சித்ரா சிவகுமார் , ஹாங்காங்
“அம்மா.. இன்னிக்கு எனக்கு வீட்டுப்பாடத்திற்கு நீங்க உதவி செய்யணும்மா..”
“என்ன குமார்.. என்ன.. கணக்கு சொல்லித் தரணுமா?”
“கணக்கில்லையம்மா.. என்னோட புவியியல் வீட்டுப்பாடத்திற்கு..”
“என்ன வேணும்ன்னு சொல்லு குமார்”
“அம்மா எனக்கு துருக்கி பற்றிய விவரங்கள் வேணும்..”
“வீட்டிலே இருக்கிற புத்தங்களில் இருக்கான்னு பாரு..”
“அம்மா.. எனக்கு துருக்கி பற்றி பொதுவான தகவல்கள் வேணும். அது என்சைக்ளோபீடியா புத்தகத்தில் தான் இருக்கும். அந்தப் புத்தகம் நம்மகிட்ட இல்லையே..”
“சரி.. என்னனெ;ன தெரியணும்?”
“துருக்கி தலைநகர், நாணயம், மக்கள் தொகை, முக்கிய நகரங்கள், முக்கிய வளங்கள் போன்றவை..”
“நான் இதைப் பற்றி படித்து ரொம்ப வருசங்கள் ஆகுது. எனக்கு இதில் மிகச் சில விசயங்கள் மட்டுமே தெரியும். உனக்கு என்னைக்கு தரணும்?”
“அம்மா நாளைக்கே எழுதிக்கிட்டு வரணும்ன்னு டீச்சர் சொல்லியிருக்காங்க..”
“என்ன செய்யறது? பக்கத்து வீட்டிலே ஏதாவது புத்தகம் இருக்கான்னு கேட்டுப் பாக்கலாம்”
பக்கத்து வீட்டில் பொறியியல் படிக்கும் மாணவியான கீதாவிடம் கேட்க குமார் சென்றான்.
“அக்கா.. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்..”
“என்ன குமார்..”
“எனக்கு துருக்கி பத்தின புத்தகம் வேணும்.. உங்கக்கிட்ட இருக்கா?”
“அது பத்தி இருக்கிற புத்தகம் இல்லை. உனக்கு என்ன தெரியணும்?”
“துருக்கி தலைநகர், நாணயம், மக்கள் தொகை, முக்கிய நகரங்கள், முக்கிய வளங்கள் போன்றவை..”
“எப்ப வேணும்..”
“இன்னிக்கே.. இப்பவே..”
“அப்படின்னா இரு.. நாம் கணினி மூலமா தெரிஞ்சிக்கலாம்..”
“அதெல்லாம் கணினியில இருக்குமா அக்கா..”
“ஆமாம் குமார்.. எப்படி உலக விவரங்கள் எல்லாத்தையும் என்சைக்ளோபீடியா தருதோ.. அதேப் போல் கணினியில் விக்கிப்பீடியா விவரங்களைத் தருது..”
“அப்படியா அக்கா.. அப்ப எனக்கு துருக்கி பத்தின அத்தனை விவரங்களையும் தெரிஞ்சிக்கலாமா?”
“இதோ.. அதைப் பத்தி எல்லா விசயத்தையும் உனக்கு பிரின்ட் செய்து கொடுக்கிறேன்” என்று சொல்லி கீதா உடனே விக்கிப்பீடியா மூலம் விவரங்களைப் பெற்றுத் தந்தார்.
குமார் நன்றி கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.
இந்த உரையாடலில் சொல்லப்பட்ட என்சைக்கிளோபீடியா பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் இந்த விக்கிப்பீடியா என்பது என்ன?
கணினி வரலாற்றின் ஆரம்பக் காலத்தில் பொறியியல் வல்லுநர்களும் நன்கு கற்றோர் மட்டுமே பயன்படுத்திய கணினி இன்று சாதாரண மக்களாலும் பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது. கடந்த இருபது வருடங்களில் அதன் வளர்ச்சி வேகம் அளவிட முடியாதது. வியக்க வைக்க வல்லது.
பல பள்ளிகளில் மாணவர்களுக்கு இன்று கணினியில் வீட்டுப்பாடங்கள் தரப்படுகின்றன. என்ன விதமான வீட்டுப் பாடங்கள் என்று பல பெற்றோருக்குத் தெரிந்திருக்காது. அவை வினா விடைகளாக, கேள்விப் பதில்களாக, கட்டுரைகளாக, குறிப்பிட்டப் பொருளைப்பற்றி விவரங்களாக இருக்கலாம். பெரும்பாலான வீட்டுப் பாடங்கள், இணையத்தில் பல்வேறு விவரங்களை ஆய்வு செய்து தரக் கூடியவைகளாக இருக்கும். குமார் தேடியதைப் போன்று ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது ஊர் அல்லது பிரபலமான மனிதர்கள், இசை வல்லுநர்கள், அறிவியலாளர்கள் என்று விவரங்களைச் சேகரிக்கும் வீட்டுப்பாடமாக இருக்கலாம்.
