முனைவர் சி.சேதுராமன்
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
பாட்டாளி வர்க்க மக்கள் வாழ்வில் உயர தம் பாடல்களில் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தவர் பட்டுக்கோட்டையார். பாரதிதாசன் பரம்பரையில் வந்த பட்டுக்கோட்டையார் ‘‘முன்னோர் மொழிப் பொருளையும் பொன்னேபோற் போற்றுவோம்’’ என்பதற்கேற்ப தமது பாடல்களில் முன்னோர்களின் கருத்துக்களைப் பதிவுசெய்து பாடினார். பண்டைத் தமிழ் இலக்கிய, இலக்கணக் கூறுகள் கல்யாணசுந்தரனாரின் பாடல்களில் அமைந்திருப்பதே இதற்கு எடுத்துக்காட்டாகும் எனலாம். அவரது பாடல்கள் எளிமையாகவும், அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணமும் அமைந்திருந்தன. பட்டுக்கோட்டையாரின் பாடல்களில் காணப்படும் தொல்காப்பிய களவியற் கூறுகள் குறித்து விளக்குவதாக இக் கட்டுரை அமைந்துள்ளது.
தலைவன் இயல்பு:
தலைவனும் தலைவியும் காதலின் முதன்மை மாந்தர்களாவர். தலைவன், இயல்பு பற்றி,
‘‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன’’ (தொல். 1044)
எனத் தொல்காப்பியர் வரையறை செய்கின்றார். பட்டுக்கோட்டையார் தனது தலைவனைப் பற்றி,
‘‘ஆளும் திறமையும் வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்’’ ( ப.கோ. பாடல்கள்-)
என வரையறை செய்கின்றார். ஆளும் திறமை, வீரம், கடமை, பெருமை ஆகியவை ஆண்களுக்கு உரியவை என்று கவிஞர் எடுத்துரைக்கிறார்.
தலைவி இயல்பு:
தொல்காப்பியர் தலைவியின் இலக்கணத்தை,
‘‘அச்சமும் நாணும் மடனும் முத்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப’’(தொல். 1045)
என்று குறிப்பிடுகின்றார். மக்கள் கவிஞர்,
‘‘அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள்’’
அன்பு, அறம், அடக்கம், பொறுமை, பண்பு இவை அனைத்தும் பெண்களுக்கு உரியவை என்று காப்பியரின் களவியல் இலக்கணத்திற்குரிய இலக்கியத்தைப் படைக்கின்றார்.
நோக்குதல்:
காதலுக்குக் கண்களே முதன்மையாக அமைகிறது. தலைவனும், தலைவியும் ஒருவரையொருவர் விருப்புடன் நோக்கும் காட்சிக்குக் கண்களே காரணமாக அமைகின்றன. தொல்காப்பியர் இதனை,
‘‘நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்’’ (தொல். 1042)
என்று குறிப்பிடுகின்றார். இந்நூற்பாவிற்கு இளம்பூரணர், ‘‘தலைமக்கள் இருவர் கண்களும், நாட்டத்தை வெளிப்படுத்தி, இருவரும் அறிவால் உடன்படுவதற்குத் துணையாய்ச் சேர்ந்து உரைக்கும் குறிப்புரையாக அமையும்’’ என்று பொருள் கூறுவர். திருவள்ளுவர் இந்நோக்குதல் பற்றி,
‘‘கண்ணொடு கண்ணிணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல’’ (குறள் எண், 1100)
என்று மொழிகின்றார். மக்கள் கவிஞர்,
‘‘கண்ணோடு கண்ணு பின்னி எண்ணாததெல்லாம் எண்ணி’’
‘‘கண்ணோட கண்ணு கலந்தாச்சு’’
காணாத இன்பம் கண்டாச்சு’’
என்ற பாடல்களில் தொல்காப்பியரின் கூற்றை வழிமொழிகிறார். காதலரின் மனக்களிப்பிற்குக் கண்களே காரணமாவதைக் கவிஞர் மேற்கண்ட பாடல்வரிகளில் தெளிவுறுத்துகிறார். கண்களுக்கும், காதலுக்கும், கண்களுக்கும் உள்ள தொடர்புகளை,
‘‘காதலுக்கு நாலு கண்கள்’’
‘‘பார்க்கப் பார்க்க வளருமே
காதலின்ப ஓவியம்’’
‘‘கண்ணும் கண்ணும் கட்டின கூடு’’
‘‘விழியாலே பேசும் அழியாத நேசம்’’
என மக்கள் கவிஞர் சுட்டிக்காட்டுகிறார். மேலும்,
‘‘தூர இருந்து கொண்டே தொடாமல் திருடுவதும்
சுற்றிவிட்ட பம்பரம்போல சுழன்று வட்டம் போடுவதும்
வீரர்களும் மயங்க மோகவலை வீசுவதும்-காதல்
விளையாடுவதும் கண்களம்மா!’’
