுபோல வரும். கடிகாரத்தைப் பார்க்கத்தேவையில்லை, கச்சிதமாக நேரத்தோடு பொருந்தியிருப்பான். எடுத்து வைத்த அடியில் சில மி.மீட்டர்கள் கூடியதாகவோ, குறைந்ததாகவோ எனக்கு அனுபவமில்லை. அவனுக்குப் பால் கலவாத காப்பிவேண்டும், தேனிர் கோப்பையில் பால் கலவாமல் கறுப்பு காப்பி எடுத்துச் செல்வேன். தலைப்புச்செய்திகளை மட்டும் கேட்ட பிறகு தொலைகாட்சியை அணைத்துவிடுவான். என்னை வரவேற்பதுபோல அவனது முகம் சுமார் 75 பாகைமானி அளவிற்கு திரும்பும். அக்கணத்தில் வரவேற்பறை எங்கும் நிரம்பிவழியும் லம்பாடேரின் மிருதுவான ஓளியில் மினுங்கும் முகத்தை ரசித்தபடி குறிப்பாக அவன் இமைமயிர்களின் வைரப்புள்ளிகளில் என்னை மறந்தவளாய் கோப்பையை நீட்டுவேன். விரல்களை ஸ்பரிஸித்து கோப்பையை வாங்குவதிலுங்கூட ஒருவகையான ஒட்டுதலில்லாத காதலை வெளிப்படுத்தும் குணம். பட்டினாலான எனது இரவாடை வழவழப்புடன் அவனை ஒட்டிக்கொண்டு அமரும்போது சொந்தக்கிளையில் அமரும் பறவைபோல உணருவேன். ஸ்விட்சை போட்ட கணத்தில் பிறக்கும் முதல் ஒளியைப்போல வேணுவுக்கு சிரித்தமுகம்: பழுதற்றசிரிப்பு.- அசலான பொய்கலவாத சிரிப்பு. அச்சிரிப்பிலிருந்து சேதாரமின்றி விடுவித்துக்கொண்டு எழுந்து சென்று ஜகத்சிங் கஸலோ, நித்யஸ்ரீயின் எப்படி பாடினரோ என்று ஏதோஒன்றை ஹை-•பியில் சுழலவிட்டு மீண்டும் ஒட்டிக்கொள்ளவேண்டும். வேணுவின் வலதுகரம் கடமைபோல எனது கன்னத்தை மெல்ல வருடும், விரல்கள் வீட்டுபிராணியின் ரோமம் அடர்ந்த உடலை சீண்டி விளையாடுவதுபோல நினைத்துக்கொண்டு எனது தலைமுடியைக் கலைத்து விளையாடும். ஆள்காட்டிவிரலில் ஒன்றிரண்டு முடிகளை சுற்றிக்கொண்டு நான் சிணுங்குவதை சில நேரங்களில் ரசித்திருக்கிறான். நான் அப்போது பொய்யாய் கோபம் கொள்வதுண்டு, சோபாவில் கிடக்கும் சிறிய திண்டினைப் எடுத்து அவன் முகத்தில் செல்லமாக அடிப்பேன். ராஸ்கல் என்ன நினைக்கிறான் ஏதோ பூனைக்குட்டிபோல என்னை நினைத்து நடத்துவது பல நேரங்களில் எரிச்சலூட்டியிருக்கிறது.

மேற்கண்ட வரிகளில் பகிர்ந்துகொண்ட அவ்வளவும் ஏற்கனவே உங்களிடம் நான் சொல்லியிருப்பதைப்போல நேர ஒழுங்குக்குள் அடைபட்டவை. எங்கள் ஒவ்வொரு இயக்கம் நொடியின் உட்பிரிவுக்குள் சட்டமிடப்படக்கூடியவை. நொடி, நிமிடம், மணி, பெண்டுலம், முட்கள், எண்கள்-கடிகாரம் அத்தனையும் வேணுவுக்கு மாத்திரம்மட்டுமல்ல அவனால் எனக்கும் சபிக்கப்பட்டவை. சிறிய முள்ளின் நகர்வு அவனது இதயத் துடிப்பை அதிகரிக்கச்செய்வதை அவனது மார்பில் தலைவைத்துக் கிடந்த பல நேரங்களில் கேட்டிருக்கிறேன். சுவர்க் கடிகாரத்தில் சிறிய முள் எட்டுக்கும் ஒன்பதிற்கும் இடையில் காத்திருக்க, பெரிய முள் ஆறினைத் தொட தயாரென்ற நிலையில் வேணு எழுந்து கொள்வான். “டியர் போகனும், நாளைக்கு மறுபடி பார்க்கலாம்”, என்பான். நான் இங்கே வந்த நாளிலிருந்து இந்த வீட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நொடிகளைக்கூட கணக்கிற் கொண்டு நடத்தப்படவேண்டும் என்பது விதி. ஏன் எதற்கு என்றகேள்விகளை கேட்டதில்லை, கேட்கவும் உரிமையில்லை.

ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைத்து மாடிப்படிகளில் ஏறுவான். மாடியில் கால் வைக்கிறபோது, வேணுவுடைய அன்றாடச் சடங்கு ஒரு முடிவுக்கு வந்துவிடும். பிறகு அவனைப் பார்க்க அதிகாலைவரை நான் காத்திருக்கவேண்டும். தூக்கமின்றி புரண்டு படுக்கும் நேரங்களில் பி. சுசீலாவின் கனவு கண்ட காதலையும், காதற்சிறகையும் கேட்டுமுடிக்கும் இடைவே¨ளைகளில் எனது நினைப்பு மாடியில் இருக்கும். மாடி வேணுவின் எழுத்துலமென்று சொல்லியிருக்கிறான். நாவலை எழுதலாம். எழுதிமுடித்த கட்டுரையை மெய்ப்புப் பார்க்கலாம். தலைப்பில் கூட கவனம் செலுத்துபவன். ஓரிரவு எழுதிமுடித்த நிறுகதைக்கு தலைப்பு பொருத்தமில்லையென்று கணினியின் தேர்வுசெய்த நூறு பெயர்களில் எதை வைக்கலாமெனத் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறான். மறுநாள் அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. வேறென்ன செய்வது பரிதாபப்படமட்டுந்தான் என்னால் முடியும். முதன் முதல் இந்தவீட்டில் நான் காலடிவைத்தபோதே எனக்கான உரிமைகளென்ன கடமைகளென்ன என்பதை வேணு தெளிவுபடுத்தியிருந்தான். விதிமுறைகள் அடங்கிய கையேடுஒன்றையும் அப்போது கொடுத்தான். அவ்விதிகளின் காற்புள்ளி அரைப்புள்ளிகளை மீறுவதற்குக்கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. அவனது தேவை ஒரு கட்டாயமாக உணரப்பட்ட நேரங்களிற்கூட அவனது தனிமைக்கு, அவன் கேட்டுக்கொண்டபடி இடையூறுசெய்ய முயன்றதில்லை.

காலையில் மாடிப்படியிலிருந்து இறங்கிவரும் வேணுவை நீங்கள் பார்க்கவேண்டுமே. முதல் நாளன்று அதிர்ச்சி. ஏதோ மாதக்கணக்கில் தேசாந்திரம் புறப்பட்டு நாடு நகரமென்று அலைந்து ஊர் திரும்பியவன்போல இருந்தான். ஒவ்வொருநாளும் மாடியிலிருந்து இறங்கிவந்ததும் செய்யும் முதல்காரியம், இரவு எழுதிமுடித்த படைப்புகளை ஆயாசத்துடன் கூடத்து மேசையில் போடுவது. பிறகு இரைகண்டு பரபரக்கும் சிலந்தியை ஒத்து காலை உணவு.

– வேணு நிதானம்.. நிதானம்மா. அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, தள்ளியிருக்கிற நாற்காலியை இழுத்து அவனருகில் போட்டு அமர்ந்துகொள்வது எனக்கு வாடிக்கை.

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஒரிரு விநாடிகள் என்னையே பார்ப்பான். சட்டென்று என்னைக் கட்டிக்கொள்வான். தலையை இறக்கி என் மார்பில் வைத்துக்கொண்டு ஓரிரு நிமிடங்கள் அமைதியாக இருப்பான்.