இன்று ஏதாவது பொருளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால், கூகுள், யாகு, லைகாஸ் போன்றத் தேடு எந்திரத்தில் அதற்குத் தொடர்பான வார்த்தையைத் தட்டச்சுச் செய்தால் போதும். அவை இணையதளத்தில் அதைப் பற்றி உள்ள தொடர்புகள் அனைத்தையும் ஓரிடத்திற்குக் கொண்டு வந்துச் சேர்க்கும்.
அதில் முதன்முதலில் தரப்படும் தொடர்புச் சுட்டி விக்கிப்பீடியாத் தளமாக இருக்கும். அதெப்படி எல்லா விவரங்களையும் இந்தத் தளம் கொண்டுள்ளது? கடந்த பத்து வருடங்களாக பல ஆர்வலர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி தான் இன்று பரந்து விரிந்து கிடக்கிறது இந்தக் கட்டற்றக் கலைக்களஞ்சியம்.
பத்து வருடங்களுக்கு முன்பு, என்சைக்ளோபீடியா என்றப் புத்தகம் இப்படிப்பட்டத் தகவல் ஞானத்தைத் தந்து வந்தது. அதற்கானப் புத்தகங்கள் பல பகுப்புகளாக இருக்கும். அது மிகவும் அதிக விலைக் கொண்டது. சாதாரணமாக எல்லோராலும் வைத்திருக்க முடியாதது. பள்ளிகளிலும் நூலகங்களிலும் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.
இன்று இதற்கு இணையான தகவல் தொகுப்புகளைக் கொண்டதே விக்கிப்பீடியா என்ற கட்டற்றக் கலைக்களஞ்சியம். இதை நாம் இணையத்தள இணைப்புடன் இருக்கும் எந்தக் கணினி மூலமாகவும் தொடர்புக் கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இது முதன்முதலில் 2001 ஜனவரி 15ஆம் தேதி ஆங்கிலத்தில் மட்டுமே கட்டுரைகளைக் கொண்டு ஆரம்பமானது. ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சேஞ்சர் என்ற இரு அமெரிக்கர்கள் இந்த விக்கிப்பீடியாத் திட்டத்தை நுபீடியாத் திட்டத்தின் தொடர்ச்சியாக ஆரம்பித்தனர். ஆரம்பித்தச் சில மாதங்களிலேயே கட்டுரைகளின் எண்ணிக்கைகள் கூடின. தேடு எந்திரங்கள், இந்தக் கட்டுரைகளில், தேடப்பட்ட விவரம் இருந்தால், உடன் இதைத் தொகுத்துக் கொடுத்தன. ஒரே வருடத்தில் இதைப் பற்றி பலரும் அறிந்து கொண்டனர். பயன்படுத்த ஆரம்பித்தனர். விவரங்கள் பல்கிப் பெருக ஆரம்பித்தன.
இதன் பயனைக் கண்ட மற்ற நாட்டவர்களும், தங்கள் மொழிகளில் இந்தக் கலைக்களஞ்சியத்தை உருவாக்க ஆரம்பித்தனர். இன்று 200க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல் தானங்களை விக்கிப்பீடியாத் தந்துக் கொண்டு இருக்கிறது.
சரி.. தகவல் தகவல் என்று சொல்லப்படுகிறதே! அது என்ன? அப்படியென்ன தகவல்;கள் இதில் உள்ளன?
மொழி, பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் என்று பல்வேறு தலைப்புகளில் பல தரப்பட்டத் தகவல்கள் இதில் சேமிக்கப்பட்டு இருக்கின்றன.
விக்கிப்பீடியா நிறுவனம் 2001இல் ஆரம்பிக்கப்பட்டு, இந்தத் திட்டம் விரைவில் உலக மொழிகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. சிறு துளிப் பெரு வெள்ளம் என்பது விக்கிப்பீடியா பொருத்தமட்டில் அது ஆயிரம் மடங்கு உண்மை. இன்று அதில் கோடிக்கணக்கானக் கட்டுரைகள் உள்ளன.
