பரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

அமர்நாத்


6. லோடஸ்-ஈடர்ஸ்

மறுநாள்காலை பரிமளா காபி தயாரித்தபோது வீட்டில் தான் தனியாக இல்லையென்பது நினைவுக்கு வந்தது. அந்த உணர்வு எப்போதாவதுதான். அவள் அண்ணனபெண் கமலா வருஷத்துக்கு ஒருதடவை வந்தால் அதிகம். கணவன் வழியாகவரும் சொந்தங்கள் இல்லை. தெரிந்தவர்கள் இரவு தங்குமளவுக்கு நெருக்கமில்லை. கல்லூரியில் படித்தபோது நன்றாகப் பழகியவர்கள் நாலைந்து பேர்தான். அவர்களை வீட்டிற்கு அழைக்கலாமென்றால், இப்போது அவர்கள் எங்கிருக்கிறார்களென்று தெரியாது. சௌந்தர்யா செய்ததுபோல் அனுராதா, சரவணப்ரியா, தங்கமணி, என்று அந்தப் பெண்களின் பெயர்களைக் கூக்கிலில் தேடுவதில் அர்த்தமில்லை. அவர்களின் கடைசிப்பெயர்கள் மறந்துவிட்டன. ஞாபகப்படுத்திக் கொண்டாலும் திருமணத்தால் அவை மாறவில்லை என்பது என்ன நிச்சயம்? அவள் புத்தகத்தைப் பார்த்துவிட்டு அவர்களில் யாராவது ஞாபகம்வைத்து அவளைக் கூப்பிடலாம். ஆனால், ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’ நியுயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் புத்தகப்பட்டியலில் இடம்பிடிக்கப் போவதில்லையே. அது எங்கே அவர்கள் கண்ணில் படப்போகிறது?
தனக்குமட்டும் காபி கலந்து குடித்தபோது கறுப்பில் வெள்ளை முக்கோணங்கள் போட்ட நீண்ட உடையில் அனிடா தோன்றினாள். முகத்தில் தூக்கக் கலக்கம், ஆனால் இனிமைக்குக் குறைவில்லை. என்ன இருந்தாலும் ஒரு இளைய பெண்ணின் முகம் புதுமையையும் உற்சாகத்தையும் வீட்டில் பரப்பத்தான் செய்கிறது.
“குட் மார்னிங் பரி!” வெறுமனே பரி என்றது பரிமளாவுக்குப் பிடித்திருந்தது. இனி அனிடாவை சினேகிதியாக நடத்த வேண்டும்.
“குட் மார்னிங் அனிடா! நான் போட்ட சத்தத்தில் எழுந்துவிட்டாயா? சனிஞாயிறு என்றால் என் நண்பர்களின் டீன்-ஏஜ் குழந்தைகளைப் பிற்பகலில்தான் பார்க்கலாம்.”
“நானும் பத்துமணி வரை தூங்குவேன். தூக்கத்தில் உன்னைப்பற்றிய கனவு. அதுதான் எழுந்துவிட்டேன்.”
“அல்ஃபாவுக்கும் பேட்டாவுக்கும் வேறுபாடு கேட்டு பயமுறுத்தினேனா? ஐ’ம் சாரி.”
“பயப்படுத்தியது உண்மை. எப்படி என்றுதான் நினைவில்லை.”
“காஃபி குடித்துப்பார்! சுறுசுறுப்பு வரும். பால், சர்க்கரை சேர்க்கலாமா?”
“பால் வேண்டாம். நான் வீகன். சர்க்கரைகூட அவசியமில்லை.”
அதைக் குடிக்கும்போது பரிமளா கேட்பதற்குமுன் அனிடாவே, “கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குமுன் தொழிற்சாலைப் பண்ணைகளில் பறவைகளும் பிராணிகளும் படும் அவதிகளை ஒரு துண்டுப்படத்தில் பார்த்ததிலிருந்து வீகனாக மாறிவிட்டேன்” என்றாள்.
“இங்கே பால் தவிர எந்த இறைச்சியும் கிடையாது. பாலும் மாடுகளை வருத்தாத ஒருசிறிய பண்ணையிலிருந்து வருகிறது.”
“நீ நன்றாகத் தூங்கினாயா? பரி!” என்று குற்ற உணர்வுடன் கேட்டாள் அனிடா.
