தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்
email id tkgowri@gmail.com
அத்தை மறுநாள் புதுமணத் தம்பதிகளை மணையில் உட்கார வைத்து சத்யநாராயண பூஜை செய்ய வைத்தாள். ஊரில் எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள். முதல்நாள் வண்டியை விட்டு இறங்கிய பிறகு பூஜை நடக்கும் வரையில் கிருஷ்ணன் என் கண்ணில் படவே இல்லை.
இரவோடு இரவாக சமையல்காரர்கள் வந்து விட்டார்கள். வேண்டிய மளிகை சாமான்கள் வந்து விட்டன. இரவு நேரம் கழித்து சின்ன தாத்தாவும், மற்ற உறவினர்களும் வண்டியில் வந்து இறங்கினார்கள். எல்லோரும் அம்மா அப்பாவை அன்புடன் விசாரித்தார்கள். அத்தை அடிக்கடி அண்ணி! அண்ணி! என்று அறிவுரைகளை கேட்டுக் கொண்டிருந்தாள்.
கொல்லைத் திண்ணையில் அமர்ந்து கொண்டு ஆசாரி மாமாவுடன் பேசிக் கொண்டிருந்த அப்பா சின்னதாத்தா வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் எதிர்கொண்டு அழைப்பதற்காக வாசலுக்கு போனார்.
“ஆனந்தா! எத்தனை நாள் ஆச்சு உன்னைப் பார்த்து?” என்றபடி தோள்மீது கையைப் போட்டு அணைத்துக் கொண்டார். தாத்தா சாய்வு நாற்காலியிலும், அப்பா பக்கத்திலேயே இருந்த ஸ்டூல்மீதும் அமர்ந்து கொண்டார்கள். இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த சமயத்தில் அப்பாவைப் பார்க்கும் போது பத்து வயது குறைந்தாற்போல் தென்பட்டார். அப்பாவை இப்படி பார்க்கும் போது என் தவம் நிறைவேறிவிட்டது போலவும், நான் நினைத்ததை கண்ணாரக் காண்பது போலவும் தொன்றியது. அப்பா அம்மாவுக்காகக் குரல் கொடுத்தார். அம்மா வந்து தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்தாள்.
“அம்மா வேணி! சௌக்கியம்தானே? உன் கல்யாணத்தின் போது உன்னைப் பார்த்தது. மறுபடியும் உன் மகள் கல்யாணத்தில் பார்க்கிறேன். இத்தனை வருடங்களில் கொஞ்சம் பூசியிருக்கிறாயே தவிர உன்னிடம் பெரிய மாறுதல் எதுவும் தெரியவில்லை. எங்க ஆனந்தன்தான் தலை முடி நரைத்து வயதானவனாகத் தெரிகிறான். உன்னை அவன் பக்கத்தில் பார்க்கும் போது இரண்டாம்தாரம் போல் சிறுசாக இருக்கிறாய்” என்றார் தாத்தா. எல்லோரும் சிரித்தார்கள்.
அத்தை உள்ளே எங்கேயோ இருந்த கிருஷ்ணனை அழைத்து எங்க இருவரையும் தாத்தாவில் கால்களுக்கு வணங்கச் சொன்னாள். இரண்டு பேரும் சேர்ந்து வணங்கினோம். “தீர்க சுமங்கலியாக பதினாறும் பெற்று நீடூழி வாழணும்” என்று தாத்தா ஆசீர்வதித்தார். கிருஷ்ணனின் தோள்களைப் பற்றி எழுப்பிக் கொண்டே “அம்மா செய்தி சொல்லி அனுப்பியபோது என்னால் நம்ப முடியவில்லை கிருஷ்ணா! ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ராஜியின் திருமணத்திற்கு வந்தபோதே உங்க இருவரையும் ஒன்றாகப் பார்த்த போது பொருததமான ஜோடியாக தோன்றியது. கிருஷ்ணனுக்கு வரப் போகும் மனைவி இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நேர்மையை, தர்மத்தை மறந்து போகாதவர்களுக்கு கடவுள் எப்படி கருணை காட்டுகிறாரோ பார்த்தாயா? அந்த அதிர்ஷ்டம் நாம் கேட்டுக் கொண்டால் கிடைக்கும் பொருள் இல்லை தம்பீ” என்றார்.
கிருஷ்ணன் என் பக்கம் பார்த்தான். அந்தப் பார்வையில் சுவர்க்கத்தை உள்ளங்கையில் பிடித்துவிட்ட வெற்றியின் பெருமிதம் வெளிப்பட்டது.
மறுநாள் பூஜை முடிந்த பிறகு பந்தி பந்தியாக சாப்பாடு போட்டார்கள். ஊரில் எல்லோரும் வந்திருந்தார்கள். கிருஷ்ணன் என்னை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட விஷயம் எப்படியோ ஊர் முழுவதும் பரவிவிட்டது. கர்ணம் மாமி என்னிடம் நேராகவே கேட்டுவிட்டாள். “ஏண்டி பெண்ணே! உன் திருமண விஷயம் உங்க அம்மா அப்பாவுக்குத் தெரியாதாமே? உண்மைதானா?”
ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தேன்.
“பரவாயில்லை. உங்க அம்மா அப்பா உன்மீது கோபம் வைத்துக்கொள்ளாமல் வந்திருக்கிறார்கள்.”
“வராமல் எப்படி இருக்க முடியும் சொல்லுங்கள்? எங்களுக்கு இருப்பதோ ஒரே மகள்.” அங்கே இருந்த அம்மா நிஷ்டூரமாக சொன்னாள்.
“அதுவும் உண்மைதான். இந்தக் காலத்தில் குழந்தைகளின் போக்கே அப்படித்தான் இருக்கிறது. பெற்று வளர்ப்பதுடன் நம் பங்கு முடிந்துவிட்டது.” மாமியுடன் மேலும் நான்கு பேர் சேர்ந்து கொண்டார்கள். குழந்தைகளின் பொறுப்பற்றத்தனத்தைப் பற்றி வேண்டிய அளவுக்கு விமரிசித்தார்கள்.
அப்பா வந்தது தெரிந்ததும் பக்கத்து ஊர்களிலிருந்த மிராசுதாரர்கள் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவின் கிளயிண்டுகள்தான். சாப்பாடு வேளையில் அவர்களுடன் சாவகாசமாக பேச மடியாது என்பதால் கிருஷ்ணன் தோட்டத்தில் மாலை வேளையில் டீ பார்ட்டீக்கு ஏற்பாடு செய்தான்.
சாப்பாடு முடிந்த பிறகு பெண்கள் எல்லோரும் ஒரு பக்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணன் அங்கே வந்து “மாமி! கொஞ்சம் இப்படி வர்றீங்களா” என்று அழைத்தான். அம்மா எழுந்து போனாள். மாலையில் தோட்டத்தில் நடக்கப் போகும் டீ பார்ட்டீக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி அம்மாவும் கிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குள் அத்தையும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். மூவரும் சேர்ந்து கொல்லைப்புறம் இருந்த சமையல்காரர்களிடம் சென்றார்கள். தொலைவாக இருந்ததால் அவர்கள் பேசுவது காதில் விழவில்லை. ஆனால் அந்தக் காட்சி கண்ணுக்கு விருந்தாக இருந்தது. கிருஷ்ணனைப் போன்ற மகன் இருந்தால் அம்மா எவ்வளவு பெருமைப்பட்டுக் கொண்டிருப்பாள்? என்றைக்கு இருந்தாலும் சரி. அம்மா கிருஷ்ணனிடம் மகனைக் காணவேண்டும். தனக்கு மகன் இல்லையே என்று அம்மா ஒருநாளும் வருத்தப்படக் கூடாது. கிருஷ்ணன் அந்தக் குறையைத் தீர்த்து வைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
மாலை ஆறுமணி ஆகும் போது எல்லோரும் தோட்டத்திற்குக் கிளம்பினோம். புடவையை மாற்றிக்கொள்வதற்கு முன்னால் அம்மாவிடம் வலியச் சென்று “மம்மி! எந்த புடவையை கட்டிக்கொள்ளட்டும்?” என்று கேட்டேன்.
“என்னிடம் கேட்பானேன்? அதான் சங்கிலியை அறுத்துக் கொண்டு வந்துவிட்டாயே? உன் இஷ்டம் வந்ததுபோல் செய்துகொள்.” வெடுக்கென்று சொன்னாள்.
அந்தப் பேச்சில் இருந்த கடுமைக்கு என் மனம் காயப்பட்டது. மறுபேச்சு பேசாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். அந்த நிமிடம் முதல் என் ஆடை அலங்கார விஷயத்தில் யாரிடமும் அறிவுரை கேட்டுக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன். பெட்டியைத் திறந்து பார்த்தேன். வெள்ளை நிற·பாரின் ஜார்ஜெட் புடவையை எடுத்து உடுத்தினேன். வேண்டுமென்றே நகைகளைத் தவிர்த்து விட்டேன்.
நான் கிளம்புவதற்குத் தாமதமாகிவிட்டதால் அம்மா, அப்பா, சாரதி மற்றவர்கள் தோட்டத்திற்கு முன்னாடியே போய்விட்டார்கள். ராஜி, நான் மற்றும் என் வயதையொத்த மற்ற சிலரும் சேர்ந்து கிளம்பினோம். வீட்டில் வேலை இருந்ததால் வரப் போவதில்லை என்று அத்தை சொல்லிவிட்டாள்.
நாங்கள் போய்ச் சேரும்போது அம்மா, அப்பா, சாரதி, கிருஷ்ணன் தோட்டத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள். தோட்டத்தின் நடுவில் மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இருட்டிவிட்டதால் சாமிகண்ணு பெட்ரோமாக்ஸ் விளக்குகளைக் கொண்டு வந்து வைத்தான்.
