அமர்நாத்
பரிசீலனைக்குழுவின் மறுநாள் வருகையை நினைத்து ஞாயிறு மாலையிலேயே சரவணப்ரியாவுக்கு பரபரப்பு. அதைத்தணிக்க முதலில் பரிமளாவை அழைத்து, “உன்னை நான் ரொம்ப சாதாரணமா நெனைச்சிட்டேன். உன் ரெசுமேலே நீ ஏன் அதைக்குறிப்பிடலை?” என்று வம்புக்கு இழுத்தாள்.
“நீ என்ன சொல்றே?”
“ஏ! சும்மா நடிக்காதே! ரெண்டுநாளைக்கு முந்தி நான் சயன்ஸ் லைப்ரரிக்குப் போனப்போ புதுசா வந்திருந்த புத்தகங்களிலே ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’ கண்ணிலே பட்டுது. தலைப்பு நல்லாருக்கேன்னு எடுத்துப்பாத்தேன். அதை எழுதினது நீதான்னு தெரிஞ்சுது.”
“நீ கேட்டவுடனே அனுப்ப ஒருபழைய ரெசுமேதான் கையிலே இருந்தது.”
“புத்தகத்திலே கால்பங்குதான் படிச்சிருக்கேன். சாமியையும் படிக்கச் சொன்னேன். ‘நிலையற்ற உலகுக்கு ஒரு வழிகாட்டி’ (யு பரனைந வழ யn ரnஉநசவயin றழசடன) என்கிற துணைப்பெயர் ரொம்பப் பொருத்தம். தினம் பயன்படுத்தற ரெண்டு வார்த்தைகளிலே எவ்வளவு விஷயங்களை அடக்கியிருக்கே! முழுக்கப் புரியணும்னா இன்னொருவாட்டி படிக்கணும்போல இருக்கு.”
“தாங்க்ஸ்!”
“பெட்டியெல்லாம் எடுத்துவச்சாச்சா?”
“இப்பத்தான் முடிஞ்சுது.”
“எங்களுக்கு என்ன கிஃப்ட் எடுத்துட்டு வர்றதுன்னு குழப்பிக்காதே! நீ கையெழுத்துப்போட்ட உன் புத்தகத்தைக் குடுத்தா போதும்.”
“நிச்சயமா எடுத்துண்டு வரேன்.”
“அப்ப, நாளைக்கு ஏர்போட்லே பாக்கலாம். பை, பரிமளா!”
அடுத்து, மறுநாள் அவள் வழங்கவேண்டிய பேச்சிற்கு ஒத்திகை. அப்போது காட்டவேண்டிய படங்களின் தொகுப்பை அலுவலக அறையின் கணினியில் ஒவ்வொன்றாக நகர்த்தி அதனருகில் நின்று உரை நிகழ்த்தினாள். அவளுக்கு முன்னால் ஒரு நாற்காலியில் அலட்சியமும் ஆர்வமின்மையும் காட்டிய முகத்தோடு சாமி.
முதலில், உரையின் தலைப்பும், வழங்குபவரின் பெயரும்.
1-ப்ரோமோப்ரோபேன் பயன்படுத்தும் தொழிலாளர்களின் நரம்புக் கோளாறுகள்
சாரா நாதன், பிஎச்.டி.
அறிமுகமாக ஒருசிறு முன்னுரை. சில ஆண்டுகளுக்குமுன் சீனாவின் தொழிற்சாலைகளைப் பார்வையிட்ட ஒரு ஜப்பானிய பேராசிரியர் 1-ப்ரோமோப்ரோபேன் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த பெண்களின் உடல்பலவீனத்தை கவனித்தார். அதன் காரணத்தை அறிய எங்கள் துணையை நாடினார். அந்த இரசாயனப் பொருளைச் செய்யும்போதும், அதைப் பெரிய கொள்கலங்களில் ஊற்றும்போதும் அதன் ஆவியைச் சுவாசிக்க அவர்களுக்கு நிறைய வாய்ப்பு இருந்ததாக அவர் தெரிவித்தார். அவர் ஒத்துழைப்புடன் இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. எங்கள் ஆர்வத்தைத் தோற்றுவித்த அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.
தொடர்ந்து, ஆராய்ச்சியின் கருதுகோள். 1-ப்ரோமோப்ரோபேன் நேரடியாகவோ இரசாயன மாறுபடு அடைந்தபிறகோ நரம்புகளின் சிஸ்டீனுடன் இணைவதால் தீயவிளைவுகள் உண்டாகின்றன.
நான்காவது படம் கருதுகோளை இரசாயன சமன்பாடுகளில் விவரித்தது.
பிறகு, இரத்தத்திலும் சிறுநீரிலும் மாறுபட்ட சிஸ்டீன் கணிக்கப்படும் முறைகள் விளக்கப்பட்டன.
ஆரம்ப ஆராய்ச்சிகளுக்கான ஆறு படங்களில், 1-ப்ரோமோப்ரோபேனை வௌ;வேறு அளவுகளில் சுவாசித்த எலிகள், தூய காற்றை சுவாசித்த எலிகளோடு ஒப்பிடப்பட்டன. அவற்றின் இரத்தத்திலும் சிறுநீரிலும் ஏற்பட்ட பாதிப்புகள் சுவாசித்த காற்றில் கலக்கப்பட்ட 1-ப்ரோமோப்ரோபேனின் அளவைப்பொறுத்து மாறுபட்டன. இந்த கவனிப்பு கருதுகோளுக்கு ஆதாரம் எனக் காட்டினாள்.
பேச்சின் கனத்தைக் கூட்டிய அடுத்த படங்களில் சென்னை தொழிற்சாலையிலும், கால்-சென்டரிலும் பணியாற்றியவர்களின் இரத்தம் மற்றும் சிறுநீரை சேகரித்த விவரங்கள். அவர்களின் நரம்புணர்வை ட்யுனிங் N.பார்க் உதவியோடு அளவிட்ட முறை.
தொழிலாளிகளின் இரத்தமும் சிறுநீரும் கால்-சென்டர் பணியாளர்களிடமிருந்து எடுத்த உடல்திரவங்களுடன் ஒப்பிடப்பட்டன.
