அ. எக்பர்ட் சச்சிதானந்தம்
பஸ் நம்பர் 27, எத்தனை விட்டாலும் கூட்டம் குறையாதுபோல. நல்லவேளை உட்கார இடம் கெடைச்சது. நெரிசல்லருந்து தப்பிச்சேன். இன்னும் ஒரு ஸ்டாப்.. விஜயா அப்பாவும் வீட்ல இருக்கணும். ஆயிற்று இந்த டிசம்பர் எட்டோடு நான்கு வருஷம் முடியுது விஜயா இறந்துபோய். நினைத்துப் பார்க்கையில் இப்போதும் சங்கடமாத்தான் இருக்கு. மனைவியால் கூட புரிஞ்சிக்க முடியல. ‘ஜெகதீசன் சொன்னாருன்றதுக்காக நா சொல்லல. விஜயா வீட்ல நீங்க சொன்னத வெச்சித்தா ஜெகதீசனுக்கு பொண்ண குடுத்தாங்க. ஆனா அவ சூசைட் பண்ணிக்குவாள்னு யார் எதிர்பார்த்தது ? நாம அதுக்கு என்ன செய்ய முடியும் ? என்னவோ அதுக்கு நீங்கதா பொறுப்புன்ற மாதிரி இல்ல விஜயா வீட்டுக்குப் போகமாட்டேன்றீங்க. மதுரைக்கு எத்தனை தடவ வாரோம். ஆரப்பாளையம் என்ன நூறு மைல் தொலைவிலேயா இருக்கு ? போங்க, போயி அவ அம்மா, அப்பாவ பார்த்துட்டு வாங்க. ‘
‘க்ராஸ் ரோடு எறங்குங்க… வெரசா வாங்க சார். ‘
கூட்டத்துல எங்கிட்டு வெரசா வாரது. அப்பாடா, விடுதலை கெடச்ச மாதிரி இருக்கு. நாலம்பதுக்குக் கூட எரிக்கிற வெயில். பரமேஸ்வரியில் இங்கிலீஷ் படம் ஓட்றதே இல்லையா ?
செங்கல்பட்டு புது பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறியிருக்கக் கூடாது போன வாரம். நத்தத்திலேயே ஏறியிருக்கணும். இல்லை, செங்கல்பட்டுல பார்க்க முடியலைனா சத்திரம் வந்திருப்பான். விஜயா சாவுக்குப் பிறகு ஜான் ப்ரேயர் மீட்டிங்ல மட்டுந்தான் அவனைப் பார்த்தது. இந்த மூனு வருஷத்துல இப்படி ஆயிட்டானே, சென்னி, மயிர் அடர்த்தியாய் நரைத்திருக்கு, முகத்தில் நாற்பது, அம்பது வயது முதிர்ச்சி. முப்பத்தி நாலுகூட ஆகல. கண்களில் அதே சோகம் ததும்பி நிற்கிற பார்வை. நிறைய சுருக்கங்கள் கண்களுக்கு ரெண்டு பக்கமும் விழுந்திருக்கு புதுசாக.
‘மதுரைக்குப் போறீங்களா ? ‘
‘லீவ்ல சத்திரத்ல என்ன வேல ? போக வேண்டியதுதா சம்பளம் வாங்கிட்டு. ‘
‘இன் தட் கேஸ் மிஸ்டர் ஏஇஎஸ், கேன் யு டு மி ய ஃபேவர் ? ‘
அதே போலத்தான் எதிராளியின் காலில் விழுந்து விடுகிற மாதிரியான கெஞ்சல் சிரிப்பு. எந்த வார்த்தைக்கும் ஸ்ட்ரெஸ் கொடுக்காத உயிரற்ற நேர்க்கோட்டு இங்கிலீஷ். கண்களில் சோகமும், கெஞ்சலும், யாரைத்தான் வீழ்த்திவிடாமல் இருக்கும் ?
‘என்ன செய்யணும் ? ‘
‘எங்க இன்லாஸ் வீட்டுக்குப் போய் வரணும் ஏயிஎஸ். ‘ காய்த்துப் போன உள்ளங்கை. இவ்வளவு குளிர்ச்சியா.. பனியில் கிடந்த இரும்புத் துண்டுதான்.