எல்லோரும் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தோம். சாரதி உரிமையுடன் என் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டு “கங்கிராட்சுலேஷன்ஸ் மீனா! உன் கணவன் இவ்வளவு திறமைசாலியாக இருப்பான் என்று நான் நினைக்கவில்லை. இந்த அமைதியான சூழ்நிலையைப் பார்க்கும்போது எனக்கும் இங்கே ஒரு வீடும், கொஞ்சம் நிலமும் வாங்கிப் போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. பட்டணத்து பிசி வாழ்க்கையில் களைத்துப் போனபோது இங்கே வந்து நான்கு நாட்கள் தங்கினால் புத்துணர்ச்சி கிடைக்கும்” என்றான். பழைய விஷயங்கள் எதுவும் மனதில் வைத்துக்கொள்ளாமல் அவன் இப்படி உரிமையுடன் பேசியது எனக்கு சந்தோஷமாக இருந்தது.
பார்ட்டீ நடுவில் அம்மா கிராமத்துப் பெரியவர்களிடம் “இந்த ஊரில் எல்லோருக்கும் இவ்வளவு செல்வாக்கு, பணவசதி இருந்தம் ஊர் இவ்வளவு மோசமான நிலையில் இருப்பது கொஞ்சம் கூட நன்றாக இல்லை. நல்ல சாலைகள், விளக்குகள் இல்லை. எல்லோரும் என்னதான் செய்யறீங்க?” என்று கேட்டுவிட்டாள்.
முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறோம் என்றும், சொந்த வேலைகள் இருப்பதால் பொது வேலையை கவனிக்க முடியவில்லை என்றும் விளக்கம் சொன்னார்கள். அடுத்த முறை தீவிரமாக முயற்சி செய்யச் சொல்லியும், தானும் ஒத்துழைப்பு தருவதாகவும் அப்பா சொன்னார்.
நேரம் ஆகிவிட்டதால் வந்தவர்கள் எல்லோரும் அப்பா அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். சாரதியும், அம்மாவும் தொலைவில் நின்றுகொண்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பா என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டே “கண்ணம்மா! இத்தனை வருடங்கள் கழித்து உன் தயவால் கிருஷ்வேணியின் கணவன் என்று இல்லாமல் லாயர் ஆனந்தனாக ஒரு நாளாவது அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன்” என்றார்.
அப்பாவின் பக்கம் பார்த்தேன். முறுவலுடன், நிர்மலமாக இருந்த அந்த முகத்தைப் பார்த்ததும் என் மனம் பித்ருபக்தியால் நிறைந்துவிட்டது. நான் விரும்பியதை சாதித்துவிட்டேன் என்ற திருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டன. அங்கே எல்லோரும், முக்கியமாக அம்மா இருக்கிறாள் என்ற சங்கோஜம் என்னை பின் வாங்கச் செய்தது. இல்லாவிட்டால் உடனே குனிந்து அப்பாவின் கால்களைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு இருப்பேன்.
தொலைவில் இருந்த அம்மா ராஜியை அழைத்து ஏதோ சொன்னாள். ராஜி என் அருகில் வந்து “மாமா! வீட்டுக்குக் கிளம்பலாமா என்று மாமி கேட்கச் சொன்னள்” என்றாள்.
“நானும் வருகிறேன்” என்றேன்.
“அண்ணன் இருக்கச் சொன்னான். உன்னிடம் ஏதோ பேச வேண்டுமாம். நீங்க இருவரும் சேர்ந்து அப்புறமாக வாங்க.” ராஜி குறும்பாகச் சிரித்துவிட்டு போய்விட்டாள்.
எல்லோரும் போய்விட்டார்கள். அம்மா என்னிடம் போய் வருகிறேன் என்று கூட சொல்லவில்லை. சாமிகண்ணுவும் இன்னும் சில ஆட்களும் சேர்ந்து மேஜை நாற்காலிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நான் எழுந்து போய் திண்ணையின் மீது அமர்ந்துகொண்டேன். பெட்ரோமாக்ஸ் விளக்குகளை ஒன்றை மட்டும் வைத்துவிட்டு மற்றதை எடுத்துவிட்டார்கள். அந்த விளக்கையும் எடுத்து விடச் சொன்னேன். பௌரணமி கழிந்த மூன்றாவது நாள் என்பதால் நிலவின் வெளிச்சம் தோட்டத்தில் பரவிக் கொண்டிருந்தது. அந்த விளக்கையும் எடுத்துவிட்டால் தவிர நிலவின் அழகு தெரியாது என்று தோன்றியது. சாமிகண்ணு எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்திவிட்டுப் போய்விட்டான்.
