மானுடச் சித்திரங்கள் நீலகண்டனின் “உறங்கா நகரம்”

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

பாவண்ணன்


ஒரு நகரம் வளரும் விதம் ஆச்சரியமானது. வாய்ப்புகளைத் தேடி நகரத்தைநோக்கி மனிதர்கள் வந்தபடி இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பு நகரத்துக்குத் தேவைப்படுகிறது. பிறகு, உழைக்கும் மக்களுக்கான சிறுசிறு குடியிருப்புகள் உருவாகின்றன. அப்புறம், அவர்களுடைய தேவையை ஒட்டி வணிகநிலையங்கள் அமைக்கப்படுகின்றன. பொழுதுபோக்கு நிலையங்கள் உருப்பெறுகின்றன. கோயில், குளங்கள் தோன்றுகின்றன. கல்விநிலையங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. சாலைகள் போடப்படுகின்றன. மின்சாரம் வருகிறது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி புதியபுதிய தொழில்கள் முளைக்கின்றன. நகரத்தின் எல்லாத் தமனிகளிலும் சிரைகளிலும் ரத்தம் பாய்ந்தோடிக்கொண்டே இருக்கின்றது. உற்பத்தியின் தேவை பெருகப்பெருக உழைப்பாளர்களின் எண்ணிக்கை பெருகி, இருபத்திநான்கு மணிநேரமும் அவர்களுடைய உழைப்பைப் பெற்று இயங்கக்கூடிய மாபெரும் களமாக ஒரு தொழிற்சாலை எப்படி மாற்றமடைகிறதோ, அதேவிதமாக நகரத்தின் தேவைகள் பெருகி, அவற்றை ஈடுசெய்யும்விதமாக இரவும் பகலும் மாறிமாறி இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஒருபாதி உழைப்பாளர்கள்கூட்டம் இயங்கிக்கொண்டிருக்கும்போது மறுபாதி உழைப்பாளர்கள் கூட்டம் உறங்கிக்கொண்டிருக்கிறது. உறங்கியவர்கள் இயங்கும்போது, இயங்கியவர்கள் உறங்கச் செல்கிறார்கள். நகரம்மட்டும் உறங்கா நகரமாக விழித்த நிலையிலேயே இருக்கிறது. உறங்கும் வேளையிலும் இந்த நகரத்தை உறங்கா நகரமாக வைத்திருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும். நாம் உறங்கும் வேளையில் உழைத்து நம்முடைய தேவைகளை நிறைவு செய்யும் அந்த உழைப்பாளர்களின் சிலரை நேருக்குநேர் பார்த்துப் பேசிய அனுபவங்களை வெ.நீலகண்டன் இந்த நூலில் தொகுத்துள்ளார். வெவ்வேறு விதமான மனிதர்கள். வெவ்வேறு விதமான வாழ்க்கைகள். கசப்புகள். புன்னகைகள். கொண்டாட்டங்கள். தொகுப்பை வாசித்துமுடித்தபிறகு, அவர்களைப்பற்றிய நினைவுகளிலேயே அமிழ்ந்து கிடக்கிறது மனம்.

ஒரு செய்தித்தாளை அச்சடிக்கும் அலுவலகம் எங்கிருக்கிறது என்று எல்லாருக்குமே தெரியும். இரவுவரை சேகரிக்கப்பட்ட செய்திகளையெல்லாம் தொகுத்து அச்சிலேற்றுகிறார்கள். மறுநாள் அதிகாலை அந்தச் செய்தித்தாள் நம் வீட்டு முற்றத்தில் விழுகிறது. அலுவலகக் கிடங்கிலிருந்து நம் வீட்டு முற்றம்வரை ஒரு செய்தித்தாள் எப்படி பயணம் செய்தது? நாம் உறங்கும் நேரத்தில் நமக்காக விழித்திருந்து அந்த வேலைகளைச் செய்தவர்கள் யார்யார்? வாகன ஓட்டுநர்கள், கட்டுகளை ஏற்றிஇறக்குகிறவர்கள், முகவர்கள், துணைமுகவர்கள், அவர்களிடம் பணிபுரியும் சைக்கிள் சிறுவர்கள் எனப் பலரும் அப்பட்டியலில் உண்டு. நகரத்தை உறங்கா நகரமாக வைத்திருப்பவர்கள் அவர்களே. நம் தேவைகளில் பலவும் உறங்கா நகரத்துத் தொழிலாளர்களால் நிறைவேற்றப்படுபவை.

நீலகண்டன் நேரடி அனுபவத்துக்காக பலரையும் சந்தித்திருக்கிறார். கப்பல்களில் வந்து இறங்கும் சரக்குகளை இரவோடு இரவாக இறக்கி வாகனங்களில் ஏற்றி கிடங்குகளுக்கு அனுப்பும் துறைமுகத்தொழிலாளர்கள், மீன் பிடிப்பதற்காக உயிரையே பணயமாக வைத்து கடலுக்குள் செல்பவர்கள், உழைத்த களைப்பைப் போக்கிக்கொள்ள ஒரு கட்டிங் போட்டுவிட்டு கானாப்பாட்டு பாடி மனவேதனைகளைப் போக்கிக்கொள்ளும் பாடகர்கள், ஊர்விட்டு ஊர் சென்று குறிசொல்லிப் பிழைக்கும் குடுகுடுப்பைக்காரர்கள், இங்கிலாந்து, அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகளை இணையவழியில் உடனுக்குடன் நிறைவேற்றித்தரும் ஊழியர்கள், அவசரச்சிகிச்சைக்காக அழைத்துவரப்படும் நோயாளிகளை அகாலத்திலும் அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் மருத்துவமனை ஊழியர்கள், சாலைவிபத்துகள், இரவெல்லாம் கண்விழித்து சுற்றியலையும் காவல்துறைப்பணியாளர்கள், பாலியல் தொழிலாளர்கள், அரவாணிகள் எனப் பல்வேறு தளம்சார்ந்தவர்களைப்பற்றிய சின்னச்சின்ன சித்திரங்களை இந்த நூல் வழங்குகிறது.