விக்கிப்பீடியா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துக் கொண்டேயிருக்கிறது. நேற்று போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இருக்காது. ஏனென்றால் வௌ;வேறு நாடுகளில் இருக்கும் ஆர்வலர்கள் தங்களுக்குப் பிடித்தத் துறையில், தெரிந்தத் தகவல்களை இதில் ஏற்றிய வண்ணம் இருக்கின்றனர். இது வரை 49 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் இருப்பதாகக் கணக்கெடுப்புக் காட்டுகின்றது. ஏற்றியத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, தவறுகள் திருத்தப்பட்டு, தேவையானக் கருத்துக்கள் மேன்மேலும் சேர்க்கப்பட்டு, தேவையற்றவை நீக்கப்பட்டு, அதன் உரு மாறிக்கொண்டே இருக்கிறது.
உதாரணத்திற்கு உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தை எடுத்துக் கொள்வோம். கூகுள் போன்றத் தேடு இயந்திரத்தில் “ஊசiஉமநவ றுழசடன ஊரி” என்று தட்டச்சுச் செய்துப் பாருங்கள்.
உடன் முதல் தொடர்புச் சுட்டி விக்கிப்பீடியாத் தளமாக இருக்கும்.
அந்தச் சுட்டியின் மேல் சொடுக்கினால், எப்போது ஆரம்பிக்கப்பட்டது, யார் யார் வெற்றிப் பெற்றார்கள், எங்கே நடந்தன என்பனப் போன்ற உலகக் கோப்பைப் பற்றிய விலாவாரியான தகவல்கள் அனைத்தும் பல்வேறு தலைப்புகளில் தரப்பட்டு இருக்கும்.
இப்படி எல்லாத் தகவல்கள்; பற்றியும் தேடி அறிந்து கொள்ளலாம். பல தலைப்புகளில் பல தகவல்கள் சேகரிக்கப்பட்டு இருக்கும் அரியப் பெட்டகமே விக்கிப்பீடியா.
200 மேற்பட்ட மொழிகளில் இருக்கிறது என்றால், தமிழ் விக்கிப்பீடியா இருக்கிறதா என்ற எண்ணம் உடன் தோன்றியிருக்கும். ஆம். இருக்கிறது.
தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உலகிற்கு ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் கட்டடக் கலைஞராகப் பொறியியலாளராகப் பணிபுரியும் திரு. இ. மயூரநாதன் அவர்கள் 2003இல் அறிமுகப்படுத்தினார். முதலில் தனியொருவராகப் பல கட்டுரைகளைத் தந்து இதன் வளர்ச்சிக்கு அடிகோலினார். இன்றுப் பல ஆர்வலர்களின் முயற்சியால், தற்போது 30000க்கும் மேற்பட்டத் தமிழ்க் கட்டுரைகள் இதில் உள்ளன.
விக்கிப்பீடியாப் பற்றி மேலும் விவரங்களை வரும் வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.
—
2
“என்ன ராணி.. மும்முரமாக அகராதியும் கையுமாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?”
“எனக்கு ஒரு ஆங்கில ஆவணத்தை மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது. சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாமல் அகராதியில் தேடிக் கண்டுபிடித்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”
“ஏன் கணினியைப் பயன்படுத்தவில்லையா?”
“இல்லை கோபி.. நான் இது வரை கணினி அகராதியைப் பயன்படுத்தியதில்லை.”
“ராணி.. கணினியைப் பயன்படுத்தினால் பக்கங்களைத் திருப்ப வேண்டியிருக்காது. நேரமும் மிச்சமாகும்”
“கோபி.. எனக்கு எப்படிச் செய்வதென்று சொல்லிக் கொடு”
“விக்சனரி என்று கட்டற்ற அகரமுதலி இருக்கிறது. அதில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகள் உள்ளன. ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் என்று வார்த்தைகளைத் தேடிக் கொள்ளலாம்”
“ரொம்ப நன்றி கோபி.. வேகமாகச் செய்ய இது உதவும் என்று எண்ணுகிறேன்.”
இந்த உரையாடலில் சொல்லப்பட்ட விக்சனரி விக்கிப்பீடியாவின் ஒரு அங்கம்.
விக்கிப்பீடியா திட்டம் ஆரம்பித்தப் பத்து ஆண்டுகளில் பல பிரிவுகளாகப் பரந்து விரிந்து வருகிறது.
தேடுவதை எளிமையாக்க இதைப் பல கிளைகளாகப் பிரித்துள்ளனர். அந்தக் கிளைகள் என்னென்ன என்பதை இப்போதுப் பார்க்கலாம்.
விக்கி அகரமுதலி (விக்சனரி)
விக்கி அகரமுதலி மிகவும் பயனுள்ள அகராதி. இதில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் வார்த்தைகளுக்கான அர்த்தங்களும் விளக்கங்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன. தமிழில் வார்த்தைகளைக் கொடுத்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் வார்த்தைகளைக் கொடுத்து தமிழிலும் பதங்களைப் பெற ஏதுவாக இது அமைக்கப்பட்டுள்ளது.
