‘H1 மாமி ‘

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

வ.ந.கிரிதரன்


நியூயோர்க் நகரிலுள்ள பிள்ளையார் கோயிலுக்கு ஒரு மாலை சென்றிருந்தபொழுது தான் சாரதா மாமியை நீண்ட நாட்களின் பின் சந்தித்திருந்தேன். கடைசியாக அவவை நான் சந்தித்து இன்னும் பசுமையாக மனதினில் ஞாபகம் இருக்கிறது. ‘சாரதா மாமிக்கென்ன அவ கொடுத்து வைத்தவ. அவவின் மருமகன் தாமோதரன் பெரீய்ய ஜாவா புறோகிறமராம். சம்பளம் நூறைத்தாண்டுமாம். இந்தியாவிலிருந்து நேரே H1 இலை வந்தவனாம். கொடுத்து வைத்தவ சாரதா மாமி ‘ என்று அப்பொழுது ஏங்கியது கூட் இன்னும் ஞாபகம் அப்படியே இருக்கிறதே. மாமியைக் கூட நாங்கள் H1 மாமியென்று தான் நாங்கள் பட்டப் பெயர் வைத்து அழைப்பதும் வழக்கம். என் கணவரோ சாதாரண தொழிற்சாலையொன்றில் சுப்பர்வைசராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுதெல்லாம் நானும் என் கணவரை ஏதாவது கம்யூட்டர் கோர்ஸ் படிக்கும் படி ஓயாது நச்சரித்துக் கொண்டிருப்பேன். அந்த அளவுக்கு டாட்.காம்களின் ஆட்சியில் உலகே ஆடிக்கொண்டிருந்த காலகட்டம்.. டாட்.காம்கள் டெத்.காம்கள் ஆகிவிட்ட இந்த நிலையில் சாரதா மாமியைக் கண்டபோது மனது கிடந்து பரபரத்தது. சாரதா மாமியின் தோற்றம் கூட அந்தப் பரபரப்பினை அதிகரிக்க வைத்து விட்டது. சாரதா மாமியின் அன்றைய தோற்றம் என்ன இன்றைய வாடிச் சோர்ந்த தோற்றம் தானென்ன ?

ஒவ்வொரு நாளும் H1 இலை வந்தவர்கள் படும் பாடு பற்றியெல்லாம் கதைகதையாகக் கேள்விப்பட்டுத் தானிருந்தேன். சாரதா மாமியின் மருமகனுக்கும் அப்படியொரு நிலை வந்திருக்குமோ ?

‘மாமி, என்னைத் தெரிகிறதா ? நான் தான் வசுந்தரா. ‘

சாரதா மாமியின் வாடிய முகத்தில் சிறிது மலர்ச்சி படர்ந்ததை அவதானித்தேன். அந்த மலர்ச்சி முகத்தில் பரவ என்னைப் பார்த்த சாரதா மாமி ஒரு முறை கட்டித்தழுவி ‘வசுந்தராவா. இன்னும் அதே மாதிரியே இருக்கிறாயேயம்மா ? ‘ என்று சிறிது வியப்புடன் கேட்டார்.

‘நீங்கள் தான் நல்லாக வாடிப் போய் விட்டார்கள் மாமி. என்னால் நம்பவே முடியவில்லையே ‘

என்றேன். நான் இவ்விதம் கூறவும் மாமியின் முகத்தில் சிறிது கவலை படர்ந்தது.

‘அதையேன் கேட்கின்றாய் ? அது பெரிய கதையம்மா ? ‘ என்று மாமி பெருமூச்செறிந்தார்.

‘ என்ன மாமி. அப்படியென்ன நடந்து விட்டதென்று இந்தப் பெரிய பெருமூச்சு ‘ என்று நான் மாமியைத் தூண்டி விட்டேன்.

‘அதெயேன் கேட்கின்றாயம்மா ? பேசாமல் ஊரிலேயே இருந்திருக்கலாம். விதி யாரைத்தான் விட்டது ? ‘

‘விதியைச் சபிக்கிற அளவுக்கு அப்படியென்ன மாமி உங்களுக்கு நடந்து விட்டது ? ‘ என்றேன்.

‘அமெரிக்காவிலை கொழுத்த சம்பளத்துடன் மாப்பிள்ளையென்று என்னுடைய செல்ல மகளை அனுப்பி வைத்தால் நிலைமை இப்படியாகுமென்று யார் கண்டது ? ‘

‘அப்படியென்ன நடந்து விட்டது மாமி ? ‘

‘வேறென்ன நடக்க வேண்டும் ? எல்லாமே நடந்து விட்டதம்மா ? நடந்து விட்டதே ‘ என்று மீண்டும் ஒருமுறை நீண்டதொரு பெருமூச்சை மாமி விடவும் எனக்கு ஆவல் அதிகரித்து விட்டது.

‘உஙகளுக்கென்ன மாமி. லட்சக்கணக்கில் உழைக்கும் மருமகன். பிறகென்ன கவலையோ ‘

‘லட்சக் கணக்கில் உழைக்கும் மருமகனோ ? அதெல்லாம் அந்தக் காலமம்மா. ‘

‘என்ன மாமி கூறுகின்றீர்கள் ? ‘

‘மருமகனின் வேலை போய் ஆறுமாதமாவதிருக்கும். கம்பனிக்காரன் எங்கள் ஊர்க்காரன் என்பதால் தப்பித்தோம். மருமகனின் வேலை போய் விட்டதால் அவரை பெஞ்சிலை தூக்கிப் போட்டு விட்டார்களாம். சம்பளம் ஒன்றுமில்லை. அப்படியே இன்னுமொரு வேலை கிடைக்கும் வரையிலாவது ‘பெஞ்சிலை ‘ இருந்து சமாளித்தால் தான் தப்பலாம். அல்லது உடனேயே விசாவை கான்சல் பண்ணி ஊருக்கு அனுப்பி விடுவார்களாம். இப்போ ஒருவேளை உணவிற்கே நான் உழைத்தால் தான் உண்டு என்ற நிலை.. ‘

‘என்ன மாமி சொல்லுகிறீர்கள் ? ‘

‘மருமகனும் மகளும் பகல் முழுவதும் வேலை தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஊரவர் குழந்தைகளைப் பார்க்கும் ஆயா நான் தான். என்னுடைய ஆயாவேலையில் தான் இப்பொழுது குடும்பமே ஓடுகிறதம்மா ? ‘

பெருமூச்சு விட்டவாறு செல்லும் H1 மாமியைப் பார்க்கப் பாவமாயிருக்கிறது.

***

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்