மூடநம்பிக்கைக்கு அறிவியலைப் பலியிட்ட பல்கலைக்கழகங்கள்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

அசுரன்


தந்தை பெரியாரின் தன்னலமற்ற பகுத்தறிவு நடவடிக்கைகளால் பண்பட்டத் தமிழ்மண்ணை இருளில் தள்ளும்ி முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கோயில்களில் ஆடு, கோழிகளைப் பலியிடக்கூடாது என்று வீரமணியாரின் பகுத்தறிவு, சமூகநீதி காத்த வீராங்கனையார், அன்னை புரட்சித்தலைவி தமிழக முதல்வர் டாக்டர் செ.செயலலிதா நடவடிக்கை எடுத்துவருகிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவரே யாகம் நடத்துவதான செய்திகள் அவ்வப்போது வெளுவருகின்றன. அரசுக் கட்டிடங்களில் கால்கோள் விழாக்கள்கூட சங்கராச்சாரியாரின் எண்ணப்படியேதான் நடத்தப்படுகின்றன. இதற்கு நடுவே வாஸ்துசாஸ்திரம் வேறு.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அறிவியலைப் போதிக்கவேண்டிய கல்வி நிறுவனங்களில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகளோ அறிவியல் உலகிற்கே அசிங்கமாக இருக்கின்றன. பின்வரும் நிகழ்ச்சியைப் படித்துவிட்டுச் சொல்லுங்கள்…

திருநெல்வேலியில் உள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பணியாளர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவிட்டதாம். கடைசியாக, சில மாதங்களுக்கு முன்னர் கண்காணிப்பாளராகப் பணிசெய்துவந்த கணேசன் என்பவர் தற்கொலை செய்துகொண்டாராம். இதனால் பீதியடைந்த பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், துணைப்பதிவாளர்கள் உள்ளிட்டோர் ஆலோசனையின்பேரில் ஒரு யாகம் நடத்தப்பட்டுள்ளது.

துணைப்பதிவாளர்களின் முன்னிலையில் பதினைந்தாயிரம் ரூபாய் செலவிட்டு, திருநெல்வேலியைச் சேர்ந்த பார்ப்பனர்களைக் கொண்டு இந்த யாகம் செய்யப்பட்டுள்ளது. (மலையாள மந்திரவாதிகள் கிடைக்கவில்லையோ என்னவோ!). இது கடந்த செப்டம்பர் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. (பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஐ விட்டார்களே!).

இந்தப் பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு சமூகவியல், குற்றவியல் போன்ற சமூக அறிவியல்களையும், வேதியல், இயற்பியல் போன்ற அறிவியல் பாடங்களையும் கற்றுத்தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், துணைவேந்தரின் துறையும் உள்ளடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த மூடநம்பிக்கையைக் கண்டித்து மாணவர்கள் செப்டம்பர் 17 ஆம் நாள் (தந்தை பெரியார் பிறந்த நாள்) உணவகத்திற்கு அருகில் ஒரு தட்டியைக் கட்டினர். அதில்,

பல்கலைக் கழகமா ?

பார்ப்பனியக் கழகமா ?

பணியாளர்களின் தற்கொலைகளைத் தடுக்க

யாகம் நடத்தும் நிர்வாகமே!

உங்கள் வேலை

அறிவைப் போதிப்பதா ?

மூடத்தனத்தை வளர்ப்பதா ?

இறந்தவர்களின் ‘ஆவி ‘

உயிர்ப்பலி கேட்கிறது…

பல்கலைக்கழகம்

கிடா வெட்டத்தயாரா ?

-பெரியார்

என்று எழுதப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள தங்களுக்குத் தனியான செய்திப்பலகை வைத்துக்கொள்ள அனுமதி மறுத்து, பல்கலைக்கழகத்தில் ‘சனநாயகத்தை ‘யும் ‘மாணவர் உரிமையையும் ‘ காப்பாற்றி வருகின்ற, பல்கலைக்கழகப் பதிவாளரின் ஆணைப்படி இந்தத் தட்டி நிர்வாகத்தினரால் கிழித்தெறியப்பட்டது.

இன்னொரு செய்தி: பல்கலைக்கழக நிர்வாகம் வளாகத்திற்குள் பிள்ளையார் கோவில் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்து வருகிறதாம்.

இதனோடு இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கவேண்டிய மற்றொரு செய்தியும் உள்ளது.

அதாவது, சேலத்தில் உள்ளது பெரியார் பல்கலைக்கழகம். எல்லா பல்கலைக் கழகங்களையும் போலவே இங்கும், அது தந்தை பெரியார் பெயரில் இருப்பதால் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2001ஆம் ஆண்டு வாஸ்துசாஸ்திரப்படி அந்தச்சிலை திடாரென்று அகற்றப்பட்டது. இதற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இரண்டு ஆண்டுகளின் பின்னர் அங்கு பெரியார் சிலை இந்த ஆண்டு மீண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தால் நிறுவப்பட்டுள்ளது.

இரண்டுமே பல்கலைக்கழகங்கள். மாணவர்களுக்கு அறிவையும் அறிவியலையும் போதிக்கக்கூடியவை. அங்கே நடைபெற்றிருப்பவைதான் இக்கேலிக்கூத்துகள். இங்கு படிக்கின்ற மாணவர்கள் எப்படி அறிவியல்பூர்வமானவர்களாக வளர முடியும் ?; வாழ முடியும் ?

இந்திய தண்டனைச் சட்டத்தின் 508வது பிரிவின்கீழ், ஒருவர் கடவுளின் பெயரால் ஒரு காரியத்தைச் செய்யச்சொல்வதோ, அதைச்செய்யாவிட்டால் தெய்வ கோபத்திற்கு ஆளாவார்கள் என்று பயமுறுத்துவதோ, கடவுளின் பெயரால் சட்டவிரோதச் செயலைச் செய்ய உடன்படும்படிச் செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். இதன்படி, ஓராண்டுகாலம் சிறைத்தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படலாம். ஆனால் இச்சட்டப்பிரிவு இதுவரை எங்குமே நடைமுறைப்படுத்தப்பட்டதாகச் செய்தி இல்லை.

இதன்படி, பில்லி, சூனியம் செய்பவர்களும் திதி கொடுக்காவிட்டால் இறந்தோர் நரகத்திற்குப் போய்விடுவார்கள் என்று அச்சுறுத்துவோரும் தாம் தெய்வம் அல்லது தெய்வத்தின் அவதாரம் என்று சொல்பவர்களும் தண்டிக்கப்படலாம்.

இப்போது சொல்லுங்கள் இப்பல்கலைக்கழக நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுக்கலாமா கூடாதா ?

பி.கு.: பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் விண்ணுக்கு ஆளனுப்பவும் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பவும் இந்திய விண்வெளு ஆராய்ச்சிக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. (எல்லாருக்கும் வயிற்றுக்கு உணவு கிடைத்துவிட்டதா போன்ற அறிவியலுக்குப் புறம்பான கேள்விகளை எல்லாம் கேட்காதீர்கள். இது தேசத்தின் ‘ஆண்மை ‘ சம்பந்தப்பட்ட விசயம்.)

வாழ்க சனநாயகம்!

(asuran98@rediffmail.com)

Series Navigation

அசுரன்

அசுரன்