அரவிந்தன் நீலகண்டன்
ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும் எனும் தலைப்பிற்குள் நுழைவதற்குள் அறிவியல் என்றால் என்ன என்பதனை நாம் சிறிதே வரையறை செய்து கொள்ளலாம்.
அறிவியல் என்றால் என்ன ?
‘DNA ஒரு இரட்டை சுழல் மூலக்கூறு ‘ ‘ஆல்பா சென்டாரி நம் பூமியிலிருந்து 3.6 ஒளி வருட தொலைவில் உள்ளது ‘, ‘துளசியின் தாவரவியல் பெயர் ஓக்சிமம் சான்க்டம் ‘ -இத்தகைய தகவல்களை நாம் அறிந்து கொள்வதுதான் அறிவியலா அல்லது அதற்கு அப்பாற்பட்ட வேறெதுவுமா ? காலம் சென்ற வானவியலாளரான கார்ல்சாகனின் வார்த்தைகளில் ‘அறிவியல் என்பது தகவல்களில் கூட்டோ அல்லது தகவல்களின் ஒழுங்குபடுத்தப்பட்ட பகுப்போ அன்று. மாறாக அது ஒரு அறிதல் முறை. ‘ மேலும் மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் கூறுவார், ‘அறிவியல் என்பது அறியப்படாத பிரபஞ்சத்தினுள் செல்வது. அதன் ஒவ்வொரு அடியெடுத்து வைப்பதிலும் வியப்பு காத்திருக்கிறது. ‘. ‘அறிவியல் முறை ‘ என்பதோ இப்பருப்பொருட் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்த கருதுகோள்களை கடும் சோதனைக்குள்ளாக்கி அதன் மூலம் உண்மையை அறிவது. ஒருவிதத்தில் அறிவியலின் வரலாற்றில் நடப்பதென்னவென்றால் அது கேள்விகளுக்கு பதிலளிப்பது என்பதை விட இருக்கும் பதில்களை கேள்விக்குள்ளாக்குவதென்பதுதான். ஒவ்வொரு பதிலும் பிரபஞ்ச இருப்பின் மர்மத்தை இன்னமும் ஆழப்படுத்தி மேலும் பல கேள்விகள் மூலம் நம் உண்மை அறியும் தேடலை முன்னகர்த்துவதாகும். இன்று அறிவியல் என்றாலே அதனை மேற்கின் நாகரிகத்துடனும் ஐரோப்பிய மதிப்பீடுகளுடனும் அடையாளப்படுத்தும் ஒரு போக்கு உள்ளது. இது எந்த அளவு சரியானது என்பதை அறிய இப்போக்கு உருவாக காரணமான வரலாற்று காரணிகளை நாம் காணலாம். ஸ்வாமி விவேகானந்தர் காலத்திய பாரதிய சூழலையும் மேற்கில் தன் காலடியை வைத்தபோது அங்கு நிலவிய அறிவுலக சூழலையும் அறிந்திடவும் மேற்கத்திய மரபில் அறிவியலின் பரிணாமத்தையும் அதன் தாக்கத்தையும் அறிவது அவசியமாகும்.
மேற்கத்திய மரபில் அறிவியலின் பரிணாமம்
இன்றைய அறிவியலின் வேர்கள் ஆங்கில தத்துவவாதியான பிரான்ஸின் பேகனிலிருந்து (1642-1727) ஆரம்பிக்கின்றன. மனதின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சென்று உண்மையை அறியும் அறிதல் முறைக்கான முக்கியத்துவத்தை அவரே மேற்கத்திய மரபில் முதலில் வலியுறுத்தியவர்.பேகனின் தாக்கம் கொண்ட காலகட்டத்தில் தோன்றியவர் சர் ஐசக் நியூட்டன் (1642-1727). முதல் பாரத சுதந்திர போருக்கு 170 ஆண்டுகளுக்கு முன் அவரது புகழ்பெற்ற ‘பிரின்ஸிபியா மேதமேட்டிக்கா – பிலாஸபிஸ் நேச்சுராலிஸ் ‘ (1687) எனும் நூலின் தாக்கமும் வழிகாட்டலும் பின்னர் வந்த நான்கு நூற்றாண்டுகளுக்கு பொதுவாக அறிவியலாளர்களுக்கும், குறிப்பாக இயற்பியலாளர்களுக்கும் முக்கிய வழிகாட்டியாக அமைந்தது. இயற்பியலை அனைத்து அறிவியல் புலங்களில் முதன்மை கொண்டதாக மாற்றியதில் இது பெருபங்கு வகித்தது. இயற்பியலின் அறிதல்முறைகளை எந்த அளவுக்கு ஒட்டி தம் அறிதல் முறைகள் அமைகின்றனவோ அந்த அளவுக்கு ஒரு அறிதல் புலம் தன்னை அறிவியல் தன்மை கொண்டதாக கொள்ளும் போக்கிற்கான அடித்தளம் நியூட்டனால் ஏற்படுத்தப்பட்டது. அவரது பிரபஞ்சம் தழுவிய இயக்கவிதிகள் தோட்டத்தில் விழும் ஆப்பிளுக்கும் பொருந்தும்; வான் கோளங்களின் இயக்கங்களுக்கும் பொருந்தும். பிரபஞ்சம் தழுவிய இயக்கவிதிகளின் படி இயங்கும் ஒரு பெரும் இயந்திரமாக பிரபஞ்சத்தை காட்டின இவ்விதிகள். மேற்கின் அறிவியல் மரபின் பிதாமகரான மற்றொரு மேதை ரெனெ டெஸ்கார்த்தே (1596-1650) வெளியினை அச்சுக்கள் மூலம் பகுத்தறியும் கார்ட்டாசிய அறிதல் முறையை உருவாக்கிய இவர் கணிதம் மற்றும் தத்துவ ஆகிய புலங்களில் மேதைமை பெற்றவர் ஆவார். மன-உடல் இருமை பார்வையை உருவாக்கியவரும் இவரே. ‘நான் அறிகிறேன் எனவே நான் இருக்கிறேன் ‘ (Cogito Ergo Sum) எனும் அவரது கூற்றின் தாக்கம் இன்றும் மிக முன்னணி அறிவியல் புலங்களிலும் இருந்து வருகிறது.
