பெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

ப. இரமேஷ்,


பெண் விடுதலை, பெண்ணுரிமை, ஆணுக்குப் பெண் சமம் என்ற கருத்துக்கள் மேலோங்கி நிற்கின்ற இன்றைய காலகட்டத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டுத்தான் இருக்கின்றன. மானுடத்தின் உயர்ந்த பண்பு மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பாகும். இந்தப் பண்புகள் மனிதமனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தப்பட்டு வெறுமையாய் காட்சியளிக்கின்றன.

“பொதுவாகச் சமூகவியல் கோட்பாட்டின்படி ஒத்த தகுதியுடைய இரு கூறுகளிடையே எப்பொழுதும் முரண்பாடுகள் தோன்றிக் கொண்டே இருக்கும் இதனால்தான் ஆண், பெண் என்ற இரண்டு உயிரிகளுக்கிடையே அவை தோன்றிய காலம் முதல் போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பெண்கள் சந்தித்த வாழ்வியல் போராட்டங்களும் சமூகப் பிரச்சினைகளும் சமூக மறுப்புகளும் பெண்ணியச் சிந்தனைகள் தோன்ற காரணமாயின. அச்சிந்தனைப் போக்குகள் இயக்கமாக உருவெடுத்தன” என்று பெண்ணியச் சிந்தனைகள் தோன்றியதற்கான அடிப்படையான காரணத்தை முன் வைக்கிறார் முனைவர்
செ. சாரதாம்பாள். பெண்ணியச்சிந்தனைகள் இன்று மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுவதற்கு காரணம், பெண்ணியம் பேசிய தமிழ்ச் சான்றோர்களையே சாரும். அவர்களின் பெண்ணியக் கோட்பாடுகளும் சிந்தனைகளும் மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. அந்த வரிசையில் பாரதியார் குறிப்பிடத்தகுந்தவர். பாரதியாரின் படைப்புக்கள் வாயிலாக நாம் அறியலாகும் பெண்ணியச் சிந்தனைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

1. பாரதியாரின் பெண்ணியச் சிந்தனைகள் :

பாரதியாரின் பாடல் புலமையை கவிஞர் வைரமுத்து அவர்கள்
“பதினொரு வயதில்
தமிழ் – அவனுக்கு
பாரதி என்று
பட்டங்கட்டியது”2 என்று கூறுகிறார்.
பாரதியின் பாடல்கள் சமூக விழிப்புணர்வையும் விடுதலை உணர்வையும் வெளிப்படுத்துவனவாக இருந்தன. மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
“பாரதிக்கு முன்பே பெண்ணுரிமை, பெண்ணடிமை, பெண் விடுதலை, ஆணாதிக்கம் என்பனவெல்லாம் பேசப்பட்ட விஷயங்கள்தான் ஆனால் பெண்களின் பிரச்சனைகளை முழுமையாக உணர்ந்து வெளிக்கொணர்ந்தவர் பாரதியே”3 ஆணுக்குப் பெண் அடிமை என்ற போக்கு அறவே ஓழிய வேண்டும் என்று எண்ணினார். பாரதி – அறுபத்தாறு எனும் பகுதியில் பெண்ணுக்கு விடுதலை வேண்டும் என்று முழக்கமிடுகிறார்:
“பெண்ணுக்கு விடுதலையென்றிங்கோர் நீதி,
பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர்
மண்ணுக்குள்ளெவ்வுயிருந்த தெய்வமென்றால்
மனையாளுந் தெய்வமன்றோ? மதிகெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பது போற் கதைகள் சொல்வீர்!
விடுதலையென்பீர் கருணை வெள்ளமென்பீர்!
பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால்
பின்னிந்த வுலகினிலே வாழ்க்கையில்லை”4
பெண்களுக்கு விடுதலை இல்லையென்றால் இந்த உலக வாழ்க்கைச் சிறக்காது என்பது பாரதியின் அழுத்தமான கருத்தாக வெளிப்படுகிறது.

