போராட்ட ஆயுதங்கள்

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, ‘நான் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்’ என்றார். அவருடைய பேச்சின் வேகம், கோபம் எல்லாம் நியாயமானவைதான். ‘உண்ணாவிரதம் இருந்து என்ன சாதிக்கப் போறீங்க?’ என்றேன். நான் அவருடைய கருத்தை ஆதரிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டுவிட்டார் போலும். அப்புறம் பேசவில்லை.

கடந்த சில மாதங்களாக, பல இடங்களில், ‘உண்ணாவிரத போராட்டத்தைப்’ பார்க்கிறேன். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர், சாலைப் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் என்று பல தரப்பினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதைப் பார்க்கிறேன். பொதுவாக இதெல்லாம் ஒரு நாள் உண்ணாவிரதங்கள். காலையில் தொடங்கி, மாலையில் முடிந்துவிடும் உண்ணாவிரதங்கள் இவை. இதிலேயே கொஞ்சம் வித்தியாசங்களும் உண்டு. தொடர் உண்ணாவிரதம், சாகும்வரை உண்ணாவிரதம் என்று கோரிக்கைகளின் தீவிரத்துக்கு ஏற்ப, உண்ணாவிரதங்களில் மாற்றம் ஏற்படும். தனிநபர் உண்ணாவிரதங்கள், கூட்டு உண்ணாவிரதங்கள் என்று காரணங்களுக்கு ஏற்ப, நபர்களின் எண்ணிக்கையும் மாறுபடும்.

இதேபோல், என் அப்பா வேலை செய்த காலத்தில், அவருடைய அலுவலக வாசலில், வாயில் கூட்டம், கோஷம் எழுப்பும் போராட்டம், தர்ணா என்றெல்லாம் செய்வார்கள். ஒருவர் மைக் முன்னே நின்றுகொண்டு தங்கள் கோரிக்கைகளைக் கோஷங்களாக எழுதிவைத்துக்கொண்டு வாசிக்க, கூட்டத்தினர் அதனை உரத்த குரலில் வலியுறுத்தவேண்டும்.

உள்ளிருப்பு போராட்டம் என்ற முறையையும் ஒரு முறை தெரிந்துகொண்டேன். பணியாளர்கள் ஆலைகளுக்குள், அலுவலகங்களுள் இருப்பார்கள். ஆனால், வேலை செய்ய மாட்டார்கள். இதேபோல், உற்பத்தியை மந்தப்படுத்துவது ஒரு போராட்டம். வேலையே நடக்காத மாதிரி இருக்கும். முக்கிய அதிகாரிகளை கெய்ரோ செய்வது இன்னொரு போராட்ட உத்தி. பேரணி நடத்துவது, அதன் இறுதியில் சம்பந்தப்பட்டவர்களிடம் போய், கோரிக்கை மனு கொடுப்பது என்பதெல்லாம் மிகவும் பழக்கமான போராட்ட உத்திகள்.

ஜப்பானில், ஏதோ ஒரு ஷு தயாரிப்பு நிறுவனத்தில், அவர்கள் செய்த போராட்டம் சுவாரசியமாக இருந்தது. இரண்டு காலணிகளைத் தயாரிப்பதற்கு பதில், ஒரு காலுக்கான காலணியை மட்டும் தயாரித்துக்கொண்டே இருந்தார்களாம்.

நம்ம ஊரில், ஒரு குழுவினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த, ‘உண்ணும்விரதப் போராட்டம்’ என்று எதிர்க்குழுவினர் நடத்தியதைப் பார்த்திருக்கிறேன். ஒரு சில சமயங்கள், போராட்டம் தீவிரம் அடைந்து, கோவையில் உள்ள பிரிக்கால் நிறுவனத்தில் நடந்தது போல், வன்முறையிலும் உயிரிழப்பிலும் போய்கூட முடியலாம். அல்லது மொத்த உற்பத்தியையே பாதிக்கும் அளவு, ஸ்டிரைக் போராட்டம் வெடிக்கலாம்.

எனக்குப் போராட்ட உத்திகள், முறைகள் மேல் எப்போதும் சந்தேகம் உண்டு. முதலில், தங்கள் கருத்துகளை, கோரிக்கைகளை நிறுவனத்திடமோ அரசாங்கத்திடமோ தெரிவித்திருப்பார்கள். அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து பாராமுகமாக இருக்கும்போது, அல்லது போதுமான கவனம் கொடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றாதபோது, போராட்டங்கள் வெடிக்கின்றன. எந்தப் போராட்ட வடிவத்தை எடுத்துக்கொள்வது என்பது சூழ்நிலையைப் பொறுத்தும் கூட்டு மனநிலையைப் பொறுத்தும் மேற்கொள்ளப்படும் முடிவு என்று நினைக்கிறேன்.