திரைப்படச்சுவரொட்டிகள்முதல் அரசியல் கூட்ட அழைப்பு, மரணஅறிவிப்புச் சுவரொட்டிகள்வரை எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்று செயல்படுபவர்களைப்பற்றிய குறிப்பின் வழியாக தெரியும் உலகம் விசித்திரமானது. வழக்கறிஞர் பட்டத்துக்குப் படித்திருந்தும்கூட, அப்பாவின் மரணத்தைத் தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டும் தொழிலில் ஈடுபடுகிறார் அந்த இளைஞர். ஐந்நூறு ஆயிரம் சுவரொட்டிகள் ஒட்டும் அளவுக்கு ஒரு மாபெரும் நகரப்பரப்பே அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது. சுவரொட்டி ஒட்டுகிறவர்கள் தமக்குள் அப்படி ஒரு மானசிகமான வரையறையைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் வேலை இரவு ஏழுமணிக்குத் தொடங்குகிறது. ஒரு சிலர் பசைக்கான கூழ்காய்ச்சுகிறார்கள். இன்னொரு குழு சுவரொட்டிகளைப் பிரித்து தனித்தனியாக அடுக்குகிறது. பிறகு, மிதிவண்டிகளில் அவற்றை ஏற்றிக்கொண்டு தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து செல்கிறார்கள். நள்ளிரவில் பசித்தால் சாப்பிட பரோட்டாப் பொட்டலங்கள் மிதிவண்டியின் முன்பக்கம் தொங்குகின்றன. காலை ஆறு அல்லது ஏழுமணிவரை ஒட்டும் வேலை நடக்கிறது. படிப்புச் செலவுக்குப் பணமில்லாத சிறுவன்முதல் மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றும் பொறுப்பில் உள்ள குடும்பஸ்தர்கள்வரை இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். நமக்குப் பிடித்தமான நடிகநடிகையர்களின் படங்கள் முதல் அரசியல்தலைவர்கள் படங்கள்வரை சாலையோரச் சுவர்களில் தினந்தோறும் பார்க்கிற நாம், அவற்றை நம் பார்வையில் படும்படி சுவர்களில் ஒட்டிவைத்துவிட்டுச் செல்லும் தொழிலாளர்களைப்பற்றி அவ்வளவாகக் கவனம் கொள்வதில்லை. அவர்கள் வாழ்க்கைமுறை, அவர்களுடைய துக்கம், உழைப்பில் உள்ள சிரமங்கள், இரவில் சந்திக்கும் தொல்லைகள், அவமானங்கள் ஏராளமாக உள்ளன. ஒருவர் காவல்துறையால் சந்தேகக் கேஸாக மாற்றப்படுகிறார். இன்னொருவர் ரவுடிக்கும்பலிடம் தம் வாழ்வுக்கே ஆதாரமான மிதிவண்டியைப் பறிகொடுத்துவிடுகிறார். வேறொருவர் மடியில் வைத்திருக்கும் சில்லறைப்பணங்களை இழக்கிறார். இப்படி மறுபக்கத்தில் உள்ள வேதனைமிகுந்த சித்திரங்களை நீலகண்டன் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். படிப்புச்செலவுக்காக இந்த வேலையைத் தேடிவந்த சிறுவனை, உழைக்க ஆள் கிடைத்துவிட்டான் எனக் கசக்கிப் பிழியாமல், பன்னிரண்டு மணிக்கெல்லாம் போய் படுத்துவிடவேண்டும் என்றும் எக்காலத்திலும் பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்தக்கூடாது என்றும் வாக்குறுதி வாங்கிக்கொண்டு வேலை தரும் இளைஞனை ஒருபக்கம் பார்க்கிறோம். இரக்கமே இல்லாமல் அந்த உழைப்பாளர்களின் பைகளில் கையைவிட்டு பணத்தைச் சுருட்டிக்கொண்டு செல்லும் போக்கிரியையும் ஒருபக்கம் பார்க்கிறோம். வாழ்க்கை எல்லாவிதமான மனிதர்களையும் கொண்டிருக்கிறது. எல்லாருடைய இயக்கங்களுக்கும் இடம்கொடுத்து சமநிலை குன்றாமல் இருக்கிறது.

இருபத்தேழு கட்டுரைகளைக் கொண்ட புத்தகத்தில் ஏராளமான மானுடச் சித்திரங்கள் உள்ளன. புனைகதைகளைப்போலவே வாழ்வின் திசையை அறிய உதவும் சுடர்களாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.

( உறங்கா நகரம். சென்னையின் இரவு வாழ்க்கை. கட்டுரைத்தொகுதி. வெ.நீலகண்டன், சந்தியா பதிப்பகம்.பழைய எண் 57, 53வது தெரு, 9வது அவென்யு. அசோக் நகர், சென்னை- 83. விலை.ரூ80)

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்