தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்
email id tkgowri@gmail.com
காலையில் பெரிய பெரிய சட்டுவங்களும், கரண்டிகளுமாக நான்கு சமையல் காரர்கள் வந்து சேர்ந்ததும் வீட்டில் சந்தடி தொடங்கிவிட்டது. நாளை நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்திற்காக இன்றே வீட்டில் பட்சணங்களை, இனிப்பு வகைகளை தயாரிக்க அம்மா முடிவு செய்தாள். சோபாவில் படுத்திருந்த நான் சோம்பலை முறித்துக் கொண்டே எழுந்து கொண்டேன். தலைமை சமையல்காரர் ஜமீந்தார் வீட்டுக் கல்யாணத்தில் தான் சமைத்தபோது பாராட்டி தங்கப்பதக்கம் கொடுத்த கதையை சொல்லிக் கொண்டிருந்தார்.
“பேச்சு அப்புறம். வேலை சீக்கிரம் ஆகும்படியாக பாருங்கள்.” அம்மா மாமியிடம் ஆணையிடுவது காதில் விழுந்தது.
எழுந்து கொல்லைப்புறம் வந்தேன். ஏற்கனவே அங்கே பெரிய அடுப்புகளில் பட்சணங்கள் தயாரிக்கத் தொடங்கி விட்டார்கள். அம்மா குளியல் அறையில் இருந்தாள். சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். மாமி வேலை மும்மரத்தில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள்.
“மாமி! நீங்க ராஜியை தாம்பரத்திற்கு..” பாதியில் நிறுத்தினேன்.
மாமி அதைக் கேட்டதும் கண்காள சுழற்றி “எங்கேயும் போகலை. நேற்று இரவு அம்மா தூங்குவதற்கு முன் என்னை அழைத்து தற்சமயம் அந்தப் பெண் இங்கேயே இருக்கட்டும் என்று சொன்னாங்க. எனக்கும் அதுதான் சரி என்று பட்டது. இதுபோன்ற குள்ளநரிகளை நம் கண் முன்னாலேயே வைத்துக் கொள்வது நல்லது” என்றாள்.
ஏறத்தாழ ஒரு மணி நேரம் கழிந்தது. அப்பா காபிக்காக டைனிங் ரூமுக்கு வந்த போது நான் கொல்லைப்புறமும், அவர் மாடிக்குப் போனால் கீழேயே இருந்து கொண்டும் எப்படியே அவரை நேருக்கு நேர் சந்திக்காமல் தப்பித்துக் கொண்டேன். அம்மா அப்பாவிடம் கேட்டபடி ஏதோ லிஸ்ட் எழுதிக் கொண்டிருந்தாள். நான் மெதுவாக ராஜி இருந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனேன். ராஜி கட்டில்மீது அமர்ந்திருந்தாள். கதவு திறந்த சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட்டாள். அருகில் சென்ற பிறகும் என் வருகையை கவனிக்காதது போல் உட்கார்ந்திருந்தாள். தோளில் கையைப் போட்டு “ராஜி!” என்று நயமான குரலில் அழைத்தேன். வேகமாக என் கையை தள்ளிவிட்டு என் பக்கம் திரும்பினாள். “அண்ணி! கடைசி தடவையாக கேட்கிறேன். என்மீது கடுகளவு பிரியம் இருந்தாலும் மாமியிடம் நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டு உடனே என்னை மெலட்டூருக்கு அனுப்பிவிடு. அண்ணன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நீ எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. இங்கே நடந்ததை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.” சொல்லும்போதே அவள் விழிகளில் நீர் நிறைந்து விட்டது.
“இன்று ஒருநாள் மட்டும் பொறுமையாக இருந்தாய் என்றால் நாளை மாலையில் யாரும் எதுவும் சொல்லாமலே எல்லோருக்கும் எல்லாமே தெரிந்து விடும் ராஜி.”
“இந்த நரகத்தை இன்னும் இருபத்திநான்கு மணிநேரம் நான் பொறுத்துக்கொள்ள வேண்டும். அப்படித்தானே. சரி உன் விருப்பம். இனி இந்த வீட்டில் நான் பச்சைத் தண்ணிர் கூட தொட மாட்டேன். அதை நீ நன்றாக நினைவில் வைத்துக்கொள்.”
“ராஜி!”
“இத்தனை நாளும் நீ என்னிடம் காட்டிய பிரியம் எல்லாம் உண்மை என்று நினைத்தேன். அதெல்லாம் வெறும் நடிப்பு என்று இப்போ எனக்குப் புரிகிறது. அப்பாவியான என்னை ஏமாற்றி உன் நாடகத்தில் பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டாய். அதனால்தான் அண்ணனுக்கு உங்களைக் கண்டால் அவ்வளவு வெறுப்பு.”
ராஜி என்னை நேராக பார்த்துக் கொண்டு இப்படிச் சொன்னதும் என் இதயத்தில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. ஒருநிமிடம் வாயில் வார்த்தை வரவில்லை. திடீரென்று ஆவேசம் பொங்கிக் கொண்டு வந்தது. முதலநாள் இரவு கிருஷணனை சந்தித்து பேசி விவரங்களை எல்லாம் சொல்வதற்காக வாயைத் திறக்கப் போனேன்.
திருநாகம் மாமி பரபரப்புடன் வந்து “சின்னம்மா! உங்களுக்குப் போன் வந்திருக்கு” என்றாள்.
“எனக்கா?” விருட்டென்று திரும்பியவள் மாமியையும் தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் போன் அருகில் சென்றேன். “ஹலோ!” உற்சாகத்துடன் அழைத்தேன்.
“ஹலோ!”
மறுமுனையில் ஒலித்த குரலை கேட்டதும் என் உற்சாகம் அப்படியே அடங்கிவிட்டது. போன் செய்தது கிருஷ்ணன் இல்லை, சாரதி.
“மீனா! உன்னிடம் அவசரமாகப் பேச வேண்டும். இங்கே வர முடியுமா?”
