வென்றிலன் என்ற போதும்…

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

சுகுமாரன்


இணைந்திருந்து நாம் பேச
இனி நாளில்லை
இதுவன்றி

காலத்தின் கையிருப்பில் எனக்காக
இனி இரவுமில்லை

எப்போதும்
சந்தனப்புகை கமழும்
இந்தப் பள்ளியறையில்
இரத்தத்தின் உலோகநெடி இப்போது

எப்போதும்
மதுரம் கனியும்
உன் அதரமென்மையில்
புளித்த வெற்றியின் துவர்ப்பு இப்போது

மழைக்கால நதியிரண்டு
ஒன்று கப்பதுபோல்
கூடித்ததும்பும் நமது உடல்கள்
இப்போது
கோடைமணலில் புதையுண்ட மரங்கள்

வெயிலின் இளநீர்வாசனை சுரக்கும்
என் வியர்வையில்
இப்போது
குதிரைச்சாணத்தின் துர்வாடை

இது என் கடைசி இரவு
வ்ருசாலி! உன்
கண்கள் தொடுக்கும் கேள்விகள் தவிர்.

நானே பதில்களின் சந்ததி
என் வாழ்வோ
கேள்விகளைத் தேடிய வேட்கை

ஓர் இளம்பெண்ணின்
பிள்ளைக்குறும்பின் பிழையான பதில் என் ஜென்மம்
எனவே
மாதவிடாய்க்க்ழிவுபோல நீரோடு ஒதுக்கப்பட்டேன்

என் பிறப்பில்
நதியின் சோகம்

வெற்றுக்கருப்பையில்
தாய்மைகிளர்ந்து உயிர்த்தது என் மழலை
எனவே
தாழம்புதர்போல ஈரம்பதுக்கி வளர்ந்தேன்

என் பால்யத்தில்
நெருப்பின் தாபம்

தானவேளையில் தயங்கிய குருவின்
கைநடுங்கிச் சிதறிய ஆசீர்வாதம் என் இருப்பு
எனவே
வனவிருட்சங்களில் படர்ந்த தீ என் கல்வி

என் வித்தையில்
கலகத்தின் ரெளத்திரம்

நேசம் உள்ளூறியும்
சுயம்வரப்பிணையாய்ப் பங்கிடப்பட்ட
பெண்மனதின் புறம்போக்கு என் இளமை
எனவே
வில் விரும்பாத அஸ்திரம் என் காதல்

என்
யெளவனத்தில்
தானேயுதிரும் பாரிஜாதத்தின் தூரமணம்

அதிகாரம் ஆடையுரிந்து
கெக்கலித்த தருணம்
மானங்காத்த தோழமையின் பிச்சை என் வாழ்க்கை

என் நட்பில்
அடைபடாக்கடனின் அதீதம்

நிராயுதபாணிமேல்
தொடுத்த யுத்தத்தில் எதிரி நான்
எனவே
என் தோல்வியில் வெற்றியின் சரணாகதி

இது என் கடைசி இரவு
வ்ருசாலி!

பதில்களாலான என் வாழ்க்கையில்
கேள்விகளில்லை இனி
எனவே
உன் கண்கள்தொடுக்கும் கேள்விகள் தவிர்

எல்லாருக்கும் கருவியாக இருந்து தோற்றவன் நான்

அநாதையாக்கிய தாய்க்கு
நான் வாக்குறுதி
வித்தை மறுத்த குருவுக்கு
நான் வலதுகைப் பெருவிரல்
காதல் மறைத்த பெண்ணுக்கு
நான் வஞ்சினம்
பகை கொதித்த உறவுக்கு
நான் களப்பலி
பழிகொண்ட நட்புக்கு
நான் கேடயம்
கடவுளின் கைக்குழிவில்
நான் யாசகப்பொருள்
உன் கண்களின் கேள்விக்கு
நான் இருளின்மெளனம்

அன்பே,
நான் ஆயுதங்களை வார்த்தெடுத்தது
உலோகத்தை உருக்கியோ – என்
குரோதத்தைத் தீட்டியோ அல்ல…

நாறும் உமிழ்நீரில்
ஊறிக்கனத்த
உங்கள் எல்லாரது சொற்களையும் புடமிட்டு.

சுகுமாரன்

(இரு கவிதைகளும் ‘வாழ்நிலம் ‘ தொகுப்பிலிருந்து)

n_sukumaran@rediffmail.com

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

சுகுமாரன்

சுகுமாரன்