உறவெனும் விலங்கு

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

சத்தி சக்திதாசன்


திரும்பத் திரும்ப கழுத்தில் டையை அணிய முயற்சித்துக் கொண்டிருந்தான் சுந்தரேசன் . அருகே கட்டிலில் படுத்து குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த சரோஜாவைப் பார்க்க பார்க்க அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.

இன்னும் 10 நிமிடத்தில் புறப்பட்டால் தான் 7 மணி ட்ரெயினைப் பிடிக்க முடியும் , இன்றைக்கு சரியாக ஒன்பது மணிக்கு அவன் ஒரு கஸ்டமரைச் சந்திக்க வேண்டி இருந்தது , லேட்டாகப் போனால் மனேஜர் ‘போல் ‘ கத்துவான். நேற்றிரவே இதைப்பற்றிச் சரோஜாவிடம் சொல்லி இருந்தான் .

அவள் இதைப்பற்றிச் சிறிதும் அக்கறை கொள்ளாமல் குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள் , இப்போ எழுப்பினால் எரிந்து விழுவாள் . காப்பி சாப்பிடாமல் ஆபீசுக்கு போனால் என்ன என்று எண்ணியவாறு , தனது ப்ரீவ் கேசை எடுத்துக் கொண்டு ‘ சரோஜா நான் வேலைக்கு போயிட்டு வாறேன் ‘ என்று சத்தமாய்ச் சொன்னான் .

அவளோ மெதுவாக ‘ம் ‘ என்று சொல்லியவாறே புரண்டு படுத்தாள்.

கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவனின் முகத்தில் சில்லென்று குளிர் காற்று அடித்தது , அப்போ

நவம்பர் மாதமாகையால் சமர் வெளியேறிக் கொண்டு , விண்டர் மெதுவாக பின்கதவால் உள்ளே நுழைந்து கொண்டு இருந்தது.

‘சீ என்ன வாழ்க்கையிது , ஒரே எந்திர வாழ்க்கை.நாய் மாதிரி உழைக்கிரன் எங்க இந்த சரோஜாவுக்கு

விளங்குது ‘ என்று மனத்துக்குள் அலுத்துக் கொண்டவன் , அவசரமாக ஸ்டேசனை நோக்கி நடந்தான். அந்தக் காலை வேளையிலும் புற்றீசல்களைப் போல பல மனிதர்கள் ஸ்டேசன் எனும் அந்த மையப்பகுதியை நோக்கி

நடந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களில் ஆண்களைப் பார்த்து ‘ இவங்களுக்கு என்ன கவலை என்னைப் போல ஒரு சோம்பேறி மனிசியிட்டை மாட்டியிருக்கிறாங்களே ? ‘ எனவும் துள்ளித் துள்ளி நடக்கும் பெண்களைக் கண்டதும் ‘ இவளிண்ட புருசன் எவ்வளவு லக்கியாய் இருக்கவெணும் , உழைக்கிற பெண்டாட்டி கிடச்சிருக்கு ‘ எனவும் எண்ணினான்.

ட்ரெயின் அவனையும் கனமான அவனது இதயத்தையும் சுமந்து கொண்டு லண்டன் பிரிட்ஜ் நோக்கி விரைந்தது.

ஸ்டேசனில் இறங்கி விரைவாக நடந்து ஆபிசுக்குள் நுழைந்தான் , நுழையும் போதே மெதுவாகப் போலின் ஆபிசை எட்டிப் பார்த்தான். அது பூட்டியே இருந்தது . ‘அப்பாடா ‘ என்று பெருமூச்சு விட்டான்.

ஒருவாறு கஸ்டமர் மீட்டிங் முடிந்து வந்து தனது கதிரையில் தொப்பென விழுந்தான் ‘ யுயர் வைஃ ராங் டுவஸ் ‘ (உன்னுடைய மனைவி இருமுறை போன் செய்தாள்) என்றான் பக்கத்து மேசையிலிருக்கும் ஸ்டாவ் .அவன் சொல்லி முடியவும் டெலிபோன் அடிக்கவும் சரியாக இருந்தது.

