சின்னக் கருப்பன்
இந்தியாவில் பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டசபை உறுப்பினர், முதலமைச்சர் ஆகிய பதவிகள் ஒருவர் இத்தனை வருடங்கள் தான் இருக்க முடியும் என்ற வரையறை வேண்டும். அமெரிக்காவில் ஒரு நபர் ஜனாதிபதியாக இரண்டு முறைக்கு மேல் இருக்க முடியாது என்று ஒரு சட்டம் இருக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். இதே போல, அங்கிருக்கும் மக்கள் பிரதிநிதிகளும் மூன்றுமுறைக்கு மேல் மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடாது என்றும், ஒரு நபர் இரண்டு முறைக்கு மேல் ஒரு மாநிலத்துக்கு ஆளுனராக இருக்கக்கூடாது என்றும் சட்டம் வேண்டும் என்று பல அமெரிக்க சிந்தனையாளர்கள் வற்புறுத்தி வந்துள்ளார்கள்.
இதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது. ஃப்ராங்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் அவர்கள் நான்கு முறை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பின்னர், உடனேயே அமலுக்கு வந்த சட்டம்தான் இந்த சட்டம். இந்த சட்டம் வந்ததற்கு ரூஸ்வெல்ட் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு அல்ல. இன்றும் அமெரிக்கர்கள் ரூஸ்வெல்டை மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நினைவு கூர்கிறார்கள். அவ்வாறு நான்கு முறை இருந்த ஒருவர் ஜனாதிபதியாக இருந்த ஒரு சந்தர்ப்பம் எதிர்காலத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்ததாலேயே அந்த சட்டம் இயற்றப்பட்டது.
இன்று தமிழகத்தில் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. முதலாவது திமுக. அடுத்தது அதிமுக. இந்த இரண்டு கட்சிகளும் இரண்டு நபர்களை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தனிநபர் துதி கட்டுக்கடங்காமல் போய் விட்டது என்பதை உணர்ந்து கொள்ள பெரிய மூளை வேண்டாம். திமுக என்றால் கருணாநிதி, அதிமுக என்றால் ஜெயலலிதா என்று ஒரு அடையாளம் வந்துவிட்டது. அது மட்டுமல்ல, திமுக என்றால் கருணாநிதி என்ற இறுக்கமான அடையாளம், திமுகவில் இருப்பவர்களுக்கும் ஒரு சிறை போன்றது என்பதை கடந்த 10 வருடகால சம்பவங்கள் நிரூபித்திருக்கின்றன. திமுகவில் கருணாநிதி இருக்கும் வரை தனக்கு முதலமைச்சர் பதவி கிட்டாது என்ற காரணத்தால் அதிலிருந்து வெளியே வந்தவர்கள் உருவாக்கிய கட்சிகளே இன்று ஏராளமாக இருக்கின்றன. அதிமுககூட அது போன்ற காரணத்தால் வெளிவந்த எம்ஜியார் உருவாக்கிய கட்சிதானே ? எம்ஜியார் வெளியே வந்து உருவாக்கிய அதிமுக, நாவலர் நெடுஞ்செழியன் வெளியே வந்து உருவாக்கிய மக்கள் திமுக, வைகோ வெளியே வந்து உருவாக்கிய மறுமலர்ச்சி திமுக போன்றவைகளும், திமுகவுக்குள் வராமலேயே தனக்கு ஒரு கட்சியை உருவாக்கிக்கொள்ள முனைந்த பாமக கட்சிக்காரரான ராமதாஸ், அதிமுகவுக்குள் இடமில்லாமல் வெளியே வந்து எம்ஜியார் அதிமுக உருவாக்கிய திருநாவுக்கரசு போன்ற எல்லோருமே இது போன்ற சிறையை விட்டு வெளியே வந்தவர்கள் தாம். ஜெயலலிதாவும் அதிமுகவும் கொண்டிருக்கும் இறுக்கமான அடையாளம் இன்னும் பலரை அதிமுகவுக்குள் அடிமைகளாக இணைத்துக்கொள்ளவும், அதில் முன்னேற வாய்ப்பில்லாதவர்கள் வெளியே வந்து தனிக்கட்சி தொடங்கவும் தூண்டுகிறது. தமிழ்நாட்டில் இது திமுக வழி கட்சிகளில் மட்டும் இருக்கும் விஷயமல்ல.
