பா.சத்தியமோகன்
3323.
நன்மைகள் பெருகுவதற்கு இடமான அத்தலத்தில்
நாடும் அன்போடு நயந்தார் விரும்பினார்
குலம் மிகுந்த திருத்தொண்டர் கூட்டத்துடன்
இனிதாக அமர்ந்திருந்தார்
கங்கை நீர் பெருகும் சடை முடியுடைய
இறைவரின் திருவடிகள் வணங்கினார்
அருள் பெற்றார்
அழகிய பூணூல் விளங்கும் அழகிய மார்புடைய நம்பி ஆரூரர்
பிற தலங்களையும் தொழச் சென்றார்.
3324.
தொண்டைத் திருநாட்டில்
ஒப்பிலாத காளை ஊர்தி உடைய சிவபெருமான்
மகிழ்ந்து வீற்றிருக்கும் தலங்கள் பலவும் சென்றார்
அங்கங்கு
தொண்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர்
வணங்கிய வண்ணம் சென்றார்
தூய நீரை உடைய ஆறுகளும்
வண்டுகள் ஒலிக்கும் மலர்களையுடைய
வயல்நிலங்கள் பலவும் கடந்து சென்றார்
எட்டுத் திசையும் உள்ளவர்கள் பாராட்டுகிற
திருக்கழுக்குன்றம் அடைந்தார்.
3325.
தேன் நிறைந்த மலர்ச்சோலைகள் சூழ்ந்த
திருக்கழுக்குன்றத்தில் உள்ள அடியார்கள்
குறைவிலாத விருப்பத்தோடு எதிர்கொண்டார்
நம்பி ஆரூரரை அழைத்துச் சென்றனர்
தூய
புதிய வெண் சந்திரன் சூடிய
சுடர்க்கொழுந்தான சிவபெருமானைத் தொழுது
நிலத்தில் வீழ்ந்து வணங்கினர்
பாக்களின் பண்பு நாடும்
இனிய இசையை உடைய திருப்பதிகம் பாடினார்.
3326.
பதிகம்பாடிய அத்தலத்தில்
இனிதே தங்கியிருந்தார்
பணிந்து புறப்பட்டார்
இறைவரை நாடும் நல் உணர்வோடு
திருக்கச்சூர் அடைந்தார்
பொன்வேலைப்பாடு அமைந்த
மதில் அருகில் உள்ள
ஆலக்கோவிலின் அமுதம் போன்ற இறைவரை
கூடிக் கொண்டாடும் அன்புருகக் கும்பிட்டார்
பிறகு –
வெளியில் வந்தார்
3327.
அந்தத் தலத்தினை அடையும்போது
அமுது செய்யும் நேரமாகிய
பசிநேரம் வந்துவிட்டது
திருவமுது சமைத்து அளிக்கும் பரிவாரமோ வந்து சேரவில்லை
மிக்க பசியின் வருத்தமுடன்
திருமுனைப்பாடி புரவலரான சுந்தரர்
தம்பிரானாகிய இறைவரின்
கோவில் வாசலில்
மதிலுக்கு வெளியே தங்கியிருந்தார்
3328.
வன்தொண்டரான சுந்தரரின் பசிதீர்க்க
மலை மேலுள்ள மருந்து போன்ற இறைவர்
வெண் தலையான
கபாலமாகிய பாத்திரம் சுத்தம் செய்து
அன்று
அந்த ஊரில் வாழ்கிற ஓர் அந்தணராக மாறி
புறப்பட்டுச் சென்றார்
அன்பரான நம்பி ஆரூரரின் முகம் நோக்கினார்.
இவ்வாறு கூறினார்:-
3329.
“உடலில் ஏற்பட்ட பசியால்
மிகவும் வருந்தி இளைத்துள்ளீர்!
உமது பசிவேட்கை பசிதாபம் தீர
இப்போதே சோறு இரந்து
பிச்சை பெற்று
இங்கு யாம் உமக்குக் கொணர்கிறேன்
இந்த இடத்திலிருந்து அப்புறம் அகலாமல்
சிறிது நேரம் அமரும்” எனச் செப்பினார்
கூறிவிட்டு அவர்
திருக்கச்சூரில் உள்ள இல்லங்கள்தோறும் சென்று
சோறு இரந்தார்
யாசகம் கேட்டார்.