– வேணு! எங்கிட்டே சொல்லக்கூடாதா? இதென்ன சின்னகுழந்தை மாதிரி – தலையை நிமிர்த்தி அவன் வாய் திறக்கட்டுமென காத்திருப்பேன்.

மௌன விரதமிருப்பவன்போல அமைதியாக இருப்பான். சட்டென்று எங்கள் இருவரையும் கவ்வும் சூன்யத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியாது, எரிச்சலடைவேன்.

– எதுவாக இருந்தாலும் நீ சொல்லி ஆகணும். இப்படி மௌனம் காத்தால் எழுந்து போய்விடுவேன். சரி நேற்று என்ன எழுதினீங்க. அரவிந்தன் விமலா விவாகரத்து வழக்கு என்னவாயிற்று. எனக்கென்னவோ அவர்களுக்குள் பிரச்சினைகளை நுழைத்து கதையைத் திசை திருப்பியது அவ்வளவாகப் பிடிக்கவில்லை -அவனது மௌனத்தை எனது உரையாடல் கலைத்துவிடுமென்ற நம்பிக்கை, பல நேரங்களில் பொய்த்ததில்லை. .

– அனு எல்லோருக்குமான இந்த உலகம் நமக்கு வேண்டாம். ஏதாவதொரு பனிப்பிரதேசத்திற்கு குடிபோய்விடலாம். நம்மிருவரின் உரையாடலுக்கிடையில் அடுத்தவர் குறுக்கீடின்றி பார்த்துக்கொள்ளலாம்.

– இப்படி ஓர் ஆயிரமுறையாவது சொல்லியிருப்ப

– இப்படி பக்கத்துலே வாயென் உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். ரொம்ப ரகசியம். யாரிடத்திலும் சொல்லமாட்டேனென்று சத்தியம் செய்

எஜமானியிடம் குழைந்துகொண்டு நிற்கும் நாய்போல முகத்தை வைத்துக்கொண்டு பரிதாபமாகக் கேட்கிறான். குரலில் கபடு இல்லை.

– யாரிடத்திலும் சொல்லமாட்டேன்.

– இந்த வாழ்க்கை அலுத்துவிட்டது டியர். என்றைக்காவது ஒரு நாள் பின்னிரவு மாடியிலிருந்து இறங்கிவருவேன். நீ விழித்திரு. தப்பித்து போகலாம்.

ஏன் எதற்கென்று நான் கேட்கவில்லை. கேட்கக்கூடாது.

அன்றைய தினம் பொழுது சாய்ந்ததும், ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கபோகிறதென்றுமாத்திரம் உள்ளுணர்வு எச்சரித்திருந்தது. அட்டவணைபட்டியல்படி ஒன்று இரெண்டென வரிசைப்படி நடந்த சடங்குகளில் வேணுவா நானா என்று பிரித்துணரமுடியாது ஏதோ ஒன்றிற்கு ஒன்றிரண்டு நிமிடங்கள் கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். எது எப்படியோ, அது நடந்துவிட்டது. தற்செயலாக சுவர்க் கடிகாரத்தைப்பார்க்க 8.30. வேணுவுக்கும் விபரீதம் உறைத்திருக்கவேண்டும், அமானுஷ்ய குரலில் கத்திக்கொண்டு இரண்டிரண்டு படிகளாகத் தாவிக்கடந்து மாடிக்கு ஓடினான். அவனைத் தொடர்ந்து மாடிக்குப்போகலாமா என்று யோசிக்க்கிறேன். அவன் விதித்திருந்த நிபந்தனைகள் நினைவுக்குவருகின்றன. தயங்கினேன். மேலே ஏறிச்சென்றதும் படபடவென்று கதவை இடிக்கும் சத்தம், தொடர்ந்து மூர்க்கமாக அதை எட்டி உதைக்கும் சத்தம். சற்று முன்புவரை நான் அறிந்திருந்த வேணு இல்லை. வேணுவின் இப்புதிய நடத்தைக்கும் நேரத்திற்கும் சம்பந்தமிருக்கிறது. வருவது வரட்டுமென மாடிப்படியில் கால் வைத்து ஏற நினைக்கிறபோது, அவன் இறங்கிவந்தான். நானொருத்தி வழியில் நிற்கிறேன் என்பதை உணர்ந்தவனாகத் தெரியவில்லை. என்னைக் கடந்து சென்றவன் வரவேற்பறையை அளப்பதுபோல குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். மேசையிலிருந்த விஸ்கிப்பாட்டிலைத் திறந்தவன், பாட்டிலை உயர்த்தி மடமடவென்று குடிப்பதைப் பார்த்து, பயந்து, பாய்ந்து பாட்டிலைத் தட்டிவிட சலவைக்கல் பதித்த தரையில் விழுந்தமாத்திரத்தில் உடைந்து சிதறியது. பார்த்துக்கொண்டிருக்க திடுதிப்பென்று சுவரில் நச் நச்சென்று இடித்துக்கொண்டான். ஓடிச்சென்று சுவருக்கும் அவனுக்குமாக இடையில் நின்றேன். எனது நெஞ்சில் தலையை இறக்கினான். நீராவி எஞ்சின்போல மூச்சு வாங்கியது.

