புதிய சமுதாயமும் இளைஞர்களும்

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

பவளமணி பிரகாசம்


கடந்த காலத்தை, நடந்த சம்பவங்களை உள்ளது உள்ளபடி உரைப்பது சாித்திரம். அதில் கற்பனை சாயமேற்றி, சொந்த விருப்பு, வெறுப்பின் சாயலை கலந்து படைத்தால் அது கதை, கவிதை, காவியம். இன்று அதிகார பூர்வமாக சாித்திர பாடங்கள் காவிய அந்தஸ்தை பெற்றுக்கொண்டிருக்கும் கால கட்டத்தில் நம் சமூக வரலாறை, அதன் மாறி வரும் ஓட்டத்தை கவனிப்போம்.

சமுதாய வாழ்க்கையில் கருத்துக்களும், கண்ணோட்டங்களும், பழக்க வழக்கங்களும் மாறிக்கொண்டே வருவது மிகவும் இயல்பானது. பொதுவாக, அரசியல் சட்டங்கள், பொருளாதார சூழ்நிலை, பெரும் தலைவர்கள், சிந்தனை சிற்பிகள் ஆகியோரது தோற்றம் போன்ற பல விஷயங்கள் சமுதாய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போதைய மாற்றங்கள் பலவும் வேகமான விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்டுள்ளன.

கால ஓட்டத்திலே கட்டுப்படுத்த முடியாத பல பொிய, சிறிய மாற்றங்களை அன்றாட வாழ்விலிருந்து, நெடுங்கால வாழ்க்கை வரை நாம் சந்திக்கிறோம். வயதுக்கு வந்த பின் பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளுடன் தடையின்றி பேசவோ, விளையாடவோ முடியாத நிலை மாறி இன்று இரு பாலாரும் ஒரே வகுப்பறையில் சேர்ந்து கல்வி கற்று, ஒரே அலுவலகத்தில் சேர்ந்து பணி புாியும் மிகப் பொிய மாறுதலை இந்திய சமுதாயம் கண்டிருக்கிறது. முன்பு ஒரு காலத்தில் சேலைத்தலைப்பால் தோளை மூடிக் கொண்டு, கதவுக்குப் பின்னால் நின்று கொண்டுதான் பெண்கள் பேசுவார்கள், பகலில் கணவன் பக்கத்தில் நின்று ஒரு பார்வை கூட நிமிர்ந்து பார்க்க முடியாது என்று சொன்னால் இன்றைய குமாிகளுக்கு சிாிப்பாய் இருக்கும். இன்றோ ‘நைட்டி ‘ என்னும் உடை இரவு முடிந்த பின்னும் கூட உடுத்தக்கூடியதாய் ஆகி விட்டது. பைக்கில் செல்கையில் பின்னே அமர்ந்திருக்கும் துணைவிக்கு கையை கணவனின் மடியில் வைத்தால்தான் ஆயிற்று. இலை மறைவு காய் மறைவின் சுவரஸ்யம் அவையில் அரங்கேறும் அந்தரங்கத்தில் எப்படி கிடைக்குமோ ?

அறிவியல் வளைர்ச்சியால் உலகம் சிறிய உருண்டையாகிப் போய், எல்லா மொழி, இனத்தவாின் பழக்க வழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் நமக்கு மிகவும் பாிச்சயமாகி விட்டது. புதிதாய் பார்க்கும் அனைத்தும் மோகம் கொள்ளச் செய்கின்றன. காட்டாற்று வெள்ளத்துக்கு கரை கட்டிய பொியவர்கள், உணர்வுகளை நெறிப்படுத்திய நல்லாசான்கள் இன்றில்லாத நிலையில், பாலையும், நீரையும் பிாித்துப் பருகும் அன்னத்தின் திறமை அற்றவர்களாய், அந்நிய கலாச்சாரத்தை, நாகாிகத்தை, பழக்க வழக்கங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள முனைகின்றனர் இந்தத் தலைமுறையினர்.

