பெரியபுராணம் – 32 (18. மானகஞ்சாற நாயனார் புராணம் – தொடர்ச்சி )

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

பா.சத்திய மோகன்


882
வந்திருந்த முதிர்ந்த அறிவுடையோரை மானக்கஞ்சாறனார்
முந்தையோரின் முறைப்படி விரும்பி வரவேற்று
அவர்கள் மொழிந்த மணப்பேச்சுகளைக்கேட்டு
“எமது மரபினுக்குத் தக்க தன்மையால் இது பொருந்தும்” என
சிந்தை மகிழ்வுற உரைத்து
மகளை மணத்திற்குத்தர ஒப்பி அனுப்பி வைத்தார்
883
சென்றவர்கள் கஞ்சாறர் மணத்திற்கு இசைந்த செய்தி செப்ப
குன்றென உயர்ந்த தோளுடைய ஏயர்கோன் நாயனாரும் மிக விரும்பினார்
இந்நிலைமையில் இரு திறத்தவர்க்கும் பொருத்தமான
மணவினை புரிய மங்கல நாள் ஒன்றை சோதிட வல்லவர் குறித்தார்
884
மங்கலமாகிய செயல்கள் விரும்பி
மண மகளைப்பெற்ற கஞ்சாறனார்
தன் குலத்தின் நீண்ட சுற்றமெல்லாம் பெரும் களிப்பு கொள்ள
வெண்முளை சார்த்தி பொற்கலங்கள் இடையே நெருங்க
குளிர்சோலைகளுள்ள பழைமையான நகரை
திருமணக்கோலம் கொள்ள அணி செய்தார்
885
மானக்கஞ்சாரர் தம் மகள் கொடுக்க
கைப்பிடிக்க வருகின்ற குறையாப் புகழுடைய
ஏயர்குலப் பெருமான் கலிக்காமரும்
சுற்றம் நிறைந்து கூடிவர
இன்னிசைகள் இசைப்ப
மேகம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கஞ்சாற்றின்
அண்மையில் வர –
886
வள்ளலாரின் மண எழுச்சி கஞ்சாரூரின் அருகில் வந்துசேரும்முன்
மலர் போன்ற விழியுடைய
ஒளிபொருந்திய அணிகள் அணிந்த பெண் பெற்றவரின் இல்லத்தில் ஒருவழியாய்
தெளிவான அலைகள் கொண்ட
நீர் சூழ்ந்த உலகம் உய்வதற்கு
அவர்தம் உளநிலைப் பொருளான சிவபெருமான் அணைந்தார்
887
திரிபுண்டரம் சூடிய நெற்றியின்மேல்
மழித்த திருமுடி சிகையின் நுனியில் கோர்த்து அணிந்த எலும்புமணியும்
முற்காலத்தில் திருமால் உடலின் முழு எலும்பைக் கொண்டநாளிலே
அவ்வெலும்பைக்கடைந்த முத்துக்கள் போல் விளங்கும்
அசையும் குண்டலமும்-
888
அவ்வெலும்பால் ஆன ஒளிமணிகோர்த்த திருத்தாழ்வடமும்
படத்தையுடைய வலிய பாம்பு நீங்க தோளில் இடும் உத்தரியமும்
கருமயிரால் கயிறாய் முறுக்கப்பட்ட பூணூலும்
செம்மையுடைய அன்பரின் பிறவி நீக்கும் வெண்நீற்றுப்பையும் –
889
ஒரு முன் கையில் தனி எலும்பு மணி கோர்த்து அணிந்த கயிறும்
அரிய வேத நூல்களான கோவணத்தின் மீது கட்டிய திருவுடையும்
பெரிய நிலத்தில் தோய்ந்த எழுத இயலாத் திருவடியும்
திருவடியில் பஞ்ச முத்திரையும் விளங்க —
890
நெருப்பின்மீது மூடிய சாம்பலைப்போல
திருமேனிதனில் பொலிந்தது அழிவற்ற இயல்புடைய வெண்ணீறு
மிகுந்த கொடிகள் விளங்கிய தெரு அடைந்து
தம் குளிர்த்தாமரை அடிகள் நிலைத்து விளங்க இடமான
அன்பர் மானக்கஞ்சாற நாயனாரின் இல்லம் புகுந்தார்
891.
வந்தணைந்த மாவிரத முனிவரைக் (இறைவரை )கண்டு
முன்பு எழுந்து சிந்தை களிகூர்ந்தார் மகிழ்ந்தார்
சிறந்த தொண்டரான மானக்கஞ்சாறானார்
“எம் தலைவரான செய்யும் தவமுடைய எம்பிரான்
இவ்விடத்தில் எழுந்தருளுவதால் அடியேன் உய்ந்தேன்”
என்று உருகிய அன்போடு பணிந்தார்.
892.
நல்தவத்தினராக வந்த இறைவர்
நன்மை மிகும் அன்பரான மானக்கஞ்சாறரை நோக்கி
“இங்கு மங்கலம் அமைய நிகழ்வது யாது” என்றார்
“அடியேன் பெற்றதொரு பெண்கொடிக்கு மணநிகழ்ச்சி”
