டேமன் நைட் -தமிழில் நாகரத்தினம்
[Damon Night: அறிவியல் சிறுகதைகளின் முன்னோடி. சிறந்த இலக்கிய விமர்சகர், சிறுகதை கட்டுரை தொகுப்பாளர். 1956ம் ஆண்டு வெளிவந்த In Search of Wonder என்ற அவரது கட்டுரைத்தொகுப்பு அறிவியல் புனைகதைகளில் ஆர்வம்கொண்டவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய ஒன்று.. Beyond the Time Barrier(1964), Mind Switch'(1965) நாவல்களிரண்டும் அவைகளில் குறிப்பிடத்தகுந்தவை. நூற்றுக்கு மேற்பட்ட அறிவியல் புனைகதைகளுக்குச் சொந்தக்காரர். மனிதர் உபயோகம் என்ற இச்சிறுகதை To serve Man என ஆங்கிலச் சிறுகதையின் மொழிபெயர்ப்பு. பிரெஞ்சில் Comment servir l’homme என்று வெளிவந்துள்ளது. ”To Serve Man’ என்ற தலைப்பு தரும் அதிர்வென்ன, பொருள் என்ன என்பதை நண்பர்கள் கதை முடிவில் உணரக்கூடும். பல நேரங்களில் பொருத்தமான தலைப்புகள் கூட கதையொன்றின் வெற்றியைத் தீர்மானிக்க உதவமுடியும் என்பதற்கு ‘To Serve Man’ ஒரு நல்ல உதாரணம்.]
—-
கானமைட்டுகளின் தோற்றம் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்ததென்பது உண்மை. மனிதர்களிலும் சேர்த்தியின்றி ன்றிகளிலும் சேர்த்தியின்றி இரண்டுங் கெட்டானாகவிருக்கிற தங்கள் உருவத்தைப் பற்றியக் குறைகள் அவர்களுக்கும் இருந்திருக்கக்கூடும். தவிர முதன் முதலாக பார்க்கின்ற எவரையும் தங்கள் தோற்றம் கலவரபடுத்துகின்றதென்ற வருத்தமும் அவர்களுக்கு நிறையவே இருந்தது. ‘மனிதர்களே! உங்களுக்கென பரிசுகள் கொண்டுவந்திருக்கிறோம்’ என்பவர்கள் தேவர்களே என்றாலும் அருவருப்பான தோற்றத்துடனிருந்தால் யார்தான் அவர்களிடம் பரிசினைப் பெற உடனே முன்வருவார்கள், சொல்லுங்கள்.
தங்களுடைய மிகப்பெரிய விண்கலமான அஸ்ற்றோனெவில் பூமிக்கு அவர்கள் முதன் முதலில் வந்திறங்கியபோது தேவதூதர்கள் எனலாமா? அல்லது மனிதரினத்திற்குச் சம்பந்தமில்லாத மிருகவகையெனலாமாவென்கிற சிக்கலில் அவர்களைப் பார்த்தவர்கள் எவரும் தவித்தனர். ஆகாயத்திலிருந்து திடீரென்று குதித்திருந்த இப்புதிய விருந்தினர்களை எவ்வகையில் சேர்ப்பதென்கிற குழப்பம் எனக்குமிருந்தது.
கானமைட்டுகளின் கண்கள் மிகவும் சிறியவை. மூக்கு பன்றிகளை ஒத்திருந்தது. நன்கு பருத்திருந்த கைகளில் மூன்றே மூன்று விரல்கள். கனத்த சரீரம், சுமாரான உயரம், உடல்கொள்ள சாம்பற் பழுப்பில் சிலிர்த்த தடிமனான மயிர்கொண்ட ரோமதாரிகளென கானமைட்டுகள் பார்வைக்கு ஒன்றுபோலவே இருந்தனர். சுமக்கமுடியாத அளவிற்கு அவர்கள் உடலில் பச்சை நிறத்தில் தோலாலான பொருட்கள். காற்சட்டைகள் வேறு. அவைகளை நமக்காக ஒரு நாகரீ£கங்கருதி அணிந்திருக்கவேண்டும். ஆடைகள் புதிய மோஸ்தரில் இருந்தனவென்று சொல்லலாம். ஆகப் பெரிதாக குறைசொல்ல ஒன்றுமில்லை என்பதுபோலத்தான் இருந்தனர்.
ஐக்கிய நாட்டுசபையின் அமர்வில் அன்றையதினம் மூன்று கானமைட்டுகள் கலந்துகொண்டனர். பச்சை நிற காற்சராயுடன் உடல்பருத்த பன்றிகளைப்போலவிருந்த கானமைட்டுகள் பொதுச்சபை அங்கத்தினர்களுக்கிடையே மைய அரங்கங்கிற்கு நேர்மேலே அமைந்திருப்பதைப் பார்க்க விநோதமாக இருந்தது. உண்மையில் அப்போது பிரெஞ்சும் ஆங்கிலமும் தவிர வேறு மொழிக¨ள் அவர்களுக்குத் தெரியாதென்றபோதிலும், உறுப்பினர்கள் பேசுவதைக் காதுகொடுத்து அமைதியாகக் கேட்டதைவைத்து, எல்லா மொழிகளிலும் அவர்களுக்கு ஞானம் உண்டென்று நம்பினோம்.
