‘ஆரிய சமாஜம்’ என்கிற சிறு நூலையும் அதையொட்டிய வெ.சா.வின் கட்டுரையினையும் முன்வைத்து…

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

மலர்மன்னன்


‘ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்’ என்ற தலைப்பில் ஸ்ரீ வெங்கட் சாமிநாதன் எழுதியுள்ள கட்டுரையை, ‘ஆரிய சமாஜம்’ என்கிற எனது சிறுநூலுக்கான விமர்சனம் என்று கருதுவதைவிட, அந்த நூலையொட்டி ஆரிய சமாஜம் பற்றியும் அதனைத் தோற்றுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி குறித்துமான அவரது பார்வை எனக் கொள்வது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் சுவாமி தயானந்தரை ஒரு நாஸ்திகராகவோ, அவரது கொள்கை யை நாஸ்திக வாதமாகவோ எனது நூலில் நான் பதிவு செய்ய வில்லை. நெகடிவிஸமாக அல்ல, ஆப்டிமிஸமாகவே அவரையும் அவரது வாதங்களையும் பார்த்திருக்கிறேன்.

பாமர மக்களின் பரிசுத்தமான பக்தியையும், அசைக்க முடியாத இறை நம்பிக்கையையும் மூலதனமாகக் கொண்டு, தவிர்க்க முடியாத சடங்காசாரங்கள், பரிகார பூஜைகள் என எத்தனை விதமான நிர்பந்தங்கள் சமூகத்தில் தொடர்ந்து வருகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சுவாமி தரிசனத்திற்காக மிகுந்த ஆர்வத்துடனும் பக்திப் பெருக்குடனும் வரும் மக்களிடம் புண்ணியத் தலங்களில் தட்சிணை என்ற பெயரில் நடைபெறும் வலுக்கட்டாய வஸூல்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
கடந்த நூற்றாண்டுகளில் இவை மிகவும் கூடுதலாகவே இருந்து வந்துள்ளன.

சுவாமி தயானந்தர் சடங்காசாரங்களை முற்றிலுமாகப் புறக் கணிக்க வேண்டும் எனக் கூறவில்லை. கருவுறுதலில் தொடங்கி, பிறப்பு, நாமகரணம், திருமணம், மரணம் என வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய சடங்குகளை அவர் நமது வேத நெறிகளின் பிரகாரம் வகுத்துள்ளார். அவை எளிமையானவை, மேலும் அனாவசிய, ஆடம்பரச் செலவுகளுக்கு இடமளிக்காதவை. .ஆரிய சமாஜிகள் இச்சடங்குகளைக் கடைப்பிடிக்கின்றனர். மேலும், இச்ச்சடங்குகளை உரிய சமஸ்க்ருத மந்திரங்களைச் சொல்லி நடத்தும்போது உடனுக்குடன் அம்மந்திரங்களின் பொருளைத் தெரிவிப்பதோடு அவற்றின் அவசியம், பயன் ஆகியனவும் விவரிக்கப்பட வேண்டும் எனவும் தயானந்தர் விதித்துள்ளார். அவ்வாறே இச்சடங்குகள நடத்தி வைக்கப் படுகின்றன.

வலுக்கட்டாயமாக வலியுறுத்தப்படும் சடங்காசாரங்கள் மக்களுக்குப் பெரும் சுமையாகவே உள்ளன. சுய கெளரவத்திற் காகவும் சமூகக் கட்டுப்பாட்டின் காரணமாகவும் இவற்றைக் கடைப்பிடித்தேயாக வேண்டும் எனக் கருதுபவர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு அவற்றை அனுசரித்துவிட்டுப் பின்னர் கடனில் மூழ்கித் தத்தளிக்கும் நிலைமை உள்ளது. அதிலும், கலியாணச் சடங்குகளைவிடவும் கருமாதிச் சடங்குகளுக்கான செலவுகள் அச்சுறுத்தும் அளவுக்குக் கூடுதலாக உள்ளன. மக்கள் தமது மன உளைச்சல்கள், உறுத்தல்கள் காரணமாக கருமாதிச் செலவு களைத் தமது பொருளாதாரச் சக்தியையும் மீறியே மேற்கொள் கிறார்கள். துயரம் நிகழ்ந்துள்ள குடும்பத்தில், அந்தச் சோகச் சூழலையும் குடும்பத்தாரின் திக்பிரமித்த நிலையையும் சாதகமாகக் கொண்டு பெரும் செலவு வைக்கிற சடங்குகள் திணிக்கப் படுகின்றன.