பல தனியார் நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்கின்றன. ஒரு கோரிக்கை, ஒரு மனு என்று வந்தவுடனே, அதைக் கவனித்து, உரியவர்களைக் கூப்பிட்டுப் பேசி, குறைகளைக் களைந்து அல்லது களைவதற்கான உறுதியைக் கொடுத்து, நம்பிக்கையை ஏற்படுத்தி அனுப்புவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். போராட்டம் என்ற வடிவத்துக்கு போவதற்கு முன்பே, மனுக்கள், நிர்வாகத்தினரின், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துவிடுகின்றன. அப்படி நடக்காத போதுதான், வேறு வேறு வகைப் போராட்டங்கள் தொடங்கப்படுகின்றன. ஸ்டிரைக் வரை போய்விட்டால், உற்பத்தியும் லாபமும் பாதிக்கப்படும் என்பதைத் தனி யார் நிறுவனங்கள் புரிந்துகொண்டு இருப்பதே இதற்குக் காரணம்.

போராட்டம் என்பது ஒருவகை வலியுறுத்தல். பணியாளர்களின் வலி அதிகமாகும்போது, அது உரியவர்களின் கவனத்தில் பதியாதபோது, வலியுறுத்தல் அவசியமாகிறது. ஆனால், இன்று நமக்குத் தெரிந்த எந்தப் போராட்ட வடிவமும் வலிமையானதாக இல்லை. பிரச்னை இங்கேதான்.

எல்லா போராட்ட வடிவங்களும் எல்லோருக்கும் பழக்கமாகிவிட்டது. அதை எப்படிக் கையாளவேண்டும், அடக்க வேண்டும், வழிக்குக்கொண்டு வரவேண்டும், உறுதியிழக்கச் செய்யவேண்டும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முரட்டுத்தனம் தோன்றிவிட்டது. ‘அதிகபட்சம் என்னாகப் போகுது. சாகப் போறான். சாவட்டுமே’ என்ற முரட்டுத்தனம். இல்லை குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு போய் வண்டியில் ஏற்றி, சிறைக்குள் தள்ளிவிடுவார்கள்.

மிரட்டல் ஒரு உபாயம். இன்னொரு உபாயம், போராட்டத்தைக் கலகலக்க வைக்க, உள்ளேயே குழுக்களை உருவாக்கி, போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது.

இன்றைக்கு ஒருவனோ ஒரு குழுவோ தாம் வலியுறுத்தும் கோரிக்கைக்காகத் தம்மை வருத்திக்கொள்கிறார்கள், அதற்காகச் சாப்பிடாமல் இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் புத்திசாலித்தனமில்லாத செயலாகப் பார்க்கிறார்கள். போராட்டங்களைப் பற்றிய அனுதாபமோ, அரவணைப்போ, அனுசரணையோ யாருக்கும் கிடையாது. நீ தேவையில்லாமல் என் வழியில் குறுக்கிடுகிறாய், என் அலுவலக நேரத்தை வீணாக்குகிறாய், என்னைப் பணிசெய்யவிடாமல் தடுக்கிறாய் என்பது இன்றைய மனிதர்களின் மனநிலை.

உன் நிறுவனம், உன் அரசாங்கம் உனக்கு உரிய சலுகைகளை, வசதிகளைச் செய்யவில்லை என்றால், அது உனக்கும் உனது நிர்வாகத்துக்கும் உள்ள பிரச்னையே அன்றி, அதை எடுத்துக்கொண்டு எதற்குத் தெருவுக்கு வருகிறாய்? சாலையை மறிக்கிறாய்? பஸ்ஸை நிறுத்துகிறாய்? பஸ்ஸையையோ வேறு வாகங்களையோ
கொளுத்துகிறாய்?