‘கீழ்மையான பருப்பொருட்களுக்கான ‘ இயக்கவிதிகளை பயன்படுத்தி வானவியலாளர்கள் இறை சுவர்க்க உறைவிடமாக கருதப்பட்ட வான்வெளியின் கோளங்களின் இயக்கங்களை அறியவும் கணிக்கவும் வானவியலாளர்கள் முயற்சிக்க ஆரம்பித்தனர். இதன் விளைவாக பூமியே பிரபஞ்சத்தின் மையம் எனும் கருத்து தகர்ந்தது. நிகோலஸ் கோபர்நிகஸின் ‘On the revolution of Celestial spheres ‘ வெளியானது. இதனையொட்டி கலிலியோவின் தொலைநோக்கி காட்டிய பிரபஞ்ச விரிவும், அதனோடிணைந்து அவரது கணித அறிதல் அளித்த ஆதவ-மைய கோட்பாட்டிற்கான ஆதாரங்களும் பெரும் அறிவியல் புரட்சியினை ஏற்படுத்தின.
கலிலியோவின் புரட்சியும், திருச்சபையின் எதிர்வினையும் : ‘கீழ்மையான பருப்பொருட்களுக்கான ‘ இயக்கவிதிகளை இறை சுவர்க்க உறைவிடத்தினை கணிக்க பயன்படுத்துவதை திருச்சபையினரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மேலும் பூமி பிரபஞ்ச மையமன்று மாறாக ஆதவனை சுற்றும் பல கோள்களில் ஒன்றே எனும் உண்மை கிறிஸ்தவ இறையியலின் அடிப்படைக்கே எதிரானதென திருச்சபை கருதியது. எனவே ‘புனித குற்றவிசாரணை ‘ (Holy Inquisition) வானவியலாளர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்டது. பல வானவியலாளர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த அடக்குமுறையின் உச்சகட்டமாக ஜூன் 21, 1633 இல் ரோமில் திருச்சபையின் போப்பின் அதிஉயர் பிரதிநிதிகள் முன் வயோதிக கலிலியோ மண்டியிட்டு தன் கோட்பாடுகளை ‘தன் பழைய தவறுகளை சபித்து விலகிக்கொள்வதாக ‘ உறுதி கூறினார். அதன் பெயரில் எரிக்கப்படாமல் அவர்வீட்டோடு சிறை வைக்கப்பட்டார். இதற்கு ஏழு ஆண்டுகளுக்கு பின் அவர் மரணமடைந்தார்.
திருச்சபை மட்டுமல்ல கலைஞர்களும் கூட அறிவியலின் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சியை காட்டினர். கீட்ஸ் ‘நியூட்டன் வானவில்லின் கோர்வையை பிரித்தழிப்பதாக ‘ கூறினார். புகழ்பெற்ற மறையியல் கவிஞரும், ஓவியருமான வில்லியம் பிளேக் , ‘இறைவன் நம்மை ஒற்றைப் பார்வையிலிருந்தும் நியூட்டனின் தூக்கத்திலிருந்தும் காப்பாற்றுவாராக ‘ என தன் கவிதைகளில் ஒன்றில் குறிப்பிட்டார். ஒரு பெரும் கடற்கரையில் நியூட்டன் நிர்வாணமாக ஜியோமித வடிவங்களை வரைந்து கணிக்கும் பிளேக்கின் ஓவியம், கலைஞர்களில் பெரும்பாலோனோருக்கு நியூட்டானிய மற்றும் பேகனிய அறிவியலின் மீதிருந்த காழ்ப்புணர்ச்சியின் பிரதிபலிப்பாகவே விளங்குகிறது. (ஆயினும் வோர்ட்ஸ்வோர்த் போன்ற ஒருசில கவிஞர்கள் நியூட்டானிய அறிவியலின் மீது காழ்ப்புணர்ச்சி காட்டாதது மட்டுமல்ல அது காட்டும் இயற்கையின் சீரிய கணித அழகுடைய மகோன்னத ஒழுங்கினை இரசிக்கவும் செய்தனர்.)
1859 இல் சார்ல்ஸ் டார்வின் தன் புகழ்பெற்ற ‘உயிரினங்களின் தோற்றம் – இயற்கை தேர்வின் மூலமாக ‘ (Origin of Species by Natural Selection) எனும் நூலை வெளியிட்டார். இது ‘இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட உலகின் மிக உன்னத இனமாக ‘ தங்களை கருதி கொண்டிருந்த விக்டோரிய சமுதாயத்தினருக்கு பெரும் அடியினை கொடுத்தது. ‘இறைவனின் சாயலின் ‘ வேர்கள் உண்மையில் குரங்கினத்துடன் பிணைந்து கிடந்தது வெளியாயிற்று. டார்வினை மிகக்கொடூரமாக விக்டோரிய மேல்குடிகளும், மத போதகர்களும் கேலிசெய்தனர்.
