புது இதழ் : சூரிய கதிர்

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


திரைப்படம் தயாரிப்பது போல், பத்திரிகை தொடங்குவது பலருக்கு கனவாக இருக்கிறது. தங்களிடம் சமூகத்துக்குச் சொல்ல ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது அல்லது மற்ற பத்திரிகைகளைவிட தம்மால வித்தியாசமாக ஏதோ ஒன்றைச் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. இதன் பயனாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் பத்திரிகைத் தொழிலுக்குள் கால்பதித்து வருகிறார்கள். சமீபத்தில் அப்படி கால்பதித்திருப்பவர் ஒரு மருத்துவர்: டாக்டர் கை. கதிர்வேள் மூத்த பத்திரிகையாளர் ராவ்-வை ஆசிரியராகக் கொண்டு, டாக்டர் கை.கதிர்வேளை பதிப்பாசிரியராகக் கொண்டு ‘சூரிய கதிர்’ என்ற மாதமிருமுறை வெகுஜன இதழ் வெளியாகி இருக்கிறது. சப்டைட்டில், ‘சுள்ளுன்னு கொஞ்சம் ஜில்லுன்னு…’ என்று சொல்லுகிறது. இதுதான் சூரிய கதிரின் குறிக்கோள் போலிருக்கிறது. முதல் இதழ் நவம்பர் 16 தேதியிட்டு, நவம்பர் 14ஆம் தேà!
��ி �®
�டைகளுக்கு வந்தது. ‘ஐ லவ் தமிழ் – இலியானா இச்ச்!’சுடன் முதல் அட்டை, கவர்ச்சிகரமாக இருக்கிறது.

புதிய இதழ்களில் புதிய அம்சங்களைச் சுலபமாகச் செய்ய முடியும். பாரம்பரியம் என்ற சுமை அதற்குக் கிடையாது. புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த, எழுத்து முறைகளை முயன்று பார்க்க, புதிய அம்சங்களை, வடிவங்களை எல்லாம் செய்து பார்க்க புதிய இதழ்கள் எப்போதும் பயன்படக்கூடும். வெகுஜன வாசிப்புக்கு ஏற்ற புதிய படைப்புகளை உருவாக்க, வெகுஜன இதழ்கள் உதவக்கூடும். சூரிய கதிர் அதையெல்லாம் செய்கின்றவனா என்று பார்க்கவேண்டும்.

இதழ் முழுவதும் கலர்ஃபுல் விஷயங்கள். நேற்றைய இன்றைய பிரபலங்கள், எல்லா பக்கங்களில் அணிவகுத்திருக்கிறார்கள். 80 பக்கங்கள். நிறைய கட்டுரைகள். இதழ் முழுவதும் features அம்சங்கள் கூடுதல். வெகுஜன இதழுக்கான அத்தனை அம்சங்களும் இங்கே ஆஜர். மொத்த இதழையும் படித்த பின்னர், எனக்குப் பிடித்த அம்சங்கள் இவை:

1. ஜெயேந்திரர் கைதுக்குப் பின்னர், அவரை விரிவாக பேட்டி எடுத்துப் போட்டிருக்கும் முதல் இதழ் இதுதானோ என்னவோ? பத்திரிகைகள், ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோதும் அதற்குப் பின்னரும் அவரைத் தொடத்தக்கவர் அல்ல என்று விலக்கி வைத்திருந்தன. அதற்கு முன்னர் இதே பத்திரிகைகள், அவரைப் பற்றிப் பக்கம் பக்கமாக புகழ்ந்து எழுதித் தள்ளின. இப்போது, இந்தப் பேட்டியில், ஒரு நிதானம் இருக்கிறது. பக்குவம் இருக்கிறது. பேலன்ஸ் இருக்கிறது.

2. சின்னகுத்தூசியின் ‘சட்டமும் மக்களும் – அதுவா இதுவா?’ என்ற இரண்டு பக்கக் கட்டுரை இருக்கிறது. பழைய அரசியல் செய்திகளைச் சுவாரசியத்தோடும் விவர ஞானத்தோடும் எழுதத் தெரிந்த ஒரு சிலரில் சின்னகுத்தூசி ஒருவர் அவரது கட்டுரை சிற்பம் செதுக்கினார் போல் இருக்கும். இந்தக் கட்டுரையும் அப்படியே. தேர்ந்த பத்திரிகையாளரின் கைவண்ணம் அதில் மிளிர்கிறது.

3. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதாவின் நினைவுகள், தமிழச்சி தங்கபாண்டியனின் அழகு பற்றிய கட்டுரை, வைகோ பேட்டி எல்லாம் நல்ல சுவாரசியத்துடன் எழுதப்பட்டுள்ளன.