‘ஹலோ ‘ என்றான் சுந்தரேசன்

‘ நான் தான் , என்ன காலம்பற சொல்லாமக் கொள்ளாம ஓடிட்டிங்க ? ‘ என்றாள் சரோஜா

‘ கூப்பிடேக்க எழும்பினாத்தானே , சரி அதைப்பற்றி இப்ப என்ன இஞ்ச பக்கத்தில ஸ்டாவ் இருக்கிறான் , நான் பேந்து கதைக்கிறன் ‘ என்றான் சுந்தரேசன்

‘ என்ன உடன எரிஞ்சு விழத் தொடங்கீட்டிங்க , நான் தங்கச்சி வீட்ட போயிட்டு ஈவினிங் தான் வருவன் , காருக்குப் பெற்றோல் இருக்கே ? ‘ என்றாள் சரோஜா

‘ கட்டாயம் போக வேணுமே ? கொஞ்சம் பெற்றோலை மிச்சம் பிடிச்ச அடுத்த கிழமை மட்டும் இழுத்திடலாம் ‘ என்றான் சுந்தரேசன் தயங்கியவாறே

‘ நான் எங்கையும் போறதெண்டாத்தான் உங்களுக்கு வீண் சிலவு , நீங்க உங்கட தங்கச்சியைப் பாக்கப் போகேக்க கார் என்ன தண்ணியிலேயே ஓடுது ? ‘ என்றாள் சரோஜா

‘ சரி சரி என்ன என்டாலும் செய் ‘ என்று சொல்லி விட்டு போனை வைத்தான் சுந்தரேசன்.

அவனுக்கு சரோஜாவை நினைக்க கோபப்படுவதா இல்லை பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை . திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. அவளைப் பெண்பார்த்து திருமணமாகமுன் இருவரும் அடிக்கடி சந்திப்பது வழக்கம். அப்போதெல்லாம் ‘ கெதியா நல்ல ஒரு வீடு வாங்க வேணும் , நானும் படிச்சிருக்கிறன் தானே , உடன ஒரு வேலை எடுத்து உங்களுக்கு உதவியா இருப்பன் ‘ என்ரு சொல்லிக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிய சரோஜாவா இப்படி மாறினாள் . திருமணமாகி நான்கு வருடத்தில் ஒருநாள் கூட வேலை செய்தவளில்லை , சுந்தரேசனும் சரி பாவம் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவள் என்று விட்டுவிட்டான்.

அதன் பின்பு மனைவியின் ஆசையை வாழவைக்க கஸ்டப்பட்டு ஒரு நல்ல வீட்டை வாங்கினான் , அதர்கு பிறகாவது வேலைக்குப் போவாள் என்று பார்த்தால் ,அவள் அசையவேயில்லை . காண்பவர்களிடம் எல்லாம் ‘ இவர் என்னை வேலைக்கு போக விட்டாத்தானே ? ‘ என்று வேறு அங்கலாய்த்துக் கொள்வாள் . சுந்தரேசனும் மனதுக்குள் சிரித்துக் கொள்வதோடு சரி.

‘இனி அங்க தங்கச்சீட்டைப் போறாள் , அவவும் , புருசனும் சரோஜாவுக்கு நல்லா ஏத்தி விடுவினம் ‘ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான் . சரோஜாவின் அப்பாவும் அம்மாவும் லெஸ்டரில் இருந்தார்கள், அளின் அப்பா மட்டும் அவளுக்கு காண்கிற போதெல்லாம் புத்தி சொல்லுவார் ஆனால் அம்மாவோ ‘ என்ன உமக்கு என்னைப் படுத்தினது போதாதே இப்ப அவளையும் கஸ்டப்படச் சொல்லுறீரே ? ‘ என்று அடக்கி விடுவாள்.