ஆண்டாண்டு காலமாய் பெண் அடிமைப்பட்டு கிடந்த நிலை மாற வேண்டும் என்பதிலும், ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் அது பெண்கள் முன்னேற்றத்தில் தான் உள்ளது, என்பதிலும் பாரதி உறுதிபட நம்பிக்கைக் கொண்டிருந்தார். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே கல்வி கற்றதாகச் சொல்வார்கள். அத்தகைய மதிப்புமிக்க கல்வியைப் பெண்களுக்கு வழங்கினால் தான் இச் சமுதாயம் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற முடியும். கல்வி அறிவு கொண்ட சமுதாயம் தழைத்தோங்க வேண்டுமானால் பெண்களுக்கு கல்வி அவசியம் என்று வலியுறுத்துகிறார்.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென் கும்மியடி”5

அறிவு என்பது பொதுவானது. அதற்கு ஆண் பெண் என்கிற பேதமில்லை. பெண்கள் அறிவினில் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை மேற்கண்ட பாடல் வரிகளில் சுட்டிக் காட்டுகிறார்.

அன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடந்தேறிய வன்முறைகளையும் கொடுமைகளையும் கண்ட பாரதி வெகுண்டு எழுந்து

“பெண்ணென்று சொல்லிடிலோ – ஒரு
பேயும் இறங்கும் என்பர் தெய்வமே நின்
எண்ணம் இரங்காதோ
நெஞ்சம் குமுறுகிறார் – கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிர் எல்லாம் துன்பப்
பட்டு மடிந்து மடிந்து ஒரு
தஞ்சமும் இல்லாதே – அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தில்
மிஞ்ச விடலாமோ?”6

என்று பிஜித் தீவில் நம்முடைய பெண்கள் பட்ட பாடுகளையும் அடைந்த கொடுமைகளையும் மனமுருகிப் பாடுகிறார். நடிப்பு சுதேசிகள் என்னும் தலைப்பில் பிழைப்புத் தேடி வெளிநாடு சென்ற பெண்களின் நிலையையும் அவர்களின் கற்பு வெள்ளையர்களால் சூறையாடப்பட்ட கொடுமைகளையும் குறிப்பிடுகிறார்.

பெண்களை இழிவுப்படுத்துகிற ஒரு பழக்கத்தை அறிவில்லாத செயலாக, மூடநம்பிக்கையாகவே கருதுகிறார் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்கிறார். ஆணுக்குப் பெண் சமம் என்பதில் எந்த பாகுபாடும் கொள்ளக்கூடாது. பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை வழங்க வேண்டும் என்று பாரதி பெண்ணுரிமைப் பற்றி குறிப்பிடுகிறார். கணவன்மார்கள் தன் மனைவியை அடிமையாக நடத்தும் போக்கை வன்மையாக கண்டிக்கிறார். ஆண்களை இடித்துரைக்கவும் அவர் தயங்கவில்லை
.
“பெண்டாட்டி தனை அடிமைப்படுத்த வேண்டிப்
பெண் குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?
மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டி
தாய்குலத்தை முழுதடிமைப்படுத்தலாமோ?”7
என்று பெண்குல உரிமைக்காக குரலெழுப்புகிறார்.
இந்த கருத்தையே பெரியாரும் கொண்டிருப்பது ஈண்டு நோக்கத்தக்கது.
“தெய்வம் தொழாஅள் தொழுநன் தொழுது எழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
இந்த குறளில் பிறதெய்வங்களை தொழாது தன் தெய்வமாகிய கணவனை தொழுது, துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும் என்பது பரிமேலழகர் உரை” “கற்புடையவளுக்கு கடவுளும் ஏவல் செய்யும்” என்பது பரிமேலழகர் விளக்கம். பெண்களின் கற்புத்திறத்தின் சிறப்பை பாராட்டி வள்ளுவர் கூறினாலும், இது ஒரு பெண்ணடிமை கருத்து ஆணாதிக்கச் சமுதாயத்தின் கருத்தாகவே, உள்ளதாக பெரியார் வள்ளுவரைச் சாடுகிறார். ஆணைத் தொழுது எழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருப்பதால் பெண்ணையும் ஆண் தொழுதுஎழ வேண்டும் என்று பெரியார் குறிப்பிடுகிறார்.