“நானா? நீங்களே இங்கே வரலாமே?”
“ஊஹ¤ம். அங்கே எல்லோரும் இருப்பார்கள். பேச முடியாது.”
“அவ்வளவு அவசரமான விஷயமா?”
“ரொம்ப அவசரம்.”
“அப்படி என்றால் மம்மியிடம் கேட்கிறேன்.” தேடப்போன மூலிகை காலில் தட்டுப்பட்டது போல் இருந்தது. நானே சாரதியிடம் போவதாக இருந்தேன். அம்மா அப்பா கடைத்தெருவுக்குப் போய்விட்டு வருவதற்குள் சாரதியை அழைத்துக்கொண்டு கிருஷ்ணனிடம் போய்விட்டுத் திரும்பி வந்து விடவேண்டும்.
“மம்மியைக் கூப்பிடு. நானே கேட்கிறேன்” என்றான் சாரதி. அவன் தோரணை இன்று ஏனோ ரொம்ப அதிகாரமாக இருந்தது.
மாடியில் இருந்த அம்மாவுக்கு திருநாகம் மாமி மூலமாக செய்தி சொல்லிவிட்டேன். அம்மா வேகமாக இறங்கிவந்து போனில் பேசினாள். சாரதி என்ன சொன்னானோ தெரியாது. அம்மாவின் முகம் மலர்ந்தது. போனை வைத்ததும் என் பக்கம் திரும்பி “ஒன்பது மணிக்கெல்லாம் காரை அனுப்பி வைப்பானாம். நீ ரெடியாக இரு. நேற்று வாங்கிய புடவை நன்றாக இல்லையாம். வேறு புடவை வாங்கப் போகிறானாம். கூட அவனுடைய நண்பனும், அவன் மனைவியும் வருகிறார்களாம்” என்றாள்.
சரி என்பது போல் தலையை அசைத்தேன்.
மாடிக்குப் போக போனவள் படியருகில் நின்று திரும்பினாள். “எந்தப் புடவையை கட்டிக் கொள்ளப் போகிறாய்?”
“எதை கட்டிக் கொள்ளட்டும்?”
“அந்த ஆலிவ் க்ரீன் ஜார்ஜெட் புடவையை உடுத்திக்கொள்” என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். இடி விழுந்தாலும், நில நடுக்கம் ஏற்பட்டாலும் சரி. அம்மா என்னுடைய டிரெஸ் விஷயத்தை ஒரு நாளும் மறக்க மாட்டாள். இருபத்தி நான்கு மணி நேரமும் நான் தந்தச் சிலையைப் போல் தென்பட வேண்டும் என்பத அம்மாவின் தவிப்பு. கடந்த காலத்தை அலசி பார்த்தால் எனக்குப் பிடித்த ஆடைகளை அணிந்து கொண்டாற்போல் ஒரு நிகழ்ச்சியும் எனக்கு நினைவு இல்லை. இது போன்ற எத்தனையோ விஷயங்கள் ஒன்றாக சேர்ந்து அம்மாவுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்புக்கு விதையாக இருந்ததோ என்னவோ.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என் விருப்பமின்மையை தயக்கமில்லாமல் அம்மாவுக்கு தெரிவித்து விட வேண்டுமென்று நினைப்பதும், கடைசியில் எனக்குள்ளேயே விழுங்கிக் கொள்வதும் வழக்கமாகிவிடது. திருமணம் என்பது எனனுடைய கடைசி முயற்சி. இந்த முயற்சியில் வெற்றி பெறாவிட்டால் இனி ஒரு நாளும் சாதிக்க முடியாது. இது எனக்கு கானல்நீராக இருக்கக் கூடாது. வாழ்க்கையில் அம்மாவை வெறுக்கும் நிலைமை எனக்கு என்றுமே வரக்கூடாது. இதுதான் என்னுடைய பிரார்த்தனை.
சாரதி அனுப்பி வைத்த கார் சரியாக ஒன்பது மணிக்கு வந்தது. ஏற்கனவே தயாராக இருந்த நான் உடனே கிளம்பிப் போனேன். என் மனதில் ஆயிரம் எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன. சாரதி என்னிடம் என்ன பேசப் போகிறான்? ராஜேஸ்வரி விஷயத்தில் மன்னிப்பு கேட்கப் போகிறானா? ஒன்று மட்டும் உண்மை. அவன் சொல்லப் போகும் விஷயம் எதுவாக இருந்தாலும் எனக்கு ஏமாற்றமாக இருக்கப் போவதில்லை. அவன் சொல்லி முடித்த பிறகு கிருஷ்ணனிடம் அழைத்துப் போகிறேன். என் வாழ்க்கையில் மிகவும் பிரியமான இந்த இரண்டு பேரும் நேருக்கு நேர் பேசிக்கொண்டு விட்டால் எனக்கு நிம்மதி. இந்தக் காரியத்தை நான் முன்பே செய்திருக்க வேண்டும். சில விஷயங்கள் நமக்கு தாமதமாகத்தான் தோன்றும்.
நான் போய் சேர்ந்த போது சாரதி படுக்கை அறையில்தான் இருந்தான். காலை ஒன்பதரை மணி ஆன பிறகும் அவன் இன்னும் படுக்கையை விட்டு எழுந்துகொள்ளவில்லை. இரவு உடையை மாற்றவில்லை. இரவு முழுவதும் தூங்கவில்லை போலும். கண்கள் சிவந்திருந்தன. ஒருநாள் ஷேவ் பண்ணிக் கொள்ளவில்லை என்றால் அவன் முகம் கரடியை நினைவுப் படுத்துவது போல் பயங்கரமாக இருக்கும் என்று முதல் முறையாகத் தெரிந்து கொண்டேன்.
அறைக்குள் அடியெடுத்து வைத்தேன். அவன் கட்டிலை விட்டு எழுந்துகொள்ளும் முயற்சி கூட செய்யவில்லை. எதிரே இருந்த நாற்காலியைக் காண்பித்து “உட்கார்ந்துகொள்” என்றான். என் முகத்தில் பிரதிபலித்த உணர்வுகளைப் படித்து விட்டவன் போல் தாடையைத் தடவிக் கொண்டே “உடம்பு சரியாக இல்லை” என்றான்.
