வீடுகளில் ஒளிந்து கேடு செய்யும் ரேடான் கதிர்வீச்சு [Radon Radiation]

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

சி. ஜெயபாரதன், கனடா


உலக மாந்தர் அறிந்தோ, அறியாமலோ ஏதாவது ஒரு முறையில் கதிரியக்கப் பாசக் கயிற்றின் பிடியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்! செயற்கைக் கதிரியக்கத்தின் கைப்பிடியிலிருந்து மனிதர் பிழைத்தாலும், சூழ்நிலையில் மனித வாழ்வுடன் பின்னிக் கொண்ட கதிர்வீச்சின் நெற்றிக்கண் பாய்ச்சலிலிருந்து மனித இனம் தப்ப முடியாது!

நீண்ட கால ரேடான் கதிர்வீச்சால் விளையும் தீங்குகள்

2002 ஆம் ஆண்டு அமெரிக்க ஆய்வுப்படி, ரேடான் கதிர்வீச்சால் ஒவ்வொரு ஆண்டிலும் 21,800 புப்புசப் புற்றுநோய் [Lung Cancer] மரணங்கள் நிகழலாம் என்று அனுமானிக்கப் படுகிறது! அமெரிக்க நாட்டு விஞ்ஞானக் கழக அறிக்கையின்படி [National Acedemy of Science Report] ரேடான் கதிர்வீசும் நீரைக் குடித்து, ஆண்டு ஒன்றுக்கு 168 நபர் வயிறுப் புற்றுநோயில் [Stomach Cancer] மரணம் அடைவதாகத் தெரிய வருகிறது! நீரிலிருந்து வெளியேறிக் இல்லக் காற்றில் கலக்கும் ரேடான் கதிர்வீச்சால் ஓராண்டில் 1344 பேர் புப்புசப் புற்றுநோயிலும் இறப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது! பூமிக்குக் கீழிருந்து மேலெழும் வாயுவென்று நூறாண்டுகளாக அறியப் படும் ரேடான் பின்புலக் கதிர்வீச்சு, புற்றுநோய்க்கு மூல காரணி [Carcinogen] என்று கடந்த சில பத்தாண்டுகளாக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது!

சமீப காலத்தில் ரேடான் வாயுக்குக் கிடைத்த பொதுமக்களின் கவனம் மிகையாயினும், அது இன்னும் ஒரு பெரும் புதிராகவே இருந்து வருகிறது! மனிதருக்குத் தகுந்த பாதுகாப்பு நிலைக் கதிரடி [Safe Exposure Level] எவ்வளவு என்றும், ரேடான் கதிரடி என்ன உயிரியல் விளைவுகளை [Biological Effects] உண்டாக்கும் என்பதும் இன்னும் நிச்சாயமாகச் சொல்வதற்கில்லை! அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களில் ரேடான் உளவுத் திட்டங்கள் பல நிறுவப் பட்டு புப்புசப் புற்றுநோயிக்கும், ரேடான் அளவுக்கும் உள்ள தொடர்பை அறிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன! ஆயினும் புகை பிடிப்பதற்கு அடுத்தபடி இரண்டாவது புப்புசப் புற்றுநோய்க் காரணி என்று நிச்சயமாகக் கருதப் படுகிறது, ரேடான் கதிர்வீச்சு!

பூதளத்திலிருந்து எழும் பின்புல ரேடான் கதிர்வீச்சு

யுரேனியமும், யுரேனியத் தேய்வு மூலகமான ரேடியமும் பூமியில் மலைப் பாறைகளிலும், நில மண்ணிலும் பல்வேறு அளவுகளில் பரவி யுள்ளன. ரேடியத்தின் சேய்மூலகமான ரேடான் வாயு, வீட்டின் கீழ்த்தளத்தில் தேங்கிக் கசிந்து கொண்டு, காற்றடைப்பு அறைகளில் தங்கிக் கொள்கிறது. ரேடான் தேய்ந்து தோன்றும் சேய்களான பொலோனியம்218, பொலோனியம்214 இரண்டும் ஆல்ஃபா, பீட்டா துகள்களை வெளியேற்றுகின்றன. அவற்றை நுகர்ந்து கொள்ளும் நபர்கள் புப்புசத் தசைகள் பாதிக்கப் பட்டு அவற்றால் புற்றுநோய் உண்டாகி அவதி அடைகிறார்! பின்புலக் கதிர்வீச்சுத் தாக்குதலில் ரேடான் வாயுவின் பங்கே எல்லாவற்றிலும் மிகுதியாக உல்ளது! மனிதரின் பின்புலக் கதிரடி அளவில் 50% மேலாக, ரேடான் கதிர்வீச்சு காரணமாகிறது!

