முனைவர்,சி,சேதுராமன்
முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
பொருளே அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குகிறது. பொருளை வைத்துத்தான் கருத்துக்கள் தோன்றின. பொருள்கள் என்றால் அவை எவை? பணமா? வேறு எவையுமா? இவ்வுலகத்திற்கு அடிப்படையாக உள்ளதும், அதனைச் சார்ந்ததுமான பொருள்களாகும். இவை நிலத்தோற்றம், உயிர்த்தோற்றத்திற்கான அடிப்படையாக அமைந்தவையாகும். நிலம், பொழுது, நிலத்தைச் சார்ந்து வாழ்வன, அவற்றிற்குரிய ஒழுக்கம் இவையே முப்பொருள்களாகும். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களைப் போன்று, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழைப் போன்றும், சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களைப் போன்றும் முதல், கரு, உரிப் பொருள்கள் முப்பொருள்களாக அமைந்துள்ளன.
பத்துப்பாட்டில் சிறியதாக விளங்கும் முல்லைப் பாட்டில் இப்பொருள்கள் நப்பூதனாரால் நன்கு விளக்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. முல்லைப்பாட்டு நேரிசையாசிரியப்பாவால் ஆனது. முல்லை நிலத்துக்குரிய ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லுவது முல்லைப்பாட்டு பிரிந்து சென்ற தலைவன் வரும் வரையிலும் தலைவி ஆற்றியிருத்தல் முல்லையொழுக்கமாகும். இந்த முல்லைத்திணையையே கற்பொழுக்கம் என்று சொல்லுவர்.
முல்லைத்திணை விளக்கம்
முல்லைப்பாட்டில் அகத்திணையும் அடக்கம். புறத்திணையும் அடக்கம். தலைவி தலைவனைப் பிரிந்து தனித்திருப்பதைப் பற்றிக் கூறுவது புறத்திணை. அக ஒழுக்கம், புற ஒழுக்கம் ஆகிய இரண்டு ஒழுக்கங்களைப் பற்றியும் இப்பாடலில் கூறப்பட்டிருந்தாலும் முதலில் அகவொழுக்கமாகிய முல்லைத் திணையைப் பற்றியே சொல்லப்படுகின்றது. ஆதலால் இதற்கு முல்லைப்பாட்டென்று பெயர் வைக்கப்பட்டது என்று கருதலாம்..
முல்லைப்பாட்டு முலலைத்திணைக்குரிய முதல், கரு, உரி என்னும் மூன்று பொருள்களையும் பெற்று வருகிறது. அதோடு முல்லை என்ற அகப்பொருள் இலக்கணத்திற்கு மிகப் பொருந்திய வஞ்சித்திணை புறப்பொருளுக்கு உரியதாயினும் இங்கு பாசறை பற்றி வருணனையைச் சொல்ல வேண்டியிருப்பதால் நப்பூதனார் இதைப் பொருத்திக் காட்டியுள்ளார்.
முல்லைத்திணைக்குரிய முதற்பொருள்
முதற்பொருளை உணர்த்த வேண்டிச் சங்கப் புலவர்கள் ஐவகைத் திணைப் பாடல்களிலும் கையாண்டுள்ள நிலம், பொழுது ஆகியன குறித்த சொற்கள் உள்ளன.
பண்டைத் தமிழருடைய இலக்கிய மரபுகளையும் கோட்பாடுகளையும் அறிந்து திணை உணர;ந்து தெளிதற்கு முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன இடம்பெற வேண்டுமென்பதைத் தொல்காப்பியர்,
‘‘முதல், கரு உரிப்பொருள் உன்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடுங்காலை’’(தொல். பொருள்., அகத்திணை.)
எனக் குறிப்பிடுகின்றார். நிலமும், காலமும் உயிர் வாழ்வதற்கு இன்றியடையாததாகும். இவற்றின் முக்கியத்துவம் கருதியே அவற்றை முதற்பொருள் என்று அழைத்தனர். நிலத்தினும், காலத்தினும் தோன்றும் பொருளைக் கருப்பொருள் என்றும் அவ்வுயிர்களின் ஒழுகலாறுகளை உரிப்பொருள் எனவும் கொள்வர்.
