ஜோதிர்லதா கிரிஜா
அந்த நள்ளிரவு நேரத்தில் அந்தப் பெரிய மருத்துவ மனை அமைதியாக இருந்தது. லொக் லொக்கென்று இறுமிக்கொண்டிருந்த நோயாளிகள், விபத்துக்கு ஆளானதால் வலி தாங்காமல் முனகிக்கொண்டிருந்தவர்கள் ஆகியோரின் ஓசைகள் தவிர வேறு எந்த ஓசையும் அங்குக் கேட்கவில்லை. இதயத் தாக்குதலுக்கு ஆளாகி அங்கு வந்து சிகிச்சை பெற்று வரும் இன்பராஜுக்கும் உடலில் வலி ஏது மில்லாவிடினும், அவரது மனம் சொல்லமுடியாத வலியில் துடித்துக்கொண்டிருந்தது. இந்த வலி இன்று நேற்று ஏற்பட்ட புதிய வலியன்றெனினும் ஒருகால் தாம் இறந்து விடுவாரோ என்னும் அச்சத்தால் அவருக்குத் திருமணம் ஆன நாளிலிருந்து அவருள் இருந்து வரும் அந்த மனவலி இன்று மிகவும் அதிகமாக இருந்தது.
மருத்துவர் அவர் அபாயமான கட்டத்தைப் பெருமளவு தாண்டி விட்டதாய்ச் சொல்லி யிருந்தாலும், வீட்டுக்குத் திரும்பிப் போவதற்கு முன்னால் தன்னை அரித்துக்கொண்டிருக்கும் அந்த ரகசியத்தை ரஞ்சிதாவிடம் சொல்லிவிட அவர் மனம் அவாவியது. இத்தனை நாளும் தாம் அதை ஒளித்துவைத்துவந்துள்ளதை அவள் தாங்குவாளா, தம்மை மன்னிப்பாளா என்பது பற்றி அவரால் திட்டவட்டமான முடிவுக்கு வர இயலாவிட்டாலும், வீட்டுக்குப் போய்ச் சொல்லுவதால் அவளுக்கு விளையக்கூடிய ஏமாற்றம், அதிர்ச்சி ஆகியவற்றை விடவும் மருத்துவமனையில் அவ் விஷயத்தைச் சொல்லும்போது அவளுள் ஏற்படக்கூடிய அதிர்வுகள் மிகப்பெரிய அளவில் குறைவாகவே இருக்கும் என்று அவர் நம்பினார். எனவே, தொண்டையைச் செருமிக் கொண்டு அவர் அவளை அழைத்தார்.
‘என்னங்க ? தண்ணி வேணுமா ? ‘
`
‘ அதெல்லாம் ஒண்ணும் வேணாம், ரஞ்சிதா…. க்க்கும்…உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ரொம்ப நாளா என்னை உறுத்திட்டிருக்குற விஷயம்… இப்ப என்னோட கடைசி நாள் கொஞ்சம் கொஞ்சமா நெருங்கிட்டிருக்குற நேரத்துல நான் இருக்கேன்.. ‘
ரஞ்சிதா உடனே குனிந்து அவரது தோளில் ஆதரவாய்க் கை வைத்து, ‘ கடைசி நாள் அது இதுன்னெல்லாம் சொல்லாதீங்க… டாக்டர்தான் நீங்க ரொம்ப நல்லாவே குணமாயிட்டு வர்றதாச் சொன்னாரில்ல ? அப்புறம் எதுக்கு வீணா மசசைப் போட்டு உழப்பிக்கிறீங்க ?… அப்படி என்ன பெரிய உறுத்தல் உங்களுக்கு இருந்துடப்போகுதாம் ? ஒருக்கா, உங்க அண்ணன் குடும்பத்துக்கு மாசா மாசம் ஆயிரம் ரூபா அனுப்பிட்டு என்கிட்ட ஐநூறுன்னு பொய் சொல்லியிருப்பீங்க! அதானே ? ‘ என்று புன்னகை செய்தாள்
‘அதில்ல, ரஞ்சிதா… நீதான் அநாதைங்களா நிக்கிற அண்ணிக்கும் அவ குடும்பத்துக்கும் எம்புட்டுப் பணம் வேணும்னாலும் அனுப்புங்கன்னு சொல்லியிருக்கியே ? நான் அந்த விஷயத்துல உங்கிட்ட ஏன் பொய் சொல்லப்போறேன் ? அதில்ல ரஞ்சிதா.. இது வேற விஷயம்….