“ஜுரமா?” நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே கேட்டேன்.
“இல்லை. பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த அதிர்ச்சியில் எனக்கு மூளையே கலங்கிவிட்டது.”
நான் வியப்படைந்தவள் போல் பார்க்கவில்லை. ராஜேஸ்வரி போய் விட்டது அவனுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். நாற்காலியில் உட்கார்ந்தபடியே அறை முழுவதும் பார்வையைச் சுழற்றினேன். எங்கு திரும்பினாலும் ஐஸ்வரியத்தின் வெளிப்பாடு தென்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அத்தனை விலை உயர்ந்த பொருட்களுக்கு நடுவில் ஏனோ அவன் மட்டும் பொருத்தமாக இல்லை.
“மீனா! உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும்” என்றான்.
தாமதம் செய்யாமல், சுற்றி வளைக்காமல் அவன் நேராக விஷயத்திற்கு வந்தது சந்தோஷமாக இருந்தது.
“நாளைக்கு நமக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போவதிலை.”
சட்டென்ற நிமிர்ந்து பார்க்கப் போனவள், என் முகத்தில் தாண்டவமாடும் சந்தோஷத்தை அவன் கண்டுபிடித்து விடக்கூடும் என்ற பயத்தில் எப்படியோ கட்டுப்படுத்திக் கொண்டேன். உண்மையைச் சொன்னால் இவ்வளவு நல்ல செய்தியை இதற்கு முன் நான் கேட்டதே இல்லை.
“இந்த நிச்சயதார்த்தம் நடக்காமல் நிறுத்த வேண்டிய பொறுப்பு உன்னுடையதுதான்.” சிகரெட் பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டே சொன்னான்.
“நானா?”
“ஆமாம். நீயேதான்.”
“என்னால் என்ன செய்ய முடியும்?”
“இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லு. வேறு யாரையாவது காதலிப்பதாக சொல்லு.”
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் என் கன்னத்தில் வேகமாக ரத்தம் பாய்ந்தது.
அவன் மேலும் சொல்லிக் கொண்டிருந்தான். “இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டு. எது வேண்டுமானாலும் செய். இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்து.” அவன் குரலில் வேண்டுகோள் இல்லை. அதிகாரத்துடன் ஆணையிடுவது போல் இருந்தது.
“அந்தக் காரியத்தை நீங்களே செய்யலாமே?”
“முதலில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் ராஜேஸ்வரியை நீங்கள் தயவு தாட்சிண்யம் இல்லாமல் துரத்திவிட்ட பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். உங்க அம்மா எட்டடி பாய்ந்தால் என்னால் பதினாறடி பாய முடியும். அது மட்டும் இல்லை. நானாக நிறுத்தினால் எனக்குக் கொஞ்சம் நஷ்டம் ஏற்படும்”
“அப்படி என்றால்?” அவன் தோரணை எனக்குப் புரியவில்லை.
“அதாவது கடைசி நிமிடத்தில் நான் வேண்டாமென்று மறுத்தால் உங்களுடைய மானமரியாதை கப்பலேறிவிடும். அதனால் உன் பெற்றோருக்கு என் மீது கோபம் ஏற்படும். என்மீது பகை தீர்த்துக் கொள்ளாமல் விடமாட்டார்கள். டில்லியிலிருந்து நான் இங்கே எப்படி வந்தேனோ, யாருடைய செல்வாக்கினால் என்னுடைய ஸ்டேட்டஸ் இரு மடங்காகிவிட்டதோ உனக்குத் தெரியாதது இல்லை. உங்க அம்மா அப்பா சும்மா ஒன்றும் எனக்கு உதவி செய்யவில்லை. வருங்கால மாப்பிள்ளை என்ற எதிர்பார்ப்பில் என்னை தலையில் வைத்துக் கொள்ளாத குறையாக கொண்டாடினார்கள். இந்த நேரத்தில் நான் உன்னை மறுத்தால் சும்மா விடுவார்களா? மீனா! இந்தக் காலத்தில் சுயநலம் இல்லாமல் யாரும் உதவி செய்ய மாட்டார்கள். அதிலும் உங்க அம்மா! அந்த அம்மாள் நினைத்துக்கொண்டால் எது வேண்டுமானாலும் செய்வாள். அவர்களுடைய பகையை ஏற்படுத்தி கொ¡ண்டு வாழ்க்கையை நிலைகுலையச் செய்துகொள்ளும் அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.”
கண் இமைக்கவும் மறந்து போனவளாக அவன் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் அந்த நேரத்தில் நாகரீகம், பண்பாடு என்ற முக்காட்டை நீக்கிவிட்டு உண்மையான சொரூபத்தைக் காட்டுவது போல் இருந்தது.
சாரதி மேலும் சொன்னான். “நான் இப்படி கேட்டுக் கொண்டதில் என்னுடைய சுயநலம் மட்டுமே இல்லை. உன்னுடைய நன்மையும் இருக்கிறது. எப்படி என்று கேட்கிறாயா? நிச்சயதாரத்தம் வரையிலும் வந்த திருமணம் நின்று போனால் என்னை விட பெண் ஆகிய உனக்குத்தான் நஷ்டம் அதிகம். உனக்கு வேறு ஒரு வரன் கிடைப்பது சுலபம் இல்லை.”
“இது மிரட்டலா?” நேராகவே கேட்டுவிடேன்.
“எப்படி நினைத்துக் கொண்டாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை.” அலட்சியமாக வந்தது பதில்.
“திடீரென்று எங்கள் மீது இவ்வளவு பகை ஏன்?”
“சொன்னேனே? ராஜேஸ்வரியை நீங்கள் கருணையே இல்லாமல் துரத்திவிட்டதற்கு.”