‘ஐ நோ யு வில் பி எம்பராஸ்ட்… ‘
‘அதெல்லா இல்ல. ‘
‘எனக்கோசரம் போக வாணாம். சதீஷ்உக்காகத்தான் கேக்கறேன். போன மாசம் மாரேஜ் ஆல்பத்த எப்படியோ பார்த்திட்டான். உடனே அம்மா வேணும்னு அழ ஆரம்பிச்சிட்டாங்க. ஸ்கூல் பசங்க டாஸ் பண்ணியிருப்பாங்களானு தெரில. யுகேஜி படிக்றான். பிள்ளைக மதர்ஸ்கூட வரத பார்த்திருப்பான்… நா என்ன செய்யமுடியும் ? விஜயா அம்மா ஃபோட்டாவ பார்த்துட்டு அவுங்கெல்லாம் எங்க, என்னை ஏன் பார்க்க வரலைனு கேக்றாங்க. நா எப்படி விளக்க முடியும் ? இருதலைக் கொள்ளி எறும்புனு சொல்வாங்களே அதுதா என் நிலை. நாதாங்க அவுங்களுக்கு ஆகாம போய்ட்டேன். இந்த குழந்த பையன் என்ன பாவஞ் செஞ்சிட்டான் ? இப்படி ஒரே முட்டா முகத்தத் திருப்பிக்னு இருக்காங்களே… ‘
அவர்கள் மனநிலையைப் புரிஞ்சிக்காம பேசுறானா ? இவனுக்கு அவர்கள் நிலை வாய்த்திருந்தால் என்ன செய்திருப்பான் ? சாவு வீட்ல வச்சி விஜயா அப்பா சொன்னது இன்னும் கடுக்குது. ‘உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்து, அவள இந்த மாதிரி அயோக்கியனுக்குக் கட்டி வெய்யினா வெச்சிருவீகளா சொல்லுங்க ‘ நான் எப்படி இதுக்குக் காரணமாவேன்… ? இந்தத் தெரு இல்ல, இன்னும் தள்ளிப் போகணும்..
பத்து வருஷத்துக்கு முன்னால் சேட்டுக் கடையில நகை வைத்து பணத்துடன் வந்தவனை கோவிந்தன்தான் அறிமுகப்படுத்தினான். அன்றிலிருந்து எண்பத்தாறு வரை அவனிடம் என்னை ஈர்த்து வச்சிருந்தது எது ? காலேஜ் படிக்கிறப்பவே அப்பாவை இழந்து, குடும்பப் பொறுப்பு முழுதும் தன் முதுகில் ஏற்றிக் கொண்ட சோகமாத்தானிருக்கும். மூத்த தம்பி பாலிடெக்னிக் அடுத்த வருஷம் தான் முடிப்பான். கலை, அரசு ஹையர் செகன்டரியே தாண்டலே. தங்கச்சிக்கு வயசாய்ட்டே போகுது, வயசான அம்மா, இப்ப சதீஷ். ‘ஜெகதீசனும், தரித்ரமும் கூடப் பொறந்தவங்கப்பா ‘ கோவிந்தன் பண்ற கேலிக்கு எப்படி இவனால் சிரிக்க முடியுது ?
இந்த சந்துதான். மூன்றாவது வீடு, வாசலில் எருமைக்கன்னு கட்டிக் கெடக்குது. வளர்க்கிறார்களா ? தகரக் கதவில் பச்சை பெய்ண்ட் முற்றிலும் அழிந்து விட்டிருக்கிறது.
‘சார். ‘
பாத்திரம் கழுவும் சப்தம் உள்ளே இருந்து வருது. கூப்பிட்டது காதில் விழாது. எட்டித்தான் பார்க்கணும். நடையில் குத்த வைத்து உட்கார்ந்திருக்கிறாள் விஜயா அம்மா. ‘சார் இல்லியா ? ‘
‘ஆரது ? ‘ நிமிர்ந்தவள் முகத்தில் அதிர்ச்சி. மறுபடியும் ஏன் குனிகிறாள்.. திறக்க மாட்டாளா ? பாத்திரங்களை ஓரமாகத் தள்ளி வைக்கிறாள். ஈரத்திட்டுகள் சேலையில். எழுகிறாள். முந்தானையை நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு வருகிறாள். இறுகிப்போன முகம். எந்த உணர்ச்சியையும் படிக்க முடியல. இவ்வளவு சப்தம் ஏன் கதவில் ?