தொழிற்சாலையின் வரைபடத்தைக் காட்டி அதன் வௌ;வேறு பகுதிகளின் காற்றில் 1-ப்ரோமோப்ரோபேன் எவ்வளவு பிபிஎம் (மில்லியனின் பங்கு) கலந்திருந்தது என்று கணித்ததை சரவணப்ரியா விளக்கினாள். அதற்குத் தகுந்தாற்போல் அங்கு வேலைசெய்த ஆட்களின் பாதிப்புகள் மாறுபட்டன. அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்கள் மற்றும் மேற்பார்வையாளன் ஆகியோரின் இரத்தத்திலும் சிறுநீரிலும் அதிக மாறுதல்கள் இல்லை. அவர்கள் ட்யுனிங் Nஃபார்க்கின் அதிர்வுகளை உணர்ந்த வேகம் கால்-சென்டரில் பணியாற்றியவர்களின் உணர்ச்சியை ஒத்திருந்தது. தொழிற்சாலையின் பசையைப் பரப்பும் இயந்திரத்திற்கு அருகில் 1-ப்ரோமோப்ரோபேன் மிக அதிகமாக இருந்ததாகக் காட்டப்பட்டது. அங்கே வேலைசெய்த இருவருக்கும் நரம்புத்தளர்ச்சியால் வரும் நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதால் அவர்களை வேறிடத்திற்கு உடனே மாற்றுவது நல்லது என கருத்துத் தெரிவித்தாள்.
எதிர்காலத்திட்டம். முன்விவரித்த வழிமுறைகளைப் பின்பற்றி ஆராயவிருக்கும் இரசாயனப் பொருட்களின் பட்டியல். அவற்றின் நச்சுகுணங்களை குழுவின் மற்ற உறுப்பினர்கள் விவரிப்பார்கள்.
கடைசியில் நன்றிகூறல், ரைடர் சீட்ஸ், கால்-சென்டர் நிறுவனங்களின் நிர்வாகத்தினருக்கும், ஆராய்ச்சில் ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், மேனேஜர் கஜமுகனுக்கும், ஆரம்பகாலச் செலவுகளை ஏற்றுக்கொண்ட வான்டர்பில்ட் மருத்துவமையத்திற்கும் மனம் நிறைந்த நன்றி!
பேசி முடித்தபோது அவளுக்கே நம்பிக்கை மிகுந்தது. சாமியும் கையில் பிடித்த கடிகாரத்தைப் பார்த்து, “பத்தொன்பது நிமிஷத்திலே எல்லா விஷயமும் சொல்லிட்டே, குட். க்ரான்ட் கிடைச்சமாதிரிதான்” என்று பாராட்டினான். குறைசொல்ல வேண்டுமே என்பதற்காக, “இன்னும் கொஞ்சம் நிதானமா பேசலாம்” என்றான்.
“என்னை மாட்டறமாதிரி எதாவது கேள்வி கேள்!”
அதை அவன் செய்வதற்குமுன் அவள் அலைபேசி சமையலறையிலிருந்து அழைத்தது. அதை எடுக்கச்சென்றபோது சாமியும் அவள்பின் சென்றான்.
“சரவணப்ரியா! எப்படி இருக்கீங்க?” என்று சோமசுந்தரம் தமிழிலேயே தொடங்கினார்.
“நாளைக்கு எல்லாம் சரியாப் போகணுமேன்னு கொஞ்சம் கவலை. டாக்டர் சோமசுந்தரம்! உங்கள் பயணம்?”
“சுகமாத்தான் இருந்துச்சு” என்று நிறுத்தினார்.
அவர் வான்டர்பில்ட்டை ஒட்டிய செவன்த் இன்னில் தங்கியிருக்கிறார் என்று தெரியும். இருந்தாலும் அவரை வீட்டிற்குச் சாப்பிட அழைப்பது தவறாகக் கருதப்படலாம் என்று முந்தைய வாரத்தின் உரையாடலைத் தொடர்ந்தாள். “நீங்க கேட்டபடி நான் ஸ்டாடிஸ்டிகல் அனாலிசிஸ_க்கு ஒருத்தியை ஏற்பாடு செஞ்சுருக்கேன். அவளுக்கு இந்தமாதிரி ரிசர்ச்லே நல்ல அனுபவம் இருக்கு. அவளை நாளைமதியம் கமிட்டி ‘லாபை’ச் சுத்திப்பாக்க வரும்போது அறிமுகம் செய்யலாம்னு இருக்கேன்.”
அவர் அதைக் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. சற்றுமுன் அவளுக்கு ஏற்பட்ட நம்பிக்கையைத் தகர்ப்பதுபோல், “இருந்தாப்போல, கமிட்டி சேர்மன் டாக்டர் ஃபாஸ்டாக் இப்போ ஒரு புதுப்பிரச்சினையைக் கிளப்பியிருக்கார். உங்களால உடனே அதைத்தீர்க்க முடியுமான்னு தெரியலை” என்றார். அவர் எதுவென்று சொல்லவில்லை. தானாகக் கேட்பதும் சரவணப்ரியாவுக்கு சரியாகப் படவில்லை.
வெளியே கூட்டிச்செல்லமாட்டேன் என்றுசொல்லி குழந்தையை அழவிட்டு, பிறகு அதைச் சமாதானப்படுத்த மிட்டாய் தருவதுபோல், “அதை விட்டுத்தள்ளுங்க, சரவணப்ரியா! உங்களுக்கு ஒரு பரிசு கொணாந்திருக்கேன். என்னன்னு நீங்க ஊகிக்கவே முடியாது. நாளை பாக்கலாம்” என்று முடித்தார்.
காதில் விழுந்த மனைவியின் வார்த்தைகளும், அவள் முகமும் ஏதோ சரியில்லை என சாமிக்குத் தெரிவித்தன. என்னவென்று சஞ்சலப்படாமல் அதிலிருந்து அவள் மனதைத் திருப்ப என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
மறுநாள் ஒன்பது மணிக்குத்தான் கூட்டம். கடைசிநிமிடத்தில் செய்யவேண்டியது எதாவது விட்டுப்போயிருக்கலாமென சாமியுடன் சரவணப்ரியா ஏழுமணிக்கே வேலைக்குச் சென்றாள். காலையில் எழுந்ததும் சோமசுந்தரம் கிளப்பிய சந்தேகம் மனஉறுதியை அசைக்காமலிருக்க ஒப்பனையிலும் உடையிலும் கவனத்தைச் செலுத்தினாள். சாமி செய்த இட்லியையும் சட்னியையும் ருசித்துச் சாப்பிட்டாள்.