‘அமைதியா இருங்க.எதை பத்தியும் மனசை அலட்டிக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரில்ல ? உங்களை உறுத்திட்டிருக்குற விஷயம் எதுவாயிருந்தாலும் அதைப்பத்தி எனக்குப் பரவா இல்லீங்க… வீட்டுக்குப் போன பிறகு பேசிக்கலாம். அது கூட எனக்கு ஒண்ணும் அந்த உங்க உறுத்தலைத் தெரிஞ்சுக்கணும்குற ஆவலாதி யெல்லாம் இல்லவே இல்ல. அதைச் சொல்லித்தான் ஆகணும்னு நீங்க நினைப்பீங்களோங்குறதுக்காக அப்படிச் சொன்னேன்..
பேசாம இருங்க… ‘
இன்பராஜ் தம் தோள் மீதிருந்த ரஞ்சிதாவின் கையை இறுகப்பற்றித் தமது மார்பின் மீது வைத்துக்கொண்டு கண் கலங்கினார்.
‘ அய்யே! இதென்ன, சின்னப்பிள்ளையாட்டம்… ? விடுங்கன்றேனில்ல ? எதுவானாலும் வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாங்க… பேசாம தூங்குங்க…. ‘ என்ற ரஞ்சிதா அவருடைய கண்ணிமைகளைத் தாண்டிப் பெருகிய கண்ணீரைப் பதற்றத்துடன் துடைத்தாள்.
அவருக்கோ அதில் உடன்பாடில்லை. இப்போதைய மருத்துவமனைச் சூழ்நிலையில் தமது பொய்யை உடனுக்குடனாக அவள் மன்னித்துவிடுவாளென்றும், ஆனால், முழுவதும் தேறிய பின்னர் – அதிலும் வீடு திரும்பிய பின்னர் – அந்த அளவுக்குத் தம் மீது அவளுக்கு இரக்கம் வர வாய்ப்பில்லை என்றும் அவருக்கு நிச்சயமாய்த் தோன்றியது. எனவே தமது முடிவை மாற்றிக் கொள்ள அவர் தயாராக இல்லை.
‘ இல்ல, ரஞ்சிதா. இப்பவே சொல்லிடறேன்… வீட்டுக்குப் போகும்போது நான் அமைதியாப் போகணும்னு நினைக்கிறேன். ‘
‘ அட, சும்மாருங்கன்றேனில்ல ? ‘ என்ற ரஞ்சிதா, அந்த மருத்துவமனைச் சூழலுக்குச் சற்றும் பொருந்தாத வகையில், சட்டென்று சிரித்து, ‘ அப்படி யென்ன உறுத்தல் உங்களுக்கு ? எனக்குத் தெரியாம சின்னவீடு ஏதாச்சும் செட்டப் பண்ணி வச்சிருக்கீங்களா என்ன ? ‘ என்றாள். அவளது முகத்துப் புன்னகை மாறவில்லை.
அவளது கேள்வியும் அவள் சிரித்த சிரிப்பும் அவரைத் தொற்றிக்கொள்ளவில்லை. மாறாக அவரது முகம் வெளிறியது. அந்த அறையின் மங்கிய வெளிச்சத்திலும் அவரது முகத்து வெளிறல் அவளுக்குத் துல்லியமாய்த் தெரிந்தது. அந்த மாற்றம் அவளுள் வியப்பைத் தோற்றுவித்தது.
‘ அந்த அளவுக்கு மோசமில்ல. ஆனா நீ ஊகிச்சது ஓரளவுக்குச் சரிதான்… ரஞ்சிதா! உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னால நான் ஒரு பொண்ணை நேசிச்சேன்…ஆனா அந்தஸ்து வித்தியாசத்துனால எங்க கல்யாணம் நடக்கல்ல. .. அய்யோ! அப்படிப்பாக்காதே, ரஞ்சிதா! உடம்பைப் பொறுத்தமட்டில நாங்க ரெண்டு பேருமே சுத்தமானவங்க. என்னை நீ நம்புறேல்ல ? ‘ – இப்போது அவளது கையைப்பற்றியிருந்த அவரது பிடியின் இறுக்கம் அதிகரித்தது. அவருடைய விழிகள் அவளைப் பரிதாபமாக ஏறிட்டன. இதற்குள் ரஞ்சிதா சுதாரித்துக் கொண்டுவிட்டிருந்தாள்.