இது இந்திய நாடெங்கும் இருக்கும் பிரச்னை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து பிரிந்து உருவாக்கும் தலைவருக்கொரு காங்கிரஸ் கட்சியும் இது போன்றதே. இந்தப் பிரச்னையை முதன் முதலில் கண்டுகொண்டது பாரதீய ஜனதாக் கட்சிதான். அதுவே ஒவ்வொரு பாஜக தலைவரும் இரண்டு வருடம் மட்டுமே தலைவராக இருக்க முடியும் என்பதையும், அதற்குப் பிறகு ஒரே ஒரு முறை மட்டுமே அதே நபர் தலைவராக இருக்க முடியும் என்பதையும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதன் காரணமாக வெகு காலம் தலைவராக இருந்த வாஜ்பாயி பதவியிலிருந்து இறங்கி அத்வானிக்கு இடம் கொடுத்த பின்னரே பாஜகவின் வளர்ச்சி அசுர கதி அடைந்தது. இந்த முறை இருப்பதாலேயே பாரதீய ஜனதா கட்சியில் இரண்டாம் படியில் இளைஞர்களான, அருண் ஜெட்லி, பிரமோத் மகஜன், அருண் ஷோரி, ஷா நவாஸ், உமா பாரதி, போன்றோரை வளர்த்து முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்த முறை இல்லாத காங்கிரஸ் கட்சியிலிருந்து இளைஞர்களான ப சிதம்பரம், ராஜேஷ் பைலட் போன்றோர்கள் ஓரம் கட்டப்படுவதும், துரத்தப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். உள்கட்சி ஜனநாயகம் என்ற முறையில் அந்த கட்சி வளரவும் புது ரத்தத்தை பாய்ச்சவும் பாரதீய ஜனதா கட்சி எடுத்துக்கொண்ட முயற்சிகள் அந்த கட்சியளவில் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், முதிய தலைவர்களான முரளி மனோஹர் ஜோஷி போன்றவர்கள் நவீன உலகில் கோமாளிகளாக மாறிவருகிறார்கள் என்பதையும் கவனியுங்கள். ஆனால், அந்தக் கோமாளிகளிடம் கட்சி மாட்டிக்கொள்ளாமல் முன்னுக்குச் செல்ல, அருண் ஜெட்லி போன்ற விவரமானவர்கள் அடுத்த தலைமுறைத் தலைவர்களாக வந்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் மூத்த தலைவர்களான அத்வானி, வாஜ்பாயி போன்றவர்களுக்கு இருக்கும் கட்சி அனுபவமும், முதிர்ச்சியும் இளைஞர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. அப்போழுதில், இந்த மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு ஆசிரியர்களாக இருந்து அரசியல் வழிநடத்தவும் அடுத்த தலைமுறை இளைய தலைவர்களை உருவாக்கவும் இது உதவுகிறது. கட்சிக்குள்ளேயே புது ரத்தம் வருவது இத்தனை நல்லதென்றால், ஒரு மாநில மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் பதவிக்கு புது ரத்தம் வேண்டியது எத்தனை முக்கியம்!
கருணாநிதியும் ஜெயலலிதாவும் மக்கள் விரும்பும் தலைவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு காலகட்டத்துக்குப் பின்னர் இந்த அதீத மக்கள் அபிமானம் தனிநபர் துதியாகவும், பண்ணும் ஊழலுக்குத் திரையாகவும் மாறிவிடுகிறது. எம்ஜியார் படத்தைப் போட்டுவிட்டு எந்த ஊழலும் செய்யலாம் என்று அலைந்த மந்திரிகளின் வரலாறு அடுத்த எம்ஜியார் தேடி ஜெயலலிதாவிடம் தஞ்சமடைந்ததுதானே உண்மை.
