பிள்ளையின் பித்துமனம் (அகிலனின் ‘காசுமரம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 47)

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

பாவண்ணன்


வேலைக்கு வைத்துக் கொள்கிற குழந்தை உழைப்பாளிகளுக்கான குறைந்தபட்ச வயது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டடிருந்த போதும் பல உணவு விடுதிகளில் சின்னஞ்சிறுவர்களே வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். எந்த உணவு விடுதியிலும் ஒரு வாரத்துக்கும் மேல் எந்த ஒரு சிறுவனும் வேலை செய்வதில்லை. அதற்குள் அவன் இடம் மாறியிருப்பான். அல்லது வெளியெற்றப்பட்டிருப்பான். இந்த உணவு விடுதிக் காரர்களுக்கு மட்டும் தொடர்ந்து சிறுவர்களே வேலைக்குக் கிடைப்பது எப்படி என்பது புரியாத புதிராக இருந்தது.

நண்பர் ஒருவரிடம் என் புதிரை முன்வைத்த போது தன் அனுபவத்தை நினைவு கூர்ந்தார். கிராமங்களில் வேலை வாய்ப்பு குன்றிய சூழலில் நகரை நோக்கி இச்சிறுவர்கள் ஓடி வருகிறார்கள். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து ஏதோ துரத்தல்களிலிருந்து தப்பித்தால் போதும் என்பது வரையிலான பற்பல காரணங்களுக்காக கிராமங்களைத் துறந்து திருட்டு ரயிலேறி விடுகிறார்கள். வந்து இறங்கியதும் நகரின் பிரம்மாண்டமான தோற்றம் அவர்களை மிரள வைத்து விடுகிறது. போக்கிடம் புரியாமல் ஏதோ ஒரு இடத்தில் சுருண்டு படுத்து விடுகிறார்கள். இவர்களின் உடல்மொழியையும் முகமொழியையும் நன்றாகப் படிக்கத் தெரிந்த தரகர்கள் அதிகாலையில் நகரில் திரிந்து இவர்களைப் பிடித்து விடுகிறார்கள். தரகர்களின் ஆதரவான ஒரு சொல்லோ அல்லது பசிக்குச் சோறோ இச்சிறுவர்களை வசமாக்கி விடுகிறது. வசப்படுத்தப்பட்ட சிறுவர்கள் உணவு விடுதிகள் முதல் பெரிய பெரிய இடங்கள் வரையிலான இடங்களில் வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

கிராமங்களிலும் வேலைக்குச் செல்லும் சிறுவர்கள் இருக்கிறார்கள். களை எடுப்பதிலிருந்து கட்டு சுமப்பது வரையிலான வேலைகளிலும் சாணம் பொறுக்குவதிலிருந்து சூளைகளில் செங்கல் அடுக்குவது வரையிலுமான எண்ணற்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். குடும்பச் சுமைகளைப் புரிந்து கொண்டு, அச்சுமையைப் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வருபவர்கள் இக்குழந்தைகள் . உடலுழைப்பால் பகிர்ந்து கொள்ள இயலாத குழந்தைகள் மன அளவில் பெற்றோரின் சுமைகளைக் குறைக்கப் பல கனவுகளைக் காண்கிறார்கள். எல்லாம் உன்னதக் கனவுகள். தருக்கத்தைக் கொண்டு அல்ல, அன்பை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இக்கனவுகளை மதிப்பிட முடியும். இக்கனவுகளால் தம் உயிரையே பலியாகக் கொடுக்க நேரும் என்று தெரிந்தோ தெரியாமலோ செயல்களில் ஈடுபட்டு விடும் குழந்தைகள் மனத்தில் நீங்காத இடம் பிடித்து விடுகிறார்கள்.

‘அம்மா நான் பெரியவனானதும் பெரிய பெரிய வேலைக்குப் போயி வீடு பூரா அரிசி மூட்டையா வாங்கி அடுக்கி வச்சிருவேன். அப்பறம் நம்ம வீட்டுல பசியே இருக்காதும்மா ‘ என்று சொல்லும் குழந்தையைப் பார்த்திருக்கிறீர்களா ? ‘நீ கவலப்படாதம்மா, நெறய பணம் சம்பாரிச்சி ஒனக்கு மாடி வீடு கட்டித் தரம்மா ‘ என்று சபதமெடுக்கிற குழந்தையின் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறீர்களா ? எல்லாம் குழந்தைகளின் களங்கமற்ற கனவுகள். பெற்றவர்களின் துயர்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் முளைப்பவை.