இயல்பான நடத்தையையும், மனிதரிடத்தில் காட்டிய இணக்கத்தையும்வைத்து கானமைட்டுகளிடத்தில் எனக்கு ஒருவித ஈர்ப்பு உண்டாயிற்று. ஆனால் அவர்கள் விஷயத்தில் அக்கறைகொண்ட என்னைப்போன்றுவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருந்தன்ர். மனிதருக்கு உதவவேண்டுமென்பதே தங்கள் விருப்பமென்பதை எவ்வித ஆர்பாட்டமுமின்றி அவர்கள் அறிவிக்க கானமைட்டுகளை முழுக்க முழுக்க நம்பினேன். ஐக்கிய நாட்டுசபையில் ஒரு மொழிபெயர்ப்பாளனாக குப்பைகொட்டுகின்றவன் நம்பிக்கைக்குள்ள மரியாதையின் அளவு என்னவென்று உங்களுக்குத் தெரியாதா என்ன? எனினும் அவர்களின் வருகையால் பூமி பெரிய அளவில் மகிழ்ச்சியுற்றதை உணரமுடிந்தது, இதுபோன்ற அனுபவம் முன்னெப்போதும் பூமிக்கு வாய்த்ததில்லை.
மிகவும் மலிவானதென்று கானமைட்டுகளால் கடந்த அமர்வில் செயல்முறைவிளக்கமளிக்கபட்ட எரிசக்தியில் தங்கள் நாடு ஆர்வம்கொண்டிருப்பதாகவும், ஆனால் அதற்கு முன்பாக அத்திட்டம்குறித்து நன்கு ஆராய்ந்துபார்க்கவேண்டியிருக்கிறதெனவும் அர்ஜெண்டைனா நாட்டின் பிரதிநிதி கருத்து தெரிவித்தார். பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகளின் கருத்தும் மேற்கண்ட எண்ணத்தையே பிரதிபலிப்பதாக இருந்தபோதிலும் எனது கவனம் குறிப்பாக வால்டெஸ் என்பவரின் குழப்பமான உரை மீதிருந்தது. ஒன்றிரண்டு இடங்களில் மொழிபெயர்ப்பில் தடுமாற்றமிருந்தது,
இருந்தும் முடிந்தவரை ஒழுங்காகவே செய்தேன். அதே நேரம், போலந்திலிருந்து ஆங்கிலமொழி மாற்றப் பிரிவில் நண்பன் கிரேகரி, ஜான்சிவெச் உரையுடன் எப்படி மல்லுகட்டுகிறானென்று தெரிந்து கொள்ள ஆசைபட்டேன். வால்டெஸை சுமந்துகொண்டு நான் அவதிப்படுவதுபோல அவனுக்கு ஜான்சிவெச். ஒன்றிரண்டு மாற்றங்களிருந்தன, மற்றபடி ஜான்சிவெச், வால்டெஸ் உரையை அப்படியே கிளிப்பிள்ளைபோல ஒப்பித்தார். அவரது உரைக்குப் பிறகு ஐக்கியநாட்டுசபை பொதுச்செயலர் பிரான்சு நாட்டுக் குழுவை அழைத்தார். அவர்கள் குற்றவியல் அறிஞரான டாக்டர் லெவேக் என்பவரைச் சபைக்கு அறிமுகப்படுத்தினார்கள். அடுத்து சிக்கலான பல உபகரணங்கள் மண்டபத்திற்குள் வந்தன. கானமைட்டுகளை பூமிக்கு அழைத்துவர காரணமானவை எவை? பிரதிபலன்களை மறுத்து திடீரென்று தோன்றி நமக்கு பரிசினை வழங்கும் அவர்களின் உள்நோக்கமென்னவென்று உறுப்பினர்கள் சபையில்
கேட்ட கேள்விகளை ஏற்கனவே சோவியத் யூனியன் பிரதிதியால் எழுப்பப்பட்டவையென டாக்டர் லெவேக் நினைவூட்டினார்.
– சபையின் பல உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்றும், விருந்தினர்களின் (கானமைட்டுகளின்) முழு சம்மதத்தின் பேரிலும் இங்குள்ள உபகரணங்களைக்கொண்டு பரிசோதித்தோம். இப்போது உங்கள் முன்னிலையில் அவற்றை மறுபடியும் நடத்திக்காட்ட இருக்கிறோம், என்று டாக்டர் அறிவித்ததும் சபையில் சலசலப்பு. காமிராக்கள் மின்னின. தொலைக்காட்சி காமிரா ஒன்று, டாக்டர் கையாளவிருக்கும் கண்ட்ரோல் பேனல் திசைக்காய் திருப்பப்பட்டது. அதே சமயம் மேடையின் பின்புறமிருந்த அகன்ற திரையில் ஒளிபரவ வெளுத்தநிறத்தில் வட்டவடிவமான இரு பாகைமானிகள் தோன்றின. அவற்றின் இரண்டுமுட்களும் ஜீரோவிலிருக்க, வால்போன்று நீண்டிருந்த காகிதத்தின்மேல் மையுடனான சிறு முள். முழங்கையில் இரப்பர்குழாய்ச் சுற்றப்பட்டிருந்த கானமைட் ஒன்றின் நெற்றியில் டாக்டரின் உதவியாளர்கள் உலோகத்தாலான கம்பிகளை இணைத்தார்கள். வலது உள்ளங்கையில் என்னவோ ஒட்டப்பட்டிருந்தது. திரையில் ரிப்பன்போன்றிருந்த காகிதம் நகரவும், மையூட்டப்பட்டமுள் மெல்ல உதறியவண்ணம் ஏறியும் இறங்கியும் கோட்டினை வரைந்தது. அவ்வாறே இரண்டு முட்களில் ஒன்று சீராக அசைந்துகொடுக்க மற்றொன்று சட்டென்று தாவி புதிய புள்ளியைத் தொட்டு பின்னர் நகராமல் அங்கேயே இருந்தது.