“மாத்திரையின் உதவியில்லாமலேயே தூக்கம் வந்துவிட்டது.” பிளாஸ்டிக் டப்பாவில் கோதுமைரவையைக் காட்டி, “இதைவைத்து சமைக்கப்போகிறேன். உனக்காகக் காரம் போடவில்லை” என்றாள்.
“உன் வழியிலேயே செய், சாப்பிட்டுப் பார்க்கிறேன். நான் என்ன செய்யட்டும்?”
“வெங்காயமும், பச்சை மிளகாயும் பொடியாக நறுக்க வேண்டும். குடைமிளகாயும் உருளைக்கிழங்கும் சற்று;பெரிதாக இருக்கலாம். வெட்டு இல்லாவிட்டால் நானே செய்வேன்” என்று ‘பான்ட்-எய்ட்’ அலங்கரித்த விரலைக் காட்டினாள்.
“அழைக்காமல் இங்கே வந்திருக்கிறேன். உதவிசெய்ய வேண்டாமா…?”
பரிமளா காய்களையும், கத்தி, பலகையையும் எடுத்துக்கொடுத்தாள். அனிடா மிகநிதானமாகக் காய்களை வெட்டும்போது ரவையை வறுத்தாள்.
“உனக்கு என்ன சமைக்கத்தெரியும்?”
“விதவிதமான சான்ட்விச் செய்வேன். மற்றபடி, கடையில் வாங்கிய ஏற்கனவே சமைத்த உணவை, பாக்கெட்டின் பிளாஸ்டிக் உறையைப் பிரித்து நுண்ணலை அடுப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு சுடத்தெரியும்.”
பரிமளா உப்புமா செய்வதைப் பக்கத்தில் நின்று கவனித்த அனிடா, “நான் கூடச் செய்யமுடியும் போலிருக்கிறதே” என்றாள்.
உப்புமா முடியப்போகும் நிலையில் அடுப்பின் சூட்டைத் தணித்து, “ஐந்துநிமிஷம். குளித்துவிட்டு வருகிறேன். பிறகுதான் சாப்பிடுவது வழக்கம்” என்று அகன்றாள் பரிமளா.
அவள் வருவதற்குள் மேஜையில் தட்டுகள், ஆரஞ்சுஜூஸ் நிரப்பிய கோப்பைகள் தயாராக இருந்தன. அழுக்கான காப்பிக்கோப்பைகளும், கரண்டிகளும் சுத்தம்செய்து கவிழ்க்கப்பட்டிருந்தன. அனிடா கமலாவின் உடையிலிருந்தாலும், அவளைப்போல் கையசைக்காமலில்லை.

வீட்டின் பின்னால் மரத்தலான ஒருமேஜையும் சிலநாற்காலிகளும். வெயில்பட்ட இடத்தில் உட்கார்ந்தார்கள். சனிகாலை யென்பதால் போக்குவரத்தின் ஒலி அதிகம் காதில் விழவில்லை.
அனிடா பேச்சை ஆரம்பிப்பது தன்முறையென்பதை உணர்ந்து, “பரி! பள்ளியில் உன்னை நான் நன்கு கவனித்திருக்கிறேன். அனாவசியமான வார்த்தை, சிடுசிடுப்பு எதுவும் உன்னிடம் கிடையாது. உன் பாடங்கள் கதைபோல தொடர்ச்சியாக இருக்கும். ஒன்றிரண்டு மாணவர்கள் தொந்தரவு கொடுத்தாலும் கோபப்படாமல் நீ சாமர்த்தியமாக சமாளிக்கிறாய். ஆண்களுடன் கௌரவமாகப் பழகுகிறாய். உன்னைச்சுற்றி கண்ணுக்குத் தெரியாத ஒரு கூடு இருப்பதுபோல் எனக்குத் தோன்றும்” என்றாள். பிறகு, “வீட்டில் நீ இப்படித்தான் இருப்பாய் என்று ஒரு கணக்குபோட்டிருந்தேன். என் எதிர்பார்ப்பு சரிதான்” என்று தன்னையே பாராட்டிக்கொண்டாள்.
ஆசிரியை ஒருமாணவியை மதிப்பீடு செய்வதற்கு பதிலாக அவள் தன்னை அளவிட்டது பரிமளாவுக்கு வித்தியாசமாக இருந்தது. “எனக்கு ஏ-க்ரேட் கொடுக்கலாமா?”
“ஏ-ப்ளஸ்ஸே தரலாம்.”