மரணத்தையொட்டிய எளிய சடங்கினை வேத நெறிப்படி விதிக்கும் சுவாமி தயானந்தர், வருடந்தோறும் மேற்கொள்ள வலியுறுத்தப்படும் சிராத்தச் சடங்கைத்தான் தேவையில்லை எனக் கூறுகிறார். உற்றார் உறவினர் உயிரோடு இருக்கையில் அவர்களை நன்கு பராமரியுங்கள், அவர்கள் இறந்தபின் அவர்களை முன்னிட்டுச் சடங்குகளின் பெயரால் வீண்செலவு செய்வதால் என்ன பயன் என்றுதான் அவர் கேட்கிறார்.

ஹிந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாடக் கடன்கள், வாழ்நாள் கடன்கள், அனுசரிக்கத் தக்க திருவிழாக்கள் ஆகிய எல்லாவற்றையும் தயானந்தர் வலியுறுத்தத் தவறவில்லை.

இன்றளவும் நமது கோயில்களில் தூய்மைப் பராமரிப்பு மிகவும் கவனக் குறைவான அளவிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக, விக்கிரக வடிவில் இறைச் சக்தி உறையும் கருவறைகளின் பராமரிப்பு சொல்லும் தரமாக இருப்பதில்லை. தல வரலாற்றில் மிகவும் சிறப்பித்துப் பேசப்படும் திருக் குளங்களின் நிலைமை யினைப் பார்த்தால் நமக்கு மெய் சிலிர்ப்பூட்டும் புனித உணர்வு களைக் காட்டிலும் அருவருப்பும் ஆற்றாமையும்தாம் ஏற்படு கின்றன. நம்து புண்ணிய நதிகளின் நிலைமையும் இதுதான். வழிபடுவதற்கென வரும் நாமே அவற்றின் புனிதத்துவத்திற்கு ஊறும் விளைவித்துவிடுகிறோம்.

இளம் பிராய தயானந்தர் மஹாசிவராத்திரி நடுநிசியில் மற்றவர்கள் தூக்கக் கலக்கத்தில் சாய்ந்திருக்க, தாம் மட்டும் விசுவாசத்துடன் விழித்திருக்கையில் தாம் மனப் பூர்வமாக வழிபட்ட மஹாலிங்கத் திருமேனியில் எலிகள் அலைந்து தம் சுபாவப்படி உணவு கொள்ளும்போதே தமது உடற் கழிவுகளையும் சிவ லிங்கத் திருமேனியின் மீதே வெளியேற்றியது கண்டு அருவருப்பும் திகைப்பும் அடைந்த அனுபவத்தைச் சரியான கோணத்தில் புரிந்துகொள்வதே பொருத்தமாக இருக்கும். இதனையொட்டி, தெய்வத் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள கருவறைகளின் தூய்மை நன்கு பராமரிக்கப்பட வேண்டும் என்கிற பிரக்ஞை நமக்கு வருமானால் ஆக்க பூர்வமாக இருக்கும்.

வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் இறைச் சக்தியின் பேராற்ற லும் குணச் சிறப்புகளும் பெரிதும் சிலாகித்து வர்ணிக்கப் படுகின்றன. இவ்வாறு வர்ணிக்கப் படுகையில் அவை யாவும் கலைகளாக, வடிவ அமைப்புகளாக மன வெளியில் உருக் கொள்கின்றன. ஆனால் அவ்வாறான வர்ணனைப் பரவசங்கள் விக்கிரகங்களாக வார்க்கப்பட்டு அவையே வழிபாட்டுக்கு உரியன என்று விதிக்கப்படவில்லை.

விஷ்ணு ஸஹஸ்ர நாமம், புருஷ ஸூக்தம், ஆதித்ய ஹ்ருதயம் முதலானவற்றை இறைச் சக்தியின் பல்வேறு குணாம்சச் சிறப்பு களையும் கலைகளையும் உருவகித்துப் போற்றும் துதிகளாகக் கொள்ள வேண்டுமேயல்லாது, அவை ஒவ்வொன்றுக்கும் படிமம் சமைத்து அவற்றைப் பிரதிஷ்டை செய்து அவற்றுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்யத் தேவையில்லை என்றுதான் தயானந்தர் வலியுறுத்துகிறார்.

