நம்பி.
வானத்தில் கரு மேகம் சூழத்தொடங்கியது. பால்வாடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் நித்யா.
‘டாச்சர், புள்ளங்கள சீக்கிரமா அனுப்பிடலாம். மழை வரும் போல இருக்கு ‘
‘ஆமா ஆயா. நாமும் கிளம்பிடலாம் ‘ ஆமோதித்தாள் நித்யா. பத்து நிமிட நடையில் வீட்டுக்குப் போய்விடலாம். தன் குழந்தையையும் தூக்கிக்கொண்டு வேகமாய் நடந்தாள்.
அப்பொழுதெல்லாம் பள்ளிக்கூடம் விட்டு கெளதமுடன் வருவாள். மற்ற பிள்ளைகள் எல்லாம்
‘ஆம்பளயும் பொம்பளயும் ஜோடி ஜோடி
ஆப்ப கம்ப எடுத்துகிட்டு போடு போடு ‘
என்று கிண்டல் பண்ணுவார்கள். ஆனால் நித்யாவுக்கு கெளதமிடம் தனி பாசம். அவன் சித்தி படுத்தும் கொடுமைகளை அடுத்த வீட்டில் இருந்து பார்ப்பவளாயிற்றே.
அன்று பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் ‘ஹோ… ‘வென்று ஓடி வந்தனர். மறு நாள் ஆடிப் பெருக்கு. முள்ளியாற்றில் தண்ணீரும், குழந்தைகளிடம் குதூகுலமும் தத்தளித்தது.
‘கெளதம், எனக்கு தேர் செஞ்சு தாயேன் ‘ நித்யா கெஞ்சலாகக் கேட்டாள்.
‘அதுக்கு குறும்பை வேனுமே ‘
‘எங்க தென்னந்தோப்புல பொறுக்கலாம் ‘
‘சரி. வா ‘
அழகாய் தேர் செய்து கலர்தாள் ஒட்டி அலங்கரித்தான். நித்யா பூவரசு இலையில் மருதாணி அரைத்து எடுத்து வந்தாள்.
‘கைய நீட்டு. போட்டு விடுறேன் ‘
‘வேண்டாம் நித்யா.. வீட்டுல நிறைய வேலை இருக்கு ‘
‘அஞ்சு நிமிஷம்தான். ப்ளீஸ்…. ‘
‘ஏற்கனவே நாழியாயிடிச்சி. சித்தி அடிப்பாங்க ‘
‘அப்ப எனக்கு ஒன்னோட தேரும் வேண்டாம் ‘
கோபமாய் மருதாணியை பக்கத்திலிருந்த வேலியில் எறிந்தாள். தேரை பிய்த்துப் போட்டாள். கெளதம் விக்கித்து நின்றான். சித்தியின் அதட்டல் கேட்கவே ஓடிவிட்டான்.
அதன்பின் ஒரு வாரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. நித்யா பொறுத்து பார்த்துவிட்டு ‘சாரி ‘ என்று வலிய பேசினாள். பள்ளியிலிருந்து திரும்பும்பொழுது மழை தூறிக்கொண்டிருந்தது. நித்யாவின் குடையில்தான் கெளதம் வந்து கொண்டிருந்தான்.
‘கெளதம், நீ மட்டும் எப்படி எல்லா வேலையும் பார்த்துகிட்டு நல்லாவும் படிக்கிற ‘ குடைக்கு வெளியில் கை நீட்டி மழை நீரை பிடித்தவாறு கேட்டாள்
‘காலைல சித்தி எழும்புறதக்கு முன்னாடியே படிச்சுடுவேன் ‘ சாலையில் தேங்கியிருந்த தண்ணீரை காலால் எத்திவிட்டு ‘நான் எட்டாவது படிச்சு பாஸ் பண்ண உடனே எங்க மாமாவோட கும்பகோணம் போயிடுவேன். அப்புறம் பெரிய படிப்பு படிக்கனும். உன்னய நிறைய இடத்துக்கு கூட்டிகிட்டு போகனும் ‘ என்றான்.
