விடியும்!(நாவல்) – (24)

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


செவ்வந்திக்குப் பின்னால் வெள்ளைக்காரரைக் கண்டதும் புட்டுத்தட்டை அரைகுறையில் அப்படியே வைத்துவிட்டு கையைக் கழுவிக் கொண்டு அறைக்குள் ஓடினான் செல்வம்.

அவனும் பார்த்திருக்கிறான் – ஆரும் வெளி ஆக்கள் அதிலும், முன்னபின்ன வந்திராதவர்கள் வரும் போதுதான் வீடு அலங்கோலமாயிருக்கும். கழட்டி எறிந்த சாரம் கதிரையில் தொங்கும். இழுத்துப் போட்ட சீப்பு அசிங்கமாக இளிக்கும். குடித்துப் போட்டு வைத்த தேநீர்க்கோப்பையில் ஈயோ எறும்போ மொய்த்து அதற்கு அப்பாலும் வரிசைகட்டி ஊர்ந்து கொண்டிருக்கும். பார்த்துப் போட்டு எறிந்த பத்திரிகை பக்கம் மாறிக் கிடக்கும். அன்றைக்கென்று முழுகுவதற்கு தலை நிறைய எண்ணை வைத்து காதாலும் கழுத்தாலும் வழிந்து கொண்டுமிருக்கும்.

கையிலிருக்கும் அலுவலை முடித்து விட்டு அதையதை அந்தந்த இடத்தில் ஒதுங்க வைத்து வீட்டைக் கூட்டி விடுவோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது – வந்து நிற்பார்கள். இனியில்லையென்ற அந்தரம் உண்டாகிவிடும். நேரங்காலந் தெரியாத சனம் என்று வந்தவர்களுக்கு உள்ளுக்குள் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டே – வாங்கோ இப்படி இருங்கோ எல்லாம் போட்டது போட்ட படியிருக்கு, இப்பதான் கூட்டுவம் என்று இருக்க வந்திட்டாங்க – என்று அசடு வழிந்து வீட்டின் அலங்கோலத்துக்கு வக்காளத்து வாங்க வேண்டியிருக்கும்.

செல்வம் சட்டையை மாட்டிக் கொண்டு கண்ணாடியில் முகத்தை ஒரு தரம் போகிற போக்கில் பார்த்துவிட்டு விறாந்தைக்கு ஓட்டத்தில் வந்தான். மூட்டைக்காக கொதிக்கக் கொதிக்க சுடுதண்ணீர் ஊற்றி முற்றத்தில் போட்டிருந்த கதிரைகளை எடுத்து வந்து விறாந்தையில் வைத்து வந்தவர்களை இருக்கச் செய்து விட்டார் அப்பா, அதற்குள்.

விறாந்தையிலிருந்து பார்க்க வெய்யிலுக்கு நடுமுற்றத்தில் காயப் போட்டிருந்த உறையகற்றிய தலயணைகளும் பாய்க்கட்டுகளும் என்றைக்குமில்லாத பிரத்தியேக பிரகாசத்துடன் அநியாயத்திற்கு நெளிப்புக் காட்டின. என்றாலும் வீடு கழுவிவிட்ட குளிர்ச்சியும் அப்பதான் காட்டிவிட்ட சாம்பிராணிப் புகையும் வந்தவர்களை ஈர்த்திருக்கும் என்று ஆறுதல் பட்டுக்கொண்டான் செல்வம்.

செவ்வந்தி அடுப்படிக்குள் போய் அம்மாவிடம் தண்ணீர் சுடவைக்கச் சொன்னாள்.

“யூ லைக் கொபி ஓர் ரீ”.. .. .. வெள்ளைக்காரரிடம் கேட்டான் செல்வம்.

“இப் யூ டோன்ட் மைன்ட், ஐ வில் காவ் ரீ”

“வித் சுகர் அன்ட் மில்க் ? ”

“மில்க் பிளீஸ் நோ சுகர்”

மற்றவரும் அதையே சொல்ல சீனியில்லாமல் பால்த் தேத்தண்ணி போடச் சொல்லிவிட்டு வந்து தானும் ஒரு கதிரை எடுத்து முன்னால் போட்டு இருந்தான் செல்வம்.