சிறிதுநேர மௌனத்திற்குப்பின் அனிடா நேராக அவளைப் பார்த்து, “நான் உன்னைப்போல் தன்னம்பிக்கையுடன் வாழ விரும்புகிறேன், பரி!” என்றாள்.
அதைக்கேட்ட பரிமளாவுக்கு தன்னை ஒருபெண் குறிக்கோளாக ஏற்பதில் பெருமிதம். அதேசமயம், தான் குற்றம் சாட்டப்படலாமென்று சிறிது அச்சம். வேலையில் சேர்ந்தபோது தனியாக வாழும் அவள் தங்கள் பெண்களுக்கு நல்ல வழிகாட்டி இல்லை என சம்பிரதாயத்தைக் காப்பாற்றும் சிலபெற்றோர்கள் முறையிட்டது நினைவுக்கு வந்தது.
“நீ இப்படிச்சொல்வது எனக்குக் கர்வத்தைத் தருகிறது. இருந்தாலும் நீ என்னை முழுமையாகத் தெரிந்துகொண்டு, பிறகு முடிவுசெய்!”
“தெரிந்துகொண்ட பிறகுதான் இங்கிருந்து செல்வதாக இருக்கிறேன், பரி!”
அந்தக்குரலில் வேடிக்கையான அச்சுறுத்தல்தான். இருந்தாலும், அது பரிமளாவை சிந்திக்க வைத்தது. ‘தனியாக வாழ்கிறேன்’ என்பதைத் தவிர தன் வாழ்க்கை விவரங்களை அவள் யாரிடமும் சமீபகாலத்தில் சொன்னதில்லை, யாரும் கேட்டதுமில்லை. உணர்ச்சிகளைச் செலவிட்டு தன்னைப்பற்றிய விவரங்களை இந்த சின்னப்பெண்ணிடம் ஏன் பகிர்ந்துகொள்ள வேண்டும்? பள்ளிக்குவரும் எத்தனையோ சராசரிப்பெண்களின் கும்பலில் அனிடா ஒருத்தியில்லை, என்பதைத் தவிர அவளைப்பற்றி தனக்கு என்ன தெரியும்?
பரிமளாவின் எண்ணங்களைப் படித்தவள்போல் அனிடா, “என் பெற்றோர்கள் என்னை இரண்டுநாட்கள் வீட்டில் தனியேவிட்டுச் செல்வது மைக்கிற்கு எப்படியோ தெரிந்துவிட்டது. நேற்றுமாலை என்வீட்டிற்கு வருவதாக இருந்தான். அவனிடமிருந்து தப்புவதற்குத்தான் இங்கே வந்தேன்” என்று தன்னைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.
“எந்த மைக்? நம் பள்ளியில் படிக்கிறானா?”
“இல்லை. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ‘டார்கெட்’டில் வேலைசெய்கிறான்.”
“அவனை எவ்வளவு நாளாகத் தெரியும்?”
“அவனுடன் தொடர்பு ஏற்பட்டு நாலுமாதம் இருக்கலாம்.”
“அவன் ஏமாற்றம் எதில்முடியும்?”
அனிடாவின் பதில் வேறுவழியில் வந்தது. “விஞ்ஞானம், கணிதம் இரண்டும் எனக்குப் பிடித்த பாடங்கள். மற்ற பெண்கள் அவை மிகவும் கடினமென்று பயப்படுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.”
“கணக்கில் முட்டாள்தனம் அழகான பெண்ணுக்கு இலக்கணமென ஊடகங்கள் அடித்துச்சொல்வதை அவர்கள் நம்பித்தானே ஆகவேண்டும்.”
“பையன்களுக்கும் என்னோடு பேசவே பயம். என் சினேகிதிகளுக்கு வெள்ளி மாலையில் சுலபமாக ‘டேட்’ கிடைக்கும்போது நான் வீட்டில் பாடம்படிப்பேன்.”
“படிப்பில் புத்திசாலி என்று பையன்கள் ஒதுக்குவதற்கு நீயொன்றும் தடியான கண்ணாடி மாட்டிக்கொண்டு, படியாத தலைமயிருடன், குள்ளமாக, குண்டாக இல்லையே, அழகாகத்தானே இருக்கிறாய்.”