‘வாங்க. ‘ சுவரில் ஒட்டி நிற்கிறாள் எதிர்ப்புறம் பார்த்தபடி. செருப்பை இங்கேதான் கழற்ற வேண்டும். ‘திருட்டு பயம் ஜாஸ்தி ‘னு செருப்பை இவளே கையிலெடுத்து உள்ளே தள்ளிப்போட்டது நினைவுக்கு வந்தது…
முன்னால் தாண்டிக்கொண்டு எங்கே போறாள் ? புகையின் அடர்த்தியில் மூழ்கிய அடுப்பங்கரை. சுவரில் முறம் ஒன்று மேக மூட்டத்தில் அநாதை முகம்போல் கதவு விளிம்பில் கைபட்டு கைபட்டு தடயங்கள் குழம்பிப் போய் கறுப்பாக பளபளனு… விஜயா கைரேகைப் பிசிறுகள் இன்னும் ஒட்டியிருக்குமா.
உட்காரும் பகுதி கீழ்புறம் சாய்ந்த அதே இரும்பு மடக்கு நாற்காலி. வாசலுக்கு நேராக இழுத்துப் போடுறா.
‘உக்காருங்க. ‘
விஜயா போட்டோ வாசலுக்கு நேரெதிர் சுவரில். அருகே குப்புறப்படுத்துச் சிரிக்கும் சதீஷ் போட்டோ. காற்று போக்குவரத்து இல்லாத அழுக்குத் துணி வீச்சத்தோடு விளக்கில் அழுது வடியும் அறை. சுவர் முழுக்க மூட்டைப்பூச்சி நசுக்கிய ரத்தக் கோடுகள். விஜயா அம்மா அடுப்பங்கரை வாசல்ல உடம்பு விளிம்பு மட்டும் தெரிய மறைந்து நிக்றா. என்ன பேசுறது…
‘சார் இல்லயா ? ‘
‘யாவாரத்துக்குப் போயிருக்காக. ‘
‘ட்ரைவர் வேல என்னாச்சி ? ‘
‘ரிட்டேராகி மூனு வருஷமாகுது. ‘
‘என்ன யாவாரஞ் செய்றாரு ? ‘
‘பழய பேப்பருக வீடுகள்ல எடுத்து கடைல போடணும். ‘
மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் தெருத் தெருவாகப் போய்.. அறுவது வயசுல.
‘தங்கச்சி வெளிய போயிருக்கா ? ‘
‘அவ பிரண்டு ஒருத்தி ஜாக்கெட்டு தெக்க குடுத்திருந்தா. தெச்சிட்டு, குத்தாற வெராட்டிபத்து போனா, இன்னுங் காணல. ‘
குப்பை போல பரப்பிக் கிடக்கும் துணிகள் தையல் மிஷன மறைத்திருக்கு. சிங்கர் பெயர் தெரியுது. ‘ஜெகதீசன் இப்ப சுங்குவார் சத்துரத்துல இல்ல. ட்ரான்ஸ்பர் ஆகி செங்கல்பட்டு போய்ட்டாரு… ‘ பதிலையே காணோம். ‘உங்க பேரன் சதீசு பள்ளிக்கூடத்துக்கு போறான். ‘ சேலை அசைவது தெரியுது.
‘உங்கள நெனச்சி ஏங்குறான்னு ஜெகதீசன் சொன்னாரு. யுகேஜி படிக்றான்.. நீங்கதா அங்கிட்டு வர மாட்டேன்றீங்க.. என்னம்மா ? ‘
விசும்பல் சப்தம் அழுகிறாள்.. முந்தானையால் வாயை அடைத்துக் குலுங்குகிறாள். எப்படி சமாதானப்படுத்துறது…. ? விஜயா உடம்புமீது புரண்டு புரண்டு அழுத அழுகைதான் ஞாபகத்துக்கு வருது. எத்தனை வருஷமானாலும் அந்த நினைப்பைக் கொஞ்சம் கிளறினாலும், அழுகையா பீறிட்டு வரும்போல. இன்னும் நிக்கமாட்டேங்குது.