விக்கி மேற்கோள்கள் (விக்கிகோட்)
மேற்கோள்களின் தொகுப்பைக் கொண்டது. மனிதன் வாழ ஆரம்பித்தக் காலம் தொட்டு, மொழியைப் பேச ஆரம்பித்தக் காலம் தொட்டு, பலப்பல கருத்துக்களைக் கூறி வருகிறான். அவற்றில் பலவும் நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான, பின்பற்றக் கூடிய அறிவுரைகள். அவற்றை மேற்கோள்களாக விக்கிப்பீடியாத் தருகின்றது. ஆங்கிலத்தில் 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட மேற்கோள்கள் இணையேற்றப் பட்டுள்ளன. மேலும் பல்வேறு மொழிகளில் இருக்கும் மேற்கோள்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் இதில் தரப்பட்டுள்ளன. இதன் காரணமாக வௌ;வேறுப் பகுதிகளில் மனிதன் எப்படியெல்லாம் யோசித்தான் என்பதை நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.
தற்போதுத் தமிழிலும் பழமொழிகள், அறிஞர்களின் பொன்மொழிகள் என்று உள்ளன. தனி நபர்களின் மேற்கோள்கள், இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள், திரைப்படங்களின் சுவையான வசனங்கள் என இப்பிரிவில் சில மேற்கோள்கள் உள்ளன. இதை மேன்மேலும் வளர்க்க தமிழ் ஆர்வலர்கள் முன் வந்தால், இந்தத் தொகுப்பையும் பயனுள்ளதாக ஆக்கலாம்.
விக்கி மூலம் (விக்கிஸோர்ஸ்)
இது கட்டற்ற மூல ஆவணங்களைக் கொண்டது. உலகில் பிரபலமான பல்வேறு ஆங்கில இலக்கியங்கள்;, நாடகங்கள், ஆவணங்கள் ஆகியவற்றின் மூல உள்ளடக்கங்கள் அதில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அதில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மூல நூல்கள் உள்ளன.
இது ஒரு இலவச இணைய நூலகம். அது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமை) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாகும். தற்போது 1600 மூலங்கள் மட்டுமே உள்ளன.
தொல்காப்பியம் முதற்கொண்டு, திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற தமிழ் இலக்கியங்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், சமய இலக்கியங்கள், இடைக்கால மற்றும் தற்கால இலக்கியங்கள், சிறுகதைகள், புதினங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ் விக்கி மூலம். யாவரும் விரும்பிப் படிக்கும் வகையில் எழுதப்பட்டக் கல்கியின் புதினங்கள் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் என்று அனைத்தையும் இதில் பெறலாம்.
சமய இலக்கியத் தலைப்பின் கீழ் குர்ஆன், திருவிவிலியம், மகா கருணா தாரணி, சைவ வைணவ இலக்கியங்களின் மூலங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கலாம், நகல் எடுக்கலாம்.
தமிழில் மதுரைத் திட்டம் இத்தகைய இலக்கியத் திரட்டினைத் தருகிறது என்பதை இங்கே அறிந்து கொள்வது நலம்.
விக்கி செய்திகள் (விக்கிநியூஸ்)
தினந்தோறும் நடக்கும் செய்திகளை அவ்வப்போது இதில் ஆர்வலர்கள் இணையேற்றி வருவதால், நமக்கு இது தினசரியாகக் காணும் வாய்ப்பினைத் தருகிறது. தங்கள் கருத்துக்களை யாரைச் சார்ந்தும் தராமல், நடப்பதை நடக்கும் வண்ணம் தருவதால், உண்மை நிலையை அறிய உதவுகிறது.
உலகின் வௌ;வேறு மூலையில் நடக்கும் நிகழ்வுகள் பல, தமிழில் அறிஞர்களாலும் ஆர்வலர்களாலும் ஏற்றப்படுவதால், உலகச் செய்திகள் தரம் மிகுந்த தமிழில் தரப்பட்டு வருகின்றது. இதில் சட்டமும் ஒழுங்கும், பண்பாடு, பேரிடர் மற்றும் விபத்து, வணிகம், கல்வி, சுற்றுச்சூழல், இறப்புகள், அரசியல், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம் மற்றும் விளையாட்டு என்ற பல்வேறு தலைப்புகளிலும், கண்டங்கள் வாரியான செய்திகளும், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் செய்திகளும் தொகுத்து அளிக்கப்படுகின்றன. சில பகுதிகளில் ஆர்வலர்கள் இல்லாத காரணத்தால் தினசரி நிகழ்வுகள் இணையேற்றப்படாமல் இருக்கி;ன்றன.