தயானந்தர் காலத்தில் சிவன் பெரிதா, சக்தி பெரிதா, திருமால் பெரிதா என்கிற அர்த்தமற்ற வாதப் பிரதிவாதங்கள் மிகவும் கூடுதலாகவே நிகழ்ந்து வந்தன. இவ்வாறான வாதங்கள் முற்றி, மாற்றுச் சமயத்தினர் எள்ளி நகையாடும் அளவுக்கு ஹிந்துக் களிடையே சச்சரவுகள் மிகுந்தன. ஒரு குறிப்பிட்ட தெயவ வடிவத்தை வணங்குபவர்களிடையேகூடப் பிரிவுகள் தோன்றித் தங்களுடைய வழிபாட்டுமுறைதான் சிறந்தது என்கிற அகந்தை ஒவ்வொரு பிரிவினரிடையேயும் வலுத்து அதுவே மனமாச்சரி யங்களுக்கும் இடமளித்துவிட்டது. இதனால்தான் ஹிந்துக் களிடையே ஒற்றுமையை வலியுறுத்த வேண்டி, பல தெய்வ உருவ வழிபாட்டை விடுத்து வேத நெறிப்படி வீடு தோறும் வேள்வித் தீ வளர்த்து அன்றாட இறை வழிபாடு செய்யுமாறு அவர் ஹிந்துக்களுக்கு அறிவுறுத்தலானார்.

புராண இதிகாசங்களில் காவியச் சுவையையும் அபாரமான கற்பனை வளத்தையும் அனுபவிக்கச் சொல்லும் தயானந்தர், வழிபாட்டுக்கு வேத நெறியைக் கைக் கொள்ள வேண்டுமென் கிறார். மற்றபடி பக்தி மார்க்கத்தை அவர் புறந் தள்ளவில்லை. பக்தி வெள்ளத்தின் பேராற்றலை அவர் உணராதவரல்ல. அதனை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதிலேயே அவர் கருத்தாகவும் இருந்திருக்கிறார். அனைவரும் ஞான மார்க்கத்தைக் கைக்கொள் வது எளிதல்ல எனபதை அவர் உணர்ந்தே இருந்தார்.

ஹிந்துஸ்தானத்தின் விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்கெடுத்து உயிரைப் பலிகொடுத்த பலர் ஆரிய சமாஜத்தின ராவார்கள். அவ்வளவு ஏன், லண்டனில் இந்தியா ஹவுஸை நிறுவி, பாரத இளைஞர்கள் விடுதலை வீரர்களாக உருவெடுக்கச் செய்த கிருஷ்ண வர்மாவே தயானந்தரின் நேரடிச் சீடர்தாம். ஹிந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதிலும் மதம் மாறிய ஹிந்துக்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதிலும் பெரும் பணியாற்றி அதற்கு விலையாகத் தமது உயிரையே கொடுத்து ஹிந்து சமூக நலன் என்கிற பயிர் வளரத் தமது ரத்தத்தை வார்த்த ஆரிய சமாஜிகள் பலர். இதனைக் குறிப்பிடு கையில் உடனே நமக்கு நினைவு வருபவர்கள் சுவாமி சிரத்தானந்தர், பாய் பரமானந்தர். மட்டுமல்ல, லாலா லஜபத் ராய் தொடங்கி இன்னும் பல தூய அரசியல்வாதிகளும் சமூக நலப் பணியாளர்களும் ஆரிய சமாஜிகளாகவே இருந்து, நாட்டுப் பணியில் உயிரை பலிதானம் செய்தனர்.