நான் தோட்டத்தைக் கண்ணாலேயே பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். அம்மா மற்றவர்களை வழியனுப்ப சென்ற கிருஷ்ணன் இன்னும் திரும்பி வரவில்லை.
தோட்டத்தில் ஒவ்வொரு மரமும், இலையும் என்னை அன்புடன் குசலம் விசாரிப்பது போல் தோன்றியது.உண்மையைச் சொல்லணும் என்றால் கிருஷ்ணனின் குணாதிசயத்தை எனக்குப் புரிய வைத்ததே இந்த தோட்டம்தான். நாங்க இருவரும் நெருங்கியதற்கும் இந்தத் தோட்டம்தான் காரணம். இந்தத் தோட்டம் கிருஷணனுக்கு இல்லாமல் போய் விடுமோ என்று நான் பயந்தது, அப்பா கிருஷ்ணன் பெயரில் தோட்டத்தைப் பதிவு செய்துவிட்டு தஸ்தாவேஜுகளை காட்டியபோது நான் அடைந்த சந்தோஷம் நினைவுக்கு வந்தன. மெலட்டூருக்கு வந்தது முதல் நடந்த நிகழ்ச்சிகள் என் கண் முன்னால் வேகமாக சுழன்றன. அன்று சுந்தரி அப்படி கோபித்துக் கொண்டு போகவில்லை என்றால், புருஷோத்தமன் ராஜியின் திருமணத்தைத் தடுத்தி நிறுத்தியிருக்காவிட்டால் நிலைமை வேறு விதமாக மாறியிருக்குமோ?
“என்ன? யோசனையில் மூழ்கிவிட்டாயா?” கிருஷ்ணனின் குரல் கேட்டு திடுக்கிட்டேன். கிருஷ்ணன் வந்து என் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். “அப்பாடா! இப்பொழுதுதான் நிம்மதியாக மூச்சுவிட நேரம் கிடைத்தது” என்றான்.
“எல்லோரும் போய்விட்டார்களா?” என்று கேட்டேன்.
“எல்லோரும் கிளம்பி விட்டார்கள்.”
சற்று நேரம் இருவரும் மௌனமாக இருந்தோம். தோட்டத்தின் அழகை, அந்த நிசப்தத்தை ரசிப்பதுபோல் உட்கார்ந்து விட்டேன். கிருஷ்ணன் திடீரென்று செருப்பைக் கழட்டிவிட்டு கால்களை உயரே தூக்கி என் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டான். எப்போதும் நான் உரிமை எடுத்துக் கொள்வதும், அவன் பின் வாங்குவதும் நடக்கும். இந்த முறை அதற்கு நேர்மாறாகிவிட்டது.
“என்ன யோசித்துக் கொண்டிருந்தாய் மீனா?” கிருஷ்ணன் கேட்டான்.
“நீ என்ன யோசித்துக் கொண்டிருந்தாயோ முதலில் சொல்லு.” எதிர்க்கேள்வி கேட்டேன்.
“கனவு போல் இருக்கும் இந்த உண்மையை நம்ப முயற்சி செய்கிறேன். மாமியும், மாமாவும் இங்கே வந்து நம்மிடம் முகம் கொடுத்துப் பேசும் வரையில் நீ என் மனைவி என்ற நம்பிக்கை வரவே இல்லை. எவ்வளவு ரகளை நடக்குமோ என்று பயந்தேன்.”
“நடந்த ரகளை போறாதா?”
“ஊஹ¤ம். அதைக் கணக்கிலேயே சேர்க்க முடியாது. மாமி இவ்வளவு சீக்கிரமாக நம்மை ஏற்றுக்கொள்வாள் என்று நினைக்கவில்லை.”
திடீரென்று கையை நீட்டினேன். “நீ எனக்கு ஒரு வாக்குக் கொடுக்கணும். அம்மா என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் நீ பொறுமையுடன் மன்னிக்கணும். அம்மாவுக்கு மகன் இல்லாத குறையை நீ தீர்க்க வேண்டும். இது என்டைய வேண்டுகோள்.”
“மீனா! மாமி எனக்கு வாய்ப்பு தரணுமே ஒழிய அதைவிட சந்தோஷம் எனக்கு வேறு என்ன இருக்க முடியும்? சொல்ல மறந்துவிட்டேன். நம் ஊருக்குத் தெற்கே கரும்பு தோட்டம் விற்பனைக்கு இருக்கிறது. அதை மாமி வாங்கப் போகிறாளாம். சுகர் ·பாக்டரி வைக்கப் போகிறார்களாம். அதில் சாரதியும், மாமியும் பார்ட்னர்களாக இருப்பார்களாம்.”
