ருத்ரா
=====
‘பாய்ஸ் ‘ஸில்
பாட்டு எழுதாத ஏக்கத்தை
‘கேர்ள்ஸ் ‘ பற்றி எழுதி
அரிக்குது என்று சொல்லிய
உன் பேனாவை
சொறிந்து கொண்டு
கவிதை சொரிந்த
ஒரு முப்பரிமாணக்கவிதை,
உன் ‘பெண்ணின் ‘
நேற்று-இன்று-நாளை.
பெண்ணின் கண்ணீர்
முப்பட்டைக் கண்ணாடியாய்
மூன்று முகம் காட்டி
வண்ணம் விரித்ததை
உடைந்த
வானவில் துண்டுகளாய்
உன் கவிதையில் ஒட்டி
சித்திர வேலைப்பாடு
நீ காட்டியிருந்தது
மிக மிக அருமை.
வளையல்களைச்சுற்றி
வட்டமாய்
பற்றியெரியும்
தீக்குள்
உன் சிலம்ப விளையாட்டு.
அதி அற்புதம்.
அங்குலம் அங்குலமாய்
பெண்ணின்
தேசப்படத்தை
தேகப்படமாக்கி
ஒரு ‘செளந்தர்ய லாகிரியை ‘
அழகாய்த்தான் அருளியிருக்கிறாய்.
மன்னர்காலத்து மங்கைகளின்
மனங்களில் கூட
ரகசியமாய்
மன்னார் வளைகுடாக்கள்
எத்தனை எத்தனை.
இவர்களின்
ஆழங்களின் முன்னே
பசிபிக் கடல்களும்
அரபிக்கடல்களும்
வெறும் கொட்டாங்கச்சிக்குளங்கள்
என்று புளித்துப்போன
புல்லரிப்புப் பாடல்களை
எப்போது நிறுத்தப்போகிறாய். ?
ஓலைச்சுவடிகளில்
எல்லாம்
இந்த ஓலங்கள் தான்.
குறுந்தொகையில்
சிறு நுரை கூட
குத்தீட்டியாய் கிழிக்கும்.
தாழ் தரவு கொச்சகம்
சுரிதகை தனிச்சொல்
என்று
கலித்தொகையின்
எல்லா யாப்பிலக்கணத்துள்ளும்
காதல் பிரிவின் பிலாக்கணங்கள்
மயிற்பீலிகள் கொண்டு வருடும்.
அந்த தீப்பட்ட புண்ணையா
கிளறி கிளறி
தேன்குடிக்கிறாய் ?
‘களிற்றியானை நிரை ‘
‘மணிமிடை பவளம் ‘
‘நித்திலக்கோவை ‘ என்று
அந்த ‘நானூறுகள் ‘
எல்லாம் தேனூறியபோதும்
உன் பங்குக்கு நீயோ
தீச்சுரங்கம் வெட்டி
காதலுக்கு ‘தீச்சட்டி ‘
ஏந்துகிறவன் அல்லவா நீ.
காற்றின்
இடைவெளிக்குள்ளும்
காதல்
நறவு பெய்ததால்
கல்லும் மண்ணும் கூட
உன்மத்தம் கொண்டது.
பிரிவின் வெப்பத்தில்
பெண்ணின்
உப்புக்கரிக்கும்
கண்ணீர்முத்துக்கள்
எங்கும் சிதறிய காட்சிகள்
எத்தனை எத்தனை.
உப்பரிகையை
பால் ஊற்றிக்கழுவிவிடும்
நிலவு எனும்
தூரத்து வேலக்காரியின்
இந்த துடைப்பக்குச்சிகள்
ஊசியாய் குத்தும்
ஒளிச்சீண்டல்களில்
பெண் துரும்புகள்
என்ன செய்யும் ?
போதும்
காதல் பாட்டுகள்.
அந்த தீவட்டியைக்கொண்டு
எத்தனை நாளைக்கு
இந்த இளைய பிஞ்சுகளின்
முதுகை தட்டிக்கொடுத்து
தடவி விடப்போகிறாய் ?
கவிவேந்தனே
பெண்ணை
பிசைந்து பிசைந்து
சிற்பம் செய்ய
மீண்டும் கிளம்பி விட்டாய்.
கிண்ணத்துக்குள்
முழங்கும்
கின்னரங்களுக்கு
கிளர்ச்சியூட்ட
பெண்ணின் நரம்பு முறுக்கி
‘பேரியாழ் ‘
மீட்டுகின்றாய்.
உடலை உடல்
தின்னும்
சினிமாவின்
இந்த பஞ்சுமிட்டாய்
வியாபாரத்திற்கு
குரல் கொடுக்க
வந்து விட்டாய்.
இசை அமைப்பாளர்களின்
தோல்கருவிகளும்
துளைக்கருவிகளும்
உன் எழுத்துக்களோடு
சுருதி சேரவில்லை
என்று
‘குமுத ‘ சபாவில்
தனி ஆவர்த்தனம்
செய்ய உட்கார்ந்து விட்டாய்.