இவ்விதமாக அறிவியல் மேற்கத்திய மரபின் பல அடிக்கட்டுத் தூண்களை நொறுங்கச் செய்தபோது மேற்கத்திய சமுதாயத்தில் இரு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஒன்று: தொழிற்புரட்சி மற்றொன்று ஐரோப்பிய காலனிய விரிவாக்கம். தொழிற்புரட்சிக்கான உற்பத்திபொருட்கள் காலனிகளிலிருந்து தங்குதடையற வந்துகொண்டிருக்க உதவும் விதத்தில் மேற்கத்திய இறையியல் தன்னை உருமாற்றிக்கொண்டது. இவ்விதத்தில் அறிவியலும் மேற்கத்திய கலாச்சாரமும் ஒன்றோடொன்று பிணைந்தவையாகவும், ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு மாற்றான கலாச்சாரங்கள் அறிவியலுக்கு எதிரானவை அல்லது புறம்பானவை என்பதுமான சித்திரம் ஐரோப்பிய காலனிகளில் பரப்பப்பட்டன. கிறிஸ்தவ மத போதகர்கள் ஐரோப்பிய கலாச்சார போதகத்தையே கல்வி என காட்டும் அமைப்புகளை பரப்புவதில் பெரும்பங்கு வகித்தனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் ஐரோப்பிய கலாச்சார மேன்மை மற்றும் கிறிஸ்தவ மதிப்பீடுகளின் வெற்றியாக சித்தரிக்கப்பட்டது. இது ஒரு தன்னைதானே வலுப்படுத்தும் பிரச்சாரமாக மேற்கிலும் கிழக்கிலும் நடைபெற்றது.
மேற்கத்திய அறிவுலகில் இத்தகைய மனோநிலைக்கு உதாரணமாக காரல் மார்க்ஸ் மற்றும் மெக்காலே ஆகியோரை கூறலாம். காரல் மார்க்ஸ் பாரத கலாச்சாரத்தை ‘அரைகுறை காட்டுமிராண்டி நாகரிகம் ‘ எனவும் ‘பிரிட்டன் பாரதத்தில் என்னவித தவறுகள் செய்திருந்தாலும், அது பாரதத்தை நாகரிகப்படுத்தும் பணியினை செய்துள்ளது ‘ என்றும் கூறினார். இத்தகைய சூழலில்தான், ஒரு காலனியாதிக்கத்திலுள்ள தேசத்திலிருந்து வந்து கையில் பணமின்மையால் தெருவோரங்களில் படுத்து தூங்கிய ஒரு இளம் சந்நியாசி, 11 செப்டம்பர் 1893 இல் அமெரிக்காவின் ‘பைபிள் படுகை ‘ எனப்பட்ட அடிப்படைவாதம் நிரம்பிய ஒரு பிரதேசத்தில், உலகம் தழுவிய சகோதரத்துவத்தின் செய்தியை அளித்தார். சிகாகோ நகர சர்வ சமய மாநாட்டில் ஸ்வாமிஜி அளித்த உரைகள் மேற்கத்திய மனோபிம்பங்களை உடைதெறிந்தன. அதேசமயம் ஸ்வாமிஜி அறிவியலின் முன்னகர்தலுக்கு தேவையான தத்துவ தரிசன தேவையையும், தத்துவ விசாரங்கள் அறிவியல் தேடலாக மாறவேண்டிய அவசியத்தையும், இவை இரண்டும் ஒரு தேசிய சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும், விடுதலைக்கும் தேவையானவை என்பதனையும் உணர்ந்திருந்தார். அன்றைய மேற்கின் சமய மற்றும் இறையியல் அமைப்புகள் இப்பணியினை செய்யும் ஆற்றலற்றிருப்பதையும் ஸ்வாமிஜி கண்டுகொண்டார். இதன் மூலம் பாரத அறிவியல் முன்னேற்றத்திற்கான பெரும் வாய்ப்பையும் அவர் தெளிவாக கண்டார்.
அறிவியலின் ஒளியில் சமயம்:
உலகின் சமயங்களின் வரலாற்றில் அறிவியலின் அறிதல் முறையை சமய உண்மைகளுக்கும் பயன்படுத்தவேண்டும் என கூறிய முதல் ஆன்மிகவாதி ஸ்வாமி விவேகானந்தர் ஆவார். கிறிஸ்தவம் முதல் மார்க்சியம் வரை வெளிப்படுத்தப்பட்ட ‘உண்மைகளுக்கு ‘ சான்று பகர்வதே அறிவியலின் பணி என கருதப்பட்ட (இன்றும் கருதி வரும்) மனநிலைக்கு மாறாக ஸ்வாமி விவேகானந்தர் கூறினார், ‘சமயம் பகுத்தறிவுக்கு உட்பட்டு தன் இருப்பினை அறிவியல் புலங்களை போல நியாயப்படுத்த வேண்டுமா ? அறிவியல் மற்றும் புறஅறிதல் புலங்களினைப் போலவே அறிவியல் செயல்முறைகள் மூலமே சமயமும் அணுகப்பட வேண்டுமா ? என் பார்வையில் அதுதான் சரியானது, இது எத்தனை விரைவில் செய்யப்படுகிறதோ அத்தனைக்கு நல்லது. ‘ இத்தகைய அறிவியல் அணுகுமுறையின் அடிப்படையில் ஒரு சமய ‘உண்மை ‘ பொய்யாகிற பட்சத்தில் என்ன செய்வது ? ஸ்வாமிஜியின் வார்த்தைகளில், ‘ அறிவியல் அணுகுமுறையால், ஆராய்ச்சியால் ஒரு சமயம் அழிபடுமெனில் அது என்றென்றும் அழியப்பட வேண்டிய மூடநம்பிக்கையாகவே இருந்துள்ளது.அது எத்தனை விரைவில் அழிபடுகிறதோ அத்தனைக்கு மனிதகுலத்திற்கே நல்லதுதான். ‘ அத்தகையதோர் அணுகுமுறையின் விளைவாக, ‘சமயத்தின் அனைத்து மாசுகளும் அழிபடும்.ஆயின் சமயத்தின் உண்மை மையம் எதுவோ அது மட்டுமே வெற்றிகரமாக இச்சோதனையிலிருந்து வெளிவரமுடியும். ‘ ஸ்வாமிஜி கூறுவார், ‘(மத)நம்பிக்கை என்பது சிந்தித்தலற்ற கவனக்குறைவு ‘ (Belief is non-thinking carelessness).