கதவைப் படார்னு திறந்துகிட்டு வரும் பையன் யாருனு தெரியல. ‘பாட்டி, எங்கம்மா சீனி வாங்கியாறச் சொல்லிச்சி ‘ சப்தத்தைக் காணோமே….
‘பாட்டி ? ‘
‘ம். சீனியாப்பா.. செத்த இரு. ‘ குரல் கமறிப்போய் இருக்கு. பையன் மலங்க மலங்க முழிக்கிறான். சூழ்நிலை புரிஞ்சிருக்கும். ஏழு வயசாதானிருக்கும்.
‘முக்கு கடைக்கு போயி காபி ஒன்னு வாங்கியாறியாப்பா. ‘
‘செரி. ‘
‘இந்தா. ‘ தூக்குப் போனியோட மறுபடி ஓட்டந்தான். படார்னு கதவு திறந்து மூடும் சப்தம்.
‘நாங்க வரலேனு சொல்றீகளே சார். எங்க நெலமைல ஆராச்சும் வருவாகளா சொல்லுங்க. ‘
‘நெசந்தான். ஆனா ஜெகதீசனுக்காக வேண்டாம். பேரனப் பாக்குறதுக்கு வரலாமில்லம்மா. ‘
‘அதுசரி, புள்ளையே போயிறிச்சி. பேரம் பேத்தின்றீகளே. ‘
‘மகள இப்படி இழந்தவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்கனு தெரியாம இல்லம்மா. அதையே நெனச்சுகிட்டு இருந்தா ஒடம்புதான கெட்டுப்போகும். சதீஷ் உங்க மக வயித்து புள்ளனுஇ. ‘
‘அவுக அப்பா அவள படிக்க வெக்கறதுக்கு அந்த காலத்துல என்ன பாடுபட்டிருப்பாக தெரியுமா ? அங்க இங்கனு அலைஞ்சி பணத்தை பொரட்டி காலேசுல சேத்தாரு. ஆறாயிரம் ரூபா, ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல, ஆறாயிரம் ரூபாவ எவனோ ஒருத்தனுக்கு அழுதுதா எடத்தப் புடிக்க முடிஞ்சது. நம்ம குடும்பம் இருக்குற இருப்புல பாலிடெக்னிக், கீலிடெக்னிக்கெல்லாம் எதுக்குனா கேக்குறாரா ? வேல பார்த்து நாலு காசு சம்பாரிச்சாதா இந்த காலத்துல வாக்கப்பட்ட எடத்துல கடங்கிடன் இல்லாம சந்தோஷமா இருக்க முடியும்ன்டாரு. அட அதுதா அப்படி, மாப்பிள்ளை பார்த்தோமே, இங்கிட்டு எங்கனாச்சும் திருப்புவனம், செவகெங்கனு பார்த்திருக்கப்படாது. அப்பவே சொன்னாளுக இங்க உள்ளவளுக, ஏதோ ஆத்திரம் அவசரம்னு போயாறனும்னா, எப்படி. சுங்குவாருசத்துரம் எங்கிட்டோ இல்ல கெடக்குன்னாளுக… அதெல்லாம் எங்க காதுலயா ஏறப்போகுது ? இவுக அப்பா அவரு இங்கிலிபீசில மயங்கி வாய பொளந்துட்டாக. நா என்னடான்னா இவ்ளோ நாளைக்கி பிற்பாடு ஜாதகம் பொருந்திருக்கே, முகத்த பார்த்தா நல்லவரா வேற தெரியுராரேனு ஏமாந்து போய்ட்டேன். ‘
மறுபடி கதவு திறக்குது வேகமாக. ‘இந்தாங்கபாட்டி. ‘
‘அதுக்குள்ளாற வந்துட்ட ? நல்லா போடச் சொன்னியா ? ‘
‘ம். விசயாத்தா ஊருலேருந்து விருந்தாளி வந்திருக்காகனு சொன்னேன். ‘
‘உனக்கு எப்படியா தெரியும் ? ‘
‘அம்மா சொல்லிச்சி. ‘
‘அப்படியா, வாரப்ப பார்த்திருப்பா. இவுக அம்மா செளந்தரா விசயா பிரண்டு. பள்ளிகூடத்துலேருந்தே ஒன்னா படிச்சவங்க. காப்பி சாப்புடுறியாடா ? ‘
‘வேணாம். ‘ வேகமா ஓடுறான். ‘டேய் பாபு ‘ அவன் எங்கே நிக்கிறது ?