அத்துடன் அவள் அப்பா அடங்கி விடுவார் . அவள் சகோதரி வனஜா இருக்கிறாளே ! அவளைப் பற்றி நினக்க சுந்தரேசனுக்கு தலையெல்லாம் ஜிவு ஜிவு என்று ஏறியது .

சுந்தரேசன் – சரோஜா திருமணத்திற்கு 6 மாதங்களுக்கு முன்னரே வனஜா , கஜனைக் காதல் திருமணம் புரிந்து கொண்டாள் . எந்நேரமும் கஜன் தன்னை எப்படி அன்பாகப் பார்த்துக் கொள்கிறான் என்று கதை அளப்பதுவே அவள் தொழில். காதல் திருமணம் என்றாலே திருமணத்திற்குப் பின்னர் எப்போதும் சொர்க்கம் தான் என்று அறிவிலித்தனமாக எண்ணிக் கொண்டிருந்த சரோஜாவிற்கு எப்போதும் சுந்தரேசனை , கஜனுடன் ஒப்பிடுவதுதான் வேலை.

சரோஜாவின் அம்மாவும் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல ஒத்து ஊதி விடுவாள் . வனஜா இரண்டு வருடத்தில் ஒரு ஆண்குழந்தை பெற்றுக்கொண்டாள் . சரோஜாவின் அம்மாவுக்கு அது வேறு தொக்காகப் போய்விட்டது . எப்போ எடுத்தாலும் சுந்தரேசனுக்கு முன்னால் அதைக் குத்திக் காட்டுவாள்.

‘ஜ காவ் அ கோல் பார் யூ ‘ (உனக்கு ஒரு கால் வந்திருக்கு) என்ற ஸ்டாவின் குரல் கேட்டு திடுக்கிட்டவன்

போல ‘ சாரி , ப்ளீஸ் பாஸ் த கோல் ‘ ( மன்னிக்கவும் , தயவ்ய் செய்து காலைப் பாஸ் பண்ணு) என்றவாறு டெலிபோன் காலை ஏற்றுக் கொண்டான் .

தீடிரென தங்கை மீனாவின் யோசனை வந்தது , அவளுக்கு வேறுவிதமான குறை அதாவது தனக்கு கொடுத்த

சீதனம் , குறைந்த அளவு என்ரும் அது தனக்கு கெளரவக் குறைவு என்றும் , பாவம் அவள் மாப்பிள்ளை குமாரோ தங்கமானவன் அவன் மீனாவைக் கண்டிக்காத நாட்களேயில்லை , ஆனாலும் மீனவுக்கு இது ஏதோ வியாதி மாதிரி காணும் போதெல்லாம் பிதற்றிக் கொண்டிருப்பாள் .

சுந்தரேசனுக்கு தங்கை மீனா மட்டும் தான் , அம்மா யாழ்ப்பாணத்தில் , சரோஜாவை மணம் முடிப்பதர்கு முன்னதாகவே மீனாவை லண்டனுக்கு தன்னுடன் கூப்பிட்டுக் கொண்டான் . அப்பா காலமாகி 6 வருடங்கள் ஆகிவிட்டது , நடுத்தரவர்க்கங்களின் முத்திரையான ‘ஹார்ட் அட்டாக் ‘ அவனது அப்பாவை ஒரேயடியாக முடித்து விட்டது..

சரோஜாவை அம்மா மணம் பேசி கடிதம் எழுதிய போது ‘மீனாவுக்கு கலியாணம் பண்ணாமல்… ‘ என்று தயங்கினான் சுந்தரேசன் ஆனால் அவன் அம்மாவோ ‘ சரோஜா நல்ல குடும்பத்துப் பிள்ளை , உனக்கு ஒத்தாசையா இருந்து உன்ட தங்கச்சீன்ட கலியாணத்தை முடிப்பாள் , நல்லாப்படிச்சவ ‘ என்றெல்லாம் கூறி அவனைச் சம்மதிக்க வைத்து விட்டாள்.