“இந்த விஷயத்தை நீங்களே அம்மாவிடம் நேராக சொல்லலாமே? இந்தக் கோழைத்தனம் எதற்கு?”
“நான் எதற்காக உங்களை விட்டுவைக்கணும்? என்னை எதுவும் செய்ய முடியாமல் அப்பாவியான ராஜேஸ்வரியின் மீது உங்களுடைய சாமர்த்தியத்தைக் காட்டவில்லையா? எந்த வலையை வீசி நீங்க என்னை சி¨ற்படுத்த பார்த்தீங்களோ அதே வலையில் உங்களைச் சிக்க வைப்பேன்.”
நான் எழுந்துகொண்டேன். பசுமாட்டுத் தோல் போர்த்திய புலியைப் போல் சாரதியிடம் தென்பட்ட இந்த துணிச்சல் என்னை திகைப்பில் ஆழ்த்திவிட்டது. திட்டம் தீட்டுவதில் இவன் அம்மாவையும் மிஞ்சிவிடுவான் போல் இருந்தது. இதைவிட ராஜேஸ்வரியிடம் தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தி உதவி செய்யச் சொல்லி என்னிடம் கேட்டிருந்தால் எத்தனையோ சந்தோஷப்பட்டிருப்பேன்.
சாரதி என்னை நேராக பார்த்துக் கொண்டே சொன்னான்.
“நீ அனாவசியமாக ஆவேசப்படாதே. இதில் உனக்கு எந்த அநியாயமும் நேரப் போவதில்லை.” அவன் குரல் திடீரென்று பணிவாக மாறியது. “நாம் சேரி ஜனங்கள் இல்லையே கருத்து வேற்றுமை வந்ததும் நடுத்தெருவில் நின்றுகொண்டு சண்டையைப் போடுவதற்கு? கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எது நடந்தாலும் மூன்றாம் பேருக்குத் தெரியாமல் ரகசியமாக இருக்கணும்.” ரகசியம் என்ற வார்த்தையை அவன் உச்சரித்த விதத்தில் அளவுக்கு மீறி அழுத்தமும், ஏளனமும் கலந்திருந்தன.
எனக்கும் அவன் எரிச்சலை மேலும் தூண்டி விடவேண்டும் என்று தோன்றியது. “நீங்க சொன்னதுபோல் நான் செய்யவில்லை என்றால்?”
“நான் சில விஷயங்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அவை மட்டும் வெளிவந்தால் உங்க அம்மா அப்பாவால் இனி தெருவில் தலைநிமிர்ந்து நடக்க முடியாது.”
“உங்க உத்தேசம்தான் என்ன?”
“நீயாகவே மரியாதையாக விலகிக் கொண்டால் நல்லது. இல்லாவிட்டால் கடைசி நிமிடத்தில் உன்னை மறுத்து விடுவேன்.”
“என்ன காரணம் சொல்ல முடியும் உங்களால்?” நிதானமான குரலில் கேட்டேன்.
“எது வேண்டுமானாலும் என்னால் சொல்ல முடியும். உன் நடத்தை சரியில்லை என்றும், நேற்று ஜவுளிக் கடையில் பார்த்த சிறுவயது நண்பனுக்கும் உனக்கும் தொடர்ப்பு இருக்கிறது என்றும் சொல்லுவேன். உங்க அம்மாவின் பெயரைக் கேட்டாலே எரிந்து விழும் என்னுடைய அத்தை மிஸெஸ் ராமன் இந்த விஷயத்தில் எனக்கு முழு ஒத்துழைப்பு தருவாள்.”
பற்களை இறுக கடித்து ஆவேசத்தை அடக்கிக் கொண்டேன். இடியட்! கையை நீட்டி கன்னத்தில் பளாரென்று அறைய வேண்டும் போல் இருந்தது. எவ்வளவு ஆணவம்! செத்தாலும் இவன் சொன்னது போல் செய்யக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். தலையை உதறிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தேன்.
“ஆகட்டும். அதையும் பார்த்து விடுவோம். உங்களால் எதுவும் செய்ய முடியாது. எங்க குடும்ப மானம் அக்னியைப் போன்றது. அதற்குத் தீங்கு செய்ய நினைத்தவர்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகி விடுவார்களே ஒழிய எங்களுக்கு எந்தக் குறையும் வராது. அதை நீங்களே புரிந்து கொள்வீங்க. வருகிறேன்.” விருட்டென்று திரும்பி வேகமாக வாசலை நோக்கி நடந்தேன்.
“மானம்! மரியாதை! ரொம்ப மானமுள்ள குடும்பம். பாவம்! சிறுவயது நண்பன் என்று சொல்லப்பட்ட நபருடன் மகள் இரவு முழுவதும் ஹோட்டல் ரூமில் தங்கினால் தந்தை நேரில் வந்தும், கூட அழைத்துப் போக முடியாத கையாலாகாதவன்.”
இந்த வார்த்தைகள் பின்னாலிருந்து இடிபோல் என்னை தாக்கின. ஒருநிமிடம் என் கண்கள் இருண்டுவிட்டன. வாசற்படியை தாண்டப் போனவள் தள்ளாடியப் சட்டென்று கதவைப் பிடித்தக் கொண்டேன்.
“மானமாம்! மரியாதையாம்!” பின்னாலிருந்து அவன் குரல் ஏளனமாகக் கேட்டது. மெதுவாக என்னுள் இருந்த சக்தியெல்லாம் திரட்டிக் கொண்டு பின்னால் திரும்பினேன்.
“என்ன சொல்றீங்க?”
“நேற்று இரவு நீ தனியாக தாஜ்ஹோட்டலில் அந்த கிருஷ்ணனின் அறைக்குப் போகவில்லையா? அரைமணி நேரம் கழித்து உங்க அப்பா வந்தும் உன்னை உடன் அ¨ழ்துக் கொண்டு போக முடியவில்லை என்பது பொய் இல்லையே? இரவு முழுவதும் அவனுடன் இருந்துவிட்டு விடியற்காலையில் வீட்டுக்கு திரும்பிப் போனதை மறுக்க முடியுமா உன்னால்?”
