பூனைகளுக்கு ஒரு நினைவாஞ்சலி!

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

B.R. ஹரன்.


சேலத்தில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். ஒரு பனி மிகுந்த இரவு. உறக்கத்தில் நான் புரண்டு படுக்க முயன்றபோது கால்களுக்கு இடையில் சூடாக மெத்தென்று ஏதோ பட்டது. உடனே புரிந்துகொண்டேன் அது தான் என்று. அதைக் கலைக்க மனமில்லாமல் அதன் இஷ்டத்திற்கு உடன்பட்டேன். அதற்குச் சௌகரியமாக அசைந்து கொடுத்து என் கையைத் தூக்கி இந்தப்பக்கமாக போட்டேன். கை வேறு ஒன்றின் மேல் பட்டது.
“ஓஹோ! இதுவும் இன்று நம் பக்கத்திலேயே படுத்திருக்கிறதே! சரி போகட்டும்” என்று விட்டுவிட்டேன்.
விடியற் காலை எழுந்து பார்த்தபோது இரண்டையும் காணவில்லை. பல் தேய்த்து, முகம் கழுவி காபி குடிப்பதற்காக நான் சமையல் அறைக்குச் சென்ற போது, இரண்டும் – குண்டுபுஸ்கியும், பறக்காவெட்டியும் – காஸ் ஸ்டவ் அருகில் அமர்ந்து இருந்தன. அம்மா பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.
குண்டுபுஸ்கி ஒரு யோகியைப் போல். மிகவும் சமர்த்து. பொறுமையும் கூட. அது தான் வீட்டிலேயே சீனியர் பூனை. தனக்குக் கண்டிப்பாகப் பால் கிடைக்கும் என்று தெரியும். அதனால் கண்ணை மூடி, தவம் இருக்கும் முனிவரைப் போல் ஸ்டவ் அருகே ‘புஸ்க்’ என்று வாலைச் சுற்றி முன்னங்கால்களின் மேல் வைத்துக்கொண்டு ஸ்டவ்வின் சூட்டில் கதகதப்புடன் காத்திருக்கும். அது கொழு கொழு என்று அழகாக இருந்ததால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் அதன் மீது ஆசை, பாசம், செல்லம் எல்லாம்!
பறக்காவெட்டி தாமதமாக எங்கள் குடும்பத்தில் சேர்ந்தது. பார்க்க சோனியாக (ஒல்லியாக இளைத்தது போல்) இருக்கும். ஜூனியர் வேறு. ஆனால் இரண்டுமே கருப்பும் சாம்பலுமாக ஒரே வண்ணத்தில் இருந்தன. குண்டு புஸ்கியின் மேல் வீட்டில் உள்ளவர்கள் அன்புடன் இருப்பதால் அதன் மீது இதுக்குப் பொறாமை கூட உண்டு. அதனால் தனக்குப் பால் கிடைக்காமல் போய் விடுமோ என்ற சந்தேகம் இதற்குத் தினமும் வரும். எனவே, எங்களைச் சுற்றி சுற்றி வந்து, மியாவ்…மியாவ்….என்று கத்தி கத்தி எங்களின் பிராணனை எடுத்துவிடும்.
நாங்கள் யாராவது சற்று கோபத்தை காண்பித்தால் போதும். எங்களுக்கு எதிராக ஒன்றும் செய்யமுடியாத நிலையில், தன் இயலாமையை நினைத்து நொந்து போகும் பறக்காவெட்டியின் கவனம் முழுவதும் குண்டுபுஸ்கியின் மேல் திரும்பும். பொறாமையின் மேலீட்டால் குண்டு புஸ்கியிடம் சென்று தன் கோபத்தை காண்பிக்கும். குண்டுபுஸ்கி தன்னால் முடிந்த வரை பொறுத்திருக்கும். தன் அழகிய முகத்தில் சட்டென்று கடுமையை வரவழைத்து கண்களாலேயே மிரட்டி அடக்கப் பார்க்கும். அதையும் மீறி பறக்காவெட்டி சீண்டிக்கொண்டிருந்தால், ஒரு கையை (முன்னங்கால்) தூக்கி அதன் தலையில் ‘பட்’ என்று ஒரு அடி வைக்கும். அவ்வளவு தான், சப்த நாடியும் ஒடுங்கி பறக்காவெட்டி அமைதியாகி விடும். வீட்டில் உள்ளவர்களுக்கும் பறக்காவெட்டியின் கத்தலிலிருந்து விடுதலை பிறக்கும். தற்காலிகமான நிம்மதி கிடைக்கும்.
