திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்
14
கொக் கொக் கொக்கோக்கோ
நேரத்தைப் பார்த்தான் செல்வம். இரவு பத்தரை மணி.
என்ன சின்னம்மா இந்த நேரத்தில கூவுது.
முந்தி கிழக்கு வெளிக்கிறதைப் பார்த்து கூவும். இப்ப குண்டு வெடிக்கிறதைக் கேட்டு கூவுது. மனுசரைப் போல இந்த வாயில்லாச் சீவன்களும் குழம்பிப் போச்சுதுகள் தம்பி.
சாப்பிட்ட கோப்பைகளை கழுவிக் கொண்டே சொன்னாள் கனகம். சிரித்தான் செல்வம். உண்மையாக இருக்குமோ!
மிஞ்சிப் போன புட்டு, கிழங்குக்கறியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து காலமைக்கென பத்திரப்படுத்திக் கொண்டிருந்தாள் செவ்வந்தி. குசினி பலகையில் கால் நீட்டிக் குந்தியிருந்து சின்னம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான் செல்வம். வந்ததிலிருந்து எடுத்ததுக்கெல்லாம் சின்னம்மா சின்னம்மாவென்று வாயோயாமல் சொல்லியிருப்பான். இன்னும் பொச்சம் தீரவில்லை.
ஒன்பதரைக்கே பொன்னுத்துரை மாமா போய்விட்டார். நடை தூரந்தான் வீடு. நான் தனியப் போறன் என்று அவர் சொல்லியும் கேளாமல் செல்வம் அவரோடு கூடப் போனான். லட்சுமி மாமியோடு கனடா புதினம் கதைக்க அட்டணக்கால் போட்டு அமர்ந்து விட்டான்.
ராயிருட்டியில மினக்கெடாதை நாளைக்குக் கதைக்கலாம் என்று துரத்தாத குறையாக அனுப்பி விட்டார் மாமா. தங்கச்சிமார் குடும்பங்கள் போய் விட்டன. சுந்தரமும் படுக்கப் போய் விட்டான். அவன் காலையில் பன்குளத்திற்கு பஸ் பிடிக்க வேனும்.
நாங்கள் கதைச்சது அந்தப் பிள்ளைக்குக் கேட்டிருக்குமா தம்பி ?
கேட்டாலும் பரவாயில்லை சின்னம்மா. நல்ல பொடியன். ஏன் சின்னம்மா சுந்தரத்துக்கு காலைச் சாப்பாடு குடுக்க ஏலுமோ ?
ஓமனை வெள்ளனையோட சாப்பிடுதோ தெரியேல்லை இடியப்பம் அவிச்சுக் கட்டிக் குடுப்பமா ?
ஓம் சின்னம்மா.
பாத்திரங்கள் கழுவி குசினி மாடத்தில் கவிழ்த்து விட்டாள். எவ்வளவு நேரமானாலும் அடுத்த நாளின் அடுக்குகளைப் பாராமல் படுக்க மாட்டாள் சின்னம்மா.
செவ்வந்தி நீ போய் படனம்மா.. .. .. செல்வம் சொன்னான்.
அவள் சின்னம்மாவின் சாயல். அங்க லட்சணங்கள் அப்படியே அச்சொட்டாய் வராவிட்டாலும் கட்டுமட்டான பேச்சும் நடையும் அம்மாதான். சின்னனில் குழப்படிதான். குமரான பின் அம்மாவைப் பார்த்துப் பார்த்து பொறுப்பு வந்து விட்டது.
அவள் அங்கிருப்பது செல்வத்திற்கு இடைஞ்சல். அவனுக்கு சின்னம்மாவோடு தனியக் கதைக்க வேனும். இன்னும் தெளிவு கிடைக்காத ஒரு கேள்விக்கு விடை தெரிய வேனும். ஓலெவல் பரீட்சையில் ஏழு விசேட சித்திகளைப் பெற்றவன், ஏலெவலில் நாலு ஏ எடுத்து பெருமை தேடித் தரப் போகிறவன் என்று முழுப் பள்ளிக்கூடமே எதிர்பார்த்திருக்கிறவன்!
இடையில் என்ன நடந்தது ?