பரிணாமமும் ஸ்வாமிஜியும்:
1950கள் வரை அமெரிக்க மாகாணங்களில் பரிணாம அறிவியல் கற்றுக்கொடுப்பது கைது செய்யப்படுதற்குரிய குற்றமாக திகழ்ந்தது. புகழ் பெற்ற ஸ்கோப்ஸ் கைதினை உதாரணமாக கூறலாம். ஆனால் ஸ்வாமி விவேகானந்தரே இந்த அறிவியலின் இறையியல் தாக்கத்தை உணர்ந்து அதனை உள்வாங்கிய முதல் ஆன்மிகவியலாளர் ஆவார். அதே நேரம் அவர் சமூக டார்வினியத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. மார்ச் 22-24 (1896) ஹார்வர்ட் மாணவர்களுடன் ஸ்வாமிஜி உரையாடிய போது அவர் சமூக டார்வினிய கோட்பாடுகளையும் அதன் அதிதீவிர வெளிப்பாடான ‘அனைத்து சமூக விரோதிகளும் அழிக்கப்படவேண்டும் ‘ என்கிற யூஜெனிய வாதங்களையும் விமர்சித்தார். மானுட சமுதாய போட்டிகளை யும் அதன் நாச விளைவுகளையும் ‘சிறந்ததே வெல்லும் ‘ என அறிவியல் முலாம் பூசலை அவர் மறுத்தார். மாறாக பதஞ்சலியின் யோக சூத்திரங்களின் அகபரிணாமமே அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியென கருதினார். ஜூலியன் ஹக்ஸ்லி, தெயில்ஹார்ட் தி சார்டின் ஆகிய ஸ்வாமிஜியை தொட்டடுத்து மானுட பரிணாமத்தின் அடுத்தகட்டத்தை குறித்து சிந்தித்த மேற்கத்திய சிந்தனையாளர்களும் இதே முடிவுக்கு வந்திருப்பது ஒரு அதிசய ஒற்றுமை. ஹக்ஸ்லி யோகங்களை அடுத்த பரிணாம கட்டத்திற்கான செயல்முறைகளாகவே கூட சிந்தித்துள்ளார். மேலும் பரிணாம அறிவியலில் ஸ்வாமிஜி ஒரு அத்வதைத போக்கினை கண்டார். ‘அனைத்துயிரும் ஒன்றின் விகசிப்பே ‘ எனும் நிலைபாடு ஸ்வாமிஜியினுடையது. ஆனால் இதற்கு பொருள் அறிவியல் உண்மைகள் அனைத்தையும் ஏற்கனவே பாரதம் அறிந்திருந்தது என்பதல்ல. மாறாக அறிவியல் தேடலுக்கு தூண்டுகோலாக விளங்கும் பெரும் தரிசனங்கள் பாரத ஞான மரபில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் பருப்பொருட் பிரபஞ்ச பிரதிபலிப்பாக அறிவியல் அமைவதாக அவர் கருதினார். ‘பரிணாமம் அனைத்து பாரத தத்துவ மரபுகளிலும் அடிப்படையாக விளங்குகிறது. இன்று இயற்கை அறிவியலிலும் அது உணரப்படுகிறது ‘ ‘படைப்பல்ல விகசிப்பே (Not creation but manifestation) உண்மை என்பதை அறிவியல் இன்று கூறுகிறது. ஹிந்துவிற்கு இது மகிழ்ச்சியான விஷயம். ‘ எனும் ஸ்வாமிஜியின் வார்த்தைகளே இதற்கு சான்றாக அமையும்.
‘இம்முழு பரிணாமத்தொடரும் ப்ரோட்டோப்ளாஸம் முதல் மானுடன் வரை அடிப்படையில் ஒரே உயிரே. ‘ என்பது அவர் வார்த்தைகள். இன்று பரிணாம அறிவியலுக்கு சான்றாக அளிக்கப்படும் ‘உயிர்களின் மரம் ‘ பல்வித உயிர்களின் அடிப்படையாகவும் உள்ளோடும் ஒரே தன்மையினை அடிப்படையாக கொண்டதுதான். முதலில் கூறியது போல இது அத்வைத தரிசனத்தின் புற-பிரதிபலிப்பு.