வியப்புடன் பார்த்தேன். இந்தக் குறைந்த நேரத்தில் இத்தனை முடிவுகளா? எனக்குப் புரிந்துவிட்டது. இப்படி ஏதாவது வேலை ஏற்படுத்திக் கொண்டால் தவிர அம்மாவால் இந்த ஊருக்கு வரமுடியாது. என்னைப் பார்த்துவிட்டு போவதற்காக மட்டும் வந்ததுபோல் அல்லாமல் ·பேக்டரி வேலையாக வந்தது போல் வந்து, என்னைப் பார்த்துவிட்டு போவாள் போலும். நானாக தேர்ந்தெடுத்து கிருஷ்ணனைத் திருமணம் செய்துகொண்டேன் இல்லையா. என் வாழ்க்கை எப்படி இருக்கிறதென்று கண்காணிக்காமல் அம்மாவால் இருக்க முடியுமா? கிருஷ்ணனின் தலைமுடியைக் கோதியபடி எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.
“மாலையில் தோட்டத்திற்கு வந்தபோது மாமா என்ன சொன்னார் தெரியுமா? நான் உன்னை என்னுடன் அழைத்து வந்துவிட்டதற்கு பதிலாக ராஜியை அவர்களுடன் அனுப்பி வைக்கணுமாம். அவளுடைய திருமணத்தை அவர்களே நடத்தி வைப்பார்களாம். இது மாமியின் யோசனையாம்.” கிருஷ்ணன் சொன்னான்.
“உண்மையாகவா? நீ என்ன பதில் சொன்னாய்?” ஆர்வத்துடன் கேட்டேன்.
“உன்னிடம் கேட்கணும் என்று சொன்னேன்.”
“ஏன் அப்படி சொன்னாய்? உடனே ஒப்புக் கொண்டிருக்கலாம் இல்லையா? அதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்?”
“ஆனால் ராஜியின் திருமணத்தை நம் கையால் நடத்தணும் என்று பேசிக் கொண்டோம் இல்லையா?”
“அம்மா அப்பாவானால் மட்டும் என்ன? அது இன்னும் நல்ல விஷயம் இல்லையா? அதிலும் முக்கியமாக அம்மா கேட்ட போது.”
“உன் அபிப்பிராயம் இப்படி இருக்கும் என்று நினைக்கவில்லை. மாட்டேன்னு சொன்னால் நன்றாக இருக்காது என்று உன்னிடம் கேட்கணும்னு சொன்னேன்.” மடியிலிருந்து எழுந்து கொள்ளப் போனான்.
தோள்களை அழுத்தி எழுந்து கொள்ளாமல் தடுத்தேன். “என்மீது கோபமா?”
“உன்மீதா?” அவன் பார்வை என்மீது படிந்தது.
“இப்பொழுதே கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். எதிர்காலத்தில் உனக்கு என்மீது கோபம் வந்தால் என்ன செய்யணுமோ சொல்லு.”
“அந்த சமயத்தில் எதுவும் சொல்லாமல் சற்று நேரம் மௌனமாக இரு. அதற்குப் பிறகு உன் இஷ்டம் வந்தது போல் என்னைத் திட்டு” என்றான் சிரித்துக் கொண்டே.
நானும் சிரித்தேன். “நம் கல்யாணத்துடன் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிட்டன. இப்படி என்று தெரிந்திருந்தால் முன்னாடியே இந்தக் காரியத்தைச் செய்திருப்பேன்.”
கிருஷ்ணன் முகம் கம்பீரமாக மாறியது. “கல்யாணத்துடன் உனக்குப் பிரச்னைகள் தீர்ந்து விட்டதோ என்னவோ. ஆனால் எனக்கு இப்பொழுதுதான் தொடங்கியிருக்கு” என்றான்.
“உனக்குப் பிரச்னைகளா?”
“காரும் பங்களாவுமாக அபூர்மாக வளர்ந்தவள் நீ. நீயாக வந்து என்னுடன் வாழ்க்கையை பிணைத்துக் கொண்டால் பிரச்னைகள் இல்லாமல் எப்படி இருக்கும்? நாங்க எல்லோரும் இருப்பதுபோல் வசதிகள் இல்லாத அந்தச் சிறிய வீட்டில் உன்னை தங்க வைக்க முடியுமா? என்னை பண்ணிக் கொண்டதால் வசதியான வாழ்க்கையை இழந்துவிட்டோம் என்று நீ எப்போதாவது நினைத்தால் என்னால் உயிருடன் இருக்க முடியுமா?”
“போதும்… போதும். நிறுத்துங்கள் மிஸ்டர் கிருஷ்ணன்! அந்த விஷயத்தில் தாங்கள் கொஞ்சம்கூட சந்தேகப்பட வேண்டியது இல்லை. இந்த மீனாவுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம். அவன் இருக்கும் இடம்தான் அவளுக்கு அயோத்தியை. அவனால் கொடுக்க முடியாத வசதிகளை பற்றி அவள் வருத்தப்படவும் மாட்டாள். அதைப் பற்றி யோசிக்கவும் மாட்டாள்.”