“ஆமாம். ஆனால் இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?”
“எப்படி தெரியுமா? உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ராஜேஸ்வரி போய்விட்டாள் என்று தெரிந்ததும் மூளை கலங்கிவிட்ட நிலையில் ஸ்டேஷனுக்குப் போனேன். ரயில் ஏற்கனவே போய் விடிருந்தது. உடனே வீட்டுக்கு வருவதற்கு பிடிக்காமல், தனியாக இருந்தால் பைத்தியம் பிடித்து விடுமோ என்ற பயத்தில் தாஜ்ஹோட்டலில் தங்கியிருந்த நண்பனிடம் போனேன். அந்த நண்பனின் அறை சரியாக கிருஷ்ணன் தங்கியிருந்த அறைக்கு நேர் எதிரில் இருந்தது என்னுடைய அதிர்ஷ்டம்.”
“பின்னே அப்போதே ஏன் என்னிடம் கேட்கவில்லை?” பற்களை கடித்தக் கொண்டே கேட்டேன்.
“எதுக்காக கேட்கணும்? ராஜெஸ்வரி விஷயத்தில் நீங்க என்னிடம் கேட்டீங்களா? ஒன்றுமே தெரியாதது போல் நடித்தீங்களே. மீனா! முன்னாடியே சொல்லி விடுகிறேன். நாளை இந்த நிச்சயதார்த்தம் நடக்கக்கூடாது. உங்க அம்மாவிடம் என்ன சொல்லுவாயோ, என்ன செய்வாயோ உன் இஷ்டம். நீ எதுவும் செய்யவில்லை என்றால் நாளை மாலை இந்த நிகழ்ச்சியை வெளியில் சொல்லி பத்து பேருக்கு முன்னால் உங்களை தலை குனியும்படி செய்வேன்.” சாரதி கைப்பிடியை இறுக்கி வேகமாக கட்டில்மீது குத்தினான்.
வாசலை நோக்கித் திரும்பினேன். என் கண் முன்னால் பலவிதமான காட்சிகள் வேகமாகச் சுழன்றன. எனக்குத் தெரியும். சாரதி எங்கள்மீது இருக்கும் கோபத்தில் சொன்னது போல் செய்து காட்டுவான். அம்மாவை எதிர்த்து நிற்க முடியாத கோழை, என்னை மிரட்டுகிறான். ஓட்டமும் நடையுமாக வெளியேறிவள், வாசலில் நின்றிருந்த காரில் வந்து உட்கார்ந்து கொண்டேன். பக்கத்திலேயே நின்றிருந்த டிரைவர் என்னைப் பார்த்ததும் டிரைவிங் வீட்டில் வந்து அமர்ந்துகொண்டான்.
“காரை எடு” என்றேன். என் நெற்றியில் வியர்வை அரும்பியது. காற்றே இல்லாதது போல் மூச்சுத் திணறியது. வீட்டுப் பக்கம் காரை திருப்பப் போன டிரைவரிடம் “வீட்டுக்கு வேண்டாம். தாஜ்ஹோட்டலுக்குப் போகணும்” என்றேன்.
ஹோட்டல் வளாகத்தில் கார் நுழைந்ததும் ஏற்கனவே ஹேண்டில் மீது கையை வைத்து தயாராக இருந்த நான் சட்டென்று கதவைத் திறந்து இறங்கினேன். “எனக்காக காத்திருக்க வேண்டாம். நீ வீட்டுக்குப் போய் விடலாம்” என்று சொல்லிவிட்டு வேகமாக ஹோட்டலுக்குள் ஓடினேன். லிப்டுக்காக காத்திருக்கும் பொறுமை இல்லாமல் படிகளில் ஏறினேன். பயத்தினால், பதற்றத்தினால் என் நாக்கு உலர்ந்துவிட்டது.
கிருஷ்ணனின் அறையில் அடியெடுத்து வைக்கும் போது மூச்சு இரைத்ததில் வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை. அறைக்கதவுகள் திறந்துதான் இருந்தன. யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திவிடு வியப்புடன் எழுந்த வந்து “மீனா!” என்றான்.
முன்பின் அறிமுகமில்லாத நபரும் இருந்ததால் சங்கடத்துடன் பார்தேன். அதை உணர்ந்து கொண்ட கிருஷ்ணன் “இவன் என் பிரண்ட் மது. மதூ! மீனா” என்று அறிமுகப்படுத்தினான்.
“ஓஹ்!” ஏற்கனவே என்னைப் பற்றி கேள்விப்பட்டிருப்பது போல் அவன் எழுந்த நின்று எனக்கு வணக்கம் தெரிவித்தான். நான் அவனுக்குப் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை. கிருஷ்ணனை பார்த்துக் கொண்டே “நான் உன்னிடம் அவசரமாக பேசணும்” என்றேன்.
கிருஷ்ணன் கலவரத்துடன் பார்த்தான். என் பேச்சு அவனுக்கு வித்தியாசமாக தோன்றியிருக்க வேண்டும்.
“நான் வெளியில் போகட்டுமா?” மது கேட்டான்.
“தேவையில்லை. நீ உட்கார். மீனா! உள்ளே வா” என்று கிருஷ்ணன் டிரஸ்ஸிங் ரூமுக்கு வழி நடந்தான். நான் உள்ளே வந்ததும் “என்ன விஷயம்?” என்றான்.
“இரவு முழுவதும் நான் இங்கே இருந்த விஷயம் சாரதிக்குத் தெரிந்து போய்விட்டது.”
கிருஷணனின் கண்கள் தீட்சண்யமாயின.
“நாளை நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தம் நடக்காது என்று சொல்கிறான்.”
“அந்த விஷயத்தை உங்க அம்மாவிடம் சொன்னானா?”
“ஊஹ¤ம். என்னை அழைத்துச் சொன்னான். சொன்னான் என்பதைவிட மிரட்டினான் என்று சொன்னால் சரியாக இருக்கும். இனி நீ தாமதம் செய்தால் பிரயோஜனப்படாது. நாளை மாலைக்குள் நம்முடைய திருமணம் நடக்கும் விதமாக பார்க்கணும்.”