சம்பிரதாய உடையில் ஜேசன் அவளுக்குமுன்பே அலுவலகம் வந்திருந்தான். “சாரா! நான் கூட்டம் நடக்கும் அறையில் எல்லாப்பொறிகளும் சரியாக இயங்குகின்றனவா என்று உறுதிசெய்ய அங்கே போகிறேன்” என்றான்.
அவன் அகன்றபிறகு சரவணப்ரியா தன் மேஜைமேல் இருந்த கணினிக்கு உயிர்கொடுத்தாள். சோமசுந்தரம் கோடிகாட்டிய புதிய பிரச்சினை எதுவென்று கஜமுகனிடமிருந்து முந்தைய இரவில் வந்த மின்-தபால் தெரிவித்தது. ரைடர் சீட்ஸ் தொழிற்சாலையில் ஜேசனும் ஐரீனும் சேகரித்த விவரங்களை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலிடத்துத் தகராறு என்ற நொண்டிச்சாக்கு. அப்படியென்றால், அவர்கள் சேகரித்து வந்த தொழிலாளர்களின் இரத்தம் மற்றும் சிறுநீரிலிருந்து இறக்கிய எண்களுக்கும், ட்யுனிங் Nஃபார்க்கால் அளந்த அவர்களின் உணர்வின் தன்மைகளுக்கும் அவள் உரையில் இடமில்லை.
இதுபோன்ற ஒரு தீர்க்கமுடியாத பிரச்சினை வரப்போகிறது என்று கமிட்டியின் தலைவர் ஃபாஸ்டாக்குக்கு எப்படித் தெரிந்தது? அதை யோசிக்க இப்போது நேரமில்லை.
அவள் ஏற்கனவே தயாரித்திருந்த ‘பவர்பாய்ன்ட்’டில் ரைடர் சீட்ஸ், கால்-சென்டர் சம்பந்தப்பட்ட படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு எலிகளின் ஆராய்ச்சியில் இன்னும் சில விவரங்கள் சேர்த்தாள். தலைப்பை 1-ப்ரோமோப்ரோபேன் விளைவிக்கும் நரம்புக்கோளாறுகள் என்று மாற்றினாள். அதை ஒரு ‘பென்-டிரைவி’ல் ஜேசனிடம் எடுத்துச்சென்றாள். அவள் முகத்தைப் பார்த்தவுடனே அவன், “எதாவது தவறு நடந்துவிட்டதா?” என்று கேட்டான். கஜமுகன் சரியான நேரத்தில் காலைவாரியதை அவள் குறிப்பிட்டபோது அவனுக்கும் சிறிது கலக்கம். உடனே சமாளித்துக்கொண்டான். “நம்மால் முடிந்ததைச் செய்வோம்” என்று அவளுடைய மாற்றியமைக்கப்பட்ட ‘பவர்பாய்ன்ட்’ படங்களைக் கணினியில் புகுத்தினான்.
நடுவிலிருந்த பரந்த மேஜையைச் சுற்றி ஒன்பது சொகுசான நாற்காலிகள். கதவருகில் ஒரு நீண்டமேஜை. அதன்மேல் சர்க்கரையும், கொழுப்பும் அலங்கரித்த தின்பண்டங்கள், காப்பி தயாரிக்கும் இயந்திரம், மற்றும் குளிரவைத்த தண்ணீர்ப் புட்டிகள். மற்ற சுவர்களை நாற்காலிகளின் வரிசை மறைத்தது. அவற்றில் ஆராய்ச்சிக் குழுவினர் ஆவலுடன் காத்திருந்தனர்.
கமிட்டியின் அங்கத்தினர்கள் ஃபாஸ்டாக்கைப் பின்தொடர்ந்து ஐந்துநிமிடங்களுக்கு முன்பே வந்தார்கள். தாடிவைத்த ஒருவரைத் தவிர மற்றவர்கள் காப்பி நிறைந்த கோப்பையை எடுத்துக்கொண்டார்கள். அமருமுன் அறிமுகப் படலம். சரவணப்ரியாவும் சோமசுந்தரமும் மூன்றாம் மனிதர்களின் புன்னகையையும், சாதாரண ‘ஹலோ’வையும் பரிமாறிக்கொண்டனர். குரலைப் போலவே அவருடைய உருவமும் அவள்மனதில் மரியாதையை உண்டாக்கியது. அதிகம் நரைக்காத தலைமயிர், சுருக்கமற்ற முகம், நடுத்தர உயரம், வட்டங்களுடன் கண்ணாடி.
கமிட்டியின் குழுவினர் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்தனர். பைகளிலிருந்து மடிகணினிகளை எடுத்து முன்னால் வைத்துக்கொண்டனர். அவற்றுக்கான இணைப்புகள் அவர்கள் எதிரிலேயே இருந்தன.
பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் கமிட்டி அங்கத்தினர்களை வரவேற்று நிகழ்ச்சியைத் துவக்கினார். மருத்துவமையத்தின் வசதிகள், ஜேசன் தலைமையில் இணையாகச் செயல்பட இருக்கும் ஆய்வுக்குழுவின் திறமை, நிர்வாகத்தின் ஆதரவு ஆகியவற்றைப் புகழ்ந்து பேசினார்.
பிறகு ஆராய்ச்சியில் பங்கெடுக்கப் போகும் ஒவ்வொருவரும் கமிட்டியின்முன் தங்கள் திட்டத்தை வைக்கும் வைபவம் சரவணப்ரியாவின் உரையோடு தொடங்கியது. 1-ப்ரோமோப்ரோபேன் சுவாசித்ததால் எலிகளுக்கு உண்டான நரம்புகளின் பாதிப்பை விவரித்தாள். அது இரத்தத்திலும், சிறுநீரிலும் விளைவித்த மாற்றங்களை அளக்கும் வழிகளையும், அப்படி அளந்தபோது கிடைத்த முடிவுகளையும் காட்டினாள். மிகக்குறைந்த அளவிலும் 1-ப்ரோமோப்ரோபேன் எலிகளுக்கு ஏற்படுத்திய மாற்றங்களை அளக்க முடிந்ததால் அதைப் பயன்படுத்தும் தொழிலாளர்களின் உடல்நிலையைப் பின்பற்றமுடியும் என்று விளக்கி ஆராய்ச்சித் திட்டத்தின் தாக்கம் குறைந்துவிடாமல் சமாளித்தாள். 1-ப்ரோமோப்ரோபேன் சுவாசிப்பதை நிறுத்தியதும் எலிகளின் உடல்நலம் ஒருமாதத்தில் கணிசமாக முன்னேற்றம் அடைந்தது கவனிக்கத்தக்கது என்று உரையை உயர்மட்டத்தில் வைத்து முடித்தாள்.
