பட்டமரம்

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்.


‘ ஏன் உமா ? ஒரே யோசனையா இருக்கே ? என்னாச்சு, இன்னிக்கும் ஒம்புள்ளயப்பார்க்கப் பள்ளிக்கூடத்துக்குப் போனியா ? ‘ அக்கறையுடன்

கேட்டாள் தோழி வசந்தி.

‘ ஆமா, வசந்தி, என்னப்பார்த்ததுமே ஓடி வரும் என் பிள்ளை, இன்னிக்கு அப்படிச்செய்யல. ஆறுவயசுப் புள்ளையோட மனசைக் கலச்சி வச்சிருக்காங்களா இல்லை அவன் உடம்பு தான் சரியில்லையான்னு தெரியல்ல. ‘

‘ …. ‘

‘எம்புருஷனுக்கும் மகன் மேல பாசம் இருக்குங்கிறது புரியுது. ஆனா, அவரு சரியான முடிவுக்கு வராததால விவாகரத்து முடிவாக மாட்ட்டேங்குது. பிளைய விட்டே கொடுக்கமாட்டேங்கறாரு. எத்தனையோ பேசிப்பார்த்தும் சரிப்படலே.!

‘ உமா, உன் புருஷன் இளமாறனுக்கும் சிறுவயசு தான். அதனால, அவங்க அம்மா அவருக்கு வேறு கல்யாணம் செஞ்சி வைப்பாங்கன்னு தான் நா நெனைக்கிறேன் ‘, என்றாள் வசந்தி.

‘ எனக்கு அதப்பத்தியெல்லாம் கவலையில்லப்பா. எனக்கு எம்பிள்ள வேணும் ‘, — உமா.

‘ சரி, பிள்ளைக்காக வருத்தப்படற நீ, ஏன் விவாகரத்த சீக்கிரமே முடிக்கநினைக்கற ? ‘

‘ நா அவசரப்படல வசந்தி. ஜஸ்டின் தான்ஜாவசரப்படறாரு. சீக்கிரமே ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றாரு. ‘

‘ என்ன செஞ்சாலும் நல்லா யோசிச்சுமுடிவெடு. அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு சொல்றத விட உனக்காக கொஞ்சம் யோசி. யோசிச்சு முடிவெடு. ‘தோழியின் மீதிருந்த அக்கறையில் வசந்தி கூறினாள்.

இருவரும் வேலைமுடித்து பேருந்து நிலையத்தை அடைந்தனர். என்னதான் தோழிகளானாலும் உமாவின் குறைகளை வெளிப்படையாகச்சுட்டிக்காட்டமுடியவில்லை வசந்தியால்.

முன்பு ஒருநாள் வசந்தி உமாவின் கணவன் இளமாறனைச் சந்தித்துப் பேச அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தாள். இளமாறன் அப்போது தன் தாயுடன் கோவிலுக்குப் போயிருந்தான். அவனின் தம்பி சுகுமார் மட்டுமே வீட்டில் இருந்தான். கோவிலுக்குச் சென்றவர்கள் திரும்பக் காத்திருக்கத் தீர்மானித்தாள் வசந்தி. பத்துநிமிடங்களில் வீடு திரும்பிய மகனும் தாயும் வசந்தி வந்திருந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டனர். அவளை அன்புடன் வரவேற்றார் உமாவின் மாமியார்.

தன் தோழிக்காக வக்காலத்து வாங்க வந்த விஷயத்தை மெதுவாகத் துவங்கினாள் வசந்தி. ‘ நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்து கார்த்திக்கை உமாவிடமே விட்டுக்கொடுப்பீங்கன்னு அவ ரொம்ப நம்பறா ‘, லேசான பீடிகையுடன் ஆரம்பித்தாள் வசந்தி.

‘கார்த்திக் பிறந்தப்பகூட இல்லாத கரிசனம் இப்ப வந்துட்டதா ? வேலை, படிப்பு , தன்னோட விருப்பு வெறுப்பு மட்டுமே முக்கியம்னு அவனக் கவனிக்காம இருந்தா. கொழந்தைக்கு நாலு வயசாறவரை வேலைக்குப்போக வேண்டாமென்று எவ்வளவு கெஞ்சியிருப்பேன் தெரியுமா, வசந்தி ? ‘ என்று தன் மனக்குமுறலை வெளியிட்டான் இளமாறன்.