3330.
வெண்மையான திருநீற்றின் அழகு விளங்க
கண்டவர் அனைவரும் உள்ளம் உருக
கடும்பகல் உச்சிப்போதில்
இடப்போகும் பிச்சைக்காக
தாமரைமலர் போன்ற திருவடிகள்
நிலத்தின் மீது பொருந்தும்படி நடந்தார்
இல்லம் தோறும் சென்று இரந்தார்
இரந்து பெற்ற சோற்றை எடுத்துக்கொண்டு
தாம் விரும்பி ஆட்கொண்ட நம்பி ஆரூரர் முன்
கொடுக்க வந்தார்.
3331.
இரந்து
தாம் கொண்டு வந்த
இனிய உணவும் கறியும் தந்தார்
“துன்பம் தரும் பசி நீங்க உண்பீராக”
என அளித்த
இறைவரான அந்தணரின்
பேரரருள் திறத்தை எண்ணி
உள்ளத்தில் எழுந்த பேரன்பினால்
பெரும் காதலினால்
அவரை
நேரே தொழுதார்
உணவை வாங்கிக் கொண்டார்.
3332.
வாங்கிய
அந்தத் திரு அமுதத்தை
வன் தொண்டராகிய சுந்தரர்
அருகிலிருந்த மிகுந்த தவமுடைய தொண்டருடன்
உண்டு மகிழ்ந்தார்
அங்கு
அருகில் நின்றாரைப்போல நின்று விட்டு நீங்கி விட்டார்
எப்பொருளையும் விட்டு நீங்காத தன்மையினரான சிவபெருமான்.
3333.
திருநாவலூராளி சுந்தரர்
சிவயோகியார் நீங்கியதும்
“அந்த மறையவனார் இறைவனாரே” எனத் தெளிந்து
பெரியநாதமுடைய சிலம்பு அணிந்து
செம்மையான திருவடி வருந்திட
உச்சிபகலில் உருவம் தாங்கி
என் பொருட்டாக நடந்து
எழுந்தருளினீரே என உருகி-
3334.
“முதுவாய் ஓரி” எனும் பதிகம் தொடங்கினார்
“முதல்வராகிய இறைவரின்
பெருங்கருணை இதுவாம்
என்னே அதிசயம்” என –
கண்ணீர் மழை அருவி பெருகிட வடிந்த புதிய நீரில்
திருமேனி முழுதும் மயிர்கூச்செறிப்பு மூடிட
அதில் புதைந்தார் சுந்தரர்.
கொன்றை சூடிய முடி உடைய இறைவராகிய
சிவபெருமானைப் பாடினார் மகிழ்ந்தார் வணங்கினார்
3335.
வணங்கினார்
இறைவரின் அருளுடன் பெற்றார்
மங்கை பாகராகிய சிவபெருமான் மகிழ்ந்து அருளும் பிறபகுதிகளில்
அங்குள்ள தொண்டர்கள் எதிர்கொண்டனர்
சிந்தித்ததும் முன்வந்து அருள்புரியும் முக்கண்பெருமானின்
திருவடிகள் பணிந்து
செஞ்சொல் மாலையான திருப்பதிகம் பாடி
அந்தி நேரத்து செக்கர் வானம்போல
பெருகுகின்ற ஒளி உடைய —
ஏகம்பவாணர் வீற்றிருக்கும்
காஞ்சியின் பக்கம் அடைந்தார்
3336.
“திருமாலும் நான்முகனும்
தொடர இயலாத அரியவராக நீண்டு நின்ற
வெற்றியுடைய
இளைய
காளைக்கொடி உயர்த்திய இறைவரால்
முன் நாளில்
வேத முதல்வராக
வேதியராகத் தோன்றி
திருவெண்ணெய் நல்லூரில்
சபை முன் நின்று
நேரே வழக்குரைத்து ஆட்கொள்ளப்பட்ட
நம்பி ஆருரர் அல்லவோ இங்கு வந்துள்ளார்!” என
மனதில் எண்ணினர்
மதில் சூழ்ந்த காஞ்சி நகரில்.