கலியாணத்தின் போது சரோஜாவும் நல்லா அன்பாகத்தான் மீனாவோடு பழகினாள் , பின்பு வழமையான பிக்கல்,புடுங்கல் சுந்தரேசன் பார்த்தான் இனியும் மீனாவை வீட்டோட வைச்சிருக்கக் கூடாது என்று பாங்கில லோனைப் போட்டு ஒரு மதிரி குமாரைப் பேசி மீனாவைக் கட்டிக் குடுத்திட்டான்.

அன்றிலிருந்து சரோஜாவும் எதற்கெடுத்தாலும் ‘ உங்கட தங்கச்சிக்கெண்டா எல்லாம் செய்வியள் , நான் அப்பிடியே , எங்கேயோயிருந்து வந்தவ தானே ? ‘ என்று முற்ரிலும் மாறுபட்டவளாகி விட்டாள்.

சுந்தரேசனும் இனி என்ன செய்வது என்று சரோஜாவின் பக்க நியாயத்தையும் ஒருவாறு ஏற்கப் பழகியிருந்தான். ஆனாலும் சமயங்களில் அவனையும் மீறி அவனுக்கு அவள் நடப்பதைப் பார்த்து ஒரே விரக்தியாகப் போய்விடும்.

‘ஆர் யு கோயிங் பார் லஞ்ச் ‘ என்று அடுத்த செக்சனில் வேலை செய்யும் எலிசபெத் கேட்ட போது நிமிர்ந்தவன் ‘யெஸ் லெட்ஸ் கோ ‘ என்றவாறு அவளுடன் காண்டானை நோக்கி நடந்தான்.

இந்தக் கம்பெனியில் அவன் வேலைக்குச் சேர்ந்து 18 மாதங்களே ஆகிறது , பலருடனும் அவன் நட்புடன் பழகினாலும் , ஏனோ எலிசபெத்துடன் மட்டும் ஒரு நெருக்கமான நட்புக் கொண்டிருந்தான்,சமயங்களில் சரோஜாவின் மீது விரக்தியடையும் போது மனம் திறந்து எலிசபெத்துடன் பேசுவான் . அவளும் ஒரு உற்ற நண்பனுக்கு அறிவுரைபோல் ஆறுதல் கூறுவாள் .

எலிசபெத்தின் அப்பா ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் , அம்மா ஆங்கிலேயப்பெண்மணி இந்தக் கலப்பினால் ஸ்பெனியின் நாட்டவருக்குரிய கருங்கூந்தலையும் , கரு விழிகளையும் ஆங்கிலேயப் பெண்களின் கூர்மையான அங்கங்களையும் கொண்டிருந்தாள் . அவளைக் கவர்ச்சிகரமான பெண் என்றுதான் கூறவேண்டும்.

அவள் ஏற்கனவே திருமணமானவள் , கணவனின் போக்குப் பிடிக்காததால் விவாகரத்து பண்ணி விட்டாள். இது நடந்தது சுந்தரேசன் அங்கே வேலைக்கு ஜாய்ன் பண்ண 6 மாதத்திற்கு முன்னர் என்று சொல்லியிருந்தாள்.

அவர்கள் இருவரும் தமது வாழ்க்கையின் இக்கட்டான சூழலைப் பற் அடிக்கடி கண்டானில் அமர்ந்து பேசுவதுண்டு . சில சமயங்களில் ஆபிஸில் அவனது டாம் , பப்புக்குப் (Bar) போகும்போது அவனும் போவதுண்டு அங்கும் அவனும் எலிசபெத்தும் தான் ஒன்றாகப் பேசுவதுண்டு.