திருமணம் ஆனதன் பிறகான தங்களது முதற் சந்திப்பின் தனிமையில் கொஞ்ச நேரம் பேசிய பிறகு அவர், ‘ நீ யாரையாவது லவ் பண்ணியிருக்கியா ? … பயப்படாம சொல்லு. நான் அதுக்கக உன்னைத் தப்பா நினைக்கப்போறதில்ல. சின்ன வயசுல அதெல்லாம் சகஜந்தானே ? அப்படியே இருந்தாலும் அதுக்காக நாம ஒருத்தரையொருத்தர் டிவோர்ஸா பண்ணப்போறோம் ? ‘ என்று சிரித்தார். அவளுக்கும் புன்னகை வந்தது. அப்படி எதுவும் இல்லை யென்னும் உண்
மையைச் சொல்லிச் சிரித்தாள்.
‘ அதே கேள்வியை நீ என்னைக் கேக்க மாட்டியா ? ‘
‘ என்னை இப்படி ஒரு கேள்வி கேட்டவரு அப்படி ஏதும் இருந்தா நீங்களாவே சொல்லியிருப்பீங்கல்ல ? அதான் கேக்கல்ல. ‘
உண்மையச் சொல்ல அந்தக்கணத்தில் அவர் உதடுகள் துடித்தாலும். அவள்தான் தமது வாழ்க்கையில் முதல் பெண் என்பதாய் எண்ணுவதால் அவளுக்குக் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியை நினைத்துப்பார்தததால் அவர் அவளது கேள்விக்கு, ‘ அப்படி எதுவும் கிடையாது, ‘ என்கிற பதிலைச் சொல்லிச் சிரித்தார்.
இந்தப் பழைய நினைவு கணத்துக்கும் குறைவான நேரத்துக்குள் அவளது மனக்கண்ணில் வந்து போனது. ‘சேச்சே! என்னங்க நீங்க ? எதுக்கு இந்த வயசுல உங்களுக்கு இந்த வேண்டாத நெனப்பெல்லாம் ? விடுந்க… ‘ என்ற ரஞ்சிதா அவர் விழிநீரைத் துடைத்தாள் பிறகு, ‘ அவங்க கல்யாணம் கட்டிட்டாங்கல்ல ? ‘ என்று கேட்டாள். அவர் ‘ ‘ஆம் ‘ என்பதாய்த் தலையசைத்தார்.
‘ அப்பால என்னங்க ? நான் என்னமோ ஏதோன்னு பயந்துபோனேன். ஒருக்கா அவங்க உங்க நெனப்புல கலியாணமே கட்டலையோ, அது உறுத்துதோ, அதுக்காக அவங்களப் பாக்க விரும்புறீங்களோ, பாத்து மன்னிப்புக்கேக்க விரும்புறீங்களோன்னெல்லாம் எனக்குத் தோணுது. அவங்க விலாசம் தெரியும்னா சொல்லுங்க. வரவழைச்சுடலாம்…. ‘ `
இன்பராஜின் உதடுகள் துடித்தன. ‘ நீ எவ்வளவு நல்லவ, ரஞ்சிதா! எவ்வளவு பெரிய மனசு உனக்குத்தான்! ஆனா அப்படி ஏதும் இல்ல. அவளுக்குக் கல்யாணமெல்லாம் ஆயிடிச்சு. கேள்விப்பட்டேன்…அவளைப் பாத்து மன்னிப்புக் கேக்கணும்குற ஆசையெல்லாம் எனக்கில்ல. அவ விலாசமும் தெரியாது. உன்னை மட்டும் அப்ப்டி ஒரு கேள்வி கேட்ட நான் என்னோடதை மட்டும் மறைச்சுட்டேனில்ல ? எவ்வளவு பெரிய அயோக்கியன் நான்! ‘ – அவர் விழிகள் மீண்டும் கலங்கின.