அருமையான இளநீர், மோர், பழரசங்களை விடுத்து, கேடு விளைவிக்கும் வெற்று, செயற்கை பானங்களை குடிக்கப் பழகியதோடு நிற்கவில்லை. மஞ்சளும், மருதாணியும், பிற மூலிகைகளும் தராத அழகை ரசாயன பூச்சுகளில் தேடியதோடு முடியவில்லை. ‘டேட்டிங் ‘ என்றொரு பழக்கம் மேலை நாடுகளில் உள்ளது. முற்காலத்தில் அது ஆணும், பெண்ணும் கவரப்படும் இயற்கையான உணர்ச்சிக்கு ஒரு அழகான, அளவான வடிகாலாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இன்றோ, ஆணும், பெண்ணும் ஒரு மாலைப் பொழுதை சேர்ந்து கழிக்க உடன்பட்டால் அது இறுதியில் உடலுறவில் களிப்பதில்தான் முடிகிறது.

நம் சமுதாயத்தில் மிகவும் தெளிவான ஆண், பெண் உறவு முறையும், திருமணம் பற்றிய நெறிகளும், உடலுறவு பற்றிய கட்டுப்பாடுகளும் உள்ளன. மேல் நாட்டினரைப் போல சேர்ந்துண்ணுவதும், சேர்ந்துறங்குவதும் ஒன்று போலத்தான் என்று நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது. இதைப் பற்றிய உடலுக்கும், உள்ளத்துக்கும் ஏற்புடைய, ஆரோக்கியமான, தீர்க்கமான கருத்துக்களை, கட்டுப்பாடுகளை, நாகாிகமாக இதுகாறும் கடைபிடித்து வந்துள்ளோம். மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ளும் முறையில் வித்தியாசங்கள் உண்டு என்ற விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். மனித உடலையும், மனித உறவுகளையும் புனிதமாக மதிக்கிறோம்.

‘பூ பாரம் குடும்ப பாரம் ‘என்று பூமாலையுடன் துவங்கும் திருமண பந்தத்தை, அதன் பொறுப்புகளை சுகமான சுமைகளாக கடமையுணர்வுடன் ஏற்றுக் கொள்ளக் கற்றிருக்கிறோம். நமது இல்லற அன்பை சகட்டுமேனிக்கு எல்லோர் மேலும் பன்னீர் போல் தெளிக்காமல் குறிப்பிட்ட நபருக்காக பொத்தி வைத்து காத்திருக்கிறோம். எந்நேரமும் இனக்கவர்ச்சியால் மோகம் கொள்வதும், அதில் முகிழ்ந்தெழுவதும் நமக்கு பழக்கமில்லாதது. இறையுணர்வு, கலையார்வம், தத்துவ விசாரம் போல பல டிபார்ட்மெண்ட்கள் நம் வாழ்க்கை முறையில் இருப்பதால் பாலுணர்வுக்கு ஒரு தனிப்பட்ட, கட்டுக்கடங்கிய பகுதியை மட்டும் வாழ்வில் ஒதுக்கிக் கொண்டோம். அது மட்டுமே நமக்கு வாழ்க்கையல்ல.

பிஞ்சிலே பழுத்து, வெகு விரைவில் எல்லாம் திகட்டிப் போய் வெறுமையில் பரபரப்பாய் தவிக்கிறவர்கள் மேற்கத்தியர்கள். நிதானமாய், துளித் துளியாய் வாழ்க்கைத் தேனை இறுதி வரை சுவைக்கத் தொிந்த நமக்கு அவர்கள் பாணி எதற்கு ? நமக்கு பழக்கமில்லாத அவர்களுடைய வாரயிறுதி கேளிக்கை, கொண்டாட்டங்கள், ‘மண்டே புளுஸ் ‘ போன்றவற்றை நம் நகரங்களுக்குள் அனுமதிக்கலாமா ? இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க அலையும் மனோபாவம் வேண்டாமே!

கடல் கடந்து சென்று அந்நிய மண்ணிலே நமது ஆத்ம பலத்தை முழங்கி நிரூபித்த வங்கத்து சிங்கமான விவேகானந்தர் இன்றிருந்தால் எவ்வளவு வேதனைப் படுவாரோ தொியவில்லை. நம்முடைய நல்ல பழக்க வழக்கங்கள் எதையேனும் ஏற்றுமதி செய்துள்ளோமோ இல்லையோ, பல வேடிக்கையான பழக்க வழக்கங்களை இறக்கிக் கொண்டோம். தினசாி வணங்கத் தகுந்த தாய்க்கு தனி தினம் ஒதுக்கியுள்ளார்கள் வாழ்த்துக் கூற. காதலர் தினம் என்று ஒரு கேலிக் கூத்து போலி உணர்ச்சிப் பிரச்சாரம் செய்து பண விரயத்தையும் உண்டாக்கி வருடந்தோறும் நடந்தேறுகிறது.