தெயில் ஹார்ட் தி சார்டின் கத்தோலிக்க துறவி. அவரது சிந்தனைகளில் பரிணாம மற்றும் வேதாந்த பார்வையிருந்ததன் விளைவாக அவர் வாழ்நாள் முழுவதும் அவரது எழுத்துக்களை வெளியிட அவருக்கு திருச்சபை தடைவிதித்திருந்தது. 1900 இல் பாரிஸில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் அவர் கலந்துகொண்டிருந்தார். அதே மாநாட்டில் பங்கு பெற்ற இரு முக்கிய பாரதியர்கள் ஸ்வாமி விவேகானந்தரும், ஆச்சார்ய ஜகதீஷ் சந்திர போஸும். ஸ்வாமிஜியும் கத்தோலிக்க துறவியும் சந்தித்தனரா ? வரலாற்றில் நாம் அறியமுடியாத பக்கங்களில் இதுவும் ஒன்று.
ஸ்வாமிஜி – தரிசனம் -இயற்பியல் :
ஸ்வாமி விவேகானந்தர் அன்றைய மேற்கின் மிகச்சிறந்த அறிவியலாளர்கள் அனைவரையும் சந்தித்திருந்தார். மின் இயக்கவியலில் முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரான ஹெம்கால்ட்ஸை (1821-1894) அவரது வாழ்வின் இறுதியாண்டில் ஸ்வாமிஜி சந்தித்தார். சர் வில்லியம் தாம்ஸன் எனப்படும் கெல்வின் பிரபு (1824-1907),நிகோலா டெஸ்லா(1856-1943) ஆகிய இயற்பியலாளர்களையும், அமெரிக்க மனவியலின் தந்தை என அறியப்படும் வில்லியம் ஜேம்ஸையும் அவர் சந்தித்தார். பின்னர் கெல்வினுக்கும், டெஸ்லாவுக்கும் நடந்த கடித போக்குவரத்தில் பாரத தத்துவங்கள் விவாதிக்கப்பட்டன. வில்லியம் ஜேம்ஸோ ஸ்வாமிஜியை ‘மானுடகுலத்திற்கு செய்யப்பட்ட மரியாதை ‘ என கருதினார்.
ஸ்வாமிஜி பாரத தத்துவ தரிசனத்தை எந்த அளவு அறிவியலுக்கு தூண்டுகோலாகவும், அதன் அடிப்படையில் முன்னகர்த்தவும் கருதினார் என்பதனை டெஸ்லாவுடனான அவரது தொடர்பின்மூலம் அறியலாம்.
ஸ்வாமிஜி தன் கடிதத்தில் குறிப்பிடுகிறார், ‘ பிராணன் மற்றும் ஆகாசம் ஆகிய சிந்தனைகள் நவீன இயற்பியலுடன் மிகவும் இணைந்து வருவதாக டெஸ்லா குறிப்பிட்டார். சக்தியையும் ஜடப்பொருளையும் ஒன்றின் இரு வெளிப்பாடுகளாக அறிவியலால் அறியமுடியுமா என நான் அவரை வினவினேன். நாளை காலை இதற்கான கணித சமன்பாடுகளை உருவாக்கி காட்டுவதாக அவர் கூறியுள்ளார். இது மட்டும் முடிந்ததென்றால் வேதாந்தத்திற்கு உறுதியான இயற்பியல் நிலைபாடு கிடைக்கும். ‘ ஆனால் பின் அவரது எழுத்துக்கள் மூலம் ‘வேதாந்தத்திற்கு உறுதியான இயற்பியல் நிலைபாடு ‘ அளிக்கும் சமன்பாடுகளை டெஸ்லாவால் உருவாக்க முடியவில்லை (பொதுவாக அமெரிக்காவில் டெஸ்லா அத்தகைய சமன்பாடுகளை உருவாக்கியதாக கூறும் போலி அறிவியலாளர்கள் பலர் உண்டு. ஆனால் டெஸ்லாவின் முக்கிய சரிதையாளர்கள் அவர் அதற்கு கடுமையாக முயன்றார். ஆனால் தோற்றார் என்றே கூறுகின்றனர். கெல்வினுடனான அவரது கடித போக்குவரத்தும் அதை காட்டுகிறது.) இது குறித்து ஸ்வாமிஜி உருவாக்கிய ஒரு திட்டப்படம் பின்வருமாறு
பிரம்மம் உறைநிலை ஆற்றல்
மகத் பிரபஞ்ச சிருஷ்டி ஆற்றல்
பிராணன் ஆகாசம் ஆற்றல் பருப்பொருள்
சாங்கியத்தின் புருஷனும் பிரகிருதியும் வேதாந்தத் பிரம்மத்தின் இரு வெளிப்பாடுகள் என்பது இயற்பியலிலும் பிரதிபலிக்குமா எனும் ஸ்வாமிஜியின் எதிர்பார்ப்பு ஆற்றலையும் பருப்பொருளையும் ஒன்றென காட்டும் சமன்பாடு ஒரு ஜெர்மானிய குமஸ்தாவால் 1905 இல் உருவாக்கப்பட்டது. அவர் பெயர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.