– வேணு, மேலே என்னதான் நடந்ததென்று தெரிவியுங்களேன்.

-…..

– இப்படி எதுவும் சொல்லாமல் நீங்கள் பாட்டுக்கு சுவரில் முட்டிக்கொண்டால் அதற்கு என்ன அர்த்தம்.

– என்ன சொல்லனும் அனு. எதைச்சொல்லணும். மீண்டும் விசாரிக்கப்படுவேன். தண்டனை என்பார்கள். திரும்பிவருவேன். மீண்டும் எத்தனை ஆண்டுகளோ. எட்டு இருபத்தைத்துக்கெல்லாம் நான் மேலே போயிருக்கணும். அது தானியியங்கி முறையில் இயங்கும் கதவு. 8.30க்கெல்லாம் தானாக மூடிக்கொண்டது.

முதன்முறையாக வேணுவின் பதில் என்னை கலக்கமுற செய்தது. இவன் வாழ்க்கையில் ஏதோ ரகசியம். எனக்குத் தெரியாத ரகசியம், அல்லது விரும்பியே மறைக்கப்பட்ட இரகசியம். என்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்பது தெரியாமலேயே அவனோடு குப்பைகொட்டியிருக்கிறேன். ஏன் எதற்கென்ற எஜமான வாழ்க்கை அல்ல, சொல்லுங்கள் செய்கிறேன் அல்லது தங்கள் சித்தம் என் பாக்கியமென்ற அடிமை மனோபாவத்துடனான வாழ்க்கை..

– அனு எந்த உலகத்திலிருக்கிற?

– அதை நான் கேட்டிருக்கனும்

– இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் வந்துவிடுவார்கள்.

வேணு என்ற வேணுகோபால் முடிக்கவில்லை. இரண்டுபேர் சீருடையில் வாசற்கதவைத் திறந்துகொண்டு எங்கள் அனுமதியின்றி உள்ளே நுழைந்து நின்றார்கள். என்னை அவசரமாக நெருங்கிய வேணு:

– நடந்ததையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க இது நேரமில்லை அனு. நாளைக்கு மறுபடியும் காலையில் கதவு தானாகத் திறக்கும். அந்நேரம் மாடிக்குச் சென்று பார். அறை மேசையில் என்றேனும் ஒரு நாள் இவைகளெல்லாம் நடக்குமென எதிர்பார்த்து கடிதமொன்று எழுதி வைத்திருக்கிறேன்.

முதன்முறையாக என்னை இறுக அணைத்து முத்தமிட்டான். இதற்கு முன்பு அத்தனை இயல்பாக அன்பை வெளிப்படுத்தியவனில்லை.

– கிளம்பய்யா கொஞ்சியதுபோதும். வயது குறைந்த காவலன் எங்களைப் பிரித்தான்.

