பெரியபுராணம் – 55 – ( திருநாவுக்கரச நாயனார் புராணம் தொடர்ச்சி )

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

பா.சத்தியமோகன்


1483.

நாவுக்கரசர் வந்தருள

அதை அறிந்து ஆரூர் அன்பர்கள் தாம்

நீண்ட சடைமுடியார்பால் நிறைந்த அருள் பெற்றவர்களாதலால்

காண்பதற்கு இனிய மாளிகை மாடங்கள்

முன்னை விட அழகு திகழ

வீதிகள் பொலிய மங்கலம் செய்தனர்.

1484.

கொடிய மனவன்மையுடைய சமணர்களான

குண்டர் தம் மாயை கடந்து

அலை மடியும் கடலில்

கல்லே மிதப்பாக கரையேறி வந்தார் எனும் களிப்பால்

எல்லையிலாத் தொண்டர்கள்

நகர மதிலின் வெளியே வந்து எதிர்கொண்ட போது

சொல்லின் அரசர் வணங்கித் தொழுது துதித்தார்.

1485.

புற்றைத் தமக்கு இடமாகக் கொண்ட

வன்மீக நாதரின் தொண்டர்க்குத் தொண்டராகும் புண்ணியமும்

பற்றிக் கொள்ள ஒன்றிலாதவரும் பாதகராகவும் உள்ள அமணர்களிடம்

உற்ற நோய் ஒழித்து

உய்யும் பொருட்டாக வந்து புகுந்தயானும் ஒன்றோ என்று சொல்லி

உணர்ச்சியற்றவராய் ஆரூர் திருவீதியுள் அணைந்தார்.

( “குலம் பலம்” எனும் திருவிருத்தம் திருவாரூரில் பாடிஅருளியது )

1486.

சூழும் திருத்தொண்டர்

தம்முடன் தோரணவாயில் தொடங்கிய வாசல் அடைந்து

வாழ்வுடைய திருவினால் மிக்க

தேவாசிரிய மண்டபம் முன் வந்து இறைஞ்சி

சக்கரவான மலை போன்ற திருமாளிகை வாசலுள் புகுந்து

நீள் சுடர் மாமணி புற்று உகந்த சிவனாரை

நேரே கண்டு கொண்டார்.

1487.

கண்டு தொழுது நிலம் பொருந்த விழுந்து

கை கால் முதலான அங்கமெலாம்

கொண்ட மயிர்ப்புளகங்கள் பெற்று எழுந்து

அன்பு கூரக் கண்களிலிருந்து மழைபோல் பொழிய

திருமூலத்தான இறைவர் தம்மை

அவரது தாமரை போன்ற திருவடிகள் துதித்து

திருத்தாண்டகம் புனைந்தார்.

(இங்கு பாடிய திருத்தாண்டகம், “பிரமன் தன் “என்ற தொடக்கம் கொண்டது)

1488.

தூண்டா விளக்கின் ஒளி போன்ற

சுய ஒளியான புற்றிடம் கொண்ட நாதர் திரு முன்பு

கொய்யும் மாமலர்ச் சோலை குயில் கூவ மயில் ஆடும்

ஆரூராரைக் கையினால் தொழாது ஒழிந்தேனே

கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேன் என்று

எய்துவதற்கு அரிதான துன்பத்துடன்

திருப்பதிகம் அருள் செய்தார் அன்றே.

(காண்டலே கருத்தாய் என்பது பதிகத்தின் தொடக்கம்)

1489.

மார்பார பொழியும் கண்ணீர் மழை வார்கின்ற திருவடிவும்

மதுரமான வாக்கில்

இனிய தமிழ்ப்பதிகம் சேரும் திருவாயும்

இறைவரின் பொந்திருவடியே சார்வான மனமும்

திரு உழவாரமெனும் ஒப்பற்றப் படையும் தாமும் ஆக

உலகம் வாழ திரு வீதிப்பணி செய்து

பணிந்து ஏத்திப் பரவிச் செல்பவராகி-

1490.

நீடிய புகழ் மிக்க திருவாரூரில் நிலவும்

மணிப்புற்றினை நிலவும் இடமாகக் கொண்டு

எழுந்தருளிய நிருத்தர் தம்மை

கூடுதலான அன்பொடு

எல்லாக் காலங்களிலும் அணைந்து கும்பிட்டு

குற்றமிலா வாய்மையுடன்

“பாடிளம் பூத்தினாள்” எனும் பதிகம் முதலான பலவும் பாடி

உள்ளத்தால் நாடிய ஆர்வம் பெருக நைந்து

மனம் கரைந்து உருகி நயந்து செல்வார்.

1491.

நான்கு வேதங்களும் மற்ற ஞான நூல்களும் உரைக்கின்ற

நமிநந்தி அடிகளின் தொண்டினது நலச்சிறப்பால்

அவரை

பரமரைப் போற்றுகின்ற திருவிருத்தத்துள் வைத்துப் பாடினார்

தேன் பொருந்தும் கொன்றை மலர் சூடிய

திருவாரூர் அரன் நெறியில் விளங்க

வீற்றிருக்கும் சிறப்பையும் போற்றி

அழகிய திருவீதிப் பணியையும் செய்து

அங்கு தங்கியிருந்த நாளில்-

1492.

கங்கை நீர் நிலவும் சடைமுடியர் சிவனாரின்

திருவலிவலத்திற்கு நினைத்து சென்றார்

கச்சை அணிந்த முலையுடைய மங்கையான உமையை

ஒரு பாகத்தில் கொண்டவரின் கழல் பணிந்து

மகிழ்ந்து பாடி

திருநீலகண்டரது திருக்கீழ்வேளூர், திருக்கன்றாப்பூர்

முதலியன சென்று கலந்து பாடி

ஆராத காதலினால் திருவாரூக்கு மீண்டும் வந்தார்.

1493.

பொருந்தும் திருவாதிரைத் திருநாளில்

வீதிவிடங்கப் பெருமானின் திருபவனியில்

தேவர்களுடன் முனிவர்களும் சேவிக்கும் அடியார்களுடன் வணங்கி

மூன்று உலகங்களும் களிப்பு அடைய வருகின்ற

பெருமை முறைமைகளையெல்லாம் கண்டு போற்றி

ஒப்பிலாத நாவுக்கரசர் விரும்பித் தங்கியிருந்த நாளில்

இறைவரின் திரு அருளினாலே-

1494.

திருப்புகலூரில் அமர்ந்து அருளும் சிவபெருமான் சேவடிகளைக்

கும்பிட்டுத் துதிக்கின்ற விருப்பமுடைய உள்ளத்தில்

பொருந்தி எழும் காதலினால் பெருகும் வேட்கை ஓங்க ஒருமைப்பட்டார்

ஒருவாறாக

திருவாரூர் தொழுது அகன்று தம் உள்ளத்தை அங்கேயே வைத்து

மலை மகளான உமையம்மையை இடப்பாகம் வைத்த

சிவனாரின் பிற பதிகளுக்கும் பணிந்து போந்தார்.

1495.

அக்காலத்தில் ஆளுடைய பிள்ளை எனும் ஞானசம்பந்தர்

திருப்புகலி எனப்படும் சீர்காழியினின்று புறப்பட்டு

பாம்புகள் அணியும் சிவனாரின் திருப்பதி பலவும் பணிந்து செல்வார்.

சுரபுன்னை மலர்களின் மணம் கமழும் பூம்புகலூரில்

இறைவனைக் கண்டு இறைஞ்சி

ஒப்பற்ற சிறப்புடைய முப்புரிநூல் அணிந்த முருகநாயனாரின்

திருமடத்தில் எழுந்தருளிய காலத்தில்-

1496.

சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட நாவுக்கரசர்

எழுந்தருளிப் போந்து

அணி உடைய திருவாரூர் மணிப்புற்றில்

அமர்ந்து வாழும் நீண்ட சுடர் மாமணியைக் கும்பிட்டு

பூம்புகலூர் நோக்கி

வந்தருளினாரென்று கேட்டதும்

அவரை எதிர்கொள்ளும் விருப்போடு

நெருங்கிய தொண்டர்குழாம் புடை சூழ எழுந்தருளி எதிரே சென்றார்.

1497.

நீர்க்காக்கைகள் நிறைந்த பெரிய நீர்நிலைகளையுடைய

சீர்காழியில் அவதரித்த ஞானசம்பந்தர்

அவ்விதம் அணைகின்ற காதல் கேட்டு

நீர் வளம் கொண்ட திருப்புகலூர் நோக்கி

வருகின்ற வாகீசர் மகிழ்ந்து வந்தார்

திரண்டு வருகின்ற திருநீற்றுத் தொண்டர் கூட்டம்

இரு திறமும் சேர்ந்த போதில்

இரண்டு நிலவின் கடல்கள் ஒன்று கூடி அணைந்தன போல்

பொருந்தின அப்போதே.

1498.

திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்ச

சிரபுரத்தில் வந்தருளிய தெய்வ வாய்மை கொண்ட

பெருஞான சம்பந்த பிள்ளையார் எதிர் வணங்கி

“அப்பரே.. நீவிர் வரும் நாளில் திருவாரூரில் நிகழும் பெருமையை

வகுத்து உரைப்பீர்” என்று கூற

சிவனது நாமமான அஞ்செழுத்து மிகவும் பயில்கின்ற

வாய்மையுடைய நாவுக்கரசர் பதில் அருளிச் செய்தார்.

1499.

சித்தத்தில் நிலாவும் தென் திருவாரூர் நகர் ஆளும்

மைத்தழை கண்டராகிய நீலகண்டரின்

திருவாதிரை நாளின் மகிழ்வுடைய செல்வம்

இத்தகையது என எவ்வாறு மொழிவேன் என்று

“முத்து விதான மணிப்பொற்கவரி “எனும்

பதிக மொழி மாலை அருள் செய்தார்.

(முத்து விதானம் என்பது அப்பர் பாடிய பதிகத்தின் தொடக்கம்)

1500.

அம்மொழி மாலைச் செந்தமிழ்ப் பதிகம் கேட்டு

அழகிய சீர்காழியில் தோன்றிய

நீலகண்டம் கொண்ட தேவர் தலைவரின் மகனாரான ஞானசம்பந்தரும்

அரும்புகள் மலரும் பொய்கைகளையுடைய திருவாரூர் கும்பிட்டு

அதன்பின்

உம்முடன் கூடி உடன் அமர்வேன் என்று உரை செய்தார்.

1501.

மிகப்பெரும் மதில் சூழ்ந்த திருவாரூர் மன்னர் தியாகராச ஈசரை

அங்கு சென்று வணங்க செந்தாமரை ஓடையுடைய

சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் சென்றார்

நாவில் பொருந்தும் வாக்குத் தலைவரான நாவுக்கரசரும் கர்வத்தோடு

குளிர் வயல்களால் சூழப்பட்ட புகலூரில் புகுந்தார்.

1502.

அப்பழைய ஊரில் வீற்றிருக்கும் திருநாவுக்கரசரும்

தம் சித்தம் நிறைந்து அன்பு தெவிட்ட

தேக்கித் தெளிந்த வெள்ளமாக கூர்ந்து வழியும் தாரையாய்க்

கண்கள் பொழியும் நீர் உடல் முழுதும் பொருந்த

நச்சுப்பை கொண்ட தலையுடைய பாம்பினை

அணிகலனாகப் அணிவாரைப் பணிந்தார்.

1503.

தேவர்களின் தலைவனை

அழகிய புகலூரில்தென்திசையில் உறைபவனை

பாக்களின் இயல்பு முற்றும் பொருந்திய தமிழ்மாலைச் செந்தமிழ் பாடி

பரிவோடு மேவிய காலந்தோறும் விரும்பினார் கும்பிட்டார்.

நீங்குதல் இல்லாத திருப்பணிகளைச் செய்து அங்கு தங்கினார்

1504.

சீர் தரும் திருச்செங்காட்டங்குடி , திரு நீடும் திருநள்ளாறு

நிறைந்த சோலைகள் சூழ் திருச்சாத்தமங்கை அயவந்தி

கச்சணிந்த மென் முலையாளொரு பாகம் கொண்ட சிவபெருமானின்

திருமருகல் எனும்

இத்தலமெல்லாம் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்.

1505.

அவ்விதமாக சிலநாட்கள் சென்றபின்

திருவாரூர் நகரை ஆளும் பவளம் போன்ற சடையுடைய

நெற்றிக் கண்ணரான இறைவரைத்தொழுது

மெய்ப் பொருளான ஞானம் உண்டருளிய சீகாழியில் தோன்றிய

முப்புரிநூல் அணிந்த மார்பினரான ஆளுடைய பிள்ளையாரும்

திருப்புகலூருக்கு வந்தார்.