– இங்கிருக்கும் உபகரணங்கள், கானமைட்டுகள் தெரிவிக்கும் தகவல்கள் உண்மையா பொய்யா என அறிய உதவுபவை. கானமைட்டுகளின் உடலமைப்பு நமக்கு புதியது, எனவே மனிதர்களிடத்தில் ஒரு தகவலின் நம்பகத் தன்மைக்குறித்து நடத்தப்படும் சோதனைகள் இவர்களிடத்திலும் சாத்தியமாவென்று பார்ப்பதே நமது பரிசோதனையின் முதல் நோக்கம். அதைக்கருத்திற்கொண்டு ஏற்கனவே சில சோதனைகளை நடத்தி முடித்திருக்கிறோம். அவற்றில் சிலவற்றை மீண்டும் உங்கள் முன்னிலையில் நடத்தவுள்ளோம், என்ற டாக்டர் முதல் பாகைமானியை நோக்கித் திரும்பினார். இக்கருவி சோதனைக்குள்ளாகும் ஜீவனின் இதயத் துடிப்பைப் பதிவுசெய்யும். அடுத்துள்ள கருவி பரிசோதிக்கப்படும் பொருளின் உடலிற் பாயும் மின்னளவைத் அதன் உள்ளங்கையில் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளிலிருந்து பெற்று நமக்குக் காட்டுகிறது அதாவது இதயதுடிப்பின் வேகம் அதிகரிக்கும் வேளையில் உண்டாகும் வியர்வையின் அளவை இக்கருவிக் காட்டும். பின்னர் டாக்டர் வால்போல நீண்டிருந்த காகிதமும் முள்ளுமிருந்த திசையைச் சுட்டிக்காட்டி- மனிதமூளை வெளிப்படுத்தும் மின் அளவை இதன் மூலம் அறியலாமென்றார். மனிதர்களிடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் பெறப்படும் தகவல்களின் நம்பகத் தன்மைக்கேற்ப அளவுகளில் பெரும் மாறுதல்களிருந்ததை ஏற்கனவே நடத்திய சோதனைகளில் அறிய முடிந்ததென்று டாக்டர் விளக்கினார்.
அடுத்து இரண்டுவிதமான அட்டைகளை டாக்டர் கைகளில் எடுத்துக்கொண்டார். அதிலொன்று சிவப்பாகவும் மற்றொன்று கறுப்பாகவும் இருந்தது. சிவப்பு அட்டை ஒரு மீட்டர் நீளமும் ஒருமீட்டர் அகலமும் கொண்டு சதுரவடிவத்திலிருந்தது. கறுப்புநிற அட்டை ஒன்றரைக்கு ஒன்று என்ற அளவில் செவ்வக வடிவிலிருந்தது. சோதனைக்கு உட்பட்டிருந்த கானமைட்டைப் பார்த்து டாக்டர் கேட்டார்.
– இவ்விரண்டு பொருட்களில் எது மற்றதைக்காட்டிலும் மிகவும் நீளமானது?
– சிவப்பு – என்று பதில் வந்தது.
பாகைமானியிலிருந்த இரு முட்களும் பதறித் தாவின. வால்போன்றிருந்த தாளில் எழுதப்பட்ட வரைபடத்திலும் அது எதிரொலித்தது.
– கேள்வியைத் திரும்பவும் கேட்கிறேன். இவ்விரண்டு அட்டைகளிலும் எது மற்றொன்றைக் காட்டிலும் மிகவும் நீளமானது.
– கறுப்பு நிற அட்டை
இம்முறை வாகைமானியின் முள் சீராக முன் நகர்ந்தது
– எங்கள் கோளிற்கு எப்படி வந்தீர்கள்?
– நடந்து வந்தேன்.
மீண்டும் முன்புபோலவே பாகைமானியில் முள் ஆவேசம் கண்டதுபோல தாவிக்குதிக்க, சபையிலிருந்த உறுப்பினர்கள் சிரித்தனர்.
– மறுபடியும் கேட்கிறேன். எங்கள் கோளிற்கு எப்படி வந்தீர்கள்.
– அஸ்ட்றனோ•ப்பில் வந்தோம்
இம்முறை வாகைமானி அமைதியாக இருந்தது. அமர்ந்திருந்த பொதுச்சபையின் பிரதிநிதிகள் பக்கம் திரும்பிய டாக்டர்:
– சக ஆய்வாளர்களும் நானுமாக பலமுறை இதுபோன்ற சோதனைகளை நடத்தி இக்கருவிகளின் இயக்கத்தைக் குறை சொல்லஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தோம். இனி (அவரது பார்வை மீண்டும் சோதனைக்குட்படுத்தியிருந்த கானமைட் திசைக்குத் திரும்பியது) நம்முடைய மதிப்பிறகுரிய விருந்தினரிடம், கடந்த அமர்வின்போது சோவியத் நாட்டு உறுப்பினர் எழுப்பிய கேள்வியைக் மீண்டும் கேட்கிறேன்: நீங்கள் பூமிவாழ் மக்களுக்கு விலைமதிப்பற்ற பரிசினை அளிக்க முன்வந்ததற்கான நோக்கமென்ன?