‘ரெண்டுபேருக்கும் ஒரே வருஷத்துலதா கல்யாணமாச்சி. இப்ப அவளுக்கு ரெண்டு பிள்ளக. செளந்தரா அம்மா கூட ஒரு எடம் பார்த்து சொல்லிச்சி… தலையெழுத்த ஆரு மாத்த முடியும் ? ‘ அடுப்பங்கரைக்குள் போகிறாள்.
ஒன்றரை வயசில், விஜயா உடலுக்கருகே கையில் ஒரு மாலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த சதீஷ் முகம் ஞாபகத்துக்கு வருது. விட்டுச் செல்ல அவளுக்கு எப்படி மனசு வந்திருக்கும்னு தெரியவில்லை.
‘குடிச்சிருங்க. ஆறிரப்போகுது.. இம்புட்டு தூரத்துல ஒரு பொண்ண நம்பள நம்பி அனுப்பி வச்சிருக்காகளே, நாமதான அவளுக்கு எல்லாம்னு ஆதரவா இருக்கணுமா இல்லையா சொல்லுங்க. ‘
‘அது சரி ‘
‘இவுக அப்பா என்ன கலெக்டரு வேலையா பாக்றாக. ஆயிரமாயிரமா வாங்குறதுக்கு. வாரதே சாப்பாட்டுக்கும், வட்டி கட்டறதுக்குந்தா சரியாப்போகுது. எல்லாந் தெரிஞ்சும் எதுக்கெடுத்தாலும் உடனே வாங்க அவசரம்னு தந்தி குடுத்தாரே விசயா மாப்பிள்ள, என்ன நெனச்சி செஞ்சிருப்பாரு ? ‘
‘எப்போ குடுத்தத சொல்றீங்க ? ‘ கடைசியா கொடுத்த தந்தியைச் சொல்றாளா.
‘உங்ககிட்ட சொல்லலையா ? அவ புருஷனோட ஒண்ணா வாழ்ந்ததே ஒன்றர வருஷந்தா இருக்கும். அதுக்குள்ள ஏழெட்டு தந்திக. நாங்க என்னவோ ஏதோனுகிட்டு ஓடினா, அங்க மாமியாரும், நாத்தனாருமா சேர்ந்துகிட்டு மருமகள பத்தி என்னென்னவோ சொல்லுவாளுக. இவள என்னடினு கேட்டா, நீங்க எதுக்கு வந்தீகம்பா, எப்படி, தந்தினு வந்தாபோகாம இருக்கமுடியுமா ? ‘
‘ஜெகதீசன் இதபத்தி எதுவுமே என்கிட்ட சொல்லல. ‘
‘அவரு எப்படி சார் சொல்வாரு, தாம் பக்கத்துல குத்தத்த வச்சிகிட்டு ? தம்பிக மூணு பேரு, தங்கச்சி, அம்மா, அவரு இம்புட்டு பேருக உள்ள குடும்பத்துல வேலவெட்டி எம்புட்டு கெடக்கும். துணிமணி தொவைக்கணும், மாவாட்டணும், பாத்திரம் வெளக்கணும், வீட்ட கூட்டணும், இதுல கைக்கொழந்த வேற… ஒத்த ஆளா எம்புட்டு வேலைக செய்ய முடியும் ? கூடமாட எவரும் ஒத்தாசை பண்றது கெடையாது. இதுல ஆயிரத்தெட்டு சொட்டைக வேற சொல்லுவாளுக. இதுகூட பரவால்ல. படிச்ச பொம்பளப் பிள்ளையப் போட்டு அடிக்கிறது என்ன நியாயம் சொல்லுங்க. ‘
‘இந்த விஷயம் எங்களுக்கு.. எல்லாம் முடிஞ்சப்புறந்தாம்மா தெரிஞ்சுது. ‘
‘புருஷங்கார அடிச்சாகூட பரவால்ல சார். இவளுக ஆரு கை வெக்றதுக்கு… ? அத்தனையும் அந்த புள்ள பொறுத்துகிட்டு இருந்திச்சி சார்… ‘
‘நாங்க, போறப்ப எம் மிஸஸ் கிட்டகூட எதுவுமே சொல்லல. சாதாரணமாகத்தான் பேசிட்டிருக்கும். ‘