முந்தியெல்லாம் மூன்று முழுக்கரண்டி சீனியில்லாமல் அவன் தேத்தண்ணீர் வாயில் வைக்க மாட்டான். இனிப்பு அறம்புறமாகச் சாப்பிட்டால் புழுக்கொட்டும் என்று அம்மா பயமுறுத்துவாள். அவன் எங்கே கேட்டான்! வெளிநாட்டில் பலரும் சீனியில்லாமல் குடிப்பதை ஆரம்பத்தில் ஆச்சரியமாய் பார்த்திருக்கிறான். தேயிலை அல்லது கோப்பியின் இயல்பான சாரத்தை சுவைக்க வேண்டுமானால் சீனி கொஞ்சமாகப் போட வேனும் அல்லது போடவே கூடாது என்று ஒருவர் காரணம் சொன்னார். இப்போது செல்வமும் அளவாகத்தான் சீனி போடுகிறான். மூன்று கரண்டி போட்டுக் கொடுத்தாலும் காணாது என்று முகத்தை நீட்டுகிறவன் முக்கால் கரண்டி போதும் என்கிறான்.

அப்பா உள்ளே போய் சட்டை மாட்டிக் கொண்டு வந்தார். திறந்திருந்த தெருக்கதவால் வாசலில் நின்ற ஜீப்பும் அதில் ஏற்றியிருந்த ‘இன்டர்நெஷசனல் கொமிற்றி ஆப் றெட் குறொஸ் ‘ கொடியும் – தரித்து நின்ற இடத்திற்கு மரியாதை கொடுத்துக் கொண்டிருப்பதை செல்வம் பார்த்தான். தெருவில் போன சிலர் சாடையாக வளவுப் பக்கம் கண்ணைத் திருப்பி ஆராய்ந்து கொண்டு சென்றதையும் கண்டான்.

“நீங்கள் பிரிட்டிஷ் தானே!.. ”.. .. .. .. செல்வம் கேட்டான். கனடிய வாழ்க்கை அனுபவத்திற்குப் பின் ஆங்கில உச்சரிப்பை வைத்தே பேசுகிறவர் அமெரிக்கரா பிரிட்டிஷா ஐரிஸ்ஸா ஸ்கொட்டிஸ்ஸா என்பதை அவனால் கண்டு கொள்ள முடிகிறது.

யேஸ் என்றார் அவர்.

“நான் செல்வநாயகம் – செவ்வந்தியின் அண்ணன். இது எங்கள் தகப்பனார் மிஸ்டர் செல்லத்துரை”

அறிமுகமானதும் அவர் இருந்த இரையிலிருந்து எட்டி இருவருடனும் கைகுலுக்கினார். நான் மிஸ்டர் வைட் – டங்கன் வைற். இங்கிலாந்தில் பேர்மிங்காமைச் சேர்ந்தவன். இவர் எனது உதவியாளர் மிஸ்டர் ஜோர்ஜ் ராமநாதன் என்றார் அவர். அவருக்கும் எழுந்து கை கொடுத்தான் செல்வம். மிஸ்டர் வைட் ஒரு தரம் வீட்டை மேலோட்டமாகப் பார்த்தார். சிற்றோட்டு வீடு. அவரது உயரத்திற்கு கொஞ்சம் குனிந்து வராவிட்டால் கூரை இடித்தாலும் இடித்திருக்கும். ஒட்டடை அடித்து தூசுதட்டித் துடைத்துக் கழுவிவிட்டதில் புனிதம் தெரிந்தது.

“நாளைக்குத் தைப்பொங்கல்”.. .. .. .. .. வீட்டை அவர் விஸ்தாரமாகப் பார்த்ததுக்காகச் சொன்னான் செல்வம்.

அவர் புரியாமல் பார்க்க – சூரியனுக்கும் உழவர்களுக்கும் மரியாதை செய்கிற நாள். மேற்கு நாடுகளில் அன்னையர் தினம் தந்தையர் தினம் என்று இருக்கிறதல்லவா அது போல என்றான் செல்வம்.