சோதனைக்குட்பட்ட கானமைட் எழுந்து பிரெஞ்சுமொழியில் பதில் கூறியது:
– தத்துவ அறிஞரொருவரின் மூளைக்குள்ள சூட்சமங்களைக்காட்டிலும், கல்லுக்குள் அதிக சூட்சமங்கள் உண்டென்பது” எங்கள் கோளில் வழக்கிலுள்ள பழமொழி. புத்திகூர்மைகொண்ட உயிரொன்றின் செயல்பாட்டுக் காரணங்கள் சில நேரங்களில் தெளிவற்றவைபோல தோற்றம் தரினும் இயற்கையின் சிக்கல்மிகுந்த இயக்கப்பண்புகளோடு ஒப்பிடுகிறபோது அவை எளிதிற் புரிந்துகொள்ள கூடியவையே. அதுபோலவே இப்புவியைச் சேர்ந்த மக்களும் எங்கள் மீது நம்பிக்கைவைத்து சொல்வதைப் புரிந்துகொள்ளவேண்டும்: யுத்தங்களற்ற அமைதியான சூழலொன்றை உங்களுக்கு உருவாக்கித்தரவேண்டுமென்பதே எங்கள் அவா. அமைதியானன சூழல்தரும் பலன்கள் எங்கள் கோளில் ஏராளம். இதொன்றும் புதிதல்ல, கடந்த காலத்தில் பிரபஞ்சமெங்கும் பல்வேறு இனமக்களின் அனுபவம் அது. பட்டினி, யுத்தம், துன்பம் ஆகியவற்றிலிருந்து பூமி விடுவிக்கப்பட்டதென்ற செய்தியே நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் பிரதிபலன்.
வாகைமானியின் முட்கள் அசைவின்றிக் கிடந்தன. உக்ரைன் நாட்டு அங்கத்தினர், தமக்குச் சில ஐயங்கள் இருப்பதாக எழுந்தார். ஆனால் பொதுச் சபையின் காரிதரிசி அவரை அனுமதிக்கவில்லை கூட்டத் தொடருக்கான நேரம் முடிந்துவிட்டதென அறிவித்தார்.
பொதுச்சபை மண்டபத்திலிருந்து வெளியேறுகிற நேரத்தில் கிரேகரியை சந்தித்தேன். கோபத்தில் முகமெல்லாம் சிவந்திருந்தது.
– இதெல்லாம் என்ன விளையாட்டு, யார் ஏற்பாட்டில் இது நடந்தது? – என்று கேட்டான்.
– செய்துகாட்டப்பட்ட விளக்கங்களில் குறைசொல்ல ஒன்றுமில்லையென்பதுதான் என் கட்சி-என்றேன்
– எனக்கு நம்பிக்கை இல்லை. திட்டமிட்டு நம்மை முட்டாளாக்கியிருக்கிறார்கள். அபத்தமான தொரு நகைச்சுவை காட்சி அரங்கேறியிருக்கிறது. அவர்கள் உண்மையானவர்களென்றால் இப்படி சட்டென்று கூட்டத்தை முடித்திருக்க வேண்டாம்.
– நாளைய கூட்டத்தில் விவாதிக்கச் சந்தர்ப்பம் இருக்கிறதே.
– நாளைய தினம் டாக்டர், அவரது கூட்டாளிகள், கொண்டுவந்த கருவிகளென்று அவ்வளவுபேரும் பாரீஸில் இருப்பார்கள். உனக்கு புத்தி என்ன ஆயிற்று? எப்படி உன்னால் அந்த மிருகங்களை நம்பமுடிகிறது?
எனக்குக் கோபம் வந்தது.
– உனக்குப் பிரச்சினை அவர்களின் வெளித்தோற்றம்தானே தவிர செயல்பாடுகளல்ல -அவனிடம் பதிலைச் சொன்னேன்:
– அப்படித்தான் வைத்துக்கொள்- கோபத்துடன் விடைபெற்றான்.