பால் காய்ச்சியதும் இரண்டின் தட்டுகளிலும் அம்மா பால் விடுவாள். எங்களுக்குக்கூட காபி அப்புறம் தான். பறக்காவெட்டி தன் தட்டில் உள்ள பாலைப் பருகாமல் குண்டுபுஸ்கியின் தட்டில் உள்ள பாலைப் பறக்க பறக்கக் குடிக்கும். அதனால் தானே ‘பறக்காவெட்டி’ என்று பெயர்! குண்டுபுஸ்கி கவலையே படாமல் தன் தட்டு காலியாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். எப்படியும் தனக்கு பால் கொடுக்காமல் போக மாட்டார்கள் என்கிற நெஞ்சு அழுத்தமும் திமிரும் அசாத்திய நம்பிக்கையும் அதற்கு உண்டு. பறக்காவெட்டி தன் தட்டில் உள்ளதைக் குடிக்கத் தொடங்கும்போது அம்மா குண்டுபுஸ்கியின் தட்டில் பாலை விடுகிறாரா என்று பார்த்துக்கொண்டே குடிக்கும். அம்மா பாலை விட யுத்தனிக்கும்போது மீண்டும் தன் தட்டை விட்டு விட்டு குண்டுபுஸ்கியின் தட்டிற்கு வந்து விடும். குண்டுபுஸ்கி கொஞ்சமும் அசராது. ஒருவழியாக இந்த கண்ணாமூச்சி ஆட்டம் முடிந்து தன் வயிறு நிரம்பியதும் நன்றி கெட்ட பறக்காவெட்டி கூப்பிடக் கூப்பிடக் காதில் வாங்காமல் ஓடிவிடும். பிறகு குண்டுபுஸ்கி பொறுமையாகத் தன் பங்கைக் குடித்துவிட்டு அவர்கள் அனைவரின் மேலும் தலையை முட்டு கொடுத்து உடம்பை ஈஷி தன் நன்றியை தெரிவிக்கும். பின்னர் தன் பின் பக்கத்தை அழகாக ஆட்டியவாறு நிதானமாகச் சென்று விடும்.
பின்னர் நான் தோட்டம் பக்கம் அப்பாவின் பூஜைக்காகப் பூ பரிக்க வருவேன். வீட்டில் செம்பருத்தி, சங்கு புஷ்பம், நந்தியாவெட்டை என்று பல பூச்செடிகள் இருந்தன. அப்போது குண்டுபுஸ்கியும் பறக்காவெட்டியும் அழகாகத் தங்களைத் தாங்களே சுத்தம் செய்துகொண்டிருக்கும். குண்டுபுஸ்கி தன் கையை (முன்னங்கால்) நக்கி அந்த ஈரத்தால் தன் தலையையும், முகத்தையும் சுத்தமாகத் துடைப்பது கண்கொள்ளாக் காட்சி. பின்னர் கையிலிருந்து நகங்களை வெளியேற்றி அவற்றைத் தன் பற்களால் சுத்தம் செய்வதும் அழகான காட்சி. பறக்காவெட்டி யாரும் பார்க்காதபோது மண்தரையைத் தோண்டி அச்சிறிய பள்ளத்தில் சிறுனீரும், மலமும் கழித்து, அப்பள்ளத்தை மூடிவிட்டுப் போகும்.