என காதலின்போது ஏற்படும் எல்லா நிலைகளுக்கும் கண்களே காரணம் என்பதனையும் குறிப்பிடுகிறார். இவ்வரிகள்,
‘‘கண்தரவந்த காம ஒள்ளெரி’’(குறுந். 305)
என்ற குப்பைக்கோழியார் கூறும் பாடலுடன் ஒப்புநோக்குதற்குரியதாய் அமைந்துள்ளது.
ஐயம், அதனை நீக்கும் கருவிகள்:
தலைவியைக் கண்டு தலைவன் கொள்ளும் ஐயம் காதலுக்குச் சிறந்தது என்பதனைத் தொல்காப்பியர்,
‘‘சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப
இழிந்துழி இயல்பே சுட்டலான’’ (தொல்.களவியல், நூற்பா எண், 1040)
என மொழிகிறார். மேலும் இவ் ஐயத்தை களைபவையாக,
‘‘வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இடைப்பே அச்ச மென்று
அன்னவை பிறவும் ஆங்குஅவண் நிகழ
நின்றவை களையும் கருவி என்ப’’ (தொல்.களவியல், நூற்பா எண், 1041)
என வண்டு, உள்ளிட்டவற்றைக் கருவிகளாகக் கூறுகிறார். காப்பியர் வகுத்தளித்த இலக்கணக் கூற்றிற்கு இலக்கியமாகப் பட்டுக்கோட்டையாரின் பின்வரும் பாடற்பகுதிகள் அமைந்திலங்குகின்றன.
தலைவன் தலைவியின் அழகில் மயங்குகிறான். ஐயம் அறிவைமீற,
‘‘ஆடைகட்டி வந்த நிலவோ?-கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ?-இவள்
ஆடைகட்டி வந்த நிலவோ?-குளிர்
ஓடையில் மிதக்கும்மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடுவிட்டு வந்த மயிலோ?-நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குயிலோ?
.. . . . . . . . . . . . . . . . . .
அந்திவெயில் பெற்ற மகளோ?-குலுங்கும்
அல்லிமலர் இனத்தவளோ?-குன்றில்
உந்திவிழும் நீரலையில்
ஓடிவிளையாடி மனம்
சுற்றிவரும் தென்றல் தானோ?-இன்பம்
தந்து மகிழ்கின்ற மானோ?’’
என்று உள்ளம் தடுமாறுகிறான். நிலவா?, ஆடும் எழிலா?, மயிலா?, அந்திவெயில் பெற்ற மகளா?, அல்லிமலர் இனத்தவளா?, தென்றலா?, மானா?, என மனம் மயங்குகின்றான். தலைவி மலர் ஜாடையில் சிரித்ததும், நீரலையில் ஓடி விளையாடியதும் தலைவனின் நினைவுக்கு வருகிறது. அவனுக்கு அவள் பெண்தான் என்ற தெளிவு பிறக்கின்றது. அவனது ஐயம் களைகின்றது. தலைவி, தலைவனின் அருகில் வந்து, ‘அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை’ என்று கூறத் தலைவன் மனந்தேறுகிறான். ஐயம், அதனைக் களையும் கருவிகள் என அனைத்தையும் பட்டுக்கோட்டையார் ஒரே பாடலில் இடம்பெறச் செய்திருப்பது காதல்சுவையைப் புலப்படுத்துவதாக அமைகின்றது.
மக்கள் கவிஞரின் இப்பாடல், வள்ளுவரின்,
‘‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு’’ (குறள் எண்,1081)
எனும் குறட்பாவோடு ஒத்திருப்பது நோக்குதற்குரியதாகும்.
களவொழுக்க உணர்வுகள்:
காதல் வயப்பட்ட தலைவன், தலைவியரின் களவொழுக்க உணர;வுகளைத் தொல்காப்பியர்,
‘‘வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்றுஅச்
சிறப்புடை மரபின் அவை களவு எனமொழிப.’’
(தொல்.களவியல், நூற்பா எண், 1046)
என நவில்கின்றார். பட்டுக்கோட்டையாரின் காதலர்களும் தொல்காப்பியர் மொழிந்ததுபோன்று வேதனைக்குள்ளாகின்றனர். மக்கள் கவிஞரின் தலைவி,
‘‘பொல்லாத மயக்கமுங்க
சொல்லாமல்தான் வருதுங்க
எல்லாமே கசக்குதுங்க
ஈரமலரும் சுடுதுங்க’’
என்று தனது காதல் வேதனைகளை வெளிப்படுத்துகிறாள். எல்லாம் அவளுக்குத் தெளிவின்றித் தெரிகின்றது.. மற்றொரு தலைவிக்கு வேறுவிதமான வேதனைகள். இவள்,
‘‘தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே-கண்கள்
தூங்காமல் ஆசையைத் தூண்டுதே’’
என்று கூறுகிறாள். காதல் நினைவால் தலைவி வாடுவதையே கவிஞர் இங்ஙனம் எடுத்துரைக்கின்றார். தலைவன், தலைவி இருவரும் தங்களின் வேதனைகளை இன்னதென்று கூறமுடியாமல் தவிப்பதை,
‘‘கண்களும் எங்கோ வழிதேடுது-எது
வேண்டியோ வாடுது ஆடுது
மனம் என்னோடும் நில்லாமல்
முன்னால் ஓடுது-என்
வீசும் தென்றல் காதோடு
பேசிடும் பாஷை நானறியேனே
வெறும் போதையோ?ஆசையோ?மாயமோ?-இது
விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ?’’