“அப்படியா! நல்லது. மிகவும் நல்லது. இங்கே எல்லா மக்களும் கொண்டாடுவார்களா ? ”

“இல்லை இந்துக்கள் மட்டும் கொண்டாடுவார்கள் ”

நல்லது மிகவும் நல்லது என்று மீண்டும் சொன்னார். அடுப்படிப் பக்கமாகப் போன கிழவி ஜன்னலடியில் நின்று சின்னம்மாவிடம் ‘போய் வந்த விபரம் ‘ கூறிக் கொண்டிருப்பது கேட்டது. அதற்குள் செவ்வந்தி வீட்டுடுப்போடு வந்து கதவு நிலையில் தோளுக்கு முண்டு கொடுத்து நின்றாள். மிஸ்டர் வைட் செவ்வந்தியைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்து விட்டுச் சொன்னார்.

“உங்கள் தங்கை மிகவும் மதி நுட்பமான பெண். கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுகிற மனப்பான்மை எல்லாரிடமும் இருப்பதில்லை. உங்கள் தங்கையைப் பற்றி நிச்சயமாக நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ”

விழுந்த புகழ்மாலையின் பாரம் தாங்காமல் தலை கவிழ்ந்து அடக்கமாகச் சிரித்தான் செல்வம். சீனி போடாத பால் தேநீர் வந்தது. அவர் நன்றி சொல்லி வாங்கினார். ஒரு முடர் குடித்து விட்டு வெரிகுட் வெரிகுட் என்றார். வெரிகுட் சொல்ல – வெறுந்தேநீரில் அப்படி என்ன இருக்கிறது – என்று வியந்தான் செல்வம். நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள் என்று செல்வத்திடம் கேட்டார் மிஸ்டர் வைட்.

“கனடாவில் ஐபீஎம் கம்பனியில் இருக்கிறேன் கடந்த ஐந்து வருடங்களாக”

“அப்படியா! விடுமுறையில் வந்திருக்கிறீர்களா ? ”

“ஆம் ”

“நல்லது நல்லது”.. .. .. அவர் செவ்வந்தியின் பக்கம் திரும்பி சொன்னார்.

“நான் சொன்னது ஞாபகமிருக்கிறதல்லவா. ரிஜீஸ்றார் அலுவலகத்தில் அந்தப் பிள்ளையின் பிறப்புச் சாட்சிப் பத்திரத்திற்கு விண்ணப்பம் செய்யுங்கள். உங்கள் பகுதி கிராம சேவையாளரிடம் கடிதம் வாங்குங்கள். உங்கள் வேண்டுகோளை ஒரு கடிதமாக எழுதித் தாருங்கள். நான் செய்யக்கூடியதனைத்தையும் செய்வேன். இன்னும் இரண்டொரு நாட்களில் வவுனியாவிற்குப் போக இருக்கிறேன். அந்த அம்மாவையும் கூட்டிக் கொண்டு போய் முகாமில் பார்க்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள் ”

சின்னம்மா முகம் கழுவி திருநீறு பூசி வாசலில் வந்து முகம் மலர நின்றாள். அவளுக்குப் பக்கத்தில் கிழவியும் வந்து விரித்திருந்த சாக்கில் குந்தியது.

“அம்மாவா! ”

“ஆம் ”

“உங்கள் மகளை நல்லவிதமாக வளர்த்திருக்கிறீர்கள் அம்மா. நிர்க்கதியான ஒரு

ஏழைத்தாய்க்கு உதவுவது மிகவும் உயர்வானது. அதை நேரில் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன். ஐ ரியலி அப்றிசியேட் யுவர் டோட்டர்.”