கிருஷ்ணன் நெற்றி புருவம் லேசாக உயர்ந்தது.” இவ்வளவு சீக்கிரமாகவா? எப்படி சாத்தியப்படும்?”
“நீ நினைத்தால் சாத்தியம் ஆகாதது எதுவும் இல்லை. நாளை மாலைக்குள் நான் உன்னுடையள் ஆகவில்லை என்றால் இனி ஜென்மத்தில் அது நடக்காது.”
“மீனா! நீ ரொம்ப ஆவேசத்தில் இருக்கிறாய்.”
“இது ஆவேசம் இல்லை. பயம்! உனக்குப் புரிவது போல் எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. மேற்கொண்டு வாதம் வேண்டாம் ப்ளீஸ்.”
“அப்படி என்றால் சரி. இன்று மாலையே மாமாவிடம் பேசுகிறேன்.”
“அப்பாவிடமா? எதற்கு?”
“எதற்காக என்றால்?”
“அப்பாவிடம் நம் விஷயத்தைச் சொல்லப் போகிறாயா?”
“சொல்லாமல் எப்படி முடியும்? அம்மாவுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. பிறகு சமாதானப்படுத்திக் கொள்கிறேன். ஆனால் மாமாவுக்குத் தெரியாமல் எப்படி?”
“யாருக்கும் தெரியக்கூடாது. முக்கியமாக அப்பாவுக்கு அசலுக்கே தெரியக்கூடாது. இது என்னுடைய வேண்டுகோள். இல்லை … இல்லை. நிபந்தனை. நீ அப்பாவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தால் நான் உன் சுற்று வட்டாரத்திலேயே இருக்க மாட்டேன்.”
கிருஷ்ணன் வியப்படைந்தவன் போல், என் முகத்தில் தென்படும் உணர்வுகளைப் படிக்க முயலுவது போல் நின்று விட்டான்.
நான் அவன் கையை என் கையில் எடுத்துக்கொண்டு வேண்டுவது போல் சொன்னேன். “உன் தயக்கங்களை, சந்தேகங்களை ஒதுக்கிவிட்டு நான் சொன்னது போல் செய்வாய் இல்லையா?”
ஒருநிமிடம் என் முகத்தைக் கூர்ந்து பார்த்தவன் கைகளை மென்மையாக விடுவித்தக் கொண்டு ஜன்னல் அருகில் போய் நின்று கொண்டான்.
ஐந்து நிமிடங்கள் கழிந்தன. நான் அவனருகில் சென்று தோள்மீது கையை வைத்தேன். “கிருஷ்ணா! நீ முடிவு எடுக்க தாமதம் ஆக ஆக என் பயம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நானாக தேர்ந்தெடுத்து உன் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக அடியெடுத்து வைக்கிறேன். எதிர்காலத்தில் நினைவுப் படுத்திக் கொண்டால் மகிழ்ச்சி தரக்கூடிய நினைவாக இந்த நாள் இருக்கட்டும்.”
அவன் பேசவில்லை. மீண்டும் நானே சொன்னேன். “இன்னும் என்ன சந்தேகம்? நாம் பேச வேண்டியதெல்லாம் நேற்று இரவே பேசி முடித்துவிட்டோம் என்று நான் நம்புகிறேன். என் நம்பிக்கை வீண்போகாது இல்லையா?”
கிருஷ்ணன் அப்போதும் பதில் சொல்லவில்லை. எனக்கு ரோஷம் வந்து விட்டது. “பதில் சொல்லு கிருஷ்ணா! தேடி வந்த பெண் என்பதால் இளக்காரமாகிவிட்டேனா? மனம் திறந்து வெளிப்படையாக பேசியதால் என்னை வெட்கம் கெட்டவள் என்று நினைக்கிறாயா?”
கிருஷ்ணன் விருட்டென்று என் பக்கம் திரும்பினான். அவன் முகம் பிரகாசமாக இருந்தது. என் இரு கைகளையும் சேர்த்து பிடித்துக் கொண்டான். “மீனா! நீ என் கண்ணில் பட்ட போதெல்லாம் சூறாவளிக் காறாக என்னை திக்குமுக்காட வைத்துக் கொணடுதான் இருக்கிறாய். சவால்களை சந்திப்பது எனக்கு ரொம்ப பிடித்த விஷயம். ஆனால் இவ்வளவு பெரிய சவாலாக நீ என்னுடைய வாழ்க்கையில் வருவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை.”
“பயப்படுகிறாயா?”
“உண்மையிலேயே பயப்படுகிறேன். எதிர்காலத்தில் என்றாவது நீ அவசரப்பட்டு இந்த முடிவுக்கு வந்து விட்டோமோ என்று நினைத்தால் அந்த நிமிடமே நான் உயிர் இருந்தும் இல்லாதவனுக்கு சமமாகி விடுவேன்.”
“நீ அப்படி உணரும் நாள் வரவே வராது. எந்த சத்தியம் வேண்டுமானாலும் செய்கிறேன்.”
“சரி, உன் விருப்பம் போலவே நடக்கட்டும்” என்றான்.
“நமக்கு நடுவில் சாட்சியாக யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா.”
“சாட்சியா? என் வார்த்தையை மிஞ்சிய சாட்சியம் வேறு என்ன வேண்டும்?”
“என் திருப்திக்காக. தவறாக நினைக்காதே. உன் நண்பனிடம் சொல்லலாம் இல்லையா?”
“இப்பொழுதுதானே யாரிடமும் சொல்லக் கூடாது என்று நிபந்தனையை வைத்தாய்?”
பிடிபட்டு விட்டது போல் பார்த்தேன். “அது வந்து…”
“எனக்குப் புரிந்து விட்டது.” கிருஷ்ணன் என் மூக்கை பிடித்து ஆட்டினான். பிறகு வா என்றபடி என் கையைப் பிடித்து வெளியில் அழைத்து வந்தான். “மதூ!” என்ற அழைத்தவன் அப்படியே நின்றுவிட்டான். காரணம் ஏற்கனவே மது அறையின் வாசலில் நின்றிருந்தான்.