என விடை மொழிந்தார்.
893.
ஞான வடிவுடையவரை தவக்கோலம் தாங்கியவரை
தாள் பணிந்து தம் இல்லம் சென்று
மணக்கோலம் பூண்டிருந்த
தேன் பொருந்திய மலர்க்கூந்தல் திருமகளை உடன் அழைத்து வந்து
நீலகண்டம் மறைந்திருந்த இறைவரின் திருவடியில் வணங்கச் செய்தார்.
894.
தம்மைப் பரவி வணங்கியவர்க்கு தம் திருவடி தருகின்ற சிவபெருமான்
தம் திருவடி வணங்கித் தாழ்ந்து எழுந்த
இளமையுடைய கொடி போன்ற
மேகம் தழைத்தது போல் வளர்ந்த மலர்க்கூந்தலின் பக்கம் பார்த்து
அஞ்சலி செய்த மெய்த்தொண்டரைப் பார்த்து
“அணங்கு இவளின் தலைமயிர் நம் பஞ்சவடிக்கு ஆகும்” என்றார்.
(பஞ்சவடி = மயிர்க்கற்றால் ஆன பூணூல் வடம்)
895.
இங்ஙணம் இறைவர் கூறியதைக் கேட்டு
வன்மையுடைய தம் உடைவாள் உருவி
“இதனைப் பொருட்படுத்தி இது பஞ்சவடிக்கு உதவும்
எனக்கூறப்பெற்றேன்” என எண்ணி
பூங்கொடியின் இருள் போன்ற கருங்கூந்தலை அரிந்து ( அறுத்து )
எதிர் நின்ற
மயக்கம் செய்யும் பிறப்பை அறுப்பவரின்
மலர் போன்ற கரத்தில் நீட்ட –
896.
வாங்குவார் போல் நின்ற மறைபொருளாம் இறைவர் அவர் மறைந்தார்
பக்கம் நின்ற பார்வதி அம்மையுடன்
தம் பழைய காளை மீதேறி
ஓங்கிய வாளின் மேல் வெளிப்பட்டார்
ஒளி பொருந்திய வானமும் நிலமும் நெருங்கும்படி
அழகிய கற்பக மலர் மழை பொழிய
மானக்கஞ்சாறர் நிலம் பொருந்த விழுந்தார்.
897.
கீழே விழுந்து எழுந்த மெய்மறந்த மெய்யன்பர் தமக்கு
நிலவின் கொழுந்து அலைய
பெருகி விழும் கங்கையோடு
குதித்த சடை உடைய கூத்தனார்
“உமக்கு எம்மிடம் எழும் அன்பின் தன்மையை
இந்தச் செழும் புவனத்தில் பொருந்தச் செய்தோம்” என அருள் செய்தார்.
898.
பக்கமுள்ள கணநாதர் போற்றி இசைக்க
வானவர்கள் நெருங்கிவர
காளையூர்தி மேற்கொண்ட பெருமான் முன் நின்ற மானக்கஞ்சாறனார்
ஒருமைப்பட்ட நெஞ்சோடு கரங்கள் உச்சிமேல் குவித்து
ஐயர் பெரும் கருணைத் திறம் நேரில் போற்றும் பெரும்பேறு பெற்றார்.
899.
தம் தொண்டனாருக்கு அருளி தேவர்கள் சூழ்ந்து துதி செய்ய
இண்டை மாலை அணிந்த சடையுடைய சிவபெருமான் மறைந்தருளினார்
வண்டுகள் மொய்க்க இடமான கூந்தலுடைய கொடிபோன்ற மகளை
மணம் புரிய ஏயர்கோன் கலிக்காமனார் வந்துசேர்ந்தார்
கண்டோர் கண்கள் களிப்பு கொள்ளும் மணக்கோலத்தோடு.
900.
வந்து சேர்ந்த ஏயர்குல மன்னவர் கலிக்காமர்
உள்ளத்தாலும் நினைக்க அரிதான செயலை
கூடியிருந்தோரிடம் கேட்டறிந்து புத்தியினில் மிக உவந்தார்
புனிதனாகிய இறைவரின் அருள்போற்றித்துதித்தார்
சிந்தை தளர்ந்தார் திருவாக்கின் திறம்கேட்டு.
901
மனம் தளரும் துன்பம் நீங்கி வானவர் நாயகர் அருளால்
புனைந்த மலர்க்கூந்தல் மறுபடி வளரப்பெற்ற பூமகளை மணம்கொண்டு
செல்வம் ஈந்தார் உலகம் மகிழ
சுற்றம் பெருக மதில் சூழ்ந்த பழைய ஊர் சென்றணைந்தார்
902
தன் ஒரேமகள் கூந்தல் தன்னை அவர் திருமண நாளில்
ஒருவர்க்கு ஈந்த பெருமையுடைய மானக்கஞ்சாரரின் திறத்தை
துதிக்கும் பெருமை என் அளவில் அடங்குமோ !
மருவிய நிலத்தின் வெடிப்பில் சிதறிய மாவடுவினை
“விடேல் “ என்ற ஓசையினை உரிமையால் கேட்க வல்லார் திறம்
இனி உரைக்கத்தொடங்குவேன்.
மானக்கஞ்சாற நாயனார் புராணம் முற்றிற்று


cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்