1506.

ஞானசம்பந்தப் பிள்ளையார் எழுந்தருள

வாகீசரான நாவுக்கரசர் உள்ளம் மகிழ்ந்து அவரை எதிர்கொண்டு

அவருடன் திருப்புகலூரில் உறைந்திருந்த நாளில்

வள்ளலாரான சிறுத்தொண்டர் அங்கு வந்தார்

கெடுதல் இல்லாச் சிறப்புடைய நீலநக்க நாயனாரும்

அங்கு எழுந்தருளினார்.

1507.

ஆங்கு வரும் சிறுதொண்ட நாயனார் அவர்களுடன் அத்தலத்தில்

அந்தணரான ஓங்குபுகழ் முருக நாயனார் திருமடத்தில் ஒன்றுகூடி

அந்தப் பான்மையில் வரும் சிறப்புடைய அடியார் பலரும்

உடன் பயிலும் அன்பின் சிறப்பால்

நீங்குவதற்கரிய திருத்தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார்.

1508.

திருப்பதிகங்களான செந்தமிழின் திறம்போற்றி மகிழ்ந்து

மலைரசன் மகள் பார்வதி தன் இடப்பாகம் கொண்டவரின் பொற்பாதத்தில்

விருப்புடைய திருத்தொண்டரின் பெருமையை விரித்து உரைத்தனர்

அதனால் ஒருமைப்படும் சிந்தை கொண்டவர்கள்

சிவானந்தம் எனும் பயன் பெற்றனர்.

1509.

அத்தகு நாட்களில் தமக்கேற்ற திருத்தொண்டைச் செய்ய

மின் போன்ற செஞ்சடை அண்ணல் சிவனார் மேவும் தலம் பலவும்

சென்றார் போற்றினார் ஏத்தினார்.

முதல்வன் தாள் தொழுவதற்குப் பொன்மணி மாடங்கள் நிறைந்த

பூம்புகலூர் தொழுது புறப்பட்டனர்.

1510.

திருநீல நக்க அடிகள், சிறுத்தொண்ட நாயனார், முருக நாயனார்

பெருமையுடைய மற்ற அடியார்களும் விடை பெற்று ஏகினர்

ஒன்றுபட்ட உள்ளத்தவர்களான பிள்ளையாரும் அரசும்

செஞ்சடையில் வரும் கங்கைப் பெருக்கை மறைத்து வைத்த

திரு அம்பர் தலம் வணங்கினர்.

1511.

செம்மைமிகு குமுதமலர்கள் மலர்கின்ற திருக்கடவூர் சேர்ந்தனர்

பொங்கிய சினத்துடன் வந்த

வெம்மைமிகு கூற்றுவனை உதைத்த

பொன்னடிகள் தொழுதேத்தினர்

குங்கிலியக் கலயனார் திருமடத்தில் தங்கியதும்

அவர் வேண்டியதெல்லாம் செய்ய ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும்

சிவனடியாருடன் கூடி அமுது செய்தார்கள்.

1512

சீர்மிகுந்த திருக்கடவூர் திருமயானம் வணங்கினார்

அழகுடைய இன்னிசை தேவாரம் பல பாடினர்

மேகத்தின் தன்மை பொருந்திய நீலகண்டரின் திருவடிகள் தொழுது

பிறகு

தேர் பொருந்திய திருஆக்கூர் சென்று சேர்ந்தனர்

1513.

தம்மை அடைந்தார்க்கு புகலிடம்தரும் சிவபெருமானை

தான் தோன்றி மாடம் எனும் கோவிலுள் கண்டு

கூர்ந்த ஆர்வம் கொண்டு அன்பினால் வணங்கி

குற்றமிலா தமிழ்த்தொடைமாலை புனைந்து

அசைந்தாடும் சடையுடைய இறைவரின் பதிகள் பலவும் வணங்கி

தம் பெருமானின் திருவீழிமலை அடைந்தனர்

[‘’ முடித்தாமரை அணிந்த’’ எனும் தொடக்கம் கொண்ட

தாண்டகம் நாவுக்கரசர் அருளினார் ]

(திருவருளால் தொடரும் )

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்