“மன்னிக்கணும். நீங்க மெதுவாக பேசிக் கொள்ளவில்லை. எனக்கு முழுவதுமாகக் கேட்டது” என்றான்.
“பாதி வேலை எனக்கு மிச்சம். மதூ! மீனாவும் நானும் நாளைக்குக் கல்யாணம் செய்து கொள்வதாக முடிவு செய்திருக்கிறோம். அதற்கு சாட்சி நீதான்.” கிருஷ்ணன் என் பக்கம் திரும்பி போதுமா என்பது போல் பார்த்தான்.
“கங்கிராட்சுலேஷன்ஸ்! திருமணம் எந்த இடத்தில்?”
“அதுதான் இன்னும் முடிவு செய்யவில்லை. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ் இருக்காது.”
என் முகத்தில் தென்பட்ட ஏமாற்றத்தை கவனித்த மது உடனே சொன்னான். “ரிஜிஸ்டரார் ஆபீஸ் இல்லாவிட்டால் என்ன? இங்கிருந்து பத்து மைல் தொலைவில் அம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. அங்கே திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நல்ல படியாக அமையும் என்று சொல்லிக் கொள்வார்கள். நீங்க அங்கே போவதாக இருந்தால் என்னுடைய காரை ஏற்பாடு செய்கிறேன்.”
கிருஷ்ணன் என் பக்கம் பார்த்தான். நான் பார்வையாலேயே சம்மதம் தெரிவித்தேன். மறுநாள் காலையில் கோவிலில் சாஸ்திரபடி திருமணம் நடப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் பொறுப்பை மது ஏற்றுக் கொண்டான். கிருஷ்ணனும் அவனும் உயிர் நண்பர்கள் என்று அந்தச் சிறிது நேரத்திலேயே நான் புரிந்துகொண்டேன். மதுவை அனுப்பிவிட்டு உள்ளே வந்த கிருஷ்ணன் ஏதோ யோசனையில் இருப்பது போல் நின்று கொண்டிருந்தான்.
“வாக்குத் தவறினால் உன்னை சும்மா விடமாட்டேன்” என்றேன்.
“இன்னும் உனக்கு நம்பிக்கை வரவில்லையா? கொடுத்த வார்த்தையை மீறும் பழக்கம் என்றுமே என்னிடம் இருந்தது இல்லை. ஒருநாளும் உனக்கு ஏமாற்றம் தரமாட்டேன். சரிதானா?” என்று சொல்லிவிட்டு மேஜை அருகில் சென்று பேப்பர் பேனாவை எடுத்தக் கொண்டு ஏதோ எழுதத் தொடங்கினான்.
“என்ன எழுதுகிறாய்?”
“கடிதம் எழுதுகிறேன். ஒரு நிமிஷம் இரு. நீயே படித்துப் பார்க்கலாம்.”
காத்திருக்கும் அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை. அவனுக்கு பின்னால் நின்று கொண்டு தோள்வழியாக எட்டிப் பார்த்தேன். வேகமாக எழுதிக் கொண்டிருந்தாலும் அவனுடைய கையெழுத்து முத்து கோர்த்தாற்போல் சீராக இருந்தது.
அன்புள்ள அம்மாவுக்கு,
கிருஷ்ணன் வணக்கம் தெரிவித்துக் கொண்டு எழுதுவது. சில காரணங்களினால் இங்கே நான் மாமா மாமிக்குத் தெரியாமல் மீனாவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாகிவிட்டது. நாளைதான் திருமணம். இந்தக் கடிதம் கொண்டு வந்தவனுடன் நீ உடனே கிளம்பி வந்தால் நேரத்தோடு வந்துவிட முடியும்.
சாமிகண்ணுவை விட்டை பார்த்துக் கொள்ளச் சொல்லவும். நன்றாக யோசித்து விட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.
உங்கள் ஆசிகளை விரும்பும்
கிருஷ்ணன்.
கடிதம் எழுதி முடித்த பிறகு கிருஷ்ணன் தலையை உயர்த்தாமலேயே தோள்வழியாக கடிதத்தை நீட்டினான்.
“தேவையில்லை. படித்துவிட்டேன்.”
கிருஷ்ணன் என் பக்கம் திரும்பினான். நான் அவனுடைய தலைமுடியை கலைத்துக் கொண்டே “நீ என்னுடைய பேச்சை கேட்டதற்கு மிக்க நன்றி. வாழ்நாள் முழுவதும் உன் வார்த்தையை ஆணையாக மேற்கொள்கிறேன்” என்றேன்.
“தாங்க்யூ. ஆனால் நான் அது போன்ற நிபந்தனை எதுவும் விதிக்கவில்லையே?”
நான் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டேன். “அப்படி என்றால் இன்று இரவு நான் நிம்மதியாக தூங்குகிறேன்.”
“இந்த நிமிடம் முதல் நீ நிம்மதியாக இருக்கணும்.”
“அப்போ நான் போகட்டுமா?”
“போய் வரட்டுமா என்று சொல்லு.”
“போய் வருகிறேன். சரிதானே?”
கிருஷ்ணன் என் கையை தன் கையில் எடுத்துக் கொண்டான். “மிஸ் சைக்லோன்! கடைசி நிமிடத்தில் ஏமாற்றினாய் என்றால் சும்மா விட மாட்டேன். பத்து பேருடன் வந்து உன்னை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு போவேன்.” மிரட்டுவது போல் சொன்னான்.
நான் அவன் கையைக் கிள்ளினேன். “தங்களுக்கு அந்த சிரமத்தைக் கொடுக்க மாட்டேன். கவலைப்படாதீங்க.”