வேணுவை அழைத்துக்கொண்டு போய் வாகனத்தில் ஏற்றுவதையும், சில நிமிடங்களுக்குப் பிறகு வாகனம் உருமிக்கொண்டுசெல்வதையும் பார்தேன். வேணுவின் அப்பார்வையை இதற்குமுன் எப்போதோ கண்டிருக்கிறேன். எப்போது என்பதுதான் நினைவிலில்லை. மாடிக்கு ஓடினேன். மூடிய கம்பிகளிட்டக் கதவுக்குப் பின்னால் இருந்தவற்றை முதன்முதலாக ஒவ்வொன்றாக பார்த்தேன். எனது கற்பனையிலிருந்த வேணுவின் அறையல்ல அது வேறாக இருந்தது. அறை என்பதற்குப் பதிலாக சிறை என்ற சொல்லை உபயோகிக்கவேண்டும். நான்கடிக்கு மூன்று என்றிருந்த அச்சிறையை சுற்றியிருந்த சுவர்முழுக்க அடைத்துக்கொண்டு திரை. அவனுடைய கட்டிலையும் சேர்த்துக் கண்காணிக்கும் வகையில் காமிராக்கள். மூலையில் மெல்ல உருமிக்கொண்டு பெரியதொரு நுண்செயலி (Processor) அதன் உபயோகம் அடுத்துவந்த நாட்களில் விளங்கிற்று. எல்லாவற்றிர்க்கும் அதுதான் எஜமான், எங்களை பின்னிருந்து இயக்கிய சூத்ரதாரி. எங்களையென்றால் என்னையும் வேணுவையும். பிறகு இந்த வீட்டின் சன்னலையும், கதவுகளையும், உண்டதையும் உறங்கியதையும்.

என்னதான் உண்மையில் நடந்திருக்குமென யோசித்ததில்:

1. 8.30லிருந்து அதிகாலைவரை வேணு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.

2. மாறாக நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி ஒரு படைப்பாளனாக இயங்க முடிந்திருக்கிறது.

ஆனால் விளங்காதது:

1. ஒவ்வொரு நாளும் வேணுவை குறிப்பிட்ட நேரத்திற்கு சிறைக்குள் இருக்குபடி நிர்ப்பந்தப்படுத்தியது எது?

2. அவன் உள்ளே நுழையட்டுமெனக் காத்திருந்து மூடிக்கொள்வதும், விடிந்தபிறகே திறப்பதுமென்ற நியதியுடன் கதவுகள் இயங்கவும் என்ன காரணம்.?

கடைசியில் வீடுதேடிவந்த காவலர்கள்? சிறை? வேணு ஒவ்வொருநாளும் தன் வீட்டிலேயே சிறைபடுத்தியிருந்தது ஒருவகையான வீட்டுச்சிறையா. மற்ற நேரங்களில் அவனுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சுதந்திரத்திற்கு மாற்றாக அவன் கொடுத்தவிலை என்ன? அவன் மாந்தி மாந்தி எழுதிய நாவலும் சிறுகதையும் சுதந்திரமாகக்கிடைத்த பிறமணி நேரங்களுக்காகவா? உள்ளிருந்த கணினி அவனது சிறைவாசத்தையும் பிற நடவடிக்கைகளையும் கண்காணித்து அவ்வப்போது மைய அலுவலகத்திற்குத் தகவலைத் தெரிவித்து வந்திருக்குமா? அடுக்கடுக்காய் கேள்விகள் இருக்கின்றன. பதில் சொல்ல வேணு இல்லை. ஜப்பானிய புதிர் கணக்கில் நிகழ்வதுபோல ஒருவரிசை சரியென்றால் மறுவரிசை தப்பாகிறது. புதிரை விடுவிக்க வெகுதூரம் நடக்க வேண்டியிருக்குமோ? இதில் என்பங்கு என்ன? வேணுவோடு நான் இணைந்த அந்த கடந்தகாலம்? அவசியம் அறியப்படவேண்டிய கடந்தகாலம். என்னைப் பேசுமா? எனக்கென்று ஏதேனும் அதில் தகவலிருக்குமா? வேணுவை நானறியவந்தது ம்.. நினைவிருக்கிறது இதே வீட்டில் ஒருநாள் அழைப்பு மணியை அழுத்தியதும், வேணு கதவைத் திறந்ததும், அவனுடைய கண்களுடனான எனது முதல் உறவும் மனதில் அழியாமல் இருக்கிறது.