தொண்ணூற்றைந்தில் செல்வம் கனடாவுக்கு ஏறிய போது ஜெயத்திற்கு பதின்மூன்று வயசு. துடியாட்டத்தில் மிச்ச சொச்சம் இருந்தாலும் அப்பவே அவனிடம் பொறுப்பும் தெரிந்தது. படிக்கச் சொல்லிக் கத்தத் தேவையில்லை. ஹோம் வேர்க் செய்யாமல் படுக்க மாட்டான். செல்வம் செய்த பிரளியில் சிறங்கையளவு கூட இல்லை. அப்பாவின் ஆறுதலும் சின்னம்மாவின் ஆளுமையும் அப்படியே அவனில் இறங்கியிருக்கு என்று எண்ணிக் கொள்வான் செல்வம். கையால் பிடிச்சு வைச்ச மாதிரியிருக்கும் சின்னம்மாவின் அழகான மூக்கு கடைசிப் பிள்ளைக்குத்தான் வாய்த்திருந்தது.
ஒரேயொரு சிறுபிள்ளைத்தனம். ராத்திரி ஒன்பது மணியானால் தாயின் மடியில் தலை சாய்க்க வேனும். யார் பக்கத்திலிருந்தாலும் சரி. தலைமயிரில் விரல் விட்டு வகிடு எடுத்து வருடிக் கொண்டே போவாள் சின்னம்மா. தம்பி நித்திரையாகிப் போவான். பிறகு அப்பாவோ செல்வமோ தூக்கி பாயில் வளர்த்த வேனும். இது தினமும் நடந்த சங்கதி.
பதினெட்டு வயசிலும் அப்படித்தானா இருந்தான். அப்படியிருந்தவன் எப்படி ? சின்னம்மாவிடம் கேட்க வேனும்.
செவ்வந்தி கைகால் அலம்பிவிட்டு சுவாமியறைக்குள் போய் வந்து படுக்கப் போனாள். அப்பாவும் சரிந்து விட்டார். சுற்றிலும் மண்டியிருந்த இருட்டை கிணற்றடி லைற் வெளிச்சம் பெரிதாகக் காட்டிற்று. முற்றத்தில் கட்டிலிருந்த நாய் மூசிக் கேட்டது.
நாய் அவிட்டு விட்டாச்சா சின்னம்மா ?
இஞ்ச பாரன் கதைப் பிராக்கில சாப்பாடு வைக்க மறந்திற்றன்.
மிச்சமான புட்டுடன் மத்தியான மீன்கறியில் கிடந்த தலைகளை நிறைய அள்ளிப் போட்டுக் கொடுத்தாள். பசியில் பொறுமையிழந்து எழுந்து நின்ற நாய் தட்டத்தை குறி பார்த்தது. தனக்குத் தானெனத் தெரிந்ததும் வாலை ஆட்டியது. தொங்கிப் பாய்ந்தது. பசி வேகத்தில் விறாண்டிய மண் கோப்பையிலும் சிதறிக் கிடந்தது. கிணற்றடியில் கழுவிக் கொண்டு வந்து வைத்த மாத்திரத்தில் சளக் புளக் சத்தம் கேட்டது. எட்டத்தில் நின்று பார்த்தான்.
சாப்பிடேக்குள்ள பக்கத்தில நிக்காதை தம்பி வாய் வைச்சுப் போடும் என்று உள்ளிருந்து சொன்னாள் சின்னம்மா.
ஓம் சின்னம்மா.
சாப்பிட்டு முடியுமட்டும் அங்கேயே நின்றான். கழுத்துச் சங்கிலியைக் கழட்டி விட்டான். கட்டவிழ்ந்த புழுகத்தில் வளவை ஒரு சுற்று வந்தது. அவனுடன் அதற்குள் நேசமாகி விட்டது போல காலடியில் வந்து உராய்ந்து தனகியது. கிடுகு வேலியிருந்தால் ஓட்டையால் புகுந்து தெருவில் திரியும் தன் சகபாடிகளை விசாரித்திருக்கும். வேறு வழியில்லாமல் முற்றத்தை அளந்தது. மாமரத்தடியில் காலைத் தூக்கி ஒன்றுக்கு இருந்தது. திரும்பவும் கோடிப்பக்கம் ஓடி மறைந்தது.
இனி விடியுமட்டும் சுதந்திரம். அது போன திக்கையே பார்த்துக் கொண்டு நின்றான் செல்வம். மனுசனோ மிருகமோ சுதந்திரம் எவ்வளவு நிறைவு!
ஏன் சின்னம்மா என்ன பெயர் நாய்க்கு ?
இதுக்கும் ரிக்கிதான்.
ஏன் ?
அதின்ர ஞாபகமா வைச்சது.