விக்கி நூல்கள் (பிக்கிபுக்ஸ்)
ஆங்கில விக்கி நூல்கள் பகுதியில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. அவற்றை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். நகலெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொறியியல், அறிவியல் பற்றிய நூல்கள் அதிகமாக உண்டு. குழந்தைகளுக்கு விக்கி ஜுனியர் என்ற பகுதி புகுத்தப்பட்டு, பல புத்தகங்கள் இணையேற்றப்பட்டுள்ளன.
தமிழ் விக்கி நூல்கள் இன்னும் அத்தனை வளரவில்லை. குழந்தை நூல்கள், குழந்தை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர்கள் உதவி செய்தால், இதை மேன்மேலும் வளரச் செய்து, நம் சமூகத்திற்கு உதவலாம்.
விக்கி பல்கலைக்கழகம் (விக்கிவெர்சிடி)
ஆராய்ச்சி மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் உதவும் வகையில் ஆங்கிலத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல கட்டுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உகந்தக் கட்டுரைகள் இவை. பல்வேறுப் பகுதிகளில் இவை பகுக்கப்பட்டுள்ளன.
கட்டற்றக் கல்விக் கைநூல்களும் வழிகாட்டல்களும் இன்னும் தமிழில் இல்லை. இதை உருவாக்க யாரேனும் முயன்றால் நன்றாக இருக்கும்.
விக்கி இனங்கள் (விக்கிஸ்பீசீஸ்)
உலகில் வாழும் உயிரினங்கள் பற்றிய விவரங்கள் அறிவியல் ரீதியாகத் தரப்படும் பகுதி இது. அதில் தற்போது இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்டக் கட்டுரைகள் உள்ளன. இந்த உயிரினங்களின் கோவை தமிழில் இன்னும் வரவில்லை.
விக்கி பொது (விக்கி காமன்ஸ்)
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கில் இப்போது 2 இலட்சத்திற்கும் மேற்பட்டப் படங்கள் இருக்கின்றன. இவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். வேண்டியப் படங்களை நகலெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேல்-விக்கி (மெடா-விக்கி)
விக்கி மீடியா நிறுவனத்தின் திட்டங்கள் பற்றியத் தகவல்களைத் தரும் பகுதி இது. வௌ;வேறு திட்டங்களுக்கு இந்தப் பகுதி அடிகோலுகிறது. திட்டமிடல், திட்ட ஆய்வு அனைத்தையும் இங்கே பெறலாம்.
ஆரம்பத்தில் விக்கிப்பீடியாவில் தமிழ்க்கட்டுரைகள் பலவற்றை எளிதில் இணையேற்ற ஒரு திட்டம் போடப்பட்டது. மொழிபெயர்ப்பு மென்பொருளைக் கொண்டு ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மாற்றி இணையேற்றம் செய்வதே அது. ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துப் பார்த்தனர். ஆனால் அவற்றின் தரம் அத்தனை உகந்ததாக இல்லாததாலும், திருத்தங்கள் செய்வதுக் கடினமாக இருந்த காரணத்தாலும், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
ஆர்வலர்களின் உதவியால் இன்று தமிழ் விக்கிப்பீடியா வளர்ந்து கொண்டே வருகிறது. கலைக்களஞ்சியமாக உலகத் தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும் பெட்டகமாக விளங்கும் விக்கிப்பீடியா நமக்காக, நம்மவர்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி. இது மேன்மேலும் வளர்ந்து அரியப் பொக்கிஷமாக ஆக்க நீங்களும் இதில் உங்கள் பங்களிப்பைத் தரலாம். அதை எப்படிச் செய்யலாம் என்பதை அடுத்த வாரம் காணலாம்.
3
“ஆமாம் குணா.. நீங்கள் எங்கே பிறந்தவர்?”
“நான் புதுக்கோட்டைப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன். நீங்கள்..”
“நான் சின்னாளப்பட்டி என்ற ஊரில் பிறந்தவன்”
“அது என்ன சின்ன கிராமமா?”
“அது திண்டுக்கல்லுக்கு அருகே இருக்கும் ஊராட்சி”
“அப்படியா.. நான் சின்னாளப்பட்டி சேலை பற்றி மட்டும் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அதற்கு மேல் தெரியாது..”
“உங்களுக்கு அது பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் விக்கிப்பீடியாவில் தேடுங்கள். அதில் இருக்கிறது.”
“அப்படியா.. அப்படியென்றால் எங்கள் ஊர் பற்றியத் தகவல்களும் அதில் இருக்குமா?”
“இருக்கலாம்.. இல்லாமலும் போகலாம்..”
