புதியமாதவி சங்கரன்
ஞாயிறு விடுமுறை தினமாதலால்
நிறைய பெண்கள் அமைப்புகள் உலக மகளிர் தினத்தை ஒரு நாள் முன்னதாக இன்றே
விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தன.
. பகுஜன் கிளப் என்றழைக்கப்படும் மராத்திய பெண்கள் அமைப்பு நேற்று முழுநேர
பெண்கள் கருத்தரங்கு நடத்தினார்கள். தாதரில் அம்பேத்கர் பவனில் நிகழ்வு.
காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை.
ஆனந்த்ராஜ் அம்பேத்கர் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
‘நான், சாவித்திரி பாய் புலே, பேசுகிறேன்’ என்ற ஓரங்க நாடகம்.
நாடகத்துறையில் நவீனத்துவம் கலக்கிக் கொண்டிருக்கும் போது ரொம்பவும்
சாதாரணமாக வெறும் வசனங்களை மட்டுமே நம்பி நாடகத்தை இயக்கி இருந்தார்கள்.
அப்போது மணி.. காலை 11. அரங்கத்தை விட்டு வெளியில் வந்து வீட்டுக்கு போன்
செய்தேன். கணவர் செல் பேசி ஒலித்துக் கொண்டே இருந்தது.
‘எங்கே போய்த் தொலைந்தாரோ தெரியலையே’ கோபம் வந்தது.
ஞாயிற்றுக்கிழமை ஆச்சே.. டைம்ஸ், மிரர், டெக்கான் என்று எல்லா பேப்பரையும்
பரீட்சைக்கு உட்கார்ந்து படிக்கிற மாதிரி பேப்பர் படிக்கிற மனுஷன்.
அருகிலிருக்கும் கிட்சனில் குக்கர் விசில் போட்டு அப்பார்ட்மெண்டே அலறினாலும்
பேப்பர் படிக்கும் போது மட்டும் அவர் செவிப்பறைகள் ஒலி அலைகளின் எல்லைகளுக்கு
அப்பால் இருக்கும். கடவுளே.. இப்போ என்ன செய்வது ?
மகனின் செல் பேசிக்கு அழைத்தால் அவன் அழைப்பவர் யார் என்பதைப் பார்த்துவிட்டு
சுவிட்ச் ஆஃப் செய்வது தெரிந்தது.
வேலைக்காரி வந்தாளா என்ன, காலையில் சாப்பிட சப்பாத்தியும் காலிபிளவர் பாஜியும்
செய்து கொடுக்க சொல்லி இருந்தேன். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை சப்பாத்தி போடற
கமலாபாய் வருவதில்லை. காலையிலேயே எனக்கு வீட்டிலிருந்து வர வேண்டி இருந்ததால்
அவளிடம் சொல்லி இருந்தேன். ரொம்பவும் டென்ஷனாக இருந்தது.
women empowerment, atrocity bill , dalith women differ from other women, hinduism
என்று கருத்தரங்கம் சூடு பிடித்தது. கருத்தரங்கில் பேப்பர் வாசித்தவர்களும்
கலந்து கொண்டவர்களும் முனைவர்களாகவும் தன்னார்வ தொண்டு நிறுவன
தலைவர்களாகவும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் சொல்லிக்கொள்கிற
மாதிரி பதவிகளில் இருப்பவர்களாகவும் எழுத்துலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களாகவும்
இருந்தார்கள். அவர்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பாக கருத்தரங்கைப் பயன்படுத்திக்
கொண்டேன். மதிய உணவு.. மணக்க மணக்க புலாவ். சாப்பிடும் போது வீட்டுக்கு
ஒரு போன் போட்டேன். வேலைக்காரி இன்னும் வரவில்லை என்று மகன் சொன்னான்.
பத்து பாத்திரம் தேய்த்து வீடு பெருக்கி துடைத்து துணிகளை வாசிங் மிசினில் போட்டு
எடுத்து காயப்போட்டு காய்ந்த துணிகளை எடுத்து ஒழுங்காக மடித்து வைத்துவிட்டு
செல்வது தான் லஷ்மியின் வேலை. அவள் வரவில்லை என்றால் அவ்வளவுதான்.
எனக்கு ரத்தக் கொதிப்பே வந்துவிடும். கருத்தரங்கில் கடைசி வர இருக்க முடியுமா?