சிறிது நேரம் கழித்து நான் கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருப்பேன். என் சகோதரி அம்மாவிற்கு உதவியாக உணவு சமைக்கும் போது தேங்காய் துருவ ஆரம்பித்திருப்பாள். அரிவாள் மனையில் தேங்காய் துருவும் சத்தம் எப்படித்தான் பறக்காவெட்டியின் காதுகளைச் சென்றடையுமோ தெரியாது. அடுத்த கணத்தில் சமையல் அறைக்கு வந்து கத்த ஆரம்பித்து விடும். என் சகோதரி அரிவாள் மனையையும், தேங்காய் மூடியையும், தட்டையும் எடுத்துக்கொண்டு ஹால், வெராண்டா என்று ஓடுவாள். அவள் எங்கு சென்றாலும் அவள் பின்னே கத்திக்கொண்டே ஓடும். அதற்குத் துருவிய தேங்காய் மிகவும் பிடிக்கும். துருவி முடியும் வரைக்கும் பொறுமையாக இருக்காது. துருவிக்குக்கொண்டிருக்கும்போது வாய் வைத்துவிட்டால்? எனவே, நான் பறக்கா வெட்டியை கெட்டியாக பிடித்துக்கொள்ள என் சகோதரி பூஜை அறையில் சென்று கதவைத் தாழிட்டுக்கொள்வாள். பின்னர் அவள் தேங்காய் துருவி முடித்து வெளியில் வரும் வரையில் தொண்டை வற்றிப்போக அறை வாசலிலேயே கத்திக்கொண்டிருக்கும் பறக்காவெட்டி, சிறிது துருவல் சாப்பிட்ட பின்னர் தான் ஓயும். குண்டுபுஸ்கிக்குத் தேங்காய் மீது அவ்வளவாக ஆசை கிடையாது. அதற்கு இட்லியும், தோசையும், பால் சாதமும் தான் பிடிக்கும். மற்றபடி எங்கள் வீட்டில் என்ன செய்து போட்டாலும் அலுத்துக்கொள்ளாமல் சாப்பிடும். சின்ன வயதிலிருந்து எங்கள் வீட்டில் வளர்ந்து வருவதால் பழக்கமாகி இருந்தது. ஆனால் ஒரு நாளைக்கு ஒரு எலியாவது ஸ்வாஹா செய்து விடும் இரண்டும்.
நாங்கள் குடியிருந்த, சேலம் ரயில்வே ஜங்ஷனுக்கு வெகு அருகில் உள்ள “ஸ்ரீனிவாசா காலனி” என்கிற குடியிருப்பு விசாலமான தோட்டங்கள் நிறைந்தது. கிட்டத்தட்ட முப்பது வீடுகள் கொண்ட, பெரிய பரப்பளவில் உள்ள ஒரு குடியிருப்பு. வயல் வெளிகளும் புல் தரையுடன் கூடிய மைதானங்களும் கொண்டது. எனவே எலிகளும், தேள்களும், பாம்புகளும், ஒணான்களும், கீரிப்பிள்ளைகளும் இன்னும் பிற பிராணிகளும் ஜந்துக்களும் சகஜமாக உலா வரும் என்பதால், குண்டுபுஸ்கிக்கும் பறக்காவெட்டிக்கும் அசைவ உணவு கிடைப்பது ஒரு பிரச்சினையே இல்லை.
நான் கல்லூரிக்குக் கிளம்பும்போது குண்டுபுஸ்கி தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும். சைக்கிளை எடுப்பதற்கு முன்னால் நான் என் கை முஷ்டியை காண்பித்து புஸ்புஸ்புஸ்….புஸ்புஸ்… என்று கூப்பிட்டவுடன் ஓடி வந்து என் முஷ்டியுடன் தன் தலையை முட்டுக்கொடுக்கும். நான் அதைத் தடவிக் கொடுத்துச் செல்லமாக ஒரு தட்டு தட்டிவிட்டுக் கல்லூரிக்குப் புறப்பட்டுச் செல்வேன். மாலை நான் கல்லூரி விட்டு வந்ததும் காபி குடிப்பேன் என்பது தெரியும் ஆதலால் இரண்டும் சமையல் அறைக்கு ஆஜராகி விடும். மீண்டும் காலை நடந்த பால் கலாட்டா அரங்கேறும்.