“அது எப்படி உங்கள் ஊர் பற்றி விவரம் மட்டும் இருக்கும் போது.. எங்கள் ஊர் விவரம் இருக்காதா?”
“உங்கள் ஊரைப் பற்றியத் தகவலை யாராவதுத் தட்டச்சுச் செய்து இணையத்தில் ஏற்றியிருந்தால் இருக்கும். எங்கள் ஊரைப் பற்றி யாரோ தகவல்களைச் சேகரித்து இணையேற்றியிருப்பதால் அது இருக்கிறது.”
“அப்படியா.. நானும் அது இருக்கிறதா என்று பார்க்கிறேன். அப்படி இல்லாவிட்டால் தகவல்களை என்னால் இணையேற்ற முடியுமா?”
“அவசியமாக.. இணையத் தொடர்புக் கொண்டக் கணினி இருந்தாலே போதும். உங்களைப் போன்ற ஆர்வமுள்ளவர்கள் சரியானத் தகவலைத் திரட்டி, பயனராகப் பதிவுச் செய்துக் கொண்டு, தகவல்களைத் தட்டச்சுச் செய்து இணையேற்றலாம்.”
“அப்படியென்றால் எனக்குத் தெரிந்ததை நானும் விக்கிப்பீடியாவிற்குத் தருகிறேன்.”
விக்கிப்பீடியா நமக்காக, நம்முடைய மக்கள் வளர்த்து வரும் கலைக்களஞ்சியம். அதற்கு நீங்களும் உதவலாம் என்றுச் சென்ற வாரம் குறிப்பிட்டு இருந்தேன். அது எப்படி என்பதை மேற்கண்ட உரையாடல் விளக்கியிருக்கும் என்று எண்ணுகிறேன். அதை எப்படிச் செய்யலாம் என்று கணினி அறிவுக் கொண்ட ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திப் பார்த்திருப்பீர்கள் என்றும் எண்ணுகிறேன். அதைப் பயன்படுத்தி அறியாதவர்கள், இயன்றச் சிறு முயற்சியை விக்கிப்பீடியாவிற்கு எப்படித் தரலாம் என்று அறிந்துக் கொள்வோம்.
ஒவ்வொரு மொழித் தொகுப்பும் தனித்தனியே செயல்படுகின்றன. அதற்கு ஆணி வேராக இருப்பது ஆயிரக்கணக்கானச் சம்பளம் எதிர்பார்க்காதத் தன்னார்வலர்கள். விக்கிப்பீடியா நிறுவனத்தில் மொத்தமே 12 ஊழியர்கள் தாம். வன்பொருள், வடிவமைப்புச் செய்ய இரு நிரலர் (புரோகிராமர்) இருக்கின்றனர். வன்பொருளை நடைமுறைப்படுத்துதலுக்கும், வலை பட்டையக்கலம் (பான்விட்த்) ஆகியவற்றிற்கானச் செலவுகள் மட்டுமே. எல்லா எழுது வேலைகளும், பதிப்பகக் காரியங்களும் மனத் திருப்திக்காக ஆர்வத்துடன் காரியமாற்றும் மக்களால் செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் லாப நோக்கமற்றுப் பணிபுரிவதன் காரணமாக, இணையத்தின் மூலமாக நீங்கள் பணம் செலுத்தி அவர்களின் செலவுகளைச் சரி கட்ட உதவலாம்.
நீங்கள் விக்கிப்பீடியாவிற்கு உதவ எழுத்தாளராக இருக்க வேண்டியதில்லை. செய்தியாளராக இருக்க வேண்டியதில்லை. நூலகத்தில் பணிப் புரிபவராக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் நீங்களாகவே இருந்து, நீங்கள் உண்மையென அறிந்தவற்றைத் தந்து சிறு உதவிச் செய்யலாம்.
விக்கிப் பக்கங்களைப் பார்க்கும் போது முதலில் உங்களுக்கு என்ன தோன்றியது. தகவல்கள் சரியானதா என்ற ஐயம் எழுந்ததா இல்லையா? இந்தத் தகவல்கள் ஒருவர் வலையில் ஏற்றும் போது, அதைச் சரிப் பார்க்கப் பலரும் இருக்க வேண்டுமில்லையா? அவர்களில் ஒருவராக நீங்கள் இருக்கலாம். தவறுகளைச் சுட்டிக் காட்டலாம். மேல் விவரங்கள் தெரிந்திருந்தால், அதைச் சேர்க்க உதவலாம். தேடியத் தகவல்கள் கிடைக்காவிட்டால், அத்தகையத் தகவல்கள் எதிர்காலத்திற்குத் தேவைப்படும் என்று கருதினால், புதியப் பக்கத்தை உருவாக்கிக் கொடுக்கலாம்.