நிலப்பாகுபாடு
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனவும், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனவும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனவும் வழங்கப்பட்டு வந்துள்ளன. இவை நான்கிற்கு மட்டுமே நிலத்தைத் தெளிவாகக் கூறுகின்றார். தொல்காப்பியர். பாலைக்குரிய நிலத்தைத் தெளிவாகக் கூறவில்லை. ஆனால், திணை ஐந்து என்பதும் அவற்றுள் நிலம் காட்டாது உணர்த்தப் பெறுவது பாலை என்பதனை,
‘‘நடுவண் ஐந்திணை நடுவனது ஒழிய’’
என்ற நூற்பாவில் தொலகாப்பியர் சுட்டுகிறார்.
இவ்வுலகம் நானிலம் என்பதும் ஐந்நிலமன்று என்பதையும்,
‘‘படுதிரை வையம் பாத்தியப் பண்பே’’
எனக் கூறுகிறார்.. திணைகளை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்த்ல் எனக் காட்டியுள்ளவர் பாலைத்திணையை நடுவுநிலைத்திணை எனக் குறித்தார். அந்நால்வகைத் திணை ஒழுக்கத்திற்கு இடையில் கூறினமையாலும் பிரிவுகள் பற்றி நிகழும் இடமாதலாலும் பாலை நடுவண்திணை எனப்பட்டது.
பொழுது
ஒரு பாடலில் அமைந்துள்ள திணையை உணர்த்தற்கு நிலம் மட்டுமின்றி பொழுதும் பெருந்துணை புரிகின்றது. இப்பொழுதினைப் பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகையாகப் பிரித்துக் கூறுவர். இதனை,
‘‘பெரும்பொழுதென்றா சிறுபொழுதென்றா
இரண்டு கூற்றத் தியம்பிய பொழுதே’’
என்று நம்பியகப்பொருள் நூற்பா மொழிகிறது
பெரும்பொழுது
ஒரு ஆண்டுக்குப் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. இவை இரண்டிரண்டு மாதங்களாகப் பகுக்கப்பட்டு பெரும்பொழுது என்று சொல்லப்படும்.
சித்திரை, வைகாசி – இளவேனில்
ஆனி, ஆடி – முதுவேனில்
ஆவணி, புரட்டாசி – கார்காலம்
ஐப்பசி, கார;த்திகை – கூதிர்காலம்
மார;கழி, தை – முன்பனிக்காலம்
மாசி, பங்குனி – பின்பனிக்காலம்
என அறுவகைப் பருவமாகப் பகுத்துக் கூறுகின்றனர்.
சிறுபொழுது
ஒருநாளின் காலப்பிரிவு சிறுபொழுது ஆகும்.
வைகறை – இராப்பொழுதின் பிற்கூறு
விடியல் – பகற்பொழுதின் முற்கூறு
எற்பாடு – பகற்பொழுதின் பிற்கூறு
நண்பகல் – பகற்பொழுதின் நடுக்கூறு
மாலை – இராப்பொழுதின் முற்கூறு
யாமம் – இராப்பொழுதின் நடுக்கூறு
என்று அறுவகைப் பொழுதாகப் பகுத்து மொழிவர்.
முல்லைப்பொழுது
முல்லைக்குரிய பெரும்பொழுது கார்காலம். சிறுபொழுது மாலை ஆகும். இதனை,
‘‘காரும் மாலையும்; முல்லை’’
எனத் தொல்காப்பியம் மொழிகின்றது.
கார;காலமானது வினைவயிற் பிரிந்து சென்றுள்ள தலைமகனுக்கும், வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமகளுக்கும் தனிமைத் துயரினை ஏற்படுத்தும் காலம். மழைபொழியும் மாலைக்காலத்து உயிரகள் தத்தம் துணையோடு வாழ விரும்பவது இயற்கை. அதனால் பிரிந்திருப்போர் சேரத்துடிப்பர். பிரிந்தோரைச் சேர்த்து வைக்கும் காலமாகவே முல்லைக்குரிய பொழுதுகள் சித்தரிக்கப்பெற்றுள்ளன.
முல்லைப்பாட்டில் நிலமும் பொழுதும்
முல்லைப்பாட்டில்,
‘‘கான்யாறு தழீஇய இகனெடும் புறவு’’
‘‘கானம் நந்திய செந்நிலப் பெருவழி’’
‘‘முதிர்காய் வள்ளியங்காடு’’
என்ற வரிகளில் நிலமும்,
‘‘எதிர்செல் வெண்மழை பொழியும் திங்கள்’’
என்ற வரியில் பெரும்பொழுதும் இடம்பெற்றுள்ளது.