ஸ்வாமிஜி வாழ்ந்த காலகட்டம் நியூட்டானிய அறிவியலின் உச்சம் என்பதனை நினைவில் கொண்டு பின்வரும் ஸ்வாமிஜியின் பின்வரும் மேற்கோளை காணுங்கள்:
‘எந்த மிகக்கடுமையான இயற்கை அறிவியலையும் எடுத்துக்கொள்ளுங்கள், வேதியியலோ அல்லது இயற்பியலோ; வானவியலோ அல்லது உயிரியலோ – அதனை பயிலுங்கள் மேலும் மேலுமும் பகுத்தாய்ந்து உட்செல்லுங்கள், பருப்பொருளென நீங்கள் கருதியவை சூட்சும தன்மை அடைவதை காண்பீீர்கள். ஜடத்தன்மையிலிருந்து ஜடமற்றதன்மைக்கு ஒரு பெரும் தாவலை நீங்கள் நிகழ்த்த வேண்டியிருக்கும். ‘ க்வாண்டம் நிகழ்வுகளுக்கான கோபன்கேகன் வியாக்கியானத்திற்கு குறைந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு சந்நியாசி கூறிய வார்த்தைகள் என நம்ப கடினமாக இருக்கும் விஷயம் இது. ஆனால் ஒன்றை மீண்டும் நினைவு கொள்ளவேண்டும். ஸ்வாமிஜி க்வாண்டம் இயற்பியலை அல்லது ஐன்ஸ்டைனின் சமன்பாட்டை ஏதோ ஞானதிருஷ்டியில் அறிந்திருந்தார் என்பது இதன் பொருளல்ல. மாறாக, ஒரு தரிசன அடிப்படையில், இயற்பியலாளர்களுடன் மிகவும் விவாதித்திருந்ததன் அடிப்படையில் ஒரு தத்துவார்த்த முறையில் இயற்பியலின் பாதையை அவர் துல்லியமாக நிர்ணயம் செய்தார். ஸ்வாமிஜியின் மேதமைக்கும் அறிவியலில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கும் ஒரு ஆச்சரியகரமான எடுத்துக்காட்டு இது.
ஸ்வாமிஜியும் பாரதத்தின் அறிவியல் நிறுவனங்களும்:
இந்த அளவு அறிவியல் ஈடுபாடுகொண்ட ஸ்வாமிஜி நம் தேசத்திற்கு அறிவியல் கல்வியும் ஆராய்ச்சியும் தேவை என்பதனை மிகவும் உணர்ந்திருந்தார். அறிவியல் கல்வி கிராமங்கள் தோறும் கொண்டு செல்லப்படவேண்டும் என்பதில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதே நேரம் அறிவியல் ஆராய்ச்சியிலும் பாரதம் முன்னணியில் விளங்க முடியுமென்பதிலும் அதற்கான நிறுவனங்களை உருவாக்க வேண்டுமென்பதிலும் தீவிரமாக இருந்தார். இன்று சர்வதேச தரம் வாய்ந்த, வரலாற்றுப்புகழ் மிக்கதான இரு பாரத அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஸ்வாமிஜிக்கு கடன்பட்டவையேயாகும்.
1. இந்திய அறிவியல் நிறுவனம், பங்களூர்:
1898 இல் ஸ்வாமிஜி ஜப்பானிலிருந்து அமெரிக்கா சென்றுகொண்டிருந்த போது கப்பலில் (Empress of India) ஒரு நடுவயது கொண்ட பார்சி கனவான் ஸ்வாமிஜியுடன் உரையாடியவாறு வந்தார். தேச தன்னிறைவு, இளைஞர்களுக்கு தேச சேவையில் அக்கறை தேவை என்பது குறித்து ஸ்வாமிஜியின் வார்த்தைகளால் கவரப்பட்ட அந்த பார்ஸி கனவான் ஸ்வாமிஜியின் வார்த்தைகளை நடைமுறைப்படுத்த முனைந்தார். அதற்காக 23 நவம்பர் ,1898 அவர் ஸ்வாமி விவேகானந்தருக்கு எழுதிய கடிதத்தில் இந்திய அறிவியல் மையம் தொடங்க தான் உத்தேசித்திருப்பதாகவும், அறிவியல் தேச சேவை ஆகியவற்றிற்கான தேவைக்கு மக்களை தட்டி எழுப்ப, ஸ்வாமிஜியை விட தகுதியாக பாரதத்தில் யார் இருக்கமுடியுமெனவும் அவரது உதவியினை கோரியிருந்தார். ஸ்வாமிஜியும் இந்திய அறிவியல் மையம் உருவாக்க முழு ஒத்துழைப்பினை நல்கினார். ஸ்வாமிஜியால் உந்தப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டு இந்திய அறிவியல் மையத்தை உருவாக்கிய அந்த பார்சி கனவான் வேறு யாருமில்லை ஜாம்ஷெட்ஜி டாடா. இவ்வாறாக வேதாந்த கேசரியின் சிந்தனை விதைகளிலிருந்து, டாடாவின் உழைப்பாலும் தேசபக்தியாலும் உருவாகிற்று இன்று சர்வதேச புகழ்பெற்றுள்ள இந்திய அறிவியல் மையம்.