பொது நபர்கள் வாங்கும் கதிர்வீச்சில் பின்புலக் கதிரியக்கமே [80%] மிகுதிப் பங்கு பெறுகிறது! அதில் 50%-55% ரேடானால் விளைகிறது! வீட்டின் கீழ்த்தளப் பிளவுகளிலிருந்து கசிந்து எழும் ரேடான் வாயு [Radon Gas] தீவிரக் கதிர்வீச்சை உண்டாக்குகிறது! மாயமான ரேடான் வாயுவைக் காண முடியாது! அதைப் புலன்களால் உணர முடியாது! நாசியால் நுகரவும் முடியாது! வட அமெரிக்க வீடுகள் எல்லாம் குளிரைத் தடுக்கக் காற்றடைப்பு இல்லங்களாய்க் கட்டப் படுவதால், கசியும் ரேடான் வாயு வெளியேறாமல் வீட்டுக் குள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறது! ரேடான் தேய்வில் வெளிவிடும் ஆல்ஃபா துகள்கள், அதைச் சுவாசித்து உட்கொள்ளும் வீட்டு நபர்களின் செல்களைச் [Cells] சிதைத்துப் புப்புசங்களில் புற்றுநோயை உண்டாக்கும்!

இயற்கையில் தாதுவாகக் கிடைக்கும் யுரேனியம்238 இல் விளையும் தேய்வுத் தொடர்வில் ஒரு சேய்மூலகமாக [Daughter Element] ரேடான்222 வாயு உண்டாகிறது! ரேடான் ஓர் ஆல்ஃபா எழுப்பி [Alpha Emitter]. அது பாதியாகத் தேயும் அரை ஆயுட் காலம் [Half Life] 3.8 நாட்கள். அமெரிக்காவில் பின்புலக் கதிர்வீச்சால் சராசரி 130 mRem/year கதிரடி ஒருவர் பெறுகிறார். கதிரடி இடத்திற்கு ஏற்ப வேறு படுகிறது. உதாரணமாக லூஸியானா, டெக்ஸஸ் மாநிலங்களில் பின்புலக் கதிரடி 100 mRem/year பொது நபர் ஒருவர் வாங்கும் போது, மலை மாநிலமான கொலராடோவில் வாழும் ஒருவர் மிகுதியாக 250 mRem/year பெறுவார்! மண்ணில் தோரியம் கலந்துள்ள இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகளின் சில இடங்களில் மிகுதியான பின்புலக் கதிரடியை [1500-2500 mRem/year] ஒருவர் பெறுகிறார்!

யுரேனியத் தேய்வுச் சங்கிலியில் தோன்றும் ரேடான் வாயு

1900 ஆம் ஆண்டு ஜெர்மன் ரசாயனவாதி ஃபிரடெரிக் டார்ன் [Friedrich Dorn] என்பவர் ரேடான்222 வாயுவைக் கண்டு பிடித்தார். யுரேனியம்238 தேய்வுச் சங்கிலில் ரேடான்222 பிறப்பதுபோல், தோரியம்232 தேய்வுத் தொடரில் ரேடான்220 தோன்றுகிறது. 1899 இல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஏர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு ரேடான்220 கதிர் மூலகத்தைக் கண்டு பிடித்தார். ஆக்டானியம்235 தேய்வுத் தொடரில் தோன்றும் ரேடான்219 ஜெர்மன் விஞ்ஞானி கீய்ஸலால் [Friedrich Giesel] 1904 இல் கண்டு பிடிக்கப் பட்டது. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட ரேடான் கதிர் ஏகமூலங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன!

யுரேனியம்238 தேய்வுச் சங்கிலில் ரேடான்222 ரேடியத்திலிருந்து பிறக்கிறது. அதாவது தாய்மூலகம் [Parent Element] ரேடியம்226 இன் சேய்மூலகம் [Daughter Element] ரேடான்222! ரேடான்222 சுமார் 4 நாட்களில் பாதியாகத் தேயும் போது, அதன் சேய்மூலகம் பொலோனியம்218 உண்டாகிறது. அது 3 நிமிடத்தில் பாதியாகி ஈயம்214 பிறக்கிறது. ரேடியத்தின் ஆரம்பத் தாய்மூலகம் யுரேனியம்238. ரேடியம்226 இன் அரை ஆயுள் 1602 ஆண்டுகள்! அதாவது வீட்டுக் கீழ்த்தளத்தின் அடியே உள்ள பாறைகளில் ரேடியம்226 கதிர்வீச்சு இருந்தால், அது நூற்றுக் கணக்கான ஆண்டுகள் ரேடான் வாயுவை உற்பத்தி செய்து வீட்டுக்குள் ஊதிக் கொண்டிருக்கும்!

யுரேனியம்238 ->தோரியம்234 ->தோரியம்230 ->ரேடியம்226 ->ரேடான்222 [ஆல்ஃபா எழுப்பிகள்]

ரேடான்222 ->பொலோனியம்218 ->ஈயம்214 ->பிஸ்மத்214 [ஆல்ஃபா, பீட்டா எழுப்பிகள்]

ரேடியம்226 ->ரேடான்222 …..->பிஸ்மத்214 தேய்வுத் தொடரில் ஏராளமான ஆல்ஃபா, பீட்டா துகள்கள் எழுகின்றன!

வீட்டினுள் நுழையும் ரேடான் வாயுவை எப்படிச் சோதிப்பது ?

பூமிக்குள் சேர்ந்துள்ள ரேடான் வாயு, வீட்டினுள் புகும் வாயில்கள்:

கீழ்த்தள அறையின் தரைப் பிளவுகள், சுவர் விரிவுகள்

தொங்க விடப்பட்ட தரைகளின் இடைவெளிகள்

குழிப் பம்புகளைச் சுற்றியுள்ள துளைகள், கழிவுநீர்க் குழிகள்

சுவர்களின் உட்குழிகள், இணைப்புகள்

கட்டட அமைப்புகளின் பிணைப்புகள்

நீர்க் குழாய்ச் சேர்ப்பு, மின்சார இணைப்பு பைப்புகள்

ஊர்ந்து செல்லும் கீழ்த்தள அறைகள்.

அமெரிக்காவில் தேசியப் பாதுகாப்புக் குழுவகம் [National Safty Council, Ph: 1-800-767-7236] வீடுகளில் சோதிக்கும் தேவையான ‘ரேடான் உளவு சாதனத்தை ‘ [Radon Detection Kit] விற்பனை செய்கிறது. அந்தச் சாதனத்தை வீடுகளில் குறித்த காலம் வைத்துப் பதிவு செய்த பின், அதை ஆய்வுக் கூடம் ஒன்றிற்கு அனுப்பி ரேடான் அளவை அறிய வேண்டியது. மேலும் ரேடான் உளவுச் சாதனங்கள் ஹார்டுவேர் கடைகளிலும் விற்பனை செய்யப் படுகின்றன.

ரேடான் கசிவுகளைத் தடுக்கும் கட்டட அமைப்புச் சாதனங்கள்

பாறைகளில் அஸ்திவாரம் தோண்டிக் கட்டப்படும் வீடுகளில் ரேடான் கசிவு தொடர்ந்து அதிகமாக வெளியாகிறது. அதுபோல் மணல், களிமண், வெறும் மண் மீது கட்டப்படும் வீடுகளில் ரேடான் கதிர்வீச்சு சற்று குறைவாகவே இருக்கும். பின்வருமாறு தடுப்புக் கட்டடச் சாதனங்களை வீட்டின் அஸ்திவாரம் போடும் போது அமைத்தால், ரேடான் கதிர்வீச்சை முழுவதும் அகற்றலாம்; அல்லது மிகுந்த அளவு குறைக்கலாம்.

வாயு உலாவும் அடுக்கு [Gas Permeable Layer]: கீழ்த்தளக் காங்கிரீட் தரைக்கு அடியில் 4 அங்குல ஆழத்தில் சரளைக் கற்களைப் [Gravel] பரப்புதல். அவ்விதம் செய்தால் ரேடான் வாயு எளிதாகக் கீழ் தளத்திலே நகர்ந்து கொண்டு, அழுத்தம் அடையாமல் உலவிக் கொள்ளும்.

பிளாஸ்டிக் தாளைக் காங்கிரீட் தரைக்கும், சரளைக் கற்களுக்கும் இடையே விரித்து, வாயுக் கசிவு முழுவதையும் நீக்கல்.

தரைப் பிளவுகளையும், தளப் பிணைப்புகளையும் நிரப்பிகளால் [Sealing & Caulking] இட்டு அடைப்பது.

3 ‘ அல்லது 4 ‘ விட்டமுள்ள பிளாஸ்டிக் வெளியேற்றுப் பைப்பை [PVC Vent Pipe] நிறுவனம் செய்து, கசியும் சிறிதளவு ரேடானையும் தானாக நீங்கும்படி செய்வது.

காற்றுப் புதுப்பிச் சாதனம் [Air Exchanger] ஒன்றை நிறுவி, வீட்டின் கதிர்த் தீண்டிய பழைய காற்றை வலுப்படுத்தி வெளியேற்றி, அடிக்கடி புதிய வெளிக் காற்றை வீட்டினுள் அனுப்புவது. அவ்விதம் செய்தால் நீரிலிருந்து காற்றில் கலக்கும் ரேடானையும் நீக்கி விடலாம்! காற்றுப் புதுப்பிச் சாதனம் மட்டும் நிறுவ 2000-3000 டாலர் [US] செலவாகலாம்.

புது வீடு கட்டும் போது மேற்பட்ட செம்மைப்பாடுகள் செய்ய 350-500 டாலர் செலவாகலாம். ஆனால் முடிந்த வீடுகளில் செம்மைப் படுத்த 1200-2500 டாலர் ஆகும்.

பாதுகாப்பு மீறிய ரேடான் கதிர்வீச்சால் விளையும் அபாயம்!

அமெரிக்காவின் சூழ்நிலைப் பாதுகாப்புப் பேரவை [EPA, Environmental Protection Agency] இல்லத்தில் கசியும் ரேடான் கதிர்வீச்சின் பாதுகாப்பு அளவு 4 pCi/L [Picca Curie per Litre] என்று வரையரை வகுத்துள்ளது. லிட்டருக்கு ஒரு பிக்கா கியூரி கதிர்வீச்சு என்றால், ஒரு லிட்டர் கொள்ளளவு காற்றில் மணிக்கு 133 சிதைவுகள் எழும் என்று பொருள். [1 pCi/L = 133 disintegration per hour per litre of air].

காற்றில் 2 pCi/L ரேடான் கதிர்வீச்சுக்கும் குறையக் கட்டுப் படுத்துவது கடினம்! பின்காணும் எதிர்பார்ப்பு மரண விளைவுகள் புகைபிடிக்காத நபர்களுக்கு [Non-Smokers] நிகழும் அபாயம்!

காற்றில் 2 pCi/L ரேடான் கதிர்வீச்சு இருந்தால், நீண்ட கால பாதிப்பு 1000 இல் 1 பேருக்கு புப்புசப் புற்று நோய் காணலாம்!

காற்றில் 4 pCi/L ரேடான் கதிர்வீச்சு இருந்தால், நீண்ட கால பாதிப்பு 1000 இல் 2 பேருக்கு புப்புசப் புற்று நோய் காணலாம்! இதுவே EPA வகுத்த பாதுகாப்பு வரையரை அளவு.

காற்றில் 8 pCi/L ரேடான் கதிர்வீச்சு இருந்தால், நீண்ட கால பாதிப்பு 1000 இல் 3 பேருக்கு புப்புசப் புற்று நோய் காணலாம்!

காற்றில் 10 pCi/L ரேடான் கதிர்வீச்சு இருந்தால், நீண்ட கால பாதிப்பு 1000 இல் 4 பேருக்கு புப்புசப் புற்று நோய் காணலாம்!

காற்றில் 20 pCi/L ரேடான் கதிர்வீச்சு இருந்தால், நீண்ட கால பாதிப்பு 1000 இல் 8 பேருக்கு புப்புசப் புற்று நோய் காணலாம்!

ஐயோவா நகரில் ரேடான் புப்புசப் புற்றுநோய்த் தொடர்பு ஆராய்ச்சி

அமெரிக்காவில் ஏனைய நகரங்கள் அனைத்திலும் ஐயோவா நகரில், பேரளவு ரேடான் கதிர்வீச்சு எழுவதால், புற்றுநோய்த் தொடர்பை அறிய அதுவே ஆய்வுத் தளமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது! 1993-1997 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஐயோவா நகர் [Iowa City, Iowa] வீடுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக

நீண்ட காலம் வாழ்ந்த, 40-84 வயதுக்கு உட்பட்ட 1027 மாதர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் பட்டார்கள். அவர்களில் 413 பேர் புதிதாகப் புப்புசப் புற்றுநோய் உற்றவராகக் கண்டு பிடிக்கப் பட்டவர்கள்! ஆய்வுகளுக்கு எடுத்துக் கொண்ட மாதர்களில் சிகரெட் புகைப்போரும், புகைக்காதவரும் ஒருங்கே சோதனைக் குட்பட்டனர்.

அம்மாதர்கள் குடியிருந்த இல்லங்களில் 60% வீடுகளின் கீழ்த்தளத்தில் தேங்கி யிருந்த ரேடான் சேமிப்பு [Radon Concentration] பாதுகாப்பு அளவை [4 pCi/L] மிஞ்சியதாக அறியப் பட்டது! புற்றுநோயில் தாக்கப் பட்டோர் வீடுகளில் 33% இல்லங்களில் வாழ்தளமும் [Main Living Level] பாதுகாப்பு அளவை [4 pCi/L] மிஞ்சியதாகக் காணப் பட்டது! 1027 மாதர்களில் புகைப்பவரின் புற்றுநோய் எண்ணிக்கை நீக்கப் பட்டபின் ஆராய்ந்ததில், ரேடான் கதிர்வீச்சால் 50% அதிகமாகப் புற்றுநோய்த் தாக்குதலில் இருந்ததாகத் தெரிய வந்தது!

அடித்தளக் குடிநீரில் கலந்துவிடும் ரேடான் கதிர்வீச்சு

அமெரிக்க நாட்டு விஞ்ஞானக் கழக அறிக்கையின்படி [National Acedemy of Science Report] ஆண்டு ஒன்றுக்கு 168 நபர், ரேடான் கதிர்வீசும் நீரைக் குடித்து, வயிற்றுப் புற்று நோயில் மரணம் அடைவதாகத் தெரிய வருகிறது! நீரிலிருந்து வெளியேறிக் இல்லக் காற்றில் கலக்கும் ரேடான் கதிர்வீச்சால் 89% புப்புசப் புற்று நோயிலும், ரேடான் கதிர்வீசும் நீரைக் குடிப்பதால் 11% வயிற்றுப் புற்று நோயிலும் மனிதர் இறப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது!

நீர் எவ்விதம் ரேடான் கதிர்வீச்சைப் பெறுகிறது ? பூமிக்குள் சேரும் ரேடான், அங்குள்ள கிடை நீர், ஓடும் நீரோடு கலக்கிறது! மேலும் அடித்தள ரேடான் வாயு கிணற்று நீர், ஆழக்குழாய் நீர் ஆகியவற்றில் கலந்து, அவற்றைப் பயன்படுத்தும் மனிதரை இரண்டு முறையில் பாதிக்கிறது! கதிர்வீச்சு நீரைக் குடித்தால், வயிற்றில் போய்த் தங்கி நீண்ட காலம் கழித்து, வயிற்றில் புற்று நோய் உண்டாக்குகிறது! அந்த நீரைச் சமையல், குளியல், கழுவல் போன்ற வழிகளில் பயன்படுத்தும் போது, பெரும்பான்மையான ரேடான் வாயு வெளியேறிக் காற்றில் கலக்கிறது. சிறுபான்மை நீரோடு ஒன்றி யுள்ளது. சூரியனைப் பார்க்கும் ஏரிகள், ஆறுகள், நீர்த் தேக்கிகள் [Reservoirs] ஆகியற்றில் ரேடான் பிரச்சனைகள் இல்லை! வெட்டும் எல்லாக் கிணற்றிலும், தோண்டும் எல்லா ஆழக்குழாய் நீரிலும் ரேடான் வாயு இருப்பதாக எண்ணி அஞ்ச வேண்டிய தில்லை! ரேடான் உள்ளதா வென்று நீரைச் சோதித்த பின்பே அந்த முடிவுக்கு வர வேண்டும்.

EPA இன் அனுமானம், குடிநீரில் ரேடான் 10,000 pCi/L அளவு கதிர்வீச்சு இருந்தால், வீட்டுக் காற்றின் ரேடான் அளவு 1 pCi/L மிகையாகும்! சராசரியாக 1%-2% உள்வீட்டு ரேடான் கதிர்வீச்சு, நீரிலிருந்து வருவதாகக் கருதலாம்! குடிநீரில் பாதுகாப்பு அளவுக்கு [4000 pCi/L] மேலாக ரேடான் கதிர்வீச்சு இருக்கக் கூடாது என்று EPA அறிவிக்கிறது.

கீழ்த்தளக் குடிநீர் சோதிப்பு, குடிநீர் சுத்திகரிப்பு

அமெரிக்காவில் முதலில் வீட்டின் அடித்தளம், நடுத்தளம் அதன் பின்பு நீரிலும் ரேடான் கதிர்வீச்சு உள்ளதா எனச் சோதிக்க வேண்டும் என்று புதிதாகக் குடிபுகும் நபர்களுக்கு EPA ஆலோசனை கூறுகிறது! வீட்டு அடித்தளம் பாதுகாப்பு அளவோ, அல்லது அதற்கு மிகையாகவோ கதிரியக்கம் காட்டினால், தளப் பழுதுகளைச் செப்பனிட வேண்டும். தரைப் பிளவுகளை, திறந்த ஓரங்களை, ஓட்டைகளை நிரப்பியால் [Sealants] நிரப்புவது, ‘காற்றுப் புதுப்பிகள் ‘ [Air Exchanger] நிறுவனமாகிக் கீழ்த்தள மேல்தளக் காற்றை மாற்றுதல், கீழ்த்தளத்தி லிருந்து வெளியேற்றிக் குழல்களை [Vent Pipes] அமைத்து ரேடானை அகற்றல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நீரில் உள்ள ரேடான் கதிர்வீச்சைச் சோதிக்க, நகராட்சி நீர்நிலைச் சிறப்புநரை [Community Water System Specialist] அண்டி நீரை உளவு செய்ய வேண்டும். கிணற்று நீரிலோ, அல்லது அடித்தளக் குழாய் நீரிலோ ரேடான் இருந்தால், முதலில் வீட்டுக் கசிவை அடைத்த பின், நீரின் அளவு நிலையை அறிவதுதான் முறையானது. நீரில் பாதுகாப்பு அளவுக்கு [4000 pCi/L] மேலாக ரேடான் இருந்தால், நீரில் ரேடானை நீக்கத் தனியாக நீர் சுத்திகரிப்புச் சாதனம் [Special Water Treatment Plant] ஒன்று அமைக்க வேண்டு மென்று EPA ஆலோசனை கூறுகிறது.

அடுத்து நீரிலிருந்து ரேடானை அகற்ற ‘காற்றுச் சுத்திகரிப்பு ‘ [Aeration Treatment] அல்லது ‘கரிக்கூடு நீக்கு முறை ‘ [GAC Granular Activated Carbon] போன்ற சாதனங்கள் பயன்படுத்தப் பட வேண்டும்.

அகில் நாடுகளில் ரேடான் தாக்குதலின் பாதுகாப்பு அளவுகள்

அமெரிக்காவின் ‘சூழ்நிலைப் பாதுகாப்புப் பேரவை ‘ [Environmental Protection Agency, EPA] 15 வீடுகளில் ஒன்று ரேடான் அளவு 4 pCi/L நிலைக்கு மேல் இருப்பதாகக் கூறுகிறது! அவற்றில் ரேடான் தடுக்கப் பட வேண்டும் அல்லது குறைக்கப் பட வேண்டும் என்று அறிக்கை விட்டுள்ளது! ‘கனடாவின் உடல்நலக் காப்பகம் ‘ [Health & Welfare Canada] இல்லத்தினுள் ரேடான் 21 pCi/L அளவுக்கு மேலிருந்தால் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகவல் தந்துள்ளது! கனடாவின் வின்னிபெக் நகரில் பொதுவாக இல்லங்களில் குறைந்த ரேடான் 4 pCi/L நிலை அளவும், சராசரி 7 pCi/L அளவும், சில இடங்களில் 21 pCi/L அளவுக்கும் மிகையாக உள்ளதைப் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஜெர்மனியின் ரேடான் பாதுகாப்பு அளவு 10.5 pCi/L, பிரிட்டனில் பழைய வீட்டுக்குப் பாதுகாப்பு அளவு 10.5 pCi/L. புதிய வீட்டுக்கு 2.7 pCi/L. சுவீடனின் பழைய வீட்டுக்குப் பாதுகாப்பு அளவு 21 pCi/L, புதிய வீட்டுக்கு 3.7 pCi/L. பின்லாந்தின் பழைய வீட்டுக்குப் பாதுகாப்பு அளவு 21 pCi/L, புதிய வீட்டுக்கு 5.4 pCi/L.

அமெரிக்காவில் சூழ்நிலைப் பாதுகாப்புப் பேரவை 1989 இல் சோதித்த 20,000 வீடுகளில் 25% இல்லங்கள் பாதுகாப்பு அளவுக்கு மேலாக ரேடான் உள்ளதாக அறிவித்துள்ளது! அதே ஆண்டில் கனடா சோதனை செய்ததில் சுமார் 8000 வீடுகள் ரேடான் பாதுகாப்பு அளவுக்கு மீறியதாகக் கண்டுள்ளது! தேவையான

சான்றுகளைச் சேமிக்க இரண்டு தேசங்களிலும் மேலும் முயற்சிகள் தொடர்கின்றன.

அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் கூட்டு முயற்சி

ஆஸ்டிரியாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [I.A.E.A, International Atomic Energy Agency, Vienna, Austria] ரேடான் கதிர்வீச்சுத் தீங்குகளை விபரமாக அறியப் பல அரிய திட்டங்களை வகுத்துள்ளது! உலக நாடுகள் பலவற்றின் கூட்டு முயற்சில் ரேடான் வீட்டு அளவுகளைப் பதிவு செய்து ஒப்பிட்டுப் பார்க்க முற்பட்டுள்ளது! அனைத்து அகில நாடுகளின் கண்களை ரேடானை நோக்கிக் குவியச் செய்து, ஒளிந்து கொண்டு அது மனித உடல் நலத்தைப் பாதித்து வருவதைத் தடுக்க முற்படுவது வரவேற்கத் தக்க முயற்சியாகும்.

தகவல்

1. U.S. Environmental Protection Agency, EPA Report [June 1, 2000]

EPA Website http://www.epa.gov/iaq/radon/

National Safety Council: 1-800-SOS-RADON, 1-800-557-2366

EPA Safe Drinking Water Hotline: 1-800-426-4791

2. National Geographic Magazine [April 1989]

3. National Academy of Science Report

4. Ascent by Atomic Energy of Canada Ltd. [Summer 1989]

5. Understanding Ionizing Radiation [August 1992]

**********************************

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா