கண்ப்பதி பப்பா.. மோரியா!!

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

புதியமாதவி, மும்பை.


தாயே!

சகலகலா வல்லியே!

காஞ்சி காமாட்சியே!

மதுரை மீனாட்சியே!

இது என்ன வேடிக்கை தாயே..

எனக்கு அருள் தந்து என் புகழ் சேர்ப்பதாக நினைத்து என்னைச் சங்கடத்தில் மாட்டி

விட்டது ஏன் தாயே ?

ஆண்டுக்கு ஒரு முறை பூலோகம் சென்றுவர எனக்கு மட்டும் தனி விசாவா ?

போதும்தாயே, என் பாஸ்போர்ட்டையே ரத்து செய்துவிடு தாயே.

ஏன் ? என்று மட்டும் கேட்காதே. எல்லாம் அறிந்தவள் நீ அல்லவா ?

இருந்தும் ஏனோ சரியான காரணங்கள் இல்லாமல் ரத்து செய்ய மாட்டேன் என்கிறாயே.

பூலோகத்து அம்மாக்களைப் பார்.. அவர்கள் எல்லாம் காரணம் கேட்டா காரியம்

செய்கின்றார்கள் ?

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தஸ்மா, புஸ்மா என்று ஏதாவது ஒர் இஸ்மா போதுமே

தாயே..

எனக்குத் தெரியும்.. நீ இந்த டிஸ்மாக்களை எல்லாம் வைத்துக் கொண்டா ஆட்சி

நடத்துகின்றாய்.. சரி ..

காரணங்கள் கேட்டாய். அவ்வளவுதானே..

இதோ 1,2, 3, 4 என்று அடுக்குகின்றேன்…

காரணம் 1..)

தாயே.. கம்சன், சூரன், சிசுபாலன், இரணியன் .. இவர்களை எல்லாம் அழிக்க

நடந்த நம் பரம்பரையின் அவதாரங்கள் என்னால் வெறும்கதையாகிவிட்டன.

ஏனென்றால் நான் இன்று அவர்களின் இல்லங்களில்தான் அவதரிக்கின்றேன்.

அவர்களின் மண்டபத்தில்தான் எனக்கு பூஜையும் பஜனையும் ஆரத்தியும் அலங்காரமும்

நடக்கின்றது. உன் பிள்ளை உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்ய அறியாதவன் தாயே

அவர்களை என்னால் அழிக்கவும் இயலவில்லை. என் தும்பிக்கையால் அவர்களை என்னால்

அணைக்கவும் முடியவில்லையே!

ஆண்டாண்டுக்கு என் இந்த வேதனை மனதை ரணமாக்குகின்றதே தாயே..

காரணம் 2)

தாயே..மனிதர்களைத் தானே நாம் படைத்தோம்..

அதில் இனங்களைப் படைத்தோமா ? சொல்

தாயே.. மெளனங்களைத் தானே நாம் படைத்தோம்..

சொல்லின் மொழிகளைப் படைத்தோமா ? சொல்.

தாயே.. மலைகளைத் தானே நாம் படைத்தோம்..

அதில் போர்முனைகளைப் படைத்தோமா ? சொல்.

தாயே.. நதிகளைத் தானே நாம் படைத்தோம்..

அதில் பிரிவினை விதைகளைப் படைத்தோமா ? சொல்.

தாயே.. ஏன் மெளனமாக இருக்கின்றாய் ?

மராட்டியர் கண்பதி, கன்னடர் கண்பதி, தமிழர் கண்பதி.. என்றெல்லாம் எனக்கு

மொழியின் இடத்தின் அடையாளம் கொடுத்தபோது கூட சரி, அன்பின் மிகுதியால்

தனதாக்கிக் கொள்ளும் ஆர்வத்தில் செய்கின்றார்கள் என்று அமைதியாக கொழுக்கட்டை

மாதிரி உட்கார்ந்திருந்தேன்.. இப்போதெல்லாம் உனக்குத் தெரியுமா தாயே..

நான் உன் மகன் .. உன் மூத்த மகன் கணபதி அல்லன்.

நான் தேவர்மகன் கணபதி,,,

நாடார் கணபதி, கோலியர் கணபதி, முக்குலத்தோர் கணபதி, பள்ளர் கணபதி,

பறையர் கணபதி, நாயர் கணபதி, நாயக்கர் கணபதி…..