கிட்சனில் சனிக்கிழமை மாலை சாய் குடித்த கப் முதல் ஞாயிற்றுக்கிழமைக்கான
அதிகப்படியான பாத்திரங்கள். வீடு பெருக்குவது .. எல்லாவற்றையும் நினைத்தவுடனேயே
இடுப்பு வலியும் முதுகு வலியும் தலைவலியுடன் சேர்ந்து வந்த மாதிரி இருந்தது.
ஒருவழியாக மாலை 7 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டேன். கிட்சனுக்குள் நுழையவே
பயமாக இருந்தது. ஒரு வழியாக மனசைத் திடப்படுத்திக் கொண்டு எட்டிப் பார்த்தேன்.
அங்கங்கே சிதறிக்கிடந்த பாத்திரங்களை எடுத்து ஒன்றுக்குள் ஒன்றாகப் போட்டு
சிங் மேடையில் ஓரமாக வைத்தேன். .
100 வது மகளிர் தினம், 08 மார்ச் 2010. திங்கட்கிழமை.
என் கைபேசி மகளிர்தின வாழ்த்துகளின் குறுஞ்செய்திகளால் நிரம்பி வழிந்தது.
பெண்கள் தின வாழ்த்து சொல்லும் தோழியர்/ தோழர்களின் தொலைபேசி அழைப்பில் சிரித்து பேசி
நன்றி சொல்லி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டும் இருக்கிறேன்.
என் கட்டுரைகள் இரண்டு பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. சென்னையிலிருந்து வெளிவரும்
பெண்கள் இதழிலும் மும்பையிலிருந்து வெளிவரும் நாளிதழிலும் வந்திருந்தன.
சென்னை, மும்பை தோழர்கள் பலர் கட்டுரையை வாசித்துவிட்டு போன் செய்தார்களா
தெரியவில்லை. யாரும் கட்டுரையின் எந்தச் செய்திகளையும் குறிப்பிட்டோ அல்லது
என் புத்திசாலித்தனமானக் கேள்விகள், அறிவிஜீவிதம் கொப்பளிக்கும் தீர்வுகள்
எதைப் பற்றியும் பேசவில்லை. பொத்தம் பொதுவாக ‘உங்கள் கட்டுரை வாசித்தேன்,
நல்லா இருந்திச்சி..’ என்றார்கள். என் ஒவ்வொரு வாக்கியங்களையும் உட்கார்ந்து
அலசி ஆராய்ந்து அவர்கள் பேச வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதும் தவறுதான்.
ஒரு வழியாக என் சப்பாத்தி போடுகிற கமலாபாயும் பாத்திரம் தேய்க்கிற லஷ்மியும்
திங்கட்கிழமை வேலைக்கு வந்துவிட்டார்கள்.
ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வராததால் இருந்த கோபத்தில் இரண்டு பேருக்கும்
நல்ல டோஸ் விட்டேன். அப்புறம் தான் மனசிலிருந்த பாரம் இறங்கியது மாதிரி
இருந்தது. பால்கனி ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டே
“33% women’s quota nears delivery after 14 yr labour” என்ற தலைப்பு செய்தியை
ரசித்து வாசிக்க ஆரம்பித்தேன்.
————
- மொழிவது சுகம் 11-: நமக்குள் உள்ள இன்னொருவன்
- ஓட்டை பலூன்
- பாவனைப்பெண்
- வேத வனம் விருட்சம் 76
- நித்யானந்தாவும் நேசக்குமாரும்
- மகளிர் தினம்
- எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி
- இந்திய மொழிச் சிறுகதைகளில் பெண்கள் படைப்பில் பெண்கள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -5
- செல்வராஜ் ஜெகதீசன் – மனக் குறிப்புகளின் புத்தகம்
- தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்
- ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -1
- முக்காட்டு தேவதைகள்
- எனது மண்ணும் எனது வீடும்
- எப்போதும் முந்துவது…
- கனவு தேசம்
- எச்சரிக்கை……!
- அவர்கள் காதலிக்கட்டும்..!
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- முப்பத்து மூன்று!
- மொழிக் குறிப்புகள்
- அர்சால்
- முள்பாதை 20
- துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை
- ஒரு மகள்.
- எங்கோ பார்த்த முகம்
- அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -8
- உதிர்ந்த இலைகள்