மறுநாள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கானமைட்டுகள் முன்வைத்த புதிய எரிசக்தி குறித்த ஆய்வு அறிக்கைகள் மளமளவென்று குவிந்தன. அத்தனை முடிவுகளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. மிகமிக மலிவானதொரு விலைக்கு வழங்கப்படும் உலோகத்தாலான சிறு பெட்டிகள் ஓர் அணுமின்கலத்தைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தியை ஓய்வில்லாமல் வழங்கும் என்பதை நம்புவதா கூடாதா என்பதில் எனக்குங்கூட சிக்கலிருந்தது. விலை மிகவும் குறைவென்பதால் ஆளுக்கொன்று வைத்துக்கொள்ளலாம் என்பதுபோல உலகம் முழுக்கப் பேச்சு. பதினேழு நாடுகள் பெட்டிகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளைக் கட்டத் தொடங்கிவிட்டதாகப் பிற்பகல் செய்தி. மறுநாள் கூட்டப்பட்ட பொதுச்சபை அமர்வில் வேறொரு கருவியொன்றை கானமைட்டுகள் அறிமுகப்படுத்தினார்கள்: நைட்ரேட் அமில உப்பை உபயோகிப்பதன்மூலம் சாகுபடிக்கு உகந்த நிலங்களில் விவசாய உற்பத்தியை 60 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடுவரை அதிகரிக்கச் செய்யலாமென்றார்கள். கானமைட்டுகள் இடம்பெறாத தலைப்புச் செய்திகளே இல்லையென்றாயிற்று. மறுநாள் பத்திரிகையாளர்களைக் கூட்டிய கானமைட்டுகளிலொன்று வேறொரு அறிவிப்பொன்றை விடுத்தது. மேசையில் மூன்று ஊன்றுகால்களில் நிறுத்திவைக்கபட்ட ரி•பிளெக்டருடன் கூடிய சிறியதொருபெட்டியைச் சுட்டிக்காட்டி:
– இக்கருவி மனிதரினத்தித்திற்கு நாங்கள் தரும் மூன்றாவது கொடை. இதற்கு முன்னதாக நாங்கள் வழங்கிய பரிசுகளுக்கு எவ்விதத்திலும் இது குறைந்ததல்ல. உணவுபொருட்களுக்கான வழிமுறைகளை தங்குதடையின்றி பெருக்கிக்கொள்ள இப்புதிய சூட்சமம் உதவும் என்ற கானமைட் எதிரில் நின்ற தொலைக்காட்சிப் படக்குழுவினரை நெருங்கிவர சைகை செய்து ஆங்கில வாசகங்கள் கொண்ட அட்டையொன்றைத் தூக்கிப் பிடித்தது. பின்புறமிருந்த திரையில் அவை பெரிதுபடுத்திக்காட்டப்பட்டன.
– உலகமெங்கும் இது நேரடியாக ஒளிபரப்பாகிறது என்றார்கள். மக்கள் அனைவரும் தங்கள் புகைப்படக் கருவிகள் மூலம் அட்டையிலுள்ள இக்கருவியின் செய்முறை விளக்கத்தைப் படம்பிடித்துக் கொண்டு கருவியினை சுலபமாகக் கையாளலாமென்று கூற பொதுச்சபை காரியதரிசி ஏதோ கேட்க விரும்புவதுபோல குறுக்கிட்டார். ஆனால் கானமைட் அவரது குறுக்கீட்டைப் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
– இக்கருவி உருவாக்கிதரும் வெளி வெடிமருந்து ஆபத்துகளிலிருந்து முற்றாகத் தவிர்க்கப்பட்டது. எத்தகைய குண்டுவெடிப்புக்கும் இனி சாத்தியமில்லை
கேட்டுக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் சட்டென்று அமைதி சூழ்ந்தது. அவர்கள் கானமைட் சொன்னதைப் புரிந்துகொள்ள தடுமாறினர். அவர்களுக்குள்ள குழப்பத்தை புரிந்துகொண்டதுபோல அது விளக்கிச் சொல்ல ஆரம்பித்தது.
– ஒரு நாட்டின் ஞானம் அனைவருக்கும் சொந்தம். ஒரு நாடு மற்றொன்றை அழித்தலென்பது நடவாது. அதாவது இனி உலகில் யுத்தத்திற்கு இடமில்லையென்று தடாலடியாக அறிவித்தது.
பொற்காலத்தின் பலரையும் வியப்படையவைக்கும் செய்தியென அதை நாங்கள் கருதியதில் உண்மையிருந்தது. பெட்ரோல் -டீசல் முதலானவைகளினாற்கூட இனி உயிரிழப்புக்கான சாத்தியமில்லை என்பதுதான் சுவாரஸ்யமான தகவல். ஆக மொத்தத்தில் நவீன ராணுவத்தைக் கட்டமைப்பதற்கோ செயல்படுத்துவதற்கோ இனி இயலாது. மீண்டும் எல்லோரும் வில்லையும் அம்பையும் நம்புவதைத் தவிர வேறுவழிகளில்லை என்றாலும் அணுகுண்டுகள் மற்றும் இன்னபிற ஆயுதவகைகளுக்குப் பழகிப்போன ராணுவத் துறையினர் அதில் ஒருபோதும் மனநிறைவை அடையப்போவதில்லை. கானமைட்டுகளின் பிற உபகரணங்கள் பூமியைச் செல்வச் செழிப்புடன் மாற்றுமென்றால் நாடுகளுக்கிடையில் யுத்தங்கூட அவசியமற்றதுதான்.
