ஒரு நாள் மட்டும்……..

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

சுஜல்


கீழே போடப்பட்டிருந்த தார் சாலையை பிரதிபலிப்பதாக கருமேகங்கள் வானை ஆக்ரமிக்க தொடங்கி இருந்தன.பள்ளிக்கு செல்ல சிணுங்கும் குழந்தை போல

அப்பொழுதுதான் லேசாக தூர ஆரம்பித்திருந்தது.அவள் தன்னுடைய கையை மேலே உயர்த்தி, மணிக்கட்டில் கட்டியிருந்த கடிகார நேரத்தை நொடிக்கு நாலு தரம் பார்த்து கொண்டிருந்தாள்.அவளின் எண்ணங்களை விட குறைவான வேகத்தில் ஓடவே வரம் பெற்றிருந்த முட்கள் நகராமல் மேலும் அவளுக்கு எரிச்சலூட்டின .இன்னொரு கை பற்றி இருந்த வார பத்திரிகையைக் கொண்டு அனிச்சையாய் அவளின் தோளை வேகமாக செல்லத்துடன் அடித்து கொண்டு இருந்தது.எதற்காக காத்திருக்கிறாள் என்பதை அறிய முடியாதபடி சாலையின் இருபுறமும் எதையோ தேடித் தேடி பார்த்து கொண்டிருந்தாள்.கூர்ந்து கவனித்தால் அவள் வாய் எதையோ முணுமுணுப்பது

தெரிந்தது.

மழைக்கு பயந்து முழுவதும் போர்த்தி கொண்டு பேருந்து ஒன்று வந்து நிற்க,அதுவரை காத்திருந்த கூட்டத்தில் பாதி முண்டியடித்து கொண்டு ஏறியது. அந்த கூட்டத்திலும் குறி தவறாத அம்பு பார்வையுடன் அவள் யாருக்காகவோ ஊடுருவது தெரிந்தது.மீண்டும் ஏமாற்றம் முகத்தில் அப்ப, விடுவிடுவென அருகில் இருந்த பொது தொலைபேசி

பெட்டிக்குள் புகுந்து கொண்டாள்.மழை காலத்தில்,யாரும் இல்லாமல், களையிழந்து, கவிழ்ந்திருந்த தொலைபேசிக்கு இன்று இவளால் மட்டுமே மூன்றாவது முறையாக போனி!

‘ஹலோ! நிதி கன்ஸல்டன்ஸி .அங்க மிஸ்டர் அருண் இருக்காரா ? ‘

‘அட யாரும்மா அது ?எவ்வளவு தடவை சொல்லறது.எல்லோரும் நாலு மணிக்கே கிளம்பிட்டாங்க.யாரும் இல்லை ‘

தன்னுடைய வழக்கமான மாலை நேர ‘மயக்கத்தை ‘ கலைத்த கடுகடுப்பில் வாட்ச்மேன் பதிலுக்கு காத்திராமல் போனை வைக்க,இவள் திட்டிய ஆங்கில வார்த்தை அவன் காதில் விழுந்திருக்க சாத்தியம் இல்லை.நாலு மணிக்கே கிளம்பியவன் ஏன் இன்னும் வரவில்லை!என்னதான் போக்குவரத்து நெரிச்சல்,பஸ் தாமதம் அது இது என வைத்து கொண்டாலும் சைதாபேட்டையிலிருந்து தாம்பரத்திற்கு மூன்று மணி நேரமா!சோர்வுடன் வெளியே வந்த பொழுதுதான் அவள் கண் முன்னே அது நிகழ்ந்தது!!

வேகமாக வந்த லாரி ஒன்று முன் சென்று கொண்டிருந்த பைக்கில் மோத நிலைதடுமாறிய பைக்கும் அதை ஓட்டி வந்தவனும் வெவ்வேறு திசையில்…..சட்டென கூட்டம் கூடி விட்டது.எல்லோரும் ஆளாளுக்கு பரபரப்புடன் எதையோ செய்ய நினைத்தும் செய்யாமல் நின்றிருக்க, அங்கு இருந்த சில மனிதங்கள் அந்த இளைஞனை ஒரு ஆட்டோவில் கிடத்தியபடி பறந்தனர்.அந்த ஐந்து நிமிட பரபரப்பு தந்த அதிர்ச்சியில் உலகமே நின்று விட்டார்போல இருந்தது.மெல்ல சூழ்நிலையின் படபடப்பு அடங்க, இறைச்சலான சலசலப்புடம் கூட்டம் மெதுவாக கலையத்

தொடங்கியது.