வேணுவென்று என்னால் கட்டமைக்கப்பட்டிருந்த ஆண்: ஆபூர்வ பிறவி, சுயநலக்காரன், ஆண்டுகள் பலவானாலும் அதிக ஒட்டுதலின்றி உரையாடுபவன், பழகுபவன், ஞானச்செருக்குள்ளவன், படைப்பாளி. அறிவு ஜீவியென்ற படிமத்தை என்னிடத்தில் உருவாக்கியிருந்தான். அவன் தேடிக்கொண்ட தனிமையும், சிற்சில நேரங்களில் பைத்தியக்காரன்போல அவன் நடந்துகொண்டவிதமும் என்னை வியப்பில் ஆழ்த்தவில்லைதான். அநேகவருடங்கள் தனது ரகசியங்களோடு அவன் ஒண்டுக் குடித்தனம் நடத்தியிருக்கிறான். இடையில் வந்த எனக்கும் அவனுக்குமான உறவை எப்படி சித்தரிப்பது. அந்த ரகசியங்களை என்னிடமிருந்து மறைக்க அவன் விரும்பியிருந்தால் அவனது வாழ்க்கையில் எனக்கான இடமெது? தோழியா?ம் சரியான சொல்லல்ல. அதைக்காட்டிலும் பூனை அல்லது நாய்போன்ற செல்லபிராணிகளில் ஒன்றென என்னை அழைத்துக்கொள்வதிலும் தப்பில்லை. அதிலுங்கூட மேற்கத்திய மனநிலையில் கொண்டாடப்படும் செல்லப்பிராணி வகையல்ல, கீழைநாடுகள்வகை அற்ப பிராணி. இரவானால் இப்படி ஓடி ஒளிந்தது சிறையில் அடைத்துக்கொண்டது அல்லது அடைக்கப்பட்டது எதற்காக? அவன் செய்த குற்றமென்ன? சின்ன சின்ன திருட்டுகள், அல்லது கொள்ளை, கொலை? வேணுவை அப்படி சொல்லமுடியாது. கொலைக்குற்றத்திற்கான கைகள் கொண்டவல்ல. அவன் கைகள் மிகவும் மென்மையானவை, காய்கறி நறுக்க கத்தியை பிடிப்பதென்றால் கூட அஞ்சுபவனாக பார்த்ததுதான். பிறகு பூனைகளை நேசிக்கிறவன். அனு என்ற பெண் பூனையின் கன்னத்தைத் தடவிகொடுத்தியிருக்கிறான், மாடிப்படி ஏறும் அவசரத்தில் முன் நெற்றியில் உதடுகளை நாசூக்கோடு பச்சென்று ஒத்திவிட்டு ஓடும் ஆண் பூனை அவன். வேணு-அனு என்ற உறவை அட்டவணைபடுத்தபட்ட உறவு எனலாமா? எழுந்தது, பார்த்தது, பல்துலக்கியது, முகம் அலம்பியது, டாய்லெட் போனது, காலை உண்டி, மதிய உணவு, புன்னகைக்கான நேரம், கோபத்தின் அளவு, கொஞ்சுதலுக்கான சூழல், கேட்கவேண்டிய இசை, உரையாடலுக்கான வசனம் அனைத்தும் அர்த்தமற்ற சடங்குகளாக. ஆனால் பிசகாமல் ஒரு நேர்க்கோட்டில் காலை தொடங்கி மாலைவரை, முன்னிரவுவரை… பிறகு மீண்டும் காலைதொடங்கி…