‘அப்புராணி பிள்ள சார். ரொம்ப அப்புராணி. வாயத் தெறந்து இதுவேணும் அது வேணும்னுகூட கேக்க மாட்டா. புருஷன இறுக்கி புடிச்சி மடியில முடிபோட்டு வச்சிக்க தெரியாதவ. ஒரு தடவ என்ன தெரியுமா சொன்னா, குடும்பம்னு இருந்தா சண்ட சச்சரவுக இருக்கத்தான் செய்யும். ஆராவது ஒருத்தரு விட்டு கொடுக்கனும். அப்பதா சந்தோஷமா இருக்க முடியும். அப்டானு சொல்றா. ரத்தம் வரவரைக்கும் அடிப்பாளுக. நாம விட்டுக்கொடுக்கணுமா ? சாப்டாம கொள்ளாம கைக்கொழந்தையோட மூலைல மொடங்கி கெடக்குறததா விட்டுகொடுக்குறதுனு நெனச்சிகிட்டா சார். ‘
மூக்கைச் சிந்திக் கொள்கிறாள். ‘ஒரு தடவ சார் தந்தி வருது விசயாவுக்கு சீரியசுனு. மாசக் கடைசில செளந்தரத்துகிட்ட எறநூறு ரூபா வாங்கிகிட்டு பயந்துகிட்டே பொறப்பட்டுப்போனோம். திண்ணைல கொழந்தைய மடியில வெச்சுகிட்டு தலைய கூட சீவாம கொள்ளாம பெரம் பிடிச்சவ போல உக்காந்திருக்கா. என்னம்மா விசயானு கேக்கறேன் செத்த நேரத்துக்குப் பிள்ள கண்லருந்து பொலபொலனு கண்ணீர் கொட்டுது. பேச்சையே காணோம். இடுப்புல எல்லாம் வரிவரியா கன்னிபோயிருக்கு சார். ஊதாங்குழல வச்சி அடிச்சாளுகளா, வெறகு கட்டைய வெச்சி அடிச்சாளுகளானு தெரியல. உள்ள இருந்து வாராரு மருமகப்புள்ள கத்திகிட்டு, என்ன நெனச்சிகிட்டு இருக்கா உங்க மக. எங்க குடும்பம் பெரிசுதா. எங்கய்யா தவறிட்டதால எல்லாரையும் நாதா சொமக்கணும். உங்க மக என்னடான்னா தனியா போயிறலான்றா. குடும்பத்த பிரிக்கிறதுக்குதா அவளக் கட்டிகிட்டேனா – எங்கூட பொறந்தவங்க எனக்கு ரொம்ப முக்கியம். அவ தேவை இல்லைனு நெனச்சாள்னா இப்பவே கூட்டுகிட்டு போயிருங்கனு அவர் பாட்டுக்கு கத்தறாரு. வாயையே தெறக்காதவ தெறந்துட்டா, அதத் தாங்கிக்க முடியல. சாமியாட ஆரம்பிச்சிட்டாரு. பொண்ண பெத்தவ சும்மாயிருந்துருவேனா, நானும் கேட்டேன், அப்ப உங்க சடங்கான தங்கச்சிய கட்டிக் கொடுத்திட்டு, தம்பிகளக் கரையேத்திட்டு எங்க பொண்ணக் கட்டியிருக்கணும்னேன். அதுக்கு என்ன தெரியுமா சொன்னாரு. உங்கமகள அதுக்குதா கட்டியிருக்கேன். அவ வேல கெடச்சி சம்பாதிக்கிற பணத்தை வச்சிதா தங்கச்சிய கரையேத்தனும்னாரு. எப்படி இருக்கு பாருங்க கத. தங்கச்சி கழுத்துல தாலி ஏறுறதுக்கு நாங்க கடன கிடன வாங்கி பொண்ண வளத்து, படிக்க வச்சி முந்நூறு மைல்ல இருக்குற இவருக்கு கட்டி வெச்சியிருக்கோம். ‘