இப்படிப்பட்ட குழந்தைக்கனவுகளைக் காதுகொடுத்துக் கேட்கும் போதெல்லாம் மனத்தில் உடனே உதிக்கும் பல கதைகளில் ஒன்று அகிலனுடைய காசுமரம். குழந்தைமையைத் துல்லியமாகப் பதிவு செய்த கதைகளில் இதுவும் ஒன்று.

கதையில் காவேரி என்னும் சிறுமி இடம் பெறுகிறாள். நாகம்மாள், சுப்பையா என்னும் குடியானவத் தம்பதிகளின் குழந்தை அவள். கிராமத்தில் பொறுக்க முடியாத பஞ்சம். வெகு காலமாக மழை பொழியாததால் நிலபுலங்களெல்லாம் வறண்டு விடுகின்றன. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகச் சம்பாதிக்கும் பொருட்டு இரவோடு இரவாக ஊரைவிட்டுக் கிளம்பிச் செல்கிறான். காவேரி பிறந்து இரண்டு வருஷம் வரையில் நாகம்மாள் தன் பேரில் இருந்த ஒரு காணிநிலத்தை விற்று, அதைக் கொண்டு வாழ்வை நடத்துகிறாள். அந்தப் பணமும் அதற்கு மேல் கட்டி வரவில்லை. கணக்குப் பிள்ளை ராஜமையர் வீட்டில் அவளுக்கு மூன்று ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. அவர்கள் தினமும் கொடுக்கும் பழைய கறி, சாதம், குழம்பு முதலிய பொருட்களும் நாகம்மாளின் அரை வயிற்றைக் கழுவப் போதுமானதாக இருக்கின்றன.

குடும்பச் சிரமங்கள் எதுவும் குழந்தையின் மனத்தில் பதியாத வண்ணம் ஆசையோடு வளர்க்கிறாள் நாகம்மாள். அப்பா ஊரில் இல்லை என்னும் விபரீத ஏக்கம் குழந்தையின் மனத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் விசேஷ கவனம் எடுத்துக் கொள்கிறாள்.

ஒருநாள் பள்ளி விட்டு வரும் வேளையில் தன் தாய் அழுதுகொண்டு இருப்பதைப் பார்த்துக் காவேரி அதற்கான காரணத்தைக் கேட்கிறாள். கணக்குப் பிள்ளையை வேறு ஊருக்கு மாற்றி இருப்பதாகவும் தனக்கு வேலை போய்விட்டதாகவும் சொல்கிறாள் நாகம்மாள். குழந்தை தன் மழலைப் பேச்சால் தாயின் கவனத்தைத் திசை திருப்புகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகப் போனதால் தோப்பு மேஸ்திரியின் வீட்டு வேலைக்குச் செல்கிறாள் நாகம்மாள். அங்கு மாதச் சம்பளம் மட்டுமே கிடைக்கிறது. மேற்படி சாப்பாடு வகைகள் கிடைப்பதில்லை.

பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பும் சமயத்தில் தினமும் காவேரியின் கையில் காலணாவைக் கொடுத்து அனுப்பவுவது நாகம்மாளின் வழக்கம். கணக்குப் பிள்ளை வீட்டு வேலை போனபிறகு ஒரு பைசாவாவது கொடுத்து வருவாள். அந்தக் காசுக்கு மற்ற பிள்ளைகள் போல மிட்டாய் ஏதேனும் வாங்கித் தின்னக் கூடும் என்று நினைத்துக் கொள்வாள். ஆனால் காவேரி எப்போதேனும் இரண்டொரு நாளைத் தவிர மற்ற நாட்களில் அன்னை கொடுக்கும் காசுகளை அம்மாவுக்குத் தெரியாமல் ஒரு மண்கலயத்தில் போட்டு வைக்கிறாள்.