ஆனால்
பெண்மை அழகை
அபஸ்வரம் ஆக்கி அல்லவா
உன் ஆரோகணத்தையும்
அவரோகணத்தையும்
ஆரோக்கியமற்றதாய்
உலவ விட்டாய்.
நேற்றைய பெண்கள்
எல்லாம்
பஞ்சும் நாறும்
அடைத்த பொம்மைகளாய்
மியூசியத்தில் கிடக்க
இன்றைய பெண்கள்
‘திருடா ‘க்களை
தேடி அலையும்
‘திருடி ‘களாய் திரிந்து
உன் வானம் முழுவதும்
நிறைக்கும் ஈசல்களாய்
சிறகு கிழிந்து கிடப்பதை
உணர்ச்சி ரசம் பிழிந்து
உன் உன்னத
வார்த்தைகள்கொண்டு
வருடியிருக்கிறாய்.
கணவன் கள்வன் அல்ல
என்பதற்கு
காற்சிலம்பு கழற்றி உடைத்த
கண்ணகிகள்
இன்று
காதலன் கள்ளனாய் ஆனான்
என்பதைக்காட்ட
நாற்சந்தியில்
கன்னிக்குடம் உடைக்கத்
தயாராகும்
கண்ணகிகளாய் மாறத்
தயாராய் இருப்பத்தை
குத்திக்காட்டிய
உன் சொல் ஒவ்வொன்றும்
வைர ஊசிகள் தான்.
ஆனால் இந்த
ஊசிப்போன காதலின்
‘பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை ‘
சினிமாப்பாட்டு மூலம்
ஒரு ‘டார்வின் கொள்கை ‘ ஆக்கிய
மகத்தான விஞ்ஞானி நீ தானே.
மனிதனுக்கு முன் பிறந்தது
குரங்கு.
குரங்கிற்கு முன் பிறந்தது
அந்த ‘குரங்கு சேட்டை ‘.
அந்த குரங்கு சேட்டைக்கும்
முன் பிறந்த சேட்டையே
இந்த காதல் சேட்டை என்று
படத்துக்கு படம்
ஒரு பரிணாம வளர்ச்சியோடு
பாடல்கள் தந்தவன் அல்லவா நீ.
இன்று
பூட்டிய பெண்ணுக்குள்ளும்
பூரான் புகுந்தது என்று
புலம்பல்கள் முழங்குகிறாய்.
அந்த பூச்சிக்கடியையும்
காதல் எனும்
பூகம்ப வெடிப்பாக்கினாய்.
இனிக்கும் தோட்டாக்கள் தானே
துளைக்கட்டும் பரவாயில்லை
என்று
உன் எழுத்துகள் தோறும்
காதலை
எந்திரத்துப்பாக்கி
ஆக்கினாய்.
அதை
ஆறாம்பூதம் என்று
ஆராத்தித்த பூசாரியல்லவா நீ.
தன் கர்ப்ப கிரகத்தை
கம்பியூட்டருக்குள்
பதியம் செய்துகொள்வாள்
நாளய பெண்
என்று சொல்லும்
தீர்க்க தரிசியே!
இந்த இளைய யுகம்
உன் சினிமாவின்
கல்லாப்பெட்டிக்குள்
கிடக்கும்
சில்லறைப்புழுக்கள்
என்று நினைத்தாயோ ?
இந்த இளம்வயதுகளை
எப்படி வேண்டுமானாலும்
கிச்சு கிச்சு மூட்டி
உன் சிக்கி-முக்கி கற்களை
பற்ற வத்து
வசூல் வெளிச்சத்தின்
சொக்கப்பனை கொளுத்தலாம்
என்ற உன் கனவுகளை
தீயிட்டுக் கொளுத்து.
காதல் ‘செண்ட் ‘ பூசுகிறேன்
என்று நீ
இந்த இளைஞர்களின்
முகத்தில் ‘ஆசிட் ‘ வீசியது
போதும்.
சுமப்பதற்கும்
கலைப்பதற்கும்
இ-மெயில்கள் போதும்
என்கின்ற
கணினி மயில்கள்
சினிமாவின்
உன் ஜிகினாவனத்தில்
வேண்டுமானால்
தோகைகள் விரித்து
தொப்புள்கள் காட்டலாம்.
விஞ்ஞானத்தின்
வானம் தொட்டு விளையாடும்
கல்பனா சாவ்லாக்கள் நடுவே
வெறும் பாவ்லாக்கள் காட்டும்
உன் செல்லுலோஸ் பதுமைகளை
உடைத்து நொறுக்கு.
சினிமாவின்
டப்பாப்பாட்டுகளுக்குள்
காதலுக்காக
பல்லவிகளும் அனுபல்லவிகளும்
சரணங்களோடு சேர்த்துப்
படைக்கும்
படையப்பாவே ?
வாழ்க்கைக்குள் வரும் காதலை
காதலுக்குள் வரும் வாழ்க்கை
என்று பாடும்
உன் தலைகீழ் தத்துவப்பாட்டுகளை
தவிடு பொடியாக்கு.
