பாரதி

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

ஆதிராஜ்.



ஞாலத்தை நேசித்தவன் – உயர்
ஞானத்தை வாசித்தவன்! – ஊழிக்
காலத்தை வென்ற கலைஞனவன் – குயிற்
காவியம் செய்த கவிஞனவன்!

பெண்மையைப் போற்றியவன் -சாதி
பேதத்தைத் துற்றியவன் – அவன்
உண்மையைச் சொல்லும் உரம் கொண்டவன் – நீதி
ஒன்றையே பேசி அறங்கண்டவன்!

சுதந்திரத் தாகத்தினால் – கவி
சொன்னதின் வேகத்தினால் – தன்
இதந்தரு வாழ்வை இழந்தவனாம் – இடர்
ஏற்றும் உரிமை இழந்தவனாம்!.

பாரதம் வீறு கொள்ள – வெள்ளைப்
பறங்கியர் மாறு கொள்ள – எங்கள்
பாரதி கர்ஜித்துப் பாடியவன் – இவன்
பகைவர்க்கும் நன்மையை நாடியவன்!

ஞாலப் பெரு வெளியில் – ஓர்
ஞானச் சிறு குயிலாய் – தன்
கோலக் கவிதைகள் கூவியவன் – ஊழிக்
கூத்தினைக் கண்டுள்ளம் தாவியவன்!

கற்றவர் நெஞ்சினிலும் – தமிழ்
கேட்டவர் நெஞ்சினிலும் – கவிக்
கொற்றவனாகிக் குடியிருப்போன் – அந்தக்
கோமகனுக்குக் கரம் குவிப்போம்!


(டிசம்பர்- 11 பாரதி பிறந்த நாள்)


Series Navigation

ஆதிராஜ்

ஆதிராஜ்