ஒருநாள் பள்ளிக்குக் காவேரி கிளம்பும் வேலை. கையில் கொடுக்க தம்பிடி காசு கூட இல்லை நாகம்மாளிடம். அடுத்த நாள் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். இப்படியே சில நாட்கள் கழிகின்றன. ஒரு நாள் எப்படியாவது அம்மாவிடம் காசு வாங்கி விட வேண்டும் என்கிற பிடிவாதத்தில் தாயை அரித்தெடுக்கிறாள் காவேரி. ஏதோ கோபத்திலும் இயலாமையிலும் ‘காசு காசுன்னு வம்பு பண்ணா நான் காசுக்கு எங்கேடி போவேன் ? நம்ம வீட்டுல காசு மரமா முளைக்குது ? ‘ என்று குழந்தையின் மீது எரிந்து விழுகிறாள். பயந்து போன குழந்தை பள்ளிக்கு ஓடிப் போகிறது. அக்குழந்தைக்கும் கோபம்தான். ஆனால் கோபமெல்லாம் வடிந்த பிறகு, காவேரிக்குத் தாயின் மீது அனுதாபமாக இருக்கிறது. பாவம் அம்மா, என்ன செய்வாள், நம் வீட்டில் காசு மரம் இருந்தால் அவளும் மற்றவர்களைப் போல செலவு செய்வாள். இல்லாத குறைக்கு என்ன செய்வது ? என்று யோசிக்கிறது. உடனே எப்படியாவது தன் வீட்டில் ஒரு காசுமரத்தை வளர்க்க வேண்டும் என்று ஆவல் கொள்கிறாள். சாயந்தர வேலையில் நாகம்மாள் இல்லாத நேரம் பார்த்து கலயத்திலிருந்து சில காசுகளை எடுத்துக் கொல்லையில் ஊன்றித் தண்ணீர் ஊற்றுகிறாள். தினமும் அந்த இடத்தைக் கண்ணைப் போலக் கண்காணித்து வருகிறாள். ஒரு வாரத்தக்குப் பிறகும் மளை கிளம்பவில்லை. கோபத்தில் மண்ணைக் கிளறிப் பார்த்த போது எல்லாக் காசுகளும் வேரும் விடாமல் பாசி பிடித்தக் கிடக்கின்றன.

சில நாட்களில் அவள் பள்ளியில் ஒரு சம்பவம் நடக்கிறது. ஆரஞ்சுப் பழத்தை அப்படியே விழுங்கி விட்ட சிறுவனுடைய வயிற்றிலிருந்து ஆரஞ்சு மரம் முளைக்கப் போகிறது என்று பிள்ளைகள் தமக்குள் குசுகுசுவென்று பேசிக் கொள்கிறாள். இந்தப் பேச்சு எப்படியோ காவேரியின் காதுகளில் விழுந்து திடாரென அவளுடைய மனத்தில் ஓர் ஆச்சரியமான மாறுதலை உண்டாக்குகிறது. அம்மாவின் காசில்லாத பிரச்சனைக்குத் தானே ஒரு தீர்வைக் கண்டுபிடித்ததில் அவளுக்கு ஆனந்தமாக இருக்கிறது. அன்று இரவு படுக்கப் போகும் முன்னர் ஒரு காசை எடுத்து விழுங்கித் தண்ணிர் அருந்துகிறாள். மறுநாள் மரம் முளைத்து வராததில் அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. இரண்டாம் நாள் இரவும் காலணாவை எடுத்து விழுங்கி விடுகிறாள். அதனாலும் பயன் இல்லை. மூன்றாம் நாள் தன் ஆத்திரத்துடன் கலயத்தில் உள்ள அத்தனை காசுகளையும் அள்ளி வந்து ஒவ்வொன்றாக வாய்க்குள் போட்டு விழுங்குகிறாள்.

அன்று மாலையே காவேரிக்கு தலை சுற்றுகிறது. வயிற்று வலி அதிகரிக்கிறது. மரம் முளைக்கத் தொடங்கி விட்டதாக எண்ணிச் சந்தோஷப் படுகிறது குழந்தை. வைத்தியர் வந்து மருந்து கொடுக்கிறார். மயக்கத்தில் இருந்து விழிக்கும் காவேரி அம்மாவைப் பார்த்துக் கவலைப்பட வேண்டாம் என்றும் முளைக்கப் போகிற காசுமரத்தால் அவள் பணப்பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடும் என்றும் சொல்கிறாள். மரணத்தைத் தழுவினாலும் தாயின் துயர் துடைத்த திருப்தி குழந்தையின் முகமெங்கும் படர்ந்திருக்கிறது.

*

எழுதத் தொடங்கி ஏழு ஆண்டுகள் கழித்த பின்னர் தம் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார் அகிலன். 23 கதைகளைக் கொண்ட அத்தொகுப்பு தமிழ்நாட்டுச் சிறுகதைகள் என்னும் தலைப்பில் சுத்தானந்த பாரதியாரின் சிறப்புரையோடு அல்லயன்ஸ் வெளியீடாக ஐம்பதுகளில் வெளிவந்தது. காசுமரம் என்னும் இக்கதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அகிலன் ஞானபீடப் பரிசு பெற்றவர்.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்