காபி குடித்த பின்னர் நான் விளையாடச் செல்வேன். என் பின்னாலேயே ஓடிவரும் குண்டுபுஸ்கியை என் நண்பர்களும் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவார்கள். பின்னர் நாங்கள் ஏதாவது ஒரு விளையாட்டில் கவனம் செலுத்த குண்டுபுஸ்கி அசைவ வேட்டைக்குச் சென்று விடும். இரண்டும் இரவு மட்டும் எங்கே செல்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. நள்ளிரவில் வந்து பெரும்பாலும் என்னருகிலேயே ரகசியமாகப் படுத்துக்கொள்ளும்.
ஒரு முறை என் அத்தை ஊரில் இருந்து வந்திருந்தார்கள். அவர்கள் நில புலன்கள் வைத்து வீட்டிலும் பல பறவைகளையும் பிராணிகளையும் ஒரு காலத்தில் வளர்த்தவர்கள். பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் என்று எதைப்பற்றியும் கவலை படாமல் பராமரித்தவர்கள். எங்கள் வீட்டுத் தோட்டத்திற்குள்ளும் பாம்புகள் அவ்வப்பொழுது வருவதுண்டு. என் அத்தையார், நாங்கள் பூனைகளுக்கு செய்யும் பால் செலவு பற்றாது என்று பாம்புகளுக்கும் பால் வைப்பார்கள். “நாகராஜா வாடா! வந்து பால் சாப்பிடு!” என்று பால் வைத்துப் பின்னர் உள்ளே சென்றுவிடுவார்கள். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தால் பால் மறைந்திருக்கும். அது பாம்பு குடித்ததா அல்லது பறக்காவெட்டி குடித்ததா என்று யாருக்கு தெரியும்? இருந்தாலும் அத்தைக்கு ஒரு நம்பிக்கை பாம்பு தான் குடித்தது என்று. நாங்களும் அத்தை மனத்தை புண் படுத்த விரும்பாமல் பாம்பு தான் என்று ஒத்துக்கொள்வோம்.
ஒரு நாள் மாலை நான் கல்லூரியிலிருந்து திரும்பி வந்தபோது என் வீட்டாரும் பக்கத்து வீட்டாரும் எங்கள் வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நடுவில் ஒரு பாம்பு படம் எடுத்து நின்றுகொண்டிருக்க குண்டுபுஸ்கி வால் சிலிர்த்து அதனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தது. பாம்பு சீறுவதும் குண்டுபுஸ்கி தன் கையை உயர்த்தி அதை அடிக்க முனைவதும் பார்க்கக் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. நான் பின்னர் குண்டு புஸ்கியை அள்ளிக்கொண்டு உள்ளே ஓட, மற்றவர்கள் பாம்பை விரட்டி விட்டனர். வீட்டிற்குள்ளே சென்ற பின்பு தான் பறக்காவெட்டி பயந்து போய் உள்ளே உடல் நடுங்க உட்கார்ந்திருப்பதைக் கவனித்தேன். என் முகத்தில் தோன்றிய புன்னகையையும் என் கைகளின் அணைப்பில் இருந்த குண்டுபுஸ்கியையும் பார்த்த பின்னர் தான் அதற்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. மீ…வ் என்று மெலிதாக