“என் பிரிய சகியே, அன்பிற்குரிய நாயகியே… எனது கதைகளில், நாவல்களில் வரும் பெண்களெல்லாம் நீதான். உனது இருமல் தும்மல் எல்லாத்துக்கும் வள்ளுவன் சொல்வதுபோல நான் வருந்துவேன்”, நிறைய பேசியிருக்கிறான், எப்போதென்று நினைவிலில்லை, ஆனால் உத்தம புருஷனாக தம்மை வடித்துக்கொண்டபோதெல்லாம் கவிதைச் சொற்கள் மழைத் தூறல்களாக விழுந்து என்னை சிலிர்க்க வைத்திருக்கின்றன. வேணுவுடனான முதல்சந்திப்பை விவரிக்க எனக்குப்போதாது. நிறைய தகவல்கள் குறைகின்றன. முதன் முதல் வீட்டுக்குள் நுழைந்ததும், உள்ளே வாங்கிக்கொண்ட கதவு தானாக மூடிக்கொண்டது நினைவுக்குவருகிறது. ஏற்கனவே புழங்கிய வீடுபோல இருக்கிறது. வீட்டுக்குள் என்னை வரவேற்ற வேணுவின் முகமும், முகம் தாங்கியிருந்த புன்னகையும் எனக்குப் புதியவை அல்ல. அவனது மனைவியாகத்தான் நான் இருக்கவேண்டும். நான் மட்டும் வந்திருக்கிறேன் எனது கடந்தகாலத்தை சலவை செய்து அனுப்பியிருக்கிறார்கள். பிற பூர்வாங்கத் தகவல்கள் என்னிடத்திலில்லை. அதற்குப் பிறகு நடந்தவையெல்லாம் புதிதாக, எங்கள் கடந்தகாலத்திலிருந்து துண்டிக்கப்பட்டதாக இருந்திருக்கின்றன. எங்கே ஆரம்பித்தோம் என்று தெரியாமலேயே குழம்பிக்கிடந்தோம் என்கிறபோது அது மாதிரியான முடிவுக்குத்தான் என்னால் வரமுடிகிறது. நவீன விஞ்ஞானத்தில் இதெல்லாங்கூட சாத்தியமா? கணவன் மனைவிக்குள் பிரச்சினையென்றால், ஆறுமாதம் டாக்டர் சோ அன்ட் சோவின் கிளினிக்கில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் எல்லாம் முடிந்தது. மீண்டும் கைகோர்த்துக்கொண்டு, புன்னகைத்துக்கொண்டு, ஆசைதீர தழுவிக்கொண்டு கிளினிக்கிலிருந்து வெளியில் வரலாம் என்கிறார்கள். காரணங்கள் வேண்டாம், குடும்ப நீதிமன்றம் வேண்டாம் வக்கீல்கள் வேண்டாம். எந்த ஜீனில் என்ன கோபம், ஏன் கோபம் அதை மட்டும் மாற்றினால் போதுமாம். அப்படித்தான் நானுமா? சுத்தம் செய்யப்பட்டு, இருத்தலின் அழுக்கின்றி ஆங்காங்கே கிரீஸ்போடப்பட்டு பிரச்சினைகொடுக்காமல் உறவை நடத்தவேண்டுமில்லையா?… இருக்கலாம் எனக்கு விஞ்ஞானம் போதாது எனக்குத் தெரிந்தவர்களெல்லாம் ஆடம்ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ, கேய்ன்ஸ்… எங்கள் இருவருக்கும் பொதுவாக கடந்தகாலமென்று இருந்திருக்கிறது. அவை குளிர்கால பனிமூட்டத்திற்குள் ஒளிந்துகிடக்கும் ஊர்போல, மனிதர்கள்போல, வீதிகள்போல, நாய்கள்போல.

எத்தனை மணிக்கு உறங்கினேனென தெரியாது காலையில் விழித்தபோது சோபாவிலேக் கிடந்தேன். நினைவு வந்தவளாய் தலையை உயர்த்தி சுவர் கடிகாரத்தைப் பார்த்தேன். 8.30. வீட்டிலுள்ள எந்திரங்களின் இயக்கம், வேணு இல்லாததால் தடைபடாதெனில், மாடியில் கதவு அநேகமாகத் திறந்திருக்கும். வேணுவின் வழக்கமான பதட்டம் இப்போது என்னிடம் தொற்றிக்கொண்டது. படிகளைப்பிடித்து மாடிக்கு வந்தேன், எதிர்பார்த்ததுபோல கதவு திறந்திருந்தது. விலங்குக் கூண்டினைபோன்ற அந்த சிறைக்குள் நுழைய என்னவோபோலிருக்கிறது. மேசைக்குமேல் கிடக்கிற உறைதான் அவன் சொன்ன கடிதமோ. அந்நியர் வீட்டில் நுழைவதுப்பொன்ற அனுபவம். யாரோ கட்டளை இடுவதுபோன்ற பிரமை. ம் .. உனக்கில்லாத உரிமையா நடக்கிறேன். உறையை எடுத்ததும், கிழித்ததும், கடிதத்தைப் பிரித்ததும் வாசித்ததும் அடுத்தடுத்து நிகழ்ந்தன…