வாழ்க்கைப்பயணத்தில்
வரிசையாய்
நட்டுவைத்திருக்கும்
அந்த மைகற்களில்
எண்களை எழுதிவை
என்றால்
காதலை மட்டுமே
எழுதி
அந்த கற்களில்
கல்லறைகளை அல்லவா
கட்டிவைத்திருக்கின்றாய்.
பெண்கள் எல்லாம்
வெறும்
தின்பண்டங்களா உனக்கு.
கோன் ஐஸ் க்ரீம் தானே
இவர்கள் என்று நீ
எப்போதும்
சுவைக்கலம்பகம் பாட
துழாவிக்கொண்டிருக்கிறாய்
ஜாக்கிரதை !
என்றாவது ஒரு நாள்
நீ அள்ளிக்குடிக்கும்போது
அலறித்துடிப்பாய்
அது எப்படி
எரிமலைக்குழம்பு ஆனது என்று ?
ஆனந்த விகடனில்
அமெரிக்காவின்
சுதந்திரச்சிலையிடம்
வெள்ளைப் புறாவின்
ஏக்கத்தை
உருக்கமாய்
ஓவியம் தீட்டிய
‘கவி வர்மாவே ‘.
அதுவே தான்
உன் கவிதைகளின்
ராஜ பாட்டை.
அந்த சிலையின் கீழ்
அகன்று விரிந்து கிடப்பது
அட்லாண்டிக் கடல் அல்ல.
உன் எழுத்துக்களில்
அந்த சமாதான தேவதை
உருகி வடித்த
கண்ணீர் அல்லவா அது.
காகிதக்கிடங்கின்
குப்பையல்ல உன் கவிதை.
ஆயுதக் கிடங்கினில்
முடங்கிப்போகவா
மானிடம் முகிழ்த்தது ?
அணுக்கதிருள்
அவிந்து போகவா
மனிதனின்
அவதாரம் வந்தது ?
என்று
இந்த அகிலத்தையே
அதிர்ந்துபோக வைத்த
அற்புதக் கவிதை இது.
மீண்டும்
சினிமாக்காதலின்
கள் குடித்த
‘மன்மத ராசாக்களின் ‘
மந்தி தோப்புக்குள் சென்று
பந்தி வைக்க
உன் பேனாவோடு
புறப்பட்டு விடாதே.
உன் முக்காலத்துப்
பெண்ணொருத்தி
அகலியைக்கு
அக்கிரமம் புரிந்ததால்
‘புள்ளிராஜாக்களாய் ‘
மாறிப்போன
இந்த ‘மன்மத ராஜாக்களுக்கு ‘
மகுடம் சூட்டத்தான்
தேமா புளிமா
கருவிளம் கூவிளம் எல்லாம்
கற்றுத்தேர்ந்தாயா ?
அவளை அவன் நோக்க
அவனை அவள் நோக்க
இவர்களின்
விழி புணர்ச்சியைப் பற்றி
நீ பாடியது போதும்.
இனி இவர்களின்
விழிப்புணர்ச்சி பற்றி
பாடு நீ !
கவிப்புயலே பாடு நீ !
========================================ருத்ரா
(குமுதம் இதழ்-20.10.03)
< epsi_van@hotmail.com >
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -3
- மனித வெடி
- வெளிநடப்பு!
- புனிதமாகிப்போனது!
- அணுத்துறை நெறிப்பாடுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும் சூழ்மண்டலவாதிகள்!
- Recipe: Fried Rice With Peas and Chicken
- எனக்குப் பிடித்த கதைகள் – 83- செய்யாத தவறும் தியாகமும்-தி.சா.ராஜூவின் ‘பட்டாளக்காரன் ‘
- மாயக்கவிதை
- பிதாமகனும் .. தமிழ் மக்களும்
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிலன் குந்தெரா (Milan Kundera)
- ஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்
- திறவி.
- வேண்டாமா இந்தியா ?
- இளையாபாரதி கட்டுரைக்கான எதிர்வினை
- ‘தி ஹிண்டு ‘ வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும்
- கொடி — மரம்
- கவிதைகளே ஆசான்கள்
- அயர்ன்பாக்ஸ் எறும்புகள்
- ஊர்க்குருவி
- வைரமுத்துக்களின் வானம்- 7
- எழுதாதக் கவிதை
- பேரறிஞரும், புரியாத விஷயங்களும்.
- விடியும்! (நாவல்) – (20)
- வெளிச்சம்
- நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…(The Next Voice You Hear…)
- மொரீஷியஸ் கண்ணகி
- கலர்க் கண்ணாடி
- தழும்புகள்
- கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003
- தண்டனை போதும்!
- மொழிவன சில
- கல்லூரிக் காலம் – 5 – வணக்கம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பது
- இஸ்லாத்தில் உறக்கம் ஒரு நல்ல அமலா ?
- அனாஅரந்த் – பாசிசம் – ஸ்டாலினியம்
- குறிப்புகள் சில 30 அக்டோபர் 2003
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 1
- தெப்பக்குளத்தில்கிரிக்கெட் மேச்
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- சூரியக்கனல்
- மேற்குலகில் கடத்தப்பட்ட புறாக்கள்
- ஞானி ஹகீம் ஸனாயின் ஹதீகா