சிறுபொழுது
முல்லைக்குரிய சிறுபொழுது மாலை. இஃது,
‘‘பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை’’
என முல்லைப்பாட்டில் மொழியப்பெற்றுள்ளது.
கருப்பொருள்கள்
முதலும் உரியுமல்லாத அகப்பொருள்களுள் அகத்திணைக்குக் கருவாய் அமைவன யாவும் கருப்பொருள்கள் என்பர;. அகநூலார;ட முதற்பொருளால் திணையுணரப்படுவது போன்று கருப்பொருள்களாலும் உணரப்படுகிறது. தொல்காப்பியர; தெய்வம், உணவு, விலங்கு,மரம், பறவை, பறை, தொழில், யாழ் ஆகிய கருப்பொருள்களை மட்டுமே குறிப்பிடுகின்றார;. இதனைத் தொல்காப்பியம்,
‘‘தெய்வம், உணாவே, மாமரம,; புள், பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகைப் பிறவும் கருவென மொழிப’’
என நவில்கின்றது.
இந்நூற்பாவிற்கு உரைவரைந்த இளம்பூரணர் ‘பிறவும்’ என்றதனால் பூவையும், நீரையும் கொள்வர் என உரை வகுக்கிறார். முல்லைக்குரிய தெய்வம், திருமால். இஃது,
‘‘நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல்’’
என்ற வரிகளில் தெய்வமும்,
‘‘அருங்கடி மூதூர் மருங்கிற்போகி
யாழிசை யின வண்டார்ப்ப நெல்லோடு
நாழிகொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப’’
என்ற வரிகளில் முல்லை நில மக்களின் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுள்ளது.
உணவு
முல்லை நில மக்கள் அந்நிலத்தில் இயற்கையாய்க் கிடைக்கும் உணவு வகைகளையே உண்டு வாழ்ந்து வந்தனர். இதனை,
‘‘நெல்லோடு நாழி கொண்ட’’
‘‘வானம் வாய்த்த வாங்கு கதிர்வரகு’’
என்ற வரிகளில் உணவு பற்றிய செய்தியானது முல்லைப்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
விலங்கு
முல்லை நிலத்து உயிரினங்களாக யானை, பிடி, மான், மடப்பிணை, கலிமா, கலை, இரலை, குறுநரி, பன்றி, முயல் போன்றவை முல்லைநில விலங்குகளாகும். இஃது,
‘‘சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்று’’
‘‘கோவலர் பின் நின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயர்’’
‘‘திரி மருப்பு இரலையோடு மடமான் உகழ’’
என்ற வரிகளில் விலங்குகளின் பெயர;களை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
மரம்
ஆர், ஈங்கை, கொன்றை, தோன்றி, வாழை, வேங்கை முதலிய மரங்களும், கள்ளி முசுண்டை, நெல் முதலிய செடியும், அவரை, பகன்றை போன்ற கொடிகளும் முல்லைப்பாட்டில் இடம்பெற்றுள்ளன. இச்செய்தி,
‘‘செறியிலைக் காயா ;அஞ்சன மலர
முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக்
கோடல் குவிமுகை அங்கை அவிழத்
தோடார் தோன்றி குருதி பூப்ப’’
என முல்லைப்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
தொழில்
முல்லைநில மக்கள் ஆநிரை மேய்த்தலையும் உழவு செய்தலையும் தொழிலாகக் கொண்டவர்கள். வரகு விதைக்கும் தொழிலையும் செய்தனர் என்பதை,
‘‘வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகு’’20
என நப்பூதனார் கூறுகிறார்.
முல்லை நில மலர்கள்
மாரிக்காலத்தில் கானகத்தில் கண்ணைக் கவரும்படி பூத்திருக்கும் மலர்கள் பல. இலைகளை உடைய காயாஞ்செடிகள், மையைப் போல மலர்ந்து இருக்கின்றன. தளிரையும், பூங்கொத்துக்களையுடைய கொன்றை நல்ல பொன்னைச் சொரிந்தது. வெண்காந்களின் குவிந்த மொட்டுக்கள் உள்ளங் கையைப்போல மலர்ந்தன. தோன்றிச் செடிகள் இரத்தம் போலப் பூத்திருக்கின்றன என்பதனை,
‘‘நறுவீ முல்லை’’
‘‘சேண்நாறு பிடவம்’’
‘‘செறியிலைக் காயா’’
‘‘முறியிணர;க் கொன்றை’’
கோடல் குவிமுகை’’
‘‘தோடார் தோன்றி’’
என முல்லைப்பாட்டு எடுத்துரைக்கின்றது.
