பொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

அருளடியான்


பொற்கோ என்ற டாக்டர் பொன். கோதண்டராமன் சென்னைப் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர். இவர் தனது ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அறத்துப்பாலுக்கு ஒரு தொகுதி, பொருட்பாலுக்கு இரு தொகுதிகள், காமத்துப் பாலுக்கு ஒரு தொகுதி என நான்கு தொகுதிகளாக நுலை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முன்னுரை கொடுத்துள்ளார். ஒவ்வொரு குறளுக்குப் பின்னரும் உரைத் தொடரில் குறளின் சொற்களை எந்த வரிசைப்படி படித்தால் பொருள் புரியும், எந்த சொற்களைப் பிரித்து படிக்க வேண்டும் என்ற முறையைக் குறிப்பிட்டுள்ளார். உரைத் தொடர் விரியில் மிகக் குறைவான சொற்களை இட்டு நிரப்பி எளிமையாகப் பொருள் புரிந்து கொள்ள வழிகோலியுள்ளார். பின்னர் பொருள் விளக்கமும் குறிப்பும் என்ற தலைப்பில் ஒவ்வொரு குறளுக்கும் கருத்துரையை அளித்துள்ளார். சிக்கலான அமைப்புடைய குறளுக்குத் தன் கருத்தை வலியத் திணிப்பதை தவிர்த்து, உண்மையான பொருளைப் புரிந்து கொள்ள இயலவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இது உரையாசிரியரின் நேர்மையையும், மற்ற உரையாசிரியர்களிடம் இருந்து மாறுபட்ட தன்மையையும் காட்டுகிறது. பொற்கோ ‘தற்காலத் தமிழ் இலக்கணம் ‘ என்ற பெயரில் உரைநடை இலக்கணத்திற்கு விரிவான ஒரு நூலும் எழுதியுள்ளார்.

முதல் குறளுக்கு கருத்துரை

உலகம் கடவுளையே தலைமையானதாகக் கொண்டது. எழுத்துககளுக்கு எல்லாம் அகரம் தலைமை பெற்றிருப்பது போல உலகத்துக்கு கடவுள் தலைமை பெற்றிருப்பதாக இந்தக் குறள் கூறுகிறது. கடவுள் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது உலகமும். அதாவது இதிலிருந்து இது பிறந்தது என்று சொல்ல முடியாது.

இரண்டாம் குறளுக்கு கருத்துரை

கல்வியின் முடிந்த முடிவு வாலறிவன் நற்றாளை உணர்ந்து தொழுதலேயாம். திருவள்ளுவர் இறை நம்பிக்கை உடையவர். வாலறிவனை உணர்ந்து அவனுடைய நற்றாளை தொழவில்லையென்றால் கல்வி கற்றதால் எந்தப் பயனும் இல்லை என்று வள்ளுவர் தெளிவாகச் சொல்கிறார். இறை நம்பிக்கையைத் தராத கல்வியை ஒரு கல்வியாக அவர் மதிக்கவில்லை.

உரையாசிாியர் ஒரு கடவுள் மறுப்பாளர். பொியார் பற்றாளர். எனினும், தன் கருத்தை வள்ளுவர் மீது திணிக்காத அவரது நேர்மையை நாம் பாராட்ட வேண்டும். இதனை, பொற்கோவுக்கு முன் உரையெழுதிய கடவுள் மறுப்பாளர்களின் உரைகளைப் படித்தால் நாம் புாிந்து கொள்ளலாம்.

நூல்: திருக்குறள் உரை விளக்கம் – 4 தொகுதிகள் – உரையாசிரியர்: பொற்கோ

பூம்பொழில் வெளியீடு

மதன் மிதிலா அடுக்ககம், 16/10 றாவது குறுக்குத் தெரு

சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-600 020

பக்கங்கள்: ஒவ்வொரு தொகுதியும் சுமார் 270 பக்கங்கள்

விலை: ரூ.250 x 4 = ரூ. 1,000

இந்நூல் தமிழிலக்கியம் படிப்பவர்களுக்கும், மேடைப் பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பயன்படும்.

—-

aruladiyan@netscape.net

Series Navigation

அருளடியான்

அருளடியான்