பிறகு கேள்வி நேரம்.
சோமசுந்தரம், “டாக்டர் சாரா நாதன்! உங்கள் உரை தெளிவாக இருந்தது. இரத்தத்திலும், சிறுநீரிலும் மட்டுமின்றி நரம்புகளிலும் இரசாயன மாற்றம் நிகழலாம் என்று தொடக்கத்தில் சொன்னாலும் சோதனையில் நீங்கள் அதை நிரூபிக்கவில்லையே” என்பதைச் சுட்டினார்.
“உங்கள் கவனிப்பு முற்றிலும் சரி, டாக்டர் சோமசுந்தரம்! எலிகளுக்கு 1-ப்ரோமோப்ரோபேன் கொடுக்கும் சோதனைகள் சென்றவாரம் தான் முற்றுப் பெற்றன. அவற்றின் முதுகுத்தண்டிலிருந்து நரம்பு இழைகளைத் தனிப்படுத்தி வைத்திருக்கிறோம். அவற்றை சோதித்ததும் முடிவுகளை உங்களுக்குத் தெரியப் படுத்துவோம்.”
அந்த பதில் அவரைத் திருப்திப்படுத்தியது. ஆனால், ஃபாஸ்டாக்கிற்குக் கொஞ்சமும் திருப்தியில்லை. அது ஏகப்பட்ட சந்தேகங்களாக வெளிப்பட்டது.
“எலிகள் சுவாசித்த 1-ப்ரோமோப்ரோபேனின் அளவும் தொழிற்சாலைகளின் காற்றில் இருப்பதாகச் சொல்லப்படும் அளவும் ஒத்துப்போகின்றவா?”
“கிட்டத்தட்ட.”
“எலிகளை வைத்து மனிதர்களுக்கு எப்படிச் சொல்ல முடியும்?”
“இது ஆய்வின் முதல்கட்டம்.”
“அந்த இரசாயனப் பொருளைப் பயன்படுத்தும் ஒரு தொழிற்சாலைக்குச் சென்று ஏன் ஆராய்ச்சியைத் தொடரவில்லை?”
‘உங்களுக்கே காரணம் தெரிந்திருக்கும்’ என்பதை மறைத்து, “முயற்சிசெய்து கொண்டிருக்கிறோம்” என்று சாதாரணமாக பதில்தந்தாள்.
“அதுவரையில் உங்கள் கண்டுபிடிப்புகளை முடிவாக ஏற்பதற்கில்லை.”
சரவணப்ரியாவின் உரை ஒதுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டிச்சென்றது. தொய்வுடன் தொடங்கிய தொடர்-உரைகள் பிறகு எழுந்திருக்கவில்லை.
பன்னிரண்டு மணிக்கு கூட்டம் முடிந்தபோது, ஜேசன் ஃபாஸ்டாக்கிடம், “உங்களுக்குப் பிரத்யேகமாகத் தயாரித்த மதிய உணவு இங்கேயே வரும்” என்றான். “டாக்டர் சோமசுந்தரம் விரும்பியதுபோல் இறைச்சி கலவாத ஒரு சாப்பாட்டுத்தட்டு தருவிக்கப்பட்டிருக்கிறது.”
“எங்களுக்குள் விவாதிக்க இரண்டுமணி வேண்டும்” என்றார் அவர் விறைப்புடன்.
மற்றவர்கள் வெளியே வந்தவுடன் கதவு சாத்தப்பட்டது. அவர்கள் காதுகேட்கும் தூரத்தைக் கடந்ததும், “எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை. குற்றவாளி கொலைசெய்த ஆயுதத்தைக் கோர்ட்டில் காட்டக்கூடாதென்று தடைசெய்தால் வக்கீலால் எப்படி வாதிட முடியும்?” என்றான் ஜேசன். அவர்களின் மதிய உணவுக்கும் அவன் ஏற்பாடு செய்திருந்தான். கட்டடத்தின் நடுவில், சூரிய ஒளியில் பிரகாசித்த கண்ணாடிக் கூரைக்குக் கீழே அமர்ந்து சாப்பிட்டபோது மௌனத்தின் ஆதிக்கம். மற்றவர்களுடன் சாப்பிட்டதாகப் பெயர்பண்ணிவிட்டு சரவணப்ரியா தன்னுடைய இடத்திற்குச் சென்றாள். காத்திருக்கும் நேரத்தில் சாமியை அழைத்தாள்.
சாமி விமானநிலையத்தின் பயணிகள் வெளியேவருமிடத்தில் நின்றிருந்தான். பத்து, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடன் படித்தவர்களை அவன் சந்தித்திருக்கிறான். அடையாளம் காணமுடியாத அளவுக்கு யாரும் மாறிவிடவில்லை. சுதாகருக்கு முக்கால் வழுக்கை. அப்போதுகூட நரைக்காத மீசையும் நெற்றியின் தழும்பும் அவனைக் காட்டிக்கொடுத்து விட்டன. ஆனால் பரிமளாவைப் பார்த்து கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன. சரவணப்ரியா நூலகத்திலிருந்து எடுத்துவந்த அவள் புத்தகத்தில் மேலுறை இல்லை. இருந்திருந்தால் அதன் பின்புறத்தில் பரிமளாவின் படத்தைப் பார்த்திருக்கலாம். பத்தொன்பது வயதில் பார்த்த பெண் இப்போது எப்படி இருப்பாளென்று கற்பனை செய்தால் போகிறது. அதற்குப் பயிற்சியாக கல்லூரிமாணவி சரவணப்ரியாவையும் இப்போதைய தன்மனைவி ப்ரியாவையும் ஒப்பிட்டுப்பார்த்தான். முகம் சற்று வட்டமானதுபோல் தோன்றினாலும் சாயல் மாறவில்லை. இரட்டைப்பின்னலுக்கு பதில் சாயத்தால் மறைக்கப்பட்டு கொஞ்சம் குட்டையாகிவிட்ட ஒற்றைப்பின்னல். உடலின் வௌ;வேறு இடங்களில் சேர்ந்துவிட்ட இருபது பவுண்டு. பாவாடை தாவணி, சேலைகளுக்கு பதிலாக மேற்கத்திய உடைகள். மற்றபடி இருதோற்றங்களுக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லையென அவன் தீர்மானித்தபோது அவளிடமிருந்தே செல்பேசியில் அழைப்பு.