தமிழ் நாட்டிலும் கூட, கடந்த நூற்றாண்டின் முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் ஆரிய சமாஜம் பிரபலமாகவே இருந்தது. குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோரிடையே அதற்கு செல்வாக்கு அதிகமிருந்தது. சென்னையில் பெரம்பூர், வியாசர்பாடி பகுதிகளில் ஆரிய சமாஜம் ஹிந்து சமூகத்திற்கு அரணாக விளங்கி, திராவிட இயக்கம் உள்ளே நுழையாதவாறு காத்து நின்றது. முனுசாமி என்ற தலித் ஆரிய சமாஜி அங்கு ஒரு மிகப் பெரும் சக்தியாக இயங்கி, திராவிட இயக்கத்தைத் திணறடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அப்படியொருவரின் இருப்பே நம்மில் பெரும்பாலானவர் களுக்குத் தெரியாது. 2005-ல் கூட, எண்பத்தைந்து வயது கடந்த முதியவராக, வறிய நிலையில் அவர் என் வீட்டிற்கு வந்திருந்து பழங் கதைகள் பல பேசிச் சென்றதுண்டு சரியான தலைமை, வழிகாட்டுதல், தொடர் நடவடிக்கை முதலியன இல்லாமற் போனதால் தமிழ் நாட்டில் ஆரிய சமாஜம் சரியாக வளராமல் ஒரு சிறந்த கல்வி ஸ்தாபனத்தை நடத்தும் அமைப்பு என்கிற அளவிலேயே நிற்கிறது. தமிழ் நாட்டில் ஆரிய சமாஜம் பற்றிச் சரியான புரிதலை ஓரளவு ஏற்படுத்த வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாகவே ஆரிய சமாஜம் என்ற சிறு நூலை எழுதினேன். மற்றபடி ஹிந்துஸ்தானம் முழுவதும் ஆரிய சமாஜம் குறிப்பிடத் தக்க அளவு செல்வாக்குடனேயே இருந்து வருகிறது. தமிழ் நாட்டிலுங்கூட, ஆரிய சமாஜ முறைப்படிப் பலர் திருமணம் உள்ளிட்ட சடங்குகளைச் செய்து கொள்கின்றனர். ஆரிய சமாஜத்தின் மூலம் அதிகாரப் பூர்வமாகப் பலர் தாய் மதம் திரும்புவதும் வழக்கத்தில் உள்ளது. நானே கூடப் பல கிறிஸ்துவக் குடும்பங்களை ஆரிய சமாஜத்தின் மூலம் தாய் மதம் திரும்பச் செய்துள்ளேன். என் மூலம் இவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பிரபலப்படுத்தினால் பிறகு இப்பணியைத் தொடர்ந்து செய்வதில் இடர்ப்பாடுகள் ஏற்படும் என்பதாலேயே இவ்வாறான தாய் மதம் திரும்பும் நிகழ்வுகளை அவரவர் குடும்ப நிகழ்வாக மட்டுமே அனுசரிக்க வேண்டியுள்ளது.

ஆரிய சமாஜம் இன்றளவும் உயிர்த் துடிப்புடன் இயங்கி வரும் அமைப்புதான். அது ஹிந்து சமூகத்திற்கு மிகப் பெரும் பணி யாற்றி வருவதும் அங்கீகரிக்கப்பட வேண்டிய, ஆதரிக்கப்பட வேண்டிய ஒரு சமூகக் கடமைதான்.

இறுதியாக, சுவாமி தயானந்தரே சொன்ன ஒரு விஷயத்தையும் இங்கு பதிவு செய்துவிடுகிறேன்:

பஞ்சாபில் உள்ள அமிர்தசரசின் கமிஷனராக இருந்த பெர்கின்ஸ் என்கிற ஆங்கிலேயர், சுவாமி தயானந்தருடன் உரையாடுகையில், ஹிந்து மதம் மிகவும் நலிந்து விட்டதாகவும், மாறுபட்ட கோட் பாடுகளால் உட்பூசல்கள் மலிந்து அது தள்ளாடுவதாகவும் விமர்சித்தார்.

அதற்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்தார், சுவாமி தயானந்தர்:

“ஹிந்து தர்மத்திற்கு நலிவா? சாத்தியமே இல்லை. எஃகைப் போல அதன் கட்டமைப்பு உறுதியாக உள்ளது. பல்வேறு கோட்பாடுகளைச் சார்ந்த நம்பிக்கையாளர்களால் அது போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிலர் தியானத்தால் கடவுளை வணங்கினால், சிலர் கடவுளைப் பல வடிவங்களில் பாவித்து பக்தி செலுத்துகின்றனர். நான் விக்கிரகம் வைத்து உருவ வழிபாடு செய்யும் வழக்கம் இல்லாத தொன்மையான வேத நெறி வழிபாட்டுக்குத் திரும்புமாறு மக்களை அழைத்து வருகிறேன். மற்றபடி ஹிந்துக்கள் தம்து சமய நம்பிக்கையில் உறுதியாகத் தான் உள்ளனர். ஆகவே ஹிந்து சமயத்திற்கு அழிவில்லை.”

பெர்கின்ஸுக்கு தயானந்தர் அளித்த இந்த பதிலடியை அவரது கோட்பாட்டின் விளக்கமாகவும் வாக்கு மூலமாகவுங்கூடக் கொண்டால் பிரச்சினை இல்லை..

+++++++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்