கண்டானில் பேசிக்கொண்டிருக்கும் போது ‘ சுந்தர் , ஷால் வீ கோ பார் எ ட்ரிங்க் திஸ் ஈவினிங் ? ‘ ( இன்று மாலை பாருக்குப் போகலாமா ? ) என்று கேட்டாள், ‘ சாரி லிஸ் ஜ ஹாவ் டு கொ ஹோம் ‘ (மன்னித்து விடு நான் வீடு செல்ல வேண்டும்) என்றான் சுந்தரேசன் . ‘ யூ மஸ்ட் பீ ஸ்கெயார்ட் ஒவ் யுயர் வைஃ ‘ (உன்னுடைய மனைவிக்கு நீ பயப்பிடுகிறாய்) என்றவாறே கடகடவெனச் சிரித்தாள் எலிசபெத் , ஒருகணம் அந்தக் கள்ளம் கபடமற்ற சிரிப்பில் தன்னை மறந்தான் சுந்தரேசன். வெண்கலங்களை உருட்டி விட்டாற்போல கணீரென்ற ஒலி அவன் காதுளுக்குள் இனித்தது.

களைத்து விழுந்து வீட்டுக்குள் நுழைந்தான் சுந்தரேசன் , வீடு முழுவது மின்சார விளக்குகள் பளிச்சிட்டுக் கொண்டு இருந்தது . ஹாலில் டா.வி அலறிக்கொண்டிருந்தது . சரோஜா உட்கார்ந்து ஒரு ஆங்கிலப் புரோகிராம் பார்த்துக் கொண்டிருந்தாள் . அவள் இருந்த மாதிரியைப் பார்க்கும் போதே , தனக்கு காப்பி கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்து கொண்டான் .

இவ்வளவு கால தாம்பத்தியத்தில் ஒன்று மட்டும் அவனுக்கு நன்றாகவே தெரிந்தது எப்போது அவளை அணுகக் கூடாது என்பது . அந்த நேரங்களில் அவளுடன் வீண் தர்க்கங்கள் வேண்டாமே என்று ஒதுங்கிக் கொள்ள பழகிக் கொண்டான் . சிலசமயங்களில் இது என்ன இப்படி ஒரு வாழ்க்கையா ? என்றும் எண்ணம் வரும் பின்பு சமாளித்துக் கொள்வான்.

‘ என்ன சரோஜா வீடெல்லாம் தீபாவளி மாதிரி லைட்டைப் போட்டு விட்டுட்டு , ஹாலில் இருக்கிறீர் ? தேவையில்லாத லைட்டை ஓவ் பண்ணிணால் கொஞ்சம் காசு மிச்சம் தானே ? ‘ என்றான் சுந்தரேசன்

‘ வந்தவுடனே தொடங்கீட்டார் , கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விட மாட்டியளே ? ‘ சரோஜாவின் குரல் உயர்ந்தது.

ஹாலுக்குள் நுழைந்தவன் ‘ தமிழ் டா.வீ வேணும் வெணும் எண்டி பிடிச்ச பிடால நிண்டு எடுத்தீர் , இப்ப இங்கிலிஸ் புரோகிராம் பார்க்கிறீர் , நீரும் என்னவோ எப்படியெண்டாலும் இந்த மனுசன் உழைக்கிற காசை அழிச்சுப் போடோணும் என்டு பந்தயம் பிடிச்ச மாதிரி நடக்கிறீர் ‘ என்ற சுந்தரேசனை இடை மறிச்சு

‘ இஞ்சை ஏதோ மற்ற வீடுகளில மனுசர் செய்யாததை , செய்த மாதிரி குதிக்கிறீர் ,அங்க மீனாண்ட மனுசன் உம்மை விட குறைய உழைச்சுக்கொண்டு என்ன அன்பாப் பார்க்கிறார் மீனாவை, எனக்குக் குடுத்து வைச்சது இவ்வளவு தான் ‘ என்றாள் சரோஜா

‘எதுக்கெடுத்தாலும் மீனாவை உதாரணத்துக்கு எடுக்கிறீர் , என்ட பிரண்ட் ரமேசிண்ட மனுசியைப் பாரும் கிழமேயில ஆறுநாளும் வேலை செய்து அவனுக்கு எப்பிடி கெல்ப் பண்றா என்டு ‘ இழுத்தான் சுந்தரேசன்

‘ இஞ்சை பாரும் சும்மா அது இது எண்டு என்னைப் போட்டு டிஸ்டேர்ப் பண்னாதையும் , அப்பிடியெண்டா நீர் அப்பிடிப்பட்ட பொம்பிளையைப் பாத்துக் கட்டியிருக்கலாமே ? ‘ திரும்பவும் உச்ச ஸ்தாயியில் சரோஜா