“சாமி! இப்போ எங்கே இருக்கே?”
“சான்ஹொசே ப்ளேன் இறங்கிடுத்து. பரிமளா வெளிலே வர்ற இடத்திலே காத்திண்டிருக்கேன். மீட்டிங் எப்படி போச்சு?”
“எதிர்பார்க்காத ஒரு பிரச்சினை. கஜமுகன் மனசுமாறி ரைடர் சீட்ஸிலே சேகரிச்ச விவரங்களை அமுக்கச்சொல்லிட்டார்.”
முதல்நாள் அவள் உரையைக் கேட்டிருந்த சாமி, “அதுதானே உன்னோட ப்ரசென்டேஷனின் உயிர்நாடி. அதை எடுத்துட்டா அதிகம் மிஞ்சாதே” என்றான்.
“என்ன செய்யறது? எப்படியோ ஒப்பேத்தினேன்னு வச்சுக்க!”
“உனக்கப்புறம் பேசினவங்க?”
“என்னோட ரிசல்ட் திருப்தியில்லாததாலே அவங்களும் சரியா செய்யலை. ஃபாஸ்டாக் நடந்துகிட்டதைப் பாத்தா க்ரான்ட் கிடைக்கறது சந்தேகம்தான்.”
“அப்போ, பரிமளா?”
“இங்கே அவளை அழைச்சிட்டு வர்றது அனாவசியம்னு நினைக்கிறேன். கமிட்டிக்காரங்க வருவாங்கன்னு தோணலை.”
சாமி யோசித்தான். “வந்ததும் வராததுமா அவகிட்ட எதுக்கு விஷயத்தை உடைக்கணும்? காலங் கார்த்தாலே எழுந்து மெனக்கெட்டு இவ்வளவுதூரம் வந்திருக்கா. நிச்சயமா க்ரான்ட் கிடைக்கும்னு நீ அவளுக்கு வாக்கு தரலை. இருந்தாலும் இப்போ சொன்னா அவளுக்கு ஏமாத்தமா இருக்கும். அப்புறம் நிதானமா சொல்லிக்கலாம். இன்னும் மூணுநாள் இருக்கப் போறாளே.”
“சரி, அழைச்சிட்டு வா!”
சரவணப்ரியா சொன்ன செய்தி அவன் ஆர்வத்தைக் குறைத்தாலும், சாமிக்கு சிறுவயதில் பழகிய ஒருத்தியை சந்திக்கப் போகும் ஆவல். வெளியேறும் வாசல் வழியாக ஒற்றைவரிசையில் மனிதர்கள் நடந்துவந்தார்கள். ‘வீடு நோக்கி ஓடிவரும்’ ஒரு இராணுவவீரனை வரவேற்க ஆறிலும், ஒன்பதிலும் இரண்டு அழகிய பெண்கள். வளர்ந்தவர்களைப் போல ஒப்பனை. புஸ_புஸ_வெனப் பரத்திய கூந்தல், இளஞ்சிவப்பில் கையில்லாத ஆடை, நீண்ட வெள்ளைக் காலுறைகள், குதியுயர்ந்த கறுப்புக் காலணிகள். ‘வெல்கம் ஹோம், அவர் ஹீரோ!’ என்று கையால் எழுதிய பெரிய பலகையைப் பிடித்து நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் உறவினர்களும் நண்பர்களும்.
இராணுவ உடையில் மிடுக்குடன் வெளியே வந்தவனைப் பார்த்து கரகோஷம். அவன் அந்தப் பெண்களைக் கட்டிக்கொண்டு நின்றான். காமராக்கள் பளிச்சிட்டன. அவனைத் தொடர்ந்த வரிசையில் இந்திய ஆண்கள் இரண்டு பேர், கல்லூரி மாணவிபோல் ஒருத்தி. கும்பல் குறைந்ததும் தூரத்தில் வந்த உருவத்தைப் பார்த்து பரிமளாவாக இருக்கலாமென்று நினைத்தான். பார்வையை மெதுவாக நகர்த்தி வந்தாள். நினைவிலிருந்த முகத்தின் மெருகு குறைந்திருந்தது. கூனல் இல்லாத அளவான உடற்கட்டு. அங்கங்கு நரைத்த சிறுகூந்தலில் பின்னல் போடமுடியாதென அதிலொரு க்ளிப். தோளில் கணினிப்பையும், கைப்பையும். கையில் மெல்லிய கோட்.
முன்னால்வந்த கும்பல் பிரிந்ததும் அவளருகில் சென்று, “ஹாய்! பரிமளா! நான்தான் சுவாமிநாதன். இப்போது சாமி நாதன். ஞாபகமிருக்கா?” என்றான்.
அவள் நின்றாள். கண்ணாடியின் மேல்வழியாக அவனைப் பார்த்தாள். அவனை அடையாளம்செய்து, “ஹாய் சாமி!” என்றாள். கணுக்கால்வரை தழைந்த கறுப்புக்கட்டம் போட்ட ஸ்கர்ட்டும், அதே துணியில் மேலங்கியும். வெள்ளைச்சட்டையின் கழுத்தைச்சுற்றி ஒரு சிவப்புத்துண்டு. சட்டையில் கூட்டல் கழித்தலோடு ‘இன்டக்ரேஷன்’ உட்பட பல கணிதக்குறியீடுகள் இலேசாகத் தெரிந்தன. உடலோடு ஒட்டிய கச்சிதமான உடை. மாணவர்கள் மதிப்பை சம்பாதிக்கும் முகம்.
அந்தத் தோற்றத்தில் அவளை ஒருமையில் அழைக்கலாமா என்று சாமிக்கு தயக்கம். அவனுக்கு அந்தக் கஷ்டத்தைத் தராமல் அவளே, “இத்தனை வருஷத்துக்கப்புறமும் நீ ரொம்ப மாறிட்ட மாதிரி தெரியலையே?” என்றாள்.