உண்மை அறியுங்கருவியைக்கொண்டு கானமைட்டுகளின் இப்புதிய பரோபாகாரம் உண்மையில் நம்பகத்தன்மையுடையதா என்று அறிவதற்கோ, அவர்களுடையை அரசியல் கொள்கையை தெரிந்துகொள்வதற்கோ ஒருவரும் முயற்சிக்கவில்லை. கிரேகரிக்குக்கூட அது குறித்த கவலைகள் இருந்தன, வழக்கம்போல சந்தேகங்களுமிருந்தன. எனினும் சந்தேகத்தையோ கவலைகளையோ உறுதியாக வெளிப்படுத்திக்கொள்வதற்குப் போதுமான ஆதாரங்களின்றி தவித்தான். கூடிய சீக்கிரம் ஐக்கிய நாட்டு சபைக்கெல்லாம் வேலையில்லை என்பதைப் புரிந்துகொண்டு எனது மொழிபெயர்ப்பாளன் பதவியிலிருந்து விலகிக்கொண்டேன். வழக்கமான கூச்சலும் குழப்பமுமாக ஐக்கியநாட்டு சபை இயங்கிய போதிலும், ஓரிரு ஆண்டுகளில் அது முடங்கிபோகுமென்று தெரியும். உறுப்பு நாடுகள் அனைத்தும் வளத்தை அறியவிருந்தவேளையில் ஐக்கிய நாட்டு சபையின் நாட்டாமைக்கு அவசியந்தானென்ன?
கானமைட்டுகளின் தூதரகத்தில் ஒரு மொழி பெயர்ப்பாளர் வேலைகிடைக்க சேர்ந்துவிட்டேன். மறுபடியும் நண்பன் கிரேகரியைச் சந்திக்கும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. அவனை பார்த்ததில் சந்தோஷமென்றாலும், எந்நேரமும் கானமைட்டுகளை குறைகூறிக்கொண்டிருந்த அவனுக்கு அங்கென்னவேலை இருக்கமுடியுமென நினைத்தேன்.
– கானமைட்டுகளுக்கு எதிரணிகாரனாயிற்றே, இங்கே வந்தது எப்படி. அவர்கள் பரோபகாரத்தில் உனக்குத் திடீரென்று நம்பிக்கை வந்துவிட்டதென்று சொன்னால் நான் நம்பமாட்டேன்.
இப்படியொரு நேரரிடையான தாக்குதலை அவன் எதிர்பார்க்கவில்லை. தடுமாறினான்.
– அவர்கள் தோற்றத்திற்கும் செயலுக்கும் சம்பந்தமில்லை. வேறென்ன சொல்லமுடியும் என்ற அவனது சுருக்கமான பதிலுக்குமேல் ஒன்றுமில்லையென்ற நிலையில் ஏதாவது குடிக்கலாமென்று தூதரகத்தின் வரவேற்புக் கூடத்திற்கு அழைத்தேன். அங்கே எங்களைத் தவிர வேறு ஊழியர்களில்லையென்பதால் சகஜமாக உரையாடமுடிந்தது தவிர இரண்டாவது முறையாக எடுத்துக்கொண்ட மது அவனைத் தூண்டியிருக்கவேண்டும் நிறைய பேசினான்.
– கானமைட்டுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆர்வம் என்னிடத்தில் எப்போதும்போல குறையாமலிருக்கிறது. அவர்களைப் பார்த்தமாத்திரத்தில் இப்பொழுதும் வெறுக்கிறேன். அதற்கான காரணத்தை நியாயப்படுத்தவும் என்னால் முடியும். அவர்களுக்கு மனிதர் நலமே குறியென்ற உனது கருத்து சரி. ஆனால் அவர்கள் இதுவரை சோவியத் உறுப்பினர்கேட்ட கேள்விக்கு நேரிடையாக பதிலேதும் சொல்லவில்லை என்பதைக் கவனித்தாயா?
அவன் கூற்றிலிருந்த நியாயத்தைப்புரிந்துகொண்டு நான் தலைகுனிந்தேன். அவன் தொடர்ந்தான்.
– என்ன செய்யபோகிறோமென்று கூறினார்கள். பிறகு பூமியில் வளத்தையும் அமைதியையும் நிலைநாட்டப்போவதாகவும் சொன்னார்கள். ஆனால் இவைகளெல்லாம் எதற்காகவென்று ஒருபோதும் நமக்கு விளக்கினவர்களல்லவே.
– மதபோதகர்களாக இருக்குமோ…
– ஒரு மண்ணுமில்லை. எதையாவது உளறிக்கொண்டிராதே. மதப்போதகர்களென்றால் பின்னணியில் மதம் இருக்கவேண்டும். அதற்கான அறிகுறிகள் சிறிதுமில்லை. வந்திருப்பவர்கள் மதபோதகர்களே அல்ல. அற நிறுவனங்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு. அவர்கள் இனத்தின் சார்பாக இங்கே வந்திருக்கிறார்கள்.
. நம்முடைய சுபிட்ஷத்தால் ஒரு நாட்டிற்கும் அதன் குடிகளுக்கும் கிடைக்கும் இலாபமென்ன?
– பண்பாட்டு பயன்களென்று?
– மண்ணாங்கட்டி! வேறு ஏதோ காரணங்கள் இருக்கவேண்டும். வெளிப்படையாகத் தெரியவில்லை. அவர்கள் உடற்கூறுகூட அதில் சம்பந்தப்பட்டிருக்கலாம். அவர்கள் பரோபரிகள் அல்ல. அவர்கள் நோக்கில் ஏதோவொரு எதிர்பார்ப்பு நிச்சயமாக இருக்கிறது.
– கானமைட்டுகள் தூதரகத்தில் உன்னைப் பார்க்க நேர்ந்ததற்கும் அதுதான் காரணமா? அது என்னவென்று கண்டுபிடிக்கப்போகிறாயா?