‘விசயா சாகுறதுக்கு ரெண்டு மாசம் முன்னாடி ரெண்டாவது தங்காம கலைஞ்சி போயி ஆஸ்பத்திரில இருந்தாளே, அத தாங்குற ஒடம்புதானா சொல்லுங்க. குடும்பத்த தூக்கி வெச்சிருக்கேனு சொல்றவரு இதே யோசிக்க வேணாமா ? அப்பக்கூட தங்கச்சிக்காரி, எங்கண்ணனுக்கு இவ்ளோ செலவு அவ்ளோ செலவுனு நீட்டி மொழக்கி சொன்னா, மனசு தாங்காமெ கையில இருந்த வளையல உருவி வித்து ஆஸ்பத்திரி செலவு கட்டுனோம். கொரங்கு கைல பூமால கணக்கா ஆய்ட்டாளே, நம்மபுள்ள, சரி இனி வாழலனாகூட பரவால்ல ஒரேயடியா அறுத்துகிட்டு போயிறலாம்னுதா சார் அப்ப கூட்டிகிட்டு வந்தோம். அதுதா அவ கடைசிய மதுர வந்தது…ஒடம்பு தேறிச்சோ இல்லையோ சொல்ல ஆரம்பிச்சிட்டா தீத்துகிட்டு, கீத்துக்கிட்டுனுலாம் பேசாத… அவுக நல்லவங்கதா, குடும்ப நிலைமைல அப்படி ஆய்ட்டாக. தங்கச்சிக்கி கல்யாணம் ஆயிட்டா எல்லாஞ் சரியா போயிடும் அப்படிங்றா. எனக்கு ஒடம்பு பத்தி எரிற மாதிரி இருக்கு. அவிங்களை போயி நல்லவங்கனு சொல்றப்போ. செளந்தரத்துகிட்ட மட்டும், நாம இங்க வந்துட்டா எல்லோருக்கும் கஷ்டந்தான்னு சொன்னாளாம். என்ன கஷ்டம், படிச்சபொண்ணு எங்கே போனாலும் ஒரு வேலைவெட்டிய பார்த்துகிட்டு தைரியமா இருக்கலாம்னு தெரியல.. ரூமிலே படுத்துகிட்டு குழந்த அழுறது, ஒன்னுக்கு போறதுகூட தெரியாம மோட்டுவளைய இப்படி பெரம புடிச்சவ மாதிரி பார்த்துகிட்டு இருக்காளேனு அப்ப யோசிக்கலே. செளந்தரம் கூட எதுக்கும் ஒரு டாக்டர்கிட்டே காமிச்சா நல்லதுனா. ஒன்றுமிருக்காதுன்னு காதுலே வாங்கிக்காம மறுபடி அனுப்பி வெச்சோம். தெருமுக்கல போயி வழியனுப்பி வெச்சேன். அதுதா கடைசியா அவள பாத்தது. அவ குழந்தைக்கு வாங்கி வச்ச நடவண்டி பாருங்க மறந்துட்டு போயிட்டா. ‘
பரணில் சாய்ந்து கிடக்கு நடைவண்டி. எங்கே போறா ? தண்ணீர் மொள்ளும் சப்தம் கேட்குது… தந்தி கெடச்சி வந்தவங்க வெத்தல பாக்கு போட்டுகிட்டு சாவதானமாக நடந்து வந்ததும், விஷயத்த எப்படி சொல்றதுனு தெரியாமல் முழிச்சபடி கூடவே வேறு விஷயங்களப் பேசிக்கிட்டு போனதும், கடைசியா அவர்களே பார்த்து அதிர்ந்து போனதும் ஞாபகத்துக்கு வருது. போட்டோவுக்குள் தன் கஷ்டங்களையெல்லாம் சின்னதாக சுருக்கிக் கொண்டிருப்பது போலத்தான் அவ முகம் தோணுது.
முகத்தைத் துடைத்துக் கொண்டு வராள். ‘இந்தாங்க ‘ டம்ளரை வாங்கிக்கிறாள். முகம் வீங்கிப் போயிருக்கு. ‘மனச தேத்திக்கங்கம்மா.. உங்க துக்கத்துக்கு நா ஆறுதல் சொல்லி மறக்க முடிற விஷயமில்லதான். இருந்தாலும் அதையே நெனச்சுகிட்டிருக்குறதால ஒடம்புக்கு நல்லதில்ல.. அப்புறம், பொறப்படுறேன், டயமாகுது.