கிருஷ்ணன் என் மூக்கைப் பிடித்து ஆட்டினான். “மீனா! மெனி மெனி தாங்க்ஸ்.” எழுந்து சரியாக உட்கார்ந்துகொண்டான். என் கையைப் பிடித்து எழுப்பினான். “இப்படி வா” என்று தோட்டத்தின் வலது கோடிக்கு அழைத்துப் போனான். அங்கே இருந்த மரத்தின் மீது சாய்ந்துகொண்டு இடது கையை நீட்டி விரலால் காட்டியபடி “அதோ! அங்கே பார்த்தாயா?” என்றான். நான் கண்களை உயர்த்திப் பார்த்தேன். தொடுவானம் வரையிலும் நிலவின் வெளிச்சம் பரவியிருந்த காட்சி ரம்மியமாக இருந்தது.
“ரொம்ப நன்றாக இருக்கு” என்றேன்.
“நன்றாக இருக்கா? எது?” வியப்புடன் கேட்டான்.
“வெட்ட வெளியில் நிலா வெளிச்சம் இவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று இதுவரையிலும் எனக்குத் தெரியாது.”
“நான் பார்க்கச் சொன்னது நிலா வெளிச்சத்தை இல்லை. நம் தோட்டத்தை ஒட்டியிருந்த தரிசல் நிலத்தை. கிட்டத்தட்ட பத்து ஏக்கர் இருக்கும்.”
“இருக்கட்டுமே.”
“அந்த நிலத்தையும் வாங்கி தோட்டத்துடன் சேர்த்துவிடுவேன். அங்கே சகல வசதிகளுடன் உனக்கு மாடிவீடு கட்டுவேன். அந்த வீட்டில் மாடியில் இருக்கும் அறை உன்னுடையது. நான் இங்கே வேலைக்கு நடுவில் “மீனா!” என்று குரல் கொடுப்பேன். நீ பால்கனிக்கு வந்து “என்ன?” என்று கேட்கணும். புரிந்ததா?” என்றான்.
“புரிந்தது.”
கிருஷ்ணன் என் தலைமீது கையைப் பதித்தான்.
“இது என்னுடைய சபதம். இந்த சபதம் நிறைவேறும் வரையில் உறங்க மாட்டேன். இரவு பகல் பாராமல் உழைப்பேன்.”
நான் அவன் கையை வேகமாகத் தள்ளிவிட்டேன். “சரி. நீ இரவு பகல் பாராமல் அந்த வீட்டிற்காக உழைத்துக் கொண்டிரு. அந்த மும்முரத்தில் என்னையும் மறந்து போய்விடு. எனக்கு போர் அடித்து அம்மாவிடம் போய் விடுவேன். நல்ல பெண் போல் தலை குனிந்துகொண்டு “மம்மி! கிருஷணன் விஷயத்தில் நான் தவறு செய்துவிட்டேன். முன்பின் யோசிக்காமல் கல்யாணம் செய்து கொண்டு விட்டேன். இப்போ டைவோர்ஸ் வாங்கிக் கொடு” என்று கேட்கிறேன். நீ வீடு கட்டி முடிக்கும் போது அதில் குடியிருப்பதற்கு நான் இருக்க மாட்டேன்.”
அதற்குமேல் பேசவிடாமல் கிருஷ்ணன் சட்டென்று கையை நீட்டி என் வாயை பொத்தினான். “மீனா! என்ன பேச்சு இது?” என்றான். அவன் கண்களில் கோபமும் வேதனையும் கலந்து தென்பட்டன.
“இல்லாவிட்டால் என்ன? தரிசல் நிலத்தை வாங்கி வீடு கட்டுவானாம். மறுபடியும் பத்து வருடங்கள் கடினமாக உழைப்பானாம். இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். தேவைக்கு அதிகமாக நீ கஷ்டப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்.”
“மீனா! இதற்குமுன் இருந்த நிலைமை வேறு. இப்போ இருக்கும் நிலைமை வேறு. விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் எத்தனையோ விதமாக உதவி செய்கிறது.”
“தெரியும். கடன் வாங்கினால் போதுமா? மறுபடியும் தீர்க்க வேண்டாமா? கடனைத் தீர்ப்பதற்கு எத்தனை கஷ்டப்பட வேண்டியிருக்கும் தெரியுமா?”
நான் சீரியஸாக சொன்னதும் கிருஷ்ணன் பக்கென்று சிரித்துவிட்டான். “நன்றாக இருக்கிறது. கல்யாணம் ஆகி கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டது போல் சண்டை போடுகிறாயே? மீனா! நீ எப்போதும் இதேபோல் என்னுடன் சண்டை போட்டுக் கொண்டே இருக்கணும். சண்டை போடுவதை நிறுத்தினால் நானே உன்னை உங்க அம்மாவிடம் அனுப்பி வைத்துவிடுவேன். நீ சண்டை போடும் போது மனதிற்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா? முதலில் கோபம் வந்தாலும் பிறகு சொல்லத் தெரியாத பலமும், உற்சாகமும் தானாக பொங்கிவரும். உனக்கே தெரியாமல் எதிரில் இருப்பவர்களுக்குப் புத்துயிரை ஊட்டுகிறாய்.”