வயது வரம்புப் பாராமல், எல்லோருக்கும் ஒரேயளவு உரிமை இதில் கொடுக்கப்படுகிறது. பத்து வயதுச் சிரார் முதல் எண்பது தொண்ணூறு வயது முதியவர் வரை அனைவருக்கும் ஒரே உரிமை உண்டு. எழுதலாம். திருத்தலாம். அழிக்கலாம். ஆனால் அதைச் சரிப் பார்க்க ஒரு பதிப்பாளர் குழு உள்ளது. அதில் உள்ளவர்கள் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
இதைச் செய்ய முதலில் நீங்கள் உங்கள் பெயரைப் பயனர் பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும். விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில், வலதுப் பக்க மூலையில் பயனர் கணக்குத் தொடக்கம் என்றிருக்கும்.
அதைச் சொடுக்கினால், பெயரையும், உங்கள் மின்னஞ்சல் முகவரியை மட்டுமே கேட்கும் படிவம் தோன்றும். அதைத் தந்துப் பதிவுச் செய்துக் கொண்டாலே போதும். பிறகு புகுபதிகைச் செய்து அதைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். நீங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும், எந்தத் திட்டத்திற்கு வேண்டுமானாலும் உங்கள் பங்களிப்பைத் தரலாம்.
கொடுக்க விரும்பும் தகவல் அதில் ஏற்கனவே இருக்கிறதா என்று முதலில் சரிப் பார்த்துக் கொள்ளுங்கள். அது இல்லை என்றுத் தெரிந்தப் பின்னர், கொடுக்கப்படும் தகவலில் உண்மையும் நேர்மையும் இருக்கும் பட்சத்தில், உங்கள் தகவல்களை நீங்கள் தொகுத்துத் கொடுங்கள். அதைப் பதிப்பாளர்கள் சரிப் பார்த்து முழுமைப்படுத்துவார்கள். தமிழில் தட்டச்சுச் செய்ய, ஒருங்குறி (யுனிகோட்) எழுத்துத்துரப் பயன்படுத்தப்படுகிறது.
கொடுக்கப்பட்டத் தகவலில் தவறுகள் இருப்பின் உரையாடல் பகுதிக்குச் சென்று அதைப் பதிவு செய்யுங்கள். அந்தப் பக்கத்தை உருவாக்கியவர் தவறுகளைச் சரிச் செய்துக் கொடுப்பார்.
ஒத்தாசைப் பகுதி(ஹெல்ப்) நீங்கள் விக்கிப்பீடியா உபயோகிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கற்றுத் தரும். உங்கள் பதிவுகளை எப்படிச் செய்யலாம் என்ற விளக்கங்களையும் தரும்.
ஆலமரத்தடிப் பகுதி விக்கிப்பீடியா குறித்தச் செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் போன்றவற்றைத் தருகிறது.
புதிதாக எழுவதால், தவறுகள் ஏற்படும் என்று எண்ணினால், உங்கள் பரிசோதனைகளை மணல்தொட்டி(சான்ட் பாக்ஸ்) பகுதி மூலமாக பரிசோதித்துவிட்டு, பின்னர் முழுமையான பங்கேற்பைச் செய்யலாம்.
உங்கள் கட்டுரையை விக்கிப்பீடியாவிற்குத் தர வேண்டுமென்று விரும்பினால், தயங்காதீர்கள். ஒவ்வொரு கட்டுரையும் தரமானதாகவும், கட்டானதாகவும் இருக்க வேண்டுமென்பதற்காகச் சில வார்ப்புருக்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் படி தங்கள் கட்டுரையைப் பிரித்துக் கொடுத்தால் போதும். உங்கள் கட்டுரையும் விக்கிப்பீடியாவிற்கு உகந்தக் கட்டுரையாக மாறிவிடும்.
மேலும் இதைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு விக்கிப்பீடியாவிற்கு உதவ வேண்டும் என்று எண்ணினால், உதவிகளை விக்கிப்பீடியாவிலேயே பெறலாம். மேலும் விக்கிப்பீடியாவின் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய போது, அதன் பயனர் தேனீ. எம். சுப்பரமணி அவர்கள் வெளியிட்ட “தமிழ் விக்கிப்பீடியா” என்றப் புத்தகத்தில் எல்லா விவரங்களும் தரப்பட்டுள்ளன.
உலகின் மூலை முடுக்கில் இருக்கும் பலரும், இணையத்தின் மூலம், ஒரே இடத்தில் விவாதம் செய்து, முடிவுகள் எடுப்பது விக்கிப்பீடியாவின் சிறப்பம்சம்.