“இனி நீ கிளம்பினால், நான் செக்ரடேரியட்டுக்குப் போகணும். அங்கே எனக்குத் தெரிந்த பையன் இருக்கிறான். அவன் மூலமாக அம்மாவுக்குக் கடிதத்தை அனுப்பணும். அவன் சீக்கிரமாக போனால் அம்மா நேரத்தோடு புறப்பட முடியும்.”
கிருஷ்ணன் நான் கேட்டுக் கொண்டபடி மாமியின் வீட்டில் இறக்கிவிட்டுப் போய்விட்டான். மறுநாள் சரியாக இதே நேரத்தில் மாமியின் வீட்டில் சந்தித்துக் கொள்வதாக பேசிக் கொண்டோம்.
கிருஷ்ணன் கிளம்பிப் போன பிறகு மாமி என்னிடம் வந்தாள். “என்ன விசேஷம்? இவ்வளவு சந்தோஷமாக உன்னை இதற்கு முன் பார்த்ததே இல்லையே?” என்று கேட்டாள்.
நானும், கிருஷ்ணனும் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளப் போகும் விஷயத்தை மாமியிடம் சொன்னேன். மாமி என் தோளைச் சுற்றி கைகளை போட்டு அணைத்துக் கொண்டாள். “கள்ளி! நீ உங்க அம்மாவையே மிஞ்சி விட்டாய். விரும்பியவனை ஓசைப்படாமல் தலைப்பில் முடிந்து கொள்ளப் போகிறாயா?” என்றாள்.
நான் வீட்டுக்கு போய் சேர்ந்த போது அம்மா அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை. அம்மாவின் பாதிப்பு ஒவ்வொரு அணுவிலும் தென்பட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சூழலில் என் மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போய்க் கொண்டிருந்தது. பயமும், பதற்றமும் என்னை சூழ்ந்து கொண்டன. நான் ஏன் மறுபடியும் வீட்டுக்குத் திரும்பி வந்தேன்? மறுபடியும் கிருஷ்ணனைப் பார்க்க முடியுமா?
அம்மா அப்பாவுடன் இன்னும் யார் யாரோ சாப்பிட வந்திருந்தார்கள். நான் முன்னாடியே சாப்பிட்டதாக பெயர் பண்ணிவிட்டு எழுந்து கொண்டேன். அம்மா வீட்டுக்கு வந்ததும் வேகமாக என் அருகில் வந்தாள். “புடவை எங்கே? எந்த கலரில் வாங்கினீங்க?” என்று கேட்டாள்.
“எல்லாக் கடைகளிலும் ஏறி இறங்கி கால்வலி வந்ததுதான் மிச்சம். ஒன்று கூட பிடிக்கவில்லை. கடைசியில் நேற்று வாங்கியதே நன்றாக இருக்கு என்ற முடிவுக்கு வந்து விட்டோம்” என்றேன்.
“அழகுதான் போ. அது போகட்டும். என்னவோ போல் இருக்கிறாயே? தலையை வலிக்கிறதா?” என்றாள்.
அமாம் என்பது போல் தலையை அசைத்தேன்.
“சற்று நேரம் படுத்தக்கொள்.” ஆணையிட்டபடி சொல்லிவிட்டு கீழே போய்விட்டாள்.
அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. மனதில் ஏதோ பயம். அம்மாவின் அறைக்குப் போய் யாரும் பார்த்து விடாமல் தூக்கமாத்திரையை எடுத்து வந்து போட்டுக் கொண்டேன். அப்படியும் தூக்கம் வருவதாகத் தெரியவில்லை. வெறுமே கண்களை மூடி படுத்திருந்தேன். இரவு ரொம்ப நேரம் கழித்து அம்மா என்னுடைய அறைக்கு வந்தாள். தலையணையை சரிப்படுத்தி, தலைமாட்டில் இருந்த போர்வையை எடுத்து போர்த்திவிட்டாள். தலைமுடியைக் கோதிவிட்டு நெற்றியின்மீது மென்மையாக முத்தம் பதித்தாள். “என் செல்லம்! ரொம்ப வெகுளி.” அம்மா முணுமுணுப்பது காதில் விழந்தது.
அம்மா போய்விட்டாள். என் இதயம் பாறாங்கல்லாக கனத்தது.
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 18
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) “என்னை மயக்கியவள்” )(கவிதை -37 பாகம் -3)
- முதல்மழை
- நறுமணமான பாடலொன்று
- அகிலத் தூசியும், வாயு முகிலும் உருவாக்கும் கேலக்ஸி ஒளிமந்தைகள் (கட்டுரை: 4)
- இவர்களது எழுத்துமுறை – 17 தி.ஜானகிராமன்
- முகமூடி!
- வல்லரசு!
- நகைப்பின் ஒற்றைத் தீக்கீற்று மௌனத்தில் உருகி வழிகிறது…!!
- ஓயாத கடலொன்று..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதீர் கவிதை -26 பாகம் -1
- தாழ்ப்பாள் இல்லா கதவுகள்!
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- ரகசியங்கள்
- சரியாய் உலகில் வாழ்ந்துவிடு
- சாட்சிகளேதுமற்ற மழை
- இருட்டும் தேடலும்
- அறமே சிவம்! சிவன் சொத்து…? அலைக்கற்றை மற்றும் தொலை தொடர்பு துறை ஊழல் தொடர்பாக – ஒரு முழுகவிதையே இடக்கரடக்கலாக!
- முடிச்சு -குறுநாவல்
- ‘கண்கள் இரண்டும்…..’
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -6
- வாரிசு
- வன்முறை
- பரிமளவல்லி 22. தேறுதல்
- முள்பாதை 57
- நினைவுகளின் சுவட்டில் – (57)
- விடாது நெருப்பு
- வாங்க, மரபணு சாப்பிடுவோம்!!
- தன்னம்பிக்கை
- சருகுகள்
- எதிர்ப்படும் கையகல நீர்மை…
- ’ரிஷி’யின் கவிதைகள்
- சிங்கப்பூர் எழுத்தாளர் தக்கலை எச்.முகமது சலீமின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஹெச்.ஜி.ரசூல் கவிதை
- கொசு