2. போஸ் அறிவியல் மையம், கொல்கத்தா:
1900 பாரிஸ் அறிவியலாளர் கண்காட்சி மற்றும் மாநாட்டில் ஆச்சார்ய ஜகதீஷ் சந்திர போஸின் பேருரைகளால் பெரிதும் கவரப்பட்டார் ஸ்வாமிஜி. ‘இன்று பாரதியனும், வங்க மைந்தனுமான ஜகதீஷ் போஸ் உலக அறிவியலாளர் மண்டலத்தில் முதன்மை பெற்று ஒளிர்கிறார். ஜெய ஜெய ஜெய ஜெகதீஷ் சந்திர! ‘ பாரத தேசிய மறுமலர்ச்சி முழுமையானதாக நமக்கே உரிதான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் அவசியமென ஸ்வாமிஜி போஸினை சந்தித்த போது கூறினார். ஸ்வாமிஜியின் இரு மேற்கத்திய சிஷ்யைகளான சகோதரி நிவேதிதை மற்றும் திருமதி. சாரா சாப்மேன் புல் ஆகியோர் ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரரின் நெருங்கிய உழைப்பாளிகள் ஆயினர். தம் சகோதரி போன்றும் அன்னை போன்றும் அவர்கள் தமக்கு உதவி புரிவதாக ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரர் மனம் நெகிழ்ந்து குறிப்பிட்டார். 1917 இல் போஸ் அறிவியல் ஆய்வு நிறுவனம் உருவானது. ஜே.ஜே. தாம்ஸன் உலக அறிவியல் வரலாற்றில் ஒரு முக்கிய சகாப்தமாக அதனை கருதினார். மனித குல சேவைக்கே தம் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் இம்மையம் தன் கண்டறிவுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை கோராது. இம்மையத்தை உருவாக்க கடும் பாடுபட்ட சகோதரி நிவேதிதை 1911 இல் காலமாகியிருந்தார். அவரது பங்களிப்பு குறித்து ஆச்சார்ய போஸ் பின்வருமாறு குறிப்பிட்டார், ‘அவளின்றி இந்த அறிவியலின் சரணாலயத்தில் ஒளி தோன்றியிருக்காது. அவளே உண்மையான ஒளியினை தாங்கி நிற்பவள். ‘ மேலும் போஸ் ஆராய்ச்சி மையத்தின் சின்னமாக சகோதரி நிவேதிதைக்கு மிகவும் விருப்பமான (ததீசி முனிவரின் தியாகத்தின் விளைவாக உருவான தியாகம் மற்றும் வலிமையின் சின்னமாம்) வஜ்ரமே போஸ் அறிவியல் ஆய்வுமைய சின்னமாக விளங்கியது.
ஸ்வாமிஜியின் அத்வைத ஒளிக்கதிர்கள் பாரதத்திற்கு அப்பாலும் அறிவியலாளர்களை அவரது காலத்திற்கு பின்னும் ஈர்த்துவருகிறது. புவிவேதியியலின் ஐன்ஸ்டைன் என அறியப்படும் விளாதிமீர் வெர்னாட்ஸ்கி ‘தன் வாழ்நாள் முழுவதும் பாரத ஞானமரபால் ஈர்க்கப்பட்டவர். தன் இறுதி காலங்களிலோ முழுமையாக ஸ்வாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளை படிப்பதிலேயே செலவிட்டார். ‘ என்கிறார் ஆராய்ச்சியாளர் அக்செனவ். அதைப்போலவே உலகப்புகழ் பெற்ற ‘தாவோ ஆஃப் பிஸிக்ஸ் ‘ எனும் நூலை எழுதிய ப்ரிட்ஜாப் கேப்ரா அந்நூலில் நவீன க்வாண்டம் இயற்பியல் காட்டும் பிரபஞ்ச தரிசனங்களுக்கு இணையாக ஸ்வாமி விவேகானந்தரின் மேற்கோளை காட்டுகிறார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனை சார்ந்த ஸ்வாமி ரங்கனாதானந்தர் அறிவியலை தூயமலராக செயல்படும் அறிவியல் மற்றும் பழம் தரு கனியாக செயல்படும் அறிவியல் என இரண்டாக பிரிப்பார். இரண்டாவது வகை அறிவியல் தொழில்நுட்பம் ஆகும். ஸ்வாமி விவேகானந்தர் மனிதருக்கு சேவை செய்யும் தொழில்நுட்ப அறிவியலுக்கான வலுவான மதிப்பீடுகளை தந்தவர். இன்று கிரிஜன மக்களுக்கு சேவை செய்யும் டாக்டர் சுதர்ஸன் விவேகானந்த சேவா உணர்வால் உந்தப்பட்டவர் ஆவார். உலகின் பிணிகள் பலவற்றிற்கும் மருந்துகளை கண்டுபிடித்த விந்தை மருந்துகளின் வித்தகர் என அழைக்கப்படும் எல்லப்ரகாத சுப்பாராவ் ராமகிருஷ்ண மிஷன் துறவியால் உந்தப்பட்டவர் ஆவார்.தொழில்நுட்பத்தை தேச மேம்பாட்டிற்கு பயன்படுத்த அழைப்பு விடுக்கும் தன் எழுச்சியூட்டும் நூலான ‘எழுச்சி தீபங்களில் ‘ நம் மேன்மைமிகு குடியரசு தலைவர் அவர்கள் ஸ்வாமி விவேகானந்தரின் வாசகங்களை மேற்கோள் காட்டி நம்மை தேச சேவைக்கு அழைத்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஸ்வாமிஜி அறிவியல்-ஆன்மிக இணைப்புப்பாலமாக விளங்கியவர். அவரது முக்கியத்துவம் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுடன் இணைந்து போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியலின் அடிப்படையை உருவாக்கியவரும், போஸான்கள் எனும் அணுத்துகள் குடும்பத்தின் ஆதார சமன்பாடுகளை தந்தவருமான இயற்பியலாளர் சத்யேந்திரநாத் போஸ் பின்வருமாறு கூறுகிறார், ‘முன்னெப்பொழுதும் கண்டிராத அளவில் அறிவியல் உணர்வுடன் ஆன்மிக புத்தெழுச்சியினை உருவாக்கியவர் ஸ்வாமி விவேகானந்தர். அத்தகையதோர் கல்வி நமக்கு தேவை என ஸ்வாமி விவேகானந்தர் வலியுறுத்தினார். இன்றைக்கும் அத்தகைய கல்வி நமக்கு தேவைப்படுகிறது….இன்று சவால்களை நம் சமுதாயம் எதிர்கொள்ளும் காலகட்டத்தில் ஸ்வாமிஜியின் எண்ணங்களை நாம் மீள் நினைவுகொண்டு செயல்பட வேண்டும். இல்லையெனில் அவர் குறித்து பெருமை கொள்ள நாம் தகுதியற்றவர் ஆகிவிடுவோம். ‘
(விவேகானந்த கேந்திரம் – இயற்கைவள அபிவிருத்தி திட்ட தொழில்நுட்ப வளாகத்தில் செப்டம்பர் 11, 2003 அன்றும் மற்றும் சேவாபாரதி பயிற்சி முகாமில் டிசம்பர் 1, 2003 அன்றும் கட்டுரையாளன் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கட்டுரை.)