ஆனால், எம்ஜியார் ஆறு வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து முதலமைச்சராக இருக்க முடியாது என்றால் என்ன செய்திருப்பார்கள் அதிமுகவினர் ? ஒரு வேளை எம்ஜியார் மூத்த தலைவராக ஓய்வு பெற்றுவிட்டு, நல்லவர் என்று அவர் கருதும் ஒரு அதிமுக மந்திரியை முதலமைச்சராக ஆசீர்வதித்திருக்கலாம். அல்லது அவர் பின்னணியில் முதலமைச்சராக இருந்து ஆட்டுவித்திருக்கலாம். என்ன நடந்திருக்கும் என்று யூகிப்பது கடினம். அதே போல கருணாநிதி ஆறு வருடங்களுக்கு மேல் முதலமைச்சராக நீடிக்க முடியாது என்று நிலைமை இருந்திருந்தால், முக ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பட்டம் கட்டப்பட்டிருக்கலாம். அல்லது முக ஸ்டாலினை முதலமைச்சராக்கும் அளவுக்கு அப்போதைக்கு கருணாநிதியின் இறுக்கமான பிடி திமுகவில் விழாமல் இருந்திருந்தால், ஒருவேளை அன்பழகனோ அல்லது வைகோவோ கூட முதலமைச்சராக ஆகியிருக்கலாம். இவ்வாறு பல வேறு நபர்கள் முதலமைச்சராக ஆவது பல ஜாதி, பல இன, பல மதத்தினை சேர்ந்த தமிழக மக்களை சந்தோஷப்படுத்தும். ராமதாஸின் நோக்கம் ஒரு வன்னியர் முதலமைச்சராவது என்று இருந்தால், இவ்வாறு பலர் வந்து செல்லும் முதலமைச்சர் பதவியில் ஒரு முறை வன்னியரும் வரக்கூடும் என்ற எண்ணம் வந்து தனிக்கட்சி நோக்கமே வராமல் கூட போயிருக்கலாம். அந்த தனிக்கட்சியோடு கூட வந்த ஜாதிவெறியும் வராமல் போயிருக்கலாம்.
ஜோதிபாசு வங்காள முதலமைச்சராக 20 வருடங்களுக்கு மேல் இருந்தார். சுதந்திரம் அடைந்ததிலிருந்து தன் மரணம் வரையில் ஜவகர்லால் நேரு பிரதமராய் இருந்தார். நீண்டகால பதவி வகிப்பின் அபாயம் என்னவென்றால் , சில வருடங்களுக்கு அப்புறம் ஆரம்பச் சூரத்தனம் போய்விடுகிறது. புதிய சிந்தனைகளோ, மாறிவரும் உலகிற்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ளும் அனுசரணையோ இல்லாமல் போய் விடுகிறது. தினம் அலுவலகம் வந்து கோப்புகளில் கையெழுத்துப் போட்டுவிட்டு அதிகாரிகளிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று ஓய்வெடுக்கும் வேலையாக இந்த முதலமைச்சர், பிரதமர் வேலை ஆகிவிடுகிறது. அவ்வப்போது ஊழல்கள், அவ்வப்போது தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அதிகாரங்கள் என்று வழக்கமான வேலையாக ஆகிவிடுகிறது.
ஆறு வருடத்துக்கு மேல் ஒருவர் முதலமைச்சராக இருக்க முடியாது என்ற நிலைவரும் போது, பலரும் வெளிப்படையாகத் தங்களது நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவும், கட்சி வேலைகளைச் செய்யவும், மக்களிடம் ஆதரவு திரட்டவும் முனையலாம். எதிர்காலம் தம்மை நினைவு கொள்ள இந்தக் குறிப்பிட்ட வருடகால பதவி அமர்வு தான் காரணம் என்றால் இன்னமும் எச்சரிக்கையுடன் செயல்படலாம்.
இன்று தமிழகத்தில் நடப்பது இதற்கு நேர்மாறு. இத்தனை எம் எல் ஏக்களும் ஒரே ஒரு நபரிடம் மட்டுமே நல்ல பெயர் வாங்கினால் போதுமானது. மக்கள் ஆதரவு தேவையில்லை. எம்எல்ஏ சீட்டுக்கு அலைபவர்கள் நேராக அதிமுக அலுவலகத்துக்குச் சென்று அங்கு இடம் கிடைக்கவில்லை என்றால் திமுக அலுவலகத்துக்குச் செல்லும் நிலை இன்று. இது இன்று ஒரு வியாபாரம் மட்டுமே. போட்ட காசை எடுப்பது தான் நோக்கமே தவிர மக்கள் சேவை அல்ல( மக்கள் சேவை என்றாலே உதட்டோரம் கேலிச் சிரிப்பு தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை என்பது தமிழ்நாட்டின்/இந்தியாவின் அவலம்)
அடுத்த விஷயம், ஆறு வருடங்களுக்குப் பின்னர் ஒரு நபர் முதலமைச்சராக இருக்க முடியாது என்ற நிலை வரும்போது, ஒரு 10 அல்லது 20 வருடத்தில் ஏராளமான முன்னாள் முதலமைச்சர்கள் இருப்பார்கள். இவர்கள் ஒரு மாநிலத்தின் அதிக பட்ச அதிகாரப்பதவியில் இருந்துவிட்டு வேறு என்ன செய்ய முடியும் ? அடுத்தது தேசிய அளவில் தங்களை இருத்திக்கொள்வதுதான். இதற்குப் பிராந்தியக் கட்சிகள் உதவாது. ஆகவே பல பிராந்தியக்கட்சிகள் தேசீயக்கட்சிகளில் இணையவும் இது தூண்டும். உதாரணமாக மு க ஸ்டாலின் ஆறுவருடத்துக்கு மேல் முதலமைச்சராக இருக்க முடியாது என்றால், ஏற்கெனவே 6 வருடங்களாக முதலமைச்சராக இருந்து முடிந்துவிட்டார் என்றால், மீதக்காலத்தை எப்படிக் கழிப்பார் ? பின்னணியில் இருந்து ஆட்டுவிக்கலாம். ஆனால் மனிதர்கள் வெறும் பணத்துக்கு மட்டும் அடித்துக்கொள்ளும் ஆட்கள் இல்லையே. புகழும் வேண்டுமே. பின்னால் இருந்து வேறொருவருக்குப் புகழ் கொடுப்பதற்கு தேசீய அளவில் சென்று சிறப்பான மந்திரியாக ஆகவோ, அடுத்து பிரதமராக ஆகவோ முனையலாமே. அப்போது திமுக என்ற பிராந்தியக் கட்சி என்ன பிரயோசனம் ?