1991க்குப் பின், இந்தியப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்ட பின்பு, வணிகக் கலாசாரம் இங்கே முற்றிலும் மாறிவிட்டது. வணிக உறவுகள் இங்கே மாறிவிட்டன. புரிதல்களும் மாறிவிட்டன. மனித மனங்களும் மாறிவிட்டன. இதில், போராட்டம் என்பது பிற்போக்குத்தனமானது, உற்பத்திக்கு எதிரானது, வளர்ச்சிக்கு முரணானது என்ற சிந்தனைகள் ஆழ வேரூன்றிவிட்டன. உற்பத்தித் துறையைவிட, இந்தியப் பொருளாதாரம், சேவைத் துறைகளை அதிகம் சார்ந்திருக்கத் தொடங்கிவிட்டது. சேவையில், உடல் உழைப்பைவிட, ஞானம் முக்கியம். ஞானத்துக்கு ஏற்ப, இங்கே வசதி வாய்ப்புகள் பெருகத் தொடங்கிவிட்டன. அத்துறைகளில் இருப்பவர்கள், எல்லாவற்றையும் தமது சொந்த நோக்கில் இருந்தே மதிப்பீடு செய்கின்றனர். விளைவு, போராட்டங்கள் நியாயமற்றவையாக, நாகரிகமற்றவையாக, காட்டுமிராண்டித்தனமானவையாக, நாசூக்கற்றவையாகத் தோன்றுகின்றன.

இது ஒரு பிரச்னை. இன்னொரு பிரச்னை, போராட்ட வடிவங்கள் சார்ந்தே இருக்கிறது. நம்ம ஊரில் எல்லா போராட்ட வடிவங்களும் நீர்த்துப் போய்விட்டனவோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அடிப்படையில், யாரும் யாரையும் எப்படியும் வலியுறுத்தக் கூடாது என்ற மனநிலை வந்துவிட்டது. மேலும் சேவை சார்ந்த துறைகளில், சங்கங்களோ, அமைப்புகளோ வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. உனக்குக் குறை இருந்தால், நீ நேரடியாக மனித வளத்துறையிடம் போய் பேசிக்கொள். வீணாக, சங்கத்திடம் போய் முறையிட்டு, மூன்றாம் நபர் அல்லது அமைப்புகளின் தலையீட்டைக் கொண்டு வராதே. நான் பதில் சொல்ல மாட்டேன்.

அமைப்பு ரீதியாக ஒன்றுபடுவதே குற்றமாகவும் நாகரிகமற்ற பழமைத்தனமாகவும் இப்போது பார்க்கப்படுகிறது. அமைப்பாக சேராத போது, கூட்டு வலியுறுத்தல் சாத்தியம் இல்லை. பொதுவான நியாயம் என்று எதுவும் இல்லை. உனக்கு ஒரு நியாயம் வழங்கப்படலாம், அதுவே உன் சக பணியாளருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நீ வலியுறுத்த முடியாது. உன் வேலை முடிந்ததா? நீ வெளியே போ. அடுத்தவனை நான் பார்த்துக்கொள்கிறேன். பேசிக்கொள்கிறேன்.

மனிதர்களை, நிர்வாகமும் அரசாங்கமும் பிளவுபடுத்திவிட்டது. திறந்த பொருளாதாரத்தின் மிகப் பெரிய சாதனையும் இதுதான், கோர முகமும் இதுதான். என் பக்கத்தில் யாருமே இல்லை, நான் எப்போதும் தனியாள். நான் குரல் கொடுக்கலாம். என் கோரிக்கையை முன்வைக்கலாம். ஆனால், வலியுறுத்த முடியாது. தனிநபர்களை உள்ளுக்குள் சுருங்க வைத்துவிட்டது, திறந்த பொருளாதாரம்.

நிறைய சம்பளமும் வசதிகளும் வந்தபோது, நிர்வாகங்கள் பெரிய அட்சயப் பாத்திரங்களாகத் தெரிந்தன. அப்போது யாரும் இந்த தனிநபர் தன்மையைக் குறையாகக் கருதவில்லை. சென்ற ஒன்றரை ஆண்டுகால பொருளாதாரத் தேக்கம், தனிநபர்களாக இருப்பதின் கையறு நிலையை பலருக்கும் எடுத்துக்காட்டியிருக்கிறது. நாலு பேர் கூட சேர்ந்து இருப்பதின் அருமையை புரிய வைத்திருக்கிறது.

என் அளவில் நான் ஒரே ஒரு போராட்டத்தில்தான் கலந்துகொண்டு இருக்கிறேன். என் கல்லூரியில் நடைபெற்ற ஒரு மாதத்துக்கும் மேலான மாணவர்கள் ஸ்டிரைக்கில் நான் பங்குபெற்றேன். ஆனால், ஸ்டிரைக்கைவிடப் பேச்சுவார்த்தைதான் சரியான வழி என்பது என் எண்ணம். என்ன கோரிக்கையாக. இருந்தாலும் பேசியே தீர்த்துக்கொள்ள முடியும்.

அமைதியைவிட அற்புத ஆயுதம் வேறில்லை.

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்