அவனுக்கு ஒரு விசயம் பிடிபடவில்லை. பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்கிறோம். வளர்க்கும் நாய் பூனைகளுக்கு மட்டும் ஆங்கிலப் பெயர்கள் மாதிரி ரிக்கி ருக்கி மிக்கி என்று ஏன் ? மனிதரிலிருந்து வேறுபடுத்திக் காட்டவா அல்லது அழைப்பது எளிது என்பதாலா ? முத்து, மணி, ராஜா, ராணி என்று அழைத்தால் இன்னும் நல்லாயிருக்குமே!
சின்னம்மா கைகால் அலம்பி நெற்றி நிறைய வீபூதி அப்பிக் கொண்டு வந்தாள்.
படுக்கப் போறீங்களா ?
ஏனனை ?
இல்லை.. .. .. அவன் இழுத்தான்.
சொல்லனை.
திடாரென்று என்ன நடந்தது தம்பிக்கு ?
சின்னம்மாவின் முகம் மாறிற்று அழுது விடுபவள் போல. நித்திரை கொள்ளப் போகிற சமயத்தில் கேட்டிருக்க வேண்டாம்.
படுங்க சின்னம்மா நாளைக்குக் கதைப்பம்.
அவளுக்குப் புரியும், வீடு அடங்கினாப் பிறகு கேட்கத்தான் செல்வம் முழித்துக் கொண்டிருக்கிறான் என்று. எதைச் சொல்வாள். எதை சொல்லாமல் விடுவாள். குணநடையில் அப்பா மாதிரி. சொல்வழி கேட்பதில் அண்ணன் மாதிரி. படிப்பில் சுட்டி. பின்னுக்கு அண்ணனைப் போலவே நல்லா வருவான் என்று நம்பியிருந்த பிள்ளை.
கேட்டுக் கேள்வியில்லாமல் கண்கள் பொழிந்தன.
என்ர பிள்ளை சொன்னது ஞாபகத்தில வந்திற்றுது தம்பி.
என்ன சின்னம்மா ?
உன்ர அண்ணன் கஷ்டப்பட்டு எங்களையெல்லாம் பாக்கிறான். நீ பெரிசா வந்து அண்ணனைப் பார்ப்பியா தம்பி என்டு ஒருநாள் கேட்டன். அண்ணன்ரை நல்ல குணத்துக்கு அவருக்கு கஷ்டமே வராது. நான் கடைசி வரைக்கும் அண்ணனை பார்ப்பம். நீ யோசிக்காதை அம்மா என்டு சொன்ன பிள்ளை. இப்ப எங்க இருக்கோ தெரியேல்லை.
அவன் நகர்ந்தான். படுத்தாலும் இப்போது நித்திரை வருகிற மாதிரியில்லை.
தம்பீ
ம்
என்ர பிள்ளை வந்திருவானாடா ?
வந்திருவான் சின்னம்மா நீங்க கவலைப்படாதீங்க.
மற்றப் பிள்ளைகளைப் போல படம் கிடம் பார்க்கப் போக மாட்டான். எப்பவாவது போறதுக்கு ஆசை வந்தா அம்மா படத்துக்குப் போறன் காசு தாங்கோ என்டு கேட்டு வாங்கிற பிள்ளை. வாசிகசாலையிலிருந்து பெரிய பெரிய புத்தகமெல்லாம் கொண்டு வந்து வாசிப்பான். தகப்பனோட இருந்து றேடியோ நியூஸ் கேட்பான். ஆருக்கும் வாய் காட்ட மாட்டான். அக்காமாருக்கு ஓடியோடி வேலை செய்வான். எதையும் மறைச்சு நடக்க மாட்டான். சோதனை முடிஞ்சாப்பிறகு கொஞ்ச நாளா பிந்தி வந்தான். என்னன்டு கேட்டா சோதனை முடிஞ்சிற்றம்மா. பொடியன்களோட கதைச்சிற்று வாறன் என்டு சொல்லுவான். மாஞ்சு மாஞ்சு படிச்ச பிள்ளை அவனைப் போட்டுத் தொந்தரவு செய்யாதை என்டு அப்பா சொல்லுவார். கோழிக் குஞ்சு மாதிரி வீட்டுக்கு அடங்கின பிள்ளையை ஆரோ வசியப்படுத்தி கூட்டாற்றுப் போயிற்றாங்களப்பு.
சின்னம்மா சொல்வது சரிதான். தம்பி வளர்ந்தது நல்ல அன்பான சூழலில். வசதிகள் சேர்ந்து விட்ட கஷ்டமற்ற சூழலில். புலிக்குப் போவதற்கான தேவைகளே அவனுக்கு இல்லை. ஆருடைய பேச்சிலோ எடுபட்டுட்டான். வந்த வெள்ளம் இருந்த தண்ணியையும் அள்ளிக் கொண்டு போயிருக்கு
ஆர் சின்னம்மா சொன்னது புலிக்குப் போனதென்டு ?