– ஆமாம். நீ நினைப்பது சரி. அவர்கள் கோளிற்குப் பத்தாண்டுகால ஒப்பந்தத்தில் செல்லவிருந்த பரிவர்த்தனை குழுவில் இடபெற விண்ணப்பித்திருந்தேன். ஆனால் அறிவித்த ஒருவாரகாலத்திலேயே குழுவுக்கு வேண்டிய அளவுக்கு உறுப்பினர்கள் கிடைத்துவிட்டார்களாம். அதற்குப் பிறகு இங்கே வரலாமென்று முடிவெடுத்தேன். அவர்களுடைய மொழியையும் கற்றுவருகிறேன். மனிதர்களுடைய சரீர அமைப்புக்கும் அவர்கள் கையாளும் மொழிக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் உரையாடுவதை ஓரளவு இப்போது புரிந்துகொள்கிறேன். அதிலிருந்து எனக்குச் சிலதகவல்கள் கிடைத்திருக்கின்றன. கூடிய சீக்கிரம் எனது சந்தேகங்களுக்கு விடை கிடைத்துவிடும்.
– உனது முயற்சி பலிக்கட்டும்.
பிறகு இருவருமாக அவரவர் பணிக்குத் திரும்பினோம். அச்சந்திப்பிற்குப் பிறகு நாங்களிருவரும் அடிக்கடிப் பார்த்துக்கொள்வோம். அவ்வப்போது அவனது தேடுதலில் ஏற்பட்ட முன்னேற்றம்பற்றியும் விசாரிப்பேன். ஒருமாதத்திற்குப்பிறகு வழக்கம்போல சந்தித்தபோது சோர்ந்திருந்தான். கானமைட்டுகளுடைய புத்தகங்களொன்றை எப்படியோ பெற்று அதைப் புரிந்துகொள்ள முயற்சித்தான். சீனர்கள் எழுத்துவடிவில் சித்திரங்கள் போலிருந்த அதை வாசிப்பதற்கு எத்தனை ஆண்டுகளானாலும் செலவிடத் தயாரென்றிருந்தவன் என்னுடைய உதவியையும் நாடினான்.
எனது மனநிலைக்கு மாறாக எனக்கும் அதில் ஆர்வமேற்பட்டது. இருவருமாக அதற்கு அதிகக் காலம் செலவிடவேண்டிவருமென்று தோன்றியது. வாசிப்பதற்கு உதவும் வகையில் கானமைட்டுகள் வெளியிட்டிருந்த பிரசுரங்கள், ஊழியர்களின் உபயோகத்திற்கென்றிருந்த ஆங்கிலம் -கானமைட் மொழி அகராதி ஆகியவற்றைத் துணைக்கு வைத்துக்கொண்டு பல மாலைப்பொழுதுகள் இருவருமாக சேர்ந்து முயற்சித்தோம். களவாடபட்டப் புத்தகத்தை வைத்துக்கொண்டு நாங்கள் செய்வது தப்பானதென்று தொடக்கத்தில் மனசாட்சி உறுத்தியது, எனினும் நாளாக நாளாக ஆர்வத்தோடு ஈடுபட்டேன். மொழிபெயர்ப்புத் துறையில் நான் பணியாற்றியது அதற்குக் காரணமாக இருக்கவேண்டும்.
ஒரு சில வாரங்களில் புத்தகத்தின் தலைப்புக்கு என்னபொருளென கண்டறிந்தோம்: ‘மனிதர் உபயோகம்’ என்றிருந்தது. தூதரகத்தில் புதிதாகப் பணிசெய்யவரும் ஊழியர்களுக்கான புத்தகமாக இருக்கவேண்டுமென்பது எங்கள் ஊகம். மாதத்திற்கு ஒரு கும்பல் என்பதுபோல இப்போதெல்லாம் பணிக்கென அடிக்கடி தொடர்ந்து பலர் வந்துகொண்டிருந்தனர். ஆய்வுச்சாலைகள், மருத்துவமனைகள், பிற நிறுவனங்களென நித்தம் நித்தம் தோன்றிக்கொண்டிருந்தன. கிரேகரியைத் தவிர கானமைட்டுகளைச் சதேகிப்பவர்கள் எவரும் பூமியிலில்லை என்ற நிலைமை. அப்படி யாரேனும் ஒன்றிருவர் இருந்தால் அநேகமாக திபெத்தில் எங்கோ ஒரு மூலையில் அவர்கள் இருக்கக்கூடும்.
கானமைட்டுகள் வந்த ஒருவருடகாலத்திற்குள் ஏற்பட்ட மாறுதல்கள் எங்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தன. நிரந்தர ராணுவமென்று எங்குமில்லை. பசி பட்டினி, பஞ்சம் போன்ற சொற்களுக்கும் உபயோகமில்லை, வேலையின்மை என்ற ஒன்றில்லை. தினசரியை புரட்டினால் சட்டென்று கண்களிற்படக்கூடிய அணுகுண்டு வீச்சு, V-2 போன்ற செய்திகளில்லை. செய்திகள் அனைத்தும் நல்லவைகளாக இருந்தன. தினசரிகளில் தப்பானவைகளையும், துயரத்தையும் வாசித்தவர்களுக்கு இதுபோன்ற செய்திகளுக்குப் பழகிக்கொள்ள கடினமாக இருந்தது. கானமைட்டுகள் தற்போது ஏதோ மனிதரினத்தைப் பற்றிய உயிர்வேதியியலில் ஆர்வம்காட்டுவதாக எங்கும் பேச்சு. தூதரகத்தில் பணியாற்றும் மனிதரை நல்ல ஆகிருதியும் திடகாத்திரமும் ஆரோக்கியமுங்கொண்ட மாமனிதராக மாற்றுவ் முயற்சிகள் நடந்தன. அவர்களுக்குப் புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றின் பாதிப்புகள் இனியில்லை என்றார்கள். கிரேகரியைச் சந்தித்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகியிருந்தன. கனடாவிற்கு சென்றுவர எனக்கும் வெகுகாலமாக ஆசையிருக்க விடுமுறையிற் சென்றுவந்தேன். திரும்பிவந்தபோது கிரேகரியிடம் மாற்றம் இருப்பதைக்கண்டேன்.