அவளை அப்படியே அசையாமல் பார்த்த சுந்தரேசன் பலமாகச் சிரித்தபடி சென்று கட்டிலில் விழுந்தான்.அண்ணாந்து கூரையைப் பார்த்தபடி இருந்தவன் மனதில் , தன்னுடைய வாழ்க்கையை எண்ணி வேதனை மிகுந்தது . அவன் அம்மாவுக்கு அவன் படும் பாடு தெரிந்தால் பாவம் இந்தத் தள்ளாத வயதில் தனியாக இருக்குமவள் மனம் என்ன பாடுபடும் என்று எண்னும் போது அவன் கண்கள் கலங்கியது.

உடைகளை மாற்றிக் கொண்டு எழுந்து சென்று சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது என்று பார்த்தான் , பின்பு ‘சரோஜா சாப்பிட என்ன இருக்கு ‘ என்று கேட்டான்.

ஹாலிலிருந்து ‘ நான் மீனாவீட்ட சப்பிட்டுட்டு வந்திட்டான் , நேத்தையான் சாப்பாடு பிரிட்ஜில இருக்கு , சாப்பிட வேண்டியது தானே அதுக்கும் நான் வரவேணுமே ? ‘ மீண்டும் அலறல்

பேசாம இருந்ததைச் சாப்பிட்டு விட்டு போய் கண்களை மூடினான் , விழிகள் மூடியதே தவிர மனம் உறங்கவில்லை.அவனது மனதில் ‘பெண்களுக்குத் தாலி ஒரு வேலி ‘ என்ற வாசகம் நினைவுக்கு வந்தது. எனது வாழ்வில் தாலி என்று நான் அவளுக்குக் கொடுத்த பந்தம் தந்த உறவு என்னை விலங்காய்ப் பிணைத்துவிட்டதே என்று எண்ணி வெதும்பியபடியே கண்ணயர்ந்து விட்டான்.

அடுத்த நாள் ஆபிஸில் அமர்ந்து கொண்டிருந்தவனின் மனம் இருப்புக் கொள்ளவில்லை . அன்றொருநாள் அவனது நண்பன் பாலனுடன் பேசிக் கொண்டிருந்தபோது ‘ மச்சான் அன்பில்லாத வாழ்வில் இருந்து கரைச்சல் படுறதை விட நாகரீகமாக வெள்ளையள் செய்யிற மாதிரி பேசாம சந்தோசமாப் பிரிஞ்சிடுறது எவ்வள்வு தேவையில்லை தெரியுமே ‘ என்ரு அவன் கூறியது ஏனோ ஞாபகத்திற்கு வந்தது .

திடாரென்று ஏதோ எண்ணியதைப் போல எழுந்து எலிசபெத்தின் மேசைக்கு வந்தான் ‘ லிஸ் ஷால் வீ கோ பார் தட் ட்ரிங்க் டுடே ? ‘ ( இன்றைக்கு பாருக்கு போவோமா ? ) என்று கேட்டான் ‘ ஓ சுந்தர் ! ஹூ இஸ் எ பிரேவ் போய் டுடே ? ‘ (யார் இன்று வீரமானவன் ?) என்று சிரித்தவள் ‘ ஒவ் கோர்ஸ் ஜ வில் என்யோய் இட் ‘ (ஆம் நான் அதை விரும்புகிறேன்) என்று கூறினாள்.

அப்போது நவம்பர் மாதமாகையால் 6 மணிக்கே இருட்டி விட்டது , சுந்தரேசனும் , எலிசபெத்தும் தம்மை மறந்து சிரித்துப் பேசிக் கொண்டே தேம்ஸ் நதிக்கு அருகே இருக்கும் பார் ஒன்றினுள் நுழைந்தார்கள் . மங்கலான வெளிச்சத்தில் அனைத்தும் ஒருவிதமான மயக்க நிலையில் காட்சியளித்தது.