செல்வத்திற்கு நெஞ்சு பொங்கிக் கொண்டு வந்தது. கண்கள் பொங்குவதற்கு முன் கசக்கி விட்டான். இந்தப் பாராட்டை சின்னம்மா தாங்கமாட்டாள். அப்பாவைச் சொல்லவே தேவையில்லை. பாவப்பட்ட மக்களுக்காக கடல் கடந்து வந்து சேவை செய்து கொண்டிருக்கும் ஒரு மனிதர், அதிலும் வெள்ளை நிறத்தவர் – தன் மகளை சிலாகித்துக் கொடி பிடிப்பதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியாது. உடைந்தே போவார். அளவு மீறிய ஆனந்தம் அழுகையாகி வெடிக்கப் போகிறது! நினைத்த மாதிரியே கண்களை மூடி துடைத்துக் கொண்டிருந்தார் அப்பா.

“மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி”.. .. .. செல்வம் எழுந்து அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னான். அவர் நேரத்தைப் பார்த்தார். பையிலிருந்து விசிட்டிங் கார்ட்டை எடுத்துக் கொடுத்தார்.

“ஓகே மிஸ்டர் செல்வநாயகம் நாங்கள் வருகிறோம். தாங்க்யூ போர் த ரீ.. .. .. அவர் புறப்பட்டுவிட்டார். அப்பாவும் செல்வமும் தெருவாசல் வரை கூட வந்து ஜீப் போய் மறையும் வரை அங்கேயே நின்றார்கள்.

கழுவிக் காய்ந்திருந்த அடுப்படிச் சாக்கில் குந்தியிருந்த கிழவி புட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பக்கத்தில் வந்து நெருக்கமாகக் குந்தினான் செல்வம். வயதுபோனவர்களிடம் கதை கொடுப்பதில் அலாதிப் பிரியம் அவனுக்கு.

“ஆச்சிக்கு என்ன பேர் ? ”

“மாரிமுத்து”

இருந்த பசிக்களையில் அவனோடு பேசி மினக்கெட கிழவியால் முடியாது இப்போது. பெயரை உடனே ஒப்புவித்துவிட்டு அடுத்த பிடியை வாய்க்குள் இறக்கியது. அவதி அவதியாய் தள்ளியதில் விக்கல் வந்தது.

“இந்தா தண்ணியக் குடியனை. வவுனியாவில பேத்தி நினைக்குது போல. அவதிப்படாமல் சாப்பிடு. எங்கயனை இருக்கிறாய் ? ”

“ஆச்சி பேத்திக்கு எத்தினை வயசு ? ”

“சாப்பிடேக்குள்ள கதை குடுக்காதை பிரக்கடிக்கப் போகுது.”

கொஞ்ச நேரம் சும்மா பார்த்துக் கொண்டிருந்து விட்டு செல்வம் கேட்டான்.

“ஆச்சி நாளைக்குப் பொங்கலுக்கு வாறியானை”

சொல்லாட்டிலும் வருவன் என்பது போல் தலையாட்டிக் கொண்டே கிழவி விழுங்குவதில் குறியாயிருக்க புட்டு மீண்டும் தொண்டையில் சிக்கிக் கொண்டது. தலையில் தட்டி விட்டாள் செவ்வந்தி.

வெந்தயக்கறி கொஞ்சம் விடட்டோனை என்று சின்னம்மா கேட்டாள்.

“போதும் ”

உழுத்துப்போன முருங்கைக் கதியால் மாதிரி ஒட்டிக் காய்ஞ்சு போன தேகம். அதற்கு எண்ணைப்பந்தம் சுற்றிவிட்டது போல ஒரு சாயம் போன சேலை. பொருக்கு வெடித்த சருமம். புகைஞ்சு போன கண்கள். தோடு இல்லாமல் மூடுப்பட்டுப் போன காதுகள். ஐஞ்சடி மனுசி மூன்றடியாகப் கூனிப் போயிருந்த கோலத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டான் செல்வம்.

தங்கச்சியை கிழவியோடு விட்டதற்கு சின்னம்மாவில் அவன் கத்திய கத்து! இதைப் போல இன்னும் எத்தனை சனம் வயிற்றுக்கில்லாமல் வாய்க்கில்லாமல் வாடுதுகளோ. வீடு வாசல் தொலைந்து குடும்பம் மொத்தமும் தொலைந்து நிர்க்கதியாக நிற்கிற இந்த சீவனுக்கு உதவி செய்ததற்கா அப்பிடிச் சத்தம் போட்டேன்!