மேலதிக தகவல்கள் மற்றும் அறிதலுக்கு::
1. Complete Works of Swami Vivekananda , 1970 Mayawathi Memorial Edition. Advaita Ashrama, Calcutta 1970.
2. Marie Lousie Burke, Swami Vivekananda in America New Discoveries, Advaita Ashrama, Calcutta 1966.
3. Visvapriya Mukherji, ‘Jagadish Chandra Bose ‘, Publications Division, Govt. of India, 1983.
4. S.N.Bose: The Man and His Work, Part-II, S.N.Bose National Center for Basic Sciences, Calcutta, 1994.
5. Science in the USSR, No. 4,July-August 1990
ஃ ஸ்வாமிஜியின் சரிதையில் இக்கட்டுரை தொடர்பான தகவல்கள் கீழ்காணும் இணையதள முகவரியில் உள்ளன: www.ramakrishnavivekananda.info /vivekananda_biography/08_vedanta_in_america.htm
ஃ ஸ்வாமிஜிக்கு டாடா எழுதிய கடித நகல் பின்வரும் இணையதள முகவரியில் உள்ளது: http://www.tatasteel.com/archive/letter.htm
ஃ மற்றும் காண்க :http://www.tatasteel.com/archive/default.htm
பின்குறிப்பு: ஜூன் 24, 2001 இல் தி வீக் பத்திரிகையில் மிரா நந்தா என்கிற மார்க்சிய அடிப்படைவாதி ஸ்வாமி விவேகானந்தரை அறிவியல் எதிர்ப்பாளராக காட்ட முயல்கிறார். அவரது கட்டுரையிலிருந்து: ‘From Bankim Chandra to Vivekananda to today ‘s Sangh parivar, the neo-Hindus have dreamt of uniting the industry and technology of the west with the dharma of India…..It is thus imperative for Hindutva that science remains limited to technological gizmos, and does not spill over into the larger culture. ‘ மேலே ஒரு அறிவியலாளரான (தொழில்நுட்பவாதியல்ல-அறிவியலாளர்) சத்தியேந்திரநாத் போஸ் ஸ்வாமிஜியை காணும் விதத்தை காட்டியுள்ளேன்.அதேசமயம் மார்க்சிய அடிப்படைவாதியான மிரா நந்தாவின் அபத்த உளறலையும் காட்டியுள்ளேன். சோவியத் நாட்டில் அறிவியலாளர்கள் அழிக்கப்பட்டவிதத்தையும் நாம் அறிவோம். ஆகவே ஐரோப்பிய மேன்மைவாத, மார்க்சிய அடிப்படைவாதியான மிரா நந்தா போன்ற அபத்த உளறல் அறிவுஜீவிகளிடம் உண்மையையோ அல்லது நேர்மையையோ குறைந்த அளவில் எதிர்பார்ப்பது கூட வீண்வேலைதான். ஆனால் இத்தகைய கீழ்த்தரங்களின் அபத்த உளறல்களும் அடிப்படை தகவல் அறிவுகூட இல்லாமல், அறிவுஜீவி முகமூடி தரித்து ஆபாச கூத்து நடத்துகையில், அவற்றை தாங்கி ஏந்தி சக கூத்து பாட நம்மூர் அம்பிகளும் தயாராகும் போது, அவற்றின் முகமூடியை நாம் கிழித்து காட்டவேண்டியது அவசியம்.
————————–
- சோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து
- யெளவனம்
- உள்வீடு
- கால் கொலுசு
- என்ன உலகமோ
- அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)
- வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
- ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்
- கடிதங்கள் – டிசம்பர் 11,2003
- கடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003
- நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்
- ‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘
- ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு
- மனித நல்லிணக்கம்.
- காபியிலும் ஆணாதிக்கம்
- கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்
- வைர வியாபாரமும் வன்முறையும்
- வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்
- சில எதிர்வினைகள்
- அன்புள்ள மனுஷ்யபுத்திரன்
- காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்
- முரசொலி மாறன்
- பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை
- எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘
- பாரதி, மகாகவி: வரலாறு
- பாரதி நினைவு நாள்
- யானை பிழைத்த வேல்
- பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்
- பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை
- விடியும்! – (26)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)
- வினைத்தொகை
- மேல் நாட்டு மோகம்
- அம்மண தேசம்
- காதல் மாயம்
- ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
- நட்பு
- கடவுள்கள் சொர்க்கத்தில்…..
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- கொஞ்சம் தள்ளிப்போனால்
- தேர் நிலைக்கு வரும் நாள்
- தேர்க்கவிதை
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு
- கங்கைகொண்டசோழபுரம்
- புதசுக்கிரயோகம்
- கவிதைகள்
- கவிதைகள்
- என் புத்திக்குள்
- அரவம்.
- காகம்.
- ஏ ! பாரதி
- ஆதாரம்
- கபிலர் பாறை
- நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?
- இணையம்