‘என்ன சார் இது அநியாயமா இருக்கு ?நாம ஒழுங்கா போனாக் கூட தொறத்தி வந்து அடிச்சுட்டு போவானுங்க போல இருக்கு ‘ ஒரு சமூகர் பேசியபடி நடந்தார்.

‘இந்த பசங்க மேலையும் தப்பு இருக்கு சார்,ஹீரோ ரேஞ்சுல பெண்ணுங்களை அசத்தரோம்னு நினைச்சுகிட்டு இப்படி வந்து விழறானுங்க.என்ன சொன்னாலும் இவனுங்க காதுல விழறதில்லை ‘ யாரோ ஒரு தற்கால இளைஞனின் தந்தை சமயம் பார்த்து தன் இயலாமையை வெளிப்படுத்தி கொண்டார்.

‘தூக்கிட்டு போகும்பொழுது அந்த பையனுக்கு மூச்சு இருந்தது இல்லை…….உயிருக்கு ஒண்ணும் ஆகாதே ‘ படபடப்போடு ஒரு திசையில் கேள்வி எழுந்தது.

‘ம்ம்ம் அப்படித்தான் நினைக்கறேன்.தலையில் வேற அடிப்பட்டிருக்கு.கடவுள் புண்ணியத்தில் ஒண்ணும் ஆகக் கூடாது. இந்த பசங்க காலையில் கிளம்பினா திரும்பி வர வரைக்கும் நமக்கு பயம் தான்.அப்படி என்னத்தான் வேகமோ யாரை பார்க்க இந்த ஓட்டம் ஓடறானுங்களோ!! ‘

இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த அவளின் மனதில் முதல்முறையாக பயம் முளை விட்டது! போன முறை அவன் தாமதமாக வந்ததற்கு தான் ஒரு மணி நேரம் பேசாமல் இருந்தது நினைவலையில் நின்றது.

‘சாரி டியர், எல்லாம் இந்த பல்லவன் பண்ணிய வேலை.அடுத்த தடவையில் இருந்து ஐயா பிரண்டோட பைக்கை எடுத்துட்டு பறந்து வந்துடறேன் ‘

அவன் அன்று சொன்னது இப்பொழுது நினைவிற்கு வந்து மேலும் இதயத் துடிப்பை அதிகரித்தது.

கடவுளே ஒரு வேளை……….ஒரு வேளை…….. என் அருணுக்கும் இது போல எதாவது.ஐயோ!இருக்க கூடாது. அவளுக்கு மீண்டும் அந்த சாலையை ஏறெடுத்து பார்க்கவே பயமாக இருந்தது.இன்னும் காதுகளில் அந்த ‘கீரிச் ‘ ஓசையும் ‘அம்மா ‘ என்ற அலறலும் கேட்டு கொண்டிருந்தன.

அருணுக்கு என்ன ஆகியிருக்கும்,ஏன் இவ்வளவு நேரம் ஆகியும் அவன் வரவில்லை என்ற கேள்வி மனதுள் வலுத்து,குடைய ஆரம்பித்தது.இந்த நேரத்தில் யாரை கேட்பது ?இப்பொழுது அவன் எங்கு இருப்பான் ? திரும்பவும் அவன் ஆபிஸிற்கே போன் பண்ணி கேட்கலாமா ?இல்லை பயனில்லை.இப்படியெல்லாம் செய்கிறவன் அல்லவே அவன் !எந்த ஒரு முக்கிய தகவல் என்றாலும் உடனே கீதாவின் செல் போனில் கூப்பிட்டு சொல்லி விடுவானே!

சட்டென மண்டையில் உரைத்தது ‘கீதா! என் ப்ரிய தோழியே,எப்படி மறந்தேன் உன்னை இவ்வளவு நேரம் ? ‘

ஓடிச் சென்று மீண்டும் அந்த போன் பூத்திற்குள் புகுந்து கொண்டு ,எண்களை அழுத்தி எதிர்முனை உயிர் பெற காத்து இருந்தாள்.