3337.
பொருந்திய மகிழ்ச்சி மேலும் மேலும் பெருகிட
தெருக்களில்
அழகிய தோரணம் நாட்டினர்
பெருகும் தீபங்கள்
நிறை குடங்கள்
அகிலின் தூபங்கள், கொடிகள் ஆகியன ஏந்தினர்
செல்வமுடைய வீடுகளை அலங்கரித்தனர்
ஆடலுடன் முழவு அதிர
மிகுந்த தொண்டர்கள் சேர்ந்து
அத்தலத்தின்
வெளியே சென்று
நம்பி ஆரூரை வரவேற்றனர்
3338.
சிவபெருமான் ஆட்கொண்ட நம்பி ஆருரர்
தம்மை எதிர்கொண்ட அடியார்கள் வணங்கிட
தாமும் எதிர் வணங்கினார்
நீண்ட மதில் கடந்து
கோபுரம் கடந்து
வரிசையான மாளிகைகள் உள்ள வீதிக்குள் சென்று
காதலுடன்
வாழ்த்துக்களுடன்
பொருந்திய மங்கல வாத்தியங்கள் ஒலித்திட
தொண்டர்கள் சூழ்ந்து பெருக
ஏகாம்பர நாதரின் கோவில் சென்றார்
3339.
கடல் கொண்ட நெடுமாலும்
நான்முகனாகிய அயனும்
தேவர்களும்
நெருங்கிடும் கோபுரத்தின் முன்
புழுதி படிய நிலத்தில் வீழ்ந்து
பொருந்துமாறு வணங்கி
சூழ்ந்திருக்கும் மாளிகைகள் பலவும் தொழுது
வணங்கினார்
வலம் வந்தார்
அணுக்கத்தொண்டரான வன்தொண்டர்
வாழ்வு தரும்
அழகிய
பொன்கோவிலாகிய
ஏகாம்பரநாதர் திருக்கோயிலுள் புகுந்தார்
3340.
கைகளைத் தலை மீது கூப்பினார்
இறைவன் திருவுருவம் முன் சென்றார்
கம்பை ஆறு பெருகி வந்த போது
இறைவரின் மேனி குறித்து
மிகவும் கவலையுற்று
மிகவும் அஞ்சி
தன் உடம்பு நிறைய தழுவிக்கொண்ட
மை பொருந்திய
கரிய நெடுங்கண் கொண்ட
மலை மகளாக
அம்மை
தினமும் வழிபடும்
செம்மையான
தாமரை மலர் போன்ற திருவடியின் கீழ்
திருந்தும் காதலுடன்
பக்தியுடன் வீழ்ந்தார்
3341.
நிலத்தில் வீழ்ந்து பரவசமாய்ப் போற்றினார்
விம்மி எழுந்தார்
மெய்யன்புடன் வாழ்கிற சிந்தையால் பாடினார்
மாறாத
நிலைத்த விருப்பமுடன் வெளியில் வந்தார்
சூழ்ந்த தொண்டர்களுடன்
கூடியிருந்த நாட்களில்
தொன்மையான கச்சி மாநகரில்
தாழ்ந்த சடையுடைய இறைவரின்
கோயில்கள் பலவும் சென்றார்
( கச்சி – காஞ்சி )
3342.
சிறப்பு பொருந்திய காஞ்சி மாநகரில்
நிலைபெற்ற
காமக்கோட்டம் சென்று வணங்கினார்
கங்கை நீர் அணிந்த சடையுடைய இறைவர்
அமர்ந்து அருள் செய்யும்
காஞ்சியின்
திருமேற்றளி சென்றார்
பெருகும் அன்பினாலே பணிந்து துதித்தார்
“நுந்தா ஒண்சுடரே” எனும் உலகம் நிறைந்த பெருமையுடைய
திருப்பதிகம் பாடி
மகிழ்ந்து போற்றினார்
(தளி – கோயில்)
3343.
“திருவோண காந்தன் தளி “ எனும் கோயிலில்
இறைவரை
உரிமையுடன்
விரும்பிக்கொண்ட
தோழமையின் வல்லமை குறித்தும்
காசுடன் பொன் விரும்பியும்
“நெய்யும் பாலும்” எனத்தொடங்கும்
அலையுடன் கூடிய
அழகிய திருப்பதிகம் பாடி
அளவிலாத நிதி பெற்று
அங்கு தங்கியிருந்தார்
( ஓணன்,காந்தன் என்ற இரு அசுரர்கள்
வணங்கிய தலம்
திருவோணன் காந்தன்தளி எனப்படும் )
3344.
காஞ்சியில் தங்கிய நாட்களில்
“அனேகதங்காவதம்” எனும் தலம் அடைந்தார்
அனேகதம் என்பது யானை
யானை வடிவுடைய விநாயகர் பூசித்த அத்தலத்தின்
உள் சென்று
செங்கண்களுடைய காளையினை உடைய
இறைவரை வணங்கி
“தேனேய்புரிந்து” எனும் திருப்பதிகம் பாடி வணங்கினார்
பிறகு
பொங்குகாதலுடன்
போற்றியபடியிருந்தார் அத்தலத்தில்
சில நாட்கள்.
3345.
இசையோடுப் பாடிப் பணிந்தார்
உமை அம்மையார் தழுவியதால்
மேனி குழைந்தவரான சிவபெருமானின்
அருட்கூத்தாடும் திருவடிகளை
இசையுடன் பாடிப் பணிந்தார் நம்பி ஆரூரர்.
மிகப்பழமையான அந்தக் கச்சி மாநகரின்
வெளியே நிலவும் பிறதலங்களும் தொழ விரும்பி
“வன்பார்த்தான் பனங்காட்டூர்” எனும் தலம் அடைந்தார்.
3346.
செல்வம் மிகுந்த
திருப்பனங்காட்டூரில் எழுந்தருளிய
செம்பொன் போன்ற
செழுமையான சுடரை
அல்லல் அறுக்கும் அருமருந்தை
அன்பு மேலீட்டால்
பொழியும் கண்ணீர் மல்க நின்று
“விடையில் மேல் வருவானை” எனும்
வன்மையுடைய தமிழ்ப்பதிகம்
நல்ல இசையுடன் பொருந்தப்பாடினார்
பிறகு
வெளியே சென்று சேர்ந்தார்.
3347.
நிலையான
“திருமால்பேறு” எனும் தலம் சென்றார்
வணங்கினார்
பரவினார்
பிறகு
திருவல்லம் சென்று சேர்ந்தார்
பிறகு
சடைக்கற்றையார் சிவபெருமானின் தலங்கள் பலவும் வணங்கி
பெருந்தொண்டரான நம்பி ஆரூரர்
மேற்குபக்கமுள்ள உச்சியில்
மேகங்கள் தோயும்
பெரிய முடிகள் கொண்ட
திருக்காளத்திமலை சேர்ந்தார்.
3348.
தடுக்க இயலாத பக்தியில்
பெருங்காதலில்
தலை சிறந்து விளங்கும்
கண்ணப்பரது இடுக்கண் களைந்து
ஆட்கொண்டு அருளும் சிவபெருமான் மகிழ்ந்த
காளத்தி அடைந்து அம்மலையை நிலம்பட வணங்கினார்
திருவருள் பெற்று அன்பு ஆறாய்ப் பெருகிட
மலை மேல் மருந்து போன்ற இறைவரின்
திருமுன்பு வணங்கினார்.
3349.
வணங்கினார்
உள்ளம் களி கொள்ள மகிழ்ந்து போற்றினார்
இனிய இசையுடன்
“செண்டாடும்” எனும் பதிகம் பாடினார்
அன்புடன்
கண்ணப்ப நாயனாரின் மணம் மிகு
தாமரைத் திருவடிகளைப் பணிந்தார் வாழ்வடைந்தார்
வெளியே வந்தார்
நிலைத்த அந்த பதியில்
தொண்டர்களுடன்
அன்பு பொருந்தக் கூடி இன்புற்றிருந்த நாளில் —
3350.