முதலமைச்சர் பதவிக்கும் , பிரதமர் பதவிக்கும் கால வரைமுறை தேவை என்பதற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளை உங்கள் கருத்துக்களுக்கே விட்டு விடுகிறேன். ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் யார் இந்த விஷயத்தைப் பேசப்போகிறார்கள் ? நாமான பொது மக்கள்தான் பேசவேண்டும். பத்திரிக்கைகளுக்கு அடிக்கடி இது சம்பந்தமாகக் கடிதம் எழுத வேண்டும். பலரிடம் இது பற்றி விவாதித்து இதனை தேசீய அளவில் விவாதப்பொருளாக மாற்றவேண்டும். அது நம்மிடம் தான் இருக்கிறது. அரசியல் வாதிகளிடம் நிச்சயம் இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் பெரும் தலைவர்கள் தான் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடும் சோனியா, கருணாநிதி, லாலுப்ரசாத் யாதவ், ஜெயலலிதா போன்றவர்கள் இந்தக் கருத்துக்கு எப்படி இணங்குவார்கள். அடுத்த நிலையில் உள்ள இரண்டாம் நிலைத் தலைமைக்கு நிச்சயம் இந்தக் கருத்து இருக்கும். ஆனால் இதை வெளியே சொன்னால், எஜமானர்கள்- எஜமானிகள் கோபம் கொண்டு விடக்கூடும் என்பதால் நிச்சயம் அடக்கி வாசிப்பார்கள். ஆனால் அவர்களிடம்தான் இந்த மாற்றத்துக்கான அதிகாரம் இருக்கிறது. ஆகவே அவர்களை இது பற்றிப் பேச வைப்பதே ஒரு சாதனை தான். அந்த வேலையை நாம் ஏற்றுக்கொள்வோம்.
- இருட்டு பேசுகிறது!
- பிறவழிப் பாதைகள்
- இலங்கைத் தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் கனடாவில் வெளியீட்டு விழா
- கலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில்
- கார தேன் கோழிக்கால்கள்
- இத்தாலிய கொண்டைக்கடலை சூப்
- கணித மேதை ராமானுஜன்
- மின் அஞ்சல்
- சாக்கடையில் போகும் ஒளிநாறு தொழில்நுட்பம் (Broadband)
- ஆந்த்ராக்ஸ் விஷத்தின் ஆதாரக்காரணம்
- குஜராத்தின் ‘பூகம்பம் தாங்கும் வீடு ‘
- புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்கள்
- கேள்வி
- அன்பு என்ற அமுதம்
- மனைவி!
- மரணம்
- இதற்கும் புன்னகைதானா… ?
- என் வீட்டருகே ….
- அப்பா
- அது அந்தக் காலம்….
- துயரம்
- இந்த வாரம் இப்படி – ஜனவரி 27, 2002 (புத்தக விழா, ஆண்டிப்பட்டி, அக்னி, மனோரமா)
- புதிய சமுதாயமும் இளைஞர்களும்
- முதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு தேவையான பதவிக்கால வரையறை (term limits)
- தலைவர்களே படிக்காதீர்கள் .. பேசுங்கள்
- ‘நந்தன் வழி ‘ பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்
- தெரியாமலே