மனுசி அறக்கப் பறக்க சாப்பிட்டு தண்ணீர் குடித்தது. தம்பி நீயும் சாப்பிடன், கோப்பையோட அப்பிடியே இருக்குது என்றாள் சின்னம்மா. கிழவி சாப்பிட்டதைப் பார்த்தே அவனுக்கு வயிறு நிறைந்து விட்டது.

பக்கத்தில் வந்து நின்ற செவ்வந்தியை இஞ்ச வாம்மா என்று அழைத்தான். அவள் பக்கத்தில் ஒட்டி தடவக் கொடுத்த பசுமாடு மாதிரி நின்றாள். அண்ணாவிற்கு சொல்லாமல் போயிற்றாய் என்ன என்று பொய்க் கோபத்துடன் செல்வம் கேட்க அவள் சிரித்தாள்.

அது சின்னம்மாவின் சிரிப்பு. இந்தக் குடும்பத்தை தோளில் தூக்கி வைத்து தாங்கிக் கொண்டிருக்கிற தாயின் சிரிப்பு. செவ்வந்தியும் கொஞ்சத்தில் சின்னம்மாவைப் போலவே முகட்டை முட்டிக் கொண்டு பெரிய மனுசியாகத் தெரிந்தாள்.

—– —-

பின்னேரம் நாலு மணி. பொங்கலுக்கான பரபரப்பு எதுவுமில்லாமல் சும்மாயிருந்தது வீடு. பலகாரமோ வடையோ சுட்ட சிலமனைக் காணவில்லை. பின்விறாந்தையில் கால் நீட்டியிருந்து உழுத்தம்பருப்பு புடைத்துக் கொண்டிருந்தாள் சின்னம்மா. வாசம் மூக்கைத் தழுவ, கடகப் பெட்டியிலிருந்து ஒரு சிறங்கை அள்ளி வாயில் போட்டு கறுமுறுவெனக் கடித்துக் கொண்டு பக்கத்தில் குந்தினான் செல்வம்.

சுளகில் புடைக்கிறதைப் பார்த்து எத்தனை நாளாச்சு! புடைப்பதும் ஒரு நுட்பமான வேலைதான் என அவனுக்குப் பட்டது. இரண்டு கைகளால் சுளகைப் பிடித்திருப்பதும், தாளமிடுவது போல் தட்டித் தட்டி மேலும் கீழும் அசைப்பதும், கழிவான தோலும் குருணிகளும் நுனியில் சேரச் சேர அதை நைசாகத் தட்டி பெட்டியில் கொட்டுவதும், அடியில் ஒதுங்கும் மணிகளை சருவச்சட்டியில் சேமிப்பதும், இடையிடையே இரண்டொரு மணிகளை வாயில் எறிந்து பருப்பின் பதத்தை சோதிப்பதுமாக – எல்லாமே ஒருவித லாகவத்தோடு தாள லயம் தவறாமல் நடப்பதை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சின்னம்மா பொங்கலுக்கு வடை சுடேல்லையா என்று கேட்க வாய் வந்து விட்டது. தம்பியில்லாததால் அடக்கி வாசிக்கிற பொங்கல் இது. வடைகிடையெல்லாம் தம்பி வந்தாப்பிறகு பாப்பம்.

“சின்னம்மா வெய்யில் தாழ ஒருக்கா ராணி வசந்தியிட்டை போயிற்று வரட்டா ? ”

“போயிற்று வா. தம்பியிட விசயம் கதைக்காதை. அதுகளின்ரை குடும்பத்தில எங்களால பிரச்சனை வேண்டாம் ”

சின்னம்மா காசு தாறீங்களா எதென்டாலும் வாங்கிக் கொண்டு போக வேனும். அங்கயிருந்து வரேக்குள்ளயும் ஒன்டும் கொண்டு வரேல்லை என்றான் செல்வம்.

கையைக் கழுவிக் கொண்டு சாமியறைக்குள் போனாள் சின்னம்மா.

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்