கிருஷ்ணன் என்னை அருகில் இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டான். அவன் குரல் மென்மையாக, தவிப்புடன் ஒலித்தது. “மீனா! சிறுவயது முதல் எதையும் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். கனவு காண்பது என் சுபாவத்திற்கு விருத்தம். ஆனால் நீ முதல் முறையாக மெலட்டூருக்கு வந்துவிட்டு போன பிறகு எனக்கே தெரியாமல் என்னுள் ஒரு இனிய கனவு உருவாகியது. எதைப் பார்த்து நீ என்னை விரும்பினாயோ, என்னைத்தான் பண்ணிக் கொள்ளணும் என்று பிடிவாதம் பிடித்தாயோ எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது.” என் கையை எடுத்து கன்னத்தில் ஒற்றிக் கொண்டவன் திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தாற்போல் சட்டைப் பையை தடவிக் கொண்டே “சொல்ல மறந்துவிட்டேன். அம்மா உன்னிடம் கொடுக்கச் சொன்னாள்” என்றான்.
“என்ன அது?” ஆர்வத்துடன் கேட்டேன்.
கிருஷ்ணன் சட்டை பையிலிருந்து ஜோடி வளையலை எடுத்து என்னிடம் தந்து கொண்டே “அம்மா இன்று இரவு இதை உன்னிடம் தரச்சொன்னாள். நேரம் இல்லாதததால் புதிதாக வாங்க முடியவில்லையாம். பிறகு இதை மாற்றிவிட்டு உனக்கு பிடித்த மோஸ்தரில் வாங்கிக்கொள்ளச் சொன்னாள்.” கிருஷ்ணன் என் கையைப் பிடித்து வளையலை அணிவிக்கத் தொடங்கினான்.
“இப்போ எனக்கு எதுக்கு வளையல்?” தடுக்கப் போனேன். ஆனால் அவன் காதில் வாங்கவில்லை.
“எனக்கென்ன தெரியும்? அம்மா கொடுக்கச் சொன்னாள். கொடுத்தேன்.”
“இன்று இரவே எதற்காக கொடுக்க வேண்டுமாம்? என்ன ஸ்பெஷல் இன்னிக்கு?”
கிருஷ்ணன் என் பக்கம் பார்த்தான். “உனக்குத் தெரியாதது எனக்கு மட்டும் என்ன தெரியப் போகிறது?” அப்பாவியாக நடிக்கணும் என்று அவன் நினைத்தாலும் அந்த கண்களில் குறும்புத்தனம் கொப்புளித்துக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் என்னிடம் பேசணும் என்றும், எல்லோருடன் போக வேண்டாம் என்றும் சொன்னது இதற்காகத்தானா?
வளையல் அணிவித்து முடித்த பிறகு “இனி வீட்டுக்குக் கிளம்புவோமா?” என்றேன்.
கிருஷ்ணன் என்னை வித்தியாசமாக பார்த்தான்.
“நேரம் ஆகிவிட்டது. வீட்டில் அத்தை, மற்றவர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்னவோ?” முணுமுணுப்பது போல் சொன்னேன்.
கிருஷ்ணன் என் பேச்சைக் காதில் வாங்காதது போல் “ரொம்ப தாகமாக இருக்கிறது. குடிக்க தண்ணீர் இருக்கிறதோ பாரு” என்றான்.
“அங்கே இருக்குமோ என்னவோ. பார்த்துவிட்டு வருகிறேன்.” தொலைவில் தோட்டத்தின் நடுவில் இருந்த வீட்டை சுட்டிக் காட்டினேன். ஏற்கனவே கீற்றுக் கொட்டகையாக இருந்ததை கிருஷ்ணன் சமீபத்தில் ஓட்டுவீடாக மாற்றியிருந்தான்.
ஓட்டுவீட்டை நெருங்கி வெறுமே சாத்தியிருந்த கதவுகளை திறந்து உள்ளே அடியெடுத்து வைத்தவள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல், கண்ணிமைக்கவும் மறந்து போனவளாக அப்படியே நின்றுவிட்டேன். அந்த அறை புதுமண தம்பதிகளின் முதல் சந்திப்புக்காக சிறப்பாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில், புத்தம் புதுபடுக்கை விரிப்பு. அறையில் மூலையில் ஸ்டூல் மீது எரிந்து கொண்டிருக்கும் குத்துவிளக்கு.