“தாங்க்ஸ்” என்று புன்னகைத்தாள் அனிடா. “நான் லெஸ்பியனோ என்று என் அம்மாவுக்கு கவலையாகப் போய்விட்டது. பையன்களை சந்திக்கச்சொல்லித் துரத்திக்கொண்டே இருப்பாள். ‘டார்கெட்’டில் என் அக்காவின் இரண்டாவது குழந்தைக்கு தொட்டில் வாங்க நான் சென்றபோது மைக் அங்கே இருந்தான். பொறுமையாக அதைத் தேடியெடுத்துத் தந்தான். என்னுடன் பேச்சுக்கொடுத்தான். இப்படித்தான் ஆரம்பித்தது.”
“இப்போது ஏன் அவனைத் தவிர்க்கிறாய்?”
“இரண்டு காரணங்கள். ஒன்று நான் வீகன். அதுபெரிய விஷயமில்லை. வெளியில் சாப்பிடும்போது அவரவர்களுக்குப் பிடித்த உணவை வாங்குவோம். ஒருவர் தட்டிலிருந்து இன்னொருவர் எடுத்துக்கொள்வதில்லை. அதைவிடப் பெரிய மனவேறுபாடு இரண்டு வாரங்களுக்குமுன் வந்தது. எனக்கு சான்ஹொசே ஸ்டேட்டில் இடம் கிடைத்ததைச் சொல்வதற்காக அவன் வீட்டிற்குச் சென்றேன். சீரியஸாகப் பேசுவதற்குமுன் ‘அமெரிக்கன் பை’யை டிவிடியில் பார்த்தோம். பரி! நீ படம் பார்ப்பதுண்டா?”
“ஹாலிவுட்டும் சரி, பாலிவுட்டும் சரி, எப்போதாவது பார்ப்பேன், அதுவும் கும்பலாக இருக்கும்போது மட்டும்.”
“படம் முடிந்ததும் அதைப்பற்றி ஒருவிவாதம். ஒருபெண் ஆடை அவிழ்ப்பதை விஸ்தாரமாகக்காட்டிய பிறகு ஒருஆண் அப்படிச்செய்வதைக் காட்டாதது எனக்கு ஓரவஞ்சனையாகப் பட்டது. மைக் அதை ஒருபெரிய குற்றமாக நினைக்கவில்லை. அது தொடர்பான அவனுடைய மற்ற எண்ணங்களும் வெளிப்பட்டன. மே மாதத்தில் பள்ளிப்படிப்பு முடிந்ததும் நான் முழுநேரவேலை தேடுவதை அவன் விரும்புகிறான் என்று தெரிந்தது. அதனால் கல்லூரியில் சேரப்போவதை நான் அவனிடம் சொல்லவில்லை.”
பரிமளாவுக்கு அனிடாவின் நிலை புரியத்தொடங்கியது.
“க்ரிஸ்ஸியைப்போல் பதினெட்டு வயதிலேயே திருமண வாழ்வைத் தொடங்க எனக்கு ஆசை இல்லை. அவள் கணவனுக்கும் அவளுக்கும் இரண்டாவது குழந்தை பிறந்ததிலிருந்தே தகராறு என்று க்ரிஸ்ஸி என்னிடம் சொல்லியிருக்கிறாள். என் பெற்றோர்களுக்கு இப்போதுதான் தெரியும். சமாதானம்செய்ய ரீனோ போயிருக்கிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றியடையாவிட்டால் இரண்டு சிறுகுழந்தைகளை வைத்துக்கொண்டு க்ரிஸ்ஸி எப்படி சமாளிப்பாள் என்று யோசனையாக இருக்கிறது. பேருக்கு பள்ளிப்படிப்பை முடித்த அவளுக்கு மூளையை உபயோகிக்கும் வேலை எதுவும் செய்யத் தெரியாது.”
“உன் அக்காவின் எதிர்காலத்தைப் பற்றி இவ்வளவுதூரம் கவலைப்படுமளவுக்கு உங்களுக்குள் நெருக்கம் போலிருக்கிறது.”