‘ஹலோ! கீதா, கீதா! நான் நான்தான் அனு! அருண் உனக்கு ஏதாவது போன் பண்ணி சொன்னானா ? ‘

‘ அருண் ம்ம்ம் போனா ? எதுவும் பண்ணலையேப்பா.ஏன் எனி ப்ராப்ளம் ? ‘

‘இல்லை கீதா,நாலு மணிக்கு கிளம்பினவன் இன்னும் வரலை.எனக்கு ரொம்ப பயமா இருக்கு ‘ அவளுக்கு அழுகை வந்து விடும் போல இருந்தது.

‘ஹேய் .ஒண்ணும் இருக்காது.ஒருவேளை எதாவது முக்கிய வேலை வந்து இருக்கலாம்.எதுக்கும் அவன் வீட்டுக்கு போன் பண்ணி கேளு.கவலை படாத என்ன ‘

‘சரி ‘ என ஒற்றை வரியில் சொல்லி விட்டு வைத்தாள்.அதற்கு மேல் பேசினால் தான் அழுது விடுவோமோ என பயம்!

அவனுடைய வீட்டு நம்பர்களை அழுத்தும்பொழுதே இதயம் விட்டு அடித்தது.இதற்கு முன் அவன் வீட்டிற்கு பேசிய சமயங்கள் எல்லாம் அவனே போனை எடுப்பான், இல்லை வேறு யாராவது எடுத்தால் இவள் உடனே வைத்து விடுவாள்.புரிந்து கொண்டு சிறிது நேரத்தில் கீதாவின் செல் போனிற்கு பேசுவான்.அவன் இருக்கிறானா இல்லையா எனத் தெரியாமல் தொலைபேசுவது இதுவே முதல் முறை! அதுவும் இது போன்ற ஒரு சமயத்தில்.அந்த மழை இரவிலும் பயத்தில் வேர்த்து கொட்டியது.

‘ஹலோ மிஸ்டர் அருண்குமாரோட பேசலாமா ‘ சில நேரங்களில் போலிகளுக்கும்

பொய் பேசுவதற்கும் ஆங்கிலம் தேவையாக இருக்கிறது.

‘நீங்க யாரு ? ‘ பதிலுக்கு காத்திருந்தவளுக்கு எதிர் கேள்வி வர ‘அலுவலக தோழி ‘ என்றாள் பெயரை சொல்லாமல்.

‘இன்னிக்கு அங்க ஏதோ முக்கிய மீட்டிங்ன்னு வர லேட்டாகும்னு சொன்னானே! ‘

‘ஆங் ஆமாம் மீட்டிங்தான் அதை பற்றி கேட்கதான் போன் பண்ணேன்.என்னால் அதற்கு போக முடியவில்லை.சரி நாளை அலுவலகத்திலேயே பேசிக் கொள்கிறேன் ‘

பதில் கேள்விக்கு பயந்து உடனே வைத்து விட்டாள்.

எப்படியோ பொய்யை சொல்லி சமாளித்தது அந்த படபடப்பிலும் சிறிது நிம்மதியாக இருந்தது.அவன் இன்று தன்னை பார்க்க வரவில்லை என்றாலும் பரவாயில்லை அவனுக்கு ஒன்றும் ஆகாமல் இருந்தால் போதும் என இருந்தது.

வெளியே வந்தவுடன் ஒருவேளை இப்பொழுது வந்திருப்பானோ என்ற நப்பாசையில் மீண்டும் பேருந்து நிலையத்தை முழுவதுமாக ஆராய்ந்தாள்.இல்லை!அவனை காணவே இல்லை.உண்மையில் ஏதோ நடக்க கூடாதது நடந்து விட்டிருக்கிறது.

இல்லையென்றால் அருண் இப்படி செய்கிறவனே இல்லையே!ஐயோ, அப்படி ஏதாவது ஒன்று என்றால் நான் என்ன செய்வேன் ?அருண் இல்லாத இந்த உலகத்தை கற்பனையில் கூட காண முடியவில்லை.

ஒரு தடவை அவனிடம் அன்றில் பறவைகள் பற்றி பேசியது நினைவிற்கு வந்தது.ஒன்றை விட்டு ஒன்று நீங்கிய கணமே உயிர் துறக்கும் ஜீவன்கள்.அவற்றை பற்றி இவள் சீரியசாக பேசி கொண்டிருக்க,காது ஜிமிக்கியை இன்னும் கொஞ்சம் ஆட்டி பார்த்தவனை ‘பளீர் ‘ என வலிக்காமல் அடித்து கடிந்து கொண்டிருக்கிறாள். பழையவைகளை நினைக்க நினைக்க மன பாரம் இன்னும் ஏறி

கொண்டு சென்றது

‘என் செல்வமே,அருண்!நீ இல்லாது நான் மட்டும் என்னடா செய்வேன்,மாட்டேன், நிச்சயம் என்னால் உயிர் வாழ முடியாது ‘.