‘ நீங்க சொல்றது நியாயம்னு நான் நினைக்கல்ல. உமாவுக்கு வீட்டுல இருக்கப் பிடிக்காது. அதனால அவளுக்குத் தன் மகன் மேல பாசமில்லன்னு சொல்லமுடியுமா ? ‘

‘ அவ எந்த வேலையிலயும் நிலையா நெலச்சுனிக்கல்ல. அவங்கப்பாம்மா கூட அவ மேல கோபமா இருக்காங்க. நிலையான வருமானம் இல்லாததேகூட அவளுக்கு எதிராத் தீர்ப்பு ஆகலாம். ‘

‘ தீர்ப்பு இருக்கட்டும். உங்க முடிவு என்ன ? ‘

‘ எனக்கு என் மகன் வேணும். அவன நான் முழுக்கவனத்தோட பார்த்துப்பேன். என் அம்மாவும் எனக்குத்துணையா இருக்காங்க. இருப்பாங்க. அவனுக்காகவே நான் மறுமணம் செய்துக்காம இருப்பேன். உமா அப்பிடியிருப்பாளா. அவளுக்கு மகனும் வேணும், மறுகல்யாணமும் வேணும்னு இல்ல நினைக்கிறா ‘

‘ நீங்க ரெண்டு பேரும் எதனால பிரிய முடிவெடுத்தீங்கன்னு எனக்கு முழுவிவரமும் தெரியாது. இருந்தாலும், அதப்பத்தி இப்பப்பேசவும் விரும்பல்ல. ‘

‘ நீங்க தெரிஞ்சுக்கறதும் நல்லது தான். என்னோட தம்பியோட நெருங்கிய நண்பன் தான் ஜஸ்டின். வீட்டுக்கு வரப்போக இருந்தவன் குடியயே கெடுப்பான்னு நாங்க கொஞ்சமும் நினைக்கல்ல. உமாவோட மனனிலையை புரிஞ்சிகிட்டு அவமனசுல இடம்பிடிச்சிட்டான். அவ சரியான ஆளத் தேர்ந்தெடுத்திருந்தாகூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன். தன்னைவிட நாலு வயசு இளையவனான, பக்குவமில்லாத பொறுப்பில்லாத ஒருத்தனத் தேர்ந்தெடுத்திருக்கா. அவளுக்கு எந்த வகையிலும் பொருத்தம் இல்லாதவன அவள் நம்பறது தான் மனசுக்கு வேதனையா இருக்கு. உமாவோட தம்பிகூட கார்த்திக் என்னோட இருக்கறது தான் கொழந்தைக்கு நல்லதுன்னு நினைக்கிறான்.பல விஷயங்கள் நடைமுறையில சாத்தியமேயில்லன்னு அவ புரிஞ்சிக்கவேயில்ல. அவளோட அம்மா அப்பாகூட எவ்வளவோ எடுத்துச்சொல்லிப் பார்த்துட்டாங்க. அவமட்டும் மனச மாத்திக்கறதா இல்ல. அதனாலதான் நான் முடிவா சொல்றேன் கார்த்திக்கை நான் தான் வளர்ப்பேன் ‘,திட்டவட்டமாகச்சொல்லிவிட்டான் இலமாறன் அன்று.

‘வசந்தி, ஏய் வசந்தி, எழுந்திரு. சிரங்கூன் வந்தாச்சு. எறங்கலாம் வா ‘, என்று கனவுலகில் இருந்தவளை அழைத்தாள் உமா.

இருவரும் இறங்கி நடந்தனர்.

‘உமா, ஜஸ்டின் ஏன் கல்யாணத்துக்கு அவசரப்படுத்தறாருன்னு சொன்னாரா ? கார்த்திக் உன்னோட இருக்கறதுல அவருக்கு விருப்பம்னு,….

நீ நினைக்கறயா ?

‘ ஜஸ்டினுக்குக் கார்த்திக் மேல ரொம்பப் பிரியம். ‘

‘ உமா, எனக்கு அவரப்பத்தி பெரிசாத் தெரியாது. வாழ்க்கையில அடிபட்ட உனக்கு இப்ப மனசுல தெம்பு கிடையாது. அதனால தான் அப்படிக்கேட்டேன். நீ ஜஸ்டினை சந்திச்சுப் பேசிட்டு வா. நா இப்படியே ‘சிம் லிம் டவர் ‘ வரைக்கும் போயிட்டு வரேன் ‘, என்று விடைபெற்றாள் வசந்தி.

ஜஸ்டினின் அலுவலகத்தின் கீழ் அவனுக்காகக் காத்திருந்தாள் உமா. எண்ண ஓட்டங்கள் குதிரை வேகத்தில்,…

இளமாறனுடனான பிரச்சனையில் தனக்கு ஏற்பட்ட மனப்போராட்டத்தில் ஆறுதல் அளித்தவன் ஜஸ்டின். மனப்புண்ணிற்கு மருந்திட்டவனும் அவனே.

உமா நட்பு என்றெண்ணிப் பழகியதை ஜஸ்டின் காதல் என்று நம்பி உமாவின்பால் ஈர்க்கப்பட்டு மனதில் உள்ளதைச் சொன்னான். உமாவும் தானும் அவனைக் காதலிப்பதாகவே நம்பினாள். அது காதலில்லை ஆதரவு என்பதை அவள் மனம் நம்ப மறுத்தது. குழம்பியிருந்த அவள் மனதிற்கு ஜஸ்டின் நல்லவனாகத் தோற்றமளித்தான்.

‘ சாரி, உமா. வரக்கொஞ்சம் லேட்டாயிட்டு. வா போகலாம். ‘ ஜஸ்டின் அழைக்கவே இருவரும் ஓர் உணவங்காடிக்குச் சென்றனர்.

‘ விவாகரத்து எப்போ ஆகும் உமா ? எனக்கும் வயசேறிக்கிட்டே போகுது. எங்கம்மா என் கல்யாணத்துக்கு அவசரப்படுத்தறாங்க. நீ தான் கொஞ்சம் விட்டுக் கொடேன். கார்த்திக் இளமாறனோடதான் இருக்கட்டுமே. ஒம்பையன நீ எப்பவேணாப்போய் பார்க்கலாம். கூட்டிகிட்டு வரலாம். ‘

‘…. ‘

‘ எனக்கு எங்க சொந்தத்துல வேற பெத்துவச்சிகிட்டு நான் நீன்னு எங்கம்மா மனசக் கலைக்கவே நிறையபேர் காத்துகிட்டிருக்காங்க. இன்னிக்கு தீர்மானமான முடிவா நீதான் சொல்லணும் உமா. ‘

‘ எனக்கு என் மகன விட மனசில்ல. உங்களை இழக்க தைரியமும் இல்ல. எனக்கு ரெண்டு நாள் டைம் குடுங்க ஜஸ்டின். ‘

‘ ஏன் உமா தள்ளிப் போட்டுகிட்டே போற. நீ மனசைப் போட்டு ரொம்ப குழப்பிக்கிறே. நீ இளமாறனுடன் பேசவேண்டாம். நானே அவனோட பேசி அதற்கான ஏற்பாடுகளச் செஞ்சிடறேன். என்ன, சரியா ? ‘ என்று செய்வதறியாது இருந்த உமாவின் கண்கலைப் பார்த்துக் கேள்விக்கணைகளைத் தொடுத்தான் ஜஸ்டின்.

‘ சரி, நீங்க சொல்லுங்க. நான் வரேன் ‘, என்றபடி கிளம்பிய உமாவின் மனதின் ஒரே நெருடல்.

எல்லாம் ஒரே வாரத்தில் முடிந்தது. பிள்ளையைத் தந்தையிடமே ஒப்படைப்பதாய்க் கையெழுத்திட்டுவிட்டு, விவாகரத்தையும் பெற்றுக்கொண்டு வந்தவள் ஒருவாரத்திற்கு யாருடனும் பேசவில்லை.

பிறகு வேலைக்குச் சென்றாள். ‘ என்ன கல்யாணத்துக்கு ஒரு மாசம் கூட இல்லை. ஆனா, ஒம்மொகத்துல ஒரு சந்தோஷமே இல்லை, ‘ என்று வசந்தி அக்கறையுடன் கேட்டாள்.

‘ என்னவோ தெரியல்ல வசந்தி. மூணுமாசமா உதிரப்போக்கு அதிகமா இருக்கு. உடல்ல ஒரு அசதி. தலையத்தூக்கக்க்கூட முடியாம ஒரு வலி ‘, தோழியிடம் தன் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொண்டாள்.

வலியும் உதிரப்போக்கும் கட்டுக்கடங்காமல் போக அடுத்தநாளே ‘டான் டோக் செங் ‘ மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டாள். மருத்துவர் பெரிய ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

அவளுக்கு அறுவைசிகிச்சை தேவை, அதுவும் உடனடியாகத் தேவை. கர்பப்பையை அகற்றாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்றும் சொல்லிவிட்டார். அறுவைசிகிச்சை நல்லபடியாய் முடிந்தும் விட்டது.

இளமாறன் ஒப்புக்காக ஒருமுறை வந்து பார்த்தான். ஜஸ்டின் முதல்நாள் ஒருமுறை வந்துபார்த்துச் சென்றவந்தான். பிறகு வரவேயில்லை. தொலைபேசியிலும் அழைத்துப் பேசாதது அவளுக்கு உறுத்தியது.

வசந்திக்கு ஓரளவு புரிந்தது. ஆனால், உமா இருந்தநிலையில் அவளை துக்கத்திலாழ்த்த அவள் விரும்பவில்லை. வீட்டிற்கு வந்த உமா, ஓய்விலிருந்தாள். ஜஸ்டின் தாயுடன் வந்தான். இருவரையும் கண்ட உமா மகிழ்ச்சிப்பூரிப்பில் பேசினாள்.

‘ வாங்க ஜஸ்டின், வாங்கம்மா. ‘

‘ எப்பிடியிருக்க உமா ? ‘ ஜஸ்டின் கேட்டான்.

‘ வேலக்கிப் போக ஆரம்பிச்சிட்டயா உமா ? ‘ ஜஸ்டினின் தாய் கேட்டார்.

‘ நல்லா இருக்கேன். வேலைக்குப் போகல்ல. வேற வேலைதேடிக்கிட்டிருக்கேன் ‘

‘ உமா, உனக்குப் புரியாததில்ல. ஒவ்வொரு தாயும் தன் மகனுக்கு கல்யாணம் செஞ்சி வச்சிப் பேரனையோ பேர்த்தியையோ பார்க்கத் தான் ஆசைப் படுவாங். ஜஸ்டின் உன்னத் தான் கட்டிக்குவேன்னு ஒத்தக்கால்ல நின்னு சொன்னப்போ நான் மறக்கல்ல. நேத்திவரைக்கும் அவனோட ஆசைக்குக் குறுக்க வர நினைக்கல்ல.,… இப்பதான் அரைமனசோட எங்கண்ணன் மகளக் கட்டிக்க சம்மதிச்சிருக்கான் ‘, என்று சமாதானப்படுத்தும் சாக்கில் மெள்ள செய்தியை அவிழ்த்தாள் அந்தம்மாள்.

‘ உமா எனக்கு வேற வழிதெரியல்ல. நீ என்ன மன்னிச்சிடு. என் கல்யாணத்துக்கு நீ அவசியம் வந்திடணும் ‘, என்றபடி பத்திரிக்கையை நீட்டினான் ஜஸ்டின்.

மெளனமாய் வாங்கிக்கொண்டு அவர்களை வழியனுப்பினாள் உமா. வேறு என்னதான் செய்யமுடியும் ?!

‘ என்ன கொடுமை உமா எனும் இயந்திரம் பழுதாகிப் பிள்ளை பெற முடியாதுபோனதால் அந்தை நிராகரித்து வேறு ஒரு இயந்திரத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டனர்! ‘

திருமணம் முடிந்தபிறகு இவ்வாறு நடந்திருந்தால்,..

நல்லவேளை திருமணத்திற்கு முன்பே நடந்தது. அதுவே அவளுக்கு நல்லது.மனிதர்களின் மனங்களை அறியமுடிந்தது. மணம் முடிந்து நடந்திருந்தால், நரகமாவல்லவா ஆகியிருக்கும்.

வசந்திக்குத் தான் மனம் ஆறவில்லை. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டகதியாகிவிட்டதே தோழியின் நிலை. அவனை நம்பிப் பிள்ளையையுமல்லவா விட்டுக்கொடுத்துவிட்டுப் பட்டமரமாய் நிற்கிறாள் உமா. நினைத்துநினைத்துக் குமைகிறாள் வசந்தி.

—- ( முற்றும்)—- ‘சிங்கை எக்ஸ்பிரஸ் ‘ 1997 டிசம்பர் 1-15

—-

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்