அதையே திருப்பிச் சொல்வது சரியாகப் படவில்லை. “அது உன் ஞாபகசக்தியைக் காட்டறது” என்கிற பாராட்டாக மாற்றினான். அவளிடமிருந்து கணினிப்பையை வாங்கிக்கொண்டான்.
“சரவணப்ரியா வரலையா?”
“அவ மீட்டிங் கொஞ்சநேரத்துக்கு முன்னடிதான் முடிஞ்சிது. நாம போய் அவளைப் பாக்கலாம். ஃப்ளைட் எப்படி இருந்தது?”
“நடுவிலே மாறாம வந்தது சௌகரியம்தான்.”
“விமானம் ஊஞ்சலாட்டம் ஆடித்தா?”
“அப்படியெல்லாம் இல்லியே. ஏன் கேக்கறே?”
சாமி அந்தக்கேள்வியை அந்தரத்தில் நிறுத்தினான். “சாப்பிட எதாவது கிடைச்சுதா?”
“கொறிக்கறதுக்கு ஏதோ கொடுத்தா. நான் கையோட ஒரு சான்ட்விச் எடுத்துண்டு வந்திருந்தேன். எனக்கு உடனே சாப்பிடணும்னு இல்லை.”
மாடிப்படியில் இறங்கினார்கள். பெட்டிகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அவளே, “ப்ரியா ப்ராஜக்ட்டை ஈ-மெயில்லே அனுப்பியிருந்தா. அவுட்லைன் மட்டும்தான் படிக்க முடிஞ்சிது. டிஸ்கஷனுக்கு முன்னாடியே தூங்கிப்போயிட்டேன்” என்று மன்னிப்பு கேட்பதுபோல் சொன்னாள்.
‘படிப்பது இனி அவசியம் இல்லை’ என்பதற்குபதில், “பரவாயில்லை, என்ன அவசரம்?” என்றான். “காலங்கார்த்தாலே கிளம்பினியோ?”
“நாலுமணிக்கு முதல்பஸ். அதைப்பிடிச்சேன்.”
அவள் கையிலிருந்த கோட்டைப் பார்த்து, “நீ வரப்போறேங்கறதுக்காக இங்கே கொஞ்சம் குளிர் குறைஞ்சிருக்கு, ஆனா இன்னிக்கி காத்து அதிகம்” என்றான்.
“நான் இங்கே இருக்கப்போற மூணு நாளும் ஐம்பது டிகிரிக்கு மேலே போகும்னு போட்டிருந்தது. அதனாலதான் தடிக்கோட்டை தேடியெடுத்து போட்டுண்டு வரலை. அது ஆத்திலே எங்கே இருக்குன்னுகூட தெரியாது.”
விளக்குகள் பிரகாசமாக எரிந்து மூட்டைகளின் ஊர்வலம்.
“நானே தூக்கிவைக்க சுலபமா இருக்கட்டும்னு ஒருபெரிய பெட்டிக்குபதிலா ரெண்டு சின்னதா எடுத்துண்டு வந்தேன்.”
பரிமளா காட்டிய பெட்டிகளை சாமி நிறுத்தித் தூக்கினான். பரிமளா கையிலிருந்த கோட்டை அணிந்துகொண்டாள். ஆளுக்கொரு பெட்டியோடு வெளியில்வந்து கார்வரிசைகளைத் தாண்டி நடந்தார்கள்.
சாமி காரின் கதவை அவளுக்குத் திறந்து வழிவிட்டான். அது கிளம்பியதும், “இங்கேருந்து போறதுக்கு பதினைஞ்சு நிமிஷம்தான் ஆகும்” என்றான். கார் நிறுத்தியதற்கான கட்டணத்தைச் செலுத்தி விமானநிலையத்திலிருந்து வெளியேறி நெடுஞ்சாலையில் சேர்ந்தான்.
“எங்களுக்கு ஒரே பையன். அவன் போன ஆகஸ்ட்லே பிஎச்.டி. சேந்திருக்கான். உனக்கு பக்கத்திலேதான், பெர்க்கிலிலே” என்றான்.
பிறகும் பரிமளா தன்னைப்பற்றி எதுவும் சொல்லவில்லை, அவனும் கேட்கவில்லை.
இரண்டுமணிக்குப் பிறகு ஃபாஸ்டாக் ஜேசனை அழைத்து முன்னோடியாகச் செய்த அரைகுறை ஆராய்ச்சி தீர்மானமான முடிவிற்கு வழிவகுக்கவில்லை என அறிவித்தார். இன்னும் சிலமுக்கியமான ஆராய்ச்சிகள் சேர்க்கப்பட்டால் விண்ணப்பங்கள் ஒருவேளை எதிர்காலத்தில் மறுபரிசீலனை செய்யப்படலாம் என ஒப்புக்குச் சொல்லிவிட்டு விடைபெற்றார். ஏமாற்ற செய்தியை அவன் குழுவின் மற்றவர்களுக்குத் தெரிவித்தான்.
சரவணப்ரியா எதிர்பார்த்த முடிவுதான். இருந்தாலும் வெண்ணெய் திரண்டுவரும்போது தாழி உடைந்த ஏமாற்றம். “நான் இன்னும் பத்து நிமிஷத்திலே அங்கே வருவேன்” என்ற சாமியின் செய்தி அதை நீடிக்க விடவில்லை. மருத்துவ மையத்தின் வாசலுக்கு வந்து முன்வட்டத்தின் ஓரத்தில் நின்று காத்திருந்தாள். பஸ்கள் வழிவிட சாமி ஒருசிறு இடைவெளியில் காரை நிறுத்தினான். சரவணப்ரியா காரிலிருந்து இறங்கிய பரிமளாவை வரவேற்றாள்.
“ஹாய் பரிமளா!”
“சாரா, சரவணப்ரியா, ப்ரியா – உன்னை எப்படிக் கூப்பிடறது?”
“எது வாயிலே வருதோ அப்படி.”
“ஒருமணி கழிச்சு நான் இங்கியே வரேன்” என்று சொல்லி சாமி நகர்ந்தான்.
“முதல்லே உள்ளே போவோம். காத்திலே உனக்குக் குளிரப்போவுது.”
“உனக்கும்தான்.”
“எனக்கு இது பழக்கம். நீதான் கலிNஃபார்னியாலேர்ந்து வந்திருக்கே.”
அவர்களைக் கண்டதும் முன்கதவுகள் பிரிந்து வழிவிட்டன. உள்ளே நுழைந்ததும் காற்றின் வீச்சும், அதன் சத்தமும் வெளியிலே நின்றுவிட்டன. நடமாட்டமில்லாத இடத்தில் நின்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“சாமியைப் பாத்ததும் எனக்கு உடனே அடையாளம் தெரிஞ்சிது. உன் முகம் எனக்கு ஞாபகமில்லை.”
“ஒருவாரமா நானும் உன் உருவத்தை மனசிலே கொண்டுவரப் பாக்கறேன், முடியலை.”
பிறகு கட்டடத்தினுள் நெடுக நடந்தார்கள். ஆராய்ச்சி அறைக்கு வந்ததும் சரவணப்ரியா தன் நாற்காலியை பரிமளாவுக்குக் காட்டிவிட்டு உயர்நாற்காலியில் அமர்ந்தாள்.
“ஒருவழியா ப்ரசன்டேஷன் முடிஞ்சுது.”
எப்படிச்சென்றது என்று பரிமளா கேட்கவில்லை. ஒருவேளை முகத்திலேயே முடிவு தெரிகிறதோ? விண்ணப்பங்கள் ஏற்கப்படாததால் அவற்றில் குறிப்பிட்ட சோதனைகளைச் செய்வதற்குத் தேவையான வசதிகள் இருக்கின்றனவா என்று ஆய்வுக்கூடங்களைப் பார்வையிட கமிட்டி அங்கத்தினர்கள் வருவதாக இல்லை. பரிமளாவிடம் என்ன காரணம்சொல்லி சமாளிக்கலாம்? நேரமாகிவிட்டது என்று கிளம்பிப் போய்விட்டார்கள், இல்லையென்றால் அடுத்தவாரம் மறுபடிவந்து பார்ப்பதாக இருக்கிறார்கள். பொய்சொல்ல வாய்வரவில்லை.
“பள்ளிக்கூடத்திலே என்ன பாடம் சொல்லித்தரே?”
“கால்குலஸ் ஏபிலே ஏபீ ஒருவருஷம், பீஸீ ஒருவருஷம். ‘ஸ்டாட் ஏபி’ ஒவ்வொரு வருஷமும்.”
கெட்டித்தரையில் பெட்டியைத் தள்ளும் சத்தம் கதவு வழியாகக் காதில்விழுந்து, பிறகு அறைக்குள்ளும் நுழைந்தது. யாரென்று சரவணப்ரியா திரும்பிப்பார்த்தாள், சோமசுந்தரம்! ஊருக்குத் திரும்பத்தயார் போலிருக்கிறது. அவர் கையில் கட்டடத்தின் வரைபடம். பெண்கள் எழுந்தார்கள்.
“ஹலோ, டாக்டர் சோமசுந்தரம்!” என்று முகம்மலர சரவணப்ரியா வரவேற்றாள்.
“ஹலோ, சரவணப்ரியா! இடத்தை சுற்றிப்பார்க்க வந்தேன்.”
“இவர் பரிசீலனைக் கமிட்டியின் ஒரு அங்கத்தினர், ஜெனிவா பல்கலைக் கழத்தைச் சேர்ந்தவர். இவள் டாக்டர் பரிமளா கோலப்பன், ப்ராஜெக்ட்டிற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் புள்ளிவிவர நிபுணர்.”
பரிமளாவைக் கைகூப்பி வணங்கிவிட்டு சோமசுந்தரம், “உங்கள் பெயரை முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார்.
“அப்படியா?” என்று பரிமளாவுக்கு ஆச்சரியம்.
“ஒருமுறை ஜெனிவாவில் டாக்டர் ஸ்ரீஹரிராவ் சிறப்புரை வழங்கினார். முடிவில் நன்றிசொல்லும்போது உங்கள் படத்தைக் காட்டி சிலவார்த்தைகள் புகழ்ந்து சொன்னார்.”
“இருந்தாலும், நல்ல ஞாபகம் உங்களுக்கு.”
சோமசுந்தரம் அவளிடம் புன்னகையில் விடைபெற்று சரவணப்ரியா பக்கம் திரும்பினார். “அறையைச் சுற்றிப் பார்க்கலாமா?”
சோமசுந்தரம் பின்தொடர சரவணப்ரியா ஆராய்ச்சிக்குத் தேவையான இரண்டு க்ரோமடோக்ராஃப்கள், அவற்றை இயக்கும் கணினிகள், ஒளியை அளக்கும் இரு உபகரணங்கள், சிறிதும் பெரிதுமான இரண்டு சென்ட்ரிஃபுஜ்கள், நுண்ணிய தராசு, ப்ரோடீனை உடைத்து அமினோஅசிட்களாக்கும் இயந்திரம் எல்லாவற்றையும் காட்டினாள். அவற்றை தன் ஆராய்ச்சியில் பயன்படுத்துவதை சுருக்கமாக உரைத்தாள். சோமசுந்தரம் கவனமாகக் கேட்டார். அவர்களுக்குத் தொந்தரவில்லாமல் பரிமளா தள்ளிநின்று கவனித்தாள்.
பார்வையிடும் சம்பிரதாயம் முடிந்ததும் சோமசுந்தரமும் சரவணப்ரியாவும் அறையின் கதவருகில் சென்று நின்றார்கள்.
“கச்சிதமா நல்லா இருக்கு. நான் இன்னும் அரைமணிலே ஏர்போர்ட் போகணும்” என்று விடைபெறுவதுபோல் சொன்ன சோமசுந்தரம் நகராமல் ஏதோ மறந்தவர்போல் தயங்கினார். “அதுக்கு முன்னால…”
“நீங்க இதைப் பார்க்கணும்” என்று தோளில்மாட்டிய பையிலிருந்து பிளாஸ்டிக் உறையில் பத்திரப்படுத்திய ஒரு புத்தகத்தை எடுத்து சரவணப்ரியா கையில் தந்தார். அவள் கவனமாக வாங்கிப்பார்த்தாள். ஐநூறு பக்கங்களுக்குமேல், தேவார திருவாசகப் பாடல்களின் தொகுப்பு. ஐம்பதாண்டுகளுக்குமுன் சைவசித்தாந்தக் கழகம் பதிப்பித்தது.
ஜாக்கிரதையாகப் பிரித்தாள். பழுப்பான ஆனால் கிழியாத காகிதங்கள். உள்ளட்டையில் ஒட்டப்பட்ட ஒரு துண்டுக்காகிதம் பிரிந்துவிழும்போல் இருந்தது. அதன் நிறங்கள் மறைந்து, பேனாவில் எழுதிய எழுத்துக்கள் மங்கினாலும், ஆண்கள் உயர்நிலைப்பள்ளியின் தமிழ் வகுப்பிற்கான சிறப்புப்பரிசு, வே. சோமசுந்தரத்திற்கு என்று அறிவித்தது. இவ்வளவு காலமும் புத்தகத்தைப் பாதுகாத்து வைத்திருக்கிறாரே என்ற வியப்பு. ஆனால் எதற்குக் காட்டுகிறார் என்றுதான் தெரியவில்லை. அதை மூடினாள்.
“நல்லபடியா வச்சிருக்கீங்களே. நான் வாங்கின பரிசெல்லாம் எங்கியோ போயிரிச்சு.”
“அமெரிக்கா வந்ததிலிருந்து ஒரே வீட்டிலே, அதுவும் கடந்த இருபதுவருஷம் தனியாவே இருந்திருக்கேன். சாமான்களை சேர்த்துவைக்கறதிலே என்ன கஷ்டம்?”
அவளிடமிருந்து அதைப் பெற்றுக்கொண்ட அவர், கால ஓட்டத்தில் பழுப்பாக மாறிய ஒரு கையகலப் புகைப்படத்தைக் கொடுத்தார். பெயர் மறந்துவிட்ட பிரமுகரிடமிருந்து ஒரு மாணவன் புத்தகப்பரிசைக் கைநீட்டிப் பெறுகிறான். அவன் சோமசுந்தரமாக இருக்க வேண்டும். இருவருக்கும் பின்னால் நிற்பது… சரவணப்ரியா உற்றுப்பார்த்தாள். அவளால் கண்ணீர்ப்பெருக்கைத் தடுக்க முடியவில்லை. தெளிவில்லாத படம்தான். ஆனால் சதுரமான முகமும், பழுப்பான ஃப்ரேமில் வட்டமான கண்ணாடிகளும், பிரதானமான மூக்கும், மிளகும் உப்பும் கலந்தாற் போன்ற தலைமுடிiயும், வலது தோளைச்சுற்றி கறுப்புக்கரை போட்ட அங்கவஸ்திரமும் அவள் மனதில் ஆழப்பதிந்தவை.
“அதிலேர்ந்து எடுத்தது” என்று பையிலிருந்து ஒரு காக்கிநிற காகிதஉறையை அவளிடம் தந்தார். “பிரிச்சுப் பாருங்க!”
சரவணப்ரியா அதிலிருந்து அரைப்பக்க அளவில் தன் தந்தையின் படத்தை எடுத்தாள், கண்களில் ஒற்றிக்கொண்டாள்.
“போனவாரம் உங்ககூடப் பேசினப்புறம் நான் பரிசுவாங்கின படம் ஞாபகம் வந்தது. கண்ணப்பனாரின் படத்தை மட்டும் அதலேர்ந்து எடுத்து ‘N.பாட்டோ ஷாப்’லே என் கைவரிசையைக் காட்டி ப்ரின்ட் போட்டிருக்கேன். அதோட iஃபலையும் உங்களுக்கு அனுப்பறேன்.”
“என் அப்பாவை நேர்லே பாக்கறா மாதிரியே இருக்கு. இன்னைக்குத்தான் அவர் நினைவுநாள். நீங்க அவர்மேலே எவ்வளவு மரியாதை வச்சிருக்கணும்?” உணர்ச்சியில் குரல் தழுதழுத்தது.
“நான் கிளம்பறேன். அப்புறம் பாக்கலாமா? சரவணப்ரியா!”
“பை, டாக்டர் சோமசுந்தரம்!”
மானியம் கிடைக்காதது அப்போது அவளுக்குப் பெரிதாகப்படவில்லை.
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)நமது பூமி கவிதை -33 பாகம் -3
- காலம் சிரித்துக்கொண்டே இருந்தது….
- தூங்கும் அழகிகளின் இல்லம்
- வண்ணங்கள் பேசட்டும்
- ஞாயிறை போல் வாட்டும் ஒரு திங்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! துணைக்கோள் நிலவு குறுகிக் கொண்டு வருகிறது ! (கட்டுரை: 69-1)
- மானுடச் சித்திரங்கள் நீலகண்டனின் “உறங்கா நகரம்”
- காலச்சுவடு… வீழ்தலின் நிழல் .. ரிஷான் ஷெரீஃப் .. எனது பார்வையில்
- அகம் களித்த நாழிகைகள்
- பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்
- மண் சுமந்த மேனியர் – உதவித் திட்டம்
- காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு
- நேர்காணல்- இரண்டாம் இதழ் –
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி – 2010
- செம்மொழி மாநாட்டு – உலகளாவிய கவிதைப் போட்டி கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு பரிசு
- வனாந்திரம்
- இரண்டு கவிதைகள்
- காலமும் கனவுகளும் சென்னையின் கதை (1921)
- பரிமளவல்லி – அத்தியாயம் 10. ‘போட்டோ ஷாப்’
- க்ருஷ்ண லீலை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -11
- சிம்ரன், ஜோதிகா, ஸ்னேஹா மற்றும் ஸ்ரீ மகா விஷ்ணு
- தண்ணீர் குளூக்கோஸ் மற்றும் ஜுஸ்
- பார்சலோனா -2
- ‘ஆரிய சமாஜம்’ என்கிற சிறு நூலையும் அதையொட்டிய வெ.சா.வின் கட்டுரையினையும் முன்வைத்து…
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 6
- முள்பாதை 45
- ஒரு திரைப்பட இயக்குனரின் சுயசரிதம்
- நினைவுகளின் சுவட்டில் (இரண்டாம் பாகம்)- (52)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நீராவிப் புகை இழைகள் கவிதை -17 பாகம் -2
- அசையும் கை நிழல்..
- முதுமையெனும் வனம்
- குடியிருப்புக்கள்…
- சூழ்நிலைக்கைதி
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 11