எனப் படைத்துக்காட்டுகிறார். தொல்காப்பியர் குறிப்பிடும் களவொழுக்க உணர்வுகள்; இதில் பொதிந்துள்ளது நோக்கத்தக்கது.
வேட்கையை மறுத்தல்:
தலைவியிடம் புணர்ச்சி வேடகையை வெளிப்படுத்தும் தலைவன் அவளது, அச்சத்தைப் போக்குவதற்காக,
‘‘அன்பு மனம் கனிந்த பின்னே
அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும்
அறியாத பாவையா? ’’
என்று வினவுகிறான். தலைவனின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட தலைவி, அவனது வழியிலேயே,
‘‘அஞ்சுவதில் அஞ்சி நின்றால்
அச்சமாகுமா?
அன்புமனம் கனிந்ததும்
புரியாமல் போகுமா?
மாலை வெயில் மயக்கத்திலே
மறந்திடலாமோ?
மனைவி என்றே ஆகுமுன்னே
நெருங்கிடலாமோ? ’’
என்று பதிலுரைக்கிறாள். தலைவி தனக்கும் காதல் கனிந்துள்ளதைத் தலைவனுக்கு உணர்த்துகிறாள். தலைவனின் உள்ளத்துணர்வை உணர்ந்து அவனது வேட்கையை மறுக்கும் தலைவி, மனைவியாகிய பின்னர் நெருங்கிடலாம் என்று அவனுக்கு அறிவுரை வழங்குகிறாள். இல்லறம் ஏற்கும் வரை தலைவனும், தலைவியும் பொறுமை காத்தல் வேண்டும் என்ற சமூக அக்கறையைப் புலப்படுத்தும் வகையில் மக்கள் கவிஞரின் இப்பாடல் அமைந்திருப்பது உன்னற்பாலதாகும்.
கவிஞரின் இவ்விலக்கிய வரிகள்,
‘‘வழிபாடுமறுத்தல் மறுத்தெதிர் கோடல்’’
(தொல்.களவியல், நூற்பா எண், 1057)
என்ற தொல்காப்பியரின் களவியல் நூற்பாவிற்கு உதாரணமாக அமைந்திருப்பது நோக்கத்தக்கதாகும். அனுபவப் பள்ளியில் பயின்ற கவிஞர், ‘‘தொல்காப்பிய நூற்பாவைக் கூடத் தெரிந்து வைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது.’’ (பேரா.சாலமன்பாப்பையா, பட்டுக்கோட்டை பாடல்கள் -ஒரு பார்வை, ப.95) என மக்கள் கவிஞர் பற்றிய அறிஞர் சாலமன் பாப்பையாவின் கூற்று இதற்குப் பொருத்தமானதாக அமைந்துள்ளது. மேலும், பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் இலக்கணக் கூறுகள் நிறைந்த இலக்கியப் பெட்டகமாக விளங்குகின்றன.
- ஆபத்து
- நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’யும்.. ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ தொகுப்பும்..
- இவர்களது எழுத்துமுறை -19 -வல்லிக்கண்ணன்
- ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல்களில் தொல்காப்பிய களவியற் கூறுகள்
- இலக்கியவாதிகளும் சோளக்காட்டு பொம்மையும்
- கம்பன் காட்டும் விதி
- வே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ
- வடக்கு வாசல் இணையதளம் மற்றம் யமுனை
- ஓவியர் V.P. வாசுகன் ,V.P.Vasuhan ஓவிய கண்காட்சி
- வண்ணதாசனின் ஒட்டுதல் படித்தேன்
- மறுபக்கம்-பொன்னீலன் (இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம்)
- கேள்விகளால் வாழும் மரணம்
- கானல் வஞ்சம்
- சடலாய்வு
- புத்தமாவது
- உன்னோடு நீ..
- சலன மழை!
- லதாமகன் கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3
- துடித்தலும் துவள்தலும்
- கிட்டிப் புள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -8
- டிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை – ஸுப்ரபாதம்
- ஆயிரங்கால் மண்டபம்
- முள்பாதை 59
- பரிமளவல்லி 24. சந்தேகங்கள்
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
- ஒரு பாக்டீரியாவின் கனவு..
- ஆதிவண்ணம்
- ரகசியம் பரம ரகசியம்
- M. ராஜா கவிதைகள்
- கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது நிழல்..
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிதைப் பயிலரங்கின் தொடர் நடவடிக்கையாகப் படைக்கப்பட்ட கவிதைகள்
- கைப் பிடியின் பிடிவாதம்
- அம்மாவின் கேள்வி
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] (1625-1712)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 20