வடக்குத் திக்கில் உள்ளது “சீபர்ப்பதம்” எனும் தலம்
அதனுடன்
திருக்கேதாராமலை எனும் தலத்தையும்
மற்றும்
சிவபெருமான் அமரும் தலமெல்லாம்
இங்கிருந்தபடியே இறைஞ்சினார்
ஆனந்தக் கூத்தாடும் திருவடிகொண்ட சிவபெருமானை
நேரே கண்டவர்போல உள்ளம் நிறைந்தது
திடம் கொண்ட கருத்துடன் திருப்பதிகம் பாடினார்.
(சீபர்ப்பாதம்- sri சைலம்)
3351.
அங்கு சிலநாள் தங்கியிருந்தார்
பிறகு
அருள் விடை பெற்றுச் சென்று
போர் புரியும் கா¨ªயூர்தி கொண்ட சிவபெருமான்
தங்குகின்ற இடங்கள் பலவும் சார்ந்து சென்றார்
தாழ்ந்து வணங்கி தமிழ்ப்பதிகம் பாடினார்
பொங்கும் கடலின் கரை அருகில்
மண்ணுலகம் சிவலோகம் போல
திங்கள் முடியார் சிவபெருமான் அமர்ந்த
திருவொற்றியூர் சென்றடைந்தார்.
3352.
“அண்ணல் சிவபெருமான்
தொடர்ந்து வந்து ஆவணம் (ஓலை) காட்டி
ஆண்டு கொண்ட நம்பி ஆரூரர் வருகிறார்”
எனும் செய்தி கேட்டு
அளவற்ற பெருமையுடைய
ஆதிபுரி எனப்படுகிற
திருவொற்றியூர் வாழும் தொண்டர்கள்
அழகிய வீதியின் வாசல்தோறும்
வாழை, கமுகு தோரணங்கள் கட்டினர்
பொன்னால் ஆன நிறைகுடங்கள்
தூபதீபங்கள்
கையில் ஏந்தி சென்றனர்
அப்போது –
3353.
மேலான
நல்ல மங்கல வாத்தியங்கள் முழங்கி
வாசமலர் மாலைகள் நிரம்பிய ஆடல் அரங்கில்
ஆடல் பெண்கள் நடம் ஆடிட
வெள்ளமெனனப்
பூமழையை
தேவமங்கையரும் அமரர்களும்
மேலிருந்து பொழிந்திட
பிரம்ம கபாலத்தில் விரும்பி பிச்சையேற்கும்
சிவபெருமான் விரும்பும் தொண்டர் ஆரூரர்
திருவொற்றியூரில் தனது அன்பர்களுடன் புகுந்தார்..
–இறையருளால் தொடரும்
- அ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்
- கடவுளுடன் கவிதையில் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி
- ஆசை என்றொரு கவிஞர்
- கீதாஞ்சலி (103) உனக்கு வந்தனம் புரிகையில்!
- புற்று நோய்க்கு எதிராக வயாகரா
- மடியில் நெருப்பு – 16
- ஃபிரான்சில் தமிழர் திருநாள்
- அல்லாவின் தெளகீது மீதான கேள்விகள்
- பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள்
- மியாம்மாவில் திருவள்ளுவர் விழா
- கணேச நாடாரா, சாணாரா இல்லை ‘சான்றோரா’?
- குன்றத்து விளக்கு காளிமுத்து
- கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி
- கடித இலக்கியம் – 36
- ஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்
- ஆரவாரமில்லாது வாழ்ந்த அ.மு.ப.
- தொலைநோக்கிகள்!
- இலை போட்டாச்சு: 6. கொள்ளுப் பொடி
- கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்
- காம சக்தி
- சரி
- சின்னண்ணே! பெரியண்ணே!
- பெரியபுராணம் – 116 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- தொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்
- பாரதி உன்னைப் பாரினில்
- கறுப்பு இஸ்லாம்
- உண்மை வரலாறும் ஆ. சிவசுப்பிரமணியனின் திரித்தல்களும்
- அம்பேத்கர் எனும் தேசியத் தலைவர்
- நீ ர் வ லை (2)
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 15
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:8) ஜூலியஸ் சீஸர் படுகொலைக்குப் பிறகு.