அவர் இலேசில் சமாதானமடையப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்ட ரஞ்சிதா ஒரு முடிவுக்கு வந்தாள். தனக்கும் அப்படி ஒரு கைகூடாத காதல் கதை உண்டென்றும், அதை வெளிப் படுத்தினால் அவருக்குத் தன் மீது எப்படியெல்லாம் ஐயங்கள் வருமோ என்னும் அச்சத்தாலேயே அதை அவரிடமிருந்து மறைத்துவிட்டதாகவும் இப்போது அவர் உண்மையச் சொல்லிவிட்ட பிறகு தன்னால் மேலும் மவுனமாக இருக்க முடியவில்லை என்றும் பொய்யாகக் கூறி அவரைச் சமாதானப்படுத்தும் முடிவை எடுத்த ரஞ்சிதா, ‘ இவளும்தான் பொய் சொல்லியிருக்கிறாள். என் பொய்யும் இவள் பொய்யும் ஒன்றுக்கொன்று சரியாய்ப் போய்விட்டது என்று நினைத்து இவர் மனம் அமைதி யடையும்…இவரை அமைதிப்படுத்த இதுதான் வழி!… ‘ என்றெண்ணியவளாய், ‘ நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க…. எத்தினியோ பொம்பளைங்க கணவன்மாரோட கடந்த காலத்தை – ஏன் ? நிகழ் காலத் தப்பையும் கூட – மன்னிக்கிறாங்க. ஆணா ஆம்பளங்க அப்படி இல்ல. இல்லாத பொல்லாத சந்தேகமெல்லாம் அவங்களுக்கு வரும். மொதல்ல அது பத்திப் பரவாயில்லன்னு சொல்லுவாங்களே ஒழிய லேசில நம்பமாட்டாங்க. உள்ளதைச் சொல்லி உறவைக் கெடுத்துக்கிட்ட எத்தினியோ பொண்ணுங்க கதையெல்லாம் எனக்குத் தெரியும். அதனாலதான் நானும் உங்க கிட்டப் பொய் சொல்லிட்டேன். நீங்களும் என்னை மன்னிக்கணும்… உங்க கால்ல வேணும்னாலும் விழறேங்க… ‘ என்று கூறவிட்டு – நாடகத் தனமாக அவளுக்கு அழுகை வராததால் – முகத்தைத் தன்னிரு கைகளாலும் மூடிக்கொண்டாள். .
‘என்னது! நம்ம கல்யாணத்துக்கு முந்தி நீ யாரையோ லவ் பண்ணியிருக்கியா! ‘ என்று கூவிய இன்பரரஜ் படுத்த நிலையிலிருந்து மிக விரைவாக எழுந்து அமர்ந்தார். முகத்தை மூடியிருந்த கைகளை அவரது அதிர்ச்சி மிகுந்த கூவலைக் கேட்டதும் விலக்கிக்கொண்ட ரஞ்சிதா அவருடைய விழிகள் தன்னை வெறித்து நோக்கிய நிலையில் அவர் அப்படியே பொத்தென்று படுக்கையில் சரிந்து விட்டதைக் கண்டு கதி கலங்கிப்போனாள்.
பயந்து போன அவள் அவரது தலைமாட்டில் இருந்த இதயத்துடிப்பு அளவைக்கருவியைப் பார்த்தாள். அதில் கோடுகள் தாறு மாறாக ஓடிக்கொண்டிருந்தன. அவள் பதற்றத்துடன் அறையிலிருந்து வெளியேறி, ‘டாக்டர்! டாக்டர்! ‘ என்று கூவிக்கொண்டு ஓடினாள்.
***
jothigirija@vsnl.net
- மது அருந்தக் காரணங்கள்
- விழி தூர கவனம்
- பணமே பரமாத்மாவே !
- எக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
- பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து (Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)
- பழைய முடிவும் புதிய முடிவும் (ஆர்.சூடாமணியின் ‘ரயில் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 65 )
- தமிழ்ப் படைப்புலகம்
- சுஜாதா என்றொரு கதை சொல்லி
- அருமையான உறவின் ரகசியம்
- தமிழைப் பாடு நீ!
- மந்திரவாதி
- நாம் நாமாக…
- பாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து
- இந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு
- ரகசிய அறை
- தீபமடியோ தீபம் !
- உதவும் உள்ளத்தின் குமுறல்
- ஆட்டத்தின் எல்லைகள்
- கடிதங்கள்
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 1)
- விடியும்! (நாவல் – 1)
- இன்பராஜின் இதயம்
- நுடம்
- வாரபலன் (ஜூன் 14, 2003 – சேட்டன் , புலிநகக்கொன்றை)
- ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (விவேகானந்தர்)
- மதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939
- அருமையான பாதாளம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினொன்று
- குறிப்புகள் சில-19 ஜீன் 2003 (அக்னி சிறகுகள்-சேவைத்துறை குறித்த பொது வணிக ஒப்பந்தம்-திரைப்படப் பிரதியும்,அதற்கு அப்பாலும்-மனிதம்
- படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை
- புக்ககம் போன புத்தகம்
- வெண்ணிலவே சொல்லிடுவாய்!
- அலைக்கழிப்பு
- சில்மிஷங்கள்
- முடிவுகளல்ல ஆரம்பங்கள்
- பா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்