சுந்தரேசன் இருவருக்கும் பியரை வாங்க்கி கொண்டு வந்ததும் இருவரும் ஒரு மூலையில் உள்ள வட்டமான மேசையில் அமர்ந்தனர். அடக்க மாட்டாதவனாக தன் மனதினுள் அடக்கி வைத்த வேதனையை அப்படியே கொட்டிவிட்டான் சுந்தரேசன். விழிகள் அசையாது கேட்டுக் கொண்டிருந்தாள் எலிசபெத் , அவன் ஒவ்வொரு முறையும் உணைர்ச்சிப் ப்ரவாகத்தோடு பேசும்போது அவளின் மெல்லிய புருவம் பல கொணங்கலெடுத்து முகம் வேதனையால் சுருங்கி விரிந்தது.

‘சே எங்கோ பிறந்தவளுக்கு இருக்கும் இரக்கம் என்னைக் கரம் பிடித்தவளுக்கு இல்லாமல் போய் விட்டதே ‘ என சுந்தரேசனின் மனம் இல்லாத இனிமைக்காக ஏங்கியது. ‘ சுந்தர் ஜ ரியலி பீல் சொரி பார் யூ , ஆஸ் எ ஹஸ்பண்ட் யூ ஆர் பீங் வொண்டர்புல் . இவ் ஜ வேர் யுயர் வைஃ , ஜ வுட் ட்ரெசர் யூ ‘ ( சுந்தர் நான் உனக்காக மிகவும் வருத்தப்படுகிறேன் , நீ கணவனாக ஆற்றும் கடமைகள் சிறப்பானவை , நான் உன் மனைவியாக இருந்திருந்தால் உன்னைப் போற்றியிருப்பேன்) என்றாள் எலிசபெத்.

அப்போது மூன்று கிளாஸ் பியரை உள்ளே தள்ளியிருந்தான் , ஏதோ எண்ணத்தில் ‘ லிஸ் , யூ லுக் எக்ஸ்ரீம்லி பியூட்டிபுல் டுடே ‘ ( நீ இன்று மிகவும் அழகாக இருக்கிறாய்) என்று சொன்னவன் நாக்கை கடித்துக் கொண்டான்.

‘இவ் யூ காட் அ சான்ஸ் டு சீ மீ பிபார் யூ மரீட் , வுட் யூ காவ் மரீட் மீ ‘ ( திருமணமாக முன்னால் என்னைப் பார்த்திருந்தால் என்னை மணமுடித்திருப்பாயா ? ‘ தூக்கிப் போட்டாள் எலிசபெத் . ஒருகணம் தடுமாறிய சுந்தரேசன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டவனாக ‘ வை நொட் ? ‘ (நிச்சயமாக) என்றான்.

இருவரும் சிரித்துக் கொண்டார்கள் . எலிசபெத்தின் கண்கள் அவன் கண்களை அப்படியே பொறித்தாற் போல் பார்த்தன .

கைக்கடியாரத்தைப் பார்த்தான் மணி பதினொன்றைக் காட்டியது ‘ ஓ லிஸ் இட் இஸ் கெட்டிங் லேட் , லெட்ஸ் கோ ‘ என்ரவனைத் தொடர்ந்து எலிசபெத்தும் வெளியே வந்தாள் . போகும் வழியிலே தனது கணவனை விவாகரத்து வண்ணிய பின்பு , சுந்தரேசனைச் சந்திக்கும் வரை ஆண்கள் என்றாலே சுயநலவாதிகள் என்ற எண்ணத்திலே தான் இருந்ததாகவும் , சமீபகாலமாகத்தான் தனக்கு தனிமை கொடுக்கும் துன்பம் தங்கொணாத ஒன்றாக இருப்பதாகவும் , எலிசபெத் சொல்லிக் கொண்டே வந்தாள்.

லண்டன் பிரிட்ஜ் ஸ்டேசனுக்குள் வந்ததும் இருவரும் வேறு வேறு பிளாட்பாரம் நோக்கிப் போக வேண்டி வந்ததால் , விடை சொல்லிக் கொள்ள ஒருவரை ஒருவர் நோக்கினார்கள் , அவர்களின் கண்கள் அகல மறுத்தன , எலிசபெத்தின் முகம் மெதுவாக அவனி நோகி வந்தது , அவள் அதரங்கள் அவன் அதரத்தில் பதியும் போது ‘ சாரி எலிசபெத் , ப்ளீஸ் எக்ஸியூஸ் மீ , சீ யூ ‘ என்று கூறிக்கொண்டே தனது பிளாட்பாரத்தை நோக்கி நடக்கத் துவங்கிய சுந்தரேசனை திகைத்தவளாய் பார்த்துக் கொண்டு நின்றாள் எலிசபெத்.

தள்ளாடியபடியே ட்ரெயினில் ஏறி உட்கார்ந்தவன் மனதில் ‘ சே என்ன காரியம் செய்யத் துணிஞ்சேன் ? ‘ என்று வெட்க உணர்வு தலை தூக்கியது . அப்போதுதான் அவனுக்கு தான் சரோஜாவின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்று தெரிந்தது . அவள் அறிவில்லாதவள் தான் , சோம்பேறிதான் ஆனாலும் என் மனைவி என்று அவன் மனம் கூறிக் கொண்டது.

வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் திகைத்து விட்டான் ! ஆம் மேல் வீட்டுக்குச் செல்லும் படியில் கண்களில் கண்ணீர் வழிய இருந்த சரோஜா ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள் . ‘ நீர் வெளியில பிரண்ட்ஸோட போறதெண்டாச் சொல்லிப்போட்டுப் போயிருக்கலாமே ? நான் காணைல்லை எண்டு பயந்து கொண்ட்டெல்லே இருந்தனான் ‘ என்றவளை அணைத்தவாறே , அறைக்குள் அழைத்துச் சென்றவன்

‘என்ன சரோஜா ஏதாவது நடந்ததே , நீர் ஒரு நாளும் இல்லாத வழக்கமாய் நடக்கிறீர் ? ‘ என்றவனைப் பார்த்து

தேம்பியவாறே ‘ கஜனோட பிரண்ட் பிரகாஷைத் தெரியும் தானே , அவனோட நான் சிலவேளைஉம்மோட ஏதும் பிரச்சனை எண்டால் கதைக்கிறனான் , ஆனா அவன் … ‘ என்றவள் பேசமுடியாமல் தேம்பித் தேம்பி அழுது விட்டு பின் ஒரு மாதிரியாக ‘ உனக்கு உண்ட புருசனோட சந்தோஷம் இல்லாட்ட நாங்கள் சந்தோசமா இருக்கிறதில பிழையில்லை எண்டு சொல்லிக் கையை பிடிச்சுப் போட்டான், நான் அவனை அடிச்சுப் போட்டு ஓடி வந்திட்டன்,

ஏதோ உம்மோட பிரச்சனை எண்டால் அது எல்லாக் குடும்பத்திலையும் இருக்குத்தானே , அதுக்காக உம்மில அன்பில்ல எண்டி அர்த்தமே ? ‘ என்று ஏக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

மனதுக்குள் சிரித்த சுந்தரேசன் ‘ சரி விடும் , இதுதான் எல்லாரையும் கண்டவுடன நம்பக்கூடது எண்டி சொல்றனான் , பரவாயில்லை வாரும் படுப்பம் ‘ என்று சொல்லிக் கொண்டு கட்டிலில் விழுந்தான் . சிறுது நேரத்தில் ஒரு மிருதுவான கை அவன் மேல் இழுத்துப் போர்வையை மூடி விடும் உணர்வு ஏற்பட்டது.

இன்று அவன் விழிகள் மூடும் போது மனமும் உறங்கியது , ஏனோ அந்த உறவெனும் விலங்கு கொடுத்த சுமை இதமாகத்தான் இருந்தது.

—-

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்