தாயே ..

எனக்குச் சாதிச்சான்றிதழே கொடுத்துவிட்டார்கள்..!!!

என்னைக் காப்பாற்று..

காரணம் 3)

ஆரவாரத்தை நம்பிய தம்பி முருகன் ஞானப்பழத்திற்காக உலகைச் சுற்றினான்.

அமைதியை விரும்பிய நானோ ‘ அம்மை-அப்பனே உலகம் ‘ என்று உங்களை

அல்லவா சுற்றி வந்தேன் ?

தாயே.. இன்று நான் அமர்ந்திருக்கும் அலங்கார மேடைகளைப் பாருங்கள்..

பஜனையும் பக்தியும் எங்கோ தலைமறைவாகி விட்டதே..

பாட்டு என்ற பெயரில் காட்டுக்கத்தல் .. என் வரவிற்காக வெடிக்கப்படும்

வெடிகள்.. எல்லாம் கேட்டு கேட்டு என் பெரிய்ய்ய காதுகள் கூட செவிடாகிவிடுமோ

என்று பயமாக இருக்கின்றது. செவிடாகி விட்டால் என் உண்மை பக்தர்களின்

குறைகளை எப்படி கேட்பேன் தாயே..

காரணம் 4)

தாயே நானா இவர்களிடம் என்னை ஆளுயர சிலை எடுத்து கடலில்

கரையுங்கள் என்று சொன்னேன்.என் சிலைக்கு அலங்காரம் என்ற பெயரில்

வண்ண வண்ண ரசாயணக் கலவைகளைப் பூசி கடலில் கரைக்கின்றார்களே..

அவர்கள் நாம் அவர்களுக்குப் படைத்தப் பாற்கடலை அல்லவா நச்சாக்கி

இந்த பூமிமகளை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நீரிருந்தால் தானே நிலமிருக்கும்

நீரிருந்தால் தானே உயிரிருக்கும்

உயிர் இருந்தால் தானே

நீயும் நானும்

அதில் கலந்திருக்க முடியும்..

ஒவ்வொரு உயிரிலும் இருப்பது நீயும் நானுமல்லவா

நம்மையே நம் பெயராலேயெ அழித்துக் கொண்டிருக்கின்றார்களே தாயே

தாயே என்னைக் கடலில் கரைத்தப் பின் மறுநாள் நீ கடற்கரைக்கு வா..

உன் கண்மணியின் அங்கங்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கும்..

ஆப்கானிஸ்தானத்திலும் ஈரானிலும் அமெரிக்கா போட்ட குண்டு வெடிப்பில்

சிதறிக்கிடக்கும் காட்சியைப் போல கடற்கரை..

ஏன் அழுகின்றாய் ? எத்தனைத் தடவை அறிஞர்கள், அறிவியல் வல்லுநர்கள்

இதை எல்லாம் சொல்லி சொல்லி சளித்துப் போய்விட்டார்கள்..தெரியுமா ?

அருகம்புல் அர்ச்சனையைத் தானே நான் கேட்டேன்..

இன்று இந்த ஆடம்பர பந்தலில் என்னை நிறுத்தி வைத்து

அடிமையாக்கி சிறைவைத்து காவலுக்கு கருப்பு பூனைகளையும்

வைத்து என் மீதிருந்த நம்பிக்கையை எனக்கே கேள்விக்குறியாக்கி..

என்னை …அநாதையாக்கி விட்டார்கள் தாயே..

கண்பதி பப்பா மோரியா

புடுச்சியா வர்ஷி லவுக்கர் யா

கண்பதி பப்பா மோரியாா வ்வ்வ்வ்!!!

தாயே.. அவர்களின் கோஷங்களில் மயங்கிவிடாதே!

அர்த்தங்கள் புரியாத கோஷங்களை இவர்கள் அரசியல் வாதிகளிடன் கற்றுத்

தேர்ந்துவிட்டார்கள்..

தாயே .. பராசக்தியே .. என்னைக் காப்பாற்று..

கண்பதியின் ஊர்வலம் தொடர்கின்றது…

கண்பதி பப்பா மோரியா

புடுச்சியா வர்ஷி லவுக்கர் யா

கண்ண்ண்பதி பப்ப்பா மோரியாஆஆஆஆஅ!!!!!!!

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை