விளையாட்டு

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

பவளமணி பிரகாசம்


எங்கெங்கோ உன்னைத் தேடினேன்
தேடித் தேடி அலைமோதினேன்
திகைத்து நின்றுவிட்ட கணத்திலே
தேனாய் உன் குரல் என் காதிலே
கால்கள் ஓசை வந்த திசையிலே
கண்ணால் காணும் காட்சியானாய்
கைக்கு எட்டாமலே ஏன் நின்றாய் ?
எட்டெடுத்து வைத்து நெருங்கினேன்
சுகந்தம் முகர்ந்து சொக்கினேன்
கிட்டத்து தரிசனத்தில் கிறங்கினேன்
கண்களின் கருமைக்குள் கரைந்தேன்
என் பிம்பமாயன்றோ தெரிகின்றாய்
நானேதானா நீயும் ? நீயேதானா என் ஒளி ?
நிழலாய் நின்றேனா ? நிதமும் தொடர்ந்தேனா ?
நீ அணைத்தால் உன்னுள் அடங்கிடுவேனா ?
எனைத் தொலைத்துன்னுள் தொலைவேனா ?
தெறித்து விழுந்த சிறு பொறியென்னை
திரும்ப விழுங்கும் பெருந்தீ நீதானா ?
ஐம்பொறியை எரியவிட்டு பார்த்தாயே
அத்தனை வழியிலும் வழிந்து நின்றாயே
ஓடவிட்டு ஆடவிட்டு ஓய்ந்த பின்னே
ஏந்திக் கொள்ள காத்திருந்தாய்தானே ?
மையப் புள்ளியாயிருந்தெனை வட்டமாய்
ஆட்டியபின் புள்ளிக்குள் இழுக்கிறாயே
தீராநதியின் ஓயாச் சுழலில் நானாய் நீ
விளையாடும் விளையாட்டுக்கு முடிவேது ?
————————————————————————————-
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்