பாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

சின்னக்கருப்பன்


உலகமகா மடையர்கள் தான் பாகிஸ்தானுடன் சமாதானம் பேசுவார்கள். அப்படிப்பட்ட மடையர்கள் இன்று இந்திய அரசாங்கத்தின் அதிகாரப் பதவிகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு பழமொழி சொல்வார்கள். கேப்பையில நெய் ஒழுகுதுன்னா, கேக்கறவனுக்கு மதி எங்க போச்சி என்று. பாகிஸ்தானிய ராணுவம் சமாதானம் பேசுதுன்னா….

பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் இருக்கும் வரைக்கும், அங்கிருக்கும் ராணுவத்தலைவர்களுடன் அமெரிக்காவும் இங்கிலாந்தும் குலவி வரும்; அவர்களுக்கு உதவி வரும். மற்றவர்களது பிச்சையிலேயே வாழ்ந்து வரும் அந்த ராணுவம், அமெரிக்காவும் இங்கிலாந்தும் கைவிட்டால் கூட இன்னொரு இந்திய எதிர்ப்பு தேசத்துக்கு வால் பிடிக்க தயாராக இருக்கும். அப்படித்தான் சீனாவுடன் ஜிக்ரி தோஸ்த் ஆனது பாகிஸ்தான். இந்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு இப்படி பாகிஸ்தானுக்கு வெளியிலிருந்து பணமும் பலமும் வரும் வரைக்கும், பாகிஸ்தான் மக்களின் விருப்பத்துக்கு இது தலை வணங்காது. அதனாலேயே பாகிஸ்தானில் பூச்சாண்டி காட்டப்படும் ஜனநாயகம் ஒரு நாடகம்தான் என்பது தெளிவு. நவாஸ் ஷெரீப்புக்கும், பெனசீர் புட்டோவுக்கும் ஆன கதிதான் இனி வரும் எல்லா ‘பிரதமர் ‘களுக்கும். இந்தியா, பாகிஸ்தானுடன் போட்ட எந்த ஒப்பந்தத்தையும் பாகிஸ்தான் அரசு நிறைவேற்றவில்லை. அமைதிப் பேச்சு மூலம் காஷ்மீரை கொடுக்கவில்லை என்றால், மீண்டும் கார்கில்கள் வரும் என்று வெளிப்படையாகவே இந்தியாவை பயமுறுத்துகிறார் பாகிஸ்தானின் சர்வாதிகார ராணுவ தளபதி. நான்காவது போரில் தோற்கத் தயாராகிறது பாகிஸ்தான் என்று அரசியல் மேடையில் பேசுகிறார் இந்திய பிரதமர் திரு. அமைதிப்புறா.

பாகிஸ்தானுடன் சமாதானம் என்ற பெயரில் தி இந்து போன்ற பத்திரிக்கைகள் விட்டுக்கொடுத்தலைப் பற்றிப் பேசுகின்றன. அத்வானி போன்ற ஆட்களும் இப்போது விட்டுக்கொடுத்தலைப் பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாம் சுயநினைவுடன் தான் பேசுகிறார்களா என்ற ஐயம் வருகிறது. விட்டுக் கொடுத்தல் இந்தியாவின் பெருந்தன்மையாக பார்க்கப்படவில்லை. அது இந்தியாவின் பலவீனமாகத் தான் பாகிஸ்தான் பிரசாரம் செய்து வந்திருக்கிறது என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாதா ? பாகிஸ்தான் இந்தியாவுக்குள் நடத்தும் அழிவுக்குப்(million cuts) பயந்துதான் இந்தியா இன்று பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருகிறது என்றுதான் பாகிஸ்தான் ராணுவம் உள்ளேயும் வெளியேயும் பிரச்சாரம் செய்துவருகிறது. இதைவிட என்ன அவமானம் வேண்டும் நமக்கு ?

இந்தியா விட்டுக்கொடுக்க விட்டுக்கொடுக்க, மற்ற நாடுகள் தலைவிரித்து ஆடுவது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட திபேத் நாட்டை சீனாவின் பிரதேசமாகத்தான் இந்தியாவின் அரசாங்க வரைபடம் காட்டுகிறது. ஆனால், சிக்கிம் நாட்டை தனிநாடாகத்தான் சீனா காட்டுகிறது. (இந்த விஷயம் கவனமாக தி இந்துவாலும் இதர சீன ஆதரவுப் பத்திரிக்கைகளாலும் இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. ஜ்ஊன் 19ஆம் தேதி பிடிஐ செய்தி எவ்வாறு தி இந்து எழுதியிருக்கிறது என்பதை ஜ்ஊன் 20ஆம் தேதி பத்திரிக்கையில் பாருங்கள்) அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளை சீனாவின் பகுதியாக சீனா காட்டுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட லடாக் பிரதேசத்தை சீனாவின் பகுதியாக சீனா காட்டுகிறது. சீனாவுக்கு காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் தாரை வார்க்கிறது. ஆனால், இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற குரலுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. நல்லுறவுக்காக இந்தியா சில இடங்களை விட்டுக்கொடுத்து மேலும் பிரச்னையை வாங்கிக்கொண்டதுதான் மிச்சம் என்பது தமிழ்நாட்டிலிருந்து காஷ்மீர் வரை, ராஜஸ்தானிலிருந்து நாகாலாந்து வரை பல உதாரணங்கள் கிடக்கின்றன.

இன்னும் 28 தடவை பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றாலும் அதனை ‘பிழைத்துப்போ ‘ என்று விட்டுவிட்டு பிரித்விராஜ் வேலை பண்ண இந்தியா தயாராகத்தான் இருக்கும். இந்தியாவின் வழி அப்படி. ஆனால் ஒரு முறை பாகிஸ்தானிய ராணுவம் ஜெயித்தாலும், இந்தியாவை எப்படி நடத்தும், இந்தியர்களை எப்படி நடத்தும் என்பது பங்களாதேஷில் பாகிஸ்தானிய ராணுவம் வெறியாட்டம் ஆடியதைப் படித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தான் ராணுவத்தை அழிப்பதுதான் பாகிஸ்தானில் வாழும் மனிதர்களுக்கும் நல்லது, இந்தியாவில் வாழும் மனிதர்களுக்கும் நல்லது. பாகிஸ்தான் என்ற ஒரு தேசமே இல்லாமல், அதனை இந்தியாவின் பிரதேசமாக அறிவித்து, அதில் நான்கு மாநில அரசுகளை ஏற்படுத்தி, அவைகளை மக்கள் நலன் கருதும் திட்டங்களை மட்டும் நிறைவேற்ற அனுமதிப்பதுதான் அவர்களுக்கும் நல்லது; நமக்கும் நல்லது. இந்த பாகிஸ்தான் பிரிவினையே அழிக்கப்பட வேண்டும். அப்படி பாகிஸ்தான் இந்தியாவுடன் இணைந்தால், காஷ்மீர் பிரச்னைக்கு என்ன அடிப்படை ? மீண்டும் இந்தியா பழைய பிரிட்டிஷ் இந்தியாவின் நீள அகலங்களோடு ஆவதுதான், இந்த பிரதேசத்தில் இருக்கும் அனைவருக்கும் நல்லது. இல்லையென்றால், நாம் தொடர்ந்து தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிலிருந்து, குஜராத்தின் கோத்ராவிலிருந்து, காஷ்மீரின் ரகுநாத் கோவிலிருந்து இன்னும் எதிர்கால குண்டுவெடிப்புகள் வரை அப்பாவி மக்களின் உயிருக்குத்தான் ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்போம்.

இப்படிப்பட்ட குண்டுவெடிப்புகளும் தீவிரவாதமும் இன்னும் இந்திய அரசை ஒரு போலீஸ் அரசாங்கமாக மாற்றத்தான் உதவும். அது இன்னும் மனித உரிமைகளுக்கு வேட்டு வைக்கும். பாகிஸ்தானை இந்தியாவுடன் ஒரேயடியாக இணைப்பதன் மூலம் மட்டுமே முன்னேற்றப்பாதையில் இந்தியா செல்ல வழி. இல்லையென்றால் இன்னும் அதிகமான வெறுப்பு கக்கும் பேச்சுக்களை பாகிஸ்தானிடமிருந்து கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதற்குப் பதில் இன்னும் அதிகமான வெறுப்பு கக்கும் பேச்சுகள் இந்தியாவிலிருந்து எழும். அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானின் இந்த 50 வருட பிரச்சாரம், இன்று இந்தியர்களையே பிரித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான். இந்தியாவில் தோன்றிய மதச்சார்பற்ற அரசாங்க அமைப்பை முனைந்து அழிக்க நினைப்பது பாகிஸ்தான். 50 வருட பிரச்சாரமும், வெடிகுண்டுகளும், இந்தியாவில் இருக்கும் கொஞ்ச நஞ்ச மதச்சார்பற்ற சிந்தனையையும் அழிக்க முனைந்து நிற்கின்றன. ஒவ்வொரு முஸ்லீம் தீவிரவாதிக்கு பாகிஸ்தான் கொடுக்கும் பணமும், ஏராளமான முஸ்லீம் எதிர்ப்பாளர்களை இந்தியாவில் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை ஏன் மூடி மறைக்க வேண்டும் ? அப்படி பாகிஸ்தானுக்கு வால் பிடித்து இவர்களுக்கு ஆவப்போவதென்ன ?

உலகம் முழுவது அமெரிக்காவும் பிரிட்டனும் காலனியாதிக்கத்தின் தொடர்ச்சியாக நவ காலனியாதிக்கத்தை உருவாக்கின. அதன் விளைவாக, அங்கங்கு புதிதாக விடுதலை பெற்ற நாடுகளின் ராணுவ தளபதிகளோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு உலகமெங்கும் ராணுவ ஆட்சிகளுக்கு வழிவகுத்தன. இதுதான் சிலியின் ஆலண்டே தூக்கி எறியப்படவும், காங்கோவில் ஜனநாயக ஆட்சி தூக்கி எறியப்பட்டு ராணுவ ஆட்சி வந்ததற்கும் காரணம். (காங்கோ சமாச்சாரத்தில் பெல்ஜியம் இவைகளோடு கூட்டு). ஜனநாயக ஆட்சிகள் இந்த எதேச்சதிகார அரசு அமைப்புகளுக்கு வேப்பங்காய். ராணுவ ஆட்சியே சிறந்தது. ஒரே ஒரு ஆளுக்கு ஆணையிடுவதன் மூலம் வேலையை முடித்துவிடலாம். அதன் தொடர்ச்சியே பாகிஸ்தான். சுமார் 50 வருடங்களாக பாகிஸ்தானின் ராணுவம், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ராணுவத்துக்கு மிக மிக நெருங்கிய அமைப்பாக இருந்துவருகிறது. காலின் பவல் போன்றவர்கள் பாகிஸ்தானின் ராணுவத் தளபதிகளுக்கு நண்பர்கள். அமெரிக்கா இடும் கட்டளையை சிரமேற்கொண்டு உடனேசெய்து வரும் பாகிஸ்தானை என்ன வென்று சொல்வீர்கள் ? சுதந்திர தேசம் என்று சொல்வீர்களா, காலனியாதிக்கத்தின் கீழ் இருக்கும் நாடு சொல்வீர்களா ? உண்மையில் இன்று பாகிஸ்தான் ஆதரவாகப் பேசும் அனைவரும், அமெரிக்காவின் எதேச்சதிகாரத்துக்கும் இங்கிலாந்தின் துணை எதேச்சதிகாரத்துக்கும் தான் வால் பிடிக்கிறார்கள். இந்த உண்மையை ஏன் இந்த ‘அறிவுஜீவிகள் ‘ மறைக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியாத புதிர்.

சமாதான வழியிலோ, அல்லது ராணுவ வழியிலோ, பாகிஸ்தான் ராணுவத்தை கலைப்பதுதான் இந்தியர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். பெனசீர் புட்டோ அவர்களுடனும், நவாஸ் ஷெரீப் அவர்களுடனும், அல்டாஃப் ஹ்உசேன் அவர்களுடனும் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பேநசீர் புட்டோ காலிஸ்தான் தீவிரவாதத்தின் பாகிஸ்தானிய வேர்களை அறுத்தவுடனேயே தூக்கி எறியப்பட்டார். நவாஸ் ஷரீஃப் இந்தியாவுக்கு நட்புக் கரம் நீட்டும் போதே தூக்கியெறியப் பட்டார். யாகியா கான் ஆனாலும், முஷரஃப் ஆனாலும் இந்த ராணுவ சர்வாதிகாரிகள் பாகிஸ்தான் மக்களுக்கு எதிரியே. அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் நலன்களுக்குப் பாதுகாவலர்களே. பாகிஸ்தான் ராணுவத்தை முழுக்க முழுக்க இந்தியா நிராகரிக்க வேண்டும். பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ராணுவ அலுவலுக்குத் திரும்பும் வரையில், அரசியல் பதவிகளை விடாதவரையில் பாகிஸ்தான் ராணுவத்துடன் பேச முடியாது என்றும் அறிவிக்க வேண்டும். ஜமாலி போன்ற பொம்மை பிரதமர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று அறிவிக்க வேண்டும்.

சொல்லப்போனால், தைவான் நாட்டை எப்படி ஒரு தனிநாடாக சீனா ஒப்புக்கொள்வதில்லையோ அதுபோல, பாகிஸ்தான் நாட்டையும் ஒரு தனிநாடாக இந்தியா ஒப்புக்கொள்ளக்கூடாது. பிரிந்து சென்ற பிரதேசம் போன்ற வார்த்தைகளில் அதனை வர்ணித்து, அது சட்டப்பூர்வமாக அமைதி வழியில் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டும். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைச் சட்ட பூர்வமாக ஒப்புக் கொண்டு தான் இந்தியா பாகிஸ்தான் உருவானது என்ற வாதம் , காஷ்மீரில் பாகிஸ்தானிய ராணுவம் காலடி வைத்தபோதே காலாவதியாகிவிட்டது. பங்களா தேஷ் போர், கார்கில் யுத்தம் இந்த ராணுவ வெறியாட்டத்தை உறுதி செய்தபோதே பாகிஸ்தான் நாடல்ல, பாகிஸ்தான் ராணுவமே பயங்கரவாத அமைப்பு என்று உறுதி செய்யப் பட்டுவிட்டது. பாகிஸ்தான் பிரிவினைக்கு எப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் – பெரும்பான்மை முஸ்லீம் மக்களின் உணைர்வையும் மீறி – பாடுபட்டு பிரிவினையை உருவாக்கியது என்று ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.

எனவே ராணுவரீதியில் பாகிஸ்தான் மக்களை பாகிஸ்தானிய ராணுவத்திடமிருந்து விடுதலை செய்யவும் இந்தியா தயாராக இருக்கவேண்டும். இது தான் உண்மையான காலனியாதிக்க எதிர்ப்பாக இருக்க முடியும்.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்