ஈனஸ்வரத்தில் முனகியபடி என் கால்களைச் சுற்றி வந்தது. எனக்கு அதைப் பார்க்கப் பாவமாக இருந்ததால், குண்டுபுஸ்கியைக் கீழே இறக்கிவிட்டு அதனை எடுத்து அணைத்து வைத்துக்கொண்டேன். குண்டுபுஸ்கி பின்பக்கத்தை ஆட்டியவாறு புழக்கடைப் பக்கம் எலியைத் தேடிச் சென்றது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் குண்டுபுஸ்கி என்னிடம் ஓடிவந்து எதையோ சொல்ல முயன்றது. வீட்டில் உள்ளவர்களுக்கும் புரியவில்லை. அதனிடம் வித்தியாசமான ஒரு பரபரப்பு தெரிந்தது. பின்னர் புழக்கடையிலிருந்து தண்ணீர் சலசலக்கும் சத்தம் வந்தது. எல்லோரும் போய் பார்த்தபோது தண்ணீர் தொட்டியில் தத்தளித்துக் கொண்டிருந்தது பறக்காவெட்டி. தவறிப்போய் மதில் சுவரிலிருந்து குதிக்கும்போது தொட்டிக்குள் விழுந்திருக்கிறது. நான் அதை வெளியே எடுத்து ஒரு துணியால் துடைத்து விட்ட பிறகும் வெகு நேரம் உடல் நடுங்கிகொண்டிருந்தது. குண்டுபுஸ்கி அதனை ஆதரவாக நக்கிக் கொடுத்த காட்சி எங்கள் அனைவரையும் நெகிழ வைத்தது. அம்மா பறக்கா வெட்டிக்கு மிதமான சூட்டில் பால் வைத்தாள். குடித்து விட்டுச் சோபாவின் மேல் ஏறி சுருண்டு படுத்துக்கொண்டது.
எங்கள் வீட்டுச் சோபாக்களின் திண்டுகளைப் பார்த்தாலே தெரியும் நாங்கள் பூனைகள் வளர்க்கிறோம் என்று. ஆம், திண்டுகள் நடுவில் பூனைகள் உட்கார்ந்தும் படுத்தும் அனுபவித்ததால் குழி விழுந்திருக்கும்! அப்பாவிற்கு மட்டும் அவைகள் சோபாவில் உட்காருவது பிடிக்காது. அப்பாவுக்கும் பூனைகள் மீது பிரியம் தான். எல்லா பூனைகளையுமே “பூனாட்சி” என்று தான் அழைப்பார். எங்களைப் போல் அவற்றை கையில் எடுத்து, அணைத்துக்கொண்டு, ஆசையாக அவற்றுடன் விளையாடுவதெல்லாம் செய்யமாட்டார். அவைகளை நெருங்கவிடாமல் ஒரு தூரத்திலேயே வைத்திருப்பார். அவைகளுக்கும் அப்பாவைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர் பக்கம் செல்லாமல் சற்று ஒதுங்கியே தான் இருக்கும். அப்பாவின் வாசனை பட்டால் போதும், சோபாவின் மீதிருந்து துள்ளிக் குதித்து வெளியே ஒடிவிடும், அல்லது எங்கள் பக்கம் வந்துவிடும்.
நாளடைவில் குண்டுபுஸ்கியும் பறக்காவெட்டியும் சிறந்த நண்பிகள் ஆனார்கள். வஞ்சனை இல்லாமல் கண்ட கடுவன்களுடனும் புணர்ந்து குட்டிகள் போட்டார்கள். ஒரு நேரத்தில் எங்கள் வீட்டில் ஒரு பூனைப் பண்ணையே இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! யார் யாரின் குட்டி என்பதே தெரியாது. குண்டுபுஸ்கி எள்ளு பாட்டியாகவும் பறக்காவெட்டி கொள்ளு பாட்டியாகவும் வலம் வந்தார்கள்.