ஒன்டாப் படிக்கிற பொடியன் குணாளன். நல்ல சிநேகிதம். சோதனைக்குள்ள இராப்பகலா விறாந்தை மேசையிலிருந்து ஒன்டா படிக்குங்கள்
என்ன சொன்னவன் ?
அவன் எங்க சொன்னவன். ரெண்டு மூனு தரம் தேடிப் போனனான். தெருவில கண்டு நிப்பாட்டிக் கேட்க தனக்கு தெரியாதென்டு சொல்லிப் போட்டான். கத்திக் குளறவுந்தான் உண்மை சொன்னான்.
நீங்க கவலைப்படாதீங்க சின்னம்மா. ஆருடைய காலில விழுந்தென்டாலும் தம்பியைக் கொண்டு வாறது என்ர பொறுப்பு.
செல்வத்தின் உறுதிமொழி போன உயிரைக் கொண்டு வந்தது போலிருந்தது கனகத்திற்கு. கொஞ்சம் நிம்மதி சேர அந்த ஆறுதலில் நித்திரைக்குப் போனாள்.
குடும்பத்தைத் தாங்கு தாங்கென்று தாங்கிக் களைத்திருக்கும் சின்னம்மாவுக்கு ஆறுதல் குடுக்க வேனும். அது வரும் இது வரும் என்று பயந்து கொண்டிருந்தால் ஒன்டும் நடவாது. நாளைக்கே காரியத்தில் இறங்க வேனும்.
செல்வத்திற்குள் என்றுமில்லாத ஓர்மம் பிறந்தது. திடசங்கற்பம் கொழுந்து விட்டு எரிந்தது. பொன்னுத்துரை மாமா நினைவுக்கு வந்தார். வருத்தவாளியாயிருந்த போதும் அவர் காட்டிய துணிவு மலைபோல் முன்னுக்கு நின்றது. அவருடைய மருமகன் தானே நான். அதில் கால்வாசியென்றாலும் எனக்கு இருக்கத்தானே வேனும்!
கொக்கோக்கோ.. .. .. அதே சேவல் மீண்டும் கூவியது, அவனுடைய சித்தத்தை ஆமோதிப்பது போல.
அந்தச் சூட்டோடு செல்வம் சுவாமியறைக்குள் போனான். கொண்டு வந்த சூட்கேசைத் திறந்தான். பாஸ்போட் பையுடன் வெளியே வந்தான்.
சின்னம்மா ?
என்னப்பு.
இந்தாங்க இதில ஏழாயிரம் டொலர்ஸ் இருக்கு. கிட்டத்தட்ட ஐஞ்சு லட்சம் வரும். இதை அப்படியே கொடுத்தென்டாலும் நான் தம்பியைக் கூட்டி வருவன். நீங்க யோசிக்காதீங்க சின்னம்மா
இரண்டு கையாலும் வாங்கிய அந்தப் பணத்தாள்களில் சின்னம்மாவின் கண்ணீர் முத்துக்கள் அடுத்தடுத்து விழுந்ததை அவன் கண்டும் காணாதது போல் விலகினான்.
(தொடரும்)
***
karulsubramaniam@yahoo.com
- மொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3
- மார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்!
- தூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்
- கடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்
- அகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)
- கிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை
- என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும்
- கவிதை மொழியும் உரை நடை மொழியும்
- ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்
- அரசியல் : ஒரு விளக்கம்
- பாரதீ…
- பலிகொடுத்து வழிபடுவதைப் பற்றி…
- கற்றதனாலாய பயனென்கொல்
- பல்லாங்குழி
- குமரி உலா 3
- சோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து
- மனம்
- ஒரு மத்தியான நேரத்து சிந்தனை..
- மேலும்…
- சிலநேரங்களில்
- வைரமுத்துக்களின் வானம்-3
- தமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு
- கங்காணி
- வேலை
- பச்சைக்கிளி
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2
- ஹே பக்வான்
- கடிதங்கள்
- ஆனந்தியின் டயரி : காதலா காவலா ?
- கல்பாக்கம்
- நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா ?
- விடியும்! நாவல் – (14)
- கறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை
- வாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)
- பூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்
- காலத்தின் கட்டாயம்
- பாராட்டு
- இருவர்
- வைரமுத்துவே வானம்
- திருவிழா
- காதல் கருக்கலைப்பு