நீர்
முல்லைப்பாட்டில்,
‘‘கான்யாறு தழீஇய அகன் நெடும்புறவு’’
என்ற வரியில் முல்லை நிலத்து நீரினை ஆசிரியர் மொழிகிறார்.
உரிப்பொருள்கள்
முதல், கரு, உரிப்பொருள்களுள் முதற் பொருள் கருப்பொருள்களைவிட உரிப்பொருளே தலையாயது என்பது சான்றோர் துணிபாகும். முதற்பொருளாலும் கருப்பொருளாலும் இன்னதிணை என்று முடிவு செய்யாத நிலையில் உரிப்பொருளைக் கொண்டு திணையை ஆசிரியர் உணர்த்துகிறார்.
முல்லைக்குரிய உரிப்பொருள் ‘‘இருத்தலும் இருத்தல் நிமித்தமுமாகும்’’ (தொல்காப்பியம்,இளம்., ப.30) வினைமேற்சென்ற தலைவன் வினைக்களத்தே இருத்தலும் அவன் வருகையை நினைந்து தலைவி இல்லத்தே ஆற்றியிருத்தலும் முல்லை என்பர். இஃது முல்லைப்பாட்டில்,
‘‘நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடுநினைந்து
. . . . . . . . . . . . . ..
இன்பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்’’
(முல்லைப்பாட்டு அ. மாணிக்கனார் உரை)
என இடம்பெறுகிறது. முல்லைப் பாட்டில் முல்லைக்குரிய முதல், கரு, உரிப்பொருள்களை அமைத்து ஆசிரியர் நப்பூதனார் முல்லைத் திணைக்குரிய சிறப்பினை விளக்கியிருப்பது கற்போருக்கு இன்பம் பயப்பதாக அமைந்துள்ளது. இதன்வழி செவ்வியல் கால மக்களின் வாழ்வியல் கூறுகளும் விளக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 9
- கவிதையும் அவனும்
- ஒரு ராஜகுமாரனின் கதை
- ஓர் இரவு
- ஆதலால் நோன்பு நோற்போம்
- நிசத்திற்கும் நடைமுறைக்கும் இடையே
- சாகித்திய அகாதமி : சேலம் எழுத்தாளர்கள் சந்திப்பு
- சாதி – குற்றணர்வு தவிர் ஜனார்த்தன் -கட்டுரை பற்றி
- வளவதுரையனின் நாவல் ‘மலைச்சாமி ‘ யை முன் வைத்து.
- முல்லைப்பாட்டில் முப்பொருள்கள்
- எப்போதோ ஒரு கான்வாஸ் கூடாரத்தில் தொடங்கியது…….
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதையுலகம்
- ‘நாவலென்பது தத்துவத்தின் சித்திரவடிவம்’ – அல்பெர் காம்யு
- நானும் என் எழுத்தும்
- இவர்களது எழுத்துமுறை – 5 மௌனி
- சிறுகச் சிறுகச் சூரிய சக்தி சுருங்கி வருகிறா ? [கட்டுரை: 2]
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -16 ஏசு கிறித்து வசந்தம்
- பரிமளவல்லி – 8. வேரில்லாத காளான்கள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -9
- குப்பனுக்கு கல்யாணம்
- தவறிச் செய்த தப்பு
- புதாவில் நாய் சந்தை (ஹங்கேரி நாடோடிக்கதை)
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 4
- தமிழக தேர்தல் கூட்டணி அலசல்
- முள்பாதை 43
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1
- ஓர் மடல்
- அவசரகதியில்;
- வழியோரமாய் நிற்கிறது ஒரு பயணம்
- ஒரு சொட்டுத் தண்ணீர்
- நிகழ்தலின் நொடி
- வேத வனம் -விருட்சம் 100 – ( நிறைவுக்கவிதை)
- சூர்யா, கார்த்திக்., சிவகுமார், நல்லி, சிற்பி விருதுகள்