பெண் பிறந்தாள்

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

பவளமணி பிரகாசம்


தென்றலைப் போலவே பெண் பிறந்தாள்,
தெவிட்டா இன்பம் தந்திடுவாள்;
அலையாய் அழகாய் அசைந்து வந்தாள்,
அடுக்காய் மேன்மைகள் கொண்டு வந்தாள்.

கரையாய் துயரை தடுத்துக் கொண்டாள்,
அணையாய் காவல் காத்து நின்றாள்;
பொறுமைக்கோர் எல்லை வைத்திடுவாள்,
புயலாய் அவளே பொங்கிடுவாள்.

சூரியக்கனலாய் எரிக்க வந்தாள்,
தீதினை அழித்து ஒளியும் தந்தாள்;
நிலவின் குளுமை தவழ வந்தாள்,
வாழ்வில் வெறுமை மறையச் செய்தாள்.

மலையைப் போல உயர்ந்து நின்றாள்,
மன உறுதியின் மாண்பை காட்டுகிறாள்;
நதியைப் போல இறங்கி வந்தாள்,
நன்மை செய்ய விரைந்து வந்தாள்.

தாயாய் உலகை தாங்கி நின்றாள்,
சேயாய் உவகை பெருகச் செய்தாள்;
கனிவாய் உறவுகள் அணைத்திடுவாள்,
கவிதைத் தேனாய் இனித்திடுவாள்.
பவளமணி பிரகாசம்.

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்