‘சார், தங்கச்சிய எல்லாம் விசாரிச்சேன்னு சொல்லுங்க. ‘
‘மதுரைக்கு அடிக்கடி வாரீக. நம்ம வீட்டு பக்கம் இன்னிக்குதா பாத தெரிஞ்சிருக்கு போல.. மறந்துட்டாக… ‘
‘அதெல்லா இல்லம்மா. சந்தர்ப்பம் கெடைக்கல… ‘
‘அம்மாவுகளா கூட்டிகிட்டு வாங்க. ‘
‘நாகர்கோயிலு போயிருக்கா. அடுத்த முறை கூட்டிகிட்டு வரேன்.. அப்ப போயிட்டு வரேம்மா. ‘
தலையாட்டுகிறாள் வழிவிட்டு அடுப்பங்கரைக்குள் ஒதுங்கி நிக்றாள். பார்வை தரையை நோக்கி இருக்கு. கதவைச் சப்தமில்லாமல் திறந்து மூடனும். அடுத்த முறை வருவேனா ? தெரியல.
வெயில் இப்ப குறைஞ்சிருக்கு. வெக்கை அப்படியேதான் இருக்கு. நடுரோட்ல பம்பரம் சுத்திகிட்டிருக்காங்க பையங்க. பரமேஸ்வரியில ஜெகதீசனோடு என்ன படம் பார்த்தேன்.. நினைவில்லை. ‘அண்ணே… ‘ பாபு, இவ்வளவு வேகமாக ஓடி வரான். ‘சூதானமாப்பா, தடுக்கிவிழப்போற… ‘ மூச்சு இரைக்குது… ‘பாட்டி.. இத.. சதீஷ்உக்கு குடுக்க சொல்லிச்சி. ‘
கவரைக் கொடுத்துவிட்டு மறுபடி அதே வேகத்தில் ஓடிவிட்டான். கசங்கிய ப்ரவுன் உறை. அர்ச்சனா. உள்ளே வெள்ளைத் துணி மடிப்பின் முதுகு தெரியுது. டெரி காட்டன் சட்டைத் துணி. கரத்தைச் சுற்றி மிருதுவாக உணர முடியுது.
***
- கவலையில்…
- இன்னொரு இருள் தேடும்….
- புத்தாண்டுப் பொலிவு
- ஊடகம்
- ஆசை
- பாப்பா பாட்டு
- தூரத்திலிருந்து பார்த்தேன்
- காந்தியின் குரங்குகளும் தலித்திய – கறுப்பு அடையாளங்களும். ( ‘மகாத்மாவின் பொம்மைகள் ‘ சிறுகதை விமர்சனம்)
- எனக்குப் பிடித்த கதைகள் – 9 -சுந்தர ராமசாமியின் ‘பள்ளம் ‘ (மோகமும் மூர்க்கமும்)
- பறங்கிக்காய் பால் கூட்டு
- அவியல்
- அமெரிக்கா இயந்திர போர்வீரனை உருவாக்க முனைகிறது
- அறிவியல் மேதைகள் – அலெக்சாண்டர் கிரகம் பெல் (Alexander Graham Bell)
- உன் கூந்தல்!
- சக்கரம் இல்லா தேர்கள்…
- பேரன்
- அழகு
- தொலைந்து போனோம்.
- மரண வாக்குமூலம்.
- இன்னும் ஓர் தீர்மானம்
- இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- யாரைத் தேடி ஒடுகிறது நதி ?
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி -2
- இந்த வாரம் இப்படி, ஏப்ரல் 14, 2002 (ஹ்யூகோ சாவெஸ் பதவி இறக்கம், மீண்டும் ஏற்பு, நாயுடுவும் பாஜகவும், ஈழத்து இஸ்லாமியத் தமிழர்கள்
- பொறாமை
- 7 அனுபவ மொழிகள்
- மறுபக்கம்: என் அமெரிக்கப் பயணம்
- மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
- ஜெயமோகனுக்கு மறுப்பு
- உயிர்