அன்புள்ள அனு,

இக்கடிதத்தை படிக்கிற வாய்ப்பு உனக்கு கிடக்காமலேகூட போகலாம். கிடைத்தால் நீ அதிர்ஷ்டம் செய்தவள். ஒவ்வொரு நாளும் சிறையில் என்னை அடைத்துக்கொண்டதென்பது நீ ஊகித்திருக்க முடியுமானால் சிறைவாசம். இத்திட்டம் பரவலாகப்படவில்லை. ஆரம்பக்கட்ட பரிசோதனைமுயற்சி: குற்றவாளிக்குத் தண்டனையும் உண்டு, சுதந்திரமுமுண்டு ஆனால் தண்டனைக்காலம் இரட்டிப்பாக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு சிறை பராமரிப்புச் செலவுகள் மிச்சம். பெயரென்ன தெரியுமா ஊழ்வினைத் திட்டம். ஊழ்வினைக்கு கண்கள் பெரியவை. மிக உயரத்தில் இருக்கும் கண்கள் எத்தனை அடி உயரம்? அவசியமல்ல ஆனால் உலகமனைத்தையும் அத்தனை ஜீவராசிகளின் நடமாட்டங்களை கண்காணிக்கப் போதுமான உயரம். பாரிய வீச்சுகொண்டவை. நமது பலமென்ன பலவீனமென்ன, குறைகளென்ன, நிறைகளென்ன எல்லாவற்றையும் மிக சுலபமாய்க் கண்காணிக்கிறது. காவல் துறையோ, முதல் தகவல் அறிக்கையோ, குற்றவழக்கு தண்டனை சட்டங்களின் உதவியோ இன்றி மிக துல்லியமாக அளந்து குற்றங்களுக்கேற்ற தண்டனையை ஊழ்வினைத்சட்டத்தின்படி வழங்க முடிகிறது. ஆனால் கடந்தகால சிறைவாசமே பரவாயில்லை என நினைக்கத் தோன்றுகிறது. ஊழ்வினையில் தண்டனைக்காலத்தில் செய்த குற்றம், சம்பவத்தின் முமு விவரணையுடன் தத்ரூபமாக தொடர்ந்து திரையிடப்படுவதும் அதைக் குற்றவாளி பார்க்கவேண்டுமென்பதும் கொடுமை. ஊழ்வினை தண்டனையில் வேறொரு சிக்கலும் இருக்கிறது. தண்டனையை உரிய காலத்தில் அனுபவித்து முடிக்கவேண்டும். தவறினால், பிறவிகள் தோறும் தண்டனை தொடரும் என்கிறார்கள். இவைகளெல்லாம்கூட பரவாயில்லை அனு, யாரைக் கொலைசெய்தேனோ அவளுடனேயே மீண்டும் நான் தண்டனையை அனுபவித்தாகவேண்டுமென்று ஊழ்வினை விதிகள் வற்புறுத்துகின்றன. அரசாங்கத்தின் ஊழ்வினை தண்டனை பரிசோதனைமுயற்சிக்கு என்னைத் தேர்வுசெய்ததது எதற்கென்று புரியவில்லை. எனக்கு அலுத்துவிட்டது. ஒவ்வொருமுறையும் ஏதேனும் குளறுபடிகள் நடந்து எனது தண்டனைக்காலம் கூடிக்கொண்டுபோகிறதே அன்றி குறைந்ததாக இல்லை…..

கையிலிருந்த கடித உறையிலிருந்து நான்கைந்து நிழற்படங்கள் கீழே விழுந்தன. எல்லாவற்றிலும் வேணு இருந்தான். அவனுடன் சிரித்துக்கொண்டும் அணைத்துக்கொண்டும், முத்தமிட்டபடியும் இருந்தப் பெண்ணை இதற்கு முன்பும் எங்கோ பார்த்திருக்கிறேன்..

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா