பிச்சிப்பூ

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

புதியமாதவி


அவள் எழுதிக்கொண்டே இருந்தாள்.

பக்கம் பக்கமாக.

எல்லாவற்றையும் எழுதுவாள்.

சிரித்ததை அழுததை சண்டைப் போட்டதை.. குறைந்தது பத்துக் கேள்விகள்

அவள் கடிதத்தில் இருக்கும்.

அவளுக்கென்ன வேலை வெட்டி இல்லாதவள்.

நினைத்த நேரத்தில் உட்கார்ந்து எழுதிவிட முடியும்.

என்னைப் போல அலுவல், மீட்டிங், தொழிற்சங்கம், அரசியல் என்று

ஆயிரம் வேலைகள் அவளுக்கு இல்லை.

அதனால் தான் அவள் எழுதிக் கொண்டே இருந்தாள்.

சில சமயம் எரிச்சல் வரும் அவளின் குழந்தைதனமானக் கேள்விகளால்.

சில சமயம் கோபம் வரும் அவள் புரிந்தும் புரியாமல் கேள்விகேட்பதால்.

சில சமயம் குழப்பமாய் இருக்கும் இதை ஏன் அவள் எனக்கு எழுத

வேண்டும் என்று.

சில சமயம் சின்னதாக ஒரு பூ பூக்கும்.. சின்ன பிச்சிப்பூ மொட்டுவிரியும்போது

அந்தச் சன்னல் வழியாக வீசும் காற்றில் மணம் கலந்து உடல் தழுவும்போது

சிலிர்க்குமே அப்படி சின்னச் சின்ன செயல்களில் அவள் அன்பு

மொட்டவிழும். அப்போதெல்லாம் ஒடிப்போய் அவளைப் பார்க்க வேண்டும்

என்று உள்ளம் பரபரக்கும்.

‘என்னடா ‘ என்று அவள் கைப்பிடித்து கல் பெஞ்சில் அமர்ந்து கதைப் பேச

வேண்டும் போலிருக்கும்.

அதை வெளியில் அவளிடம் காட்டிக்கொள்ள நினைக்கும்போதெல்லாம்

‘சரிதான் அவள் சரியான அரைலூஸு ‘ என்று மனசு சாவியாகி

பூட்டி வைத்துவிடும்.

அவள் எவ்வளவு இறங்கி வந்தாலும் ‘என் வாழ்வில் உனக்கு எப்போதும்

தனி இடம் உண்டு ‘ என்று சொல்லாமல் மனசு சண்டித்தனம் பண்ணும்.

அவளைப் பார்க்க வேண்டும்.. எப்படித்தான் அவளுக்கு இவ்வளவு

நேரமிருக்கின்றதோ எழுதவும் படிக்கவும். காலையில் மடல் எழுதியிருந்தால்

மாலையின் மின்னஞ்சலில் அவள் பதில் எழுதியிருப்பாள்..

‘என்ன வேகம் இவளிடம்.. ‘

அதனால்தான் முணுக்கு முணுக்கென்று அவளுக்கு என்னிடம் கோபம்வரும்.

ஆபிஸ் விசயமாக அகமதாபாத் போக வேண்டி இருந்தது.

அவளைப் போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்தேன்.

சொல்லக் கூடாது சர்ப்ரைஸ்சாக போய் நிற்க வேண்டும்.

அவள் சந்தோஷத்தை அப்போது பார்க்க வேண்டும் என்று ஒரு

வினோதமான ஆசை.

அப்படித்தான் ஏர்போர்ட்டிலிருந்து ஒரு டாக்சிப் பிடித்து அவள் வீட்டுக்குப்

போனபோது பொழுது விடிய ஆரம்பித்திருந்தது.

அவள் கிட்சனில் மட்டும் விளக்கு எரிந்தது.

வாட்மேனிடம் விவரமெல்லாம் சொல்லிவிட்டு உள்ளே டாக்சி நுழைந்தது.

அவள் வீட்டுக் கதவின் காலிங்பெல்லை அழுத்தியபோது அவள்தான்

வந்து திறந்தாள்.

குளிருக்காக ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தாள்.

அவள் குடும்பத்தில் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினாள்.

கணவன், குழந்தைகள், மாமியார், நாத்தனார் பிள்ளை, தங்கையின் மகள்..

ஒரு கூட்டமே இருந்தது.

ஒவ்வொருவருக்கும் அவர்கள் எழுந்து வரவர அவள் சுடச்சுட கையில்

டாயா காபியா என்று கேட்டு கொடுத்துக்கொண்டிருந்தாள்.

7 மணியிலிருந்து காலை உணவுக்காக டைனிங் டேபிளில் அவர்கள்

உட்காரும்போது தோசைக்கு சாம்பாரா, சட்னியா, பொடியா என்று

கேட்டுக் கேட்டு அவள் பரிமாறிக்கொண்டிருந்தாள்.

அப்போதெல்லாம் என்னைப் பார்த்து மெளத்தில் விசாரித்துக்கொண்டிருந்தாள்

‘நலந்தானே ‘ என்று.

ஒவ்வொருவருக்கும் மதியச் சாப்பாடு.. டிபன் பாக்ஸை பிளாஸ்டிக் பையில் சுற்றி

டைனிங் டேபிளில்.

கடைசியாக அவள் கணவர் கிளம்பிப்போகும்போது மணி 10 ஆகிவிடுகின்றது.

அதன்பின் கிட்சனில் குவிந்து கிடக்கும் பாத்திரங்களை வேலைக்காரிக்காக

ஒதுங்க வைத்து விட்டு மாமியாருக்கு குளிக்க வெந்நீர் தயார் செய்தாள்.

மாமியார் ஏதோ நடமாடிக் கொண்டார். பக்கவாதம் வந்ததில் முக்கால் வாசி

போய்விட்ட கையும் காலும்.,

அவர்களைக் குளிக்க வைத்து சுடச்சுட தோசை..

இடையில் இன்சுலின் ஊசி வேறு.

11.30 மணிக்கு நவதானியங்கள் போட்ட கஞ்சி தயாரித்து மாமியாருக்கு

குடிக்கின்ற சூட்டில் பதமாக கொடுத்துவிட்டு குளிக்க ஓடினாள்.

அவசரம் அவசரமாக குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்.

தலை முடியிலிருந்து இன்னும் சொட்டுச்சொட்டாக தண்ணீர் முத்துக்கள்.

பக்கத்தில் போய் அவள் தலை முடியை துவட்டி விட வேண்டும் போலிருந்தது.

அதெல்லாம் முடியாதுதான்.

நினைப்பதை எல்லாம் அவள் வாழ்க்கையில் என்னால் செய்ய முடியாதுதான்.

எந்த உறவின் பெயரில் அவளை நான் நெருங்க முடியும் ?

மெளனமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு அரை மணிநேரம் காய்கறி நறுக்கும்போது டைனிங் டேபுளில்

உட்கார்ந்து கொண்டே என்னிடம் சுகச் செய்திகளைக் கேட்டாள்.

12.30 க்கு மாமியாருக்கு பத்தியச் சாப்பாடு.

1.30லிருந்து ஸ்கூலில் இருந்து தங்கை மகளும் அவள் மகனும் வந்தார்கள்.

அவர்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு என்னையும் சாப்பிடச் சொன்னாள்.

நான் சாப்பிட உட்கார்ந்த உடன் உள்ளேயிருந்து மாமியார் கூப்பிட

‘என்ன வேண்டும் ‘ என்று ஓடினாள்.

எனக்குச் சாப்பாடு கொடுக்கும்போது நான்குதடவை அவள் மாமியார்

கூப்பிட்டார்கள்.

அவர்கள் அவளை வேண்டுமென்றே அழைப்பது போலிருந்தது.

நான் பயண அசதியில் ஒரு மணி நேரம் கண்ணயர்ந்தேன்.

மணி 3.30 தாண்டி விட்டது.

கல்லூரி போனவர்களும் வந்தாகிவிட்டது ..

மாலை டா, டிபன்…

இடையில் ஒலித்துக் கொண்டேயிருக்கும் தொலைபேசி..

7 மணிக்கு ஆரம்பிக்கும் இரவு உணவு வேலை

8.30 லிருந்து ஒவ்வொருவராக இரவு உணவு சாப்பிட உட்காருவது..

அவள் கிட்சனிலிருந்து வெளியில் வரும் போது மணி 11.30..

நான் தூங்கி விட்டேனா என்று என் அருகில் வந்து பார்த்தாள்.

எனக்குத் தூக்கம் வரவில்லை.

ஆனாலும் தூங்கவில்லை என்று அவளிடம் காட்ட விருப்பமில்லை.

மெதுவாக ஒரு மெல்லிய போர்வையை எடுத்து என் கால்களை மூடி

சன்னல் கண்ணாடிகளை இழுத்து அடைத்துவிட்டு பேஃன் வேகத்தைக்

குறைத்துவிட்டு அவள் போகும்போது என் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள்

தலையணையை ஈரமாக்கியது.

மறுநாள் அவள் கணவர் ஆபிஸ் காரிலியே என்னை ஏர்போர்ட்டுக்கு அழைத்துச்

சென்றார்.

அவளிடன் போய் வருகின்றேன் என்று சொன்னபோது

அவள் தலையை மட்டும் ஆட்டினாள்.

சத்தம் கொடுத்தால் எங்கே உடைந்து போன குரல் உள்ளத்தைக் காட்டிக்

கொடுத்துவிடுமோ என்று என் கண்களைச் சந்திக்காமலேயே

அவள் விடை கொடுத்தாள்.

வீட்டுக்குப் போனவுடன் மனைவிக் கேட்டாள்..

எனக்கு என்ன வாங்கி வந்தீர்கள் என்று . நேரமில்லை என்று சொன்னவுடன்

கோபம்.. அது சாப்பாடு மேசையில் கரண்டியில் ஒலித்தது.

நான்கு நாட்களில் எதுவும் வைத்த இடத்தில் இல்லை.

எங்கே என்று கேட்டால் ‘ எனக்கென்னப்பா தெரியும் ? எனக்கு இப்போ

ஆபிஸ் விட்டு வரவே ரொம்ப லேட்டாயிடுது.. ‘

நான்கு நாட்கள் பிரிவில் மனைவியின் மடிக்கு மனசு ஏங்க தொட்டவுடன்

‘ப்ளீஸ்ப்பா என்னாலே முடியாது.. ஆபிஸ்லே நிறைய வேலைப்பா.. ‘

முகத்தை திருப்பிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்..

துணி துவைப்பதலிருந்து பிள்ளைகளுக்கு மதிய உணவு தயாரிப்பதுவரை

வேலையாள்தான். அப்படியும்மென்னதான் டயர்டோ ?

ஏங்கும்போது கிடைக்காது இவளிடம் எதுவும்….

எழுந்து கொல்லைப்பக்கமாகப் போய்நின்று கொண்டு சிகிரெட் புகையை

இழுத்து விடும்போது அவள் முகம் நினைவில்…!!!

அவள் கண்கள்.. புரியாத பாஷையில் என்னவோ பேசியது.

சிகிரெட் முனையின் சின்னக் கங்கு விரல் நுனியைச் சுட்டபோது

அனிச்சையாகக் கூட கத்த மறந்துபோனது.

‘தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா..உன்னைத்

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா.. ‘

என்று சம்மந்தா சம்மந்தமில்லாமல் பாரதிப் பாட்டு நினைவுக்கு வந்தது.

இப்போதெல்லாம் அவள் கடிதங்களுக்குப் பக்கம் பக்கமாக பதில்

எழுதுவதில் தனி இன்பம்.

தினமும் இரண்டு மூன்று கடிதங்கள்..

இந்த எழுதும் கைகள் இருக்கும்வரை..

வாசிக்க கண்கள் இருக்கும்வரை…

கைகளும் கண்ணும் நோய்நொடி இல்லாமல் இருக்கும்வரை..

எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்..

அப்போதுதான் எழுத முடியாத ஒரு காலமும் வந்துவிட்டால்,

எழுதிய நினைவுகளில், வாசித்த நினைவுகளில் அந்த மெல்லியப் பிச்சிப்பூவின்

வாசனையைக் கடைசிவரை உணர்ந்து கொண்டே இருக்க முடியும் என்ற

உயிர்ப்பூ சொல்லுகின்றது.

என் நீண்ட கடிதங்கள், உடன் பதில் .. இதிலெல்லாம் அவள்

திக்கு முக்காடிப்போய் சந்தோஷத்தில் இருப்பாள் என்று நினைக்கும்

போதே மனசு றக்கைக் கட்டிக்கொண்டு வானத்தில் பறப்பது போலிருந்தது.

நண்பன் சொன்னான்..

‘டேய்.. நீ உன்னையும் அறியாமல் அவளைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டே ‘

அவனுக்கு என்ன தெரியும் நான் பலமுறை பலரைக் காதலித்து

இருக்கின்றேன். அதனால் எனக்கு அவனைவிடக் காதலைப் பற்றி

அதிகமாகவே தெரியும்.

இது வெறும் காதல் இல்லை…

அதுக்கும் மேலே ஒன்னு.. சொல்லத்தெரியலை…

எல்லாமே சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதுமில்லை.

எல்லாமே சொல்லில்தான் வாழ வேண்டும் என்பதுமில்லை.

அனுபவிக்கறவனுக்கு மட்டும்தான் பிச்சிப்பூ வாசனைத் தெரியும்

என்னதான் சொல்லில் கொண்டுவர முயற்சி செய்தாலும்

பிச்சிப்பூவின் வாசனையை வார்த்தைகள் தந்துவிட முடியுமா ?

———————————————————————————————

puthiyamaadhavi@hotmail.com

திண்ணை பக்கங்களில் புதிய மாதவி

  • வரங்கள் வீணாவதில்லை
  • கூட்டணி
  • பாசுவின் தவம்
  • மேட்ரிக்ஸ் டே
  • தீபாவளிப் பரிசு

    Series Navigation

  • புதியமாதவி, மும்பை

    புதியமாதவி, மும்பை