“இருவருக்கும் நான்குவயது வித்தியாசம். என்னுடன் போட்டியிடாமல் எப்போதும் எனக்கு விட்டுக்கொடுப்பாள். நான் எட்டாவது படித்தபோது, பெர்க்கிலியில் திறமைவாய்ந்த மாணவர்களுக்கான ஆறுவார சிறப்பு வகுப்புகளுக்குச் செல்ல ஒருவாய்ப்பு கிடைத்தது. அதற்கான மூவாயிரம் டாலர் என் பெற்றோர்களுக்கு அனாவசியச் செலவாகப் பட்டது. க்ரிஸ்ஸி மெக்டானால்ட்ஸில் வேலைசெய்து ஒருபழைய கார் வாங்குவதற்குச் சேர்த்திருந்த பணத்தில் என்னை அதற்கு அனுப்பினாள். அங்கே கால்குலஸ், கெமிஸ்டரி என்று பாடம் கற்றுக்கொண்டதைவிட என்னைப்போல் படிப்பில் ஆர்வம்கொண்ட மாணவர்களைச் சந்தித்ததால் வந்த தன்னம்பிக்கைதான் அதிகம். அதற்குப் போகாமலிருந்தால் நானும் மற்ற பெண்களைப்போல் கூந்தலை ‘பெர்ம்’ செய்வதிலும், ‘டிசைனர்’ துணிகளுக்கு ஏங்குவதிலும் நேரத்தை வீண்செய்திருப்பேன். அப்போது க்ரிஸ்ஸி உதவியதை என்னால் மறக்கமுடியாது.”
அனிடா ஒவ்வொரு பள்ளி ஆண்டுவிழாவிலும் கல்விக்கான பரிசுகள் வாங்கியது பரிமளாவின் நினைவுக்கு வந்தது.
“கடந்த இரண்டு வாரங்களாக ஒரேகுழப்பம். காட்டிலிருந்து ஓடிவந்து கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட விலங்கைப்போல் இருக்கிறது எனக்கு. என்னால் சென்ற அக்டோபருக்குத் திரும்பச் செல்லமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.”
அனிடாவின் குழப்பம் அவள் முகத்திலும் பரவியது. முந்தைய இரவின் குழந்தைத்தனம் இப்போது காணவில்லை. பரிமளா எங்கே ஆரம்பிப்பதென்று யோசித்தாள்.
“இதுவரை அந்தந்த சமயத்தில் எது தேவையென்று தோன்றியதோ அதைச் செய்வதில் மனதை ஈடுபடித்தியதால், என் வாழ்க்கையை நான் அதிகம் யோசித்ததில்லை. கடந்த ஒருவார சம்பவங்கள் என்னைத் திரும்பிப்பார்க்க வைக்கின்றன. அறிவுரைக்குப் பதிலாக என் அனுபவங்களைச் சொல்கிறேன். நீ என்னைப்போலவே இருக்க வேண்டும் என்பதில்லை. தேவைப்பட்டதை எடுத்துக்கொண்டு மீதியை ஒதுக்கிவிடு!”
பரிமளா எழுந்து தோட்டத்தை ஒருமுறை சுற்றிவிட்டு பழைய இடத்தில் வந்து அமர்ந்தாள். பிறகு, மேகங்களற்ற வானத்தைப் பார்த்தாள். அதில் தென்பட்டதைச் சொல்வதுபோல், “நான் வளர்ந்த சமுதாயத்தில் ஒருபெண்ணின் திருமணத்தைப் பெற்றோர்களோ, மற்ற பெரியவர்களோதான் ஏற்பாடுசெய்ய வேண்டும்” என்று ஆரம்பித்தாள்.
“ப்ளைன்ட்-டேட் மாதிரி இருக்கிறதே.”
“பார்ப்பதற்குத்தான் அப்படி. முதலில், சமூகப்பிரிவு, பொருளாதார நிலை சாதகமாக இருக்க வேண்டும். பெண்ணுக்கு அழகு மிகமுக்கியம். பிறகு, இருவரின் ஜாதகங்களும் பொருந்தவேண்டும்.”
“வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது பகடையாடுவதுபோல் இல்லை?”
“உண்மைதான். ஆனால் வாழ்க்கையே அப்படித்தானே. அமெரிக்காவில் பத்தாயிரத்திற்கும் அதிகமான உயர்நிலைப்பள்ளிகள். நான் ஏன் இந்தக் குறிப்பிட்ட பள்ளியில் பாடம் சொல்லித்தர வேண்டும்? அதுபோலத்தான். என் குடும்பத்தின் பிரச்சினைகளால் திருமணத்தேர்தலின் ஆரம்பத் தடைகளையே நான் தாண்டவில்லை. பிறகு, என் அண்ணன் ஒரு மோட்டார்சைகில் பந்தயத்தில் இறந்துவிட்டான். பந்தயங்களில் போட்டியிடுவதை அவன் விண்ணப்பத்தில் குறிப்பிடாததால் காப்பீட்டுப்பணம் கிடைக்கவில்லை. அவன் குடும்பத்திற்கு உதவியதில் என் திருமணம் தள்ளிப்போயிற்று. கடைசியில், நான் இங்கே மேல்படிப்பிற்கு வந்தபோது என் வாழ்க்கையின் அர்த்தமே மாறிவிட்டது.”