இது எப்படிச் சாத்தியமாயிற்று?
விக்கி மென்பொருள் தான் இதற்கு உதவுகிறது.
முதல் விக்கிப் பயன்பாடு (அப்பிளிகேஷன்), வார்ட் கன்னிங்கம் என்பவரால் 1994இல் உருவாக்கப்பட்டு, 1995இல் அமுலாக்கப்பட்டது. இதை விக்கிவிக்கிவெப் என்ற பெயரிட்டார். விக்கி மிகவும் எளிய, பயன்படுத்தக் கூடிய நேரடியானத் தகவல்தளம் என்று உருவகப்படுத்தினார். விக்கி என்பது ஹவாய் மொழியில் “வேகம்” என்றப் பொருள் கொண்ட வார்த்தை. “வேகமான” என்ற பொருள்படக் கூடிய வார்த்தையைத் தேடிய போது அவர் சென்ற இடத்தில் “விக்கி பஸ்” (வேகமான பஸ்) என்று பொருள்படும் சொல் பயன்படுத்தியதைக் கண்டார். உடனே அதையே தன்னுடையப் பயன்பாட்டிற்குப் பெயராகச் சூட்டினார்.
இந்த மென்பொருள் உலகின் பல பகுதிகளிலுள்ளப் பயனர்கள் தங்கள் விருப்பமான தகவல்களை இணையேற்றும் வசதியைத் தருகிறது. அப்படி இணையேற்றப்பட்டத் தகவல் சரியா தவறா என்று மற்றப் பயனர்கள் சென்று பார்த்துச் சொல்லும் வசதியையும் தருகிறது. இதன் மூலம் இணையேற்றப்பட்டத் தகவல்கள் சரிப் பார்க்க ஏதுவாகிறது.
பயனர்களில் பலர் அதிக ஆர்வம் காரணமாகத் தேவையற்றப் பயனற்றத் தகவல்களை இணையேற்றலாம். இந்தத் தகவல்களைப் பதிப்பாளர்கள் சரிப் பார்த்து அழிக்கவும் வசதிகள் இருக்கின்றன. ஏதாவது ஒரு நபர் தொடர்ந்து தேவையற்றத் தகவல்களையே தந்து கொண்டிருந்தால், அவரைப் பயனர் பட்டியலிலிருந்து நீக்கவும் வசதி உண்டு.
இவ்வாறாக விக்கி மென்பொருள் பல தரப்பட்ட சாராரையும் ஒன்றிணைத்து கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் பணியில் தன்னை மேன்மேலும் மெருகேற்றிக் கொண்டு வருகிறது. இருக்கும் திட்டங்களுடன் பல புதியத் திட்டங்களையும் உருவாக்க உதவி வருகிறது. அகரமுதலி அத்தகையத் திட்டத்தின் வடிவமே.
இன்னும் வரும் காலங்களில் இது மேன்மேலும் வளர்ச்சிப் பெற்று, மனித இனத்திற்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் இருந்த இடத்திலேயே பெற்றுத் தரும் களஞ்சியமாக விளங்கும் என்பது உங்களுக்கு இந்த அறிமுகத்தின் மூலம் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34
- நியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு
- புதிய ஏற்பாடு
- முணுமுணுப்பு .. கயிலை மு.வேடியப்பனின் சிறுகதைத்தொகுப்பு… எனது பார்வையில்.
- வாலி வதம் – சில கேள்விகள்.
- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011
- வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்
- மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.
- நீரைப்போல நாமும் இருந்தால்
- வலிகளின் வரைவிலக்கணமானவள்…
- பச்சோந்தி வாழ்க்கை
- துரோணா – கவிதைகள்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8
- புலன்
- காற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..
- பிந்திய செய்திகள்.
- ஒரு கைப்பிடி இரவு!
- பொற்றாமரைக்குழந்தை
- நேற்றையும் நாளையும்
- குறிப்புகள்
- பிரபஞ்சத்தின் இயக்கம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) *பிஸ்மில்லா ! (கவிதை -33)
- இல்லாத ஒன்றுக்கு…
- ரகசிய இருப்பிடங்களின் உற்பத்தி..
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9
- விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தேழு
- ஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்
- அமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்
- கே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது
- (67) – நினைவுகளின் சுவட்டில்
- பெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி
- மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)
- நிஜத்தின் நிறங்கள்..!
- இருப்பினைப் பருகும் மொழி
- செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்
- முயன்றால் வெல்லலாம்..!!!
- உருண்டோடும்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கருவனக் குழி
- சன்னமாய் ஒரு குரல்..
- வனவாசம்
- விக்கிப்பீடியா
- 2007 ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)
- இவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்
- ராஜத்தின் மனோரதம்.