பூனைகள் வளர்ப்பதில் பல அனுகூலங்கள் உண்டு. நாம் குளிப்பாட்ட வேண்டிய அவசியமில்லை. அவைகளே தம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ளும். மலம் ஜலம் கழிப்பதையும் மிக ரகசியமாகச் செய்து முடிக்கும் பிராணி பூனை. வீட்டிற்கு நண்பர்களோ, உறவினர்களோ, விருந்தினர்களோ வந்தால் நாய்களைப் போல் அவைகளைத் தனியாக்க் கட்டிவைக்க வேண்டிய அவசியமில்லை. புதிய முகங்களைப் பார்த்தால் அவையே ஓடிவிடும். பூனை சாதாரணமாகக் கத்தாத பிராணி. அப்படியே சில முறைக் கத்தினாலும் அடுத்த வீட்டாருக்குத் தொந்தரவாக அந்தச் சத்தம் இருக்காது. வீட்டில் எலி, கறப்பான் பூச்சி போன்ற தொல்லைகள் இருக்காது. நாய்களுடன் ஒப்பிடும்போது, பூனைகள் பிரச்சனை தராத பிராணிகள் என்பதில் சந்தேகமில்லை. பூனைகளின் மற்றொரு சிறப்பம்சம், முகபாவம். அவைகளின் முகபாவங்கள் அற்புதமாக இருக்கும். ஆனால் நாய்களின் கண்களில் இருக்கும் கள்ளமற்ற கபடமற்ற விசுவாசம் பூனைகளின் கண்களில் பார்க்க முடியாது.
கல்லூரி வாழ்க்கை முடிந்து சென்னைக்கு வேலை பார்க்க வந்ததுடன் பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் நான் பூனைகளை மறந்தே போய்விட்டேன். சில வருடங்கள் கழித்து என் வீட்டாரும் சென்னை வந்துவிட்டனர். வந்தவர்கள் பூனைகள் ஒவ்வொன்றாகக் காணமல் போனதையும், சிலவற்றை நரிக்குறவர்கள் பிடித்துக்கொண்டு போனதையும், கடைசியாக ‘ப்ளாக்கி’ மட்டும் இருந்ததாகவும் அதைத் தனியாக விட்டு வரும்போது மிகவும் துக்கமாக இருந்ததாகவும் சொன்னார்கள். குண்டுபுஸ்கியையும் பறக்காவெட்டியையும் நினைத்த போது என் கண்களில் தானாகக் கண்ணீர் துளிகள் மல்கியதை நான் கட்டுப்படுத்த விரும்பவில்லை. அக்கண்ணீர்த் துளிகள் அந்த அன்பு மிகுந்த அழகுப் பூனைகளுக்கு என் மனமார்ந்த அஞ்சலியல்லவா!
சென்ற வாரம் கோயமுத்தூருக்கு ரயிலில் சென்ற போது, சேலம் ஜங்ஷனில் ரயில் நின்றிருந்த அந்த ஐந்து நிமிடங்களில் நாங்கள் குடியிருந்த ஸ்ரீனிவாசா காலனியைப் பார்த்தபோது இனம்புரியாத சோகமும் சுகமும் கலந்த உணர்வு, கோவை சென்று சேரும் வரை என் எண்ண ஓட்டத்தில் பழைய நினைவுகளை மலர வைத்தது. அதே உணர்வு தான் இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், சேலத்தில் படித்துக் கொண்டிருந்தபோது என் வீட்டில் நடந்த பூனைகளின் அரசாங்கத்தைப் பற்றி எழுதத் தூண்டியது. சில நிகழ்வுகள் மட்டுமே எழுதியிருக்கிறேன்.
இப்பொழுதுகூட குண்டுபுஸ்கியுடனும் பறக்காவெட்டியுடனும் மற்றும் பல பூனைக்குட்டிகளுடனும் நான் விளையாடிக் கழித்த அந்த பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை எண்ணும்போது நெஞ்சம் அந்த வாயில்லாப் பிராணிகளின் நினைவில் கனத்துத் தான் போகிறது. நெஞ்சம் கனக்க மனம் நெகிழ்கிறது; மனம் நெகிழ கண்கள் பனிக்கின்றன. பூனைகளை எங்கு பார்த்தாலும் அந்த நாட்கள் நினைவில் வந்து போகின்றன.

Series Navigation