நித்யா அழகாய் கை கொட்டி சிரித்தாள். ‘நான் ஏன் உங்கூட வரனும் ‘ என்றாள்.
‘தெரியல. வரமாட்டியா ? ‘
‘நான் உன்னோட வரனும்னா அந்த தாழம்பூவ பறிச்சுத் தரனும். ‘
சற்று தொலைவில் பிள்ளையார் கோயில் குளத்தருகே தாழங்காடு அடர்த்தியாய் மண்டியிருந்தது.
‘ப்பூ… இவ்வளவுதானா ‘ கெளதம் சட்டையை கழற்றி நித்யாவிடம் கொடுத்துவிட்டு வேகமாய் ஓடினான்.
‘வேண்டாம் கெளதம். நான் சும்மானாச்சுக்கும் கேட்டேன். காட்டுக்குள்ள பாம்பு இருக்கும். உச்சிக்கு போகாத. பயமா இருக்கு ‘ என்று கீழிருந்து கூச்சலிட்டாள்.
தாழம்பூவை பறித்து நித்யாவை நோக்கி வீச எத்தனித்தவன் பிடி நழுவ தலைகுப்புற விழுந்தான். நேரே குளத்துக்கு அடியில் கிடந்த கல்லில் தலை அடிபட்டு மேலே வந்தபொழுது இரத்தமாய் மிதந்தான்.
நித்யாவின் அலறல் கேட்டு ஓடி வந்தவர்கள் உடன் தர்ம ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல நல்ல வேளை உடல் பிழைத்தான். மூளைதான் உறைந்து போனது.
பழைய நினைவுகளை உதறிவிட்டு வீட்டு வேலைகளை முடித்தாள் நித்யா. குழந்தையை தூங்க வைத்து, கணவனுடன் சாப்பிட்டுவிட்டு தானும் படுத்தாள். ஆனால் நினைவு ஏனோ பழைய இளமை நாட்களையே நாடியது.
கெளதமுக்கு அப்படி ஒரு விபத்து நடந்திராவிட்டால் வாழ்க்கை எப்படி திசை மாறிப் போயிருக்கும். அவனுடன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று கனவுகள் வைத்திருந்தாள். துக்கம் தொண்டையை அடைக்க எழுந்து உட்கார்ந்தாள். விசும்பல் சத்தம் கேட்டு கணவனும் விழித்துக் கொண்டான்.
‘ஏன் நித்யா அழுவுற ‘
‘சும்மாத்தான் ‘
‘உனக்கு தாழம்பூ பறிச்சு தரலேன்னு கோபம். அதான் அழுவுற ‘
‘அதெல்லாம் ஒன்னுமில்ல. நீ தூங்கு ‘
*****
— நம்பி
nambi_ca@yahoo.com
- ஸ்தல புராணம்
- அழியா எழில்
- எல்லா சொகமும் இழக்கலாச்சு
- ஒலி.
- புகழ்ப் பறவை பிடித்த கதை
- தமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி*
- தெலுங்குப் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
- போலச் செய்தல் ?
- பாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்
- கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்
- குறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ
- அளபெடை
- புதுக்கவிதைகள்!
- நினைவுச்சின்னம்
- உனக்கும் எனக்கும்:எட்டு கவிதைகள்
- வெறுக்கிறேன்
- தேனீர்க் கோப்பையிலான புயல்
- கண்ணே கலைமானே
- அரசியல் இருக்கைகள்
- வைரமுத்துக்களின் வானம்-2
- புதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்.
- கடிதங்கள்
- அவன் அவள் காதல்
- முல்லையூர் லிங்கம்
- விடியும்! நாவல் – (12)
- தாழம்பூ
- கண்ப்பதி பப்பா.. மோரியா!!
- அய்யனார் சாமி
- உலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்
- 125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்
- நெடுமாறன்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு
- வாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)
- குமரி உலா -1
- குளிர்பானங்களும் பூச்சிக்கொல்லிகளும்
- சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்
- இயக்குநர் சங்கர் அவர்களுக்கு! தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்!
- சொர்க்கம்
- நினைவினிலே நிறைந்தவள்
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 2