பரிமளா அனிடாவைப் பார்த்து, “ஒவ்வொரு சமூகப்பழக்கமும் பெரும்பாலோருக்கு சௌகரியமாக இருப்பதால்தான் தொடர்ந்து வழங்குகிறது. ஆனால், எப்போதும் ஒருசிலர் ஏதோ காரணங்களால் அதன் செயல்பாட்டிலிருந்து விலக்கப்படுகிறார்கள். எங்கள் சமூகத்தின் திருமண வழக்கம் என்னைக் கைவிட்டுவிட்டது. ஒருவிதத்தில், நீயும் என்னைப்போல் கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்ட தனிப்பறவை. உன் வட்டாரத்தில் பெண்கள் பதினாறு வயதிலேயே பையன்களுக்கு வலைவீச ஆரம்பித்து, பள்ளிப்படிப்பு முடிவதற்குள் ஒருவனைப் பிடித்து ஒருவேலையிலும் சேர்ந்தாக வேண்டும். நீ அந்த அச்சில் வார்க்கப்படாமல் தப்பிவிட்ட ஒருத்தி” என்றாள்.
சிறுதுநேரம் யோசித்துவிட்டு அனிடா, “நீ சொல்வது சரிதான்” என்றாள். “தனியான வாழ்க்கையை நீ சந்தோஷமாக ஏற்றுக்கொண்டதுபோல் தோன்றுகிறது.”
“என் சினேகிதி ஒருத்தி, யாரைச் சந்தித்தாலும் ஐந்து நிமிடங்களுக்குள் தன் குழந்தைகளின் படிப்பு, தன் கணவனின் சாதனை, அவன் வேலைசெய்யும் கம்பெனியின் பெருமை என்று அடுக்காகப் பேச ஆரம்பித்துவிடுவாள். அவளே சிலநாள் கழித்து கணவன் என்னை சரியாக கவனிப்பதில்லை, குழந்தைகள் அவர்கள் இஷ்டப்படி அலைகிறார்கள் என்று குறைசொல்வாள். அவளைப் பார்க்கும்போது கல்யாண பந்தத்தில் என் தனித்துவத்தை இழக்கவில்லை என எனக்கு ஒரு திருப்தி. எனக்கென்று ஒரு குடும்பம் இல்லாததால் என் அண்ணன் இறந்தபிறகு அவன் குழந்தைகளை வளர்க்க உதவினேன். இப்போது நான் வளர்ந்த பகுதியில் கைவிடப்பட்ட பெண்குழந்தைகளை பராமரிக்கும் நிறுவனத்திற்கு பணஉதவி செய்கிறேன். பணத்தைமட்டுமல்ல ஓய்வுநேரத்தையும் என் விருப்பத்திற்கு செலவுசெய்யலாம்.”
“அதில்தான் புத்தகம் எழுதினாயாக்கும்.”
“புத்தகம் எழுதினேன். சமஸ்க்ருதம் ஹீப்ருபோல் ஒரு தொன்மையான மொழி. அதில் புலமையை வளர்த்திருக்கிறேன். தனிமையில் பொழுதுபோகவில்லையே என்று ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.”
“என் அம்மாவுக்கு உன்னைவிட பத்துவயதாவது குறைவாக இருக்கும். ஆனால் முகத்திலும் கைகால்களிலும் சுருக்கம். வீட்டில் இருக்கும்போதுகூட அவளுக்கு ஒப்பனை வேண்டும். நான் தினம் பள்ளியில் பார்ப்பதுபோல்தான் இப்போதும் உன்முகம் களையாக இருக்கிறது.”
“தாங்க்யூ!”
புகழ்ச்சியின் காரணம் அடுத்துவந்த கேள்வியில் வெளிப்பட்டது. “இளம்வயதில் நீ இன்னும் அழகாக இருந்திருக்க வேண்டும். எந்தப்பையனும் உன்மீது ஆர்வம் காட்டவில்லையா?”
“பள்ளியில் படிக்கும்போது ஒருவனுடன் விளையாட்டான நட்பு, என் தூரதிருஷ்டம், அது வளராமல் போய்விட்டது.”
உரையாடல் சுவரில் மோதியதுபோல் நின்றது. அதனால், “பிற்பகல் வெளியே சாப்பிடப்போகலாமா?” என்று பரிமளா கேட்டாள்.
“நான் மாற்றுடை எடுத்துவரவில்லையே.”
“என் ஆடையைத் தருகிறேன். சற்று பெரிதாக இருக்கலாம்.”
“நீ நினைப்பதுபோல் நான் அத்தனை ஒல்லியில்லை.”

பூப்போட்ட பாவாடைக்குமேல் கைவைத்த சிவப்புச்சட்டை அணிந்து காரிலிருந்து இறங்கிய அனிடாவைப் பார்த்து, “உனக்கு இருபதுவயது சொல்லலாம் போலிருக்கிறதே” என்றாள் பரிமளா.
அவள் அதைப் பாராட்டாக ஏற்று, “தாங்க்ஸ்” என்றாள்.
அவர்கள் நுழைந்தபோது ‘லோடஸ்-ஈடர்ஸ்’ உணவு விடுதியில் இன்னும் கும்பல் சேரவில்லை.
“நாங்கள் இருவர் மட்டும்” என்றதும் அவர்களை வரவேற்றவன் ஒருசிறு மேஜைக்கு அழைத்துச்சென்று மெனு அட்டைகளைக் கொடுத்துவிட்டு அகன்றான்.
“நான் இங்கே தனியாக வந்திருக்கிறேன். மற்றவர்கள் பார்வையில் ஆர்வம், அலட்சியம், அனுதாபம் எல்லாம் இருக்கும். இப்போது உன்னுடன் வருவதில் எனக்கொரு கௌரவம்.”
பரிசாரகன் வந்தபோது அவனிடம் பரிமளா மெனு அட்டையைப் பிரிக்காமல் திருப்பிக்கொடுத்துவிட்டு, “மஹாராஜா’ஸ் மீல்” என்றாள்.
“அது எப்படி இருக்கும்?”
“வேகவைத்த பழுப்பரிசியில், வறுத்த பைன் விதைகள், வதக்கிய குடைமிளகாய் போன்ற காய்கள் கலந்தது” என்றான் பரிசாரகன்.
“கேட்க நன்றாக இருக்கிறது. நானும் அதை சாப்பிட்டுப் பார்க்கிறேன்.”
“அதுமட்டும் போதுமா?”
அனிடா யோசிக்கையில், “ஒருபெரிய அளவு வெஜிடப்ல் சூப் வாங்கி அதைப் பகிர்ந்துகொள்ளலாம்” என்றாள் பரிமளா.
அவன் அகன்றதும் அனிடா, “பரி! உன் பிரச்சினைகளைச் சொல்லவில்லையே” என்று நினைவூட்டினாள். “என்னால் உதவமுடியலாம்.”
“தனிவாழ்க்கையின் பிரச்சினைகள் இத்தனை வருஷங்களாக என்கண்ணில் படவில்லையோ, இல்லை நான்தான் அவற்றைக் கவனிக்கவில்லையோ தெரியாது. கடந்த ஒருவாரமாக அவையெல்லாம் அடுத்தடுத்து வந்து என்னைத் தாக்குகின்றன.”
பரிசாரகன் அவனாகவே சூப்பை இரண்டு கிண்ணங்களில் பிரித்து அவர்கள்முன் வைத்தான்.
“தாங்க்ஸ்.”
“ரான்டம் அன் சான்ஸ் புத்தகம் வெளிவந்த சந்தோஷ செய்தியைப் பகிர்ந்துகொள்ள எனக்கு ஒன்பதுவயதுப் பெண்தான் கிடைத்தாள். அதன் தரத்தைப் புரிந்துகொண்டு என்னைப் பாராட்ட யாருமில்லை. அப்படிப்பட்ட நண்பர்களைத் தேடிக்கொள்ளாதது என் தவறாகவும் இருக்கலாம். சூப் எப்படி?”
“வெரி குட்.”
“சிலமாதங்களாகவே பங்கு மார்க்கெட் கீழேபோகிறதென்று தெரியும். புத்தகவேலையில் ஆழ்ந்திருந்த நான் எந்த அளவுக்கு சரிந்ததென்பதில் அக்கறை காட்டவில்லை. இந்தவாரம் கணக்கு பார்த்ததில் என் சேமிப்பின் பாதியை இழந்திருக்கிறேன் என்று தெரிந்தது. என் வருமானத்தை அதிகப்படுத்த கோடையில் கோர்னேல் சென்று ஆராய்ச்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டு அதுவும் கிடையாது. ஒற்றை வாழ்க்கையில் பணநெருக்கடியை நானே தனியாக சமாளித்தாக வேண்டும்.”
சூப் முடித்திருந்தார்கள்.
“இதுவரை ஜலதோஷம் போன்ற சில்லறை அவதிகளுக்கும், சாதாரண ‘செக்-அப்’களுக்கும் டாக்டரைப் பார்த்திருக்கிறேன். அதிருஷ்டவசத்தால் மருந்தகத்தில் தங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. அடுத்தமாதம் ‘கோலனாஸ்கோபி’க்கு போயாக வேண்டும். அப்போது மயக்கமருந்து தரப்போவதால் அது முடிந்ததும் யாராவது மருந்தகத்திலிருந்து என்னை வீட்டிற்கு அழைத்துவர வேண்டும். யாரும் என்னிடம் அப்படிப்பட்ட உதவி கேட்டதில்லை. இப்போது மற்றவர்களைக் கேட்க என்னவோபோலிருக்கிறது.”
“அது எங்கே நடக்கும்?”
“சான்டா க்ளாரா ஜெனரல்.”
“நீ கவலைப்படாதே! நான் உன்னை அழைத்து வருகிறேன். நான் அங்கே வாலன்டியர் வேலைபார்க்கிறேன்.”
“தாங்க்ஸ், அனிடா!”
பரிசாரகன் இரண்டு பெரிய தட்டுகளைக் கொண்டுவந்தான்.
“இருவருமே நம் பிரச்சினைகளை தள்ளிவைத்துவிட்டு சாப்பாட்டை அனுபவிப்போம்.”

ஞாயிறு பிற்பகல் தோய்த்துலர்த்திய துணிகளை அனிடா மடித்தாள். வெள்ளிக்கிழமை போட்டிருந்த உடைகளைப் பிரித்தெடுத்து அவற்றை அணிந்தாள்.
“என் வாரக்கடைசி எப்படி?”
“வேலை அதிகம்தான், இருந்தாலும் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய கட்டுப்பாட்டில் என்வாழ்க்கை நடக்கிறதென்ற மனஉறுதி.”
மூன்றுமணிக்கு அனிடாவின் பெற்றோர்கள் அவளை அழைத்து சாக்ரமென்ட்டோ நெருங்கியதைத் தெரிவித்தார்கள்.
“அவர்கள் இங்கே வருவதற்கு இன்னும் ஒருமணியாவது ஆகும். நான் கிளம்புகிறேன்.”
புத்தகப்பையைத் தோளில் சுமந்துவந்த அனிடா சாப்பாட்டு மேஜையில் அதைவைத்தாள். பரிமளாவை இறுகக் கட்டிக்கொண்டாள். எதேச்சையாகவோ, மருத்துவக் காரணங்களுக்காகவோ மட்டும்தான் பரிமளாவை மற்றவர்கள் தொட்டது உண்டு. இதுபோன்ற இன்னொரு மனித தேகத்தின் நெருங்கிய ஸ்பரிசத்தை அவள் அனுபவித்தது இல்லை. மார்புகள் தோளில்பதிய அனிடா அன்புடன் அணைத்தது அவள் ஆன்மாவைத் தொடுவதுபோல் தோன்றியது. அவளே விலகும்வரை பரிமளா அனிடாவைச் சுற்றிய கைகளை விலக்கவில்லை.
அனிடா விடுவித்துக்கொண்டு, “பரி! இரண்டு நாட்களுக்குமுன் குழப்பத்தோடு திருட்டுத்தனமாக இங்கு வந்தேன். இப்போது என் எதிர்காலத்தைப்பற்றி ஒருதெளிவு. அந்த அளவுக்கு நான் உன் பிரச்சினைகளில் உதவவில்லை” என்றாள்.
“நீ இரண்டு நாட்கள் தங்கியதில் எனக்கும் ஒருஆறுதல். எந்தப்பெண்ணிடமும் இந்த அளவுக்கு நான் மனம்விட்டுப் பேசியதில்லை. உதவி தேவைப்பட்டால் கேட்கிறேன். எங்கே ஓடிப்போகிறாய்?”
பரிமளா கைப்பையை எடுத்துக்கொண்டாள். வெளியேவந்து காரில் ஏறியதும், “இங்கே வந்ததை உன் பெற்றோரிடம் சொல்லிவிடு! அவர்கள் என்னைத் தவறாக எண்ணக்கூடாது” என்றாள்.

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்