‘அண்ணன் உன்னிடம் பேச வேண்டுமாம்’ என்று ராஜி சொன்னதில் இருந்த பொருள், ‘அம்மா இன்று இரவு உன்னிடம் வளையல் தரச் சொன்னாள்’ என்று கிருஷ்ணன் சொன்னதில் மறைந்திருந்த அர்த்தம் எனக்கு விளங்கியது. என் கன்னத்தில் சூடாக ரத்தம் பாய்ந்தது. அடியெடுத்து வைக்கவோ, பின்னால் திரும்பிப் போகவோ சக்தியற்றவள் போல் பதுமையாக அதே இடத்தில் நின்றுவிட்டேன்.
சற்று நேரம் கழித்து எனக்குப் பின்னால் காலடி சத்தம் கேட்டது. என்னால் திரும்பிப் பார்க்க முடியவில்லை.
“மீனா!” கிருஷ்ணன் நெருங்கி வந்து மென்மையான குரலில் மதுரமாக அழைத்தான். பக்கவாட்டில் திரும்பினேன். விழிகளை உயர்த்தி அவனைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதுவும் சாத்தியப்படவில்லை. அவன் கைகள் என் தோள்கள் மீது படிந்தன. சட்டென்று அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டேன். அவன் இதழ்கள் என் வகிட்டில் மென்மையாக பதிந்தன.
“மீனா!” இரண்டாவது முறை அழைத்தான். அது வெறும் அழைப்பாக இல்லை. மீனா என்ற அந்த இரண்டு எழுத்துகளில் அவனுடைய எதிர்காலமே அடங்கியிருப்பது போல், சுவர்க்கத்தை எட்டிவிட்டது போல் அவன் குரல் ஒலித்தது.
தோட்டத்தில் ஒவ்வொரு மரத்திலிருந்தும், கிளையிலிருந்தும் “மீனா.. மீனா …” என்று அவன் குரல் எதிரொலிப்பது போல் தோன்றியது. உள்ளத்தாலும், உடலாலும் அந்த அழைப்பில் கரைந்து போய்க் கொண்டிருப்பது போல் அவன் அணைப்பில் என்னையே மறந்து விட்டேன்.
முற்றும்.
—
திண்ணை ஆசிரியர் குறிப்பு:
தெலுங்கில் புகழ்பெற்ற எழுத்தாளரான யத்தனபூடி சுலோச்சனாராணி அவர்களின் இந்த புகழ்பெற்ற நாவலை மிக அருமையாக தமிழ்ப்படுத்தி திண்ணை வாகசர்களுக்கு அளித்த கௌரி கிருபாநந்தனுக்கு திண்ணை சார்பாகவும் திண்ணை வாசகர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
மொழிபெயர்ப்பு என்ற உணர்வே இல்லாமல் அழகுதமிழில் மொழிபெயர்த்து திண்ணையில் தொடராக அளித்த கௌரி கிருபாநந்தன் மென்மேலும் புகழ்பெற வாழ்த்துகிறோம்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன
கௌரி கிருபாநந்தனின் மின்னஞ்சல் முகவரி tkgowri@gmail.com
–
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 22
- பரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)
- முள்பாதை 61 (இறுதி அத்யாயம்)
- தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் கனடாவில் மறைவு
- விட்டுச் செல்லாதீர்
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம்
- அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழா
- நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு
- மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ் நூற்கள் வெளியீடு
- இனம் இனத்தோடு…!
- விபரீத கரணி
- சிறிய சிறகு
- மகரந்தங்களில் தேனுண்ணும் வண்டுகள்
- இந்தியன்
- தேநீர் விரல்கள்
- வளையல் துண்டுகளின் காட்சி
- உயிர் நீர்
- ஊறுக்காய் குறிப்பு!
- இரு மிருகங்கள், ஒரு சமன்புள்ளி
- ஆழிப்பேரலை
- என்னில் நிறைய
- தொடர்பில் இருப்போம்
- இவையெல்லாம் அழகுதான்
- பனிப்பிரதேச பேரழகி!
- விலகாத உறவு…
- M.ராஜா கவிதைகள்
- சாதாரண ஒரு சராசரி ஈயின் கதை
- வன்முறை 11
- நீங்க போட்ட எட்டு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -10
- வெவ்வேறு சிறகுகள்…
- கவனமுடன் படிக்க வேண்டிய நூல்…- விடுதலை -இஸ்லாமியப் பெண்ணியம் நூல்
- ராகுல் காந்திக்கு திறந்த ஒரு கடிதம்
- விளக்கு விருது திலீப் குமாருக்கு வழங்கப் படுகிறது : நடுவர்கள் குறிப்பு
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 9 Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர
- எதிர்காலம்
- கண் திறக்கும் தருணம்..
- எங்கள் தெரு புளியமரம்!
- சமத்து
- எனதாக நீயானாய்
- திகட்டும் இசை
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -4)
- கணினி மேகம் (cloud computing) பகுதி 1
- அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (1906 – 2005)
- தமிழின் செம்மொழித் தகுதிகள்
- இவர்களது எழுத்துமுறை – 20 பாலகுமாரன்