கண்களில் நீர் குளம் கட்டி அருவி போல் பெருக்கெடுத்து உடைந்து விழுந்தது.கைக்குட்டையை எடுத்து யாரும் அறியாமல் முகத்தை அழுந்த துடைத்து

கொண்டாள்.அப்பொழுது அந்த இளம் பச்சை வண்ண காகித உறை தென்பட்டது.

அதனுள் இதய வடிவம் கொண்ட பேப்பரில் அவன் பிறந்தநாளுக்காக அவள் எழுதிய கவிதை! இதைகூட இன்னும் உன்னிடம் காட்டவில்லையே!நீ சிரிக்கும்பொழுது குழி விழும் கண்ணத்தை எவ்வளவு ரசித்திருப்பேன்! எனக்கு பிடித்த அந்த கரு நீல சட்டையில் உன்னை அப்படியே என் மனதில் படம் பிடித்து வைத்திருக்கிறேன்.

இதையெல்லாம் கூட நான் சொன்னதே இல்லையே இதுவரை.இதற்கெல்லாம் சந்தர்ப்பம் இல்லாமலே போய் விடுமோ ?

காரணம் இல்லாமல் உன்னுடன் எவ்வளவு நாள் பிடிவாத சண்டை போட்டிருப்பேன். என் மேல் தவறு இருந்த பொழுதும் முதலில் பேசாமல் இருந்திருப்பேன்! நீ என்னை பார்க்க வேண்டும் என கெஞ்சிய நாட்களில் வராது போயிருப்பேன். ஒரு முறை கூட கோபித்து கொண்டதில்லையே நீ! ‘உனக்கு கோபமே வராதாடா ‘ என உன் மூக்கை பிடித்து திருக வேண்டும் என ரொம்ப ஆசை தெரியுமா ? கண்ணா! இன்று மட்டுமாவது வந்து விடேன்டா!உன் அருமை தெரியாது நான் நடந்து கொண்டதற்கெல்லாம் தண்டனயா இது ?இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம்.என்னால் தாள முடியாது.மீண்டும் கைக்குட்டையை கண்ணருகில் எடுத்து சென்றாள்.

தூரத்தில் எங்கோ கோவிலில் மணி ஓசை கேட்டது.மனதில் சட்டெனன லஸ் பிள்ளையார் தோன்றி மறைந்தார்.அவர்கள் இருவரும் எப்பொழுதும் செல்லும் கோவில்!

அருணுக்கு மிகவும் பிடித்த இடம் .நினைத்தது நடக்கும்,அபார சக்தி என அடிக்கடி

சொல்வான்.

‘பிள்ளையாரப்பா! உன்னை எப்படி இந்த நேரத்தில் அழைக்க மறந்தேன்.எனக்கு நினைவூட்டத்தான் மணியாக ஒலிக்கிறாயா ?எப்படியாவது என் அருணை என்னிடம் நல்லபடியாக கொண்டு வந்து சேர்த்துவிடு.அவனுடைய இந்த பிறந்த நாளைற்கு இருவருமாக வந்து நூறு சதிர்காய் போடுகிறோம்.கைப்பையில் இருந்த புகைப்படத்தை எடுத்து கண்ணில் ஒற்றி கொண்டாள்.உள்ளங்கையில் அதை வைத்து இருக்கமாக பற்றி கொண்டு திரும்பவும் வேண்டுதலை ஆரம்பித்தாள்

தெய்வ நம்பிக்கை மனிதனின் மிகப் பெரிய பலம்தான். எல்லாம் இழந்து விட்ட நிலையிலும், உடல்,மனம்,உயிர் அனைத்தும் ஒன்று கூடி ஒற்றை இழையில்

செயல்படும்பொழுது தெளிவு பிறக்கிறது, நிதானத்துடன் சிந்திக்க முடிகிறது,அப்படி

செயல்படும்பொழுது எதுவும் சாத்தியப்படுகிறது.மெல்ல அவளுக்கு படபடப்பு அடங்குவது போல இருந்தது.விட்டு துடித்து கொண்டிருந்த இதயம் இயல்பிற்கு திரும்ப பார்த்தது.கண்களை ஒரு முறை இருக்க மூடி ,பின் திறந்தாள்.மீண்டும் சாலையின் இருபுறமும் முன் போல பார்க்க தொடங்கினாள்.