இன்றைய சமூகச் சூழலில் பெண்கள் கணவர் இறந்தவுடன் வேறொரு ஆணைத் திருமணம் செய்து கொண்டால் அதை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளமறுக்கிறது. ஆனால் ஒரு ஆண் தன்னுடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதை இந்த ஆணாதிக்க சமுதாயம் ஏற்றுக் கொண்டுதான் உள்ளது. இந்தப்போக்கை பாரதி

“கற்பு நிலையென்று பேச வந்தார் இரு
கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்”8

என்று சமூகத்தில் வழங்கி வருகின்ற சம்பிரதாயச் சடங்குகளையும் பெண்கள் மட்டும் கற்புடன் இருக்க வேண்டும் ஆண்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் தேவையில்லை என்று கூறுகிற அநீதியையும் சாடுகிறார் மேலும் பெண்ணின் விருப்பமின்றி வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தினையும் சந்தையில் மாடுகளை வாங்குவதைப் போல் கல்யாணச் சந்தையில் பெண்களை வாங்குகின்றப் போக்கை நிரம்பவே ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ என்னும் பாட்டில் கேலி செய்திருப்பது புலனாகிறது.
பெண்ணியம் என்பது பரவலாக எல்லா மக்களாலும் காக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. இனறைய சூழலில் பேசப்படுகின்ற பெண்ணியக் கருத்துக்கள் சிந்தனைகள் அனைத்தும் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்துப் பெண்களையே பெரும்பாலும் குறிப்பிடுவனவாக உள்ளது. அதையும் தாண்டி அடித்தட்டு மக்களாக இருக்கின்ற தலித் பெண்களைப் பற்றி பேசப்படுபவையாக பெண்ணியச் சிந்தனைகள் வளர்ச்சிப் பெற்றிருப்பது வரவேற்க்கத்தக்கது. பெண் சமுதாயம் முன்னேற்றம் என்பது தலித் பெண்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் அப்பொழுது தான், அவை முழுமையான பெண் விடுதலையை குறிக்கும். பாரதி குறிப்பிடுகின்ற பெண்ணியச் சிந்தனைகளை ஏற்று பாரதி வழியில் பெண்ணியம் காப்போம்.

அடிக்குறிப்புகள் :
1. முனைவர் செ. சாரதாம்பாள் – பெண்ணிய உளப்பாங்கும் பெண் எழுத்தும். பக்.1
2. கவிஞர் வைரமுத்து – கவிராஜன் கதை பக்.20
3. ச. அந்தோணி டேவிட்நாதன் – பாரதியும் இவர்களும் பக்.198
4. பதிப்புஆசிரியர் ச.மெய்யப்பன் – பாரதியார் கவிதைகள் பக்.255
5. மேலது ” பக்.477
6. மேலது ” பக்.226
7. மேலது ” பக்.185
8. மேலது ” பக்.255,256

பயன்பட்ட நூல்கள் :

1. பாரதியார் கவிதைகள் – பதிப்பாசிரியர் டாக்டர்.ச.மெய்யப்பன்.
2. கவிராஜன் கதை – கவிஞர் வைரமுத்து.
3. பாரதியும் இவர்களும் – ச. அந்தோணி டேவிட் நாதன்.
4. பெண்ணிய சிந்தனையாளர்கள் – டாக்டர்.பெ.வரதராசன்.
5. பெண்ணிய உளப்பாங்கும் பெண் எழுத்தும் டாக்டர்.செ.சாரதாம்பாள்.

Series Navigation

ப.இரமேஷ்

ப.இரமேஷ்