– உனக்கு என்ன ஆச்சு? ஏதோ பேயறைந்தவன்போல இருக்கிறாய்.
– இங்கே பேசவேண்டாம். வா.. வரவேற்பு மண்டபத்திற்குப் போய் பேசலாம்.
அவனைத் முன்னே போகவிட்டுத் தொடர்ந்து சென்றேன். கிளாஸ் நிறைய விஸ்கியை ஊற்றிக்கொடுத்தான். அவன் சொல்வதைக் கேட்பதற்கு என்னைத் தயார்படுத்துகிறான் என்று நினைத்துக்கொண்டேன்.
– சரி என்ன ஆச்சு கொஞ்சம் செல்லேன்- நான்.
– அடுத்ததாக புறப்படவிருக்கும் பரிவர்த்தனைகுழு பட்டியலில் கானமைட்டுகள் என்னைச் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். உன்னுடைய பெயரும் அப்பட்டியலில் இருக்கிறது. இல்லையெனில் உன்னிடம் அதுபற்றி பேசியிருக்கமாட்டேன்.
– சரி நல்லதுதானே.
– அவர்கள் நாம் நினைப்பதுபோல உபகாரிகள் அல்ல.
– என்ன சொல்ல வருகிறாய்?
– அவர்கள் உபகாரிகள் அல்ல என்று சொல்லவந்தேன்.
அதை மறுக்கின்றவகையில், ஏற்கனவே பூமியிருந்த நிலையை விளக்கினேன். இன்று அதனை அவர்கள் சொர்க்கமாக மாற்றி இருக்கிறார்கள் என்றேன். அதை ஆமோதிப்பதுபோல தலையை ஆட்டினான்.
– அப்புறமென்ன? உண்மை அறியும் கருவியால் நடத்தப்பட்ட சோதனைகளை நீ சந்தேகிக்கிறாய் இல்லையா?
– அறிவுகெட்ட முண்டமே. நான் அப்போதே என்ன சொன்னேன், வார்த்தைக்கு வார்த்தை அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொண்டால் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். அதை நான் மறுத்ததில்லை.
– சரி அந்தப் புத்தகத்திற்கு வருவோம். ‘ மனிதர் உபயோகம்’ என்ற அதில் ஏதாவது முரணானதென்று சொல்ல இருக்கிறதா என்ன? உன் எதிர்பார்ப்பிற்கேற்ப அதில் படிக்க எதுவுமில்லையா? சொல்லப்பட்ட பொருளுக்கேற்ற புத்தகம்தானே. நீ என்ன நினைக்கிறாய்?
– அப்படி இப்படியென்று புத்தகத்தின் முதல்பத்தியை ஒருவழியாகப் புரிந்துகொண்டேன். ஆனால் நீ நம்புவாயோ இல்லையோ அதைப்படித்ததிதிலிருந்து ஒரு வாரமாக எனக்கு உறக்கமில்லை.
– ஏன்?
– அது ஒரு சமையல் புத்தகம் – என்றவன் விரக்தியுடன் புன்னகைத்தான். விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தது.
——————————————————————————
- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்
- விஸ்வரூபம் தொடர் பற்றி
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4
- இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை
- சமஸ்கிருதம் கற்போம் பற்றியது
- கனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்
- கடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் ?
- சாப விமோசனம்
- பேரழிவுப் போராயுதம் !
- பெண்
- சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)
- இவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா
- இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்
- பொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்
- செவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்
- மொழியின் துல்லிய உலகம்
- நகரத்தார்களும் ஆன்மீகமும்
- புகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை
- தொலைதல்
- திண்ணை ஆசிரியருக்கு
- கால்டுவெல் – வல்லுறவு குறித்து
- RIG VEDA UPAKARMA
- காட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா
- Monthly screening of Documentaries and Short films
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2
- முள்பாதை 41
- பரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்
- பெண்ணிடம் ரகசியம்
- முள்ளிவாய்க்கால்!
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7
- மனிதர் உபயோகம்
- கருவண்டு
- வண்டுகள் மொய்க்கும் பூ
- கால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7
- பூனைகளுக்கு ஒரு நினைவாஞ்சலி!
- அமைதிப் பயணம்
- வேதவனம் விருட்சம் 98
- உறங்கச் செல்லாதே மீண்டும் ! = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2
- ஓ இரவே ! – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5
- உன் கனவு வருமெனில்…
- பொன் நிறப் பருந்து
- அவளின் பிரம்மன்
- இது சாயங்காலம் ….!