இன்றைய தலைமுறையினருக்கு அறிவுப் பசிக்கு போதிய தீனி கிடைக்கிறது. மிஞ்சிய, மற்றைய அபாிதமான உணர்ச்சிகளுக்கு நல்ல வடிகால்கள் இல்லை. அவர்களது கற்பனாசக்தி, சமூக பிரக்ஞை, மானிட மகிமை பற்றிய உணர்வு இவற்றை ஆக்கபூர்வமான விதத்தில் தூண்டிவிட போதுமான அக்கரையுள்ள ஆர்வலர்கள் இல்லை. ஆனால் எதிர்மறை தாக்கங்களை உருவாக்கும் சங்கதிகளோ ஏராளம்.

இதனால் அர்த்தமற்ற செயல்பாடுகள், ஆழமற்ற சிந்தனைகள், நெடுநோக்கற்ற திட்டங்கள் இவைதான் இன்றைய இளைய சமுதாயத்தின் அடையாளங்களாய் இருக்கின்றன. தன்னை, தன் உணர்வுகளை கர்வத்துடன், கெளரவத்துடன் நோக்கும் பழக்கம் இற்று வருகிறது. இதன் பிரதிபலிப்பாக பிறரை, பிறர் உணர்வுகளை மதித்து, கெளரவப்படுத்தும் எண்ணமுமில்லை. பொக்கிஷமாக போற்றப்பட வேண்டிய உணர்ச்சிகள் இன்று ‘சீப் ‘பாகிப் போய் விட்டன. இணைய தளங்களின் இன்றைய இளைய சமுதாயம் அளவளாவும் அறைகளை எட்டிப் பார்த்தால் முதலில் குமட்டுகிறது, அடுத்து தாங்கொணா வலியில் இதயம் முனகுறது. இளைஞர் சக்தி இங்ஙனம் மலினமாகி விரயமாவது ஏன் ? இதைத் தடுப்பது எங்ஙனம் ?

இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் வரை கூட்டுக்குடும்ப முறை வழக்கத்திலிருந்த போது ஒரு பாட்டியோ, பெரியம்மாவோ, அத்தையோ ஒரு நடமாடும் நூலகமாகவே இயங்கிக் கொண்டு வீட்டிலுள்ள சிறு வயது பிள்ளைகளின் அறிவுத்தாகத்தை, கற்பனை வளத்தை, ஆன்ம வளர்ச்சியை சிறப்பாக உரமூட்டி வளர்த்து வந்தார்கள். அவர்களிடமிருந்த ஏராளமான கதைகளில், அவற்றை விவரித்த பாங்கில் வெளிப்படையாக தெரிவிக்காத பல நீதிகள், தத்துவங்கள் இருந்தன. சரித்திர, புராண, சமூக, குடும்பப் பரம்பரை பற்றிய கதைகளைச் சொல்லி வளரும் குழந்தைகளின் வாழ்க்கையை வளமாக்கினார்கள். தரமான விதைகளை இவ்வாறு உருவாக்கியதால் சமூகப் பயிர் செழித்து வளர்ந்தது. களைகள் கம்மி. வேகமாக மாறி வரும் உலகில் கூட்டுக் குடும்பமுறை சமூக வரலாறில் இடம்பெறும் பழைய சங்கதியாகிவிட்ட நிலையில் இன்றைய வளரும் பயிரின் நிலை என்ன ? பெரும் சர்ச்சைக்குரிய ‘ஜெனிட்டிக்கலி மாடிஃபைட் ‘ பயிர் வகைதானா, இன்றைய இளம் தலைமுறையினரும் ?

தொழில் நுட்பக் கல்வியில், விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் அதிசயத்தக்க சாதனைகளை படைத்து வரும் இவர்களுக்கு வாழ்க்கையில் ஸ்திரமான நங்கூரமாக விளங்கி வந்த குடும்பத்து பெரியவர்களும், நல்லொழுக்கக் கதைகளை வாரந்தோறும் வகுப்பறையில் நயமாக போதித்த நல்லாசிரியர்களும் காலத்தின் கட்டாயத்தால் இன்று காணாமல் போய் விட்டதால் இந்தத் தலைமுறையினரின் அகராதியில் ‘பண்பு ‘, ‘பண்பாடு ‘ போன்ற வார்த்தைகளுக்கு வித்தியாசமான, வேறு அர்த்தங்கள் உருவாகிவிட்டதோ என்று தோன்றுகிறது.

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்