ஓடிக் கொண்டிருந்த சாலை அவளுடைய சலனங்களுக்கெல்லாம் செவி சாய்க்காமல் தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தது.

வெகு நேரம் நின்ற கால்கள் தங்கள் சக்தியை இழந்து ஓய்விற்கு கெஞ்சின.கண்கள் இருட்டி சுற்றி இருந்த அரை குறை இருளையும் முழுமை படுத்தியது.லேசான மயக்கம் வருவது போல இருந்தது .ஒரு ஆட்டோ சீரான வேகத்துடன் அவளை கடந்து சென்று சற்று தொலைவில் வந்து நின்றது. இழுக்கும் இமைகளை அழுத்தி நிறுத்தி அதை உற்று பார்த்தாள், அதிலிருந்து……வெளிப்பட்ட அவன் ……அவன் அவளுடைய அருண்!!!!கண்களை நம்ப முடியாதவளாய் மீண்டும் ஆழ்ந்து நோக்கினாள் அருணேதான்!!

ஆட்டோ ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்து நிமிர யெத்தனித்தவனை, ஓடி சென்று தோளில் சாய்ந்து பெரிதாக அழத் துவங்கினாள். சிறிது தாமதித்து வந்தாலும் முகத்தை தூக்கி வைத்து, கோபித்து காளி அவதாரம் எடுப்பவள் இன்று தன் நிலை மறந்தவளாய் தோளில் சாய்ந்து அழுவது அவனுக்கு புதிராகவும் ஆச்சிரியமாகவும் இருந்தது.

மெல்ல அவள் தலையை நிமிர்த்த முற்பட்டு,

‘ஹேய் அனு,என்ன என்ன ஆச்சு ஏன் அழறடா ? ‘ என்றான்

அவளிடமிருந்து பதில் வரவில்லை மாறாக விசும்பல்தான் அதிகரித்தது.

‘அனு,ப்ளீஸ் சொல்லு , என்ன ஆச்சு ? ‘ இம்முறை குரல் சிறிது ஓங்கி கவலையுடன் ஒலித்தது

‘அரூண்….. உனக்கு ஒண்ணும் ஆகலையேடா ! நீ வர லேட் …..லேட் ஆனதும்

ரொம்ப பயந்துடேன் தெரியுமா ? ‘

மீண்டும் அழுகை முட்ட தடுமாறி அவள் சொல்லி முடிக்க அவன் கடகட என சிரித்தான்

‘சீ பைத்தியம் இதுக்குத்தான் இத்தனை அழுகையா ? என்ன பண்ணறது.அபீஸ் விட்டு

வெளியில் வரேன், மேனேஜர் ஏதோ ஒரு முக்கியமான டிஸ்கஷன்னு சொல்லி காரில் என்னை

தூக்கி போட்டுட்டு போய்ட்டார். அவர்கிட்ட இருந்து தப்பிச்சு வரதுக்குள்ள போதும் போதும் ஆகிவிட்டது. ‘

அதுவரை அழுது கொண்டிருந்தவள் சட்டென நிறுத்தி நிமிர்ந்தாள். பிடித்திருந்த அவனை விட்டு விலகி ஒரு அடி விலகி நகர்ந்தாள்.

‘நான் ஒருத்தி இங்க தவிச்சிட்டு இருக்கேங்கற நினைப்பு கூட இல்லையா உனக்கு , ஒரு போன் கூட பண்ணி சொல்ல முடியலை இல்லை! ‘ கண்கள் கண்ணீருக்கு பதில் இப்பொழுது கோபத்தை உதிர்த்தன.

‘இல்லை அனு,வந்து ப்ளீஸ் நான் சொல்றதை கேளு……. ‘

அவன் பின்னால் கூப்பிட்டு கொண்டு இருக்க, அவள் வழியும் கண்ணீரை துடைத்தபடி

திரும்பி வேகமாக அவ்விடத்தை விட்டு நடக்க ஆரம்பித்தாள்.


Email : sujal14@yahoo.com

Series Navigation

சுஜல்

சுஜல்