4. சீனா பற்றிய கட்டுரை, டாக்டர் கை.கதிர்வேளின் ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ கட்டுரை ஆகியவை முக்கியமானவை.

கூடவே நிறைய கேள்விகளும் தோன்றின. அவை:

1. ஏன் எல்லா கட்டுரைகளும் பேட்டிகளும் ‘கீர்த்தனாரம்பத்திலே…’ என்று தொடங்குகின்றன? ஜெயேந்திரர் பேட்டி, அவருக்கு எட்டு வயதில் பூணூல் போட்டதில் இருந்து தொடங்குகிறது. வைகோ பேட்டி, ‘பிறந்த ஊரில் மறக்க முடியாத விஷயங்கள்?’ என்று தொடங்குகிறது, கே.எம். செரியனின் பேட்டி இப்படித் தொடங்குகிறது ‘ஐந்தேகால் அடி கம்பீரமான உயரம். எப்போதும் மாறாத 66 கிலோ எடை…’ இதெல்லாம் கொஞ்சம் Cliché இல்லையோ? இப்படி நிறைய முறை ஏற்கெனவே எழுதி எழுதித் தேய்த்துவிட்டோமே? பொதுவாக வெகுஜன பத்திரிகை பேட்டிகள், பேட்டி கட்டுரைகள் எல்லாம் சமீபத்திய விவரங்களில் இருந்து தொடங்கி, மேலே எழுந்து செல்லுமே அன்றி, முன்கதை சுருக்கம் மாதிரி இருப்பதில்லை.

2. டீக்கடை பெஞ்சு, கழுகார் பாணியில், அரசியல் பேசும் நால்வர் அணியின் பத்தி ஒன்று இருக்கிறது. ஆனால், அதில் சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்திருக்கிறதா என்பது முக்கியம்.

3. பாலகுமாரன் தொடர் ஒன்று ஆரம்பித்திருக்கிறார். அவரது எழுத்தில் கவர்ச்சி காணாமல் போய் ரொம்ப நாளாச்சு இல்லையோ? புதிதாக என்ன சொல்லப் போகிறார் என்று பார்க்கவேண்டும்.

4. இவ்வளவு பக்கங்கள் கொண்ட இதழில் ஒரு சிறுகதை கூட இல்லை. கதைக்கான காலம் முடிந்துபோய்விட்டது என்று சொல்லாமல் சொல்லுகிறார்களோ?

5. டோட்டல் வேஸ்ட் என்று சொல்லவேண்டுமென்றால், அந்தப் புகழ் கடைசி பக்கத்துக்குப் போய்ச் சேரும். சும்மா வெள்ளைத்தாளாய் விட்டுவிட்டால் கூடப் பரவாயில்லை. இயக்குநர் பார்த்திபனின் உளறல் சகிக்கவில்லை. இரண்டாவது வேஸ்ட், பாஸ்கியின் இரண்டு பக்க அறுவை. தாங்க முடியவில்லை. கிச்சுகிச்சு மூட்டினால் கூட சிரிப்பு வந்துடும். இதில் அதுகூட வரமாட்டேன் என்கிறது.

6. என் வருத்தங்களில் முக்கியமானது, புதியவர்களின் பங்களிப்பு இந்த இதழில் எங்கேயும் காணக்கிடைக்கவில்லை என்பதுதான். ஏற்கெனவே பிரபலமானவர்கள், அல்லது சமீபத்தில் பிரபலமானவர்கள்தான் இதழ் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். நாளைய பிரபலங்களை, இன்றே இனங்காணுவது இன்னும் சிறப்பு இல்லையா?

இன்றைக்கு இருக்கும் வர்த்தக போட்டியில், எப்படி இந்த இதழைக் கொண்டு போய் மக்களிடம் சேர்க்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. 14ஆம் தேதி சென்னை சுவர்களில் கொஞ்சம் போஸ்டர்கள் பார்த்தேன். கடைகளில் போஸ்டர்கள் காணோம். பெரிய விளம்பரம் காணோம். கொண்டாட்டங்களும் மிஸ்ஸிங். இன்றைக்கு வெகுஜன இதழ் தொடங்குவது என்பது அமைதியான விஷயமில்லை. புதுப்பட தொடக்க விழா பூஜை மாதிரி பெரிய அளவில் செய்தால்தான், கொஞ்சமாவது வாசகர்களின் கவனத்தைக் கவர முடியும்.

மேலும் இதழின் விலை ரூ.15. ரூ.10 என்பது ஒரு பெரிய தடுப்பு. பலர் ரூ.10ஐத் தாண்டி யோசிக்க மாட்டேன் என்கிறார்கள். இந்த விலையை, வாசகர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்றும் பார்க்கவேண்டும்.

சூரிய கதிர் – வெகுஜன வெரைட்டி மசாலா.

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்